மீரா போதையின் உச்சமென்றொன்றை இன்றுதான் கண்டறிந்தாள். நீர் உறிஞ்சும் உவர் நிலம் போல் அவள் மேல் படர்ந்த வியர்வைத் துளிகளை உந்தி வரை உடுத்தியிருந்த வெள்ளாடை முழுதும் உறிஞ்சி தாகம் தீர்த்திருந்தது. வெள்ளாடைக்கொரு குணமுண்டு. அது ஒளிவுமறைவற்றது. தொடை வரை மறைத்திருந்த ஜீன்ஸ் வகை காற்சட்டை சில பகுதிகளில் கிழிந்து நூல் நூலாக தொங்கியது. அது நாகரீகப் பட்டியலில் வந்துவிட்டதால் மீராவின் மறைவுப் பகுதிகளில் எதிர்வரும் கண்கள் பசைபோல ஒட்டிக்கொண்டன.
மீரா தன் உடலை அழைத்து வரும் போராட்டத்தில் சோர்ந்திருந்தாள். அவள் இடப்புறம் இழுத்தால் கால்கள் வலப்புறம் நடந்தன. பார்வை சிறுத்து காட்சிகள் இரட்டை வேடம் பூண்டன. நெஞ்சுக்குழிக்குள் எதுவோ ஒன்று கிடந்து உறுத்தியது. மீரா, தான் வேறு.. தன் உடல் வேறு என்ற அஞ்ஞானத்தை அன்றே பெற்றாள்.
ஒருவழியாக தரையில் துள்ளும் மீன் போல நடந்து கரையேறினாள் மீரா. நீல நிற மகிழுந்தை அடைந்ததும் அதில் ஒற்றை கையை ஊன்றி நின்று மறுகையில் தோள்பையை தேடிப்பார்த்தாள். அதை கடைசியாக ஒப்பனை அறையில் பார்த்ததாக நினைவு.
நெடுந்தொலைவு கடந்துவிட்ட பின்பு மீண்டும் வந்த பாதையில் திரும்பிச் செல்லும் நிலையில் அவள் இல்லை. இத்தனைக்கும் குடிக்கூடத்து வாசல் இருபது அடி வைத்தால் வந்துவிடும். மீராவுக்கு கண்கள் சொருக அப்படியே தரையில் சாய்ந்தாள். பக்கவாட்டு நடைபாதையை தலையணையாக மாற்றி விழி மூடினாள்.
மகேஷ் வந்து சேரும்போது ‘தி பிக் பேரல்’ பப்பில் கூட்டம் குறைந்திருந்தது. மீரா இருந்த இடத்தில் சில ஆண்களும், இரண்டு பெண்களும் நின்றிருந்தனர். அவள் நடைமேடையில் ஆடை விலகி கூந்தல் கலைந்து அமர்ந்திருந்ததைக் கண்டான் மகி. அவள் உள்ளாடை மறைக்க மறந்த தொகுதிகளை ஆடை விகுதியாய் வெளியே காட்டியது.
கூட்டத்தை விலக்கி ஓடிவந்த மகி, தான் அணிந்திருந்த பழுப்பு நிற பிளேசர் கோட்டை கழட்டி அவளுக்குப் போர்த்திவிட்டு கன்னத்தில் அறைவதைப் போல தட்டினான்.
“மீரா.. மீரா..”
“ம்ம்ம்”
மீரா ஏற்கனவே சொர்க்கத்தில் வாழ்வதால் இப்போது சொர்க்கத்தின் மழைக்காட்டுக்குள் உலாவச்சென்றிருந்தாள் போல. உடல் குளிர்ந்திருந்தது. மகி அவளது தோள்களை பிடித்து தூக்கினான். அருகிலிருந்தவன் நீர் போத்தலை நீட்ட, அதை ஊற்றச்சொல்லி கையை குவித்துக்காட்டினான் மகி. அளவறியாமல் ததும்ப ததும்ப ஊற்றியதும் கைக்கொள்ளாமல் நீர் தரையில் வழிந்தது. மீராவின் இதழ்களாக மகியின் கை ஒருகணம் மாறி மறைந்தது. மீராவின் முகத்தில் நீரை விசிறியெறிய அவள் லேசாய் கண்ணசைத்தாள்.
