யாருமில்லாதவர்கள்

யாருமில்லாதவர்கள்

சிறுகதை:- இளஞ்சேரல்

மழை பெய்து வடிந்திருந்த நிலம் அது. தண்ணீர் புகுந்திருந்த இன்ஜின்களை அவரவர்கள் இயக்கி ஓட விட்டு இறைச்சலாக்குகிறார்கள்..

பெரிய குண்டுங்குழியுமாக இருப்பதே பேருந்து நிலையங்களின் முகப்புச் சாலைகளின் அழகு. எப்படியும் மக்கள் தண்ணீரை வீணடித்து சகதி இருக்கும். அந்த ஜீப் ஆடி ஏறி இறங்கி வரவும் காவலுக்கு இருந்த மற்ற காவலர்கள் விறைப்பானார்கள். அது ஆளில்லாமல் ஓடும் வண்டி. அதனாலேயே அந்த வண்டியின் மீது மக்களுக்கு பீதி அதிகம். அதன் டயர்கள் அதன் கௌரவப்படியே குழிகளில் இருக்கிற தண்ணீரை அழுத்தித் தூவுகிறது. வேண்டாத பொருட்களைக் குப்பை மேடாக்கித் தீவைத்திருக்க அதனுள் வண்டி நுழைந்து வந்து நிற்கிறது.

வழக்கமாக மாதாந்திரத் தொகைச் செலுத்துகிற கைவண்டிக்காரர்கள், தினக்கூலி யாவாரிகள், தற்காலிகமாக துணிமணி கர்சீப் விற்கிறவர்கள் உள்பட அது பேசப்போகும் உத்தரவுகளுக்காக காத்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் வாடகை வண்டிக்காரர்கள் ஆச்சர்யம் மற்றும் கலவரப் பீதியுடன் கவனிக்கிறார்கள். உள்ளிருந்து குரல் வருகிறது. குரலுக்கே மக்கள் நடுங்குகிறார்கள்.

“எல்லாருக்கும் எச்சரிக்கை..சமீபகாலமா இந்தப் பகுதிக்கு புதுசு புதுசா ஆளுங்க வராங்க.. அவங்களப்பத்தின தகவல்களை நீங்க சரியா கொடுத்துட்டு இருக்கணும்.. உங்களாளதான் சரியாச் சொல்ல முடியும்.. நீங்கதான் பலதரப்பட்ட சனங்களைப் பார்க்கறவங்க சந்திக்கிறவங்க.. நாட்ல சட்டம் ஒழுங்கு விசயத்துக்கு எப்பவும் துறையோட ஒத்துழைக்கணும்.. சரிதான.. இல்லனா உங்களையும் விசாரிக்க வேண்டியிருக்கும்..“

“எப்பவும் உங்களுக்கு உதவின்னே கேட்கறீங்க.. ஆனா எங்களுடைய கோரிக்கைகளை நீங்க கேட்கறதேயில்லை.. எசமான்..” ஆட்டோ ஒட்டுநர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். மற்றவர்கள் ஆமாங்க ஐயா என்றார்கள் குழுக்குரல்களுடன்.

“என்ன உங்க கோரிக்கை..” பரவாயில்லையே.. ஆளில்லாத ஜீப் வண்டி பேசுகிறது.. புதிதாக வேடிக்கை பார்க்கிறவர்கள் கண்கள் அகல உள்ளுக்குள் எட்டி எட்டிப் பார்க்கிறார்கள்..

புதிய கால்டாக்சிகள் மற்ற வெளியுர் வண்டிகள் எல்லாம் எங்கள் ஸ்டேண்ட் இருக்கற எடத்தில வந்து சவாரி ஏத்திக்கறாங்க எங்க வருமானம் பாதிக்கப்படுது.. இத தடுக்கணும்னு கேட்கறம் ஆனா இதுவரைக்கும் ஒரு ஸ்டெப் கூட எடுக்கலை…” வேறொருவர்.

