பிக் பாஸ் 3 – நாள் 11 – ட்ராக் மாறும் காதல்கள்..! வீட்டிற்குள் வந்த போலிஸ்..!
மித்ரா
பத்தாம் நாளின் தொடர்ச்சியாகத் தொடங்கிய பதினோறாம் நாள் பிக்பாஸ் நிகழ்ச்சி, தொடங்கிய வேகத்திலேயே முடிந்து போனது. இடையில் “நீங்கள் கேப்டனாக இல்லாத போது எதையும் என்னிடத்தில் சொல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் கேப்டன் மூலமாகவே கம்யூனிகேட் செய்யுங்கள்” என சேரன் நேரடியாகவே வனிதாவிடம் சொன்னார். பின்னர் வனிதா இனி எதையுமே நான் சேரனிடம் பேசப் போவதில்லை என மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. நேற்றைக்கு முந்தைய நாள் நாளிழ்களில் “பிக் பாஸ் வீட்டுக்குச் சென்ற போலிசார் – குழந்தைக் கடத்தல் வழக்கில் வனிதாவிடம் விசாரணை” எனச் செய்தி வெளியிட்டிருந்தன. நேற்று அதைக் காட்டுவார்களா மாட்டார்களா என யோசித்தேன். ஆனால், சிறிது நேரத்திலேயே வனிதாவை கன்ஃபெசன் அறைக்குள் அழைத்த பிக் பாஸ், உங்களைப் பார்க்க சிலர் வந்திருக்கிறார்கள் என்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த வனிதா, தன் குழந்தை தன்னிடம் இருப்பதை எதிர்த்து கணவர் தரப்பு கொடுத்த புகாரின் சம்பந்தமாக காவல் துறை வந்திருந்ததாகவும், குழந்தை பத்திரமாகத் தன் தாய் கட்டுப்பாட்டில் இருப்பதையும், அது தாயுடன் தான் இருக்க விரும்புகிறது என்பதையும் நிரூபித்தால் போதுமானது. அதற்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும் ரேஷ்மாவிடம் தெரிவித்தார்.
பின்பு, “என்னை அண்ணானு கூப்பிடாதே” என லாஸ்லியாவிடம் வம்பு செய்தார் கவின். இரவில் ” எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும். நீ பேசுற விதம் பிடிக்கும். அண்ணானு சும்மா உன்ன கடுப்பேத்தத் தான் சொன்னேன் ” எனக் கவினிடம் கூறினார் லாஸ்லியா. இரண்டு சம்பவங்களின் போதும் கவினுடன் இருந்தார் சாக்ஷி. கவினுக்கும் சாக்ஷிக்குமான நெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த விஷயம் அபிக்குத் தெரியாது. இடையில் லாஸ்லியா வேறு இருக்கிறார். சில நாட்களில் இது பிரச்சனை ஆகும் என என் ஏழாம் அறிவு சொல்கிறது.
பின்னர் ‘பேட்டை’ திரைப்படப் பாடலோடு விடிந்தது பிக் பாஸ் வீட்டின் பதினோறாம் நாள். மார்னிங் ஆக்டிவிட்டிக்காக, பாத்திமா பாபுவை அனைவருக்கும் செய்தி வாசிக்கக் கற்றுத் தரச் சொல்லி கடிதம் அனுப்பியிருந்தார் பிக் பாஸ் (நம் தொடரைப் படிப்பார் போல).
பாத்திரம் துலக்கும் குழுவினர் உங்களையே அதிகமாக வேலை வாங்குகின்றனர் என்று பாத்திமா பாபு மோகன் வைத்யாவிடம் சொல்லியிருப்பார் போல. அதை கவினும் சாக்ஷியும் தங்கள் குழுவின் கேப்டன் வனிதாவிடம் சொல்ல அவர் மீண்டும் ஒரு சண்டைக்கு லீட் எடுத்தார். ஆனால் யாரும் அவருக்கு கோ ஆபரேட் செய்யவில்லை பாவம். இங்கு ‘ஒரு உறையில் ஒரு கத்தி தான் இருக்க முடியும்’ என்பதைப் போல வீட்டின் டாமினன்ட் யார் என்பதற்கு வனிதா, சேரன், மோகன் வைத்யா, பாத்திமா பாபு மூவரும் போட்டியிடுகின்றனர். வனிதா இயல்பிலேயே அத்தகைய குணம் வாய்ந்தவர் சிரித்து மழுப்பி நல்ல பெயர் வாங்க வராது அவருக்கு. வனிதா, அபிராமி & ஷெரின் அணியினருடன் இருப்பதாலேயே, பாத்திமா பாபு, சரவணன் ஆகியோர் மீரா, மதுமிதா பக்கம் உள்ளனர். சேரனும் கிட்டத்தட்ட அந்தப்பக்கம் தான். ஆனால் அவருக்கு மீராவைப் பிடிக்காது என்பதால் ஒதுங்கியே இருக்கிறார். இவர்களைக் கூட ஒரு கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். மோகன் வைத்யா வஞ்சம் நிறைந்தவர். நேரடியாகப் பேச முடியாமல் எப்படியும் வேறு வழியில் பதிலடி கொடுக்க நினைப்பவர். விரைவிலே எதாவது ஒரு விஷயத்தில் வசமாகச் சிக்குவார் என அவதானிக்கிறேன்.
லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்குக்காக இந்த முறை அன்னப்பறவை அணியினர் அழைக்கப்பட்டனர். தமிழ்ப்பொண்ணு விவகாரத்தில் உடை பற்றிய கேள்வி எழுந்ததிலிருந்து சேலையிலேயே வலம் வரும் மதுமிதா கேசுவல் உடையில் டாஸ்க்குக்காகத் தயாரானார். ஏம்மா அதையும் சேலைலயே செய்ய வேண்டி தான? அப்போ தான கலாச்சாரம் பத்ரமா இருக்கும்.
இடையில் தாங்கள் பேசுவதை லாஸ்லியா தான் அந்த அணியனருக்கு போய் சொல்கிறார் என சந்தேகப்பட்ட ஷெரின் அணியினர் ஏதோ டெஸ்ட் வைக்க, அதைப் போய் லாஸ்லியாவிடம் கேட்டு விட்டார் கவின். லாஸ்லியா உடனே சாக்ஷி மற்றும் அபியுடன் “நான் ஒன்டும் உங்களை தப்பாக நினைக்கவில்லை. நீங்கள் கதைத்ததயே நான் கேட்கவில்லை. கோபிக்கவுமில்லை” என சமாதானத்திற்கு வர, ” இவன் எதுக்கு இதைப் போய் அவ கிட்ட சொன்னான்” எனக் கடுப்பாகினர் ஷெரின் அணியினர். அதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்துக் கொண்டிருந்தார் கவின்.
சாண்டியும், மதுமிதாவும் ஆக்டிவிட்டி ஏரியாவிற்குச் செல்ல அவர்களுக்குப் படித்துக் காட்ட பாத்திமா பாபு சென்றார். அங்கு ஒரு தொட்டியில் சேற்றை குழப்பி வைத்திருந்தனர். அதனுள் இருக்கும் காயின்களை தொட்டிக்குள் இறங்கித் தேடி எடுக்க வேண்டும். எத்தனை காயின்களோ அத்தனை மதிப்பெண்கள். டாஸ்க்கின் முடிவில் அன்னப்பறவை அணி 1000 பாய்ண்டுகளில் 590 பாய்ண்ட்ஸை வீட்டிற்காகப் பெற்றுத் தந்தது.
பின்னர் டெய்லி டாஸ்க்காக, ஆண்கள் வீட்டில் உள்ள பெண்களைப் போல உடையணிந்து அவர்களைப் போல் நடித்துக் காட்ட வேண்டும். கவின் ஷெரினின் குட்டி ஆடையைப் போட்டுக் கொண்டு கூச்சமே இல்லாமல் வீட்டை வலம் வந்தார். தர்ஷன் வனிதாவாகவும், மோகன் மதுமிதாவாகவும், சாண்டி மீராவாகவும் நடித்தனர். பாத்திமா பாபு போல செம்மையாக நடித்தார் சரவணன். வீட்டில் நடந்த சண்டைகளை ஆண்கள் நடித்துக் காட்ட உருண்டு புரண்டு சிரித்தனர் பெண்கள். வாரம் பூராவும் சண்டை போடுபவர்களை ஒரு முறை சந்தோஷப்படுத்த எண்ணிய பிக் பாஸிற்கு பெரிய மனது போல. ஆனால், பாத்திமா பாபு மட்டும் பெரிதாக சரவணன் நடிப்புக்காக மகிழவில்லை. “நான் அப்டியா நடக்குறேன்?” எனக் கேட்டுக் கொண்டிருந்தார். வனிதா போல அட்டகாசமாக நடித்த தர்ஷனுக்கு முதல் பரிசும், சரவணனுக்கு இரண்டாம் பரிசும் சேரன் கையால் வழங்கப் பட்டது.
பிறகு, மோகன் வைத்யா உள்ளிட்ட ஆண்களில் சிலரைப் போல நடித்துக் காட்டினார் மதுமிதா. அதில் முகம் மாறிய மோகனை சரியாக மோப்பம் பிடித்த வனிதா, தனியாக அவரிடம் சென்று “ஏன் புடிக்கலையா உங்களுக்கு? ஏன் உங்க முகம் மாறுச்சு? நான் பாத்துட்டேயிருந்தேன்” எனக் கேட்க, அவர் ” இதுல என்ன இருக்கு நான் அவளை மாதிரிப் பண்ணேன் அவ என்னை மாதிரிப் பண்ணுனா” என்றார். ” ஆமா வேணும்னே பண்ணிருக்கா” என வனிதா திரி தூண்டி விட்டார்.
இதில் இரண்டு புறமும் சரிசமமாக பெர்ஃபார்ம் பண்ணி அனைவரையும் சிரிப்புக்கடலில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் சாண்டி என்றைக்கு பஞ்சாயத்தில் சிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை. அதுவும் நடந்து விட்டால் ஃபங்சன் கலை கட்டிரும்.