அவள் இடத்தோளில் மாட்டியிருந்த தோள்பையிலிருந்து மகிழுந்தின் சாவியைத்தேடி கதவுகள் திறந்துவிட புதுவிதமான குரலெழுப்பி மகிழுந்து உயிர் பெற்றது. மீராவை கைத்தாங்கலாக அழைத்துவந்து பின்னிருக்கையில் அமர வைக்க அவள் கால்கள் நீட்டி படுத்துக்கொண்டாள். மகி மகிழுந்தின் கியரை அழுத்தி பின்னால் இயக்கினான்.
***
வீடெங்கும் மங்களம் தலைப்பின்னி பூச்சூடி நடனம் ஆடியது. வீடென்ன வீடு? இருபது ஓடுகளை ஒன்றுபோல வரிசை மாறாமல் அடுக்கி கூரையென்று நான்கு சுவர்களை இணத்ததால் அது வீடாகியது. அதையும் இரண்டாக தடுத்து சமையலறை மற்றும் உறங்குவதற்கு, புழங்குவதற்கு, துணி தைப்பதற்கு, சண்டையிடுவதற்கு, அழுவதற்கு, விளையாடுவதற்கு, ரகசிய உரையாடல்களுக்கு என ஒரு அறை. அந்த வீடுதான் மூச்சு முட்டிக்கொண்டு பிதுங்கி விடுவதைப்போல கூட்டம் சேர்த்திருந்தது அன்று.
மீராவின் அம்மா சாவித்திரிக்கும், சுப்ரமணிக்கும் ஒரே அம்மா. வேறு வேறு அப்பா. சுப்ரமணியின் உறவினர்கள் மீராவின் வனப்பை எங்கேயும் அனுப்ப மனமில்லாமல் அவளை சுப்புவுக்கே அர்ப்பணித்துவிடும்படி உரிமையாக கேட்க எங்கே சொந்தம் விட்டுபோகுமோ என்ற கவலையில் சாவித்திரி தலையாட்டியதன் விளைவாக மீரா இறுதியாக பாவாடை தாவணியில் பூச்சூட்டு நிகழ்வுக்காய் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்தாள்.
பெண்ணைப் பற்றி முன்பின் அறியாதவர்கள், “பொண்ணு எப்பிடி?” என குசுகுசுத்தால்,
“ந்தா காலண்டர் அட்டையில மகாலச்சுமி போட்டோ போட்ருப்பாங்கள்ல? அந்த சாடையில இருக்கும்” என கிழவிகள் ஒலிப்பெருக்குவார்கள்.
“வயசுதான் கம்மி. இன்னும் மார் பெருக்காத புள்ளையாட்டம் தெரிது” என்ற பெருசுகளுக்கும் பதில் இருந்தது அவர்களிடம்.
“வயசென்ன வயசு? நாங்களாம் எட்டு, பத்து வயசுல கட்டிகிட்டு வரல? புருசனோட படுத்து புள்ளக்குட்டி பெத்துக்கல?”
மீராவுக்கு இந்த ‘படுத்தல்’ குறித்த கேள்விகள் மட்டும் வினாக் குறியோடு மனதில் நின்றிருந்தது.
***
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் முன்னரே பத்திரிக்கை கொடுக்க தோழிகள் வீட்டுக்குச் செல்ல ஆரம்பித்தாள் மீரா.
தன்னை சிங்காரித்துக்கொள்வதில் பெரும் ஆர்வம் கொண்டவள் மீரா. பள்ளிக்கு என்றல்ல. பயிற்சி வகுப்புகளுக்கு வந்தாலும் பாண்ட்ஸ் பவுடர் மணம் வீச, அழகாக தலைபின்னி கனகாம்பரம் சூடி வருவாள். அவள் வாசனைக்கெனவே அந்த டியூசன் வகுப்புகளுக்கு ஆண்குல வாண்டுகளின் கூட்டம் சேரும். ‘அவள்தானா இது?’ என உற்றுப்பார்க்கும்படி பத்திரிக்கை கொடுக்க வரும்போது எண்ணெய் வைத்து வழித்து சீவிய இறுகிய முகத்தோடு நடந்து வருபவளைக்கண்டு வியந்தாள் தனம்.