“இதுமாதிரி பிரச்சனைகள்ல நாங்க ஏதாவது செய்தா நீங்க எல்லா டைப் டிரைவர்ஸ்சும் சேர்ந்துகிட்டு  ஸ்டிரைக் பண்றீங்க.. அதனால உங்களுக்குள்ள.. நீங்களே பேசிக்கங்க..”

“அது முடியாது.. ஐயா அவங்க பெரிய பெரிய இடத்தச் சேர்ந்தவங்க.. அவங்க தைரியமா எங்களுடைய வாடகை வருமானம் வர வழியக் கெடுக்கறாங்க.. நீங்க அந்த வண்டிக வர்றதைத் தடுக்கணும்..”

“அது முடியாது..நீங்க சட்டம் ஒழுங்குப் பிரச்சனை பண்ணாம பேசணும்..“  அந்த ஜீப் புறப்படத்தயாரானது. ஆளில்லாத வண்டி சரியாக முன்னேறிச் செல்கிறது. வேடிக்கை பார்த்த சிறார்கள் ஹாஹாஹாஹா என்று குதூகலித்தார்கள்.. ஒரு புறம் ஆச்சர்யமும் மறுபுறம் எரிச்சலுடன் ஒட்டுநர்கள் கடைக்காரர்கள் தங்கள் சிற்றுண்டிகள் தயாரிக்கப் போகிறார்கள். தங்களுக்குள் ஆக்ரோசத்துடன் குமைந்து கொள்கிறார்கள். யாரோ ஒரு பெண் அந்த சாக்கடைக்கு அருகில் இறுதிநிலைக்கு வந்திருந்த நெருப்புக்குழிக்கு குடத்தில் தண்ணீர் ஊற்ற புகை குபு குபுவெனக் கிளம்புகிறது.

ஜன நெருக்கடியிலிருந்து விடுபடத் தோன்றுகிறது. எட்டு மணி நேரத் தொடர் பயணத்தின் இடை ஓய்விற்குப் பிறகு மூன்று மணிநேரமாக கொதித்து வந்த என்ஜினை நிறுத்தினார் ஓட்டுநர். பயணக்களைப்பும் புதிய ஊரை, தன்னுடைய ஊரைக் கண்ட மக்கள் ஆச்சர்யமும் உற்சாகமும் கண்டனர். வெளியில் வெயில் கருக்கினாலும் நிலையத்திற்குள்ளாக கவிந்திருந்த இருட்டும் இறைச்சலும் பயணிகளை விரைவாக இறங்கப் பணிக்கிறது. நிலையத்தின் பின்னாலிருந்த மரங்களின் கிளைகள் தங்கள் மூதாதையர்கள் அறுபட்ட நிலத்திற்குள்ளாக நீட்டியபடியே பேருந்துகளையும் மக்களையும் பார்க்கிறது.

சிமெண்ட் தூண்களிடையே கூடுகள் கட்டி குடும்பத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிற பறவைகளிடம் குஞ்சுகளிடம் ஊர்க்கதைகளைப் பேசுகிறது கிளுவைப் பூக்கள். செவ்வகமாகப் பிரிக்கப்பட்டிருக்கிற தனித்தனி ஊர்களுக்கான பேருந்துகளிடம் ஊர்க்காரர்கள் தேர்க்கால்களுக்கருகில் பஞ்சு மிட்டாய் சாப்பிடுவதைப் போல “வண்டி எப்ப எடுப்பீக..” என்று தொண்ணாந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆம்புலன்ஸ் சைரன்கள் ஒலிக்கவும் நிலையம் சுறுசுறுப்பாகி இயல்பாக ஓரம் கட்டத்துவங்குகிறார்கள் மக்கள். நோயாளிகளின் நாட்டில் அதுதானே ஒலிக்கும். அவள் தன் துணிப்பைகள் உள்பட பொருட்களைத் தூக்கிக் கொண்டு இறங்கினாள். டிரைவர் சீட் அருகிலிருந்து காற்றாடி தயவில் கேசம் கலைந்து அவளுக்கு மகிழ்வு தருகிறது. ஏற்கனவே முண்டியடித்து ஏறிய இளைஞன் அவளை அப்படியொரு இச்சையுடன் கவனித்தான். இட நெருக்கடியில் இறங்க வழிவிடாமலும் கீழே இறங்குபவர்கள் தன்னைத் தள்ளுவதிலும் அவனுடன் உரசித் தள்ளவேண்டிய நிலை.. அவள் சாரி எனச் சொல்லவும் அவன் தேங்க்ஸ் என்றான்.

