கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 10 – குறும்படம் ரெடி ஆய்ருச்சேய்…!

மித்ரா

ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேலான அழுத்தத்தில் தன்னிலை மாறத் தொடங்கி விடுகின்றனர். சின்னச்சின்ன விஷயங்கள் பூதாகரமாக வெடிக்கின்றன. அப்பாவி மனிதர்கள் பகடைக்காய் ஆகின்றனர். சம்பந்தமேயில்லாமல் ஏதோ ஒன்றின் ரியாக்சனை யாரோ ஒருவர் வெளிப்படுத்துகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றும் முக்கால்வாசி ஒன்பதாம் நாள் தான் ஒளிபரப்பப்பட்டது. சாக்ஷி சொன்னதை கேட்ட வனிதாவிற்கு, “அபிராமிங்குற பேரே அவ சொல்லலையே” என்பதை பதிலாகச் சொன்னார் முகேன். உடனே சாக்ஷியிடம் சென்ற வனிதா இதைப் பற்றிக் கேட்க அவர், “நீ என்ன குழந்தையா அவ இன்டைரக்டா அவேரா இரு அவேரா இருனு இதைத் தான் சொன்னா.” எனச் சொல்ல “அதையா அப்படிச் சொன்னா?” என அதிர்ச்சி ஆனார் அப்பாவி முகேன். தெளிவு படுத்தும் பொருட்டு மீராவிடமே சென்று, “நீ அபியைப் பத்தி பேசுனயா?” என முகேன் கேட்க, அவர் இல்லையே எனச் சொன்னதும், “சரி அதை அங்க வந்து சொல்லு வா” என முகேன் கூப்பிட, ” கொஞ்சம் வளரு மேன் மெச்சூர்டா பிஹேவ் பண்ணு” என சொல்லிச் சென்று விட்டார் மீரா. டென்சனில் “என்னைப் பைத்தியக்காரனாக்காத” என்று கத்திய முகேனை சேரன் அழைத்து, ” நமக்கு இங்க பேச மட்டும் தான் உரிமையிருக்கு இப்டிலாம் கத்தக் கூடாது வயலன்ஸ்ல எறங்க கூடாது” என அட்வைஸ் செய்தார்.

பின்பு, மதுமிதா அணியினர் ஏதோ பாத்ரூமில் பேசிக் கொண்டிருந்ததை ஷெரின் முகேனிடம் சொல்ல, “நீங்க ரெண்டு பேரும் போய் எல்லார் முன்னாடியும் நாங்க நண்பர்கள் எங்க விஷயத்துல யாரும் தலையிடாதீங்கனு போய் சொல்லுங்க. அப்போ தான் இது சால்வ் ஆகும்” என தீர்ப்பு சொன்னார் வனிதா. அப்படியே செய்தனர் முகேனும் அபிராமியும்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. முதலாவதாக, மீரா முந்தைய நாள் முகேனிடம் பேசத் தொடங்கும் போதே, “மற்றவர்கள் இருக்கும் போது நாம் எதையும் பேச வேண்டாம்” என்றார். பின்பு தான் முகேன் அவரைத் தனியாகக் கூட்டிச் சென்றார். உண்மையில் ஒளிபரப்பப்பட்ட வரை அவர் “என்னிடம் க்ளோஸா இருக்க எல்லாரையும் பிரிக்க நினைக்குறாங்க” என்றே சொன்னார். அது ஏதோ ஓர் காரணத்தினால் தன்னை எல்லோரும் தனிமைப்படுத்தும் போது பற்றிக் கொள்ளக் கிடைத்த ஒரு கொம்பையும் விட்டு விடக் கூடாதென்ற பயமே தவிர வேறில்லை. ஆனால், எதைப் பற்றி மீரா பேசியிருந்தாலும், அதைக் காற்று வாக்கில் கேட்டு விட்டு கேள்வி கேட்கும் ஒருவரிடம் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியமே முகேனுக்கு இல்லை. சொல்லியிருந்தால் ஆமா சொன்னா, இல்லையென்றால் அதெல்லாம் சொல்லல என்றால் முடிந்து விட்டது. தனியே பேச விரும்பி தன்னை நம்பிப் பேசிய ஒருவரை சாட்சி சொல்ல அழைப்பதெல்லாம் உண்மையாகவே இம்மெச்சூர்ட் அணுகுமுறை தான்.

முகேன் மிகவும் அப்பாவியாக அல்லது முட்டாளாக இருக்கிறார். மீரா எதைச் சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை. தன்னை வைத்து வனிதா அணியினர் என்ன கேம் ஆடுகிறார்கள் எனவும் புரியவில்லை. “என்னிடம் ஏன் பேசுவதில்லை” எனக் கேட்ட பெண்ணிற்கெதிராக இன்னொரு பெண்ணை அழைத்துச் சென்று, “இவள் தான் என் பெஸ்ட் ப்ரண்ட் இதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” என யாரோ ஒருவர் சொல்லச் சொன்னதைப் போய் அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் ஒருவர் மீது அன்பு கொண்டிருந்தால் அதை அனைவரிடம் சென்று நாங்கள் நண்பர்கள் என கன்ஃபெஸ் செய்யத் தேவையில்லை. நம் செயல்கள் அதைச் செய்யும்.

