திருட்டு

திருட்டு

சிறுகதை:- வினோத் ராஜ்

எல்லோரும் ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். அவன் மெதுவாக போர்வையை விலக்கிவிட்டு கட்டிலிலிருந்து கீழிறங்கினான். காலடியோசைக்கூட கேட்காதபடி மெல்ல நகர்ந்து சத்தமில்லாமல் அறைக்கதவைத் திறந்து மூடினான்.வெளியே வந்து பக்கத்து அறைக் கதவையும் அவ்வாறே சத்தமேதுமில்லாமல் திறந்து உள்ளே நுழைந்து மூடினான். அறை முழுக்க இருள்! இருளில் சுவரைப் பற்றி மெல்ல நகர்ந்து ஸ்விட்ச் பாக்ஸைத் தேடிக் கண்டுப்பிடித்து டியூப்லைட் ஸ்விட்ச்சை ஆன் செய்தான். ஒளி அறையை நிறைக்க, அவன் பீரோவுக்கு எதிராக நகர்ந்தான்.

பீரோ பூட்டியிருந்தது. அப்பா சாவியை எங்கு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. அறை முழுக்க தேடத் துவங்கினான். இறுதியாகக் கண்டுப்பிடித்துவிட்டான். சாவி, அந்த அறையின் அலமாறியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளுக்குக் கீழாக இருந்தது.சாவியைக் கையிலெடுத்துக்கொண்டு பீரோவை நோக்கி நகர்ந்தான்.ஓசையெழாமல் சாவியை பீரோவுக்குள் நுழைத்து அத்தனை சிரத்தையுடன் பீரோவை ‘க்ரீச்’என்ற சிறு சத்தம் கூட எழாதபடிக்கு மெல்ல திறந்தான்.

பீரோ முழுக்க துணிகள் நிறைந்திருந்தன.அப்பாவின் பட்டு வேட்டிதான் பளிச்சென்று கண்களுக்கு முதலில் புலப்பட்டது.அம்மாவின் பட்டுப்புடவைகள், தங்கையின் பட்டு பாவாடைகள், அவனது பேண்ட்டு சட்டைகள் எல்லாம் சீராக மடித்து அடுக்கப் பட்டிருந்தன.அவற்றிலிருந்து எழுந்த சுகந்தம் அவனுக்குள் ஒரு விதக் கிறக்கத்தைக் கொடுத்தது.கண்கள் பீரோவைத் துழாவின. உள் அறைக்குள்தான் பணமும் நகைகளும் இருக்குமென்று அவனுக்குத் தெரியும்.ஆனால் உள்ளறையின் சாவி?

எப்படியும் ஏதாவது துணிக்குக் கீழாகதான் உள்ளறையின் சாவியை அப்பா வைத்திருப்பார் என்று யோசித்தபடியே ஒவ்வொரு துணிகளையும் எடுத்து பார்த்தான்.கடைசியில் அது அப்பாவின் பட்டு வேட்டிக்குக் கீழாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுக்கொண்டான்.அதைக் கைகளில் எடுத்து உள்ளறையைத் திறந்தான்.உள்ளறையில் மூன்று நகைப்பெட்டிகள் இருந்தன.அவற்றை ஒவ்வொன்றாக திறந்து பார்த்தான்.முதலிரண்டு பெட்டிகளில் நகைகள் மட்டுமே இருந்தன.மூன்றாவதாகப் பார்த்த பெட்டியில் நகையுடன் சேர்ந்து கொஞ்சம் பணம் மடித்து வைக்கப்பட்டிருந்தது.அவற்றை கையிலெடுத்து பிரித்து பார்த்தான்.நான்கு இரண்டாயிரம் ரூபாய் தாட்களும் ஒரு ஐநூறு ரூபாய் தாளும் இருந்தன.அவனுக்குத் தேவை, எட்டாயிரம் ரூபாய் மட்டுந்தான். நல்ல வேலையாக எதிர்பார்த்த பணம் இருக்கிறது என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டு ஐநூறு ரூபாய் தாளை மட்டும் வைத்துவிட்டு இரண்டாயிரம் தாட்களைச் சுருட்டி தனது பாக்கெட்டுக்குள் திணித்துக்கொண்டு உள்ளறையைப் பூட்டிவிட்டு சாவியை அப்பாவின் பட்டு வேட்டிக்குக் கீழாகவே வைத்து பீரோவைப் பூட்டிவிட்டு அந்தச் சாவியையும் இருந்த இடத்திலேயே வைத்தான்.அறைக் கதவைத் திறந்து வெளியேறி எல்லோரும் படுத்திருக்கும் படுக்கையறைக் கதவைத் திறந்து உள் நுழைந்து கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டான்.

