வாத்திய இசை – சில முகங்களும் சில தூரங்களும்

வாத்திய இசை – சில முகங்களும் சில தூரங்களும்

கட்டுரை:- ஸ்ரீனிவாசன்

காலங்காலமாக நாம் திரையிசைப் பாடல்கள் வழியாகவே இசை கேட்டுக் கொண்டிருக்கிறோம். ப்ளூஸ், ஜாஸ், ராக், ரெக்கே, டிஸ்க்கோ, பாப், மெட்டல், ஹிப் ஹாப், டப் -ஸ்டெப்  என அந்தந்த காலகட்டத்தில் மேற்குலகில் பிரபலமாக இருக்கும் இசை வடிவங்களே இங்கும் நம் திரையிசைப் பாடல்களில் ஒளிந்து கொண்டிருக்கிறது.திரையிசைப் பாடல்களுடன் நம்மால் உடனடியாக ஒன்றிவிட முடியும், காரணம் பாடலின் சில வரிகள் நம்மை பாடலுடன் எளிதில் இணைத்துவிடும். இதிலிருந்து ஒரு சிறிய வட்டத்தினர் மட்டும் எப்போதும் நேரடியாக மாற்று இசையைத் தேடிப் போகின்றனர். ஆனால் வாத்திய இசை (Instrumental Music) மட்டும் நம்மிடையே அவ்வளவு பிரபலம் அடைந்து விடவில்லை.

பல வருடங்களுக்கு முன்பு அமெரிக்க இசையை தீவிரமாகக் கேட்க ஆரம்பித்த காலகட்டத்தில் தான்  என் மாமா எனக்கு முக்கியமான கர்நாடக இசைக்கலைஞர்களையும் அறிமுகப்படுத்தினார். செம்பை வைத்தியநாத பாகவதர், மணி ஐயர் போன்ற மேதைகளின் பாடல்களைக் கேட்கும் பொழுது வயலின் வாசித்த சௌடய்யா, லால்குடி ஜெயராமன் போன்ற மேதைகள் பற்றியும் அறிமுகம் செய்தார். உமையாள் புரம் சிவராமன், காரைக்குடி மணி போன்ற மிருதங்க வித்துவான்கள் நிகழ்த்தும் தனி ஆவர்த்தனங்களை ரசிக்கக் கற்றுக்கொடுத்தார். தனி ஆவர்த்தனம் கர்நாடக இசைக் கச்சேரிகளில் பிரதானமாக இருக்கும் ராகம் தாளம் பல்லவி முடிந்ததும் பக்கவாத்தியக் கலைஞர்களால் இசைக்கப்படும். நமது இசை வடிவமே வாய்ப்பாட்டு முறை தான் என்றாலும் இவையெல்லாம் அந்தக்காலத்தில் பெருவாரியாக ரசிக்கப்பட்டு வந்தன. தனி ஆவர்த்தனம் வரும் பகுதிக்காகவே காத்துக்கொண்டிருக்கும் அந்தக்கால ரசிகர்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். லால்குடி ஜெயராமன் போன்ற சில மேதைகள் தனியாகக் கச்சேரி செய்யும் அளவுக்கு உயர்ந்து  நின்றார்கள்.

இப்போது வாத்திய இசையை ரசிக்கும் மனோபாவம் நம் தலைமுறையினரிடம் இருக்கின்றதா? பெருவாரியாக இல்லை என்று சொல்லிவிடலாம். இந்த ரசனை வேறுபாட்டால் தான் இளையராஜாவை அடுத்த தளத்திற்கு நம்மால் கொண்டு செல்ல இயலவில்லை. இளையராஜா திரையிசையைக் குறைத்து ஏகப்பட்ட இன்ஸ்ட்ருமென்ட்டல் ஆல்பங்கள் வெளியிட சாத்தியமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு ஏன் அவசியம் உள்ளது என்றால், பாடலின் வரிகள் மற்றும் காட்சிகள் காலப்போக்கில் அடுத்த தலைமுறையினருக்கு சலிக்கத் துவங்கிவிடும்.ஆனால் இசை அப்படியில்லை, அது சாசுவதமானது.