தனம் மீராவின் ஆருயிர் தோழி. தனக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால்கூட அதை தனத்தின் காதுகளில் ஓதினால்தான் மீராவுக்கு உறக்கம் வரும். மீராவை கட்டிப்பிடித்து வழக்கமான உபசரிப்புகளுக்குப்பின் தனம் அவள் வீட்டுக் கட்டிலில் அமரவைத்து அவளது விரல்களை பிடித்துக்கொண்டு கேட்டாள்,
“ஏன்டி மீரா.. உனக்கு மகேஷ் மாமாவ பிடிக்குதுனு சொல்லியுமா சுப்பு மாமாவோட நிச்சயம் பண்ணாங்க?”
மீரா தனத்தை வாட்டமாக அமரச்செய்து அவளது மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். அவளது கேசத்தை கோதித்தந்ததில் கால்படி எண்ணெய் தேத்தியிருப்பாள் தனம்.
மீரா தேம்புகிறாள் என்பதை அவள் உடலுறாய்வில் கண்டறிந்து தனம் பதறினாள்.
“ஏ.. புள்ள என்னடி அழுகுற? இன்னும் ரெண்டு வாரத்துல கல்யாணம்டி உனக்கு”.
மீராவுக்கு புதியதாகத் தகவல் சொல்வதைப் போல பேசினாள் தனம்.
“தனா, சுப்ரமணி மாமாவ அந்தமாதிரி நெனச்சி பாக்கவே முடில. நீயே யோசிச்சு பாரு. நானும் மகி மாமாவும் பக்கத்து பக்கத்துல நின்னா எப்பிடி இருக்கோம்? சுப்பு மாமா நின்னா எப்பிடி இருப்பாரு?”
தனம் தான் கற்பனையில் கண்டதை மீராவிடம் சொல்லத் தேவையில்லை என நினைத்து அமைதியாக இருந்தாள்.
மீரா மகேஷின் கைகளைப் பிடித்துக்கொண்டு ஊர்த்தெருவில் சுற்றியதை பிறந்தக் குழந்தையைத்தவிர வேறு யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள். மகி அப்போதுதான் வேளாண் கல்லூரியில் சேர்ந்திருந்தான். மாநிறம், முகத்தில் ஆண்களை அளவோடு வழியும். கோதுவதற்கு ஏதுவான கேசம். அளவாக கத்தரித்து தேவையான அளவிற்கு வளர்ந்திருந்த மீசை, முகத்தில் மாசு, மரு, கொப்புளம் ஏதுமில்லாமல் கிராமத்து கதாநாயகனைப் போலிருப்பான். சுப்பு அவனுக்கு நேரெதிர்.
மகியின் மேல் பொத்தான் அவிழ்ந்த சட்டைக்குள் ஊடுருவி கம்பங்காட்டில் பால்யத்தில் விளையாடியதைப் போல அவன் மார்முடிகளோடு விளையாடும் ஆசை வரும் போதெல்லாம் மீரா அவன் விரல் பிடித்து கை முடிகளை சுண்டி இழுப்பாள்.
மகி “ஆ..” என்று அலற
“அச்சச்சோ.. வலிக்குதா? சாரி மாமா” என்று கொஞ்சுவாள்.
வார இறுதிகளில் சினிமாவுக்கு அழைத்துப்போகச் சொல்லி அடம்பிடிப்பாள். சுப்புவிடம் காசு வாங்கி சாவித்திரி மகியோடு அனுப்பி வைப்பாள். சுப்பு பொறுப்பான மார்க்கெட்டிங் வேலை பார்த்து வந்ததால் சின்னஞ்சிறுசுளோடு சேர்க்கையில்லை.
