“அந்த சர்வேயர் வர நேரம் எடுக்கும் போல, நீ மழ வரதுக்குள்ள ஒரு தடவ மேட்டுக்காட பாத்துட்டு வாயேன்”என்று அப்பா சொல்லும் போது, அதை எப்போது சொல்லுவார் என்று காத்திருந்தவள் போல வேகமாகத் தான் கட்டியிருந்த சேலையைச் சரி செய்து கொண்டு சுவற்றில் மாட்டியிருந்த சுவட்டரை அணிந்து கொண்டு அவளுக்கே உரித்தான அந்த தங்க நிற கைப்பிடிக் குடையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள். அக்குடையை அவளைத் தவிர யாரும் பயன்படுத்தக் கூடாது என்பது எழுதப்படாத விதி.
விட்டு விட்டு பெய்யும் மழையில் மண் பாதை குலைந்த சிகப்பு வண்ணத்தில் நீண்டு கிடந்தது. ‘அதில் நடக்கும் போது எப்போதும் கவனம் தேவை ‘என்று அப்பா ஒவ்வொரு முறை சொல்லும் போதும் அவளுக்கு வெறுப்பாக இருக்கும். ‘ஒரு தடவை விழுந்தால்தான் என்ன‘ என்று தோன்றும். வெற்றுப் பாதங்களுக்கு அவைகள் காலணிகளாக மாற அவள் வைத்திருக்கும் குடையை இறுக்கிப் பிடித்திருந்தாள். அதன் மீது அப்படி ஒரு ஈர்ப்பு வரக் காரணம் என்ன? அதன் தங்க கைப்பிடியா அல்லது மலர் விரியும் அதன் சாளரமா என்று யோசித்திருக்கிறாள், அதற்கு எந்த விடையும் இல்லை..
மேட்டுக்காட்டை நெருங்க நெருங்கக் குளிர் உடலை நடுக்கம் கொள்ளச் செய்தது. தினமும் வரும் வழியே என்றாலும் காதுகளை உன்னிப்பாக வைத்திருக்க வேண்டும். மரங்களின் அசைவுகள் தரக்கூடிய ஒலி நேற்றிரவுக்கான கதையைச் சொல்லத் தயாராக இருக்கும். மேகங்கள் மார்பை இடித்து வரும் அளவுக்கு உருண்டு வரத் தொடங்கியிருந்தது. ஆனால், இன்று அவைகள் அவளுக்குப் பாசாங்கு காட்டுவதாகத் தோன்றியது. ‘என்னை ரசிக்காதவளுக்காக ஒரு போதும் இறங்கி வர மாட்டேன்‘ என்ற குரல் கேட்டது. அவளிடம் அதற்கு ஏராளமான பதில்கள் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. கைப்பிடியில் மடக்கி வைத்திருந்த குடையை எடுத்து விரித்தாள். ஏனோ அவளை மீறி வரும் சிரிப்பிற்கான காரணத்தை அறிந்திருந்த யாவும் அவளுக்குப் பணிந்தே நடந்தன. தன்னை சுற்றி இருக்கும் யாவற்றிற்கும் கட்டளை பிறக்கும் அதிகாரம் வந்தது போல உணர்ந்தாள்.
‘குடைக்கான பெயரை இதுவரை தேர்ந்தெடுக்கவில்லையா?‘ என்று பலதும் பின் தொடர, ‘இன்னும் இல்லை.. தேடிக்கொண்டிருக்கிறேன்..’ என்ற பதிலில் அவளுக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அப்பெயரை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருந்தாள். அது அவளுக்கே உண்டான அணுக்கம் என்று யாருக்கும் தெரியாமல் பத்திரமாக அதைப் பாதுகாத்து வந்தாள். இதைத் தெரிந்த அக்குடையும் நமட்டுச் சிரிப்பை உதிர்த்தது. அதன் ஓசை கேட்டவளாய், ‘சிரித்து சந்தேகத்தை ஏற்படுத்தாதே’ என்று செல்லமாகக் கடிந்து கொண்டாள்.
