ஸீரோ டிகிரி – நான் லீனியர் இயற்றலின் பெரு வெள்ளம்

ஸீரோ டிகிரி – நான் லீனியர் இயற்றலின் பெரு வெள்ளம்

கட்டுரை:- ஷா

விரிந்து நிற்கும் நாவல் “சாரு நிவேதிதா எழுதிய” ஸீரோ டிகிரி. மனிதச் சிந்தனையின் இயல்பு மையப்புள்ளியைத் தேடி நிறுவி அதைக் கொண்டே படிப்பினையும் பெறுவனவும் நிகழ்த்துவது. பொதுவாகவே நவீன இலக்கியம் என்பது வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவை ஆக்கப்பூர்வமாகவும் தர்க்கப்பூர்வமாகவும் நிறுவ முயலும். இவ்வடிவத்தின் ஆக்கங்கள் தெளிவான செறிவான ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருந்திருக்கிறது. அதைத் தகர்த்து, எழுத்து என்னும் வெளியில் மனித எல்லையின் அறிதலுக்கு உட்பட்ட சகல உணர்வுகளையும் மையப்புள்ளியில் சாரச்செய்யாது de-centralization நிகழ்த்தி விரிந்து நிற்கும் நாவல் ஸீரோ டிகிரி.

இலக்கியம் ஏழை மக்களில் இருந்து உருவாக வேண்டும் – கல் உடைப்பவர்கள் பாலியல் தொழிலாளிகள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டவர்கள் அதில் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடையே இருந்து வரவேண்டும். சாதாரணத் தொழிலாளிகள் பற்றி எழுதினால் அது முற்போக்கு யதார்த்தவாதம் மட்டுமே என்ற கருத்தை சாரு நெடுநாளாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். அவற்றை சுயசரிதைத் தன்மையோடு கையாளவும் செய்கிறார். நாவல் முன்னுரையில் “இதை பங்களிப்பென ஏற்பதோ – சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப்பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்சனையே தவிர என்னுடையது அல்ல” என்கிறார் சாரு நிவேதிதா. அதுவே உண்மையும் கூட.

• இந்த நாவலின் புரிதல் அல்லது விமர்சனம் இரண்டே வகைமையில் அடங்கிவிடுகிறது. இது கொண்டாடப்படுகிறது அல்லது தூக்கி எறியப்படுகிறது.

‘மண்டை காயறது மண்டை காயறதுன்னு கேள்விப்பட்டிருக்கேன் ஆனா அது என்னனு இதப்படிக்கறப்பதான் தெரிஞ்சது’ எனவும் ’என் வாழ்க்கையில மிக முக்கியமான நாவல் இது ஷா. அற்புதமானது மிஸ் பண்ணாதீங்க’ என்று சொன்ன அனைவரையும் சந்தித்திருக்கிறேன். இந்தப் பிரிவினைக்கு காரணி மையத்தைக் கண்டடைதல் என்று எண்ணுகிறேன். மையம் தேடித் தோற்றவர்கள் பெரும்பாலும் இந்நாவலைக் கைவிட்டுவிட்டு தூக்கி எறிபவர்களின் பக்கம் சேர்ந்துகொள்கிறார்கள் அல்லது புரிந்துகொள்ள மறுக்கிறார்கள் நாவலில் இவ்வாறு வருகிறது: “என் வாழ்வைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், என் எழுத்தைப் பார்க்காதே. என் எழுத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், என் வாழ்க்கையைப் பார்க்காதே. என் எழுத்து வேறு. என் வாழ்க்கை வேறு.”

