உள்ளது உள்ளபடி

உள்ளது உள்ளபடி

சிறுகதை:- யுவன் சந்திரசேகர்

இத்தனை வருட எழுத்து வாழ்க்கையில், நிறையக் கதைகள் எழுதியாகிவிட்டது.பெரும்பாலானவை கதைக்குள் கதைகள்.சராசரியாக ஒன்றில் ஐந்து என்று கணக்கு வைத்தாலும் முன்னூறைத் தாண்டும்.பலவும் நிஜமாகவே எனக்கு நடந்தவை.எதையெல்லாம் எழுதினோம் என்பதே மறந்துவிட்டது. வெளிவந்திருக்கும் நாலைந்து தொகுப்புகளில் உள்ளவை, சரியாக வரவில்லை என்று கழித்துவிட்டாலும் அழிக்க மனமில்லாமல் கணினிக்குள் முடங்கிக் கிடப்பவை என்று நீளும் வரிசை போக பாக்கியிருப்பது என்னென்ன என்று குழப்பம் மீறிவிட்டது. அமரராகிவிட்ட மூத்த விமர்சகர் வேறு,

கிருஷ்ணனின் சிறப்பம்சமே, தன்னுடைய எழுத்தை அவர் ரிப்பீட் செய்வதில்லை என்பதுதான்.
என்று பதினைந்து பேர் மட்டும் அமர்ந்து கேட்ட ஒரு கூட்டத்தில் பாராட்டியிருக்கிறார் – என்னுடைய எல்லாக் கதைகளையும் அவர் படித்ததில்லை; வந்திருந்த நேயர்களும் படித்ததில்லை என்ற தெளிவுக்கு நான் வந்து சேர்ந்த சந்தர்ப்பம் அது. ஆனாலும் கூட, பாராட்டை விட கனம் அதிகமான சமாசாரம் உண்டா என்ன!

ஆக, பிரசுரமான கதைகளை ஒவ்வொன்றாய்ப் பார்க்க ஆரம்பித்தேன்.பெரும் சித்ரவதை அது – நீங்கள் எழுதியதை நீங்களே படித்துப் பார்ப்பது. அநேக எழுத்தாளர்கள், தாம் எழுதியதைத் தவிர வேறு எதையும் படிப்பதே கிடையாது என்ற புகார் காலங்காலமாக நிலவி வருவதுதான் என்றாலும், அது எப்பேர்ப்பட்ட தியாகம் என்பது யாருக்கும் லேசில் புரிவதற்கில்லை – அதிலும் தான் எழுதியதைத் தானே மறுமுறை திருத்தி எழுதாத தலைமுறை ஒன்று உருவாகி, எதையுமே வாசிக்க வேண்டியிராத சுயம்புகளின் எண்ணிக்கைக்கும் குறைவில்லை என்றும் ஆகிவிட்ட பிறகு.

…நிஜமான சம்பவங்களும், எழுதுவதற்காக மாற்றியவையும் என்று பெரும் பட்டியல் தயாராகிறது.இதுபோக, எழுதியவற்றையே, இப்படி எழுதியிருக்கலாமே என்று மாற்று யோசனைகள் பொங்குகின்றன. இந்தக் கதைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் வாசிக்க நேர்ந்த வாசகர் யாராவது இருப்பாரானால், அவர்மீது அபரிமிதமான பிரியமும், பச்சாதாபமும் ஒருங்கே எழுகிறது… ஏனென்றே தெரியவில்லை, அவரிடம் இன்னும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்; எழுதப்பட்ட கதைகளின் மூலத்தை அடிபிறழாமல் ஒப்பித்துவிட வேண்டும் என்ற தாபமும்தான்.
இப்போதைக்கு மூன்று கதைகள் பற்றிச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

1

முதலில் லச்சத்தின் கதை. தேசாந்திரியாக இருந்தவரும், ஏகப்பட்ட விபூதிப் பொட்டலங்களுடன் எப்போதாவது விஜயம் செய்கிறவரும், காவி உடுத்தவருமான லட்சுமணன் என்ற லச்சத்தின் கதையை சுருக்கமாக முன்னர் எழுதியிருக்கிறேன்.என் அம்மாவின் முறைப்பையன் அவர் என்றும்தான்.

யோசிக்கும்போது, வரைமுறையில்லாமல் புளுகு கொப்பளிக்கும் கதைகளை எழுதித் தொலைத்திருக்கிறேனே என்று ஏக்கமாய் இருக்கிறது – அதையெல்லாம் கற்பனையின் வீச்சு என்று மேலே சொன்ன வாசகர் கொண்டாடவும் கூடும். ஆனால், எழுத்தாளன் என்றாலே உண்மை பேச வேண்டியதில்லை என்ற மயக்கம் எப்போது எங்கிருந்து யாரிடமிருந்து உருவானது என்று திகைப்பாய் இருக்கிறது.புனைகதையை விட்டுத் தள்ளுங்கள் – கோட்பாடுகளை முன்வைத்துப் பேசும் கட்டுரைகளிலும் கற்பனையின் பிரவாகமல்லவா பீறியடிக்கிறது?

உண்மையில் லச்சம் என்ற ஓர் ஆளே கிடையாது.அதிர்ச்சியாய் இருக்கிறதல்லவா – இதைவிடப் பெரிய அதிர்ச்சி ஒன்று இருக்கிறது.ஆமாம், எழுதிய கதையில் லச்சம் ஆற்றோடு போய்விட்ட மாதிரிக் குறிப்பால் உணர்த்தியிருந்தேனே, அந்தக் குறிப்பு மட்டும் நூறுசதவீதம் உண்மை.

ஆற்றோடு போனவள், என் உறவுக்காரக் கிழவி.இளம் வயதில் கணவரை இழந்து, குழந்தைப் பேறும் இல்லாதிருந்த தனியள்.கணவர் ராணுவத்தில் இருந்தவர் என்பதால், வட இந்தியாவின் பல மாநிலங்களிலும் வசிக்கக் கிடைத்து, சரளமான ஹிந்தி கைவரப் பெற்றவள்.கணவர் இறந்த பிறகு வடக்கேயே பல வீடுகளில் சமையல் வேலை பார்த்து வாழ்வைக் கடத்தியவள்.
நான் சிறுவனாக இருந்த நாட்களில் ஓரிரு ஆண்டுகளுக்கொருமுறை கரட்டுப்பட்டிக்கும் வந்து செல்வாள்.கம்பீரமான, யாரையும் உதாசீனம் செய்யக்கூடிய, நாக்கு நுனியில் கொடுக்கு அமைந்த பெண்பிறவியாக அவளைப் பார்த்திருக்கிறேன் – அஞ்சியிருக்கிறேன்.மிகவும் வித்தியாசமான பேச்சு உள்ளவள். உதாரணமாக, பருப்பு சாம்பாருடைய ஆதரிசப் பதம் பற்றிச் சொல்லுவாள்:

வாய்லெ முத்தமிடற மாதிரி இருக்கணும்.

