
அமலா பால் நடிப்பில் உருவான ‘ஆடை’ திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் சினிமாவுக்கே உரித்தான கேடிஎம் பிரச்சனை காரணமாக சில போராட்டங்களுக்குப் பிறகு மாலை வெளியானது.
இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எந்தவித முன் அறிவிப்புமின்றி கடந்தாண்டு செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஆடை என்கிற தலைப்புடன் அமலா பால் ஆடை இல்லாமல் பேப்பர் போன்ற ஏதோ ஒரு பொருளைக் கொண்டு தனது உடலை மறைத்து கையில் ஒரு ஆயுதத்துடன் இருப்பது போன்ற காட்சியுடைய போஸ்டராக அது இருந்தது. இயக்குநர் பெயர் ரத்னகுமார் என்று இருந்தது. ‘மேயாத மான்’ திரைப்படத்தின் இயக்குநர்.
மேயாத மான் ஒரு நட்பு கலந்த காதல் கதைக் களம் என்றாலும், வடசென்னையை மையமாகக் கொண்டு ரத்தவாடையும் வன்முறையும் இல்லாமல் அன்பு மட்டுமே நிறைந்த படமாக எடுக்கப்பட்டது என்பதில் அதன்மீது ஒரு நல்ல ஈர்ப்பும் மதிப்பும் இருந்தது.
இதனால் ரத்னகுமாரின் இயக்கத்தில் இப்படி ஒரு வலிமையான போஸ்டர் வெளியானது ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் வெளியான இரண்டாவது போஸ்டரும் கிட்டத்தட்ட முதல் போஸ்டரைப் போலவே இருக்க எதிர்பார்ப்பில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.
இவற்றைத் தொடர்ந்து படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாக இரண்டுமே வலைத்தளவாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படிப்பட்ட ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே படம் கடந்த வாரம் வெளியானது.
படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்த வலிமையை உணர்ந்து எதிர்பார்ப்புடன் சென்றால், இயக்குநர் அந்த எதிர்பார்ப்புகளை பகடி செய்திருக்கிறார். இதற்கு இயக்குநருக்கு பாராட்டுகள்.
ஆனால், முதல் பாதியில் ஆடை இல்லாமல் நிர்வாணமாகக் கூட செய்திகளை வாசிக்கத் தயார் என்று சவால் விடும் அளவுக்கு மிகவும் துணிச்சல் மிகுந்த பெண்ணாக காட்டப்படும் காமினி இரண்டாவது பாதியில் அதற்கேற்றவாறு அல்லாமல் கூனிக் குறுகியே இருப்பது கேள்விகளை எழுப்புகிறது. ஆடை என்கிற தலைப்பைக் கொண்டு ஆடை எல்லாம் ஒன்றும் இல்லை என்று ஆடை அரசியலைத் தூக்கி எறியும் அளவுக்கு துணிச்சலாக காட்சிப்படுத்துவதற்கான சூழல் இருந்தும், துணிச்சலான காமினி, ‘ஆடைதான் மானம்’ என்கிற அளவுக்கு காட்டப்படுகிறார். இதற்கு ஏற்ற வகையில், “ஆடையே இல்லாமல் வருவாய் என்று நினைத்தேன், ஆனால், நீ அந்த அளவுக்கு மோசம் இல்லை” என்கிற வசனம் மூலம் இயக்குநர் எந்தவிதமான கருத்தைப் பார்வையாளர்களுக்கு கடத்த நினைக்கிறார் என்பதில் குழப்பம் இருக்கிறது.
இதில் இயக்குநர் பெண்ணியம் பற்றி பேசுகிறாரா, அல்லது பெண்ணியம் என்றாலும் அதன் சுதந்திரத்துக்கு ஒரு எல்லை உண்டு என்கிறாரா என்கிற குழப்பம் படம் முடிந்த பிறகும் இருக்கிறது. பிராங்க் ஷோவை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும், அதனை அடிப்படையாகக் கொண்டு காமினி கதாபாத்திரம் மூலம் பேச நினைக்கும் விஷயங்கள் என இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையாமல் தனித்தனி டிராக்குகளாக இருப்பது படத்தின் மீதுள்ள சுவாரஸ்யத்தை சற்றே குறைக்கிறது.