படைப்பு எப்படி உருவாகிறது அதன் மூலம் படைப்பாளி எவ்வாறு உருவாகிறார் என்பதை அவருடைய ஆழ்மனச் சிந்தனை ஓட்டத்தின் வெளிப்பாடாக வாசிக்க முயல்வதின் மூலமாகத்தான் முடியும். சாரு நிவேதிதாவின் நாவலில், ஆழ்மனச் சலனங்கள் முகமூடி ஏதுமின்றி எழுத்து வடிவம் கொள்வதால் படைப்பாளியாக அவரை அறிந்து கொள்ள முடிவது அவ்வளவு சிக்கல் இல்லை. அவ்வெழுத்தின் நேரடித் தன்மையும் நிர்வாணமும் பெரும்பான்மையோருக்கு அதிர்ச்சி தரும் என்பதில் ஆச்சரியமில்லை

• நாவல் எனப்படுவது வடிவம் சார்ந்தோ அளவு சார்ந்தோ அல்ல என்பது என் கருத்து. அது கதாபாத்திரங்களின் உருவாக்கங்களிலும் அதன் இயல்பின் படைத்தலிலும் ஒளிந்திருப்பதாக கருதுகிறேன்.

அந்த வகையில் இந்த நாவலின் கதாபாத்திரங்கள் தோன்றுவதும் அழிவதுமாய் இருக்கின்றன. எழுத்தில் எழுத்தாளனின் மரணம் என்பது பின் நவீனத்துவத்தின் முக்கியமான கோட்பாடு என்று சொல்லப்படுகிறது. அவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை. எந்த ஒரு பாத்திரத்தை எடுத்து அதைத்தொடர்ந்து பயணிக்க நினைத்தால் அது ஏதோ இடத்தில் காணாமல் போகிறது அல்லது அழிந்து போய்விடுகிறது. எனவேதான் வடிவமின்றி நிற்கும் இந்த நாவலை எந்த இடத்திலிருந்தும் எந்த அத்தியாயத்திலிருந்தும் தொடங்கி வாசிக்க முடிகிறது. பல்வேறு வடிவங்களுக்கும் எழுத்து முறைமைகளுக்கும் மத்தியில் நான்- லீனியர் எழுத்துமுறை மிகமுக்கியமானது. இதனை சாரு கையாளும் விதம் ருசிகரமானது. கருவின் மையக்கோட்டினை அழித்து அதனை பெருநீள்வட்டத்திலிருந்து உதிரும் சிறு பிரிவுகளாக்கி கோர்க்கிறார். அத்தியாயங்கள் கலைந்துவிட்டதாகவும் எதிர்காலம் முன்னுக்கும் இறந்தகாலம் பின்னுக்கும் தள்ளப்பட்டிருப்பதாகவும் இந்த காலக் குழப்பத்தில் கடந்த காலம் அழிந்து அழிந்து பூஜ்ய கணத்திற்கு (ஸீரோ டிகிரிக்கு) எழுத்துக்கள் திரும்பிவிடுவதாகவும் நியாயப்படுத்துகிறார்.

ஆங்கில மொழிபெயர்ப்பில் அல்லாது தமிழில் மட்டும் இது லிப்போகிரம்மாடிக் நாவல். சர்வதேச அளவிலேயெ ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டிருக்கிறது என்கிறார் சாரு. இந்நாவலில் ஒரே ஒரு அத்தியாத்தைத் தவிர வேறெங்கும் ஒரு மற்றும் ஒன்று வார்த்தைகளும் கமா கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் இடம்பெறவில்லை – இந்தக் கட்டுரையைப்போல!

• நான் என்ற நான் என்பது சாருவா மிஸ்ராவோ சூர்யாவோ முனியாண்டியோ என யாராகவேண்டுமானாலும் இருக்கலாம் எனத்தொடங்கும் இந்த நாவல் அல்லது நாவலுக்கான குறிப்புகளில் சாருவின் சுயசரிதத்தன்மை தெரிவதை தவிர்க்கமுடியவில்லை. பல பெயர்களையும் மூலப்பெயருக்கு நெருக்கமாக அமைத்து கிசுகிசுத்தன்மையை உருவாக்குவது அவரது வழக்கம்.

