கட்டுரைகள்

சரிந்த சாய்வு நாற்காலி

நாறும்பூநாதன்

எழுத்தாளர் “தோப்பில்” முகம்மது மீரான்  வெள்ளிக்கிழமை (10-03-2019) அன்று வயது மூப்பு காரணமாக தனது 75வது வயதில் காலமானார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள “தேங்காய் பட்டணம்” என்னும் கடலோரக் கிராமத்தில் பிறந்த, “தோப்பில்” முகம்மது மீரான், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, திருநெல்வேலியில் வசித்து வந்தவர். இவர் எழுதிய “சாய்வு நாற்காலி” என்ற நாவலுக்கு, 1997-ஆம் ஆண்டு மத்திய அரசின், “சாகித்ய அகாடமி விருது ” பெற்றது என்பது குறிப்பித்தக்கது

சாய்வு நாற்காலி, கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, துறைமுகம்,அஞ்சு வண்ணம் தெரு ஆகிய நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், தோப்பில் முகமது மீரான் கதைகள், ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் ஆகிய சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

மேலும் மலையாள இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் பெற்ற தோப்பில்.. ”தெய்வத்தின் கண்”, ”வைக்கம் முகமது பஷீர் வாழ்க்கை வரலாறு”, “திற்கோட்டூர் நாவல்கள்”  உள்ளிட்ட  நாவல்களையும் “தனிமையின் நூர் வருடங்கள்” உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.. இஸ்லாமிய சமூக அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நுட்பமாக பதிவு செய்திருக்கிறார். இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராக தனது கருத்துக்களை துணிச்சலுடன் முன் வைத்தவர்.. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தோடு கடந்த 35 ஆண்டுகளாக நெருங்கிய தொடர்புக் கொண்டிருந்த மறைந்த “தோப்பில்” முகம்மது மீரான் குறித்தான தனது நினைவுகளை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன்.

1992 ல் நடந்தது இது.

ஓட்டல் சகுந்தலா இன்டர்நேசனலில் தமுஎகச சார்பில் ஒரு கூட்டம்.

கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர் அப்போதுதான் அறிமுகமாயிருந்த தோப்பில் மீரான். என்ன காரணத்தினாலோ, ரொம்ப குறைவான கூட்டம். சிஐடி போலிஸ்காரர் உட்பட மொத்தமே 14 பேர். நானும் கிருஷியும் கையைப் பிசைந்தபடி நின்றோம்.” கூட்டத்தை ஆரம்பிச்சுறலாமே.”.என்றார்  தோப்பில்.  இனி  யாரும் வருவதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

வட்டமாக நாற்காலியில் அமர்ந்தோம். தோப்பில் பேச ஆரம்பித்தார்.

” கூட்டம் குறைவாக உள்ளதால் என் பேச்சு சுருங்கி விடாது. பத்து பேர் என்றாலும் நூறு பேர் என்றாலும் எனக்கு ஒன்றுதான் ” என ஆரம்பித்தவர், அந்த ஆண்டு நோபெல் பரிசு பெற்ற ஜப்பானிய நாவல் பற்றி பேச ஆரம்பித்தார். ஒரே ஒரு கதாபாத்திரம் கொண்ட அந்த நாவலின் சிறப்பு அம்சத்தை, ” அவன் காட்டை வென்றான்” நாவலுடன் (கேசவரெட்டி எழுதியது) ஒப்பிட்டுப் பேசினார். இதிலும் ஒரே  கதாபாத்திரம் தான்.

சுமார் இரண்டு மணிநேரம் மலையாளம் கலந்த தமிழில் பேசினார். நாங்கள் அசந்துப் போனது பெரிதல்ல. சி.ஐ.டி போலிஸ் தன்னிலை மறந்து ரசித்துக் கேட்டவர், போகும் போது தோப்பிலின் கையைப் பிடித்துப் பாராட்டி விட்டுப் போனார்.

அன்று தொடங்கியது அவருக்கும் தமுஎகச விற்குமான தொடர்பு.

”சாய்வு நாற்காலி” நாவலின் கையெழுத்துப் பிரதியை கவிஞர் கிருஷியிடம் கொடுத்து, சரியாய் வந்துள்ளதா எனக் கேட்பார். நான் பக்கத்தில் நின்று பார்த்துக் கொண்டிருப்பேன். சார்வாள் சற்றும் ஈவிரக்கமின்றி 50,60 பக்கங்களை வெட்டச் சொல்வார். அவர் அதை வெட்டுவார்.

” தம்பி..இந்த நாவல் இவரை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்று விடும் பாருங்க..சாகித்ய அகாடமி விருதே கிடைச்சாலும் ஆச்சரியமில்லை ” என ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தபடி கிருஷி என்னிடம் சொன்னது  இப்போது கூட காதில் ஒலிக்கிறது.

நாவலை அச்சிட, நெல்லை சந்திப்பில் இருந்த யூனியன் வங்கி மேலாளரிடம் கடன் வாங்குவதற்கு கூட உதவி செய்த ஞாபகம். ( தோழர் ஆறுமுகநயினார் பெயரை எல்லாம் பயன்படுத்தித்தான்)

தீர்க்கதரிசனமாய் வார்த்தைகள் பலித்தன. விருது கிடைத்தது. முதல் பாராட்டு விழாவும் நெல்லையில் நடைபெற்றது. அதன்பிறகு கெட்வெல் மருத்துவமனை வளாகத்தில் தோப்பில், கிருஷி, நான் அடிக்கடி அமர்ந்து பேசுவோம்.

மலையாள இலக்கியம் பற்றிப் பேசுவார் தோப்பில். எட்டு மணிக்கு சரியாக தனது எம்.80 வாகனத்தில் கிளம்பி விடுவார். எம்80 வண்டியை இவர் அளவிற்கு வேறு யாரும் யூஸ் பண்ணியிருக்க மாட்டாங்க தம்பி என சார்வாள் கேலியாகச் சொல்வார்.

ஈகோ எதுவுமின்றிப் பழகுபவர் தோப்பில். இஸ்லாமிய மக்களின் வாழ்க்கையை அசலாய்ப் பதிவு செய்தவர். இஸ்லாமிய பழமைவாத த்தை கடுமையாக விமர்சித்தவர்.

சாய்வுநாற்காலி, கடலோரக் கிராமத்தின் கதை, கூனந்தோப்பு, துறைமுகம், அஞ்சுவண்ணத் தெரு, குடியேற்றம் ஆகிய நாவல்களுடன் 50 க்கும் மேற்பட்ட சிறந்த சிறுகதைகளையும் எழுதியவர்.

நெல்லையில் 40 ஆண்டுகளாக குடியிருந்தபோதிலும் , குமரி மாவட்ட வட்டார வழக்கு சொற்களையே கடைசிவரை எழுதினார்.

நல்ல கதைசொல்லி தோப்பில் முகம்மது மீரான் அவர்களை நாங்கள் இழந்து விட்டோம். அவரது எம் 80 வாகனத்தின் கரும்புகை வாசனை கூட இன்னமும் எங்கள் நாசியைச் சுற்றி வருகிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

1 thought on “சரிந்த சாய்வு நாற்காலி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


மேலே
Close