ஒய்யாரமாக நடந்து வந்து அவர்களின் நிலத்தை அடைந்தாள். அந்த நிலத்தில் இவர்களுக்கான கடைசி அறுவடை என்பதை நினைக்கையில் இதுவரை இருந்த யாவும் போலியானது போலத் தோன்ற, காற்று இழுக்க அவளது குடையை தன்னோடு பிடித்துக் கொண்டாள். அவர்களின் பூர்வீக நிலமும் இப்போது முகம் தெரியாத யாருக்கோ கைமாறப்போகிறது. இங்கிருந்து பிழைப்பதற்காக எங்கோ போகப் போகிறோம் போன்றவற்றை நினைத்துப் பார்க்கக் கூடாது என்று எண்ணினாலும் மீண்டும் மீண்டும் அவளை அந்த எண்ணங்கள் சுற்றி வந்து கொண்டே இருந்தது. ‘கடைசியாகப் பார்த்து விட்டு வா’ என்று அனுப்பி வைத்திருக்கிறாரா அப்பா என்று தோன்றியது. நினைவு தெரிந்த நாள் முதல் இதை வைத்தே அவர்கள் இருவரின் வாழ்க்கை என்ற ஒன்று நகர்ந்து கொண்டிருந்தது. இப்படியாக இது முடியும் என்று எண்ணியதில்லை. இங்கிருந்து வேறொரு நிலத்திற்குப் போய் ஆகவேண்டிய சூழல் வரும் என்பதை அவளால் இப்போது வரை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அடுக்கடுக்காக பிரிக்கப்பட்டிருந்த பாத்திகளில் ஏற்றுமதிக்குத் தயாராகி இருந்த கேரட்களில் ஒன்றை எடுத்துக் கொண்டாள். அங்கேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அது ஒரு போதும் நடக்காது. தனக்கு மேல் விரிந்திருக்கும் ஒன்றிற்குள் தான் அடங்கி விட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். எப்படி சாத்தியமாகும்? அங்கு மாடுகளைக் கட்டுவதற்கென போடப்பட்டிருந்த கட்டையில் அமர்ந்து கொண்டாள். இனி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும் என்று யோசிக்கையில் அழுகையாக வந்தது. குடையை விலக்கி வானத்தை அண்ணாந்து பார்த்தாள். குடைக்கான வேலை இனி இல்லை என்பது போல வெறிச்சோடி இருந்தது.
***
கையில் குடை இருந்தும், முழுவதும் நனைந்து வந்திருப்பதைப் பார்த்த அவளின் அப்பா எதுவும் பேசவில்லை என்பது அவளை யோசிக்க வைத்தது. இருந்தும் எப்போதும் போல தனது தந்தையிடத்தில் “குடையவே மறந்துட்டேன்” என்று கையில் குடையை வைத்துக்கொண்டே சொன்னாள். அப்போது அவள் கவனித்திருக்க வேண்டும் வீட்டிற்குள் அவளின் தந்தை மட்டும் இல்லை இன்னொருவரும் இருக்கிறார் என்று.
“என் பொண்ணு..”என்று அவரிடம் அறிமுகப் படுத்தினார். அருகில் அமர்ந்திருந்தவர் வணக்கம் என்பது போல எழுந்து அமர்ந்தார். பதில் வணக்கத்தைக் கொடுத்து விட்டு அக்குடையைப் பத்திரமாக வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தாள்.
அப்பா இதுவரை சொன்ன அந்த நபரின் முகத்தை அவள் இப்படி கற்பனை செய்து பார்க்கவில்லை. சுமார் ஐம்பதைக் கடந்த ஒருவராகவே இருக்கக் கூடும் என்று நினைத்திருந்தாள். ஆனால், வந்திருப்பவர் அவளின் வயதை ஒத்திருக்கக் கூடிய இளைஞன். என்னதான் இவையெல்லாம் ஓடிக்கொண்டிருந்தாலும் அவர்களுக்குத் தயார் செய்து கொண்டிருந்த கடுங்காப்பியை எடுத்துப் போய் நீட்டினாள். மீண்டும் ஒரு முறை அவனைப் பார்க்கலாம் இல்லையா, “இது தான் மொத தடவ என் பொண்ணு போடுற காப்பி”என்று அப்பா உண்மையைச் சொல்லிச் சிரித்தார். அவளுக்கு ஒரு விதத்தில் சங்கோஜமாக இருந்தாலும், எப்படி அப்பாவால் சிரிக்க முடிகிறது என்று தோன்றியது. அந்த ஒரு நிலத்தையும் விற்று விட்டுப் பெயர் தெரியாத ஊருக்குச் சென்று பிழைப்பதை அவரின் மனம் ஏற்றுக் கொண்டு விட்டது.