பெருநகரத்தின் ஒரத்தில் துண்டிக்கப்பட்ட ஒரு நகரம் அது. இடையில் பெரிய குளம் பேருந்து நிலையமாகியதின் மிச்சமாக குளத்தின் வீச்சம். குளம் போலிருக்கிற மற்ற சேற்றுப் பகுதியில் சில அழுக்கு வாத்துகள்  க..க…தத்துகிறது. செல்போன் சார்ஜர் போய் இருக்க.. தன்னை வரவேற்க வருகிறவர்கள் எப்படித் தன் வருகையைக் கண்டு வந்து சேர்வார்கள். இருந்தாலும் ஒரு நம்பிக்கை எதாவது உதவி கிட்டலாம் இல்லையெனில் நாமே ஆட்டோவை அமர்த்திக் கொண்டு போகலாம்.

சரவெடிப்பட்டாசுகளின் சத்தம். டிராபிக் ஜாம். தாரைதப்பட்டை பறையிசையும் சலங்கைகளின் சத்தமும் அதிகமாகிறது. இடையிடையே சைரன் ஒலிகள். நிலையத்தின் முன் உள்ள நாலாபுற திசையிலும் பெரிய நீளமான கார்கள் உள்ளே போகமுடியாமலும் வெளியே போக முடியாமலும் இருக்க கிடைத்த சந்துகளில் பொந்துகளில் இரு சக்கரவாகன வாசிகள் நுழைக்கவும் பெரிய வண்டிக்கார ஓட்டுநர்கள் அவர்களை நாராசமாகத்திட்ட பெண்களும் மங்கைகளும் தலையைக்குனிந்து கொள்கிறார்கள். விலக்க வந்த காவலர்கள் இளைஞர்களைத் திட்டியபடியே விலக்குகிறார்கள். பேருந்துகள் உறுமியபடியே வெளியே வந்தவைகள் உள்ளேயே நின்று கொள்கின்றன. குழந்தைகள் காற்று இல்லாமல் அழுகிறது.

பட்டாசுகள் அவ்வெப்போது வெடித்துக் கொண்டேயிருந்தன. சிறுவர்கள் சிறுமிகள் குழந்தைகள் அடிக்கு ஆடும் குடிகாரர்கள் நடனம் பார்த்துச் சிரிக்கிறது. அவளும் உள்ளுக்குள் சிரித்தாள். ஸ்டேண்டிலிருந்து கிளம்பிய ஆட்டோ ஏதோ எல்லாவற்றையும் விரட்டிக் கொண்டு போய்விடுவது போல முயற்சி எடுக்கிறது. அவன் ரஜினி போல சிகை வைத்திருந்தான். ஆட்டோ முழுக்கவும் ஸ்டில்கள்..

“ம்ம்மா ஆட்மோ ஒணுமா..“

அவள் அவசரமாக இல்லைங்க.. வருவாங்க.. என்றாள்..

