யாரும் யாருடனும் இல்லை – நாவல் வாச்சியம்

யாரும் யாருடனும் இல்லை – நாவல் வாச்சியம்

கட்டுரை:- லாவண்யா சுந்தரராஜன்

நாவல் என்பது மக்களால் பரவலாக விரும்பப்படும் ஒரு இலக்கிய வடிவம். இதில் வாழ்க்கையும், நிகழ்வுகளும் கற்பனையாக உரைநடையில் எழுதப்படுகின்றன. தற்காலப்பயன்பாட்டில் நாவல், நீளமாக இருத்தல், புனைகதையாக அமைதல், உரைநடையில் எழுதப்படல் போன்ற இயல்புகளால் ஏனைய இலக்கிய வடிவங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றது. நாவல் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இலக்கியவடிவம் உரைநடையில் அமைந்த நீள்கதை. இது புத்திலக்கியவகையாக ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டில் உருவானது. ஆனால் பத்தாம் நூற்றாண்டிலேயே சீனாவில் நாவல்கள் இருந்துள்ளன. இது சீனப் பெருநாவல் மரபு எனப்படுகிறது. நாவல் என்பது தமிழில் திசைச்சொல்லாக அப்படியே கையாளப்படுகிறது. புதினம் என்றும் சொல்லப்படுகிறது.

அந்த வகைப்பாட்டில் உமா மகேஸ்வரியின் “யாரும் யாருடனும் இல்லை” நாவல் 308 பக்கங்கள் கொண்ட 5 பகுதிளாக விரிகிறது. கதையின் களமாக பெரிய குடும்பம் அவரவர் நுண்ணுர்வுகள் பல்வேறு விதமான நிலக்காட்சிகள், குழந்தைகள் அவர் தம் விளையாட்டுகள், ஏக்கங்கள், பெண்கள் அவர்களோடே குமையும் காலம் காலமாய் தொடரும் பரிதவிப்புகள், வீட்டின் வெவ்வேறு நிகழ்வுகள், சடங்குகள், கூட்டு குடும்பத்தில் அன்றாடம் உரசிக் கொள்ளும் உறவின் சிக்கல்கள், குழந்தைகளுக்கு புதிராக தெரியும் உடல் சார்ந்த சந்தேகங்கள் பெரியவர்களின் சிக்கலான மனநிலைகள் என்று நாவல் சிலரின் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்சிப்படுத்துகிறது. கவித்துவமான நடையில் கதை சொல்லல் அமைந்திருக்கிறது.

“தன் நாற்காலியும் மேஜையும் தவிரத் தன்னோடு ஒன்றுமில்லை என்றொரு சலிப்புப் படர்ந்தது மனதில்.” இது நாவலில் வரும் வரி. பொன்னாயாவின் மனவோட்டமாக விரிகிறது இந்த வரிகள். இந்த கதையிடையில் ஏழு பிள்ளைகள், கிட்டத்தட்ட 10 பேர பிள்ளைகள் என்ற பெரிய குடும்பத்தையும் கொண்ட பொன்னையா உயிர் தன்னுடைய கடையில் யாரும் இல்லாத நிலையில் பிரிகிறது. சிறு தத்துவமாக இதனைப் பார்த்தால் ஆயிரம் ஆனைபடை சுற்றி இருந்தாலும் தனி மனிதன் தனி தானே. யாரும் யாருடனும் இல்லாமல் இருப்பது தான் மிக முக்கியமான தத்துவம். தத்துவத்தை விட்டுவிட்டு இந்த நாவல் “யாரும் யாருடனும் இல்லை” என்று எதை சொல்கிறது. ஏன் சொல்கிறது.

இது ஒரு கூட்டுக் குடும்பத்தில் நடக்கும் கதை. 5 தம்பதியரும் ஒரு டஜன் குழந்தைகளும் வித விதமான மனிதர்களும், விசுவாசமான வேலையாட்களும் நிறைந்த ஒரு கோட்டைஅதில் “யாரும் யாருடனும் இல்லை” ஏன் என்ற கேள்வியைப் பூடகமாக கேட்கிறது. “என் பங்கு மண்ணில் முளைத்து செல்வண்ணா மாடியில் பூக்குது” என்று குரூரமாக வெட்டி எரியப்படும் முல்லைச் செடியே அதற்கான பதிலைச் சொல்லக்கூடும். கூட்டுக் குடும்பங்கள் பெரிதும் இருந்த காலகட்டம் கிட்டதட்ட 50 ஆண்டுகள் முன்னர். இந்த நாவலின் கதை நிகழும் காலம் அப்போதிருந்த காலம் என்று கொண்டால் இந்த நாவலில் வரும் பெண்கள் எல்லோரும் என் மண், என் உரிமை என்ற ரீதியில் கையாளப்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. விதி மீறியவர்கள் அனுபவிக்கும் வலியும் வேதனையும் விதி மீறல்கள் கூடாதோ என்ற கட்டுப்பெட்டிதனத்தை விளைவிக்கிறது.