அவர்கள் அமர்ந்திருக்கும் அறையின் மறுபக்கம் நின்று கொண்டு அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டே இருந்தாள். “மழை நின்றதும் நிலத்தை அளந்துடலாம், ஊர் தலையாரியிடம் பேசியாச்சு” என்று முடித்தார். வந்திருந்தவரின் குரல் இங்கு பரிச்சயம் இல்லாத குரல் என்பது தெளிவாகவே அவளுக்குப் புரிந்தது. அவள் நின்று கொண்டிருந்த அறையின் ஜன்னலிலிருந்து தெளித்த சாரலை அவள் அப்போது விரும்பவில்லை. வந்திருப்பவன் எங்களை இங்கிருந்து கிளப்ப வந்த சதிகாரன் என்று அவளுக்குப்பட்டது. அங்கே மண்டியிட்டு தனது இறைத் தூதனை அனுப்ப வேண்டினாள். மீண்டும் அவனைப் பார்க்க மனம் இல்லாது அறையின் உள்ளேயே இருந்து கொண்டாள். முதல் கணத்தில் அவன் மீது விழுந்த ஈர்ப்பு ஒவ்வொரு நொடிப் பொழுதுகளிலும் சிதறிப் போகிறதாய் உணர்ந்தாள். அவன் அளக்கப் போகும் எங்கள் நிலத்தில் அவனது பாதங்கள் படாது காத்தருள வேண்டுமென்று சபித்து அடங்கினாள். அவன் குரல் எங்கும் சுற்றி அலையும் எங்கள் வீட்டினை காத்திட வேண்டும்.
“நம்ம இப்போ கெளம்புனா சரியாக இருக்கும்”என்று அவளின் தந்தை சொல்ல அவன் புறப்பட்டுவிட்டான் என்கிற ஆனந்தம் இருந்தாலும் அவன் போய் நிற்க போகிற இடம் எங்கள் நிலம் என்று நினைக்கையில் அவனைச் சபிக்க வந்த உதடுகளை கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“எதுக்கும் குடையை எடுத்துக்கோங்க..” என்று அப்பா சொன்னதும் அறையினை விட்டு குடையுடன் அவசர கதியில் வெளியில் வந்தவள். அவர்கள் இருவரும் அவளின் வருகைக்குக் காத்திருந்தது போல அவளைப் பார்க்க, அவளின் அப்பா குடையை வாங்கிகொண்டு, “நாங்க போயிட்டு வந்தறோம்..” என்றார். அருகில் இருந்த சாத்தான் அவளைப் பார்த்து தலையை மட்டும் ஆட்டிக்கொண்டது.
***
“உங்களின் குரல் இங்குப் பரிச்சயம் இல்லாதது போல இருக்கிறதே..”
“நான் இங்குப் புதிது..”
“குரலில் அப்பட்டமாகத் தெரிகிறது..”
“பழகப் பழக மாறும் இல்லையா..”
“கண்டிப்பாக..”
“இந்த குடையின் பெயரைத் தெரிந்து கொள்ளலாமா..”
“அது ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது..”
“ரகசியம்..”
“அதன் காரணம் தெரிந்து கொள்ள விருப்பம் இல்லையா..”
“காரணம் எப்போதும் அலுப்பைத் தரக்கூடியது..”
“எனக்கும்.. எப்போதாவது யோசித்ததுண்டா உங்களின் குரல் எம்.எஸ்.வீயின் சாயலில் இருக்கிறது என்று..”
“ஆகா..”
“சாயலில்..”
“சரி; ஏற்றுக் கொண்டாகிவிட்டது..”
“எங்கள் நிலத்திற்கு இப்படி ஒரு நிலை வரக் கூடாது..”
“அது தவிர்க்க முடியாது..”
“…..”
“என்னளவில் அதற்கான பதில் அவ்வளவே..”
