சிறுகதைகள்

தாகம்

மித்ரா

” இங்க பாரும்மா சசி இதுக்கெல்லாம் என் கிட்ட மருந்து இல்ல. நீ பக்குவமா உன் வீட்டுக்காரர் கிட்டயே பேசிப் பாரும்மா…”

“அவர் கிட்ட எல்லாம் பேச முடியாது டாக்டர். அவரைப் பொறுத்த வரைக்கும் இந்த மாதிரி எண்ணமெல்லாம் ஒரு குடும்ப பொம்பளைக்கு வரக் கூடாது. வந்தா அவ ஒழுக்கம் கெட்டவனு அர்த்தம். ”  

“சரிம்மா நீ போயிட்டு ஒரு ரெண்டு நாள் கழிச்சு வா. எனக்கு தெரிஞ்ச ஒரு சித்த மருத்துவர் இருக்காரு. அவர் கிட்ட இதுக்கு ஏதும் மருந்து இருக்கானு கேக்குறேன்.”

சசிவதனி. ஒரு கதையின் நாயகி எவ்வளவு அழகாய் இருப்பாள் என இலக்கியங்கள் வரையறுத்து இருக்கின்றனவோ அதை அப்படியே பொறுத்திக் கொள்ளுங்கள். சசி பேரழகி. “இம்புட்டு அழகா இருக்காளே இவளுக்கு எங்கிருந்து மாப்பிள்ளையை புடிப்பீங்க?” என்பதே அவள் மூலையில் உக்காந்த காலம் தொட்டு  பார்ப்பவர்கள் அவள் அம்மா அப்பாவிடம் கேட்கும் கேள்வி. எப்போதும் அம்மா சிரித்துக் கொள்வாள். என்றைக்கேனும் “பொம்பளைக்கு அழகு வடிவத்துல இல்ல. கொணத்துல தான், எம்புட்டு அழகா இருந்தா என்ன போற எடத்துல கட்டுனவனை அனுசரிச்சு நடந்தா தான் பொழப்பு.” என்பாள். அது தனக்கான  மறைமுக செய்தியாகவே அவளுக்குப் படும்.

தெருவில் விடலைப் பயல்கள் விகிதம் அதிகம் என்பதால், 15 வயதிலேயே வீட்டில் அடைக்கப் பட்டாள் சசி. வீட்டு வேலை போக மீதம் இருந்த நேரங்களில் புத்தகம் தான் அவளின் உலகம். அப்போதெல்லாம் வீதிக்கு வரும் நடமாடும் நூலகங்களில் தினமும் இரண்டு புத்தகம் எடுத்து மாற்றுபவள் சசியாகத் தான் இருப்பாள்.

திடீரென்று சூழலுக்குச் சம்பந்தமில்லாத சத்தம். திடுக்கிட்டு சுய நினைவுக்கு வந்தாள் சசி. கைபேசி சம்பந்தமில்லாமல் அலறிக் கொண்டிருந்தது.

” எங்கம்மா போயிட்ட ? சாவியை வச்சுட்டு போக வேண்டி தான. எவ்ளோ நேரம் நான் வெளில நிக்க?”

” வந்துட்டேன்டி அஞ்சு நிமிஷம். கத்தாத.”

மீனு நேற்றுத் தான் முதன்முதலில் பயந்து பயந்து தொட்டது போல் இருந்தது, இப்போது பதினெட்டு வயதாகி விட்டது. சீக்கிரம் அவளும் என்னை பிரிந்து விடுவாள். ஒரு காலத்தில்… ஒரு காலத்தில் என்ன இப்போது கூட நான் வாழ்ரதுக்கு காரணமே இவ தான். என நினைத்துக் கொண்டே ஆட்டோ பிடித்து வீட்டை அடைந்தாள். அன்றிரவு மீனு பேச்சைத் தொடங்கினாள்.

”மா”

”என்ன சொல்லு?”

”இப்டி கேட்டா நா சொல்ல மாட்டேன்”

”அட சொல்லு டி.. இவ ஒருத்தி”

”ஏம்மா இப்போல்லாம் இப்டி இருக்க? நீ இப்டி இருந்தா நல்லாவே இல்லமா”

”எப்படி இருக்கேன். நா நல்லா தான் இருக்கேன் சும்மா என்னத்தயாச்சும் ஒளராத”

”இல்லமா. ஏதாச்சும் பிரச்சனையா உனக்கு? சொல்லு.. நா ஒன்னும் இப்போ சின்ன பிள்ளை இல்ல என்கிட்டே சொல்லு”

”அப்டிலாம் ஒண்ணுமே இல்லம்மா தேவல்லாம யோசிக்காத”

”அப்பா ஏதும் சொன்னாரா? நீ ஏன்மா அமைதியாவே இருக்க? எத்தனை நாளைக்கு இப்டியே இருப்ப? அப்புறம் உன் வாழ்க்கையை நீ எப்போ தான் வாழ்வ? நீ மொத உன் வாழ்க்கையை உனக்காக வாழ்ந்து பழகு மா  இனிமேலாச்சும்.. ! எப்படி தான் நீ போய் அப்பாவை கல்யாணம் பண்ணயோ?”