அப்படி இப்படியென எப்படி புரண்டும்கூட அவனுக்குத் தூக்கமே வரவில்லை.விட்டத்தைப் பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்தான்.‘உடனடியாக பணம் வேண்டுமென்று ராஜேஷ் கேட்டிருக்கிறான்.வீட்டில் அப்பாவுக்கு மருத்துவ செலவு என்று சொன்னான். உண்மைதான்! அது எனக்கே தெரியும்.அதுமட்டுமில்லாமல் ஒரு வாரத்திலேயே பணத்தைத் திருப்பிக்கொடுத்து விடுகிறேன் என்றும் சொல்லுகிறான்.நிச்சயம் தவறாமல் தந்துவிடுவான்.எப்போதும் கேட்காதவன் இப்போது கேட்டிருக்கிறான்.மறுக்க முடியவில்லை.அப்பாவிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்டால் கொடுப்பாரா தெரியவில்லை.பீரோவில் வைத்திருந்த பணத்தில் எட்டாயிரம் குறைகிறது என்று அப்பாவுக்குத் தெரிந்தால் என்னாவது?அப்பாவுக்கு இந்த ஒரு வாரத்துக்குள் எதாவது பணத்தேவை இருக்குமா?அப்படி இல்லாதப்பட்சத்தில் அவருக்குத் தெரியாமல் திரும்ப வைத்துவிட்டால் ஒன்றும் ஆகப்போவதில்லைதான்.ஆனால்… இப்படி திருடித்தான் இன்னொருவருக்கு உதவி செய்ய வேண்டுமா? ம்… என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்வோம்…’ எண்ணங்கள் சுழல கண்களை மூடினான்.

எந்தக் கணத்தில் தூங்கினான் என்று அவனுக்கே தெரியவில்லை.காலையில் கண் விழித்து பார்த்தபோது மணி எட்டரை ஆகியிருந்தது.ராஜேஷ் ஒன்பது மணியளவில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகாக பணத்துடன் வரச்சொல்லியிருந்தான்.அவசர அவசரமாக கிளம்பி பணத்தை எடுத்துக்கொண்டு ஒன்பது பத்து மணியளவில் பேருந்து நிறுத்தத்துக்கு அருகாக சென்றான் அவன்.ராஜேஷ் ஏற்கனவே தனது ஸ்பெலெண்டரில் வந்து காத்திருந்தான்.இவனைப் பார்த்ததும் ராஜேஷ் கையசைத்தான்.இவன் அவனுக்கு அருகாகச் சென்று பாக்கெட்டிலிருந்த பணத்தையெடுத்து ராஜேஷின் கைகளில் கொடுத்தான்.
‘நீ கேட்டன்னு கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கேன் மாப்ள… ஒரு வாரத்துக்குள்ள தரேன்னு சொல்லியிருக்க… முடிஞ்சளவுக்குப் பாரு…’
‘அதெல்லாம் தந்துடுவேண்டா… அக்கா அடுத்த வாரம் ஊர்ல இருந்து வருவா… அம்மாவோட நகையெல்லாம் அவ கையில்ல தான் இருக்கு… வரும்போது கொண்டு வருவா… அவ வந்ததும் நகையை அடமானம் வெச்சி பணத்தைத் திருப்பி தந்துடறேன் மச்சி… உனக்குன்னு இல்ல… தெரிஞ்சவர் இன்னொருத்தர்கிட்டயும் வட்டிக்குக் கொஞ்ச பணம் வாங்கியிருக்கேன்… அவர்க்கும் தரனும்… நீ ஒன்னியும் கவலப்படாத…’

‘ஏண்டா வட்டிக்கெல்லாம் வாங்கின்னு…’

‘வேற என்னடா பண்றத்து?வேற வழியே இல்ல…மாசம் தவறாம அந்தாளுக்கு ஆஸ்பிட்டல்ல தண்டம் வெக்க வேண்டியிருக்கு… முடியலடா…’ ராஜேஷ் கொஞ்சம் இடைவெளிவிட்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

