சென்னை பெருங்களத்தூரை பண்டிகை காலங்களில் கடந்து விடுவதென்பது பெருந்துயரான காரியம். மனிதர்கள் ஏன் இப்படி உழைப்பை மட்டும் வாழ்வின் பிரதான நோக்காக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி அன்புவிற்கு எப்போதும் உண்டு. சாலைகளில் தனக்கு முன்னால் இருக்கும் வாகனங்களின் சிவப்பு விளக்குகள் அவனுக்கு அருவருப்பைத் தரக்கூடிய ஒன்றாக கூட இருந்திருக்கலாம். சில நேரம் நீண்ட நெடிய சிக்னலுக்கு காத்திருக்கையில் அந்த சிவப்பு விளக்குகளை ஒவ்வொன்றாக எண்ணிக் கொண்டிருப்பது அவனுக்கு நட்சத்திரங்களை எண்ணுவதை நினைவூட்டியிருக்க கூடும். சிறுவயதில் தன் வீட்டு முற்றத்தில் பாட்டியோடு உட்கார்ந்து நட்சத்திரங்களை எண்ணும் போதெல்லாம் அவன் தனது பாட்டியிடம் புதிரான கேள்விகளை கேட்பான். அப்படித்தான் நட்சத்திரங்களை ஏன் எண்ணி முடிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு அவனது பாட்டி, “அத நம்ம இங்க இருந்து சிறுசா பாக்குறம்டா.. ஆனா, அதுக்கு நாம எவ்வளவு சிறுசுனு அதுக்குதான தெரியும்?” என சொல்லி பொடி சிரிப்பு சிரிப்பாள். பாட்டி அப்போது குத்துமதிப்பாக சொன்ன விசயம் அவன் வளர வளரத்தான் புரிய ஆரம்பித்தது. கிட்டத்தட்ட தன் முன்னால் நின்றிருக்கும் வாகனங்களின் விளக்குகளையும் எண்ணி முடிக்க முடியாத வகையில்தான் சக மனிதர்களின் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
வறுமையின் காரணமாக 12-வது வயது வரை மட்டுமே படித்த அன்புவிற்கு சென்னைக்கு வந்து இதோடு 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஊரில் டிராக்டர் ஓட்டி பின்னர் லாரிக்கு கிளினராக போய் கடைசியாக கார் ஓட்டுநரானதே, இதுவரை அவன் பார்த்த வேலைகளில் கெளரவமான தொழிலாக அவன் கருதினான். மதுரையிலிருந்துதான் வந்திருக்கிறான் எனச் சொல்லிக் கொள்ள முடியாத நிறம் அவனுக்கு. செம்பட்டை தலையும், வெண்குஷ்டத்தினால் தோலில் ஆங்காங்கே வெள்ளை ஆகியிருந்தாலும் அவன் முகம் மட்டும் லட்சணமாக இருந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறைக்காக மக்கள் கூட்டம் அலை அலையாக நகரங்களை விட்டு பிரிந்து தங்கள் வேரை நோக்கி ஓடி கொண்டிருந்தது. வேர் எவ்வளவு கீழே இருந்தாலும், நம் சொந்த மண்ணுக்கு அடியில் பாதுகாப்பாய் உணரும் அந்தக் குளிர்ச்சி சுகமானதுதானே.
அன்புவின் முதலாளி அவரது அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர் ஒருவரை ஊரில் கொண்டு போய் விட்டு, விட்டு அவர் கொடுக்கும் பணத்தை வாங்கி கொள்ளுமாறு கூறியிருந்தார். சிப்காட்டில் காத்திருந்த அந்த நபர், அன்பு வருவதற்கு முன்பாக தொடர்ந்து போன் அடித்துக் கொண்டே இருந்தார்.
“இன்னுமாயா வர?”
