கட்டுரைகள்
Trending

பிக் பாஸ் 3 – நாள் 16 – மயானமான பிக்பாஸ் வீடு..!

மித்ரா

முந்தைய சீசன்களைப் போல இல்லாமல் இந்த முறை இரண்டாம் நாளில் இருந்தே கன்டென்ட் மழை பொழியத் தொடங்கியிருந்தது பிக் பாஸ் நிகழ்ச்சியில். ஆனால் நேற்றைய நாளில் கன்டென்ட்டுக்கு எதுவுமில்லை. ஜாலியான எபிசோட். அதனால் நடந்ததை மட்டும் விவரிக்கலாம்.

“வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள…” என்ற பாடலோடு தொடங்கியது பிக் பாஸ் வீட்டின் 16 ஆம் நாள். தூக்கக் கலக்கத்தோடு ஆடிக் கொண்டே வெளியே வந்த போட்டியாளர்களுக்கு வெளியே இருந்த சூழல் ஆச்சரியத்தைக் கொடுத்தது. மயானம் மற்றும் கொலை நடந்த இடம் போல வீட்டிற்கு வெளியே செட் போடப்பட்டிருந்தது. எதோ வித்தியாசமான டாஸ்க் போல என்னவா இருக்கும் என ஹவுஸ்மேட்ஸ் யோசிக்கத் தொடங்கினர். ” அற்புதமா செட் போட்ருக்காங்க. நான் நைட் 12 மணி வரை வெளிய தான் இருந்தேன். அதுக்கப்றம் வந்து நம்ம எந்திரிக்கிறதுக்குள்ள இவ்ளோ வேலை பாத்துருக்காங்க.” எனப் பாராட்டிக் கொண்டிருந்தார் இயக்குனர் சேரன்.

சிறிது நேரத்தில், ” சிறையில் இருந்து இரண்டு கொலையாளிகள் தப்பி இந்த வீட்டுக்குள் நுழைந்து விட்டனர். நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என ஒரு பெண் குரல் அறிவித்தது. உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் ஹவுஸ்மேட்ஸ் விழிக்க, ” இது தான் உங்களின் இந்த வாரத்துக்கான டாஸ்க்” என அறிவித்தார் பிக்பாஸ். பின்பு அபியை கன்பெசன் அறைக்கு அழைத்த பிக்பாஸ், “இந்தக் கட்டையை வைத்து எப்படி கொலையாளியை தாக்குவீங்கனு சொல்லுங்க” எனக் கேட்க அவர் ஏதோ காமெடி செய்தார். பின்பு “இங்கே நடந்ததை வெளியே யாரிடமும் சொல்லாதீங்க” எனச் சொல்லி அனுப்பினார். சும்மா அப்படி சொன்னாரா இல்லை அவர் எதாவது சொல்லி அதை நமக்கு தெரியாமல் ரகசியமாக வைத்துள்ளனரா எனத் தெரியவில்லை.

ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து இதையே செய்து காட்டச் சொன்ன பிக்பாஸ், வனிதாவிடம் “நீங்கள் தான் கொலையாளி. இந்தக் கைபேசியை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது வரும் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” எனக் கூறி அனுப்பினார். முகேன் கொலையாளியின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.

அனைவரும் கொலையாளியை எதிர்பார்த்து கையில் ஆயுதங்களோடு அலைந்து கொண்டிருக்க, முதலாவதாக, “சாக்ஷியின் மேக்கப்பை அவர் கையாலேயே கலைக்க வைக்க வேண்டும். அது தான் முதல் கொலை.” எனத் தகவல் தெரிவித்தார் பிக் பாஸ். வழக்கத்திற்கு மாறான சிரிப்போடு, “நம்ம எல்லாரும் ஹாலோவின் மேக்கப் போட்டுக்கலாமா?” எனக் கேட்டு அதற்காக சாக்ஷி மேக்கப்பைக் கலைக்க வைத்தார் வனிதா. சிறிது நேரத்தில், ஊமைவிழிகள் திரைப்படத்தின் மணிச்சத்தமும் அமானுஷ்ய சத்தங்களும் கேட்டன. ” உங்கள் பலத்த பாதுகாப்பையும் மீறி வீட்டின் முதல் கொலை நடந்து விட்டது. சாக்ஷி தான் கொல்லப்பட்டவர்” என அறிவித்தார் பிக் பாஸ். பின்னர் அவருக்கு ஒரு ஆவி உடை கொடுக்கப்பட்டது. மற்ற போட்டியாளர்கள் அவரை சகல மரியாதைகளோடு மயானத்தில் கொண்டு போய் விட வேண்டும். அடுத்த அறிவிப்பு வரும் வரை அவர் அங்கேயே வசிக்க வேண்டும். ஆவிகளுடன் யாரும் பேச முடியாது. ஆவி பேசுவதும் நமக்கு கேட்காது. ஆனால், சாக்ஷி செம்ம அழகாக ஆவி போல நடந்து கொண்டார்.

