பிக் பாஸ் 3 – நாள் 23 – தெரியத் தொடங்கியிருக்கும் புதிய முகங்கள் ; கலைக்கப்படத் தயாராகும் முகமூடிகள்
மித்ரா
என் கணக்குப்படி நாள் 24. பிக்பாஸ்ஸில் 23 ஆவது நாள் எனச் சொல்கிறார்கள். ஒரே குழப்பமாக இருக்கிறது. சனிக்கிழமை கமல் வந்த போது, வெள்ளிக்கிழமை நடந்ததைப் பார்ப்போம் என 21 ஆம் நாளை தூங்கும் வரை ஒளிபரப்பி விட்டுத் தான் அடுத்த நாள் என்று கமலைக் காட்டினார்கள். அப்படியென்றால் ஞாயிறு 23 ஆம் நாள். நேற்று 24 ஆம் நாள். ஒருவேளை 100 நாள் கணக்கு நமக்கு மட்டும் தான் போல. என்ன பித்தலாட்டம் பண்றாங்களோ தெரியல. நம்ம அவுங்க சொல்ற கணக்கையே பின்பற்றுவோம். ஆமாங்க. நாள் 23.
இந்த மோகன் வைத்யா இருக்காரே… சமூகத்தின் மிகப் பெரிய ஆபத்து இவர்களைப் போன்றவர்கள் தான். அன்று சரவணன் சிறைக்கு செல்ல மாட்டேன் எனப் பஞ்சாயத்து செய்த போது, “ஏன்டா சித்தப்பு சித்தப்புனு சொல்றீங்க ஒரு பிரச்சனைனா என் பக்கம் நிக்க மாட்றீங்க?” என சாண்டி கவின் உள்ளிட்டோரைக் கடிந்து கொண்டார் அல்லவா? அப்போது சரவணனுக்கு சப்போர்ட்டாக, “அதான ஏன்டா இப்டி பண்ணீங்க?” எனக் கம்பு சுற்றினார். பிறகு அடுத்த நாள் முகேனை அழைத்து, “சரவணன் இப்டிலாம் சொன்னாரே அன்னைக்கு உனக்கு கோவமே வரலையா?” என சாவி கொடுத்துக் கொண்டிருந்தார். நேற்று எபிசோடில் காலை அனைவரும் காபி வர லேட் ஆகி விட்டது என அடுப்புத்திட்டைச் சுற்றி நின்று கொண்டு ஜாலியாக கலாட்டா செய்து கொண்டிருந்தனர். அப்போது வித்வான் தனியே ஒரு கோப்பையில் தனக்காக காபி தயாரித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த சரவணன் உங்களுக்கே இது நியாயமா என அபிநயம் பிடித்து சைகையில் கேட்க, என் உடல்மொழியைத் தான் கிண்டல் செய்கிறார் என மூலையில் அமர்ந்து அழத் தொடங்கி விட்டார். இவர் போன்ற நபர்களின் போக்கே இது தான். தன்னை ஒருவர் காயப்படுத்தினால் அப்போதே ரியாக்ட் செய்யாமல், பின்னால் வந்து நான்கு பேரிடம் கதறி அழுது, வீர வசனம் பேசி, ஆறுதல் வாங்கி, அவர்கள் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கு விஷயம் சென்று தானாக அவர்கள் வந்து வருத்தம் தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். கழிவிறக்கம் தேடும் கோழை மனப்பான்மை. யாரிடனும், எதனிடமும் நேர்மையாக இல்லாமல் சுயநலமாக மட்டுமே யோசிக்கப் பழக்கப்பட்டவர்கள் இவர்கள்.
சரவணன் செய்வதும் தவறு தான். சரவணன் அப்படியே முற்போக்கு, நாகரிகம் போன்ற வாடையே இல்லாத பொதுச் சமூகத்தின் பிரதிபலிப்பு. அதற்காக அவர் ரொம்ப ஆபத்தானவர் என்றெல்லாம் சொல்லி விட முடியாது. ஆனால், அவரின் அந்தத் தன்மையை மாற்றுவது முடியாத காரியம். மற்றவர்களின் இயலாமையை கிண்டல் செய்வது, பெண்களை தனக்கும் கீழே நினைப்பது, வயதில் சிறியவர்களை மதிக்காமல் இருப்பது போன்ற வேலைகளை அவர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அதே நேரத்தில் மற்றவர்கள் காயப்பட்டு விட்டார்கள் எனத் தெரிந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறார். கவனிக்கவும் அவர்களை காயப்படுத்தியதற்காகத் தான் வருத்தம் மற்றபடி தான் பேசியது தவறென அவர் ஒப்புக் கொள்வதில்லை. அப்படித் தான் மோகனின் உடல்மொழியைக் கிண்டல் செய்ததும், அதற்கு கோபமாகவே அவர் வருத்தம் தெரிவித்ததும். உண்மையில் மோகன் வைத்யா தொட்டதுக்கெல்லாம் அழாமல் இருந்து இதற்கு ரியாக்ட் செய்திருந்தால் அனைவரும் இதை சீரியஸாக எடுத்துக் கொண்டிருப்பார்கள் எனத் தோன்றுகிறது.