“எங்க போணும்..ஜங்க்ஷனா..“

“இல்ல வேணா..“ என்று திரும்பிப் போய் உள்ளே காத்திருப்பு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு தலையைத்திருப்பிக் கொண்டாள். வானத்தில் ராக்கெட்டுகளும் வானவெடிகளும் ஏவப்படுகிறது. நாம் வந்த நேரம் என்ன எழவோ.. ச்சை.. திரும்பவும் செல்போனை எடுத்துக் கொண்டு சார்ஜருக்கு அலைமோதினாள். பசியும் சேர்ந்து கொள்கிறது. எதிரில் வாணலியில் கொத்து கிழங்கு போண்டாக்களை அள்ளி எண்ணை உதிர்க்கிறான். தடுப்புக்கு அப்பாலிருந்து வருகிற இறைச்சி நாற்றம் அவளை ஐயோ ஒன்றையும் வாயில் போடாதே என எச்சரிக்கிறது.

அதே நேரம் தன் தோழியும் அவள் அவன் சகோதரனும் அடுத்த பிளாட்பாரத்தில் பெட்டி பெட்டியாகத் தேடிக்கொண்டு இவளைக் காணாதபடியால் அவர்கள் பின்புறவழியாக வெளியேறுவதைக் காணமுடிகிறது. பதட்டத்துடன் மூட்டைகளைத் தூக்கிக் கொண்டு ஓடத்துவங்கினாள். இவள் ஓடுவதைப்பார்த்த நிலையத்தின் நாய்கள் சில பின்னால் ஒடிவருகிறது. ஏறக்குறைய பந்தய ஓட்டம்.. அவமானம்..

அதற்குள் அவர்களின் வண்டி போய்விடுகிறது.  நிலையத்தின் பின்பகுதி. குறுகலான சாலை.. பின்னால் ஒரு வழியில் டிராபிக் ஜாமான இடத்திலிருந்து இருசக்கரவாகனங்கள் வெளியேறிப் போகிற இடமாக அது இருக்கிறது. பெரிய சாக்கடைகளிலிருந்து வீச்சமும் வெடித்த பட்டாசுப்புகையும் எழுகிறது. சில உதிரிப்பட்டாசுகள் வெடிக்கின்றன. மேலும் சிலர் பட்டாசு சரங்களைப் பற்றவைக்கத் தயாராகி வர அவள் தன்னை நொந்து கொண்டாள்.

அவர்கள் தனக்காகத் தான் வந்தார்களா அல்லது எதெச்சையாக வந்தார்களாவெனத் தெரியவில்லை. அங்குமிங்கும் ஓடியதில் தளர்வான உடலை ஏமாற்றத்தை மற்ற பயணிகள் ரசித்தார்கள். தூணிலிருந்த புறாக்கள் சில உர் என்று அங்கலாய்க்கின்றன. அங்கிருந்த டிரைவர்கள் ஓட்டுநர்கள் எங்கம்மா போணும்..

“இல்ல இங்கதான்ங்க..“

“இங்கதான்ற..அப்பால இருந்து எந்த டுவீலரைப் பார்த்தாலும் பக்கத்தாடிக்கு ஓடிட்டே இருக்கற.. என்ன ஓணும்னு சொல்லே“

நொந்து போய் அங்கே சரிந்து அமர்ந்தாள். சமயத்தில் அந்த தோழியும் அவள் சகோதரனும் வண்டியில் எதிரில் அருகில் வந்து நிற்கிறார்கள். ஹேய்ய்..என்றபடியே தோழி அவளைக்கட்டிக் கொள்ள.. அவள் பொய்யாய்த் தட்டினாள். அவன் விளையாட்டாய்

“பயந்துட்டிங்களா.. ஏங்க என்ன செல்ல எடுக்கமாட்டிங்களா..“  அவள் பொய்க்கோபத்துடன் அடிக்கப் போனாள். அதே நேரம்…

“யோவ் படிச்சவன்தான நீயி… தடத்த உட்டு நில்றா..“ பஸ் டிரைவர் பின்னால் எடுக்கிறார்..