உதாரணமாக: முனியாண்டியின் எழுத்தை மலம் என்று சொன்னவர்களுக்கு அவன் சொல்லும் எதிர்வினைகளும் எதிர்க்கொள்ளும் விதத்தின் விளக்கங்களும் முதலானவை. சொல்வது யார் சொல்லப்படுவது யார் என்பவை தெளிவாக இருக்கும் இவ்விடங்கள் எதற்கு சொல்லப்படுகின்றன என்ற கேள்விக்கு பதில் தருவதில்லை. இரண்டாவதாக கிபி ஒன்பதாம் நூற்றாண்டுச் செத்த மூளையின் மற்றும் உத்தமத் தமிழ் எழுத்தாளனின் விமர்சனங்களும் அதற்கான எதிர்வினைகளும் அடக்கம் இந்த நாவலில் ஓரிடத்தில் வருகிறது; ‘உண்மையில் பார்த்தால், எந்த சமூக மதிப்பீடுகளை அவன் மறுக்கிறானோ அதே சமூக மதிபீடுகளைத்தான் அவன் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கிறான். சமூக மதிப்பீடுகளை மறுப்பதை காண்பித்துக் கொள்வதின் மூலம் அவன் தன இருப்பை ஸ்தாபிக்க முயல்கிறான். ஆனால், சமூக மதிப்பீடுகளை ஏற்பதோ, மறுப்பதோ எல்லாம் அவற்றைப் பிரதானப்படுத்தத் தானே செய்கிறது. அவன் பேசும் எதிர் கலாச்சாரத்தையும், கலாச்சாரம் உபகலாச்சாரமாக உள்வாங்கிக் கொண்டு விடுகிறது.’ ஜெனிக்கு எழுதப்படும் கடிதத்தில் ருவாந்தாவில் தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும் முனியாண்டி தில்லியில் இறந்த மிஸ்ரா ஆகியோர் சூர்யாவுடன் தென்படுகிறார்கள். இந்த சுவாரஸ்யங்களுக்கு மத்தியில் – சில பகுதிகள் வெளியே துருத்திக்கொண்டு நிற்கிறது. அதில் முக்கியமாக பெரும் பரபரப்பாக சித்தரிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது காமத்து சிந்தனைகள் பற்றி எழுதியிருக்கப்படும் பகுதிகள் முதிர்ச்சியில்லாமல் இருக்கிறது.

அந்த அத்தியாயங்களை விடலைத்தனமாக எழுதியுள்ளார் என்பதை மறுக்க முடிவதில்லை. வாசுகி என்பது யார் என்ற கேள்விக்கு விடைதான் முதல் அத்தியாயம். அதைத் தொடர்ந்து நக்கலும், பாலியல்திரிபுகளும், சிதறிய குறிப்புகள் போன்ற வடிவமும் கொண்டது இக்கரு. மையத்தில் இருந்து விலகி சிதறி நிற்கும் இருக்கும் எல்லா அத்தியாயங்களையும் தாண்டி கார்மீனியர் கஸர்மீனியர் கலவரங்களும் திருத்தப்பட்ட பதிப்பில் காணாமல் போன ஈழ வார்த்தைகளும் அகதி முகாம் குறிப்புகளும் முனியாண்டியால் நிகழும் ஜாதிக்கலவரமும் ஜலஜாஸ்ரீ நடிகையின் பன்றி வளர்ப்பும் எழுத்துக்குள் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் எழுத்தாளனும் பாலியல் வன்மைகளும் அது குறித்த அகழ்வாராய்ச்சி போன்ற கேள்வி பதில்களும் தாயுமானவனின் உடல் மற்றும் உளவியல் டார்ச்சர்களும் கம்யூனிச பேச்சுக்களும் எழுத்தாளனின் (கதையில்) நிகழ்காலத்தைச் சொல்லிச்செல்லும் குறிப்பேடுகள். இவற்றில் சாரு நுண்மைகளைத் தொடவில்லை என்பது என் கருத்து. ஆழமோ அழுத்தமோ அன்றி மாற்றாக பெருவெட்டாய் சொல்லப்பட்ட விஷயங்களின் நேரடி வன்முறையும் காமச் சித்தரிப்புகளும் மிகையுணர்ச்சிகளுமே எஞ்சுகிறது. இந்தப் புள்ளியில் பாலியல் நாவல் எழுதப்படும் அத்தியாயங்கள் பல சந்தேகங்களைக் கிளப்புவதை தவிர்க்க முடிவதில்லை. காதல் இல்லை காமம் கொஞ்சம் துருத்திக்கொண்டு நிற்கிறது.