வாத்திய இசை ஒரு வித மனநிலையை மட்டுமே உருவாக்குகிறது, நாம் தான் கதையை மனதுக்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும். தோராயமாக ஒரு உதாரணம் சொல்லலாம், வாத்திய இசை புத்தகம் படிப்பது மாதிரி. புத்தகம் படிப்பது நம்முடைய கற்பனையைக் கோரும் விஷயம். சினிமாப் பாடல்களில் நம்முடைய கற்பனை அநேகமாகத் தேவைப்படாது, எந்தவித மனச்சித்திரமும்உருவாகாது. அவை பெரும்பாலும் ஒரு கதாநாயகனுக்காகவோ அல்லது கதாநாயகிக்காகவோ உருவாக்கப் படுகிறது. ஆகையால் புத்தகம் படிப்பதில் ஏற்படும் கற்பனை யான மனச் சித்திரங்கள் சினிமாப் பாடல்களைக் கேட்கும் பொழுது நமக்கு ஏற்படாது.  வாத்திய இசை கேட்கும் பொழுது சுரங்களின், இசைக்கோர்வைகளின் வழியே ஒரு வடிவத்தை உருவாக்க பிரயத்தனப்படுகிறோம். அது நமது ஈடுபாட்டைக் கோருகிறது. ஒரு ஆழமான அமைதியைத் தருகிறது.

மேண்டலின் ஸ்ரீனிவாஸ் போன்ற அபூர்வ ஆளுமைகள் நம்முடன் வாழ்ந்து மறந்துவிட்டனர். இவர்களை எப்படி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது. உலகமெங்கும் பீத்தோவன், ஜெ.எஸ்.பாஹ் , மோஸார்ட்  போன்ற மாபெரும் மேதைகளின் பெயர் நிலைத்திக்கிறது. காலங்கள் மாறினாலும், இசையின் வடிவங்கள், ரசனை போன்ற இத்யாதிகள் மாறினாலும் ஏதாவது ஒரு வடிவில் அவர்களின் இசை நீடித்துக்கொண்டே இருக்கிறது. ஸ்ரீனிவாஸ் போன்ற ஆளுமைகளை எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வது என்பதைப் பற்றி நாம் தீவிரமாக யோசிக்கத் தொடங்கவேண்டும். கர்நாடக வாத்திய இசை என்று சுருக்கிவிடக்  கூடாது. பிரிட்டிஷ் இசைக்கலைஞர் ஜான் மெக்லாலின், அமெரிக்க கிட்டாரிஸ்ட் டெரெக் ட்ரக்ஸ் போன்றவர்கள் ஸ்ரீநிவாஸின் மேதமையை நன்கு உணர்ந்து கொண்டாடுகிறார்கள்.

இதே போல இந்துஸ்தானி இசையில் ஷெனாய் வாத்திய மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான், சரோட் வாத்திய மேதை அலி அக்பர் கான், புல்லாங்குழல் மேதை பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியா, சித்தார் மேதை பண்டிட் ரவிசங்கர் போன்றவர்களை நாம் தேடித் கேட்கவேண்டும்.