பிறகு, மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல டான்ஸ் ஆட வைக்க வேண்டும் என வனிதாவுக்கு கட்டளை வந்தது. “எல்லாரும் எதாச்சும் கேம் ஆடலாம்னு நான் கூப்புட்றேன். நீ டான்ஸ் ஆட வச்சுரு.’ என அந்த ப்ளானை எக்ஸிக்யூட் செய்யும் பொறுப்பை முகேனிடம் கொடுத்தார் வனிதா. திட்டம் வெற்றியடைந்ததும் மோகனும் ஆவியாக மயானத்திற்கு வந்து விட்டார். வனிதாவும் முகேனும் ஒன்றும் தெரியாதவர்கள் போல மற்றவர்களோடு, “யாரா இருக்கும்? என்ன அடிப்படைல கொலை பண்றாங்க?’ என விவாதித்துக் கொண்டிருந்தனர். இடையில் தன்னிடம் ஏதோ பெரிய ரகசியம் சொல்லப்பட்டு விட்டதாகக் கருதி சீன் போட்டுக் கொண்டிருந்த அபிராமியைத் தான் எல்லோரும் சந்தேகிக்கின்றனர். லாஸ்லியாவும் சந்தேக லிஸ்ட்டில் இருக்கிறார். வனிதா வேறு அவ்வப்போது, “அபிராமிக்கு எதோ தெரியும், அவ எதோ பண்றா, சிரிக்குறா” என ட்ராக் மாற்றி விட்டுக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், “டாஸ்க் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப் படுகிறது. நாளை மீண்டும் தொடரும். இப்போது ஆவிகள் இயல்பு நிலைக்குத் திரும்பலாம்” என அறிவித்தார் பிக் பாஸ். ” என்னைய முதல்ல கொலை பண்ணதுக்கு பின்னாடி அபிராமி இருந்தா இதை நான் சும்மாவே விட மாட்டேன்” என குழந்தை போல வனிதாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சாக்ஷி. “சாதாரண டாஸ்க்கா தான் இருக்கும். ரேண்டமா யாரையாவது செலக்ட் பண்ணிருப்பாங்க விடு” என்றார் வனிதா. ” வொய் மீ ஃபர்ஸ்ட்? அபி தான் பண்றா. மதுவும் லாஸ்லியாவும் அவ கூட கூட்டு” என வருத்தப்பட்ட சாக்ஷியிடம் “எதையும் கன்ஃபார்ம் பண்ணாத டாஸ்க் முடிஞ்சதும் பாக்கலாம்” எனச் சொன்னார் வனிதா. இதுவே வனிதா மட்டும் கொலையாளியாக இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப் பார்த்தேன் சிரிப்பு வந்தது.

சாக்ஷியும், மோகனும் பிரச்சனையே இல்லை. இனித் தான் இருக்கப் போகிறது ஆட்டமே. சேரன், மதுமிதா, சரவணன் ஆகியோரைக் கொலை செய்வது தான் வனிதாவிற்கு ரிஸ்க். மாட்டாமல் வேறு இருக்க வேண்டும்.

நேற்றைய Moment of the show, மீரா வனிதாவிடம் இருந்து நம்மைப் பிரிக்க நினைக்கிறார். அதை அனுமதிக்கக் கூடாது என சாக்ஷியும், ஷெரினும் பேசிக் கொண்டது. ஒருவர் யாரிடமாவது மனம் விட்டுப் பேசினால் தான், அவர் நடிக்கிறாரா திட்டம் போடுகிறாரா என்றெல்லாம் தெரியும். மீராவிற்கு அப்படிப் பேச இப்போது வரை அந்த வீட்டில் யாரும் இல்லை. அதனால் அப்படிப்பட்ட எண்ணத்தோடு தான் பழகுகிறாரா என நமக்குத் தெரியாது. ஆனால், சாக்ஷி ஷெரினின் இந்த எண்ணம் அவர்களுக்குத் தான் பாதகமாக முடிய வாய்ப்பிருக்கிறது.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button