என்னுடைய நாவல் எதிலாவது அவளை ஒரு பாத்திரமாக்கிவிடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன்.எழுத்தின் மும்முரத்திலோ, அவளை நுழைக்க உகந்த சந்தர்ப்பம் அகப்படாததாலோ அது நடக்கவேயில்லை.

இறுதிக்காலத்தில் உறவினர்களை அண்டி வாழவேண்டிய துர்ப்பாக்கியவதி ஆகியிருந்தாள். அகாலமாய், அசந்தர்ப்பமாய் அவள் காணாமல் போன செய்தி கிடைத்ததுவும், இறுதி நாளில் வசித்த கிராமத்தையொட்டி ஓடும் ஆற்றோடு அவள் போயிருக்கலாம் என்று கிடைத்த உபரித் தகவலும், உடனடியாக அவளை என் கதைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும் என்று உந்தின.
கிழவியை ஆண்மகனாக்கி, ஆற்றோடு போக வைத்த மாத்திரத்தில் அடையாளங்களை மறைத்த திருப்தியும், வெகுநாள் உறுத்தலை இறக்கிவைத்த நிம்மதியும் கிடைத்தன.ஆனால், அவற்றின் ஆயுள் ஓர் ஆண்டு மட்டுமே.உண்மையை மறைத்ததைவிட அதிகமான உறுத்தல் வந்து சேர்ந்தது.

அந்திமகாலத்தில் அவளைப் பராமரித்த குடும்பத்தின் பெண்மகள் ஒருத்தி எங்கள் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தது.இரவில் பத்மினியோடு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தாள்.நான் அடுத்த அறையில், ஒரு ஸ்வீடிஷ் நாவலை, என்னுடைய குறைந்தபட்ச ஆங்கில அறிவைவைத்து மொழிபெயர்க்கப் போராடிக்கொண்டிருந்தேன்.ஐரோப்பிய வாழ்முறைக்கும், ஆங்கில இலக்கணத்துக்கும் தமிழ்ச்சூழலில் பொருந்திவரும் சொற்களையும் சொற்றொடர்களையும் தேடி, பெரும் அல்லாட்டம்.

மறுநாள் காலை அவசரமாக அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தபோது, என்னுடனே நடந்தவாறும், சாப்பாட்டு மேசையில் எதிரில் அமர்ந்தும் பத்மினி பொருமித் தள்ளினாள்,
தாள முடியாத ஆற்றாமையுடன் அவள் எனக்குச் சொன்ன கதையே வேறு:

அதை எழுதிவிட வேண்டும் என்ற முனைப்பில், ஓரிரு பக்கங்கள் எழுதவும் செய்தேன். பாருங்கள், ஓர் எழுத்தாளனின் மனம் எப்பேர்ப்பட்ட திரிபு வேலையெல்லாம் பார்க்கிறது என்று:

அம்மா வழி உறவினர்களைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன்.அப்பா வழியைப் பற்றிப் பேசியது மிகவும் குறைவு.முதல் காரணம் அவர்களின் எண்ணிக்கை குறைவு.அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள் இரண்டே பேர்.ஒரு சகோதரன் ஒரு சகோதரி.

அம்மாவுக்கு அப்படி இல்லை.அவள் பிறந்த வயிற்றில் பிறந்தவர்களே இன்னும் பதினைந்து பேர்.எட்டுப்பேர் பூவுலகில் கால் பதிப்பதற்கு முன்போ, பதித்த சுருக்கிலோ பழையபடி திரும்பிப்போனவர்கள்.இவ்வளவு கணக்கும் இரண்டாம் தாரத்துக்கு.தாயம்மாப் பாட்டியின் மூத்தாளுக்கு நாலு குழந்தைகள்.

எப்போதாவது தன் வம்சம் பற்றி அப்பா பேசத்தொடங்கினால், அம்மா உடனடியாய்ச் சொல்வாள்:

ஆச்சு, ஒங்கப்பா ராமாயணம் ஆரமிச்சாச்சு.

அப்பா புன்சிரிப்புடன், தாம் சொல்ல வந்ததைச் சொல்லிமுடிப்பார்.அது பெரும்பாலும் முன்பே பலதடவை கேட்டதாக இருக்கும்.ஆட்கள் குறைவு என்பதால் கதைகளும் குறைவாய் இருந்தன.சுவாரசியமாகவும் இருக்காது.நல்லவர்களும், தர்மங்களும், தீனர்களும் வரும் கதையில் உருப்படியாக என்ன இருக்க முடியும் சொல்லுங்கள்.

இரண்டாவது காரணத்தையும் சொல்லிவிடுகிறேன். நான் கண்டுபிடித்தது அல்ல, அப்பாவே ஒரு தடவை கோபமாய்ச் சொன்னது:

ஆமா.எங்க குடும்பக்கதை ராமாயணம்தான்.உங்க குடும்பக் கதை மஹாபாரதம் இல்லையா?

அம்மா கெட்டிக்காரி.உடனே புரிந்துகொண்டாள்.வழக்கம்போலத் தான் கடைசி வாக்கியம் உதிர்க்காமல், பாதியிலேயே உரையாடலை முடித்துக்கொண்டாள்.விசுக்கென்று எழுந்து அடுக்களையைப் பார்க்கப் போனாள். தனக்குத்தானே சொல்லிக்கொள்கிற மாதிரி,

ஏதோ தீயற வாசனை வரலே?

என்று மெல்லிய குரலில் சொன்னாள் – அடுக்களை நிலையைத் தாண்டும்போது.இப்போது யோசிக்கையில், அது வெறும் சமாளிப்பு வாசகம் இல்லை, அப்பாவின் ஆழ்மனத்தைப் பற்றிய கூர்மையான விமர்சனம் என்று படுகிறது.ஆனால், அவர்கள் தாம்பத்தியம் நடத்திய விதம் அது.நாம் சொல்ல என்ன இருக்கிறது.

அன்று அப்பா சொன்ன கதை, அவருடைய கற்பனையோ சொல்லக் கேட்டதோ அல்ல. புனைவுகூட அல்ல. அம்மா சீண்டிவிட்ட கோபம் பெருகிப் பரந்ததில் அவளுடைய வம்சக் கிளை ஒன்று பொசுங்கித் தீய்ந்த கதை. ராமாயண – மகாபாரத உதாரணத்துக்கு ஒத்துப்போகும் கதை.

ஆமாம், அம்மாவின் உறவுக்கார எண்ணிக்கை மட்டுமல்ல, அவர்களுடைய பிறழ்வுகளின் எண்ணிக்கையும் அதிகம்தான். அவர்கள் என்னைப்போன்ற குஞ்சுகுளுவான்களிடம் காட்டிய பிரியமும், வழங்கிய சுதந்திரமும்கூட அதிகம். தாத்தாவிடமிருந்தே இதெல்லாம் ஆரம்பித்துவிட்டது, நானறிய. அவர் கேரளத்தில் சென்று, தமக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை என்று சொல்லித்தான் தாயம்மாப்பாட்டியைத் திருமணம் செய்துவந்தார் என்பதோடு, தமது குழந்தைகள் சாதியோ மதமோமாறியும், இரண்டாம்தாரமாகவும் வாழ்க்கைப்பட முடிவெடுத்தபோதெல்லாம் மறுப்பேதும் சொல்லாமல் வாழ்த்தி அனுப்பியவர்.