இவர்கள் அங்கு நகர இங்கு நகரவும் பேருந்துகள் புறப்பட உறுமிக் கொண்டிருக்க மறுபடியும் வசவுகள் இவர்கள் மீது விழுகிறது. இரண்டு வேவேறு பகுதி ஆட்டோக்காரர்கள் போல சவாரி ஏற்றுவதில் ஏதோ பிரச்சனை. கால்டாக்சி பிரச்சனையாம். சரிமாரியாகத் தாக்கிக் கொண்டு பெருங்கூட்டம் நிலையத்திற்குள் நுழைகிறார்கள். வெள்ளைச் சீருடை அணிந்த ஒரிருவரைத் தாக்குகிறார்கள். பெண்களும் குழந்தைகளும் அலறியபடியே பேருந்து வளாக கடைகள் உள்பட பிளாட்பார்ம்களில் ஏறித் தங்களைப் பாதுகாக்கிறார்கள்.

குண்டர்கள் கலகக்காரர்கள் தாறுமாறாக மோதியதில் தள்ளியதில் அவர்கள் மூவரும் தரையில் கூட்டத்தில் விழுந்து புரண்டார்கள். மிதிபட்டார்கள். முனகல்கள். இவர்கள் கூட்டத்தில் சிக்கிச் சின்னப்படுவதைப் பார்த்து பிளாட்பார்மிலிருக்கிற சனங்கள் ஐயோ யோ…ஓஓ..வென கூக்குரலிடுகிறார்கள்

வானத்தில் பட்டாசுகள் வெடித்துச் சிதறவும் அடுத்தபடியாக பாண்ட் வாசித்தபடியே இசைக்கலைஞர்கள் கூட்டம் முன்பாகவும் அடுத்தபடியாக வேறொரு கூட்டமும் நகரத்துவங்குகிறது.

குழந்தைகளின் கூச்சலும் கூட்டத்தைச் சரிசெய்ய வந்த காவலர்களின் கூட்டமும் நிலையத்தின முன்பாக வந்து நிறுத்தப்பட்டு வியாபாரங்களில் ஈடுபட்டவர்களை ஒதுங்கச் சொல்லி நகர்த்துகிறவர்களின் ஆபாசமான வார்த்தைகளும்  பெண்களின் சாபங்களும் ஒலிக்கத்துவங்கியது. மூன்று பேரும் ஏறக்குறைய பலரால் மிதிக்கப்பட்டிருந்தார்கள். இவனால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இருவரும் பட்ட அவமானத்தில் அழுதார்கள். அவன் தேற்றமுனைந்து தன் கையாலாகத் தனத்தை நினைத்து புழுங்கினான். சில டிரைவர்கள் நடத்துநர்கள் சமாதானம் சொன்னார்கள்.. ஏறக்குறைய அவள் பலரால் சிதைக்கப்பட்டிருந்தாள்.

“என்ன மனுசன்களா.. தறுதலைங்க.. போம்மா.. ஒரி பண்ணாத.. சீக்கரம்போ.. ஏம்பா தம்பி.. எதுக்கும் ஆசுத்திரி கூட்ணு பொம்பா… சீக்கரம்..“

ஐந்தாறு முறைச் சொடுக்கியதும் பர்னர் எரிகிறது. வாசலில் யாரோ அழைத்தார்கள். அவன் தேநீர் தயாரித்தான். கொதிக்கிற தேநீர் வாசம் அறையைக் கவ்வியது. இரண்டு செல்களும் மாறிமாறி அழைத்துப் பாடியது. காய்கறி வண்டிக்காரர் ராகம். அருகிலிருக்கிற மரப்பலகைகள் அறுக்கிற சத்தம். அதன் புழுதியும் துகளும் காற்றில் கலந்து அந்த வீதி முழுக்கவும் அறுத்த மரத்தின் வாசம் வீசுகிறது. நாய் விடாமல் குரைக்கிறது. அவன் கதவை நீக்கிப் பார்த்துவிட்டு இரவெல்லாம் எரிந்த விளக்கை அணைத்து விட்டு பசிக்குப் பறந்து கொண்டிருக்கிற அணிலை, குருவிகளை, காகங்களை, அந்த வீதியின் மற்ற நான்கைந்து நாய்கள் எல்லாம் இவன் கதவு திறந்த பொழுது ஒன்று சேரக் கத்தியது.