***
அப்பா மட்டுமே வீடு வந்து சேர்ந்தார். அவளுடைய குடையை மழை பெய்வதால் அவரிடமே கொடுத்தனுப்பி விட்டதாகச் சொன்னார். அவர் மீது அளவில்லாத கோபம் வந்தது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது அமைதியாக இருக்க தொடங்கினாள். அந்த நிலம் அவர்களிடமிருந்து கைமாறும் போது கூட அங்கு வரவில்லை. அதை வாங்கும் அனைவரும் பெரும் பாவத்திற்கு உரியவர்கள் என்று சபிக்கத் தொடங்கியிருந்தாள். ஆனால், அப்பா அப்பணத்தில் பெரும் மதிப்பைக் கொண்டிருந்தார். அன்று வந்து போனவனை அதன் பிறகு பத்திர அலுவலகத்தில் வைத்து தந்தை பார்த்ததாகச் சொன்னார். “நல்ல பையன்.. அவன் இல்லேன்னா இவ்வளவு சீக்கிரம் முடிஞ்சுருக்காது. அவனுக்கான பணம் கூட வாங்கல..”- என்று அவனைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் அவளுக்குப் பற்றிக்கொண்டுவந்தது. நிலத்தின் மூலம் கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புவது என்ற ஏற்பாட்டின்படி அப்பா அடுத்த கட்ட நகர்வுகளுக்குள் இறங்கியிருந்தார். அவளுக்கு இதுவரை இருந்த நிலமும் தான் விரும்பி வைத்திருந்த குடையும் இல்லாமல் இருப்பது அவளை ஏதோ செய்து கொண்டேயிருக்க, அவனை மீண்டும் வாழ்வில் சந்திக்கவே கூடாது என்று நினைத்திருந்தாள். அதன்படியே அப்பாவும் அவளும் வேலைக்காக வெளியூர் சென்று விட்டனர். அவர்கள் இங்கு இருந்ததற்கான எந்த அடையாளத்தையும் விட்டு வைக்கவில்லை.
***
பல நாட்கள் அங்கு நிகழ்ந்தவைகளைக் குறித்து யோசித்துப் பார்ப்பாள். ஒருகணம் கூட அவளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்பாவை இந்த வேலை உருக்கிக் கொண்டிருந்தது. எதற்காக இந்த இடப் பெயர்வு என்று அழுகாத நாள் இல்லை. என்ன செய்ய முடியும்.. நிகழ்ந்தவற்றை மாற்ற முடியுமா என்று யோசிப்பது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்? இந்த நாட்களில் அப்பாவிடம் பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். அப்பா அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க செய்த முயற்சிகள் யாவும் தோற்றுப்போயின. அவரின் திடீர் உடல் நலக் குறைவு அவருக்கு பின்னான அவளது வாழ்கையைப் பற்றி யோசிக்க வைக்க, திரும்பும் திசையெல்லாம் அவளுக்கான ஒருவனைத் தேடத் தொடங்கினார் அதுவும் அவளுக்கு வெறுப்பையே கொடுத்தது. எப்போதாவது அந்த சர்வேயர் அவரிடம் பேசுவதை அவளும் கவனித்தது உண்டு. சரி, அவரையே கல்யாண சம்பந்தத்திற்குக் கொண்டு வரலாம் என்று நினைத்தவரை அவனின் அமைதி மேலும் பாதித்தது. சாத்தான் என்று மீண்டும் முனகிக் கொண்டாள் .
“அது அவனின் வேலை. நாமே அதற்குக் காரணம்..” என்று தந்தை சொல்லுவதை ஏற்றுக்கொள்ள முடியாது இருந்தாள் .
அவனைப் பழிவாங்கப் பழித்து ஒன்றும் ஆகப் போவதில்லை என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டவள். தன்னளவில் அப்பாவின் மனநிலைக்கு மாறியிருந்தாள். இருவருக்கும் பிடித்தபடி ஒருவன் அமைய கல்யாணம் நிகழ்ந்தேறியது .
***
“எப்பயும் கத எழுதுவீங்களா..”
“எப்பயும் இல்ல.. தோன்றப்போ..”
“மிச்ச நேரமெல்லாம்..”
“சும்மா இருப்பேன்.. இது நாள் வர ஊர் சுத்திகிட்டு இருந்தேன்.. இப்போ முடியாதே..”
“..”
“உனக்கு ஏன் என்ன புடுச்சுருந்துச்சு…”
“காரணம் எதுவும் இல்ல..”
“அப்படியா..”
“ஆமா..”
“அப்பா சொன்னார்.. அவ்ளோ பேர வேணான்னு சொல்லிட்டு, என்ன பாத்த ஒடனே புடுச்சுருச்சுனு சொல்லிட்டீங்கன்னு சொன்னார்..”
அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.