யார் கண்டது, அவருக்கு முந்தைய தலைமுறையிலும்கூட இந்த அம்சங்கள் நிலவியிருக்கலாம் – மரபணுக் கால்வாய் சுமந்துவந்து கொட்டும் வண்டலில் என்னவெல்லாம் பொதிந்திருக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது எளிதா என்ன.

ஆனால், அப்பா அந்தக் கதையை வீட்டில் வைத்துச் சொல்லவில்லை.எங்கள் வளாகத்தின் பின்பகுதியாக இருந்த தென்னந்தோப்புக்குள் கூட்டிப்போய்ச் சொன்னார்.மேற்படிக் கதை எனக்குள் இத்தனைவருடமும் பத்திரமாக இருந்ததற்கும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.ஒன்று, அன்றைக்கு இதைச் சொல்லிமுடித்தபோது அப்பாவின் பொடிமட்டை முழுக்கக் காலியாகி இருந்தது என்பது.இரண்டாவது, அப்போது எனக்குப் பதினோரு வயது. இப்படியொரு கொலைகாரக் கதையை எதை நம்பி என்னிடம் சொன்னார் என்ற ஆச்சரியம் இன்றுவரை அடங்காமல் இருப்பது…

மேற்கண்டவிதமாக ஆரம்பித்து இவ்வளவுதூரம் வந்தபிறகு தோன்றுகிறது – இவ்வளவு பீடிகையும், ஒளிவு மறைவும் என்னத்துக்கு, நேரடியாகக் கதையைச் சொல்லிவிடலாமே.சம்பந்தப்பட்ட யாருமே ஒரு உபசாரத்துக்காகக் கூடத் தமிழ்க் கதைகள் படிக்காதவர்கள் – அதற்காக வேறு மொழிகளில் படிப்பார்களோ என்று சந்தேகப்பட்டுவிடாதீர்கள்.வாசிப்பதைவிடவும் முக்கியமானவை என்று அவர்கள் கருதும் வேலைகளை மிக ஆர்வமாய்ச் செய்தவர்கள்.அதில் ஒன்றைத்தான் சொல்லக் கிளம்பினேன்.
மற்றபடி, அப்பா- அம்மா ஒப்பீடும், மேற்கோள் காட்டிய உரையாடலும் புனைவு அல்ல. நிஜமானவைதாம். ஆனால் வேறொரு சந்தர்ப்பத்தின் பகுதியாக நிகழ்ந்தவை.

ஆற்றோடு போன உறவினள் என் தாய்வழியில் நேரடிச் சொந்தம் அல்ல என்பதிலிருந்தே பிரச்சினை ஆரம்பிக்கிறது.பல அடுக்குகள் கடந்த ஏதோ ஒரு தலைமுறைக் கண்ணியின் பிரகாரம் எனக்குப் பெரியம்மா என்பது மட்டும்தான் தெரியும். சமீபத்தில் நடந்த சம்பவத்தை இரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஒத்திப்போடுவது அடுத்த தந்திரம் – நடைமுறைக் காலத்தில் இருக்கும் யாருடனும் அடையாளம் காண முடியாது அல்லவா!

ஆனால், இவ்வளவு தூரம் எழுதிப் போன பிறகு, திடீரென்று உள்மனம் கட்டளையிட்டது.

போதும் கிருஷ்ணா.அளவற்றுப் புளுகியது போதும்.ஏதாவது ஒரு கட்டத்தில் உண்மையை எழுத ஆரம்பிக்க வேண்டாமா?

உண்மையை அப்படியே எழுதினால், அலங்காரமான செய்தித்தாள் ரிப்போர்ட் மாதிரி ஆகிவிடாதா, தனி நிகழ்வைப் பிரபஞ்ச நிகழ்வாக ஆக்கிக்காட்டும் மாயத்தைச் செய்வதும் எழுத்தாளனின் பணிதானே, பிரபஞ்சம், பேரண்டம் என்பதெல்லாம் கொஞ்சம் பெரிய வார்த்தைகள் என்றாலும் எந்த நாட்டின் எந்தக் கால மனிதருக்கும் பொருந்திப்போகும் தன்மை இல்லாத எழுத்துக்குப் பெறுமானம் எதாவது உண்டா என்றெல்லாம் எழுந்த பதில் கேள்விகளைச் செவிமடுக்கவே தயாரில்லை ஆழ்மனம். என்னமோ, என்னுடைய ஆழ்மனத்தின் மீது எனக்குப் பாத்தியதையே கிடையாது என்கிற மாதிரி அவ்வளவு அந்நியமாக, விட்டேற்றியாக நடந்துகொண்டது.

சாதாரணக் கதைதானே, இதற்குப் போயா இவ்வளவு முன்னேற்பாடுகள் என்று யாராவது சலித்துக்கொள்ளலாம்.தினம் தவறாமல் தினசரிகளைப் படிப்பவர்கள், இதைத் தூக்கிச் சாப்பிடும் சங்கதிகளெல்லாம் பத்திரிகைகளில் வெளியாகிக்கொண்டுதானே இருக்கிறது என்றும் சொல்லலாம்.ஆனால், செய்தியாகப் படிப்பதற்கும், நேரடியாகத் தன் வாழ்க்கையில் நடப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா இல்லையா.எளிய குட்டிக்கதைகளில் மாபெரும் வாழ்க்கைத் தத்துவங்களை விரித்துரைத்துப் போன ஈசாப் போன்ற முன்னோடிகளை மறந்துவிடக் கூடாது.மேலும், கதைசொல்வதற்காக மட்டுமேவா கதை சொல்கிறோம்?

விடுங்கள்.பேச்சு வளர்ந்துகொண்டே போகிறது. பத்மினி சொன்ன கதை இதுதான்:

ஆற்றோடு போன உறவினள் – எங்கள் வீட்டுக்கு வந்து தங்கிய திருமகளின் பெரிய அத்தை – இறுதிக் காலத்தில் வசித்தது இவளுடைய சொந்தச் சகோதரனின் வீட்டில்.ஒருமையில் சொல்லக் கூடாது – சகோதரர்கள் நடத்திய கூட்டுக் குடித்தன வீட்டில்.

அவர்கள் இருவரையும் சகோதரர்கள் என்று யாரும் சந்தேகம் கூடப் பட முடியாது.இளையவன் ஸ்டண்ட் நடிகன் மாதிரி இருப்பான்.மூத்தவனும் சினிமா நடிகர் சாயல் கொண்டவன்தான் – தயிர்வடை தேசிகன் என்ற முந்தைய தலைமுறை நடிகரைத் திரையில் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா.