அந்தத் தகரப் பெட்டிகளிலிருந்து உணவுப் பொதிகளிலிருந்து எடுத்துப் போட்டும் தூவியும் விடுகிறான். அலைபேசியின் அழைப்புகள். குறுஞ்செய்திகள்..எடுத்து வாசித்தான்..இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் என்பதுதான் அதிகமாக. அழைப்புகளில் தங்கை உள்பட பலர் அழைத்திருக்கிறார்கள். தேநீரைச் சுவைத்துப்பார்த்துவிட்டு இனியொரு கோப்பையில் ஊற்றிக் கொண்டு படுக்கையறைக்குள் நுழைந்தான்…

“தலையைத் துவட்டச் சொன்னனே.. தொவட்டலையா..“ அவள் சுவரையே வெறித்தபடியிருக்கிறாள். அலைபேசி அழைக்கவும் எடுத்தான்.

“ம்..சொல்றா..“

“விவேக்..வண்டி கொஞ்சம் பிரச்சனை பண்ணுது.. கால் டாக்சியோ ஆட்டோவோ எடுத்துட்டு வரட்டா..“

“கா….வேண்டாம்டா..உன் வண்டியில்லனா விட்ரு.. நான் சிஸ்டர் கிட்ட சொல்லிக் கூப்பிட்டுக்கறன்..“

“சாரி…ஏன் வேண்டாங்கற..“ என்னும் போதே கட் செய்திருந்தான்.

டிபனை முடித்தபோது சரியாக வாசலில் கார் வந்து நிற்கிற சத்தம். குருவிகள் கீச்சிட கொர் கொர் என புறாக்கள் குடுகியது. மதுமிதா அவைகளைப் பார்த்துக் கொஞ்சிவிட்டு வீட்டிற்குள் நுழைந்து பாத்திரங்களை எடுத்து கழுவத் துவங்கியவளை அவன் நேரமாச்சு போலாம்..வந்து பாரத்துக்கலாம் கிளம்பு.. உள் அறைக்குள் நுழைந்தவள் இருவருக்கும் திருமணநாள் வாழ்த்துகளைச் சொன்னாள். அவளுக்கு என்று வெளியே செல்ல எடுத்து வைத்த உடைகளை அணிவிக்கத் துவங்கினாள். இன்று எங்கெங்கெல்லாம் போகப் போகிறோம் என்பதை அவர்கள் அவளிடம் கொஞ்சல் மொழியில் பேசுவதை விட்டத்தையே வெறித்துப்பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவள்.

வாசலில் சத்தமும் கூச்சலும் கேட்க அவன் வெளியே வாயில் கேட்டை நீக்கி அருகாமையிலிருக்கிறவரைக் கேட்டான்..“என்ன சார் பரபரப்பு..சத்தம்..கவுன்சிலர் வராரா..“

“ஆளே இல்லாம ஓடற ஜீப் இன்னைக்கு இந்தப்பக்கம் வருதாம்“ என்றார்.

காலனி சனங்கள் ஆச்சர்யத்துடன் விவாதித்தபடியே காத்திருக்கத் துவங்கவும் இவர்கள் மூவரும் காரில் புறப்பட்டார்கள். கூடவே துணிகள் அடங்கிய தோள்பைகள் சகிதமாக. வாசலிலிருந்த சங்குப் பூக்கள்  செவ்வரளிப் பூக்கள்  உள்ள கொம்பைப் பிடித்து உலுக்கவும் அவள் மேல் உதிர்கிறது.  வீட்டு உயிரிகள் வாகனம் வெளியேறுவதை அறிந்து கே..கே..என முனகியபடி “சீக்கரமா வந்து சேருங்கள்..“ என்கிற கோரிக்கை அதன் சிணுங்களில். எதிரில் அந்த ஆளிலில்லாமல் ஓடுகிற ஜீப் கடந்து உள்ளே நுழைகிறது.