ஐந்து பாகங்களாக 66 அத்தியாங்களாக எழுதப்பட்ட இந்த நாவலில் முதல் பாகம் அன்னம்மாவை முன்நிறுத்தி அவள் வாழும் உலகினை சொல்கிறது. அவளுக்கும் பொன்னய்யாவுக்கும் இடையில் நுட்பமாய் ஊசலாடும் பிணக்கினைச் சுட்டி முடிகிறது முதல் பாகம். இரண்டாம் பகுதியில் நிறைய பெண்கள் வலம் வருகின்றனர். வினோதினியும், விஜயாவும் திருமணம் முடிந்து வருவது, குழந்தைகள் தினம் வளர்வது, சுப்புக்கா விரகம், குணாவிற்கும் வினோவிற்குமான சிறுவயது பரிச்சயம் பிரியம் இப்படி நகர்ந்து அன்னம்மாவின் இறப்போடு முடிகிறது. மூன்றாம் பகுதி வாணியும் வினோதினியும் ஆட்சி செய்கின்றார்கள்.  குழந்தை அனு அவள் எண்ணங்கள் ஏக்கங்கள் என்று முடிகிறது அந்த பகுதி. சிக்கல்கள் நிறைந்த நான்காம் பகுதியில் வினோவும் குணாவும் கூட்டுக் குடும்பம் ஏற்காத அந்தரங்க உறவில் கட்டுறுவதும், குணா வீட்டை விட்டு வெளியேறுவதும், வினோதினி தற்கொலைக்கு முயல்வதும் என்று முடிகிறது. ஐந்தாம் பகுதியில் பொன்னையா இறந்து போகிறார், பார்கவி அவமானப்படுகிறார். வாணிக்கு திருமணம் நடக்கிறது. கூட்டுக் குடும்பம் பிரிவினையோடு முடிகிறது. ஆகவே யாரும் யாருடனும் இல்லை என்கிறது நாவல். இறுதி அத்தியாத்தில் குடும்பச் சொத்தினைப் பிரிக்கும் கட்டத்தில் வழக்கம் போல் குழந்தைகள் வீட்டுக்கு வெளியே அதே சத்தங்களோடும் குதூகலத்தோடும் விளையாடுகின்றன என்பதிலிருந்து இதே குழந்தைகளே பின்னர் அற்றாமை, பொறாமை, குரூரம் கொண்டவர்களாக மாறி போகின்றனர் என்ற நுட்பமான உணர்வினை அழுத்தமாகச் சொல்லி முடிகிறது.

இந்த நாவல் அடடா ஆணாத்திக்கம் பார், அடக்கப்படும் பெண்களைப் பார் என்று முரசு கொட்டி முழங்கவில்லை. அமைதியாக அவரவர் நியாயங்களோடு, குணங்களோடு, முரண்களோடு இருப்பதை இருக்கும் படி அமைதியாக பதிவு செய்கிறது. ஆண் பிள்ளை இல்லை என்று கிட்டதட்ட நைந்து கிடக்கும் பெண்டாட்டியை நான்கு பிள்ளை பெற வைக்கும் செல்வதிற்கும் அவருக்கான நியாயம் இருக்கிறது. நாவல் நடைபெறும் காலக்கட்டத்தில் பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றிருக்கவில்லை. நாவலில் வரும் அரை டஜனுக்கு அதிகமான பெண்கள் எல்லோரும் குடும்ப தலைவிகளே. அவர்களுக்குச் சம்பாதித்துப் போட வேண்டியது குடும்பத் தலைவன் பொறுப்பு. அவனுக்கு, தனக்குப் பின்னர் தன் குடும்பத்தை கவனிக்க, பெண் குழந்தைகளை கரை சேர்க்க (வாணிக்கு 200பவுன் நகையும் லட்ச ரூபாய் ரொக்கமும் தரப்படுகிறது) தனக்கு ஒரு ஆண் மகவு வேண்டுமென்பது குறைந்தபட்ச எதிர்பார்ப்பாக இருப்பது தானே நியாயம். அதே நேரம் நாவல் வரும் பெண்களை மாபெரும் தெய்வீக குணம் கொண்டவர்களாக, மகா உத்தமிகளாகவும் காட்டவில்லை. முதல் அத்தியாயத்திலேயே ஓரகத்தியின் கைக்குழந்தையை மிரட்டுகிறாள், சனியனே வாயை மூடு என்று திட்டுகிறாள் அரை டஜன் குழந்தைகளை பெற்ற ராஜேஸ்வரி.

