கட்டுரைகள்

வெனிசுவேலா : அமெரிக்காவின் அடுத்த வேட்டை நிலம்

செலீனா

இந்த உலகத்தையே தனது வேட்டை நிலமாக பார்க்கும் அமெரிக்காவின் இப்போதைய இலக்கு வெனிசுவேலா. வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை குறி வைத்து அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்டு வரும் அமெரிக்கா உலகம் முழுக்க தனது அரசியல் பொருளாதார நலன்களை முன்னிட்டு சுதந்திரம் , ஜனநாயகம் என்ற பெயரில் என்ன நாடகத்தை ஆடி வருகிறதோ அதையேதான் வெனிசுவேலாவிலும் நடத்திக்கொண்டிருக்கிறது. பல்வேறு  அரசியல் போராட்டங்களால் சுயநிர்ணய உரிமையை வென்றெடுத்த இடதுசாரி தலைவர்களை படுகொலை செய்துவிட்டு அந்நாட்டின் வளங்களை சுரண்ட உதவுபவர்களுக்கு  உதவி செய்து ஆட்சி கட்டிலில் அமரவைப்பதும் அதன்பின் ராணுவ சர்வாதிகாரத்தை திணிப்பதும்தான் அமெரிக்காவின்  தொடர் வேலை. அந்த வரிசையில் வெனிசூலாவும் பல ஆண்டுகளாகவே அமெரிக்காவின் இலக்காக உள்ளது. மற்ற அமெரிக்க அதிபர்களை போலவேஅதிபர் ட்ரம்ப் பதவியேற்ற போதும் அவர் உலகம் முழுக்க பிரச்சினைகளை உருவாக்குவார் என்று ஆருடங்கள் கூறப்பட்டன, அதுதான் இப்போது வெனிசூலாவிலும் நடந்துகொண்டிருக்கிறது. வெனிசுவேலாவின் தற்போதைய அதிபர் மதுரோவை நீக்கிவிட்டு தன்னுடைய கைக்கூலியான ஜுவானோ குவாய்டோவின் கைகளுக்கு ஆட்சியை கைமாற்றிக்கொண்டு அதன்மூலம் அந்நாட்டை ஆள நினைக்கிறது அமெரிக்கா.

இதற்கு முந்தைய சிறந்த உதாரணம் சிலேவியில் அமெரிக்கா நிகழ்த்திய அரசியல் நாடக கொடுமைகள். 1971ல் அங்கு சால்வதோர் அயந்தே பொதுத்தேர்தலில் வென்று சோஷலிச அரசை நிறுவினார். அங்கிருந்த வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்தார் . அதன் பின் கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு என பல்வேறு வகைகளில் முன்னேறிக்கொண்டிருந்த நாட்டில் அமெரிக்காவின் உதவியுடன் எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட போக்குவரத்து பணியாளர் வேலை நிறுத்தம் நாட்டின் நிர்வாகத்தை கடுமையாக பாதித்தது . சிலேவின் குடியரசு தலைவர் மாளிகை சிஐஏவினால் உண்டுவீசி தகர்க்கப்பட்டு அயந்தே படுகொலை செய்யப்பட்டார் . அதன்பின் அமெரிக்க கைக்கூலி  பினாசெத் எனும் கொடுங்கோலர் பதவியேற்றார். வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் தலைவிரித்தாடியது .அதன்பின்னர் அங்கு நடந்த பல்வேறு கலகங்களில் லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனார்.  அமெரிக்காவின் வேட்டைக்காடாகியது சிலே.

சிலே போலத்தான் தற்போது வெனிசுவேலாவை வெல்ல நினைக்கிறது அமெரிக்கா. வரலாற்றை புவியியல் ரீதியான அமைப்பு தீர்மானிக்கிறது என்பார்கள். அதன்வகையில் வெனிசுவேலாவின் புவியியல் ரீதியான அமைப்பு அமெரிக்கா கைக்கொள்ள நினைப்பதற்கு முக்கியமான காரணமாக இருக்கிறது.  வெனிசுவேலா வட அமெரிக்காவிற்கு தெற்கே அமைந்துள்ள தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடு.  1522 ஆம் ஆண்டில் ஸ்பெயினின் குடியேற்ற நாடாக மாறியது வெனிசுவேலா. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் ஒன்று என்றாலும்  அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது.  19 ம் நூற்றாண்டில், வெனிசுவேலா பல்வேறு அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது. பின்னர் 1958 முதல் ஜனநாயக குடியரசாக மலர்ந்தது. மிக முக்கியமாக 1910ல் அங்கு  எண்ணெய் வளம் இருப்பது கண்டறியப்பட்டது. 1920களில் அதிக அளவில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக வெனிசுவேலா திகழ்ந்தது.  ஆனாலும் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் பெரும்பாலான  நாடுகளை போலத்தான் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அது உழைக்கும் வர்க்க மக்களுக்கு அதனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்களுக்கு அடிப்படை தேவைகளான சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை கிட்டவில்லை.

1980 கள் மற்றும் 1990 களில்  ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் அன்னியக்  கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் பல அரசியல் குழப்பங்களுக்கு இட்டு சென்றன.