பேருந்து நிலையம் வந்து நின்றது கார். மதுமிதா  “ஏண்ணா இங்க….ஓ…சரி சரி..“ என்றவாறே..அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். பேருந்துகள் முண்டியடிப்பதும் நகரப்பேருந்துகள் வழியை அடைப்பதும் உள்ளே அதே ஓட்டுநர்கள் மதுர..மஉர.. திர்ச்சி.. சைலம்…என அழைத்தபடியிருக்கிறார்கள்..

சார் ஆட்டோ…சார் டாக்சி ஓணுமா…ஆட்டோ..

வரிசையாக இருக்கிற சிற்றுண்டிக் கடைகளில் வீச்சு பரோட்டாவைக் குதறுகிற வாசிக்கிற சத்தம். சிக்னல்களில் இடைவிடாமல் ஒலிக்கிற ஆரன்களும் ஆம்புலன்ஸ்களின் சைரன்களும் இந்த நகரத்திற்குப் பெருநோவு கண்டுவிட்டதை அவைகள் அறிவிப்பதாக உணர்கிறார்கள். படியும் பட்டாசுகளை யார் யாரோ வெடிக்கத் துவங்கியிருக்கிறார்கள். அவளை இருவரும் அந்த பிளாட்பாரத்தில் நிற்கிற பேருந்துகளுக்கருகில் அமர வைத்தார்கள். அவள் அருகில் அந்தத் துணிப்பைகளை வைத்து விடுகிறார்கள். சுற்றிலும் பார்க்கத் துவங்கினாள்.

அவர்கள் இருவரும் சற்றுத் தொலைவிலிருக்கிற பைக் எடுத்துக் கொண்டு பின்புற வழியாகச் சென்று அரைவட்டமடிக்கவும் அவள் துணிப்பைகளைத் தூக்கிக் கொண்டு “மது மது..“ எனச் சத்தமிட்டபடியே ஓடிவரத்துவங்கினாள். பிரயாணிகள் அச்சமுறுகிறார்கள். அவள் பின்னால் பாதுகாப்பாக சில ஆட்டோ ஓட்டுநர்கள் ஓடிவந்தார்கள். சில நிமிடத்தில் அவர்களின் பைக் வந்து அவளருகில் நின்றது. மூட்டைகளுடன் அவள் பிளாட்பார்ம் சென்று அமர்ந்து கொண்டு மூச்சிறைத்தபடி தூணில் சாய்ந்து கொள்கிறாள். புறப்பட உள்ள பேருந்துகள் அதி இறைச்சலும் ஹாரனுமாக பயணிகளை அழைக்கிறது.

மதுமிதா “ஹாப்பி வெட்டிங் ஆணிவெர்சரி..“ என்று அவனுக்கும் அவளுக்கும் சில கேக் துண்டங்களை ஊட்டினாள். அப்படியே சில ஓட்டுநர்களுக்கும் கொடுத்தாள். அவன் உடைகளை சரிசெய்துவிட்டு துணிப்பைகளைத் தூக்கிக் கொண்டான். புறப்பட்டார்கள். சாலையில் எதிரில் குறுக்காக அந்த ஆளில்லாத ஜீப் வருகிறது.

கல் எடுத்து அந்த ஜீப் மீது பலங் கொண்ட மட்டும் எரிகிறார்கள் அவர்கள். அக்கல்லும் அந்த ஜீப்பும் காற்றில் காற்றில் கலந்து காணாமலாகிறது. அவர்கள் மூவரும் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்பட பலருக்கும் நன்றி சொல்லிவிட்டு ஊருக்குத் திரும்பினார்கள்.. கார் சிங்கையிலிருந்து திருச்சி சாலையின் கூந்தலைப்பற்றிட அவர்களின் காரை அந்த ஜீப் பின் தொடர்கிறது.