திறமைக்கும் வெற்றிக்கும் இடையிலான பாலம்

திறமைக்கும் வெற்றிக்கும் இடையிலான பாலம்

கட்டுரை:- அபிலாஷ்

பாலகுமாரனின் நாவல் ஒன்றில் ஒரு பெண் பள்ளியில் இருந்தே உன்னதமான பாடகியாக இருப்பாள். தன் குரலால் ஊரையே சொக்க வைப்பாள். பள்ளியில் சகமாணவிகள், ஆசிரியைகள் வகுப்பு வேளையில் அவளைப் பாட வைத்து தம்மை மறந்து சுகிப்பார்கள். அன்றாட அல்லல்களில் இருந்து அறுந்து மேலெழுவார்கள். ஒரு வகுப்பில் பாடி முடித்ததும் இன்னொரு ஆசிரியை வந்து அவளை இன்னொரு வகுப்பிற்கு பாட அழைத்துச் செல்வார். பின்னர் கல்லூரியில் சேர்ந்த பின் அவளுக்குப் புகழ் இன்னும் கூடுகிறது. கல்லூரி கலை நிகழ்ச்சிகளில் அவள் பாடிப் பரிசுகள் குவிக்கிறாள். ஊரே அவளைக் கொண்டாடுகிறது. அடுத்தக் கட்டமாக ஒரு இசைக்குழுவினர் வந்து மேடையில் பாடுவதற்காக அவளை தம்முடன் அழைத்துப் போகிறார்கள். ஒவ்வொரு வாய்ப்பிலும் அவள் ஜனங்களை தம்மை மறந்து மிதந்தெழ வைக்கிறாள். அவளை ஒரு தேவதையாகவே மக்கள் கருதுகிறார்கள். நாவல் இப்படி ஏறுமுகமாகவே போய்க் கொண்டிருக்கும். ஆனால் எதார்த்ததில் இப்படி நடப்பதில்லை.

நான் பள்ளியில் இது போல் சொரூபமாய் பாடுகிறவர்களை கண்டிருக்கிறேன். என் அக்காவின் தோழி ஒருவர். பள்ளியில் அவரை வகுப்பில் பாடச் சொல்வார்கள். அவர், “குழலூதும் கண்ணனுக்கு”, பாடும் போது அடுத்தடுத்த வகுப்புகளில் பாடம் எடுப்பதை நிறுத்தி விடுவார்கள். இரைச்சலிடும் மாணவர்கள் அமைதியாகி கேட்பார்கள். அவர் குரல் தனியாக பள்ளி முழுக்க அலையடிக்கும். அவர் அம்மா ஒரு பாட்டு வாத்தியார். அம்மாவிடம் கற்றுக் கொண்டது. இயல்பான திறமை. இனிய குரல். ஆனால் அவருக்கு இயல்பில் இசை வெறி ஒன்றும் இல்லை. கல்லூரியிலும், அதற்குப் பின்னரும் அவர் இசையைப் பின் தொடரவில்லை.

சென்னை கிறித்துவக் கல்லூரியில் நான் படிக்கையில் பென்னி தயாள் அங்கு ஒரு நட்சத்திரப் பாடகர். இளங்கலை படித்துக் கொண்டிருந்தார். அவருடன் மற்றொரு நல்ல பாடகரும் இருந்தார். பெயர் சரியாக நினைவில்லை. சிவகுமார் என நினைக்கிறேன். ஐ.ஐ.டியில் இருவரும் பாடுவதை கேட்டிருக்கிறேன். எனக்கு பென்னி எஸ்.பி.பியை காப்பி அடிக்கிறார் என அப்போது தோன்றும். அவரை விட இந்த சிவகுமார் நன்றாக பாடுகிறார் என கருதினேன். பென்னி வணிகத்தன்மை கொண்டவராகவும், சிவகுமார் ஆழமான பாடகர் என்றும் நம்பினேன். பின்னர் சில வருடங்கள் கழித்து பென்னி சினிமாவில் அறிமுகமாகி சில அற்புதமான பாடல்களை பாடினார். நான் எதிர்பார்த்ததை விட பலமடங்கு மேலான பாடகராக மாறியிருந்தார். அவரது “உனக்கென்ன வேணும் சொல்லு” பாடலை என் மகன் ஆயிரம் முறையாவது கேட்டிருப்பான். அந்தக் குரல் கேட்டால் எப்படியான அழுகையையும் அவன் நிறுத்தி விடுவான். சரி, அந்த இன்னொரு பாடகர் என்னானார்? அவர் ஏதாவது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கார், வீடு என செட்டிலாகி இருப்பார். அல்லது மத்திய வர்க்க அல்லலில் உழன்று கொண்டிருப்பார். அவரைப் போன்றே டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஜொலிப்பவர்கள், அலுவலக கலை நிகழ்ச்சிகளில் கலக்குபவர்கள் என பல திறமைகளை அடிக்கடி எதிர்கொள்கிறேன். இவர்கள் முயன்றால் உச்ச நட்சத்திரம் ஆகலாமே என தோன்றும். ஆனால் ஆக மாட்டார்கள். நடனம், பேச்சு, ஏன் எழுத்திலும் கூட, நிறைய திறமை கொண்டிருந்து பின்னாளில் ஜொலிக்காமல் போகிறவர்களை தெரியும். திறமையையும் வெற்றியையும் எது பிரிக்கிறது?

