கட்டுரைகள்
Trending

பிக்பாஸ் 3 – நாள் 79 & 80 – காதல் ஏன் இப்படிப் பதற்றமடையச் செய்கிறது?

மித்ரா

ஒவ்வொரு முறையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆவலுடன் காத்திருப்பது இந்த ஃப்ரீஸ் டாஸ்க்கிற்குத் தான். மற்ற போட்டியாளர்கள் அனைவரும் ஃப்ரீஸில் இருக்க, தன் குடும்பத்தைப் பார்த்தவர் மட்டும் உணர்ச்சிவயப்படுவார். முதல் சீசனில் எல்லாம் பிக்பாஸ் ரிலீஸ் சொல்லும் வரை யாருமே இயல்பாகாமல் ஃப்ரீஸிலேயே இருப்பார்கள். இப்போது விதிமுறைகளை எல்லாம் தான் பிக்பாஸே மதிப்பதில்லையே.

அதிலும் முதல் சீசனில் சினேகனின் அப்பாவையும், இந்த முறை லாஸ்லியாவின் அப்பாவையும் அழைத்து வந்தது எபிக் ஒன். அதிலும் லாஸ்லியா தன் தந்தை வரப் போகிறார் எனத் தெரிந்த பிறகு உள்ளிருந்து வருவாரா, வெளியேயிருந்து வருவாரா எனத் தெரியாமல் கதறிக் கொண்டே அல்லாடினார் பாருங்கள் எந்தத் திரைப்படமும் காட்சிப்படுத்த முடியாத உணர்வுப்பூர்வ காட்சி அது. வேண்டுமென்றே அவரை வெகுநேரம் அலைக்கழிக்க வைத்ததாகத் தோன்றியது. ஆனால், இதற்காகவே லாஸ்லியாவிற்கு சினிமா வாய்ப்புகள் வரலாம்.

அப்படி 10 வருடங்களாகப் பார்க்காமல் இருந்த, பார்த்துவிட மாட்டோமா என ஏங்கித் தவித்த தன் மகளிடம் வந்ததும் அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதே இப்போது பரவலான பேசுபொருளாகியிருக்கிறது. நிறைய பேர் லாஸ்லியாவின் தந்தைக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் பதிவிட்டு வருகின்றனர். இப்படி எதாவது நடந்தால் தான் நாட்டில் எத்தனை பேர் கமுக்கமாக பிக்பாஸ் பார்த்து வருகிறார்கள் என்று தெரிகிறது. தட் “யோவ் மிலிட்டரி நீ எங்கயா இங்க?” மொமண்ட்.

திரைப்படங்களில் காணும், பல பெண்கள் சொந்த வாழ்விலேயே சந்தித்திருக்கும் அதே காதலுக்கு எதிரான சென்டிமென்ட்டல் ப்ளாக்மெய்ல் காட்சி தான் பிக்பாஸ் வீட்டிலும் நிகழ்ந்தேறியது. இதில் பதறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் அப்படித் தான் செய்வார்கள். குடும்ப அமைப்பு அவர்களை அப்படித் தான் உருவாக்கியிருக்கிறது. திடீர்னு நம்ம போற வேகத்துக்கு அவனை வா’னு சொன்னா அவன் எப்டி வருவான்? அவன் பையத் தான் வருவான். இந்த விசயத்தில் லாஸ்லியாவின் அப்பா செய்த முதல் தவறு அத்தனை வருடமாக பிரிந்து தவித்த தந்தையைப் பார்த்ததும் ஏற்படும் அந்தப் பெண்ணின் உணர்விற்கு மதிப்பு கொடுக்காமல் தன் கௌரவப் பிரச்சனையைப் பற்றிப் பேசியது. இப்போது லாஸ்லியாவிற்கு 24 வயது. 14 வயதில் அப்பாவைக் கடைசியாகப் பார்த்திருப்பார். இத்தனை வருடங்களில், பருவ வயதில், அந்தப் பெண் தந்தை துணையின்றி எத்தனையை இழந்திருப்பார் என அவருக்குத் தான் தெரியும். அவர் தன் தந்தையின் காலைப் பிடித்துக் கொண்டு கதறிய போது உணர்ந்தேன் அதை. ஆனால், அந்த அப்பா அதை அப்படியே உதறித் தள்ளிவிட்டு தன் மானம் போனதை நினைத்து விசனப்பட்டுக் கொண்டிருக்கிறார்.