கூட்டுக்குடும்பம் என்றுமே மிகவும் கட்டுகோப்பானது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பானது. தம்பதிகள் தாறுமாறாக அடித்துக் கொண்டு மனசிக்கல்களுக்கு ஆளாகாமல் இருக்க அத்தகைய குடும்ப அமைப்பு உதவும். வயதானவர்களும், நடுத்தர வயதுக்காரர்களும், குழந்தைகளும் நிறைய ஒரு கூட்டுக்குடும்பம் இப்போதெல்லாம் காணக் கிடைப்பதில்லை. கணவனும் மனைவியுமே தனித்தனியே வாழும்நிலை தான் இப்போது இருக்கிறது. ஆனால் உமா மகேஸ்வரி காட்டும் கூட்டுக்குடும்பத்தில் சில பெண்கள் அத்தனைப் பாதுகாப்பாக இல்லை. சில பெண் குழந்தைகள் தன்னுடைய தகப்பன் தாய் அரவணைப்புக்கு மிகவும் ஏங்குகின்றார்கள். சில ஆண்கள் கேட்பாராற்று கெட்டழிந்து திரிகின்றார்கள். அதனால் சில பெண்கள் வீட்டுக்குள்ளேயோ அல்லது வீட்டுக்கு வெளியேயோ பாதிப்படைக்கின்றனர். அவர்களின் மனசிக்கல்களால் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள கூடத் தயங்குவதில்லை.

இந்த நாவல் நடக்கும் காலகட்டத்தில் முன்பே சொன்னது போல பெண்கள் பருவம் எய்திய பின்னர் படிக்க அனுப்படாமலும், பதின் வயதுகளிலேயே திருமணம் செய்து தரப்படுவதும் மிக சாதரணமான விசயம். ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் வளர்க்கப்படும் விதத்திலேயே மிகப்பெரிய வித்தியாசங்கள் இருக்கும். அதற்கான சான்றுகளாக இந்த நாவலில் பல இடங்கள் இருக்கின்றன. தீபாவளிக்கு தாத்தாவின் ஆசீர்வாதமாக பெண் குழந்தைகளுக்கு நூறு ரூபாயும் ஆண் குழந்தைகளுக்கு ஐநூறு ரூபாயும் தரப்படுகிறது. ஆண் குழந்தைகள் கல்லூரிக்கு வெளியூர்களில் அனுப்பி படிக்க வைக்கப்படுகின்றனர். சாப்பிட்டத் தட்டினைத் தானே கழுவ ஆண் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விடுமுறைக்கு வரும் போது விசேச நாட்கள் போல் விருந்து தடல்புடலாகிறது. பெண் குழந்தைகள் சமைந்ததும் தன் கனவினை எல்லாம் தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டு அடுப்படியில் புகுகின்றனர். வீட்டு வேளைகளை செய்கின்றனர்.  நாவலின் இடையில் வரும் ஒரு அத்தியாத்தில் ஆண் குழந்தைகள் நான் இன்சினியர் ஆவேன், பாலம் கட்டுவேன், பெரிய பெரிய வீடுகள் கட்டுவேன் என்று தெளிவாக சொல்லும் போது, பெண் குழந்தைகள் தான் என்ன ஆவேன் என்று சொல்ல தெளிவில்லாமல் இருப்பது போலவும் ,“நீ பத்தாங்கிளாஸ் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்குவே. நீ ஒன்பதாங் கிளாஸ் போகும் போதே கல்யாணம் பண்ணிக்குவே. கல்யாணம் கல்யாணம்” என்று ஆண் குழந்தைகள் பெண் குழந்தைகளை பார்த்து கிண்டல் செய்வதாக வரிகள் மிக நுட்பமான குழந்தைகள் வளர்ப்பில் அல்லது ஆண்/பெண் பாரபட்சத்தை குழந்தையாக இருக்கும் போதிருந்தே திணிக்கும் சமூக அரசியலை பதிவு செய்கிறது. அதே அத்தியாத்தில் உமா மகேஸ்வரியின் வரிகள் “மேகங்கள் கனவு திரள்களாக மிதக்கும். ஆனால் அந்த பெண் குழந்தைகள் மலை மிக தொலைவில் இருப்பதாக எண்ணி ஏக்கமுறுவார்கள். அத­­­­­ன் சிகரத்தை தாம் ஒரு போதும் நெருங்க முடியாது என்று தாழ்வுணர்ச்சிக் கொள்வார்கள்”.