”சரிங்க மேடம் போய் தூங்குங்க. நடு ராத்திரி ஆச்சு.”

”நீ என்ன செய்யப் போற?”

”போய் குளிச்சுட்டு வரேன்டி கசகசங்குது.”

மீனுவின் கேள்வி துரத்திக் கொண்டே வந்தது. ”எப்படி இவரைக் கல்யாணம் செய்தேன்?”

பதினேழு வயதில், பள்ளி சென்று வரும் பெண்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு மாலையில் தான் சசியின் அப்பா அந்த செய்தியோடு வீடு வந்தார். ” சசியை நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க.”

வந்தவன் சசியின் ஒன்று விட்ட அக்காளின் கணவனின் தம்பி. அவர்கள் கட்டினால் சசியைத் தான் தன் தம்பிக்கு கட்ட வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றனர். மாப்பிள்ளை கல்லூரி வரை சென்று படித்தவன்.  பட்டாளத்தான் போல ஓங்கு தாங்கான தோற்றமும் கம்பீரமும். ஊரே மெச்சியது சசிக்கு ஏற்ற மணமகன் கிடைத்து விட்டான் என்று. ஆனால், என்ன வேலை செய்கிறான் என்று அவர்கள் கேட்கவே இல்லை.

ஆனால், அவன் ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து ஒரு குழந்தையும் இருப்பதும், அந்த உறவை முறித்து விட பெரும் தொகை ஒன்றைக் கொடுத்திருப்பதும், முதலிரவன்று தாலி உடைந்து போய் வெட்கப்பட்டுக் கொண்டிருந்த காலையில் சசிக்குத் தெரிய வந்தது. மறுவீட்டிற்கு செல்லும் போது அம்மாவிடம் சொல்லலாம் என்றால், உள்ளே நுழையும் போதே ” எப்போதும் இதே போல உன் கணவனோடு தான் வரனும்.  நல்லா புத்தில ஏத்திக்கோ. இருக்குற எடத்துல இருந்தா தான் எதுக்கும் மரியாத ” என்று காதில் ஓதினாள் அம்மா. எதுவுமே சொல்லாமல் மீண்டும் புகுந்த வீடு திரும்பினாள்.

சில மாதங்களில் எவளோ ஒருத்தியுடனான தவறான பழக்கத்தில் பால்வினைத்தொற்று வந்து படுத்தவனைப் பராமரித்ததில் அவன் மீது இருந்த கொஞ்சநஞ்ச கரிசனமும் வற்றி போய் விட்டது. பின்பு அவனிடம் பேச்சு வார்த்தை எதுமே இல்லாமல் போயிற்று. சொன்னதை செய்வாள். திடீரென அவளை அவளே கடித்து வைத்துக் கொள்வாள். அடுப்பில் எரியும் நெருப்பில் கை விட்டு கத்தாமல் எவ்வளவு நேரம் தாங்க முடியும் என்று பார்ப்பாள். அவனை திட்டத் தோன்றினால் மிளகாய் பொடியை சாப்பிடுவாள்.

அவன் ஒரு வேலைக்கும் செல்வதில்லை. இவளுக்கு உழைப்பை தவிர செய்வதற்கு வேறு எதுவுமே இல்லை. விளையாட்டாகக் கற்றுக் கொண்ட தையல் வாழ்க்கையாகிப் போனது. இதில் இவளை சந்தேகப் பட்டு வேறு வார்த்தைகளை அள்ளி வீசுவான். எதற்கும் அவள் எதிர்வினை ஆற்றியது இல்லை. இப்படித் தான் கழிந்துள்ளது அவனுடனான பத்தொன்பது வருடங்கள். இன்னும் எதுவும் மாறவில்லை.