‘மனசுல இருக்குறத்த உண்மையா சொல்லவாடா? அந்தாளு சீக்கிரம் செத்துட்டாலே நல்லாருக்கும்னு தோனுதுடா… குடிச்சி குடிச்சே ஒடம்பயும் குடும்பத்தையும் அழிச்சிட்டு இப்போ படுத்தபடுக்கையா இருக்கான்… எல்லாம் அம்மாவுக்காகத்தான் பாக்க வேண்டியிருக்கு… இல்லண்ணா… நானேகூட அந்தாள எப்பவோ சாக அடிச்சிட்டிருப்பேன்…’ இதைச் சொல்லிவிட்டு தலைத்தாழ்த்திக்கொண்டான்.அவர்களுக்குள் சில நொடிகள் மௌனம் நிலவியது.
‘சரிடா… நான் கெளம்புறேன்… ஆஸ்பிடல்க்குப் போய் பணத்தைக் கட்டனும்… அடுத்த வாரம் பணத்தைத் தந்துடறேன்… நீ ஒன்னும் கவலப்படாத…’ என்றான் ராஜேஷ்.அவன் ‘ம்’ கொட்டிவிட்டு அவனை வழி அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
நாட்கள் நகர்ந்தன…

ஒரு வாரமாகியும் ராஜேஷ் அவனுக்குப் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.அதற்கு மத்தியில் ஒரு நாள், அவனது அப்பா ஏதோவொரு பணத்தேவையின் பொருட்டு பீரோவைத் திறக்க வந்தார்.அன்று அவன் அந்த அறையில்தான் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான்.அப்பா, அந்த அறைக்குள் நுழைந்ததுமே அவனுக்குள் ‘திக்…திக்…’ என்றிருந்தது.வியர்த்துக்கொட்டியது.என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத அச்சம் பிடித்து இம்சித்தது.அவர் அலமாறிக்கு அருகாக வந்து துணிக்குக் கீழாக இருந்த சாவியை எடுத்தார்.இவன் அதைப் பார்த்தும் பார்க்காத மாதிரி புத்தகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான்.ஆனால் புத்தகத்திலிருந்த எந்த வரியும் அவனது கண்களுக்குள் இல்லை.

அப்பா, பீரோவை நெருங்கி அதைத் திறக்க, இதயம் படபடத்தது.உள்ளறையையும் திறந்தார்.இவனுக்கு வியர்வைத்துளிகள் பெருகின. அப்பா, நகைப்பெட்டிகள் ஒவ்வொன்றையும் திறந்து பார்த்தார்.இவன் அவரைப் பார்த்தும் பார்க்காத மாதிரியே இருந்தான்.அவர் எதாச்சும் கேட்பாரா என்ற பயம் இவனுக்குள் இருந்தது.அவரது முகத்தைக் கூர்ந்து நோக்கினான்.எந்தச் சலனமும் இல்லை.பெட்டிகளை மூடி உள்ளறைக்குள்ளேயே வைத்து பூட்டிவிட்டு அறையைவிட்டு நகர்ந்தார்.இவனுக்கு ஒன்றும் புரியவில்லை.அப்பா, பணம் வைத்திருந்ததை மறந்துவிட்டாரா என்று யோசித்தான்.அதேசமயம் பணம் சார்ந்த கணக்குகளைத் தவறாமல் டைரியில் குறித்து வைக்கும் அப்பா, இந்த எட்டாயிரத்தை எப்படி மறந்திருப்பார் என்றும் தோன்றியது.ஒரு வேளை காணாமல்போன பணத்தைக் குறித்து அம்மாவிடம் விசாரிக்க செல்கிறாரோ என்ற எண்ணம் எழ, அவன் பக்கத்து அறைக்கு அருகாகச் சென்றான்.பக்கத்து அறையில், அவனது அம்மா, அப்பா, தங்கை மூவரும் தொலைக்காட்சி பார்த்தபடி இருந்தார்கள்.இவன் வெளியில் நின்றபடியே எதாவது பேசிக்கொள்கிறார்களா என்று கவனமாக கேட்க முயற்சித்துக்கொண்டிருந்தான்.சில நொடிகள் அங்கேயே நின்றிருந்தான். அவன் நினைத்தபடியே, ‘பீரோல எட்டாயிரத்து ஐநூறு ரூபா வெச்ச மாதிரி இருந்துச்சி… இப்போ பார்த்தா வெறும் ஐநூறு ரூபாய்தான் இருக்கு… நீ எதாச்சும் எடுத்தியா?’ என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.இவனுக்குப் பகீரென்றிருந்தது.‘அப்பா மறக்கவில்லை!