எல்லாவிதத்திலும் எதிர்த்துருவங்கள் எப்படி ஒரே தாய் வயிற்றில் பிறந்தன என்று ஆராய்ச்சியில் இறங்கிவிட வேண்டாம்.பெற்றோரின் தோற்றத்தில் துருவ வேற்றுமை இருந்தது.
மூத்தவனுக்கு வாய்த்தவள் நடிகைபோலவே இருப்பாள் – அந்த அளவுக்கு ஒப்பனையிலும் கவனம் செலுத்துவாள்.இளையவனின் மனைவி கொஞ்சம் பூஞ்சை.பெரியவர்கள் பார்த்து நடத்திவைக்கும் திருமணங்களில் தாள்களுக்கும் கட்டங்களுக்கும் இருக்கும் முக்கியத்துவம் உடல்வாகுக்கு இருக்காதுதானே.ஆனால், கண்ணெதிரில் ஒரு வசீகர உருவம் சதா நடமாடிக்கொண்டிருக்கும்போது சலனம் ஏற்படாமல் இருக்குமா, இதில் ஆணென்ன, பெண்ணென்ன?ஒருவேளை, இந்தச் செய்தியுமேகூட அந்தப் பழுப்புத்தாள் கட்டங்களில் பொதிந்திருக்கலாம்.யார் கண்டது?

பெரியவன் வியாபார விஷயமாக வெளியூர் போயிருந்தான்.சின்னவன் மனைவி பிரசவத்துக்காகத் தாய்வீடு போயிருந்தாள். இயல்பாகக் கிடைத்த சுதந்திரத்தின் பாதையில் மீந்த இருவரும் எங்கெங்கோ போனார்கள்.

இந்த இடத்தில்தான், விடிவதற்கு முன்பே ஆற்றுக்குக் குளிக்கப் போயிருந்த கிழவி வீடு திரும்பியிருக்கிறாள். கதவு திறந்திருந்த வீட்டுக்குள்ளும் ஒரு ரகசியத்துக்குள்ளும் ஈரம் சொட்டச் சொட்ட அவள் நுழைந்தது தவறில்லை, கொடுங்கையில் வைத்திருந்த ஈரத்துணிகளும் சோப்பு டப்பாக்களும் பெருத்த ஓசையுடன் தரையில் வீழ்ந்ததும் தவறில்லை (இந்தக் கோலத்தில் அவள் வீடு வந்து சேர்வதை நானே பல தடவை பார்த்திருக்கிறேன்)

பக்கத்தில் உட்கார்ந்தாலே கற்பு பறிபோவதைக் கண்ணால் பார்த்த தலைமுறைக்காரி அல்லவா.ஓலமிட முனைந்திருக்கிறாள்.அதிக நேரமில்லை, அடிவயிற்றில் கிளம்பிய ஓலம் தொண்டைக் குழியைத் தாண்டுமுன் மறித்து நிறுத்தியது மற்ற இருவரில் யாரோ, எந்தக் கோலத்திலோ.ஏனென்றால் அக்கம்பக்க வீடுகளில் யாருமே சத்தம் எதுவும் கேட்டதாகச் சொல்லவில்லை – விசாரிக்க வந்த காவல் அதிகாரியிடம்.

அத்தைக்காக இப்பிடி ஏங்கி அழுகிற எளந்தாரியெ நான் பாத்ததேயில்லே.

என்று திருமகளிடம் சொன்னாராம் அந்த அதிகாரி.விசாரிக்க வந்தவர், தம்பிக்கும் அண்ணன் மனைவிக்கும் அவ்வளவு நெருங்கிய நண்பரானது ஊர் முழுக்கப் பரவியிருந்த இன்னொரு ஆச்சரியம்.ஊர் திரும்பிய அண்ணனுமே அவருடைய நண்பனாகியிருக்கிறான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அத்தையைக் காணோம் என்ற தகவல் கிடைத்ததும் தம்பிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காக வெளியூரிலிருந்த சகோதரிகள் இருவரும் போய்ச் சேர்ந்திருந்தார்கள்.இருவரும் நாளை புறப்படவிருக்கிறார்கள் – இன்று காலையில் அத்தையின் உடல் கிடைத்துவிட்டது.கிராமத்திலிருந்து கடல் நோக்கிப் போகும் கால்வாயின் குறுக்கே நாலைந்து மைல் தள்ளிக் கட்டப்பட்டிருந்த தடுப்பணை மதகில் சிக்கியிருந்தது.

திருமகள் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களைத் தங்கையிடம் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னாளாம் பத்மினியிடம்.இவள் அடிபிறழாமல் அடுக்கினாள்.
1. நாலைந்து மைல் தூரத்துக்குத் தண்ணீர் இழுத்துச் செல்வதற்கு நாலு நாளா ஆகும்?
2. இழுபட்டுப் போனாலும் தண்ணீரில் ஊறிய பிரேதத்துக்கு இவ்வளவு துல்லியமாகவா அடையாளம் இருக்கும்?
3. இவர்கள் குடும்பத்துக்குச் சொந்தமான சிறு தோட்டமும், அதில் ஒரு குடிசையும் தடுப்பணை மதகுக்கு அருகில் இருப்பவைதானே?
4. வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிந்து நடக்கும் வடக்கத்திப் பழக்கம் உள்ளவளாயிற்றே அத்தை, அவளுடைய இரண்டு ஜோடிச் செருப்புகளும் வீட்டிலேயே கிடந்தனவே, வெறுங்காலுடனா குளிக்கப் போயிருப்பாள்?
5. ரவிக்கைக்குள் பர்ஸைச் சொருகிக்கொள்ளாமல் வெளியில் இறங்கவே மாட்டாளே, அத்தனை அழுக்குப் பத்துரூபாய்களுடனும் அவளுடைய மணிப் பர்ஸ் நான் வந்த அன்று மேஜையில் கிடந்தது, மறுநாள் அத்தை மாதிரியே அதுவும் காணாமல் போனது எப்படி?
6. குளிக்கிறவர்கள் மணிக்கயிறால் பின்னங்கையைக் கட்டிக்கொண்டா குளிப்பார்கள்?

இந்த இடத்தில்தான் அத்தை ஆற்றில் நீராடி வீட்டுக்குத் திரும்பிய காட்சி பெரியவளின் மனத்தில் விரிந்திருக்கும் என்று எனக்குப் பட்டது – ஆக, அந்தப் படுக்கையறைக் காட்சியுமே அவளுடையஅனுமானம்தான்.

இரண்டு மூன்று விஷயங்களைச் சொல்லி முடித்துவிடுகிறேன்.