“இல்லணே ஒரே டிராபிக்”
“என்னப்பா எம்புட்டு நேரம் தா நிக்கிறது. நா வந்தே ஒரு மணி நேரத்திற்கு மேல ஆச்சு”
பச்சை நிற சட்டையும், வெள்ளை பேண்டும் அணிந்த ஒரு உருண்டையான உருவம் சாலை ஓரத்தில் நின்றிருந்தது. இரண்டு சூட்கேஸ்களும், தோளில் ஒரு பேக்கும் தொங்கிக் கொண்டிருக்க, தலையில் ஆங்காங்கே சில உதிரி முடியோடு, காதோரம் நரை அப்பிய முகம் அவருக்கு. பார்க்க ஆள் ஒரு
ஐம்பதைத் தொட்டிருப்பார் என உறுதியாகச் சொல்லி விடலாம். அவர் முன்னால் அன்பு வண்டியை நிறுத்தியதும், பொய்யாக அவனைப் பார்த்து புன்னகைத்து கொண்டே, டிக்கியை திறக்கச் சொன்னார். அன்புவும் இறங்கி அவரது சூட்கேஸ்களை வாங்கி டிக்கியில் வைத்தான். பின்னர் அவர் வண்டியின் பின்புறம் ஏறிக் கொள்ள, அன்பு ஒரு முறை அவரைத் திரும்பி பார்த்து விட்டு வண்டியை எடுத்தான்.
கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. வெளியே டிராபிக் சத்தங்கள் கூட சரியாக கேட்கவில்லை. ஏசி காற்று பயணியை மெதுவாக ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தது. அன்புவும் அவ்வப்போது பின் கண்ணாடி வழியாக அவரை பார்த்து கொண்டே வந்தான். அவர் ஜன்னல் வழியாக டிராபிக்கில் நிற்கும் மனித முகங்களை புதிதாக பார்ப்பது போல் பார்த்து கொண்டு வந்தார். அவர் முகத்தில் லேசாக புன்னகை அரும்புவது தெரிந்தது.
திடீரென போன் வந்ததும்,
“ஹான் குட்டி, கார் வந்துடுச்சு, ஏறிட்டேன்… மிஸ் யூ டி பட்டுமா”
“ஹே… நெக்ஸ்ட் ஏர்போர்ட் போறதுக்கு முன்னாடி அங்கதா வருவேன். ஓகே வா?”
“சரி உடம்ப பாத்துக்க பாய்…”
என போனை வைத்ததும், அவர் முகத்தில் பெரியதொரு புன்னகை மலர்ந்தது.
“தம்பி பாட்டு எதாவது போட்டு விடுப்பா..”
“ஆங் போட்றேன் சார்’’ என அன்பு எப்.எம்மைத் தட்டினான். ஒரு பெண் குரல் வழவழவென பேசிக் கொண்டே இருந்தது. உடனே கடுப்பான அவர்
“புளூ டூத் ஆன் பண்ணுப்பா” என்றதும், அன்பு தயக்கதோடு புளு டூத்தை ஆன் செய்ய, கொஞ்ச நேரத்தில் இளையராசாவின் “மலையோரம் வீசும் காற்று…” பாட்டின் ஹம்மிங் ஒலி கேட்க ஆரம்பித்தது. அவர் மெல்ல ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு காற்றை தன் மீது மோத விட்டார். குளிர்ந்த காற்று அவரது சிகையை வருடி ஆசுவாசப்படுத்தியது.
மீண்டும் போன் ரிங் ஆக,
“என்னாடி…. வந்துக்கிருக்கேன்…. தெர்ல… விடியதான் வருவேன்…. உன் அண்ணங்க வந்து உக்காத்திருக்காங்களா? வெளிநாட்டு சரக்குனா நாக்க தொங்க போட்டு வந்திருவாங்களே.. சரி வையி, நான் விடியதான் வருவே… போன்ல சார்ஜ் வேர இல்ல…” என எரிச்சலோடு போனை வைத்தார்.
போன் பேசுவதற்காக ஜன்னலை மூடிய அவர் மீண்டும், இசையின் அரவணைப்பில் தழும்ப ஆரம்பித்தார்.
“மனசு தடுமாறும்…. உன் நினைப்பு திசை மாறும்.. நித்தம் நித்தம் உன் நெனப்பு…” என பாடல் வரி கேட்டது.
“ஆகா… ஆகா… தம்பி இந்த இடத்துல குரல எப்டி நின்னு தூக்கிருக்கா பாருயா..” என்றதும், அன்புவும் ஆமோதிப்பதை போல் புன்னகைத்தான்.