அமெரிக்காவில் செவ்வியல் இசையைத் தவிர்த்து ஏகப்பட்ட இசை மேதைகள் வாத்திய இசையை பிரதானமாக வாசிக்கின்றனர். எத்தனை இசை வடிவங்கள் புதிதாக வந்தாலும் வாத்திய இசை ஒரு பகுதியாகவே  இருந்து கொண்டிருக்கிறது. ஜாஸ், ப்ளூஸ், ராக், கண்ட்ரி, மெட்டல் என்று எந்த வகை இசையை எடுத்தாலும் வாத்திய இசை அந்தந்த காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவில்பரவலாகக் கேட்கப்படும் இசையுடன் கலந்திருக்கிறது.. மைல்ஸ் டேவிஸ், ஜான் கொல்ட்றேன் போன்றவர்கள் உலகப்புகழ் பெற்ற  ஜாஸ் வாத்திய இசையின் ஜாம்பவான்கள். மிகச் சொற்பமானவர்களுக்கே தமிழ்நாட்டில் இவர்கள் பரிச்சயமாக இருக்கலாம். தி ஷேடோவ்ஸ் என்ற பிரிட்டிஷ் வாத்திய இசைக்குழுவும், தி வெஞ்சர்ஸ் என்ற அமெரிக்க வாத்திய இசைக்குழுவும் அறுபதுகளில்  மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். இதே காலகட்டத்தில் தான் பீட்டில்ஸும் வந்தார்கள். ஜெஃப் பெக் மற்றொரு அற்புதமான பிரிட்டிஷ் இசைக் கலைஞர். அவரது சக இசைக்கலைஞர்களாலே வியக்கப்படும் ஒரு மாயாஜாலக்காரர். Cause We’ve Ended As Lovers என்ற ஸ்டீவி  ஒண்டர் பாடலையும், A Day In The Life  என்ற பீட்டில்ஸ் பாடலையும் இவர் கிட்டாரில் வாசித்தத்தைக் கேட்டால் ஏன் இவர் கொண்டாடப்படுகிறார் என்று அறியலாம். அமெரிக்க கிட்டாரிஸ்ட் ராய் புக்கானன் பல அருமையான இன்ஸ்ட்ருமென்ட்டல் பாடல்களை வெளியிட்டிருக்கிறார். இவரது பாடல் ஸ்வீட் ட்ரீம்ஸ் மிகப் பிரபலமானது. அமெரிக்க இசைக்கலைஞர் ராய் கூடர், மோகன் வீணா கலைஞர் விஸ்வ மோகன் பட்டுடன் இணைந்து வெளியிட்ட A Meeting by the River ஆல்பம் கிராமி விருதை வாங்கிய ஒரு முக்கியமான படைப்பு.

மற்றொரு சிறந்த வாத்திய இசைக்குழு, Booker T. & the M.G.’s . அமெரிக்காவில் அறுபதுகளில் சிறந்து விளங்கிய ஒரு இசைக்குழு. இவர்களின் மிகப்பிரபலமான பாடல் க்ரீன் ஆனியன்ஸ். புகழ்பெற்ற ஜாஸ் இசைக்குழுவான டேவ் அண்ட் ப்ரூபெக் இசைக்குழுவின் ஒரு சிறந்த பாடல், டேக் 5 .சற்று கடினமான இசைக்குறிப்புகளைக் கொண்ட பாடலானாலும் கேட்பதற்கு இதை விட எளிமையான பாடல் இருக்காதென்றே சொல்வேன். நாம் எளிதில் ஹம் செய்துவிடலாம். அது தான் அந்த மேதைகளின் தனித்தன்மை.  டொரண்டினோ, ஸ்கார்ஸேஸி படங்களில் அடிக்கடி அறுபது, எழுபதுகளில் புகழ்பெற்ற இன்ஸ்ட்ருமென்ட்டல்களைக்  காட்சிகளின் இடையிடையே கேட்கலாம்.

எரிக் ஜான்சன், ஜோ சேட்ரியானி போன்றவர்கள் கிட்டாரில் வாத்திய இசையை எண்பது மற்றும் தொன்னூறுகளில் பிரபலப்படுத்தியவர்கள். எரிக் ஜான்சன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இசைக்கலைஞர். நேரம் கிடைத்தால் இவரின் Manhattan என்ற பாடலை கேட்டுப் பாருங்கள். அவ்வளவு அழகான இன்ஸ்ட்ருமென்ட்டல்.