1998 இல் ஹீகோ சாவேஸ் வெனிசுவேலாவின் அதிபரானார். இவர் வட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு பெரும் சவாலாக விளங்கியவரும் இடதுசாரியும் சனநாயக சோஷலிஷவாதியும் ஆவார். 1998ம் ஆண்டு ஹியூகோ சாவேஸ் ஜனநாயக ரீதியான ஓட்டெடுப்பு மூலம் தெர்ந்தடுக்கப்பட்டபின் அவர் நாட்டின் சட்ட புத்தகத்தையே புதிதாக மாற்றி எழுத சொல்கிறார். அந்த சட்ட புத்தகம் வரலாற்றால் மறைக்கப்பட்ட சைமன் பொலிவாரின் பெயரால் அழைக்கப்பட்டது.   நெப்போலியன், ஸ்பெயினை கைப்பற்றி ஸ்பெயின் ஆக்கிரமித்திருந்த வெனிசுவேலாவில் தனது அதிகாரத்தை நிறுவியபோது அவரை எதிர்த்து புரட்சிகர அரசை நிறுவியர்தான் 23 வயதான சைமன் பொலிவார். லத்தீன் அமெரிக்க நாடுகளை ஸ்பானிய ஆதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்காக அவர் விடுதலை போர்களை தலைமையேற்று நடத்தி கொலம்பியா , ஈக்வடேர் , பனாமா , பெரூ , பொலிவியா ஆகிய நாடுகளுக்கு விடுதலை பெற்றுக்கொடுத்தார் . அதனால்தான் தெற்கு பெரூ நாடு பொலிவியா என அழைக்கப்படுகிறது. அந்த வெனிசுவேலாதான் சைமன் பொலீவர் எனப்படுகிற மிகப்பெரும் தலைவரை உலகுக்கு அளித்தது.  அவரின் பெயரில்தான் புதிதாக எழுதப்பட்ட சட்ட புத்தகம் ‘பொலிவாரியன் சட்ட புத்தகம்’ என அழைக்கப்பட்டது.

சாவேஸ் பதவியேற்றதும் வெனிசுவேலாவில் உலக மயமாக்கலுக்கு எதிரான இடது சாரி ஆட்சி அங்கு  உருவானது.  சாவேஸ் தலைமையிலான வெனிசுவேலா அரசாங்கம்  வெனிசுலாவின் பொருளாதாரத்தை மீடெடுத்தது.  சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு கம்யூனிசம் செழித்து நின்ற நாடுகளில் ஒன்று வெனிசுவேலா. 2002ம் ஆண்டில் சாவேசின் அரசுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு  முயற்சிகள் நிகழ்ந்தன. ஆனால் இரண்டே நாட்களிகளில் மக்கள் ஆதரவோடு மீண்டும்  ஆட்சியை பிடித்தார். 2004 தேர்தல் வெற்றிக்கு பிறகு வெனிசுவேலாவை தாண்டிய செல்வாக்கு பெற்ற தலைவராக மாறினார். பொலிவியா, அர்ஜெண்டினா, கியூபா, உருகுவே, சிலே, பிரேசில் ஆகிய நாடுகளுடனும் குறிப்பாக கியூப அதிபர்  ஃபிடல் காஸ்ட்ரோவுடன் நட்பு பாராட்டினார். அதேபோல சோஷலிசம் மலர பெரூ, மெக்சிகோ, பொலிவிய தலைவர்களுக்கும் தன்னாலான உதவிகளை செய்து வந்தார். 2005ல் சோசியல் ஃபோரம் மூலம் குறைந்த விலைக்கு பெட்ரோலிய பொருள்களை வழங்கினார். 40% குறைந்த விலைக்கு வழங்கினார். அது ஜார்ஜ் புஷ்ஷிற்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