“சவுதியில நம்ம மண் வாசத்தை உணருணும்னா அதுக்கு இளையராஜா பாட்டுதேன் ஒரே வழி.. அப்டியே சவுதியில இருந்து கமுதிக்கு தூக்கிட்டு வந்துருவாப்புல”
‘எனக்கும் அவரு பாட்டுதான் சார் பிடிக்கும்’ என்பது போல் அன்பு வழிந்தான்.
“கொஞ்சம் ஓரமா வண்டிய நிப்பாட்டுப்பா. ஒண்ணுக்கு வருது” என்றதும் அன்பு வண்டியை ஓரமாக நிறுத்த, அவர் இறங்கி, தன் பாக்கெட்டிலிருந்து மல்பேரோ சிக்ரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தார். அவனை சந்தேகமாக பார்த்த அவர் சிகரெட் புகையை இழுத்துக் கொண்டே,
“அடிக்கிறயாப்பா…?” என நீட்ட, அவன் வேண்டாம் என்பது போல் தலையசைத்தான். சாலையில் வாகனங்கள் பயங்கரமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு சிகரெட்டை அடித்து முடித்து விட்டு, இன்னொரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டே சிறுநீர் கழிக்க ஆரம்பித்தார். பின்னர் இருவரும் காரில் ஏறி கொள்ள கார் கிளம்பியது.
“நீ எந்த ஊருப்பா?”
“நான் சிவகாசி ணே”
“ஓ.. அப்ப நம்ம ஊரு பக்கந்தே… சவுதியில தமிழ் பேசுற குரலை கேட்டாலே நெஞ்சு இனிக்கும் தம்பி’’ என்றவாறே மூச்சை இழுத்து விட்டுக் கொண்டார். அவர் மூச்சு விடுவதற்கு சற்று சிரமப்படுவதை கவனித்த அன்பு, “ஜன்னல வேணும்னா திறந்து விடுங்க.. காத்து நல்லா வரும்” என்றவாறே ஏசியை ஆப் செய்தான். அவர் அவ்வப்போது சளியை காறித் துப்பிக் கொண்டே வந்தார்.
“அப்பறம் ஏன் பிரண்ட் என்ன சொன்னான்? நீ அவங்கிட்டதா வேலை பாக்குறியா?”
“ஆமான்ணே, அவர்கிட்டதா மூணு வருசமா வேல பாக்கேன். உங்கள பத்தரமா கூட்டி போகச் சொன்னாரு..”’
கியர் போடும் போது கடிக்க ஆரம்பித்ததில், கரகரவென சத்தம் வந்தது.
அவர் அதனைக் கண்டு கொள்ளாதது போல், “அவனும் நானும் சின்ன வயசுல ஒண்ணு மண்ணாத்தேன் படிச்சோம். என்னா செய்யச் சொல்ற?
அவன் அப்பன் கொஞ்சம் நிலம் வச்சிருந்ததால அத வித்துப்புட்டு தொழில் தொடங்கிட்டான். ஏன் அப்பன் கஞ்சா குடிக்கி. இருக்கத பூராம் வித்து தின்னுபுட்டு, என்னய கடனாளி ஆக்கிவிட்டு போய் சேந்துட்டான். நானும் அன்னைக்கு கடன அடைக்க வெளிநாடு போய், பிறகு கல்யாணம் காட்சினு ஆகி பிள்ள குட்டிக படிப்பு அது இதுனு, தொடந்து அங்கனயே என் வாழ்க்கைய கழிக்கிறேன். வருசத்துக்கு ரெண்டு வாட்டி வருவேன். அம்புட்டுதேன். அந்த நாள எதிர்பாத்துக்கிட்டே வாழ்க்கையில மீத நாள் ஓடும்” அவர் சொல்லிக் கொண்டிருப்பதை காதுகளால் உள் வாங்கி கொண்டே அன்பு கவனமாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான்.
அவர் பேசி முடித்ததும் இறுதியாக, “என்னா சார் செய்றது பொழைக்கணும்ல” என்றான்.
“அதுவும் சரித்தான்” என்றவாறே பையிலிருந்து எடுத்த சரக்கு பாட்டிலை திறந்து அதனை வாட்டர் பாட்டிலில் ஊற்றி நன்றாக குலுக்கி பின்னர், கொஞ்சமாக குடித்து விட்டு, “தம்பிக்கு குடிக்கிற பழக்கமுண்டா?”