1. பத்மினியிடம் கதைகேட்ட காரணத்தால், நான் வழக்கமாகப் பிடிக்கும் மின்சார ரயிலைத் தவற விட்டுவிட்டேன்.அலுவலகத்துக்கு தாமதமாகப் போகும் அவகாசத்தில், மேலாளரின் இதயத்தைக் கரைக்கவல்ல கண்ணீர்க் கதை ஒன்றைத் தயார் செய்ய வேண்டியதானது.
2. கிட்டத்தட்ட ஒரு கொலை என்றே நம்ப வேண்டியிருக்கும் சம்பவத்தை, தற்கொலை என்பதாகக் கதை எழுதிப் பிரசுரமும் செய்துவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சி எனக்குள் தொற்றியேறியது.
3. தமக்கையின் கேள்விகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்ட இளைய சகோதரி சொன்ன பதில்:
போனவ போயிட்டா.இருக்கறவன்களைப் பகைச்சுக்கிறதாலே என்ன புண்ணியம்?என் கிட்டே உளறின மாதிரி வேற யார்ட்டெயும் உளறிவைக்காதே.

வஸ்தாது சகோதரனே தங்கையிடம் உண்மையைச் சொல்லியிருப்பானோ என்று பெரியவளுக்கு இன்னொரு சந்தேகம் உதித்ததாம்.
4. நியாயத்துக்கு, எழுத்தாளராகியிருக்க வேண்டியவள் பத்மினிதான். கண்ணில் பீதியும், ஈரக் கசிவும், எச்சரிக்கையும் என்று மாறிமாறித் துலங்க என்னமாய்க் கதை சொல்கிறாள்!
5. இவ்வளவு குழப்பங்களோடு, இதைவிட அதிகமானவற்றோடு எழுத்தாளனாகக் குப்பை கொட்டிவிடலாம் – காசாளர் வேலை பார்ப்பது சுலபமில்லை. அன்று ஐநூறு ரூபாய் இருப்பில் குறைந்து நான் கையிலிருந்து போட வேண்டியதானது.

2

சட்டென்று கேசவனின் நினைவு குறுக்கே வருகிறது.ஏனென்று தெரியவில்லை. ஒரு எண்ணம் முடியும் இடத்தில் தானாய் உதிக்கும் அடுத்த எண்ணத்துக்கு வெளிப்படையான, நேரடியான சங்கிலித் தொடர்பு இருந்துதான் ஆகவேண்டும் என்று நிர்ப்பந்தம் உண்டா என்ன? வெட்டிய வேப்ப மரத் தண்டில் மீண்டும் வேம்பு துளிர்ப்பது மாதிரியான சங்கதியா இது!

கேசவன் போன்ற பக்திமானை நான் பார்த்ததில்லை – ஆரம்பத்தில் நான் எழுதிய கதையொன்றில் சிவா என்பவனைப் பற்றி எழுதியிருக்கிறேன் – ’நாயன்மார்களுக்குப் பிறகு அப்படியொரு பக்திமானை நான் கண்டதில்லை’ என்று (இதிலும் பாருங்கள், நாயன்மார் காலம் என்ன, நான் என்ன நேரடியாகவா பார்த்திருக்கிறேன்…) அந்தக் கதாபாத்திரத்துக்கு முன்மாதிரி கேசவனேதான்.
ஆனால், இவனை ஆழ்வார்கள் கணக்கில் வைக்க வேண்டும்.அதிதீவிர வைஷ்ணவன்.விநாயகரைத் தும்பிக்கையாழ்வார் என்று குறிப்பிடுவானே தவிர, அவருடைய சந்நிதி இருக்கும் தெருவில் கூட நுழைய மாட்டான்.அத்தனை தீவிரம்.ரத்தநிற உடைவாள் போன்று ஒற்றை இட்டுக்கொண்டு அழுத்தமான வியர்வைக் கவிச்சியோடு எதிர்ப்படும்போது ஆழ்வார்க்கடியான் நினைவு வரும் எனக்கு.ஸ்ரீசூர்ணம் மட்டும் காரணமில்லை – தொந்தியும் சவடால் பேச்சும் கூடத்தான்.

பயணங்களில் அபாரமான ஆர்வம் கொண்டவன்.இந்தியாவின் பல பகுதிகளுக்கும் அவனோடு போயிருக்கிறேன்.ஆன்மிக யாத்திரை ஏற்பாடு செய்யும் அத்தனை ட்ராவல்ஸுடனும் அவனுக்குப் பழக்கம் உண்டு.இவன் மூலமாக வரும் பயணிகளில் தலைக்கு இவ்வளவு என்று கமிஷன் வாங்குவானோ என்று எனக்கு சந்தேகம் உண்டு.இருக்கட்டுமே, பக்திமானுக்குப் பசிக்காதா, அம்மணமாய்த் திரிய முடியுமா – இல்லை, வாழ்க்கை வசதிகள் கொஞ்சம் மேம்பட வேண்டும் என்று ஆசையிருக்காதா.பார்க்கப்போனால், கடவுளிடம் கோருவதற்கும் வேறு என்னதான் இருந்துவிட முடியும்?

ஹிமாலயத்துக்கு அவனுடன் சென்ற பயணம் மறக்க முடியாதது.இருபதுபேர் கொண்ட பயணக் குழு அது.

ருத்ரப்பிரயாகையில் பிரச்சினை ஆரம்பித்தது.பத்ரிநாத் வரை போய்விட்டுத் திரும்பிவிட வேண்டும் என்று கேசவன் கருத்துரைத்தான்.உடன் வந்தவர்களில் ஒருவர் அதெப்படி, இவ்வளவு தூரம் வந்துவிட்டு கேதார்நாத் போகாமல் திரும்பலாமா என்று வாதித்தார்.கருத்தொற்றுமையா, நட்பா என்று வந்துவிட்டால், நீங்களே எதைத் தேர்வு செய்வீர்கள், சொல்லுங்கள்.
நாங்கள் போகாமல் திரும்பியதற்கு அடுத்த ஆண்டில், உத்தர்கண்டை வெள்ளம் பொங்கித் தாக்கியது. இனி, பழைய கேதார்நாத்தை யாராலும் பார்க்க முடியாது – புதுப்பிக்கப்பட்ட ஆலயம்தான் லபிக்கும்… அதற்கு அடுத்த ஆண்டில், பத்மினியின் உள்ளத்தில் பக்தி பெருக்கெடுத்தது.

சும்மா எல்லா இடத்துக்கும் நீங்கள் மட்டுமே போய்விட்டு வருகிறீர்கள்.
என்ற குற்றச்சாட்டுடன் தொடங்கிய விவாதம், நாங்களும் சுகவனம் தம்பதியும் பத்ரிநாத்துக்குப் பயணம் போகலாம் என்ற தீர்மானத்தோடு முடிவுக்கு வந்தது. .