அடுத்ததாக நடந்த நாமினேசன் ப்ராசசில், வழக்கம் போல மீரா, மோகன் வைத்யா, சரவணன், அபி ஆகியோர் எவிக்சனுக்கு நாமினேட் செய்யப்பட்டனர். ஆம், மது நாமினேட் ஆகவில்லை. சுதாரித்துக் கொண்டு அவர் அடக்கியே வாசிப்பது காரணமாக இருக்கலாம். அவர் மீதிருந்த கோபம் தணிந்து அனைவரும் இயல்பாக அனைவரும் அவரிடம் பேசத் தொடங்கியுள்ளனர். நம் கருத்துகளை நம்பிக்கைகளை நமக்குள்ளேயே வைத்துக் கொண்டு, நாம் மட்டும் பின்பற்றிக் கொண்டு, அடுத்தவர் விறுப்பு வெறுப்புகளில், சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்க வேண்டும் என்ற நாகரீகத்தை அவர் கற்றுக் கொண்டிருந்தாலே, இனி வீட்டில் யாரோடும் எந்தப் பிரச்சனையும் அவருக்கு ஏற்படாது.
கவினும் லாஸ்லியாவும் நெருங்கத் தொடங்கியுள்ளனர். கவின்-சாக்ஷி இடையிலான காட்சிகளை ஒளிபரப்பாமல் லாஸ்லியா சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் ஒளிபரப்பி வருகிறார்கள். சீக்கிரம் நாம் ஒரு சர்ப்ரைஸ் பிரச்சனைய எதிர்பார்க்கலாம். எனக்குத் தெரிந்து கவின் போன்ற ஆட்களுக்கு தன்னிடம் ஒரு பெண் நெருங்காமல் இருப்பது மனவுளைச்சலை ஏற்படுத்தும். எப்படியும் அவளை இம்ப்ரெஸ் செய்ய நினைப்பார்கள். அப்படித் தான் கவின் லாஸ்லியா பின்னால் சுற்றி வருகிறார். பார்க்கும் போதெல்லாம் சலிக்காமல் தன்னிலை விளக்கம் கொடுத்து தன்னை நம்ப வைக்கிறார். அதற்கான பலனும் கை கூடி வருகிறது. சாக்ஷி போல அல்ல, லாஸ்லியா உண்மையாக கவினுடனான உறவில் இறங்கத் தயாராகி விட்டால் சிக்கல் தான். பெரும்பஞ்சாயத்து காத்திருக்கிறது என்றே தோன்றுகிறது.
வனிதா சென்ற பிறகு அவருக்குப் பிறகு தான் தான் வீட்டின் ரவுடி என நினைத்துக் கொண்டிருக்கிறார் மீரா. உண்மையில் அவர் ஒரு காமெடி பீஸ். பதற்றம் நிறைந்த ஒருவரால் சரியான விஷயத்தைக் கூட சரியாகச் செய்ய முடியாது. பின்னெப்படி சண்டையெல்லாம்? மீரா எந்த பிரச்சனையென்றாலும் மாற்றிப் மாற்றிப் பேசி நம்பகத்தன்மையை இழந்திருப்பது தன்னை நல்லவளாக, நேர்மையானவளாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற பதற்றத்தினால் தான்.
இப்போது, நான் அப்டி, நான் இப்டி, நான் இனிமே சும்மா விட மாட்டேன், அசிங்க அசிங்கமா கேப்பேன் எனச் சொல்வதெல்லாம் சிரிக்கத் தான் வைக்கிறது. யாராவது எதாவது சொல்லி விட்டால் அழுது கொண்டே இடத்தை காலி செய்ய மட்டும் தான் வரும் மீராவுக்கு. ஆனால் அது அவருக்கே தெரியாது பாவம். தன்னைக் கடுமையான போட்டியாளராக நம்பிக் கொண்டிருக்கிறார்.
எது எப்படியோ வனிதா சென்ற பிறகு வீட்டின் கன்டென்ட் சப்ளையர் யார் என இன்னும் முடிவாகவில்லை. ஆனால், பலர் நிம்மதியாக தாங்கள் நினைப்பதைப் பேசத் தொடங்கியிருப்பது போலத் தெரிகிறது. மீராவும் சென்று விட்டால், காதல் கதைகளை வைத்துத் தான் பிக் பாஸ் பஞ்சாயத்து செய்ய வேண்டியிருக்கும். உள்ளே இருப்பவர்கள் எல்லாம் அத்தனை தெளிவு பாஸு.