தெருவில் இவர்களைப் பார்த்து ஏங்கிய வயசுப்பிள்ளைகள் காதலிக்கும் ஆசையில் வழியில் போகும் ஆண்பிள்ளைகளிடம் வழிந்து வீட்டில் மாட்டி உதைப்பட்ட கதையுண்டு.
“மீரா உங்கப்பா இருந்திருந்தாக்கூட நல்லா படிக்க வச்சி நீ ஆசப்பட்ட பையனுக்கு உன்ன கட்டிக்குடுத்திருப்பாரு. பாவம் துணி தச்சி உங்கம்மா உன்ன எப்படி கரசேக்கும்? உந்தங்கச்சி வேற இப்பதா அஞ்சாவது படிக்குது”
தனம் இதைச் சொல்லி முடித்ததும் மீரா விசுக்கென்று எழுந்தமர்ந்துக் கண்களை அவசரமாக துடைத்துக்கொண்டாள்.
தனம் மது குறித்துப் பேசியதும் மீரா மனதில் ‘நாம் சுப்புவை கட்டிக்கொண்டால்கூட பின்னாளில் மது வளர்ந்து மகி மாமாவை திருமணம் செய்துக்கொள்வாளோ?’ என்று நினைத்துப்பார்க்க பக்கென்றிருந்தது.
இப்போதிருக்கும் மதுவையும் மகியையும் அருகருகே நிறுத்திப்பார்த்தாள். அப்பா பிள்ளை போலிருந்தார்கள். மீரா சிரித்துக்கொண்டாள்.
“ஏன்டி சிரிக்கற”
”இல்ல தனா.. சுப்பு மாமா நல்லவருதான். ந்தா போன வாரம்கூட ரெண்டு பவுன்ல பிரேஸ்லட் வாங்கி குடுத்தாரு. சீக்கிரமா நான் ரொம்ப நாளா ஆசபட்ட ஸ்கூட்டி வண்டிக்கு லோன் போடுதாம். அதுமட்டுமில்லாம சேலத்துல பெரிய அபார்ட்மெண்டு வீட்டுக்கு ஏற்கனவே லோன் போட்டிருக்காம். அந்த வீட்டுல பால்கனி இருக்காமா. அங்க ஊஞ்சல் கட்டி குடுக்குதாம். அது உசரத்துக்கு மூஞ்சி பாக்குற கண்ணாடி உள்ள பொருளெல்லாம் வச்சிக்கற வசதியோட வாங்கி தரதா சொல்லிச்சு”
தனம் வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அப்புறம்.. பால்கனில இருந்து பாத்தா ஏற்காடு மலை தெரியுமாம். அந்த இடத்துல லவ் பேர்ட்ஸ் வாங்கி கூண்டுல மாட்டி விட்டா வீட்டுக்குள்ள எந்நேரமும் கீச்.. கீச்சுனு. சத்தம் கேட்குமில்ல?”
தனத்திற்கு இவளைக் கண்டு பரிதாபமாக இருந்தது. திருமண உறவு குறித்த புரிதலின்றி வெறும் பொருட்கள் மேல் ஆசைபட்டு அகப்படப்போகிறாளே என்று உள்ளுக்குள் கவலைப்பட்டாள்.
“அப்புறம்.. அந்த அபார்ட்மெண்டு வீட்டுல பூங்கா, நீச்சல் குளம்லாம் இருக்காமா..”
தனா மீராவின் வாயைப் பொத்தினாள். ஏதோ பேச வாய் திறந்தவள் அப்படியே மூடிக்கொண்டாள்.
“மீரா உனக்கு மகி மாமாவ புடிக்குதா? இல்ல சுப்பு மாமாவ புடிக்குதா?”
மீரா உடனடியாக பதில் கூறவில்லை.
தனம் எழுந்து மின்விசிறியை சொடுக்கிவிட்டு வந்து மெத்தையில் அமர்ந்தாள்.
“தனா எனக்கு மகி மாமாவ ரொம்ப புடிக்கும். ஆனா, அது இப்பதான் படிக்குது. இது எப்ப முடிச்சு, வீடு வாங்கி, வண்டி வாங்கி.. “
மீராவின் பெருமூச்சில் மின்சாரம் தடைபட்டு போக தனத்தின் அம்மா வந்து ஆளுக்கொரு விசிறி தந்துவிட்டு போனாள்.