“இருந்துச்சு சார். விட்டுட்டேன்”
“திண்டிவனம் தாண்டி எங்கிட்டாச்சும் சாப்பாட்டுக்கு நிப்பாட்டு” என்றவாறே, “சார்ஜர் போட முடியுமா..?” எனக் கேட்டார்.
“இருக்கு சார்.” என போனை வாங்கி சார்ஜர் போட்டுவிட்டு அருகே வைத்தான்.
அவர் ஜன்னலை ஏற்றிவிட்டு தூங்க ஆயத்தமானார். அவர் தூங்க ஆரம்பித்ததை, வண்டி டோல் கேட்டில் நிற்கும் போது கவனித்த அன்பு, டோல் கேட்டை தாண்டி ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கி தனது பேண்ட் பாக்கெட்டில் இருந்து சிகரெட் எடுத்து பற்ற வைத்தான். தூக்கத்தை கலைக்க அவன் எப்போதும் பால் ஊற்றாத கட்டன் காபிதான் குடிப்பான். அதுவும் சர்க்கரை போடாத கட்டன் காபியின் கசப்புதான் அவனுக்கு புத்துணர்ச்சியை தரக் கூடியது.
வண்டி மெல்ல வேகமெடுத்து நகர ஆரம்பித்தது. சென்னையைத் தாண்டி எங்காவது சாப்பிடலாம் என அன்பு நினைத்திருந்தான். ஆனால், போக்குவரத்து நெரிசலில் சென்னையிலிருந்து வெளியேறுவதே பெரும் பாடாகிவிட்டது. நேரம் இப்போது 12.00க்கு மேல் இருக்கும். வண்டி திண்டிவனத்திற்கு முன்னர் சென்று கொண்டிருந்தது. சுற்றி எங்கு பார்த்தாலும் மரம். அடர்ந்து இருண்ட இருளுக்குள் வண்டி நகர்ந்தது. திண்டிவனம் நெருங்கியதும், ஒரு ஹோட்டலுக்கு முன்பாக வண்டியை நிறுத்திய அவன், திரும்பி அந்த ஆளைப் பார்த்தான். எழுப்பலாமா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே அவரை எழுப்பினான். ஆனால், அவரோ தூக்க கலக்கத்தில் எதுவும் வேண்டாம் என கூறி விட, அன்பு மட்டும் கொஞ்சமாக சாப்பிட்டுவிட்டு சிகரெட்டை அடித்து கொண்டே வண்டியில் ஏறினான். வண்டியில் ஏறியதும், பின்புறமாக திரும்பி பார்க்க, சீட்டில் சரக்கு பாட்டில் இருந்தது. தன் வாழ்நாளில் வெளிநாட்டு சரக்கே அடித்திடாத அவன் அந்த பாட்டிலை எடுத்து பார்த்து அதன் மேனியை தொட்டு வருடினான். ஒரு பெண்ணின் உடலைப் போலே இத்தனை வடிவாக யார் இதனைச் செய்திருப்பார்கள் என்ற எண்ணம் அவனுக்குள் உதிக்கத் துவங்கியது. பின்னர் எப்படியேனும் அவரை இறக்கி விடும் போதும், ஒரு பாட்டிலை வாங்கி விட வேண்டும் என தனக்குள் தீர்மானம் எடுத்துக் கொண்டான். பாட்டிலை இருந்த இடத்திலே வைத்து விட்டு வண்டியை எடுத்தான். வண்டி நூறு கிலோ மீட்டர் வேகத்தை தாண்டி போய்க் கொண்டிருந்தது. அடிக்கடி அவரது போனுக்கு மஞ்சு என்ற பெண்ணிடமிருந்து அழைப்பு வந்து கொண்டே இருந்தது. அதிலிருந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்தால் ஒரு 40 வயது பெண்மணியாக தெரிந்தாள். நன்கு முகச்சாயம் பூசி பார்க்கவே லட்சணமாக இருந்தாள். இவனுக்கு போனை எடுத்து அவளது குரலை கேட்க வேண்டுமென்ற ஆவல் இருந்தாலும் அவனுக்கு கேட்க மனம் வரவில்லை. தொடர்ந்து வண்டி மிதமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தது.
