விஷால் ராஜா கவிதைகள்

விஷால் ராஜா கவிதைகள்

கவிதை:- விஷால் ராஜா

பூனைக்குட்டிகளை வளர்க்க தெரியாததை போலவே
எனக்கு ரகசியங்களையும் கையாளத் தெரியாது
பூனைக்குட்டிகளைப் போலவே ரகசியங்களும்
எல்லாவற்றையும் தம்முடையதாக்கிவிடுகின்றன

ரகசியங்கள் உண்மை ஆகும்போது
அவை உண்மையைவிட பெரிய உண்மையாக மாறுகின்றன
ரகசியங்கள் பொய் ஆகும்போது
அவை பொய்யைவிட அதிக இருள் கொண்டு விடுகின்றன

நான் ரகசியங்களை
உண்மைக்கும் பொய்க்கும் நடுவே
சமதொலைவில் நிறுத்தி வைக்கிறேன்
அப்படியாக உண்மைக்கும் பொய்க்கும் நடுவே
சமதொலைவுடைய
ஒரு வாழ்க்கையில் நான் நிகழத் தொடங்குகிறேன்.

நதியின் மறுகரையில்
ரகசியங்கள் இல்லை என்கிறான் துறவி
ஆனான் அவன்
அறிந்து கொள்ள முடியாத ரகசியங்கள் நிஜம்
அவை ரத்தம் போல் நிஜம் சகி

பிரியத்தின் நீலவண்ண பறவைகள்
தொலை தூர நிலத்தில்
தங்களால்
புரிந்து கொள்ள முடியாத நெருப்பில்
எரிந்து மடிகின்றன
வெப்பத்தில் நெறிபடும்
தீனமான சிறகசைப்புகளை கேட்டு
நான் கண் விழிக்கும்
இந்த விடியற்காலையின் மோனம்
தாங்க முடியாததாக இருக்கிறது
இப்போது நான்
உன்னை நினைத்துக் கொள்ள விரும்பவில்லை
அந்த பறவைகளை மட்டுமே நினைத்துக் கொள்கிறேன்
அவற்றின் கேவல்களை நினைத்துக் கொள்கிறேன்
பட்பட்டென்று கதவு அறைபடும் சத்தம் கேட்கிறது
ஜன்னல்களிலும் மோதல் சத்தம்
கதவையும் ஜன்னல்களையும் திறக்கிறேன்
நூறு சிறகுகளில் கிழிபடுகிறது காற்று
என் அறையை நிரப்பி
துயரின் முடிவற்ற
பாடலை பாடுகின்றன அப்பறவைகள்
இப்போது வேறொரு பருவத்தில் இருக்கும் நீ
உன் படுக்கைக்கு அடியே குவிந்துக் கிடக்கும்
சாம்பலையும்
கருகிய எலும்புகளையும்
பார்க்கும்போது நிச்சயமாக
என்னை நினைத்துக் கொள்ள விரும்ப மாட்டாய்…