***
குறித்த தேதியில் சுப்ரமணி மீராவை சம்பிரதாயப்படி ஏற்றுக்கொண்டான். அன்றைய மாலையில்தான் மகி தான் காதலிக்கும் யாமினி என்ற பெண்ணின் புகைப்படத்தை அண்ணனிடமும் மீராவிடமும் காட்டினான். மீரா புகைப்படத்தை எல்லா கோணங்களிலும் பார்த்தாள். “இந்த புள்ள ஒன்னும் நம்ம அளவுக்கு இல்ல” என்று உள்ளுக்குள் சொல்லி வெளியே சிரித்துக்கொண்டாள்.
நல்லவேளையாக மகி மாமாவைப்பற்றி யாரிடமும் வாய் திறக்காமலிருந்தது நல்ல வேளையாகப் போனதென்று நினைத்து பெருமூச்சு விட்டாள் மீரா.
சொல்லியதைப்போலவே சுப்பு மீராவை தனது புது அடுக்ககத்திற்கு அழைத்துச்சென்று விளக்கேற்றச் சொன்னான். திருமணப் பரிசாக மீராவின் கையில் புது கைப்பேசியை தந்தான். சாவித்திரிக்கு ஆனந்த கண்ணீர் நின்ற பாடில்லை. இரண்டிற்கு நான்கு வண்ணத்தில் காதற் பறவைகள் பால்கனியில் குடியேறின. மீரா பால்கனி வரும் நிலவுக்கும் சேர்த்தும் பூச்சூட்டிப் பார்த்தாள்.
குழந்தை முகத்தில் காமத்தை தேடும் மனமில்லாமல் சுப்பு ஒரு தகப்பனைப் போலவே மீராவை முகம் சுளிக்க விடாமல் செல்லமாக வைத்திருந்தான். யாராவது தாலி கட்டி பிள்ளையோடு குடித்தனம் நடத்துவார்களா? எப்போதாவது சுப்புவிற்குள் இப்படித் தோணும்போது தன் ஆண்மையை எவ்வகையிலாவது சுயபரிசோதனை செய்துக்கொள்வானே தவிர அவன் மீராவை தொல்லை செய்தது கிடையாது.
சில வருடங்களில் மீராவுக்கு கைப்பேசி தரவுகளும், அருகாமை வீட்டு அக்காக்களின் சொற்பொழிவும் ஊக்கம் தர அலுவல் முடிந்து மாலை வீடு திரும்பும் சுப்புவின் முன் கருப்பு அல்லது சிவப்பு வண்ண சேலையை தழையத் தழையக் கட்டிக்கொண்டு நிற்பாள். நித்தியமான மல்லிகையின் மணத்தில் சுப்பு மீராவை தன் மனைவியாய் அப்போதுதான் காணத்தொடங்கினான்.
***
ஒரு வருடத்திற்குள் மீரா பெண் குழந்தையொன்றை பெற்று சுப்ரமணியிடம் தந்தாள். தந்தை வேடத்திலிருந்து உண்மையாகவே தந்தை ஆன சுப்பு அளவிலாத இன்பமடைந்தான். பத்தொன்பதே வயதான மீரா அப்போதுதான் காதலின் எல்லையை கண்டடைந்திருந்தாள்.
சுப்புவும் சாவித்திரியும் தன்யா என்று பெயரிடப்பட்ட அக்குழந்தையை உலகமாக எண்ணி சுற்றி வந்தனர். பால் தருவதைத்தவிர குழந்தையிடம் மீராவுக்கு வேறு வேலை இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை.
சுப்பு தன்யாவிற்கு வேண்டியதைப் பார்த்து பார்த்து வாங்கித்தந்து அவளது சிரிப்பில் வயதைக் கடத்தி வர, மீரா விட்ட இடத்திலிருந்து தொடருகிறேன் என டிப்ளமோ படிப்பில் சேர்ந்தாள். ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு புது நண்பர்களோடு ஊர்சுற்ற ஆரம்பித்தவள் விரைவில் பெரும் நண்பர் கூட்டத்தைச் சேர்த்தாள். ஆண் பெண் கணக்கில்லாத அக்கூட்டம் மீராவின் அழகுக்கும் செல்வாக்கிற்கும் அவள் பின்னாலேயே சுற்றி வந்தது.