• ஏன் நான்-லீனியர் என்ற கேள்வி மிக முக்கியமானது. அதைப் புரிவதே நோக்கம். மனிதனின் தர்க்கம் அதிகாரங்களை உருவாக்கும் தன்மை கொண்டது.

இந்த அதிகாரங்களின் கூர்நகத்தினால் நம்மைச் சுற்றிலும் உருவாக்கப்படும் தர்க்க ஒழுங்குகளைக் கவனித்து அவற்றிலிருந்து அவற்றின் வன்மப் பிடியிலிருந்து விடுபடக்கூடிய விஷயங்களில் கவனம் செலுத்துவது மிக இயல்பு மிக அவசியமும் கூட. இவ்வகை அதிகாரங்களைச் செலுத்தும் வழிகள் சார்ந்து வன்முறை உருவாகிறது. அதன் வெளிவிளிம்புகளை எப்போதும் முக்கியக் கருவியாகவே கருதவேண்டும். அவற்றிலிருந்து விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை. இவ்வகை அதிகாரம் வெடித்துச் சிதறும் இடங்களில் ஏற்படும் வன்முறை காமத்திலும் உளவியல் சிதையிலும் பெண்ணடிமைத்தனத்திலும் படர்ந்து நிற்கிறது.

அவ்வகையில் ஆண் என்ற அதிகாரத்தின் பிடியில் சிக்கி சிதைந்த பெண்களாக நாவலின் பிற்பகுதியின் (கடந்த காலத்தின்) முக்கிய பாத்திரங்களான ஆர்த்தி மற்றும் அவந்திகா. சூர்யா – நளினி தாம்பத்ய வாழ்வியல் துயரங்களுக்குப் பின் அவந்திகவைச் சந்திக்கிறான். அவளுக்கு நிகழ்ந்த வலிகளை அறிகிறான்.

சூர்யாவுக்கும் இந்த வலி ஆர்த்தி மூலமாக தெரியும். இவ்வலிகளிருந்து ஒளிந்துகொள்ள முற்பட்டும் தனது மீதி வாழ்வினை தனது குட்டி இளவரசி ஜெனீ என்னும் ஜெனிஸிஸ்க்கும் அர்ப்பணித்து சரணடைந்து இந்த இறந்த காலத்தை அழிக்க முற்பட்டு அதனிடமிருந்து அதன் கோரப்பிடியிடியிலிருந்து ஒளிந்துகொள்ளவே – எழுதி அதை அழித்து திரும்ப எழுதி அதையும் அழித்து போதாமையால் எழுதும் எழுத்தாளனின் மரணத்தை சித்தரித்து கடந்த காலத்தை அழித்துவிடவே – காலக் குழப்பத்தை உண்டாக்கி அதைப் பூஜ்ய கணத்தில் நிறுவுகிறார் சாரு. இதன் மூலம் கடந்த காலம் முழுவதுமாக சுயமிழந்து அழிந்து நிற்கிறது. அதற்குத்தான் இந்த நான் லீனியர் யுக்தி. எழுத்தை எழுத்தால் எழுதுகிறது எழுத்து என்று எழுத்தின் பின்னால் தன் நாவலின் பின்னால் ஒளிந்துகொண்டு தனக்கும் தான் சார்ந்தவர்களுக்கும் நிகழ்ந்தவைகளை கடந்த காலத்தை அழிக்க முற்படுதலின் சாரமே இந்த நான்-லீனியர் வடிவம் என்பது என் துணிபு. இந்த நாவலின் மிகமுக்கியமான பாத்திரமாக மாறியிருக்கிறது இந்த வடிவம்.