பெண்களின் நுண்ணுர்வுகளை நாவலின் பல இடங்களில் பதிவு செய்கிறார் உமா மகேஸ்வரி. அன்னம்மா வளர்ந்த பிள்ளைகள் உடன் இருக்கும் போது தன்னுடைய கணவன் தீராத மோகத்தோடு அணுக்கும் போது அதற்கு கூசிப்போபவள், இருந்தாலும் தன் உடல் மீது கணவனுக்கு இருக்கும் வேட்கை குறிந்து பெருமிதம் கொள்வதாக நாவலாசிரியர் பதிவு செய்கிறார். 50 வயதுக்கு மேலான பெண் தன் உடல் மீது ஒரு அவநம்பிக்கை வருவதையே இயற்கையாக பதிவு செய்யப்படுகிறது. சமீபத்தில் வாசித்த உமா மகேஸ்வரியின்கவிதை (முதல் நரையை விரலில் பிடித்தவள் /

கண்ணாடிக்குள் யோசித்தாள்) அப்படி ஒரு கழிவிரக்கதையே பதிவு செய்கிறது. “இன்று இரவு விருந்தாக என்னை யாரும் ஏற்க போவதில்லை” என்ற கமலா தாஸ் கவிதையும் அப்படித் தான். அன்னம்மா­­­­ பொன்னைய்யாவின் பார்கவியிடம் போய்விட்டு தாமதமாக வரும் போது அது எதுவும் தெரியதவளாக மௌனமாக புன்னகை செய்து பொன்னையாவை வதைக்கிறாள். குரூரமாய் சண்டையிடவதிலும் மௌனப் புன்னகை இன்னும் குற்ற உணர்வினை கூட்டத்தானே செய்யும்?

சுப்பு தன் உடல் குறையை மறைக்க சக்திக்கு மீறிய வேலைகளைச் செய்கிறாள். அப்படி எல்லா காரியங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதால் தன் இயலாமையை மறக்கிறாள். அவள் குனிந்த தலை நிமிராமல் பாதங்களை மட்டுமே பார்த்து வாழ்கிறாள். பாதங்களில் அவரவர் முகங்களை காண்கிறாள். பகலெல்லாம் விதவிதமாய் வேலையும், குழந்தைகளுக்கு கதை சொல்லவும் செய்பவள் இரவை கொதிநீர் கலனாகக் கண்டு பயப்படுகிறாள். இடைக்கு மேல செழித்து ததும்பும் இளமை கால்களில் மரித்து கிடப்பதாக உணர்கிறாள். குற்றமெல்லாம் தன்னுடையது என்று புலம்பும் சூம்பி போன கால்களை தடவி தடவி இரவெல்லாம் உறங்காமல் புரண்டு புரண்டு பரிதவிக்கிறாள். நாவல் சுப்புவை “துயரத்தின் நிறம் கொண்டலைகிறாள்” என்று வர்ணிக்கிறது. இத்தனை பாதுகாப்பான கூட்டு குடும்பத்தில் வேலையாள் ஒருவனால் வன்புணரப்படுகிறாள்.