சுப்பு ஒருபோதும் மீராவை கண்காணித்ததில்லையே ஒழிய சாவித்திரி அவ்வப்போது மீராவை கண்டித்துக் கொண்டுதானிருந்தாள். மது மேற்படிப்புக்கு கனடா சென்றுவிட்டதால் சாவித்திரி நிரந்தரமாக மகள் வீட்டில் தம்பியென்ற உரிமையிலும் தாராளமாய் தங்கிக்கொண்டாள்.
***
தேவையென்று பல இருந்தபோது வாழ்வு தந்த சுவாரசியம் அது தீர்ந்து போகும்போது சலிப்பூட்டுவது விந்தை. அடுத்தடுத்து எதையாவது தேடிக்கொண்டும் எதற்காகவோ ஏங்கிக்கொண்டும் இருப்பதில்தான் மனித குலத்தின் ஆயுள் திருப்தியுறுகிறது போலும்.
மீராவின் தேடுதல் அவளேயறியாதது. பற்பசை முதல் பாதணி வரை பார்த்துப் பார்த்து தரமானதாக, விலையுயர்ந்ததாக வாங்கி வைப்பாள். வருடம் முழுவதும் அணிந்துக்கொள்ள அவளுக்கு புத்தாடைகளும் இதரப் பொருட்களும் இருப்பில் இருந்தன. தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு சுப்பு அனுப்பும் பணம் போக, அவளது கடனட்டைகளும் தேய்ந்தோய அவைக் குறித்த கேள்விகளை சுப்பு ஒருநாளும் அவளிடம் வைத்ததில்லை.
மீராவின் கைப்பேசி காட்டும் மாதாந்திர சுழற்சியின் பத்தாம் நாள் தொடங்கி ஐந்தாறு நாட்களுக்கு மட்டும் மாலை வீட்டிற்கு வரும் சுப்புவின் முன் தழையத் தழைய சேலை கட்டி மல்லிகைச்சூடி முகம் மலர நிற்பாள்.
வழக்கம்போல சுப்பு அவள் தந்த தேனீரை வாங்கிக்கொண்டு குழந்தையோடு விளையாட அமர்ந்து கொள்வான். மல்லிகை மணம் அந்த குளிர்சாதனமிட்ட படுக்கையறையை மணக்கச்செய்வதோடு நின்றுகொண்டது.
ஐந்தரை அடி உயரத்திற்கு அளவாக கத்தரித்து சலவை செய்த வண்ணக்கூந்தல். ஒற்றை மாராப்பு விரிப்பில் உள்ளிருக்கும் ரவிக்கையின் உயர்தர வேலைப்பாடுகள் கள்ளம் கபடமில்லாமல் வெளியில் தெரியும். அதன் நெளிவு சுழிவுகள் இயல்பை பிரம்மாண்டமாய் காட்டும். மார் வரை நீண்ட ஒற்றை வைரக்கல் பதித்த கழுத்துச் சங்கிலி, காதிலிருந்து கழுத்துவரை நீண்டு தொங்கும் தொங்கட்டான்கள், அடர்ந்து வரையப்பட்ட புருவத்தின் கீழ் மையிட்ட கண், புருவ மத்தியில் கண்ணுக்கு தெரியாத மச்சமளவு பொட்டு, ஒயின் நிறத்தில் உதட்டுச்சாயம், எப்போதும் மணக்கும் மேனாட்டு வாசனை திரவியம், மணிகள் பதிக்கப்பட்ட காலணி, இடத்தோளில் ஊசலாடும் உயர் ரக தோள்பை, ஓட்டப்பழக புதிதாய் வாங்கிய நீலநிற மகிழுந்து, மீராவின் புது அவதாரம் இப்படியாக இருந்தது.