• தர்க்கம் சார்ந்து சூழல் சார்ந்து உருவாகும் எளிய கருத்துக்கள் சாதாரணமான பார்வைகள் நாவலுக்குரியவை அல்ல. இவை சார்ந்து உருவாகும் கருத்தை முன்வைக்கும் அத்தியாயங்களை எழுதுவதே மோசமான கண்ணோட்டத்தை உருவாக்குகிறது. தனது கருத்தை அல்லது நோக்கை ஒட்டுமொத்த நோக்காக மாற்றும் பொருட்டே வாழ்க்கையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அதிகமாக அள்ள முயல்கிறது ஸீரோ டிகிரி.

இந்த தேவையை ஒட்டியே நாவலின் வடிவம் அமைந்திருக்கிறது. மையக் கதாபாத்திரம் மட்டுமே உணர்ச்சிகரமாகச் செயல்படுவதையும் பிற கதாபாத்திரங்களின் குரல் அந்த ஆளுமை முன் மங்குவதையும் தவிர்த்து நேர்கோடான காலத்தால் மிகுந்த ஆயாசத்தை ஏற்படுத்தும் கதை ஓட்டத்துக்காகவும் தொடர்ச்சியை நிலைநாட்டும் பொருட்டும், அவ்வளவாக ஆழமும் நுட்பமும் இல்லாத விஷயங்களைச் சொல்வதிலிருந்து சாரு பின்னைடையவில்லை நாவலை வரையறைசெய்ய இன்று சாத்தியமான ஒரே அளவுகோல் வாசகத் தரப்பு மட்டுமே. நவீன காலகட்டத்தில் நாவல் என்ற வடிவம் எதையெல்லாம் அடைந்துள்ளது அவ்வடிவில் என்னென்ன சாத்தியங்கள் உள்ளது என்ற அளவில் வாசகனின் எதிர்பார்ப்பையே நாவலின் வடிவமாக

முன்வைக்கலாம். இந்த வடிவத்தின் பரிணாமம் என்பது அந்த நோக்கத்தை மேலும் மேலும் சிறப்பாக நிறைவேற்றும்போதே நிறைவு ஏற்படுகிறது. அதற்கான தேடல் போதையைப் போன்றது. கைநடுங்க ஆரம்பிக்கும் குடிகாரர்களின் நிலைக்கும் அதற்கும் வேறுபாடில்லை. நாவல் அதன் ஒருமையுடன் எழுந்துவிடும்போது நமக்குள் இருந்தும் எழுகின்றன. அதன்பின் அவையே நம்மைப் பாதையில் இட்டுச்செல்கின்றன. வேறெதையும் நினைக்க விடுவதில்லை.

அவை ஆடிமுடித்து இறங்குவது வரை அதற்கு நம்மைக் கொடுத்துவிட்டால் மட்டும் போதும். ஸீரோ டிகிரிக்கும் அதே! ஆனால் இது நீள்வட்டத்தைப் போல ஆரம்பமும் முடிவும் இல்லாமல் மீட்சியின்றி ஏதோ ஒரு வெளியில் சுழன்றுகொண்டிருக்கும் பிரதி பிம்பம்! தர்க்க எல்லைகளுக்கு அப்பாற்பட்ட சிந்தனைக் கூறுகளை உள்ளடக்கிய இதனை ஏற்கலாம் அல்லது மறுக்கலாம்.

கொண்டாடலாம் அல்லது காலில் போட்டு மிதிக்கலாம். நிராகரிக்க மட்டும் முடியவே முடியாது!