அடுத்தது அபிராமி, அந்த தமிழ்ப் பொண்ணு விஷயத்தில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார். மொத்தமாக பழைய அந்தச் சுட்டித் தனம் முழுக்கவே காணாமல் போயிருக்கிறது. இதில் மீரா முகேனிடம் அபி கிட்ட எல்லாம் பேசாத எனச் சொன்னதாக கிளப்பிட விடப் பட்ட சம்பவத்தால் மேலும் டென்சன் ஆனார். “ஏன் என்னிடம் பேசினால் என்ன? நான் கெட்ட பெண்ணா? என்னுடன் பழகினால் அவன் பெயர் கெட்டு விடுமா?” என்றெல்லாம் யோசித்திருப்பார். அவருக்கு அவசரமாகத் தேவைப்பட்டது, முகேன் தன் தோளில் கை போட்டுச் சொன்ன “இவ என் ப்ரண்ட். இவ எனக்கு முக்கியம். யார் என்ன சொன்னாலும் நான் அப்டித் தான் இவ கூடப் பேசுவேன்” என்ற வார்த்தைகள் தான். அது ஒரு அழகான காட்சி. உண்மையில் ஒவ்வொரு பெண்ணும் அத்தகைய அங்கீகாரத்திற்குத் தான் ஏங்குவாள். ஆனால், அதற்காக இப்போது இதை நியாயப்படுத்த முடியாது.

வனிதாவும் எல்லாருடைய எல்லாப் பிரச்சனைகளிலும் தலையிட்டு தீர்ப்பு சொல்லி வழி நடத்துவதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். தான் சார்ந்தோரின் ஒரே குரலாக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறார். அது ஆபத்தானது. நாளை இவர்களே வனிதாவுக்கெதிராகத் திரும்புவார்கள்.

முகேன் மற்றும் அபிராமியின் இந்த நட்புப் பிரகடனத்தின் போது மீரா தூங்கச் சென்று விட்டார். ஆனால், மதுமிதா என்னை ஏன் இழுக்கிறீர்கள் என ஆரம்பிக்க, ஷெரின் அவரிடம் செம்ம அழகாக ஒரு சண்டை போட்டார். பதிலுக்கு மதுமிதா வரிந்து கட்டிக் கொண்டு இறங்க, “இதெல்லாம் நம்ம லெவலுக்கு கீழ ” எனச் சொல்லி வனிதா குழு வெளியேறியது.

இடையில் மதுமிதா கேமராவிடம் சென்று, “இவுங்களுக்குத் தான் தெரியாது உங்ளுக்குத் தெரியும்ல. நான் எதாச்சும் தப்பு பண்றேனா? நீங்க தான் சொல்லனும். வந்து சொல்லுங்க ப்ளீஸ்” எனக் கண்கலங்க பிக் பாஸை பஞ்சாயத்துக்கு அழைத்துக் கொண்டிருந்தார். முழுக்க ஓட்டு வாங்குவதற்கான யுக்தி.

ஆனால் யாரோ ஏதோ சண்டை போட, ” அமைதியா இருங்க” என்று சொன்ன லாஸ்லியாவையும் அழ வைத்து விட்டனர்.

இதற்கெல்லாம் பிறகு, நிகழ்ச்சி முடிய 10 நிமிடம் இருக்கும் போது விடிந்தது பிக் பாஸ் வீட்டின் பத்தாம் நாள் காலை. மார்னிங் மோட்டிவேசனுக்காக, ‘காதலில் சொதப்புவது எப்படி?’ என்ற தலைப்பில் கவின் பேசினார்.

கேப்டன் மோகனிடம் சென்ற வனிதா, “கிச்சன்ல ரொம்ப தூசியா இருக்காம். சேரன் அண்ணாவைக் கொஞ்சம் க்ளீன் பண்ண சொல்லனும்.” என்று சொன்னார். சேரன் அப்போது படு சிசைச்ஸியராக கதவுகளைத் துடைத்துக் கொண்டிருந்தார். அதோடு விட்டிருக்கலாம். மோகனுடன் கூடவே சென்று, அவரே சேரனிடம் சொன்னார். அந்தப் பஞ்சாயத்தை முடித்த சேரன் தனியே மோகனை அழைத்து, “எதாவது சொல்லனும்னா நீங்களே சொல்லுங்க. நீங்க தான் கேப்டன். யார் கேப்டனோ அவுங்க சொல்றதைத் தான் செய்ய முடியும்.” எனக் கூறினார். சொல்லிக் கொண்டிருக்கும் போதே வந்த வனிதா, அணி மாற்றுவதைப் பற்றிப் பேசினார்.

எது எப்படியோ எனக்கு ஒன்னு மட்டும் உறுதியாத் தெரியும். இந்த வாரம் ஒரு குறும்படம் இருக்கு.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button