பென்னி தன் பத்திரிகைப் பேட்டி ஒன்றில் தனது ஆரம்பக் கால ஏமாற்றங்கள், போராட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். அவரைச் சரியாகப் பொருட்படுத்தாமல் அவமதித்து அனுப்பின இசையமைப்பாளர்கள் சிலரைப் பற்றி பொருமியிருந்தார். கல்லூரிக்குப் பிறகு மூன்று வருடங்கள் அவர் எங்கும் பாடவில்லை. பின்னர் மலையாளப் படங்களில் இரண்டு வாய்ப்புகள். எதேச்சையாய் ரஹ்மான் கவனித்து தமிழில் வாய்ப்பு நல்க பென்னியின் குரல் சிறகு விரிக்கிறது. பென்னியின் பெற்றோர் வளைகுடா நாடுகளில் ஒன்றில் இருந்ததால் அவருக்குப் பொருளாதார கவலைகள் இல்லை. இசையைப் பின் தொடர முடிந்தது. ஆனால் அப்போதும் கூட வாய்ப்புகள் எளிதாக அமையவில்லை. கல்லூரி முடித்தப் பிறகு அவருக்கு எதார்த்த உலகம் அதிர்ச்சியாக இருந்திருக்கும். பள்ளி, கல்லூரிகளில் திறமையை முன்னெடுக்க பண்பாட்டு அமைப்புகள் இருக்கும். வாய்ப்புகள் கிடைக்கும். ஆசிரியர்கள், சகமாணவர்கள் திறமையாளர்களை தோளில் ஏந்திக் கொள்வார்கள். ஆனால் கல்லூரி முடிந்ததும் முழுக்க வேறொரு தனிமையான உலகம் ஆரம்பிக்கிறது. அங்கு மனிதர்களுக்கு அடுத்தவர்களில் அக்கறை இல்லை. அங்கு மனிதர்களுக்கு தம்மை தக்க வைப்பதே மிகப்பெரிய போராட்டமாக இருக்கிறது. என்னைக் கவனி என இன்னொருவரை நோக்கி ஒவ்வொருவரும் கூவிக் கொண்டிருக்கிறார்கள். அக்குரலைப் பொருட்படுத்தாமல் மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். என் திறமையை கவனி என கோரிக் கொண்டு ஒருவன் தம்மிடம் வந்தால் அவனை நுட்பமாய் அவமதிப்பதில் இந்த மனிதர்களுக்கு ஒரு தனி சுகம் இருக்கிறது. அவமதிப்புகளும் நெருக்கடிகளும் திறமையாளனை குழப்புகின்றன. அன்றாட வாழ்க்கையின் தேவைகள் இன்னொரு பக்கம் இழுக்கின்றன. தேடல் கொண்டவர்கள் இந்த கட்டத்தில் தளர்ந்து அன்றாட வாழ்க்கையுடன் சமரசம் பண்ணிக் கொள்வார்கள்.

நான் முன்னே குறிப்பிட்ட என் அக்காவின் தோழியை போன்றவர்கள் இந்தளவுக்கு கூட வருத்திக் கொள்ள மாட்டார்கள். திறமையைப் பின் தொடர்வதில் அன்றாட வாழ்க்கை ஏகப்பட்ட தடைகளை போட்டுக் கொண்டிருக்கும். இதை அறிந்து தான் பலர் ஆரம்பத்திலேயே ஒதுங்கிக் கொள்கிறார்கள். கொஞ்ச தூரம் நடந்து செல்கிறவர்கள் தளர்ந்து விழுகிறார்கள். ஆனால் இத்தகையோருக்கு அன்றாட வாழ்க்கையில் வெல்வது சுலபமாக இருக்கும். கொஞ்சம் ஒழுங்கு, சில சமரசங்கள் போதும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்து விடும்.

பென்னியை போன்ற சிலர் வெறித்தனமாக முன்னேறுகிறார்கள். யார் மறுத்தாலும் தம் திறமை மீது மிதமிஞ்சிய நம்பிக்கையை வைத்திருப்பார்கள், கண்மூடித்தனமான ஒரு பித்து அவர்களை வழிநடத்தும். இந்த பித்து தான் திறமைக்கும் வெற்றிக்குமான பாலம் என இப்போது தோன்றுகிறது.

