உமா ஷக்தி கவிதைகள்

உமா ஷக்தி கவிதைகள்

கவிதை:- உமா ஷக்தி

தோளில் முகம் புதைத்து
விழிகளில் விழி தொலைத்த
அந்தக் கணத்தில்…
கன்னம் தொட்ட
நகங்களின் கூர்மையை
உணர்ந்த பொழுதில்….
பித்தேறச் செய்த
மூக்குத்தியின் பிரகாசத்தில்
பெருமூச்சுக்களின் ஒலிகளில்
நிசப்தம் மாறிய
உயிர்த் தேடல் கணத்தில்…
தலையணையில் உதிர்ந்த
நட்சத்திரங்களை
உடையென அணிகையில்…
என ஏதோ ஒரு மின்னற்பொழுதில்
மெய் கடந்த நொடி
இரவின் பரிசாய் ஒளிர்ந்தது

ஒரு கவிதை கண்களில் கண்ணீரைக் கசிய வைத்தது.
ஒரு மீனை இறைவன் நீரிலிருந்து பிரித்து நிலத்தில் கிடத்தும் துயரை அடையச் செய்கிறது.
அந்த மீனை மானாகவோ அணிலாகவோ அழகிய வனத்தில் துள்ளச் செய்ய அந்தக் கவிஞனால் இயலும் தானே?
அனைவருக்காகவும் இருகரம் நீட்டி நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறது கவிதை வாழ்க்கை மற்றும் எல்லாம்…

என் பறவையே
மீண்டும் ஒரு அன்பில் வீழ
சக்தியில்லை
மீண்டும் ஒரு துயரில் தோய்துகிடக்க
ஆசையில்லை
அலைவுறும் என் ஆன்மாவின்
அடுத்த கட்டும்
எனக்குத் தெரிந்துவிட்டது
உனக்குள்ளே தான்
பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
ஒரு வார்த்தை
உடைக்கக் கூடும்
மெளனக் குமிழை
ஒரு சமிஞ்சை போதும்
அந்த புதிர்க்கட்டத்துள்
நம்மை நகர்த்திக் கொள்ள
வேண்டாம்
ஆசைகள் கடக்க
இந்தப் படகை
பத்திரமாக கையில்
ஏந்திக் கொள்
பூத்திருக்கும்
இந்த மலர்களை
அவனிடமே
கொடுத்து அழகு பார்க்கலாம்
அதிகமாக
நேசிக்க விரும்புகிறேன்
எனவே வீழ வேண்டாம்
கரங்கள் கோர்த்து
எழுந்து நிற்கலாம்
ஒன்றாய் சில நாட்கள்
பறந்து விட்டு
ஓய்வெடுக்கலாம்…