***
மேகம் சூழ வேலை முடிந்து வீட்டுக்கு வந்தவள் தனியாகவே இருந்தாள். இந்த மூன்று வருட இல்லற வாழ்க்கையில் எண்ணற்ற மகிழ்வான தருணங்களை அவர்கள் இருவரும் சேர்ந்து உருவாக்கி இருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் தனது கணவன் வந்து விடுவான் என்கிற எதிர்பார்ப்பில் இருந்தாள். உடனிருந்த தந்தைக்கு இரவு உணவை அளித்துவிட்டு இதுநாள் வரை கேளாது வைத்திருந்த கேள்வியைக் கேட்க முடிவெடுத்திருந்தாள்.
“உங்களுக்கு ஞாபகம் இருக்கா அப்பா.. நம்மோட நிலத்தை…” என்று திடீரென்று இத்தனை நாட்கள் கழித்துக் கேட்கும் அவளிடம் என்ன பதில் சொல்வது. ஏனோ அம்முடிவு இன்றைய நிலையை உருவாக்கியிருக்கிறது என்பதை அறிந்திருந்தார். அதைக் கொடுத்ததில் அவருக்கு மனக் கசப்புகள் இருந்தாலும் அதுவே ஒரே வழி என்கிற நிலைக்கு அவர் வந்திருந்தார்.
“ஞாபகம் இல்லை….” என்று அவளைச் சீண்டும் படி பதிலளித்தார். அதற்கு முக்கியமான காரணம் இந்நாட்களில் அவரை அதன் பொருட்டு ஏசி வந்திருந்தாள். அவளை விட அதில் வேரூன்றி வளர்ந்தவன் நான் என்கிற செய்திகளை மறந்திருப்பது அவருக்கு அவள் மீது ஒரு வெறுப்பைத் தந்தது.
தந்தையின் பதிலைச் சிறிதும் எதிர்பார்க்காதவள் அவரிடம் பேசி எந்த பதிலும் இல்லை என்கிற தொனியில் அவரின் அறையை விட்டு வெளியேறினாள். மழையில் முழுவதும் நனைந்தபடி தனது கணவன் வீட்டினுள் வருவதைக் கவனித்தாள்.
***
கணவன் மனைவி இருவருக்கும் இடையில் எப்போது சண்டை வந்தாலும் அந்த சர்வேயர் சாத்தானைத் திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அதற்கு அவளுக்குத் தீர்க்கமான காரணங்கள் இருந்தது என்பதை உறுதியாக நம்பினாள். ஒவ்வொரு நாள் வேண்டுதலிலும் அவன் மீண்டும் என்னுடைய வாழ்க்கையில் வந்து விடக்கூடாது என்பது எப்போதுமிருக்கும். இந்த சண்டைக்குக் காரணம் தொடங்கிய புள்ளி அவனே என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டிருப்பதை ஒருநாள் அவனுடைய கணவன் கேலிக்குள்ளாக்குவதை தாள முடியாமல் சண்டையிடத் தொடங்கினாள். அதன் பொருட்டு இன்று வரை அது நீண்டு கொண்டே இருக்கிறது ஒவ்வொரு முறையும் நிகழ்ந்தேறிய பின் அவளின் அழுகையைக் கேட்க முடியாதவாறு அவளின் கணவரும், தந்தையும் தங்களின் காதுகளை இறுக மூடிக்கொள்கின்றனர்.
***
அவனைக் கண்டதும் ஏற்பட்ட ஈர்ப்பை ஒரு கணம் நினைக்கையில் அவளின் உடல் நடுக்கம் கொள்ள தொடங்கும். ஒவ்வொரு முறை தனது கணவனுடன் உடலுறவு கொள்ளும் போதும் ஒருகணம் அவனின் உருவம் தோன்றி மறைவதை எப்படி நிறுத்துவது என்று தடுமாறியவள். ஒரு நாள் வீட்டில் வாங்கி குவித்திருக்கும் குடைகளையெல்லாம் வீட்டின் பின் பகுதிக்கு எடுத்துச் சென்றாள். அவளின் அச்செய்கை எதற்கு என்று தெரியாதவாறு முழித்துக் கொண்டிருந்த அவர்கள் இருவரும் எப்போதும் அவளை வேடிக்கை செய்பவர்களாகவே இருந்து வந்துள்ளனர். அனைவற்றையும் எடுத்துச் சென்றவள் அக்குடைகளை அவளின் எண்ண ஒழுங்குக்கு ஏற்றபடி ஒரு நேர்கோட்டில் வடிவமைக்கத் தொடங்கினாள். பின் அதனிலிருந்து சிறிது தூரம் விலகி நின்று பார்த்துவிட்டு அதன் அருகில் சென்று மீண்டும் வேறொரு வடிவத்தை அதற்கு அளித்தவள். அவர்கள் இருவரும் அமர்ந்திருப்பதற்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டாள். அவர்களால் அதனைச் சரியாகப் புரிந்து கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளுக்குச் செல்ல முடியவில்லை. எவ்வளவு நேரம் அதை வெறித்துப் பார்த்து அமர்ந்திருப்பது? அவளது கணவரும், தந்தையும் ஒரு கட்டத்தில் அங்கிருந்து நகர்ந்தனர். ஆனால், அவளோ அங்கேயே அமர்ந்திருந்தாள், யாருடைய வருகையையோ முன்பே கணித்திருந்தது போல.