முதல்பாதியில் துணிச்சல் மிகுந்த பெண்ணாகக் காட்டப்படும் காமினியை வைத்தே, படத்தின் கிளைமாக்ஸில் “என்னதான் சுதந்திரக் கொடி என்றாலும், அதன் சுதந்திரம் அந்த கொடிக் கம்பம் வரை தான்” என்ற வசனத்தைப் பேச வைப்பதன் மூலம் நமது குழப்பங்கள் அனைத்தையும் களைந்து தெளவாக இது பிற்போக்குத் தனமான படம் தான் என நம்மை உணர வைக்கிறார் இயக்குநர்.
பிறகு “தவறுகளைப் பழகுவது எளிது, அதை சரி செய்வது கடினம்” என்று பேசும் காமினி, நான் தவறுகளை செய்வதற்கான நோக்கத்தை மாற்றிக் கொண்டேன் என்று கூறி ‘மீ டூ சர்ச்சை புகழ்’ பாடலாசிரியரின் சில்மிஷத்தை வெளிக்கொண்டு வருகிறார். இந்த வசனங்களை காமினி பேசுவதன் மூலம், பிராங்க் ஷோவை தவறு என்கிறாரா, அல்லது துணிச்சல் மிகுந்த பெண்ணாக செய்த செயல்களைத் தவறு என்கிறாரா என்பது தெரியவில்லை.
இயக்குநர் எந்த விஷயத்தைக் குறித்தும் முழுமையாக பேசாமல் மேலோட்டமான வசனங்கள் மூலம் காட்சிகளை நகர்த்தியிருப்பது பெரிய சிக்கல்.
எனினும், படத்தைப் பார்த்த ரசிகர்கள் சிலர் இந்தப் படத்தை பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும் என்கிற வகையில் கருத்துக்களை முன் வைத்தனர். இவற்றை ஒட்டி சில மீம்களும் சமூக வலைதளங்களில் பரவின. இதன்மூலம், பெண்கள் பெண்ணியம் பேசுவது தவறு என்று பெரும்பான்மையான பார்வைகளை உடைய சமூகத்தில் இப்படி ஒரு கருத்து வருகிறது என்றால் இந்தப் படம் சற்றே பிற்போக்குத்தனத்தை போதிப்பதில் வெற்றி கண்டுள்ளது என்ற முடிவுக்குதான் வர வேண்டியிருக்கிறது.
படத்தின் தொடக்கத்தில் நாங்கேலியின் கதை விளக்கப்படும். அதைக் குறிப்பிட்டு கிளைமாக்ஸில் அந்த காலத்தில், “மார்பை மறைக்க போராட்டம் நடத்தினார்கள், நீங்கள் இப்போது மார்பைக் காட்ட போராட்டம் நடத்துகிறீர்கள்” என்று பெண்ணியவாதிகளை விமர்சிக்கும் வகையில் ஒரு வசனம் இருந்தது. இது இப்படி வசனமாக இருப்பதுதான் பிரச்சனை. இதனை ஆழமாக பேசியிருந்தால், மார்பை மறைப்பதோ, காட்டப்படுவதோ இங்கு பிரச்சனை இல்லை, அதனுள் இருக்கும் ஆதிக்கத்தன்மைதான் பிரச்சனை என்பதை பார்வையாளர்களுக்கு கடத்தியிருக்கலாம்.
சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் பிற்போக்குத்தனங்களுக்கு ஆதரவாக, முற்போக்குச் சிந்தனைகளை ஆபத்தானதாகக் காட்டிப் பெண்களை பயமுறுத்த நினைக்கும் படைப்புதான் ‘ஆடை’. “நாங்க சட்டை பனியன் போடாம ரோட்ல நடப்போம் நீ நடப்பியா?” என்ற அபத்தமான கேள்வியின் நாகரீக வடிவம். மொத்தத்தில் இப்படி முற்போக்கு பேசுவதற்குப் பதிலாக பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.