தங்குமிடம், தரிசன வசதிகள் போன்ற சில்லறை விஷயங்களுக்காக கேசவனின் உதவியை நாடினேன்.அவனுக்கு அநேகத் தலங்களில் நண்பர்கள் உண்டு.அவர்களால் பலனும் உண்டு.
உதாரணமாக, பத்ரிநாத்தில் இயற்கையாய் அமைந்த வெந்நீர் ஊற்று இருக்கிறது..கொதிக்கக் கொதிக்க ஊறும் நீரை, நம்முடைய பட்ஜெட் ஓட்டலுக்குக் கொண்டு தருவதற்கு சேவகர்களும் உண்டு.ஒரு வாளி முப்பது ரூபாய்.கேசவன் சிபாரிசு இருந்தால் இருபத்தைந்து ரூபாய்.ஐந்து ரூபாய்தானே என்ற இளக்காரம் வேண்டாம்.சலுகை கிடைக்கிறது என்கிற ஆனந்தம் முக்கியம்… அப்போதுதான் கேசவன் சொன்னான்.

ருத்ரப் பிரயாகையில் நாங்கள் முந்தின தடவை தங்கியிருந்த விடுதி வெள்ளத்தில் முழுமையாக அடித்துப் போய்விட்டதாம்.ஒரு செங்கல் கூட மிஞ்சவில்லை என்றான்.அதில் இருந்த யாத்ரீகர்கள் எண்பத்தைந்து பேரும் இறந்துவிட்டனர்…. சொல்லும்போது, கேசவனின் குரல் உணர்ச்சிமயமாய் இருந்தது.ரத்த உறவுகளின் மரணச் செய்தியைச் சொல்கிற மாதிரி நடுக்கமும் இருந்தது – அல்லது அப்படி நினைத்துக்கொள்ள எனக்குப் பிடித்திருந்தது.

அவன் சொன்னதில் பிழையெதுவும் இல்லை – வழி நெடுக அழிவின் கோரத்தாண்டவத்தை, கங்கா மாதா தன் குழந்தைகளைத் தானே படுகொலை செய்த குரூரத்தைப் பார்த்துக்கொண்டே போனோம். ஒரேயொரு கார் மட்டுமே செல்லும் அகலம் கொண்ட, முழுக்க சரளைகளும் கசியும் நீரும் கொண்ட தற்காலிகப் பாதைகளில் ஓட்டுநரிடம் ஒரு வார்த்தைகூடப் பேச்சுக்கொடுக்காமல் பயணம் செய்தோம்.

ஓர் இடத்தில் எதிர்க்கரையைச் சுட்டிக்காட்டினான் அவன்.சுமார் எழுபது எண்பது வீடுகள் இருக்கும்.எல்லாமே காரை வீடுகள்.இந்தக் கரையை விடத் தாழ்வாய் இருந்த மறுகரையில் இருந்த கிராமம் அது.ஒட்டுமொத்த கிராமமும் நீரில் அமிழ்ந்து கிராமவாசிகள் அத்தனைபேருமே மாண்டுபோனார்கள் என்றான்.கிராமத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று அரசாங்கத் தடை இருக்கிறதாம்.

அது சரி, முதலில் சொன்ன கதைக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?இதில் கதை என்று ஒரு சுக்கும் இல்லை, இதைப்போய் இவ்வளவு விலாவாரியாக விவரிக்க வேண்டிய அவசியம் என்ன என்று தோன்றுகிறதல்லவா.இருக்கிறது.

கேசவன் குறிப்பிட்ட விடுதியை நினைவிருக்கிறதா, மரகதப் பச்சை அலக்நந்தாவும் புழுதி கலங்கிப் பாய்ந்திறங்கும் மந்தாகினியும் சங்கமிக்கும் இடத்தையொட்டி இருக்கும் கட்டிடம் அது. முனை முறியாமல் முழுசாக இருந்தது. நாங்கள் இந்தமுறை சென்றபோதும் அதிலேதான் தங்கினோம்!.

3

மதுரை மாவட்டத்தின் சிறுநகர் ஒன்றில் ஓர் ஆண்டு பள்ளிப்படிப்பைக் கடத்தினேன்.அங்கே ஒரு சாமியார் வந்து தண்டு இறங்கினார்.ஒரு மாதம் போலத் தங்கி, காலையில் பூஜைகள், மத்தியானம் தரிசனம், சாயங்காலம் பிரவசனம் என்று படு பிஸியாக இருந்தார். (இந்த மாதிரி வார்த்தைப் பிரயோகங்கள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் மிகமிகக் கவனமாய் இருந்து வந்திருக்கிறேன். உண்மையான கதையைச் சொல்ல முற்படும்போது, செயற்கையான கவனங்கள் வேண்டாம் என்று தோன்றியது. திருத்தி எழுதும்போதும் அப்படியே விட்டுவிட்டேன்.)
முன் பரிச்சயமில்லாத சாமியார் என்றாலும், அவரைத் தேடி வரும் பக்தர்கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வந்தது.விமோசனம் தேவைப்படும் கவலைகள் அத்தனை நிரம்பியிருக்கிறது, ஒவ்வொரு மனித மனத்திலும்.

மாத முடிவில் அவருக்கே ஒருவிதமான விமோசனம் கிடைத்துவிட்டது.என் அம்மாவின் உடன்பிறந்த சகோதரர் ஒருவர் வேத அத்யயனம் செய்தவர்.மேற்படிச் சாமியாரிடம் எப்படி உதவியாளராய்ச் சேர்ந்தார் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை. (இந்தச் சாமியாரையும் இவருக்குக் கிடைத்த விமோசனத்தையும் முன்னரே ஏதோ கதையில் எழுதியிருக்கிறேன். என்ன எழுதியிருக்கிறேன் என்று தேடிப் பார்க்க அவகாசம் இல்லை. மனத்தில் பெருக்கெடுத்திருக்கும் உண்மையின் வேட்கையும் வேகமும் அப்படி. அதனால், நிஜமாக நடந்ததை இப்போது சொல்லிவிடுகிறேன்.)

எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டில் ஒரு பெண் இருந்தாள்.அழகி என்று சொல்ல மாட்டேன்.வசீகரமானவள்.குறிப்பாக அந்தக் கண்கள். பார்க்கும் யாரையும் சீண்டும் சிரிப்பு அவற்றில் நிரந்தரமாக இருக்கும். பதின்ம வயதுகளின் ஆரம்பத்தில் இருந்தேனா, பல்வேறு சங்கதிகளுக்கு பெண் சித்திரங்கள் தேவைப்பட்ட நாட்கள்.மேற்படிப் பெண்ணின் பிம்பம் பெருமளவில் உதவிகரமாக இருந்தது.

சாமியாரின் காலைநேரப் பூஜைக்கு பவளமல்லி சேகரித்துத் தரும் பொறுப்பைத் தானாகவே மேற்கொண்டாள் சியாமளா.(அவளுடைய பெயர் அதுதான் என்று நினைக்கிறேன். நாற்பது வருடப் பழங்கதை. தகவல்கள் கொஞ்சம் முன் பின்னாக இருந்தால் தவறில்லை. உண்மைக்கு நெருக்கத்தில் இருப்பதுதான் முக்கியம்.)
முண்டனம் செய்த தலைக்குமேல் காவித்துணி முக்காடிட்ட சன்யாசியின் முகம் சிற்பம் போன்ற தீர்க்கம் கொண்டது.அந்தக் கண்களின் ஈர்ப்புக்கு ஈடு சொல்வதென்றால், சியாமளாவின் கண்களைத்தான் சொல்ல வேண்டும் – என்று அந்தச் சிறுவயதிலேயெ எனக்குத் தோன்றியது நினைவு வருகிறது.இரண்டு ஜோடி விழிகளிலும் அவ்வளவு நீர்ப் பளபளப்பு, அவ்வளவு உணர்ச்சித் ததும்பல்.