வாணி வீட்டிலிருக்கும் பெண் குழந்தைகளில் மூத்தவளாக, எல்லாம் விசயங்களும் தெரிந்த பெண்ணாக குழந்தைகள் மத்தியில் மதிக்கப்பட்டு, கூச்சலும் கும்மாளமுமாக பள்ளிக்குச் சென்றும், ஆலமர நிழலில் சில்லாங்கல் விளையாடியும், கொடிக்காய் மரத்தில் கயிற்றூஞ்சலில் ஆடியும், பள்ளியில் சிறந்த விளையாட்டு வீராங்கனையாகவும் இருந்தவள் திடீரென வீட்டிற்கு வெளியே செல்ல அனுமதி மறுக்கப்படுகிறாள். பெரியவர்கள் எப்போது ஆவாளோ, அது எப்போது வருமோ என்பதை கேட்பவளுக்கு “நான் என்ன ஆகப்போகிறேன், எனக்கு என்ன வரப்போகிறது, அது எப்படி இருக்கும்” என்ற மர்ம கேள்விகளுக்குப் பதில் தெரியாது தவிக்கிறாள்; பயங்கொள்கிறாள். “அம்மாவிடம் காணும் அன்னியத்தன்மையும், கவலை முகமும் அவளை கலவரப்படுத்துகிறது”. இது ஒவ்வொரு பெண்ணும் உணரும் மிக நுட்பமான உணர்வு. அம்பையின் “அம்மா ஒரு கொலை செய்தாள்” என்ற கதையில் வருவதை வாணி பெரியவள் ஆனாதும் “அம்மா நீ ஏன் என்னிடம் வரவில்லை, வலிக்கிது, பயமா இருக்கு” என்று உணரும் உணர்வுகளிலிருந்தும், ராஜேஸ்வரியின் “இவளை எப்படி கரை சேர்க்க போறேன்” என்ற வார்த்தைகளிலிருந்தும் மீள் உணரலாம். அந்த ஒட்டு மொத்த அத்தியாயமும் உணர்ச்சிபூர்வமானது, மிகையற்றது. வாணி அதன் பின்னர் நீலநிற வெல்வெட் பதித்த நகைப்பெட்டியில் பத்திரமாக வைக்கப்படும் வைர நகை போல வீட்டிக்குள் தங்க கொலுசு மாட்டி சிறை வைக்கப்படுகிறாள்.  பெண்களுக்கு நகைகளையும் விலையுயர்ந்த பட்டுப்புடவைகளைக் கொடுத்து வீட்டிலுள்ளேயே அவர்களை அடைத்து வைக்கத்தானோ அல்லது every advantage have its own disadvantage என்பது போல அவர்கள் வெளியுலகில் சுதந்திரமாய்த் திரிந்து சிரகங்களை எட்ட முடியாது என்ற புரிந்துணர்வுக்கு அளிக்கப்படும் பரிசுகளோ என்ற சமூக அரசியலை ஆலமர வேர்போல பதிவு செய்கிறது இந்த நாவல். வாணி அதன் பின்னர் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டின் வேலைகளை கற்கிறாள், கனவுகள் காண்கிறாள், திருமணம் தடைபடும் போது மகிழ்கிறாள். பின்னர் “எனக்கு ஏன் அதற்குள் திருமணம்?” என்று அழுத கண்ணோடு திருமணமாகி செல்கிறாள். வாணி பிற பெண் குழந்தைகளோடு பெண்ணின் உடல் ரகசியங்களை அறிய முற்படும் சில காட்சிகள் மட்டும் கொஞ்சம் மிகையாக தெரிகின்றன.