நான் சமீபத்தில் ஒரு இளம் எழுத்தாளரைச் சந்தித்தேன். அவர் இயல்பான எழுத்து திறன் கொண்டவர். தன் குறுநாவல்களை பிரசுரிக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், சினிமாவில் பாட்டெழுத, திரைக்கதையாளனாக முன்னெடுத்த சிறு போராட்டங்களை, ஒவ்வொருமுறையும் பட்ட அவமதிப்புகள், ஏமாற்றங்களை பட்டியலிட்டார். தன் மீது பிறருக்கு ஏன் அக்கறையில்லை என அவருக்கு புரியவில்லை. எனக்கு அவரது போராட்ட வரலாறு மிகைப்படுத்தப்பட்டது என தோன்றியது. அவர் சில கதவுகளை தட்டியிருக்கிறார். ஆனால் அவை உடனே திறக்கவில்லை என்றதும் ஓடி வந்து விட்டார்.

நான் என்னுடைய தேடல், அதன் போது எதிர்கொண்ட அவமானங்களை அவரிடம் குறிப்பிட்டேன். ஒரு கட்டுரையை நேரில் கொடுத்து விட்டு மாலையில் போனில் அழைத்து “படித்தீர்களா?” என கேட்டதற்காக ஒரு சப் எடிட்டர் என்னை கெட்டவார்த்தையால் திட்டி இருக்கிறார். அவர் அப்போது சற்று போதையில் இருந்தார். நான் உயிர்மையில் எழுத ஆரம்பித்தப் பின்னர் அவர் என்னைத் தொடர்பு கொண்டு பாராட்டினார். அவர் தான் முன்பு அவமானப்படுத்தியவரிடம் தான் இப்போது பேசுகிறோம் என மறந்து விட்டார். நானும் நினைவுப்படுத்தவில்லை. இன்னொரு பதிப்பாளரை சந்தித்த போது, “உங்களை பதிப்பகம் வந்து சந்திக்கலாமா?”, எனக் கேட்டேன். “வேண்டாம்”, என்றார். நான் காரணம் கேட்டேன். அவர் சொன்னார், “நீங்கள் என்னைத் தேடி வந்தால் எனக்கு உங்கள் மேல் பச்சாதாபம் தோன்றும். அப்புறம் உங்கள் நூலை பிரசுரிக்கும் மனக்கட்டாயம் ஏற்படும். அதனால் என்னை தயவு செய்து பார்க்க வராதீங்க”. இதை விட நுணுக்கமாக குரூரமாக ஒருவரை காயப்படுத்த முடியுமா?

சிறுபத்திரிகை ஒரு மிகச்சின்ன வட்டம். இங்கேயே ஆரம்பகட்ட திறமையாளனுக்கு எவ்வளவு அவமதிப்புகள், நிராகரிப்புகள்? பிறகு, இதை விட பிரம்மாண்டமான பெரும் வணிக பரப்பு கொண்ட பிற இடங்களில் எதிர்வினைகள் எப்படி இருக்கும் யோசியுங்கள். இது போன்ற குரூரமானவர்கள் நடுவில் கருணைமிக்க, இனிமையானவர்களும் இருந்தார்கள். நான் அவர்களின் கையை பற்றிக் கொண்டேன். கல்லூரி முடிந்த பின்னர் தான் என் வாழ்க்கையின் மிக நெருக்கடியான கட்டம் ஆரம்பித்தது. எத்தனையோ சீர்குலைவுகள். நான் எழுத்தை மட்டும் பின் தொடர்ந்து கொண்டிருந்தேன். அதற்கான காரணத்தை விளக்கத் தெரியவில்லை. அது என்னுடைய மனவியாதி எனலாம். ஒருவித நடைமுறை பொருத்தமற்ற சுபாவம். ஒரு பைத்தியக்காரத்தனம்.

என்னை விட பல மடங்கு இயற்கையான திறமையிருந்தும் அதை வீணடிப்பவர்களை ஒவ்வொரு முறையும் காணும் போது, கடவுள் ஏன் இவ்வளவு இயற்கை ஆற்றலை எனக்கு தந்திருக்கக் கூடாதா! என ஏங்குவேன். உலகத்தின் உச்சத்துக்கே போயிருப்பேனே! என கடவுளிடம் கூறுவேன். இவர்களுக்குப் போய் ஏன் நல்லதோர் வீணையைச் செய்து கையளித்தாய் எனக் கேட்பேன். ஆனால் அடுத்து உடனே இப்படித் தோன்றும்: வெறும் திறமையினால் எந்தப் பயனும் இல்லை. அந்த திறமையை கையாளும் மன வலு வேண்டும். கூடுதல் திறமை கூடுதலான நெருக்கடிகளை, வலிகளை, காயங்களை கொண்டுத் தரும். அவற்றை தாங்கும் ஒரு உள்ளம் வேண்டும். அந்த உள்ளம், அதன் வலி தாங்கும் சக்தி, தான் உண்மையான திறமை. அவ்வளவு வலியை தாங்க அவ்வளவு பைத்தியக்காரத்தனம் வேண்டும்! திறமையாளர்கள் அதனால் தான் அந்த வெற்றியை நோக்கிப் பாலத்தைத் தாண்ட அஞ்சுகிறார்கள் போலும்!