அவருக்கு ஞாபகம் இருக்கிறது.அடுத்து நிச்சயம் என்னிடம் வந்துதான் கேட்பார்.‘நீ எதாச்சும் பணம் எடுத்தியாடா?’ என்று.வேறு வழியில்லை.அப்படி கேட்டால் உண்மையைப் போட்டு உடைத்துவிட வேண்டியதுதான்.’ அவன் மனதுக்குள் நினைத்தபடியே அறைக்குத் திரும்பிவிட்டான்.அறைக்கு வந்து எதையெதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்.அப்பா இருந்த அறைக்குப் போவதைத் தவிர்த்தான்.அன்று இரவு படித்துக்கொண்டிருந்த அறையிலேயே படுத்தும் தூங்கிவிட்டான்.தூங்கும் முன்பே முடிவு செய்துவிட்டான்.காலையில் நேரமாக எழுந்திருக்க கூடாது.அப்பா வேலைக்குக் கிளம்பி சென்ற பிறகே எழுந்துக்கொள்ள வேண்டுமென்று.அதேப்போல மறுநாள் காலை அவர் வேலைக்குப் போன பிறகே எழுந்தான்.அந்த ஒரு வாரம் முழுக்க அவன் அப்பாவைப் பார்ப்பதைத் தவிர்த்தான்.தாமதமாக வீட்டுக்கு வர ஆரம்பித்தான்.தாமதமாக தூங்கி எழுந்தான்.எல்லாவற்றையும் மீறி அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.பணத்தையெடுத்தவன் அவன்தான் என்று அப்பாவுக்குத் தெரியும் என்று.ஆனால் அவர் அவனிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவேயில்லை.அவனும் அவனாகப் போய் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை.ராஜேஷ் சீக்கிரம் பணத்தைக் கொடுத்துவிட்டால் தேவலாம் என்பது போல் இருந்தது அவனுக்கு.பணம் கைக்குக் கிடைத்துவிட்டால் அதை எடுத்த மாதிரியே வைத்துவிடலாம்.

ஒரு நாள் ராஜேஷ், தானாக இவனுக்குப் போன் பண்ணி தாமதத்துக்கான விஷயத்தைச் சொன்னான்.அவனது அக்கா இன்னும் இங்கு வரவில்லையாம். அக்காவின் கணவர் அவளை இங்குப் போகக்கூடாது என்று சொல்லியிருக்கிறாராம். மீறி போனால் திரும்ப வரவேண்டாமென்று சொல்லி மிரட்டி வைத்திருக்கிறார். காரணம், அவனது அம்மாவின் நகைள் தானாம்!அதனால் அவனால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை.இன்னும் சில நாட்கள் அவகாசம் தரச்சொல்லி கேட்டிருந்தான்.இவனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.இவன், ஒன்றும் சொல்லிக்கொள்ளவில்லை.‘ம்… பரவாயில்லை.பொறுமையாவே கொடுடா!’ என்று மட்டும் சொல்லியிருந்தான்.அவனது அப்பா காணாமல் போன பணத்தைப் பற்றி இவனிடம் கேட்டுக்கொள்ளாதது ஏதோ ஒரு வகையில் அவனை அப்படி சொல்ல வைத்திருந்தது.அதைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ள செய்யாமல் இருந்தது.ஆனால் இவனுக்கு இருந்த குழப்பமெல்லாம், அப்பா ஏன் அந்தப் பணம் குறித்து தன்னிடம் ஒரு வார்த்தையும் கேட்கவில்லை என்பதைக் குறித்தே இருந்தது.

அவன் அவரது கணக்கு வழக்கு டைரியை எடுத்து புரட்டிப்பார்த்தான்.அதில் அவனது அப்பா, அவனது பெயரைக் குறிப்பிட்டு அவனுக்குக் கொடுத்தது என்று எட்டாயிரம் ரூபாய்க்கு கணக்கு எழுதியிருந்தார்.அதைப் பார்த்தவனுக்குக் குற்றவுணர்வு தலைக்கேறியது.நியாயமாக ‘கொடுத்தது’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘திருடியது’ என்றிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது.இதுக்குறித்து இதுநாள் வரையிலும் அவர் ஒரு வார்த்தையும் அவனிடம் கேட்டிருக்கவில்லை.எவ்வளவோ முயன்றும்கூட அவனாலும் அந்தத் திருட்டைக் குறித்து அவரிடம் சொல்ல முடியவில்லை. அது ஏனென்றே அவனுக்குத் தெரியவில்லை.