வினோதினி மிக முக்கியமான கதாபத்திரமாக நான் உணர்கிறேன். மனதில் எந்த மாசுமின்றி கண்கள் கலங்க அறியா சிறுமியாக புகுந்த வீட்டில் வெள்ளி குத்து விளக்கோடு நுழைகிறாள். குடிகார கணவன் கொஞ்சமும் ஏறிட்டுப் பார்க்காமல் போனதால் மனமுடைகிறாள்.. கூட்டுக் குடும்பாமானதால் “இறுக்கி திருகி அடைக்க விடாது சொட்டும் குழாயின் ஒழுகலாக அடுத்த அறையின் அசைவுகள் தன் அறைக்கு ஊர்ந்து வருவது” என்பதன் நுட்பம் உணர்த்தும் தளங்கள் மிகப் பெரியது. தன் கணவன் கையாலாகாதவன் என்று பிற ஆண்கள் தன் வனப்பைக் கவனிக்கும் போது கழிவிரக்கம் கொள்கிறாள். மனச்சிதைவுற்றவள் போலக் காட்சி தருகிறாள். உடல் தன்னை வென்ற பின் பிற ஆணோடு உறவுகொள்ள சமிக்கை தந்துவிட்டு மனம் குமைகிறாள். கணவனில்லாத அறையிலிருந்து கணவனின் சுவடுகளை எப்படி அழிப்பது என்று தடுமாறுகிறாள். தான் தெய்வீகத்தன்மைக்கொண்டவள் அல்ல. காம வெறி கொண்டவள் என்று எண்ணி தன்னைத்தானே வதைத்துக் கொள்கிறாள். குணாவை இரவு வரச்சொன்னவள் “இந்தத் தாழ்ப்பாளை அகற்ற முடியாது. இவை இறுகி இறுகி ஆண்டாண்டு காலமாக துருவேறியது” என்று தன் உள் மன உணர்வுகளோடு போராடுகிறாள். குணாவால் கருவுற்ற வினோ அதனை கலைக்க எடுக்கும் முயற்சிகள் பெண்ணுக்கு மட்டும் ஏற்படும் உட்சபட்ச வலி. முறையற்று உருவான கருவினைச் சுமக்க வலுவில்லாமல் அவள் படும் வேதனையும் அதனை கலைக்கும் முறைகளைப் படிக்கும் போதே பதற வைக்கிறது. “தானே பார்த்திராத தனது உடல், அதன் அந்தரங்கள் வெளியாகி இத்தனை பேருக்கும் காட்சிப் பொருளாகிவிட்டது”. இதை விட வேதனை தரும் சொற்றொடரை நான் சமீபகாலத்தில் கடக்கவில்லை. ஏன் இத்தனை வன்முறை பெண்களின் மீது மட்டும். அதற்கு பாதிக்கப்படும் பெண்ணே உடந்தையாகவும், முக்கிய காரணியாகவும் இருக்கிறாள் என்பதும் மேலும் வேதனைக்குரியது. வாணிக்கும் வினோதினிக்குமான உறவு நாவலின் மற்றுமொரு முக்கியமான நுட்ப உணர்வு. பெண் குழந்தைகள் தனது உடல் ரகசியங்களை ஒரு கட்டத்திற்கு மேல் அறிந்துக் கொள்ள நினைப்பார்கள். அந்த விதத்தில் வினோதினி தன்னுடைய பிரதியாக வாணியை நினைக்கிறாள். வாணிக்கு தன்னாலான எல்லா வழிகாட்டல்களையும் செய்கிறாள்.

குழந்தை அனு ஒடுக்கப்பட்ட பெண் குழந்தைகளின் ஒட்டு மொத்த சித்திரமாக வருகிறாள். அவள் எல்லோராலும் பாதுகாக்கப்படுகிறாள். அத்தனைப் பத்திரமாக அவளை வைத்துக்கொள்ள அவள் மேலுள்ள அதீத அக்கரை காரணமாகிறது. அவள் நோஞ்சான் குழந்தையாக இருக்கிறாள். தன் இயலாமையை உணர்ந்திருக்கிறாள். சிறு வயதில் தாத்தாவின் “கோட்” அவளுக்கு மட்டும் பூதம் போல் தெரிகிறது. சித்தியால் அத்தனை எளிதாக பயம் கொள்ள செய்யப்படுகிறாள். எல்லோருக்கும் இடைப்பட்டவளாக எல்லோர் முதுகுகளையும் தாண்டி பார்க்க அவளுக்கு எப்போதும் வானம் எட்டுவதே இல்லை. தன் சொந்த கற்பனைக்குள் திளைக்கிறாள். அவள் தன்னுடைய அப்பாவிற்கு மூத்தப் பெண்ணாக இருப்பதால் வெறுக்கப்படுகிறாள். தன்னுடைய அப்பாவின் விரல் பற்றலுக்கு ஏங்குகிறாள். குணா சித்தப்பாவால் மிகவும் ஈர்க்கப்படுகிறாள். அவன் கொடுத்த தபால் பெட்டியில் கடவுளுக்கு கடிதம் எழுதி பதில் கடிதம் பெறும் பேதையாக இருக்கிறாள். வினோ சித்தியின் வித்தியாசமான நடவடிக்கைகளின் புதிர்த்தன்மையை, வாணி பெரியவளானதும் அவளுடைய புதிய மாறுதல்களை குழந்தையின் போக்கிலேயே நோக்குகிறாள்.