***
அவர்களிடமிருந்து வாங்கப்பட்ட நிலத்தில் அழகான வீடு ஒன்று கட்டப்படத் தொடங்கியிருந்தது. அதை வாங்கியவர்கள் அவர்களின் கனவான ஒன்று நிகழ்ந்தேறி விட்ட மகிழ்ச்சியில் அதனைப் பார்த்துப் பார்த்து கட்டிவந்தனர். அந்த மேட்டுக்காட்டின் உயரத்திற்கு அவ்வீடு அனைவரின் கண்களுக்கும் பளிச்சிடத் தொடங்கியது. அனைவரது பேச்சிலும் அது நிகழ்வது அதனை வாங்கியவர்களுக்கு பெரும் மரியாதையையும், ஒரு வித கர்வத்தையும் கொடுத்தது. அதன் படி அவர்களின் இல்லத் திறப்பு விழா படு விமர்சையாக அம்மலைவாழ் மக்களின் முன் இதற்கு முன் நடந்திடாபடி இருக்க, அந்நிலத்தின் பூர்வ குடிகளை அனைவரும் மறந்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர் பார்க்காத ஒன்று நாட்கள் செல்ல செல்ல ஊர்ஜிதம் ஆகத் தொடங்கியது. எப்போதும் போலக் காற்றின் திசையெங்கும் அதன் செய்தி பரவியது. அப்படியே அவளின் காதிற்கும் எட்டியிருக்கிறது. அப்படி ஒரு நிகழ்வுக்காகவே அதுநாள் வரை காத்திருந்தாள். ஆனால், அவ்வீட்டில் குடியிருந்தவர்களுக்கோ இது பெரும் மன உளைச்சலை உருவாக்கியது. அவர்களால் அதை முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எத்தனையோ மாந்திரீக வழிபாடுகளும், பூஜைகளும், வீட்டின் அமைப்புகளை மாற்றி அமைத்தலும் எதுவும் மாற்றத்தைக் கொண்டு வர முடியவில்லை.
***
அந்தக் கவலையை அறிந்த தந்தை தனது மகளுக்குத் தெரியாமல் அவர் விற்று வந்த நிலத்திற்குச் செல்லலானார் தனது மருமகனுடன். அன்று வரை அந்த மருமகனுக்குத் தன்னை எதற்காக இவள் தேர்ந்தெடுத்தாள் என்கிற கேள்வி தொற்றிக்கொண்டே இருந்தது. அதற்கான விடையை என்றோ ஒருநாள் அறிந்திட வேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது உண்மை என்றாலும், அவளின் நடவடிக்கைகள் அதை மீண்டும் அவளிடம் கேட்கப் பயத்தையே கொடுத்தது. யாரை வெறுக்கிறாளோ அவனையே பார்க்க வேண்டும் என்று அவனின் மாமனார் உறுதியாக இருந்தார். அவனைப் பற்றிய தகவல்களையும் எங்கோ கண்டுபிடித்து வைத்திருந்தார். எப்படியோ அந்த சர்வேயரை காணப் போகிறோம் என்கிற ஆர்வம் அவளின் கணவரிடம் இருந்தது. நாங்கள் அவரின் இல்லத்தைக் கண்டடைந்த போது அவரின் இளமை தோற்றத்தில் பார்த்த அந்த தந்தையின் கண்களுக்கு ஒரு நோயாளியாக அவன் முன்னிருந்து வரவேற்பதை முன் கூட்டியே அவர் அனுமானித்து வைத்திருந்தார். மகள் அக்குடையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தாள் என்று அவருக்குத் தெரியும். ஆனால், அன்றைய தேவை அதைத் தகர்த்தெறியச் செய்தது. அதன் பயனாக அவன் இந்த நோய்மையை அனுபவித்து வருகிறான். அதில் பாதி பங்கு எனக்கும் உண்டு. அதை நான் அருகிலிருந்து அனுபவித்து வருகிறேன். எதிரிலிருப்பவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது எதை எதையோ பேசி அங்கிருந்து நகர்ந்து வந்தார். அப்போதிருந்த அவனின் அன்பு துளியளவு கூட குறையவில்லை என்றே தோன்றுகிறது. அவனின் தொடர் இருமலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டி அங்கிருந்து கிளம்பினர். அவர் அவ்வீட்டின் மூலையில் மாட்டப்பட்டிருந்த அவர் கொடுத்தனுப்பிய அவளின் குடையை கண்டும் காணாமல் அங்கிருந்து புறப்பட்டிருந்தார். அந்தக் குடை அவள் அம்மாவின் மறைவுக்கு பிறகு, அவரிடமிருந்து அவளை விலக்கியிருந்தது. ஒரு கட்டத்தில் அதனோடு பேச தொடங்கியிருந்தவளை கவனித்ததாலேயே அங்கிருந்து வெளியேறவே முடிவெடுத்தார். அதனை தனது சூழல் என்று இன்று வரை காத்துவந்தார். ஆனால், அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை என்கிற அதிருப்தி அவரிடம் இருந்து வந்தது உண்மையே.
தங்களுக்கு தகவலாக வந்த செய்தியினை நம்பமுடியாமல் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தனர். அவருக்கு பழக்கப்பட்ட பாதை என்றாலும் கடந்த வருடங்கள் அவற்றில் சிறு மாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது. ஒவ்வொரு இடங்களை கடக்கும் போதும் தனது மகள் அக்குடையை வைத்து கொண்டு செய்த பாசாங்குகள் தோன்றிய வண்ணமே இருந்தது. ஒரு கட்டத்தில் அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் அது போய் முடியும் இடங்களை அவர் நன்கு அறிந்த நாளே அப்படிப்பட்ட முடிவை எடுத்திருந்தார். உடன் வரும் அவரின் மருமகனுக்கும் அவள் எப்போதும் சொல்லும் கதைகளும் அக்குடையின் விளையாட்டையும் அங்கு உணர முடிந்தது. எப்போது என்ன வேண்டும் என்று கேட்டாலும் குடையினைச் சொல்லும் அவளை என்ன செய்ய முடியும்? வீடு முழுவதும் குவிந்து கிடக்கும் அக்குடைகளுக்கு பாதுகாவலனாக அவன் இருப்பதாக உணர்ந்திருக்கிறான். அவர்கள் எதையோ யோசித்துக் கொண்டு இருவரும் தங்களுக்குள் பேசாமல் வந்தாலும். அவர்களின் அடியாழத்தில் அந்த மேட்டுக்காட்டை பற்றியான செய்தி ஓடிக்கொண்டே இருந்தது. இதில் மிகப் பெரிய வருத்தம் என்னவென்றால் அந்த செய்தியில் அவரது பூர்வீகம் பற்றிய பொய்யான பல தகவல்களும் பரப்பப்பட்டு வந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதை உடைத்தெறியவே இந்தப் பயணம் என்கிற தொனியில் அவரின் நடைமுறைகள் அனைத்தும் இருந்தது. ”இன்னும் கொஞ்ச தூரம்”என்று அவர் தனக்குத் தானே முனக. மழை பிடிக்கத் தொடங்கிருந்தது. இருவரும் எதிர் பார்த்தது போல அவர்களை அவள் பின் தொடரத் தொடங்கியிருந்தாள். இருவரும் வேகமாக நனைந்தபடி மேலேறி அவ்விடத்தினை அடைந்தனர். ஊராரின் சொற்கள் யாவும் பொய், கட்டுக்கதை என்று நம்பி வந்த இருவருக்கும் அக்குரல்கள் கேட்கத் தொடங்கியது: ‘அந்த வீட்ட மட்டும் மழ நனைக்க மாட்டுதுயா..!’
*******