புதுக்கோட்டையிலிருந்து திண்டுக்கல் பாதையில் வண்டி செல்கையில் பயங்கரமான இருட்டாக இருந்தது. சாலையெங்கும் இருட்டு மட்டுமே தெரிந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வாகனங்களையே காணவில்லை. அன்புவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் போலத் தோன்றவும், வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு சிறுநீர் கழிக்க இறங்கினான். பின்னர் ஆசுவாசமாக சிறுநீர் கழித்து விட்டு, வண்டியில் ஏறி கண்ணாடி வழியாக பின்புறமாக பார்த்தான். அவர் சீட்டை வீட்டு சரிந்து கீழே பாதி உடல் படும் படி படுத்திருந்தார். அன்பு உடனே கீழே இறங்கி அவரை நேரே படுக்க வைக்க முயற்சித்தான். கனமான அவரது உடலைத் தூக்குவது அவனுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. உடனே தனது முழு பலத்தையும் கொடுத்து அவரை மேலே தூக்கி சீட்டில் படுக்க வைத்தான். அவரது சரீரம் மிகவும் சில்லென்று இருந்ததும், அவனுக்கு ஏதோ சந்தேகம் எழும்ப ஆரம்பித்தது. அன்பு பதட்டத்தோடு அவரது மூக்குக்கு நேராக தன் விரல்களை வைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தான். பின்னர் நாடியை பிடித்துப் பார்த்த அன்புவின் முகம் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது.
திடீரென என்ன நினைத்தானோ என்னவோ, கதவை சாத்தி விட்டு வெளியே வந்தான். வெளியே வாகனங்கள் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தன. அன்புவுக்கு என்ன செய்வதென புரியாமல் மீண்டும் சிறுநீர் கழிக்கப் போனான். பின்னர் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சொட்டு சொட்டாக சிறுநீர் கழிக்க ஆரம்பித்தான். உடனே தன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட அன்புவுக்கு தாகம் எடுப்பது போல் தோன்றியது. தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், காரைத் திறக்க அவனுக்கு பயமாக இருந்தது. இத்தனை நேரம் உயிராக இருந்த அந்த நபர், இப்போது வெறும் உடலாக சில்லிட்டு கிடக்கிறார். அதனைப் பார்க்கவோ, அதன் அருகாமையில் இருக்கவோ அவனுக்கு அச்சமாக இருந்தது. என்ன செய்வதெனத் தெரியாமல் யோசித்து கொண்டிருந்த அவன், சட்டென கார் கதவைத் திறந்து, அவனது போனையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டான். பாட்டிலை திறந்து தண்ணீரை பெரும் தாகத்தில் இருப்பவனை போல் குடிக்க ஆரம்பித்தான். பின்னர் அவனது இதயத்துடிப்பு ஓரளவிற்கு சாதாரணமாக ஆரம்பித்தது.
உடனே போனில் தனது முதலாளியின் நம்பருக்கு போன் அடித்தான். நிறைய முறை ரிங் அடித்த பின்பு போனை எடுத்த அவர்
“என்னப்பா பிரேக் டவுனா?” என கரகரத்த குரலில் கேட்டார்.
“இல்ல சார்…”
“பிறகென்னப்பா…?”
“உங்க பிரண்ட் குடிச்சுபுட்டு படுத்துட்டு இருந்தாரு சார்.. தூக்கத்திலேயே இறந்துட்டாரு”
“என்னப்பா சொல்ற?”
“ஆமா சார்.. நான் பாட்டுக்கு வண்டிய ஓட்டிகிட்டே அவர கவனிக்கல.. கடைசியா திண்டிவனத்துக்கு முன்னாடி பேசிட்டு படுத்தவருதா. அதுக்கு அப்பறம் அவரு பேசவே இல்ல.. நான் எதார்த்தமா புதுக்கோட்ட ரோட்ல ஓரமா வண்டிய நிப்பாட்டிட்டு, ஒண்ணுக்கு அடிச்சுட்டு வந்து பாக்குறேன்.. ஆளு செத்து கிடக்காரு சார்….” மிகவும் தட்டுத்தடுமாறிய வார்த்தைகளோடு அவன் அதனைச் சொல்லி முடித்தான்.
