சிந்து சீனுவின், ‘பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்’ நாவல் அறிமுகம் – சுப்ரபாரதிமணியன்
கட்டுரை | வாசகசாலை
ஓர் இனக்குழு மேலூர் பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் சாதி சார்ந்த அவர்களின் வேலை நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தால் தாங்கள் அடிமையாக இருந்து கொண்டும் சாதி ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதைக் கண்டும் அந்த சமூகம் காலங்காலமாக மவுனமாக இருந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் கல்வி என்பது பெரிய விடுதலையாக ஆயுதமாக இருக்கிறது என்பதும் அவர்களுக்குத் தெரிகிறது. அந்த அனுபவத்தை சிந்து சீனு அவர்கள் இந்த நாவலில் எழுதி இருக்கிறார்.
அந்த மக்களில் சிலர் கல்வி அறிவு பெற்று உயர்ந்த பதவிக்கு வருவது, மகிழ்ச்சி சந்தோஷம் துக்கம் என்ற பல வகைகளில் வாழ்க்கை அவர்களுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்ந்த பகுதியை ‘அம்பேத்கர் நகர்’ என்று பெயரிடுவதற்கு அவர்கள் போராட வேண்டி இருக்கிறது. அவர்களின் உரிமைகள் எப்படி மீட்கப்பட்டன. அந்த ஊருக்கு எப்படி அந்த பெயர் வந்தது என்பதை ஒரு சரித்திரமாக, செய்தியாக இந்த நாவலில் சொல்லி இருக்கிறார்
இந்த நாவலில் பல்வேறு விதமான தலித் மக்கள் பற்றிய சரித்திர ரீதியான அடக்குமுறைகள், சாதியக் கொடுமைகள் பற்றிய பதிவுகள் உள்ளன. வேலூர் நகரம் விரிவடையும்போது அதில் பல்வேறு சாதியினுடைய பங்களிப்பு, கிறிஸ்துவர்களின் கல்விப் பணி மற்றும் மருத்துவத் துறை பங்களிப்பு என்று இந்த நாவல் நீள்கிறது. எல்லா பகுதிகளிலும் கோவில் இருக்கிறது. நம் பகுதிகளில் கோவில் இல்லை என்று அவர்கள் ஒரு கோவிலைக் கட்டுகிறார்கள் அதுதான் மாதம்மா கோயில்.. அதுவே பின்னால் மாரியம்மன் கோயில் என்று மாறிவிடுகிறது. இந்த வரலாறு ஒரு முக்கிய இடத்தை இந்த நாவலில் வைத்திருக்கிறது.
சாவுக்குத் தப்படிக்கும் தொழிலாளர்கள் பற்றியும், செத்த மாடுகளை அகற்றும் அவர்களின் பணி பற்றியும், தாழ்த்தப்பட்டோர் தாக்கப்படுவதும் மிக இழிவாக பேசியடி ஒதுக்கி வைப்பதும் என்ற வகையில் சாதிய வெறியர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்; அவர்கள் சாராயம் என்ற ஒரே கவசத்தை வைத்திருக்கிறார்கள். இந்த அனுபவங்களை சிறப்பாக எடுத்துச் சொல்கிறார் சிந்து சீனு.
அடித்தட்டு மக்களின் நிலையை மாற்றாமல் மலம் அள்ளும் தொழிலை ஒழிப்பது சாத்தியமல்ல; அரசாங்க துப்புரவு பணியாளர் வேலையை உயர்சாதி மக்கள் வாங்கி விடுவதால் துப்புரவு பணியாளர்கள் அடுத்தவேளை சோற்றிற்கும் பிறரிடம் கையேந்தும் நிலை, வாழ வழி இல்லை, ஆயிரம் சட்டங்கள் போட்டாலும் ஆதிக்க சக்திகள் உடன் அடிபணிந்து போவதை தவிர வேறு வழியில்லை. எதிர்த்துப் பேச முடியாத நிலை என்று இருக்கிறவர்கள் கல்வி அறிவு பெற்று எல்லா விஷயங்களையும் உரிமையாக கோரிப் பெறுவதுதான் இந்த நாவலின் மையம்.
இந்த நாவலின் ஒரு பகுதியில் தேர்தல் நடைபெறுகிறது. தோட்டி வேலை செய்கிற ஒருவர் அங்கு வாக்குகள் செலுத்தச் செல்கிறார். தோட்டிக்கு அவ்வளவு அவசரமா என்று கிண்டல் செய்கிறார்கள் அது அவரை பாதிக்கிறது. இது நாவலின் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கிறது.
எப்படி தோட்டி என்று காலங்காலமாக பெயர் பெற்று வந்த ஒரு இடம் அண்ணல் அம்பேத்கர் பெயர் தாங்கிய நகரமாக மாறுகிறது என்ற சரித்திரத்தை இந்த நாவலில் சிந்து சீனு அவர்கள் தந்திருக்கிறார். கட்டுரைத்தன்மை அதிகமாகவும்ம் நாவல் தன்மை குறைவாகவும் இருக்கிறது. தலித் சமூகநிலை சார்ந்த பல்வேறு காலகட்ட நடவடிக்கைகளை கட்டுரை வடிவில் பல இடங்களில் இந்த நாவலில் சொல்லி இருக்கிறார். தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றியும், விளிம்பு நிலை மக்களைப் பற்றியும், அவர்களின் வாழ்வியல் மற்றும் சாதியக் கொடுமைகள் பற்றியும் பதிவு செய்து வரும் சிந்து சீனு அவர்கள் இந்த நாவலிலும் அதன் இன்னொரு பகுதியை நமக்கு காட்டி இருக்கிறார்.
நூல்: பாபா சாஹிப் டாக்டர் பி ஆர் அம்பேத்கார் நகர்
ஆசிரியர்: சிந்து சீனு
வகைமை: நாவல்
வெளியீடு: லாவண்யா புத்தக நிலையம், வேலூர்
பக்கங்கள்: 120
விலை: ரூ. 150
*********