***
மீரா சமூகப்பணிக்காகவே டைகர்ஸ் கிளப்பில் சேர்ந்தாள். பின் அங்கும் நண்பர்கள் சேர அவர்களோடு தூரதேசங்களுக்கு பிரயாணப்படத் தொடங்கினாள். காயத்ரிதான் அவளுக்கு மேற்கத்திய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தினாள். வெளியூர் போகும்போது மட்டும் கலாச்சாரத்தை மாற்றிக்கொள்வாள் மீரா. காயத்ரியும் அவளது நண்பன் விக்னேஷும், அவனுடைய நண்பர்கள் சிலரும், மீராவோடு ஒருமுறை கொடைக்கானலில் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் தங்கும் வாய்ப்பு ஏற்பட்டபோது காயத்ரிதான் மீராவிடம் கேட்டாள்,
“ஏன் மீரா, நாம ஏன் விஸ்கி, வைன் இதெல்லாம் டிரை பண்ணக்கூடாது? “
மீரா முதலில் மறுத்தாள். பின் சமூகக்குடியைப் பற்றிய காயத்ரியின் போதனையில் சரியென்று தலையாட்ட விக்னேஷ் சரியான கலவையில் விஸ்கி, ரம், ஜின், வோட்கா என பலதரப்பட்ட வஸ்துகளை ஊற்றிக்கொடுத்ததோடு கோப்பையை சரியாக பிடிக்கவும், அதை சிறு இடைவேளையில் விட்டு விட்டு முகம் கோணாமல் உறிஞ்சவும் கற்றுத்தந்தான். மீரா அதை முதன்முறையாக நுகர்ந்து பார்த்து சில உமட்டல்களுக்குப்பின் அவன் அறிவுரைப்படி ரசித்துப்பருகினாள்.
***
மகேஷ் மீராவின் பக்கம் திரும்பி அவள் கையில் இரண்டு மூன்று முறை தட்டியெழுப்பினான். மீரா குமட்டுவதைப்போல பாவனை செய்தாள்.
“மீரா.. மீரா”..
“ம்ம்ம்..”
அவளிடம் தன் வீடு வந்ததை சொல்லிவிடவே மகி நினைத்தான். அதற்குள் இரும்பு கேட்டை திறந்துக்கொண்டு யாமினி வாசலில் நின்றிருந்தாள். வாசலில் காரை நிறுத்திவிட்டு மகி காரிலிருந்து இறங்கி வந்தான்.
“யாமினி, பசங்க தூங்கியாச்சா” என்றான்.
“ம்ம்..”
மீராவின் குரலா என்ற சந்தேகத்தில் இருந்த யாமினியை அவன் உற்றுப்பார்த்தான். அவள் கோபத்தில் இருக்கிறாள் என்பது அறிந்ததுதான்.
“இப்ப சுப்பு மாமாவுக்கு என்ன பதில் சொல்லுவீங்க?” யாமினி வழக்கத்திற்கு மாறான தொனியில் கேட்டாள்.
இத்தகவல் சுப்பு அண்ணனுக்குத் தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவான் என நினைத்துதான் மீராவை இங்கு அழைத்து வந்தது. மகி, யாமினியிடம் ஏதும் பேசாமல் வெற்றுப் பார்வையோடு நிறுத்திக்கொண்டான். காரின் கதவைத் திறந்துவிட்டு மீராவை வெளியே அழைத்து வரச்சொன்னான்.
அவனை முறைத்துக்கொண்டே மீராவின் தோளைப்பற்றி யாமினி இழுக்க மகியும் அவளுக்கு உதவப்போனான். யாமினி அவளை தடுத்து மீராவின் கன்னத்தில் ஓங்கித் தட்டினாள். அது மீராவை அறைந்ததைப்போல தோன்றியது மகிக்கு.
“அக்கா.. அக்கா.. வெளிய வாங்க..”