இப்போது இந்த பாழாய் போன  உடல் பாடாய் படுத்துகிறது. கணவனிடம் சொன்னால் அவன் உடன்படப் போவதில்லை ஒழுக்கம் கெட்டவன் என ஏசுவான் என்பது மட்டுமில்லாமல் இவனிடம் போய் இதற்கெல்லாம் கெஞ்சுவதா என தன்மானம் சுட்டது, வயதுகளில் சொல் படி கேட்ட உடல் இந்த வயதில் முரண்டு பிடித்தது. நாட்கள் செல்ல செல்ல உடல் தகித்தது.அவளுக்கே அவளை நினைக்க கூச்சமாகவும் அருவருப்பாகவும் இருந்தது. ஆனால் இந்த தாகம் உடலினது மட்டும் அல்ல என்று சசிக்கு நன்றாக புரிந்தது. அன்று துணிந்து ஒரு முடிவெடுத்தாள். ஈசானி மூலையில் பல்லி சொல்லியது.

அன்றைய நாளை எதிர்கொள்தல் சசி க்கு அத்தனை எளிதாக இல்லை. மனதிற்குள் ஒரு மாபெரும் யுத்தமே நடைபெற்றுக்கொண்டிருந்தது. அந்தக் கால சினிமாக்களில் மனசாட்சி வந்து பேசுவது போல அவள் மனமே மாறி மாறி பேசிக் கொண்டிருந்தது.

“இந்த வயசுல இதெல்லாம் தேவையா?” என மனசாட்சி கேட்டது. “ஆமா வயசுல மட்டும் நான் என்ன வாழ்ந்து கிழிச்சிட்டேன்” என அதுவே பதிலும் சொன்னது. இவள் பள்ளிச் சான்றிதழ்களையும், படித்துக் கொண்டிருந்த புத்தகங்களையும் அவன் எரித்துச் சாம்பலாகியதும், நூலகம் சென்றவளை தேடி அங்கே சென்று நூலகருடன் உறவு வைத்துள்ளதாக வீதியில் நின்று சண்டையிட்டதும் மனக் கண்களில் விரிந்தன. இது தாகம் தீர்க்கும் படலம் மட்டுமல்ல பழி தீர்க்கும் முயற்சியும் கூட.

அழைப்பு மணி அடித்தது. பகீரென்றது சசி மனதிற்குள். நான் செய்வது சரி தானா? அப்போது அசரீரியாக மீனுவின் குரல் கேட்டது, ” சும்மா அவன் என்ன நினைப்பான்  இவன் என்ன சொல்லுவானு யோசிக்காத மா எதுக்கெடுத்தாலும். உனக்கு குற்றவுணர்ச்சியை தராத எதை வேணா நீ செய்யலாம். அது தப்பில்ல.”

தெளிவாகச் சென்று கதவைத் திறந்தாள். வெளியே முகம் மலர சிரித்தான் அவளால் கொணரப்பட்ட விலைமகன்.

முழுதும் கருப்பு வெள்ளையால் சூழப்பட்டிருந்த அவள் வீட்டைக் கண்டு வியந்தான். உங்கள் ரசனை பிரமாதம் என்றான். சிரித்துக் கொண்டே சசி சாப்பிடுறீங்களா? என்றாள். அவளுக்குப் பிடித்த அத்தனை அசைவ உணவுகளையும் சமைத்து வைத்திருந்தாள். பரிமாறினாள். ரசித்து ருசித்து சாப்பிட்டான். ‘உங்கள் கைப்பக்குவம் பிரமாதம். ஸ்டார் ஹோடேல்ஸ் பிச்சை வாங்கனும்’ என்றான். அவள் துவைத்து வைத்திருந்த துணிகளை மடிப்பதற்கு உதவினான். அவள் புடவையை  ஆழ நுகர்ந்தான். அவளின் புத்தகங்கள் சிலவற்றை இரவல் கேட்டான். கண்ணில் நேசம் தேக்கி பார்த்தான்.

நுனி முதல் அடி வரை இதழ் ரேகை பதித்தான். அவள் கால் விரல் நகங்களை கடித்து நீக்கினான். அவள் ஆளுமையின் கீழே அடங்கிப் போனான்.  விடைபெற்றான். 

சசி பனிமலையானாள். நிதானமாக கணவன் வருகைக்கு தயாரானாள். கருப்பு அவன் கடவுளுக்காகாது. அதையெல்லாம் நீக்கி விட்டு வெளிர் நீலம் பதித்தாள். புத்தகங்களை ஒளித்து வைத்தாள்.

வெளியில் அவள் கணவன் குரல் கேட்டது.” அசைவம் செஞ்சயோ? இந்த நாத்தம் நாறுது ச்சை இத திங்காதனு சொன்னா கேக்க மாட்டயா?” கத்திக் கொண்டே இருந்தான்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

பதில் அனுப்பவும்

உங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்படாது.  * குறியிட்ட இடங்களில் கேட்கப்படும் விபரங்களை கட்டாயம் அளிக்க வேண்டும்

மேலும் படிக்க

Close

மேலே
Close