கதவுகள் இந்த நாவலில் பல இடங்களில் குறீயீடாக வந்து போகிறது. குணாவை தன்னறைக்கு இரவு வர சொல்லிவிட்டு அவன் வரும் நேரம் பிடிவாதமாக திறக்க மறுக்கின்றன கதவுகள். மீண்டும் குணாவின் பார்வையில் “தொட்டதும் திறந்தது கதவு” என்று வருகிறது. பின்னர் வினோ தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளில் “கதவுகள், கதவுகள், கதவுகள், தாண்டத் தாண்ட நீண்டு கொண்டே போகின்றன‌கதவுகளின் தொடர் வரிசை” என்று வருகிறது.

உமா மகேஸ்வரி இந்த நாவலில் வரும் எந்த ஆணையும் குற்றம் சாட்டவில்லை. பொன்னையா பார்கவியோடு தான் நேரம் கழிக்கும் போதும் அன்னம்மாவின் மென்மையையே தேடுகிறார். தன்னை ஒரு வார்த்தையாவது திட்டி விட மாட்டாளா என்று குற்ற உணர்வில் தவிக்கிறார். “வினோதினியின் அச்சுறுத்தும் வனப்பை எதிர்கொள்ள அஞ்சுபவனாக ஓடிவந்து மதுக்கோப்பைக்குள் தன்னைக் குப்புற கவிழ்த்துக் கொள்வான்” என்று கோபாலின் குடிக்கும் அவனுடைய இயலாமையும் காரணம். இதுவும் ஒருவித குற்ற உணர்வே. குணா வினோதினி சிறு தேம்பல்களோடு அவன் மடி சாயும் போது அவளின் குழந்தைமையை தூய்மையை உணர்கிறான். ஒரு சிறு முத்தத்தில் அவளை கிளர்த்தி எழுப்புகிறான். தன்னுடைய தனிமையை போக்க அவளை உபயோகப்படுத்தி கொள்கிறோமோ என்றும் தவிக்கிறான். இப்படியாக முரண் குணங்களை கொண்டது தான் நாவலாசிரியர் சித்தரிக்கும் ஆண் உலகம் மிகவும் இயல்பான மிகையற்ற பதிவு. ஆம் ஆண்கள் தன் மனைவியரை நேரடியாகவோ மறைமுகமாகவோ கொடுமைப்படுத்தும் பதிவுகள் இருக்கின்றன. பணம்கேட்டு அடித்து துன்புறுத்தும் பூரணியின் காதல் கணவன், சமையலில் குறை சொல்லியே தன் மனைவியையும் வீட்டின் பிற பெண்களையும் மிரளச் செய்யும் தர்மராஜ் மற்றும் ஆண் குழந்தைப் பெற்றுத் தரவில்லை என்று மனைவியையும் பிள்ளைகளையும் புறக்கணிக்கும், எப்போதும் சிடுசிடுக்கும் செல்வம் இவர்களும் இருக்கின்றனர்.

உமா மகேஸ்வரி கவிஞர் என்பதை நாவலின் இடையிடையே வரும் கவித்துவமான வரிகள் பறைசாற்றுகின்றன. அவர் “கருஞ்சுடர் போல் இருட்டில் பளபளத்த தூண்கள்”என்றும், “இலைகள் துளியும் அசையாத மரங்களின் காலடியிலிருந்து பெருகி இறுகிய புழுக்கம்” என்றும், “பீதி தரும் கனவொன்றின் நிழல் போல இருக்கிறது இந்த வாழ்வு”என்றும், “கிணறு தன் மர்மங்களை குழந்தைகளோடு பகிர காத்திருக்கிறது. “நிறை மாத கர்ப்பிணி போல ஒருகளித்து படுத்த மலைத்தொடர்” என்றும் எழுதி இருப்பது ஒரு சிலசான்றுகள். சில காட்சிகளைக் கண் முன்பே கணவொளி போல் விரியச் செய்யும் வரிகளும் நாவலிடையிடையே இருக்கின்றன.“விழா முடிந்த மண்டப வாசலில் வாடிச் சரியும் வாழைக்கன்று” என்றும், “அந்த பெரிய சத்தத்தில் திடுக்கிட்டு அனு டப்பாவைத் தரையில் சிதறவிட்டு” என்றும், “கண்ணாடி மேசையருகே கவிழ்ந்த நீர்க்குடம் போல அவள் வீழ்ந்து சிந்தலானள்” என்றும் “குட்டிப் பாதங்கள் கட்டங்களுக்கு மேலாக தாண்டித் தாண்டி நொண்டுவது தவிட்டு குருவிகள் தத்துவது போலத் தோன்றும்” என்றும் பதிவாகி இருக்கிறது.