யாமினியின் குரலுக்கு கண்விழித்து சுற்றியும் பார்த்தாள் மீரா. மெல்ல எழுந்து காரிலிருந்து வெளிவந்து தரையில் கால் வைக்க, தடுமாறி கீழே விழப்போனவளை மகி பிடித்துக்கொண்டான். பின் யாமினியின் முறைப்பிற்கு பயந்து அவளை நிலையாக நிற்க வைத்தான். மீரா யாமினியின் துணையோடு நடந்துச்சென்ற போது இதுவரை சேர்த்து வைத்திருந்ததை மொத்தமாக எடுத்தாள்.
யாமினியின் உடலெள்ளாம் மீராவின் இரவு உணவும், அவள் அருந்தியிருந்த விதவிதமான பானகங்களும், இதுவரை அனுபவப்படாத நாற்றத்தோடு ஆங்காங்கே சிதற, யாமினி மீராவை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குள் ஓடிப்போனாள்.
மகியே மீராவை வீட்டுக்குள் அழைத்துச்சென்று அவள் குளித்து சுத்தமாக அறையை காட்டி, யாமினியின் ஆடையையும் எடுத்துத்தந்தான். குளித்துவிட்ட வந்த மீரா,
“சாரி..”
என்று அவன் முகத்தை ஏறெடுக்காமல் சொல்லிவிட்டு படுத்துக்கொண்டாள்.
***
புதியதொரு பொழுதின் மாலையில் சுப்பு அலுவலகம் விட்டு வரும்போது சாவித்திரி தன்யாவிற்கு வீட்டுப்பாடம் சொல்லித்தந்துக் கொண்டிருந்தாள். வீடு வழக்கத்திற்கு மாறான அமைதியிலிருந்தது. புதிதாய் பொறித்த குஞ்சுகளோடு மொத்தமாய் பன்னிரு காதற் பறவைகள் காற்றில் கூண்டோடு ஊசலாடிக்கொண்டிருaந்தன. சரவிளக்கு ஒளிப்பெறாமல் உறங்கிக்கொண்டிருந்தது. பூசையறை தீபம் கடமைக்கு எரிய, தூப மணம் வித்தியாசமாய் மணத்தது.
யாமினி மதினியின் காதுகளில் இருப்பதை இல்லாததோடு சரியான கலவையில் ஊற்ற, சாவித்திரி பற்றியெரிந்ததில் மீராவின் கன்னமும் முதுகும் சிவந்து வீங்கியது. மெத்தையில் உடலை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறுக்கி புழுவைப் போல படுத்திருந்தாள் மீரா.
சாவித்திரி உள்ளே நுழைந்த சுப்புவைப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுக்கையில் அவன் நேராக படுக்கையறைக்குச் சென்றான்.
சலசலவென கொலுசு சத்தத்தோடு “அப்பா”.. என்று ஓடிவந்த தன்யாவைக்கூட திரும்பிப் பார்க்காத சுப்பு படுக்கையறையின் மரக்கதவை அடித்து அடைத்து தாழிட்டான். சாவித்திரி எதையோ நினைத்து பயந்து எழுந்தோடி அறையிடம் சென்றாள். பின் எதையோ நினைத்து மீண்டும் முன்போல் தன்யாவிடம் அமர்ந்துக் ண்டாள்.
மீராவின் கண்கள் அழுததால் மட்டுமே சிவந்திருக்கவில்லை என்பதை சுப்பு அறியாமல் இல்லை. கூட்டுப்புழுவை தீண்டும் மென்காற்றைப்போல அவள் கைகளைத் தொட்டு திருப்பினான். மீரா தேம்புவதைக் கண்டு அவள் கண்களை துடைத்து ஈரத்தை தன் சட்டையில் அப்பிக்கொண்டான். மெல்ல அவளது தலையை எடுத்து தன் மடியில் பாங்காய் வைத்துக்கொண்டான். தொப்பைக்கு இடைஞ்சல் தராமல் எட்டியவரை குனிந்து மீராவின் பரந்த நெற்றியில் ஆழ முத்தமிட்டான். முகத்தில் படர்ந்திருந்த முடிகளை விலக்கிவிட்டு அவள் கூந்தலை கோதித்தந்தான். விழியில் நீர் கசிய நிமிர்ந்து பார்த்த மீராவின் முகத்தில் இப்போதும் தன்யாவையே கண்டான் சுப்ரமணி.