சில நிமிடங்கள் எதிரிலிருந்து பதில் குரல் வரவில்லை. அது அவனை மேலும் பதட்டமாக்கியது. கொஞ்ச நேரத்தில் தொண்டையை கணைக்கும் குரல் கேட்டது.
“அளவுக்கு மீறி குடிக்காதடானா கேட்டானா… இப்ப அவங்க வீட்டுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.” பின்னர் மீண்டுமொரு அமைதி, முதலாளி தன்னை நிதானமாக்கி கொள்ள எவ்வளவோ முயன்று பார்த்தார். சிறிது நேரம் கழித்து உடைந்த குரலில் “வண்டி இப்ப எங்க இருக்கு?”
“இங்க புதுக்கோட்டை ஹைவே ரோட்டுலதான் சார்…எங்கணு சரியா தெர்ல…. பதட்டத்துல ஒண்ணும் வெளங்க மாட்டிங்கிது….”
“சரி, நீ ஒண்ணும் பதட்டப்படாத.. நான் அவங்க வீட்ல விசயத்தை சொல்லிறேன். இப்பவே சொன்னா.. தாம் தூம்ணு குதிப்பானுங்க.. நான் விடிய முன்ன சொல்றேன். இந்நேரத்துக்கு ஆம்புலன்ஸுக்கு எங்க போறது…ம்ம்… சரி நீ அப்டியே மதுரை வரைக்கும் பல்ல கடிச்சுட்டு வண்டிய ஓட்டிக்கு போய், பாடிய ஆஸ்பத்திரியில ஒப்படச்சுடு”
“சார்… என்னால முடியாது.. எனக்கு இப்பவே பயமா இருக்கு…”
“அட பதட்டப்படாதயா.. ஆம்புலன்ஸ் சொன்னா அவனுங்க வர ஒரு மணி நேரம் ஆகும். அதுக்குள்ள நீ ஆஸ்பத்திரி போயிரு.. நானும் அவங்க வீட்ல தகவல் கொடுத்துறேன்”
“சார்….”
“ஓண்ணுமில்லையா.. பதறாம ஓட்டிட்டு போ.. கருப்பன் உனக்கு துணையா இருப்பான்”
அன்புவுக்கு அதுக்கு மேல் என்ன பேசுவதென தெரியவில்லை. இனி மேல் வேறு வழியில்லை எனத் தெளிவாக அவனுக்குத் தெரிந்தது. குனிந்து இறந்த உடலைப் பார்த்தான். சாகும் போது இப்படியா உதட்டை விரித்து சிரித்துக் கொண்டே சாவது? என தனக்குள் பிதற்றினான். பதட்டத்தை தணிக்க ஒரு சிக்ரெட் அடிக்க வேண்டும் போல் அவனுக்கு தோன்றியது. உடனே அந்த நபரது பாக்கெட்டிலிருந்து மல்பேரோ சிகரெட் பாக்கெட்டை எடுத்து பற்ற வைத்தான். குளிருக்கும், தன் உடல் பின்னால் நின்றிருக்கும் ஆவிக்கும் இடையே புகையினை ஊதினான். மதுரை போய் சேரும் வரை திரும்பி பார்த்து விடக் கூடாது என திட்டமிட்டான். ஆள் நடமாட்டமற்ற நான்கு வழிச் சாலையில் ஆக்ஸிலேட்டரை மிதித்தால் பறக்கும் என தீர்மானித்த அன்பு, ஆழமான பெருமூச்சு விட்டுக்கொண்டே வண்டியில் ஏறி அமர்ந்தான்.
எதுவும் பேசாமல் வண்டியை ஆன் செய்து ஓட்ட ஆரம்பித்தான். வண்டி அது பாட்டுக்கு போய் கொண்டிருந்தாலும், அவனது உள்ளத்தில் பெரும் அச்சமும், பதட்டமும் விரவிக் கிடந்தது. மருத்துவமனை போய்ச் சேரும் வரை பிணத்தை திரும்பி பார்த்து விட கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். பதற்றத்தில் கியர் போட்டதில் பற்கள் கடித்துக் கொண்டன.
