உறுப்புகள் தேடல்

உறுப்புகள் தேடல்
எத்தனையோ கஞ்சா விதைகள்
குறைமாத வளர்ச்சியிலும்
மிதி வாங்கியும்
மக்கின
தென்னைங் கீற்று சிமிலிக்குத் தப்பி
அவனது விரல் வழி
உருண்டு விழுந்த
அந்த ஒரு விதை மட்டும்
நெஞ்சுயரம் வரை நெடுநெடுவென வளர்ந்து துணைக்குச்சி தெம்போடு
காற்றை எதிர்த்து நிற்கிறது
தென்னை, வாழையின்
வேர்களுக்கு மட்டுமே
ஒத்தாசை செய்யும்
வைகை மண்
கஞ்சா வேர்களுக்கு
ஊட்டமளித்தது
பலியாய் எழும் கோபத்தில்
கடித்தாலும் வலி தராத
சிறுத்த எறும்பு
பூவிலிருந்து அடிவரை
அங்கம் அங்கமாக உலாத்தி போதையில் கிறங்கி
தண்டின் வழி
தள்ளாடி கீழிறங்கி
நம்மை எவனும் கண்டுகொள்ளவில்லையென ஊரியது
ஊரிச்சென்ற புழுதிப் பாதையை
உற்றுப் பார்க்கையில்
அவனது கருத்த நொட்டாங்காலின் பாதத்தடம் அவ்வெறும்பின் வழி போயிருக்கிறது
கோடாங்கி குறி பார்த்தால் ராமேஸ்வர அக்னி தீர்த்த கடலுக்கடியில் பாசிபடர்ந்த எலும்புகளோடு குளிர் நடுக்கத்தில் அவன் புரண்டு புரண்டு படுத்திருப்பது தெரிகிறது
மாரியாத்தா கோவிலின்
அன்னதான சோறு போட்டு
வளர்த்த குட்டிநாய் பீ தின்ற
வாயோடு வந்து வாலாட்டியதைக் கண்டு
கடுப்போடு இழுத்த பீடியை குதிங்காலினால்
அரைகுறையாய் அமுக்கிவிட்டு
கோபத்தில் கல்லெடுக்கப் போன அவனது வலது பாதத்தடமும்
வரவேற்பு பலகையும்
மைல் கல்லும் நடப்படாத பெயரற்ற
ஊர் போயிருக்கிறது
இம்முறை எவனிடமும்
சோசியம் பார்க்கப் போவதில்லை,
தீர்த்தவாரி திருவிழா முடிந்த கலைத்த காலை வெயிலில் மொய்க்கும் தடங்களின் நடுவே
பீடிக் கங்காய் தகித்து புகைந்து கொப்பளங்கள் வெடிக்க
அவன் மல்லாந்து
படுத்திருப்பது
தெளிவாய் தென்படுகிறது
அவனது ஒவ்வொரு
உறுப்பையும் தேடிப் போகப் போகிறேன்…!
– முத்துராசா குமார்