திடீரென்று ஒரு மத்தியானப் பொழுதில் மாமா மடத்திலிருந்து வேகமாகத் திரும்பினார் – அதாவது மடம் என்று கற்பிதமாகியிருந்த செல்வரங்க முதலியார் வீட்டிலிருந்து.மாமாவின் ஒரே சொத்தான நீலநிற ட்ரங்க்குப் பெட்டியைப் பிடித்த கை கிடுகிடுவென்று நடுங்கிக் கொண்டிருந்தது. ரேழியில் டொம்மென்று போட்டார்.
அன்று எதற்காகவோ விடுமுறை.நானும் அம்மாவும் மட்டும் வீட்டில் இருந்தோம். அம்மா பரிவாகக் கேட்டாள்:
என்னாச்சுடா தொச்சூ?

பின்னே என்னக்கா?அவனெல்லாம் சன்யாசியா?சன்யாசிக்கு இம்புட்டுக் கோபம் ஆகுமா? போடா விளக்கெண்ணெ, நீயும் உன் மடமும்னு கிளம்பி வந்துட்டேன்…
மடத்தில் இருக்கும் மாமாவின் சித்திரம் எனக்குள் வந்துபோனது. இடுப்பில் துண்டு கட்டி, நெஞ்சோடு இறுக்கிக் கைகட்டி, சாமியாரிடம் பேச வேண்டி வரும்போது வலது உள்ளங்கையால் வாய்க்கு முன் திரை போட்டு, நெற்றியிலும் நெஞ்சிலும் புஜங்களிலும் அழுத்தமான திருநீற்றுப் பட்டைகளோடு லேசாகக் கூன்போட்டு நிற்கிற உருவம்.
இரு, ஒரு வாய் காப்பி தரேன்.

என்றவாறு அடுக்களைக்குள் போனாள் அம்மா.மாமா பின்னோடு போனார்.
உள்ளே ஏதோ ரகசியம் பேசுவார்கள் என்று எனக்கு உள்ளுணர்வில் உறைத்தது.நானும் போனேன்.அதற்குள் தணிந்த குரலில் அம்மாவிடம் ஏதோ சொல்ல ஆரம்பித்தார் மாமா.அம்மாக்களுக்கு மட்டும் உள்ளுணர்வு இருக்காதா?திரும்பிப் பார்த்து என்னை முறைத்தாள் – லட்சுமண ரேகையைத் தாண்டி வராதே என்று அர்த்தம்.
இன்னதுதான் பேசியிருப்பார்கள் என்று என்னால் யூகிக்க முடிந்ததற்கு வலுவான காரணங்கள் உண்டு.ஆனால் இந்தக் கதையில் அதைச் சொல்ல மாட்டேன். உண்மையை மட்டும் பேசுவதாகத்தானே ஆரம்பத்திலேயே வாக்களித்திருக்கிறேன்…

சாமியார் தொடர்பாக மூன்று விஷயங்கள் எனக்குள் அழுத்தமாக மீந்திருக்கின்றன.ஒன்று, அவருடைய பெயர்.அதைச் சொல்வது சரியாக இருக்காது, உண்மை சொல்லுவதாகத்தான் ஒப்பந்தமே தவிர, எல்லா உண்மைகளையும் சொல்லுவதாக அல்ல.

இரண்டாவது, மாமா வற்புறுத்தியதால் நானும் அம்மாவும் ஒருதடவை அவருடைய பிரவசனம் கேட்கப் போனது.அவருடைய பேச்சு எனக்குக் கொஞ்சமும் புரியவில்லை.ஆனால், அவர் கூறிய ஒரு கருத்து மட்டும் ஆழமாகப் பதிந்தது. சமஸ்கிருதமும் தமிழும் கலந்து கட்டிய அவரது மணிப்பிரவாளத்தில் திரும்பச் சொல்ல முடியாது; சாராம்சம் இதுதான்:
…காவியகர்த்தாக்களிடம் அடிப்படையாகவே ஒரு அம்சம் இருக்கிறது.மஹாபாரதத்தை எழுதியவர் வேத வியாசர்.நெறிகளை உபதேசிக்கும் அருகதை உள்ளவர்.ஆனால், பாரதக் கதையில் என்ன இருக்கிறது?முரண்பாடுகளும், பிறழ்வுகளும், கீழ்மைகளும் என்று அதில் இல்லாத சரக்கு இல்லை.

அதுவே, ராமாயணத்தை எடுத்துக்கொள்ளுங்கள் – எழுதின வால்மீகி யார்? முன்னாள் வழிப்பறிக் கொள்ளைக்காரன். இன்றுவரைக்கும் நம் தேசத்தின் ஆதரிசங்கள் அத்தனையும் அதற்குள்ளிருந்துதான் எறும்புவரிசை மாதிரி வந்துகொண்டே யிருக்கிறது.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இதிகாசகர்த்தனாய் இருக்கட்டும், உள்ளூர் சுண்டைக்காய் எழுத்தாளனாய் இருக்கட்டும், தம்முடைய அந்தராத்மாவில் என்ன இருக்கிறதோ, அதற்கு நேர் எதிரிடையாகத்தான் எழுதி வைக்கிறார்கள். கிடைக்காததன் மேல்தானே மோகம் அதிகமாய் இருக்கும்?!
இரண்டாவது சந்தர்ப்பம் விநோதமானது. அன்றைக்கு மடத்தில் விநியோகமாகவிருக்கும் பிரசாதம் கல்கண்டு சாதம் என்றும், பக்தகோடிகளில் ஒருத்தரான கல்லிடைக்குறிச்சி செல்லப்பா யதேச்சையாக தரிசனத்துக்கு வந்திருப்பதால் சுவாமிகளின் ஆணைப்படி ஏற்பாடாகியிருக்கிறது என்றும், தேவாமிர்தத்தின் இன்னொரு பெயர் நளபாகம் செல்லப்பாவின் மேற்படி அயிட்டம் என்றும், தவற விடவே கூடாது என்றும் மாமா வலியுறுத்தியதால் நாங்கள் போக நேர்ந்தது.

அன்றைக்கு ஏதோ காரணத்தால் பிரவசனம் ரத்தாகியிருந்தது.தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பத்துப் பதினைந்து பேரைத்தவிர மடத்தில் யாரும் இல்லை.உள்ளே போன மாத்திரத்தில் என் கண்களுக்குப் பட்ட ஒரு விசித்திரம், அந்த வேளையில் சியாமளா அங்கே உட்கார்ந்திருந்தது.பொதுவாக, காலையில் புஷ்பக் குடலையைக் கொண்டுவைத்துவிட்டுத் திரும்பிவிடுவாள் என்றுதான் கேள்விப்பட்டிருந்தேன்.