நாவலின் முக்கியமான குறை என்று சொன்னால் சில முரண்களை சொல்லலாம். கூட்டுக் குடும்பத்தில் அதுவும் என் மர பீரோவின் தண்ணீர் படாமல் கழுவு என்று சொன்னதற்கே சண்டைக்கு வருகிறாள் விஜயா. வினோவுக்கும் குணாவுக்கும் இருக்கும் தொடர்பு வீட்டில் தெரிந்த பின், மறுநாள் எதுவும் நடக்கவில்லை என்பது போல அவரவர் பாட்டு அவரவர் வேலைகளை செய்கின்றனர். வினோ எனக்கு வயிறு சரியில்லை மோர் மட்டும் போதும் என்று சகஜமாக நுழைகிறாள். பின்னர் வரும் சில அத்தியாயங்களிலும் சகஜமாய் வீட்டுவேலைகளை பார்க்கிறாள். இறுதி பகுதியில் ஒரு அத்தியாத்தில் மட்டும் தன்னை வீடு புறக்கணிக்கிறதோ என்று மன சிதைவுறுவது போல வருகிறது. அதே போல வினோவின் கணவன் போயிட்டானா என்பதற்கு கான்ஸ்டபிள் மேலும் கீழுமாக‌தலையாட்டுகிறார். ஆனால் வினோதினி எங்களுக்கும் கடையில் பங்கு வேண்டும் என்கிறாள் பின்வரும் அத்தியாத்தில். வினோ, கோபாலுக்கு குழந்தையில்லை.

நாவலின் மற்றொறு குறையாக கூறியது கூறல் பற்றி சொல்லலாம். சுப்புவின் விரகத்தை அவள் இரவு வர வர பயம் கொள்வதை ஒன்றுக்கு மேற்பட்ட அத்தியாத்தில் சொல்லி இருப்பதும், வினோ குணா உறவினை மிக எளிமையாக “என் தோசையை ஒரு திருட்டு பூனை தின்னுட்டு போயிடுச்சி” என்று கச்சிதமாக சொல்லி விட்டுப் பின்னரும் பல அத்தியாங்களில் முரண் உணர்வுகளை மீண்டும் மீண்டும் பதிவு செய்கிறார் நாவலாசிரியர். சில அத்தியாயங்கள் எழுதி முடிக்கப் பட்டபின் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றதோ என்று தோன்றுகிறது. சில அத்தியாயம் சிலரைப் பற்றி சொல்வதற்கென்றே எழுதப்பட்டது போல இருக்கிறது. பார்கவியை கோவிலில் வாணியும் அனுவும் பார்க்கும் அத்தியாயம் அதற்கு உதாரணம். பார்கவிக்காக பின்னர் எழுதி சேர்க்கப்பட்டிருக்கலாம். அந்த அத்தியாயம் வாணி பெரியவள் ஆகும் முன்பேயே வரும் அத்தியாயம். வாணி எலுமிச்சைவிளக்கு போடுவது போல வருவதால் இந்த முரணை இங்கே பதிவு செய்யலாம் என்று தோன்றியது.

இதில் பதிவாகி இருக்கும் மரங்கள் (நெட்டிலிங்கம் மரம் பற்றி நாவலில் நிறைய இடங்களில் வருகிறது), பூக்கள், குழந்தைகள் விளையாடும் (சில்லாங்கல் ஆடுதல், பூப்பறிக்கவரிங்களா, எண்ணெய் தடவி தோசை சுடும் விளையாட்டு, கடவுளுக்கு கடிதம் எழுதுவது, ஏழுகல் விளையாட்டு) என்று இன்னும் எழுதிக் கொண்டு போக ஏரளமான விசயங்கள் இந்த நாவலின் இருக்கின்றன. பெண்களின் அக உலகைச் சித்தரிக்கும் மிகச் சிறந்தொரு நாவலாக இந்த நாவலை நான் வகைப்படுத்துவேன். இது பெண்ணியம் பேசுகிறது. ஆனால் மிகவும் பக்குவப்பட்ட குரலில் பேசுகிறது. அந்த விதத்தில் இந்த நாவலையும், நாவலாசிரியர் உமா மகேஸ்வரியையும் பாராட்டியே தீர‌ வேண்டும். இந்த நாவல் மீண்டும் பதிப்பிக்கபட்டு பெரும் வாசிப்புக்குளாக வேண்டும்.