2006ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது தொலைதொடர்பு, சிமெண்ட், மின் உற்பத்தி நிலையங்கள், உணவகங்கள், போக்குவரத்து போன்றவற்றை அரசுடமையாக்கினார். இப்படி ஏழைகள் பயன்பெறும் வகையில் ஏராளமான திட்டங்களை அமல்படுத்தினார். அந்த சமயத்தில் வெனிசுவேலாவில் பல முக்கிய பாலங்கள், சாலைகள், மேம்பாலங்கள் போன்ற உள் கட்டமைப்புகள்  உருவாக்கபட்டன.  எனினும் நாட்டில் வேறு சில சிக்கல்களும் நிகழ்ந்தன . வெனிசூலாவில் பெரும் தண்ணீர் பற்றாகுறை  ஏற்பட்டது. அது மத்திய தர மற்றும் உயர் வகுப்பினரிடையே அதிருப்தியை  ஏற்படுத்தியது. அவற்றை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அவர்கள் மக்களின் அதிருப்தி அலையை அவர் பக்கம் திருப்ப முயற்சித்தனர். இதற்கு இடையில் பலமுறை அவரை கொலை செய்ய அமெரிக்கா திட்டம் தீட்டியது.  இந்நிலையில் 2013 மார்ச் 5ல் சாவேஸ் புற்று நோயால் இயற்கை மரணமடைந்தார் . அதன் பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மடுரோ பதவியேற்றார். அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் மிரட்டலுக்கு எப்போதும்தான் அடிபணிய போவதில்லை என்று அவர் சாவேஸ் வழியில் பயணித்தார். ஆனாலொ சாவேஸிற்குப்பிறகு எப்படியேனும்  வெனிசூலாவை தன்னுடைய கட்டுப்பாட்டில்  கொண்டுவந்துவிடலாம் என்று கனவு கொண்டிருந்த அமெரிக்காவிற்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வெனிசுவேலாவின் அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி 10ம் தேதி மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிபரானார். இதை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கீகரித்த மறுத்த நிலையில் கியூபா, நிகாரகுவா, பொலிவியா, ரஸ்யா, துருக்கி ஆகிய 90 நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.  ஆனால் அந்நாட்டு சட்டப்பேரவையை சேர்ந்த சிலர் அவருக்கு எதிராக செயல்பட்டனர். அங்குள்ள  எதிர்கட்சிகளின் துணையுடன் பெரும் உள்நாட்டுக் குழப்பங்களை அது ஏற்படுத்தியது தற்போதுவரை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், வெனிசுவேலா  நாடாளுமன்றத் தலைவராக பொறுப்பு வகிக்கும் எதிர்க்கட்சித்தலைவர்  ஜுவான் குவாய்டோ, நாட்டின் இடைக்கால அதிபராக தம்மை அறிவித்துக் கொண்டார். அவர்அவ்வாறு அறிவித்த சில நிமிடங்களிலேயே, அவரை வெனிசுவேலாவின் இடைக்கால அதிபராக அமெரிக்கா அங்கீகரித்தது. மேலும், பிரேசில், கொலம்பியா, சிலி, பெரு, ஆர்ஜெண்டீனா உள்ளிட்ட பிராந்திய நாடுகளும் ஜுவான் குவாய்டோவை அங்கீகரித்தன. . இதை தொடர்ந்து வெனிசுவேலாவில் நிலவும்  அரசியல்  குழப்பத்துக்கு  அமெரிக்காதான்  காரணம்  என  குற்றஞ்சாட்டி  வரும்  அந்நாட்டின் அதிபர்  நிகோலஸ்  மடூரா  அமெரிக்கா  உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து  நிகோலஸ்  மடூரோவுக்கு  மேலும்  அழுத்தம்  தரும்  வகையில் அந்நாட்டின் அரசு  எண்ணெய்  நிறுவனம்  மீது  அமெரிக்கா  பொருளாதார  தடைகளை விதித்தது. மேலும் தன்னை  கொலை  செய்ய  அமெரிக்க  ஜனாதிபதி  டிரம்ப்  உத்தரவிட்டுள்ளதாக  நிகோலஸ் மதுரோ பரபரப்பு குற்றம்  சாட்டினார். ரஷியாவை  சேர்ந்த  செய்தி  நிறுவனம்  ஒன்றுக்கு  அளித்த  சிறப்பு பேட்டியில்  “என்னை கொலை செய்யும்படி கொலம்பியா அரசு மற்றும் கொலம்பியாவை சேர்ந்தகொலைகார கும்பல்களுக்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை. ஒரு நாள் எனக்குஏதாவது நடக்கலாம். எனக்கு என்ன நேர்ந்தாலும் அதற்கு டிரம்ப் மற்றும் கொலம்பியா அதிபர் இவான்டியூக் தான் பொறுப்பாவார்கள்”  என்றார்.

முன்னதாக கடந்த 2018ல் ஆகஸ்டு மாதம் தலைநகர் கராக்கசில் நடந்த ராணுவ தின நிகழ்ச்சியின்போது, ஆளில்லா விமானங்கள் மூலம் அதிபர்  நிகோலஸ்  மதுரோவை  கொல்ல  முயற்சி  நடந்தது.

பல்வேறு காரணங்களால் நாட்டின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதமாக அதிகரித்துள்ளது. பொருளாதார நெருக்கடிகளால் உணவு  தட்டுப்பாடு  ஏற்பட்டு  3  மில்லியன் வெனிசுவேலா  மக்கள்  நாட்டை விட்டு  வெளியேறியிருக்கிறார்கள்.  அதனை  சீர்  செய்ய  மதுரோ தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை  மேற்கொண்டுள்ளது.   எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் வெனிசுவேலாவுக்கு சீனாவும்  ரஸ்யாவும்  உதவி  புரிவதாக அறிவித்துள்ளன. ஆனால்  அந்த நாடுகளும் அமெரிக்காவின் பொருளாதார  தடைக்கு பயந்து கொண்டுதான் இருக்கின்றன.

பிற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் அத்து மீறி தலையிட்டு ஜனநாயக பூர்வ அரசுகளைகவிழ்த்துவிட்டு தனது பொம்மை அரசுகளை நிறுவி வரும் அமெரிக்காவின் கைங்கர்யம் வெனிசுவேலாவில் பலிக்குமா அல்லது வெனிசுவேலா தனது தனித்துவத்தை  பாதுகாத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close