திடீரென யாரோ உறுமுவது போல் குரல், சத்தம் கேட்டதும் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தினான். அந்த குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்ற அச்சமே அவனது பாதி உயிரைத் தின்றுவிட்டது.
‘“பாத்தியா… இதுதான் வாழ்க்க, ஒரு நிமிசத்துல என் உடம்புக்கு மதிப்பில்லாம போச்சு பாரு” – என அசரீரி கேட்டதும், அவன் அச்சத்தோடு கண்ணாடி வழியாக பின்னால் கிடந்த சடலத்தைப் பார்த்தான். அது அப்படியே உயிரற்று தான் இருந்தது.
“அங்க ஏன் பாக்குற? இனி அது மண்ணுக்கு உரந்தான். நான் இப்போ காத்துல மெதக்குற உசுராதான் உங்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். நீ தயங்காம வண்டிய ஓட்டு. வரத பாப்போம்”
அவன் தயக்கத்தோடு கியரைப் போட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான்.
“என்ன உண்மையா நேசிச்சவகிட்ட மட்டும் நான் செத்துட்டேனு சொல்லு. அதுவும் சந்தோசமா அவளோட உள்ளங்கைய தொட்டு பாத்துட்டு வர வழியில செத்துட்டேனு சொல்லு.”
அந்த அசரீரி ஓய்ந்த நேரத்தில், இறந்தவரின் போனில் மஞ்சுவிடமிருந்து அழைப்பு வந்தது. அழைப்பை எடுத்த அவன், “மேடம், சார் திடீர்னு வர வழியில ஹார்ட் அட்டாக்குல இறந்துட்டாரு. நான் அவரோட உடம்பை ஊருக்கு எடுத்துட்டு போயிட்டு இருக்கேன்”
எதிர்க் குரலாக “ என்ன சொல்றீங்க.. உண்மையாவா?”
“ஆமாம் மேடம்…”
கொஞ்ச நேர மெளனத்திற்கு பின்பு ஒரு விசும்பல் கேட்டது. அவன் அவள் அழுவதற்கான நேரத்தை கொடுத்திருந்தான்.
“மேடம்…”
“சரி, பாத்து கொண்டு போங்க… முடிஞ்சா நான் அவங்க ஊர்ல வந்து பாக்குறேன்” – என அழைப்பைத் துண்டித்தாள். உடனே, “பாத்தியா.. எனக்காக உண்மையா அழுகுற ஒருத்தியோட குரலை கேக்குற பாக்கியம் எனக்கு கிடைச்சிருக்கு. அவ அங்க வரமாட்டா…” – அந்த அசரீரி சிரிக்க ஆரம்பித்தது.
“இனி நீ பாக்க போறதெல்லாம் முழுசா அரங்கேறப் போற நாடகம். அதுக்கு என் பொண்டாட்டிய விட யாரும் அவ்வளோ அழகா நடிக்க முடியாது”
தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்த அந்த குரல் அவனுக்கு கோபத்தை தூண்டியது. வண்டியை வேகமாக ஓட்ட ஆரம்பித்தான்.
மீண்டும் அந்தக் குரல்..”எனக்காக ஒரு உதவி பண்றியா? இளையராஜா மியூசிக்ல ஒரு பாட்டு இருக்குமே.. பூங்காத்து திரும்புமா… ஏன் பாட்ட விரும்புமானு.. அந்தப் பாட்ட போட முடியுமா?”
அதன் விருப்பத்தை நிறைவேற்றத் தவறினால் ஏதேனும் அசம்பாவிதம் நடக்குமென நினைத்த அவன், தேடிப் பிடித்து அந்தப் பாடலை போட்டான்.