இங்கு லாஸ்லியா தந்தைக்கு ஆதரவளிக்கும் பெரும்பாலானோரின் கருத்து கவின் நல்லவனில்லை. அதனால் அவர் செய்தது சரி என்பது தான். ஆனால், கவின் நல்லவனாகவே இருந்திருந்தாலும், லாஸ்லியா தர்சனையே காதலித்திருந்தாலும் கூட அவர்கள் இப்படித் தான் நடந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில், லாஸ்லியா சம்பந்தமேயில்லாமல் இலங்கைத்தமிழ் பெண்களின் பிரதிநிதியாக சமூக வலைதளங்களில் பிரகடனப்படுத்தப்படுகிறார். அவர்கள் வைக்கும் அத்தனை விமர்சனங்களையும் ஒன்று விடாமல் படித்து விட்டு அதில் நியாயம் இருப்பதாகவே அவர் பெற்றோர் கருதுகிறார்கள். அவர்கள் தான் சமூகம் என நினைக்கிறார்கள். கவின் குடும்பத்தின் தற்போதைய நிலையும் கண்டிப்பாக அவர்கள் மனதில் இருக்கும். இவற்றையெல்லாம் வைத்து உள்ளே வந்து அந்தப் பெண்ணை கட்டம் கட்டுகின்றனர். அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக.

முதலில் தன் அம்மா வந்து நாசூக்காக சொன்ன போது கூட லாஸ்லியா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. சமாளித்து விடலாம் என்று தான் நினைத்திருப்பார். பெண்பிள்ளைகளுக்குத் தெரியும் தாயை எப்படி சமாளிக்க வேண்டுமென. ஆனால், அப்பா வருவார் இப்படி செய்வார் என்பது லாஸ்லியா எதிர்பார்க்காதது. எந்தக் காலத்திலும் எந்தத் தந்தையும் தன் பெண்ணின் காதலை உடனே, “இது உன் வாழ்வு. உன் விருப்பம் போல் செய்” என ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகம் முழுவதிலுமே அப்படித் தான். ஏனெனில், அது அவருக்கான பொறுப்பு. அந்தப் பொறுப்பு தந்தைக்கு மட்டுமல்ல ஒவ்வொருவருக்குமே இருக்கும். நம் நண்பர்கள் தவறான ஒருவருடன் காதலில் இருந்தால் நாம் பதறித் தான் போவோம். அறிவுரை சொல்வோம். அப்பட்டமாகச் சொன்னால் பிரித்து விடத்தான் பார்ப்போம். லாஸ்லியாவின் அப்பாவும் அதைத் தான் செய்தார். ஆனால், அதற்கு அவர் சொல்லிய காரணங்களும், அதைக் கையாண்ட விதமும் தான் குடும்ப அமைப்பின் கோர முகங்கள்.

“நான் உன்னை அப்படியா வளர்த்தேன்?”

“நீ என் பிள்ளை தானா என சந்தேகமாக உள்ளது.”

“எங்களைத் தலை குனிய வைத்து விட்டாய்.”

“உன்னால் தான் நாங்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறோம்.”

“என் பிள்ளையைப் பற்றி எனக்குத் தெரியும். இதை விட்டு விடு. விட்டு விடுவாய் தானே.”

“ஏன் எங்களைப் பற்றி நீ ஒருமுறை கூட யோசிக்கவேயில்லை.”

“இதை இங்கேயே உதறித் தள்ளி விட்டேன் என்று சொல். இப்போதே சொல்.”

“சமூகம் உன்னைத் தூக்கி எறிந்து விடும்.”

இவைதான் காலங்காலமாக பெண்களின் காதலுக்கு எதிராக இந்தக் குடும்ப மாஃபியாக்கள் செய்யும் வேலை. முதலில் தாங்குதாங்கென்று தாங்கி செல்லமாக வளர்க்க வேண்டியது. பின்னர் அதையே காரணமாகக் காட்டி தன் கௌரவத்திற்காகத் காதலைப் பிரிக்க வேண்டியது.

இதையெல்லாம் உடனே மாற்ற முடியுமா என்றால் முடியாது தான். ஆனால், இதெல்லாம் தான் யோசிக்க வேண்டிய விசயங்கள். முதலில் குடும்பத்தின் மீது, பெண்களின் மீது, காதலின் மீது என சுமத்தியிருக்கும் அத்தனை புனிதங்களையும் அகற்றத் தொடங்கினால் மட்டுமே இதற்கான வழியாவது கண்களுக்குப் புலப்படும். நம் கடமை என்ன? பொறுப்பு என்ன? எதை குடும்பத்திற்காக செய்ய வேண்டும்? எதை நமக்காக செய்ய வேண்டும்? என்பதில் எல்லாம் நமக்குள்ளாகவே ஒரு தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.

“தன் வழியாக வந்தவை என்பதற்காக எந்தப் பறவையும் தன் குஞ்சுகளுக்கு வானில் கோடு கிழிப்பதில்லை.”
– வைரமுத்து.

இதைப் பறவைகள் மட்டுமல்ல. பறவைகள் வழி வந்த குஞ்சுகளும் உணர வேண்டும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button