இதன் அவசியம் என்ன? சில இலக்கிய எழுத்தாளர்கள் தமிழ்ப் பெருக்காப்பியங்களை, காவியங்களை தங்களுடைய படைப்புகளில் அடிக்கடி எடுத்தாளுகிறார்கள். இந்த மாதிரியான மீட்டுருவாக்கங்கள்  நம்முடைய வரலாறு மற்றும் பாரம்பரியம் நிலைத்து நிற்க அவசியம் நடைபெறவேண்டும். அதே போல், நம்முடைய இசையையும் அடுத்த தலைமுறைக்குக் கடத்திச் செல்லவேண்டும், கர்நாடக இசையாக இருந்தாலும் சரி, நாட்டார்கலைகளாக இருந்தாலும் சரி. இவை தொடர்ச்சியாக கேட்கப் படவேண்டும், பேசப்பட வேண்டும். இன்று சென்னையிலேயே உலக இசையைக் கற்றுக் கொடுக்கும் கல்லூரிகள், வந்துவிட்டன, எந்த வாத்தியம் வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். அநேக திறமையான வாத்தியக் கலைஞர்கள் வெளிவருவார்கள், இவர்களுக்குண்டான சந்தை நம்மிடம் இருக்கிறதா? இவர்களிடம் புதுவித இசையை எதிர்பார்க்கலாமா? எல்லோரும் திரையிசைலேயே போய்ச் சேருவார்களா? சப்ளை vs டிமாண்ட் அடிப்படையில் திரையிசையில் முக்கால்வாசி அரைத்தமாவையே அரைக்கிறார்கள். தனியாக இசைக்குழு அமைத்து பாடல் வெளியிடுபவர்களும் திரையிசையின் தாக்கத்திலேயே இருக்கிறார்கள். காதல் மட்டுமே பேசுபொருளாக இருக்கிறது. அதனால் தான் திறமையான இசைக்கலைஞர்கள் அமெரிக்காவில் குடியேறுகிறார்கள். அவர்களுடைய இசையை ரசிக்கும் கூட்டம் அங்கிருக்கிறது, சொற்பமாக இருந்தாலும், ஒரு கூட்டம் இருக்கிறது. இங்கே அதற்கான வாய்ப்பு மற்றும்  சூழல் வரவேயில்லை எனலாம். இந்தச் சூழல் மாறவேண்டுமானால் நம்முடைய டிமாண்ட் மாறவேண்டும், நாம் வேறுவித இசையை அவர்களிடம் கேட்கவேண்டும். புதிதான இசைச் சந்தையை உருவாக்கவேண்டும்.

ப்ளாக்ஸ்ராட் ப்ளூஸ் என்று ஒரு ப்ளூஸ் வாத்திய இசைக்குழு தற்போது இந்தியாவிலிருக்கும் மிகச் சிறந்த இசைக்குழு. பத்து வருடங்களாக இந்தியா முழுவதும் அநேக நகரங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கும் இவர்கள் இது வரை சென்னைக்கு வந்ததே இல்லை. இங்கு வாத்திய இசையை ரசிக்கும் மனோபாவம் இருக்கிறதா என்று ஆராயவேண்டும். இன்றைக்குத் தீவிரமாக வாத்திய இசையின் பலபரிமாணங்களை கர்நாடக இசையின் வழியே செய்து கொண்டிருக்கும் கிட்டார் பிரசன்னா ஒரு முக்கியமான இசைக்கலைஞர். மேண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுக்குப் பின் எஞ்சியிருக்கும் சமகால வாத்திய இசை ஆளுமைகளில் குறிப்பிடத்தக்க ஒருவர். இவருடைய சமீபத்திய ஆல்பத்தை தமிழ்நாட்டில் எத்தனை பேர் வாங்கினார்கள் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இசை ஒரு விட்டேத்தியான நுகர்வு கலாச்சார வஸ்துவாக மாறிவிட்டது. இசை நம் செவிகளுக்கு அதுவாக வந்து சேரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கொஞ்சம் பிரயத்தனப்பட்டு இசையைத் தேடித் கேட்க ஆர்வமே கொள்வதில்லை. சிறிய மெனக்கெடல் கூட இல்லை. இதுவும் ஒரு வகையில் தேர்ந்த இலக்கியத்தையோ, திரைப்படங்களையோ  உலகமெங்கிலும் இருந்து தேடித்தேடி படிப்பது, பார்ப்பது போன்றது தான். இசைக்கு மொழி இல்லை. தேடிப் போனால்  நாம் இது வரை கேட்டிராத இசை எவ்வளவோ இருக்கிறது.