இருள் நிறைந்த அந்த சாலையில் ஆங்காங்கே பறந்து கொண்டிருக்கும் கார்களுக்கு மத்தியில், இளையராசாவும், அந்த ஆத்மாவும் கட்டித்தழுவிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆத்மா இசையின் இவ்வொரு மெட்டையும் ஆரத்தழுவி முத்தமிட்டு விசும்பி, விசும்பி அழுதது. பின்னர் கொஞ்ச நேரத்தில் தனக்குத்தானே சிரித்துக் கொண்டது. தானே பாடவும் ஆரம்பித்தது. இதற்கு மேல் அன்புவால் அதனைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வண்டியை வேகமாக முடுக்கினான். மதுரை அருகே வந்ததும், அரசு மருத்துவமனைக்குள்ளே வண்டியை விட்டான். அவசர சிகிச்சைப் பிரிவில் சென்று, திடீரென இவருக்கு மூச்சு பேச்சில்லாமல் போனதாக கூறிச் சேர்த்தான். உடனே, அந்த உடலை பரிசோதித்த மருத்துவர், இறந்து சில்லிட்டுப் போன அவரது கைகளை பற்றிக் கொண்டே, “உயிர் போய் ரொம்ப நேரம் ஆச்சு” என சாதாரணமாக பதிலளித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். உடனே அவன் முதலாளிக்கு அழைத்து விவரத்தைச் சொன்னான். அவரும் சொந்தகாரர்களுக்கு விவரத்தைச் சொல்வதாக கூறி விட்டு அழைப்பை துண்டித்தார். பின்னர் அவர்கள் வரும் வரை காத்திருக்கும் சூழலுக்கு அன்பு தள்ளப்பட்டான். அவசர சிகிச்சைப் பிரிவில் எழும் சத்தங்கள் அவனுக்கு அச்சத்தை தூண்ட கூடியவையாக இருக்க, அங்கிருந்து மெல்ல நகர்ந்து வெளியே வந்து உட்கார்ந்தான். வறண்டு போன நாக்கை ஈரப்படுத்தினால் நன்றாக இருக்குமென அவனுக்குத் தோன்ற, ஒரு டீக்கடையில் தண்ணீர் குடித்து விட்டு, டீக்குடிக்க ஆரம்பித்தான். அவன் காதுக்குள் அந்த அசரீரி குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அப்படியே அங்கிருந்த மர பெஞ்சில் அசந்து தூங்கிவிட்டான். கொஞ்ச நேரத்தில் அவனுக்கு முன்பாக இருந்த டீக்கடையில், ஒரு கூட்டம் டீக்குடித்து கொண்டே ஏதோ பேசிக் கொண்டிருந்தது. அவனை கடந்து உள்ளே சென்றதும், இவனுக்கு முதலாளியிடமிருந்து அழைப்பு வந்தது.
“அவங்க வந்துட்டாங்க பா… நீ உள்ள போய் பாத்துட்டு கிளம்பு” என்றதும். அவன் வேகமாக உள்ளே சென்றான். வெளியே பார்த்த அதே கும்பல், இறந்தவரின் உடலின் முன்னால் நின்று கதறி அழுது கொண்டிருந்தது. இறந்தவரின் மனைவி தன் மார்பில் ஆக்ரோசமாக அடித்துக் கொண்டு அழுததில் ஒரு துளி காதல் கூட இருப்பதாக அன்புவிற்குத் தோன்றவில்லை. சிறிது நேரம் அழுது முடித்த அந்த பெண், இறந்த உடலின் பாக்கெட்டில் இருந்த பர்ஸ், மோதிரம். செயின் எல்லாவற்றையும், கண்ணீருடன் எடுத்து, முந்தானையால் துடைத்து வைத்துக் ண்டது. அன்பு இறந்தவருடைய உடைமைகளை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கை கூம்பி வணங்கி விடை பெற்றுக் கொண்டான். பையை வாங்கிய அந்த நபர்கள் அந்த கூட்டம் அவசர அவசரமாக அதிலிருந்த வெளிநாட்டுப் பொருட்களை எடுத்து கொள்வதில் அடித்துக் கொண்டது. அதிலும் அந்த மதுபானத்தை பார்த்ததும், புதிதாக பிறந்த குழந்தையைப் பார்ப்பதைப் போன்று அங்கிருந்த ஆண்களின் முகம் மாறியது. அன்பு உள்ளூர சிரித்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.
காரில் ஏறி உட்கார்ந்த அவன், இளையராஜா பாடலொன்றைப் போட்டு விட்டு வண்டியை எடுத்தான். மீண்டும் அந்த அசரீரியின் குரல் வினோதமாகக் கேட்டது. அவன் ரேடியோவில் சத்தத்தை அதிகப்படுத்திக் கொண்டு வண்டியை முடுக்கினான்.