மரணம் பற்றி யாரோ ஒருவர் கேட்டதற்கு, கருடபுராணத்திலிருந்து சில பகுதிகளை எடுத்துரைத்துப் பேச ஆரம்பித்தார் சுவாமி.
பாதியில் சியாமளா எழுந்து நின்றாள்.சுவாமி அவளை உறுத்துப் பார்த்தார்.உரை நின்றுவிட்டது.எல்லாரும் அவளையே பார்க்கிறார்கள். சுவாமி பரிவாகக் கேட்டார்:
சொல்லம்மா?

சுவாமி, சாவுக்கு அப்புறம் என்னென்னமோ நடக்கும் என்கிறீர்கள். பாவாத்மாக்களுக்குக் கிடைக்கப் போகும் தண்டனைகள் புண்ணியாத்மாவுக்குக் கிடைக்கும் சௌகரியங்கள் என்று அத்தனையும் சொல்கிறீர்கள். எல்லாம் சரி, நான்தான் என் உடம்பை இங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுவேனே?…
இந்த இடத்தில் தன் உடம்பை இரண்டு கைகளாலும் வருடுவது மாதிரி அபிநயம் பிடித்தாள். அடடா, முதன்முதல் தடவையாக கவனிக்கிறேன், என்ன வாளிப்பான உடம்பு அது! அங்க லட்சணங்கள் அனைத்தும் அமைந்த ஆதரிசப் பெண்ணுடலாய் என் நினைவில் இன்றுவரையிலும்சியாமளா தங்கியிருப்பதற்குக் காரணமான சந்தர்ப்பம் அது.
… உடம்பே இல்லையென்றால் வலி ஏது, சுகம் ஏது?

சபை பிரமித்தது போன்று ஒலிகளும் சலனங்களும் எழுந்தன. சுவாமி அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.சமஸ்கிருதத்தில் ஒரு சுலோகம் கிளம்பியது.ரூபவதி, சௌந்தர்யம்,மிருத்யு என்கிற மாதிரி வார்த்தைகள் காதில் விழுந்த ஞாபகம்.அதன் சாரத்தை அவரே தமிழில் சொன்னார். ’தேவர்களுக்கு நிவேதனமாகும் அருகதையுள்ள, புஷ்பம் போன்ற பேரழகிகள் காலம் முடியும் தறுவாயை எட்டியபோதிலும் பறித்துச் செல்வதற்காக வரும் யமதூதர்கள் ஒரு நாழிகை தயங்கி நிற்பார்கள்’ என்று சொன்ன மாதிரி நினைவு. முடிவாக, இன்னொன்றும் சொன்னார்:

இந்தக் கவலைகளெல்லாம் இன்னும் கொஞ்சகாலம் கழித்து வைத்துக்கொள்ளம்மா.யௌவனப் பிராயம். உடம்புக்கு இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் பாக்கி இருக்கிறது…
சபை சிரித்தது.சுவாமிகள் சிரித்தார்.சியாமளாவும் சிரித்தாள். ஓர் இழவும் புரியாமல் நானும் சிரித்துவைத்தேன்…
மூன்றாவது சங்கதியையும் சொல்லிவிடுகிறேன்.தொச்சு மாமா ஆவேசமாக வீடு திரும்பியதற்கு அடுத்தநாள், மடம் ஊரைவிட்டுப் புறப்பட்டது.சியாமளாவைக் காணோம் என்று அவர்கள் வீட்டில் பதட்டமாகத் தேடிக் கிளம்பினார்கள்.கோயம்புத்தூரில் இருவரையும் கண்டுபிடித்து ஆசீர்வதித்துவிட்டுத் திரும்பினார்கள்.
இந்தக் கடைசிப் பத்தி சமாசாரத்தையும் ஏதோ ஒரு கதையில் எழுதியிருக்கிறேன் என்று நினைவு.எந்த ஊரில் பிடிபட்டார்கள், எத்தனை நாள் கழித்து என்றெல்லாம் விபரம் அடுக்கிய ஞாபகம்.என்ன எழுதித் தொலைத்தேன் என்று தேடப் பொறுமையில்லை.

முதல் தடவை பிரவசனம் கேட்கப் போனபோதா, கல்கண்டு சாதத்துக்காக இரண்டாம் தடவை போனபோதா என்று நினைவில்லை – மாப்பிள்ளை சுவாமி உதிர்த்த ஒரு கருத்து எனக்குள் பத்திரமாக இருக்கிறது. ஆங்கிலப் புத்தகம் படிக்கும்போது பொருள் தெரியாத ஏதோ ஒரு சொல் மட்டும் நினைவில் தங்கி பிற்பாடு ஒருநாள் துலங்காதா, அது மாதிரி, இத்தனை நாளும் எனக்குள் மீந்து கிடப்பது:
நாம் என்ன நினைக்கிறோம், என் கையில் ஒரு பாதி உண்மை இருக்கிறது; மகானிடம் போய்ச் சேர்ந்துவிட்டால் அவர் தன் கையில் உள்ள மீதி உண்மையையும் நமக்குக் கொடுத்து முழு உண்மை அடைந்த பாக்கியவான் ஆக்கிவிடுவார் – பிறகு நேரே முக்திதான் என்றுதானே?
சாமியார் வேறு மாதிரி விளக்கினார்: அவர்வசம் இருக்கும் உண்மையின் பகுதியும் சேர்ந்ததுதானாம் பாதி உண்மை. மறுபாதி என்ற ஒன்றை யாரும் காண்பதற்கில்லை என்றும், அப்படியொரு முழுமையே கிடையாது என்றும் சொன்னார்.

பின் குறிப்பு:ஆழ்மனம் கிடக்கட்டும், அதைப்போய் யாராவது பொருட்படுத்துவார்களா என்ன. தவிர,நூறு சதவீதத் தூய உண்மையை வைத்து ஆபரணம் செய்ய முடியாது என்பதால், இதிலும் சில திருத்தங்கள் செய்திருக்கிறேன். ஆனால், அது என்னுடைய வசதிக்காகவும் சமாதானத்துக்காகவும் வாசக சௌகரியத்தை முன்னிட்டும் மட்டுமே. உண்மைக் கதைக்கு அவற்றால் ஒரு குந்தகமும் கிடையாது.
தவிர, அவை என்னுடைய மனத்துக்கு மட்டுமே தெரிந்தவை என்பதால், வாசக மனத்துக்கு வித்தியாசம் தெரிவதற்கில்லை – பார்க்கப்போனால், உண்மை யாருக்கு வேண்டும்.உண்மையின் சாத்தியங்களை மட்டும்பார்க்கக் கிடைத்தால் போதாதா.