சிறுகதைகள்

எஞ்சியிருக்கும் துயில் – ஜீவ கரிகாலன்

சிறுகதை | வாசகசாலை

அது நள்ளிரவோ அல்லது கொஞ்சம் பின்னரோ இருக்கலாம். விடிவெள்ளிக்கு வலதுபுறமாய் உப்பிய நிலையில் வெளிர் நீலத்தைப் பாய்ச்சி நகரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது பௌர்ணமி. தொடர்ந்து ஆறு மாதங்களாக அண்ணாமலையாரை வலம் வந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று என் வீட்டின் கட்டிலில், அருகில் சக்தியின் மூச்சு உஷ்ணம். மொபைலில் நேரம் என்ன என்று கூடப் பார்க்கத் தோன்றவில்லை. சவமாகப் படுத்திருப்பதாய் தோன்றியது. 

“உடலை விட்டு எழுந்து பார்ப்போமா?” இப்போதெல்லாம் அடிக்கடி இப்படி எண்ணங்கள் வருகின்றன. 

விடிவெள்ளியின் அருகிலேயே ஒன்றிரண்டு நட்சத்திரங்கள் தெரிந்தன. மீன ராசி நட்சத்திரங்கள். நீளமாக ஒரு புள்ளியில் இருந்து வேறு திசைக்குச் செல்லும் நட்சத்திரத் தொகுதி அது. ஸ்டெல்லாரியம் செயலியைக் கொண்டு நட்சத்திரங்களின் பெயர்களைப் பார்த்துக்கொண்டே இரவெல்லாம் கழிப்பது. அபார்ட்மெண்ட்வாசிகள் ‘கிறுக்கன்’ என்று சொல்வதும், பகடி செய்வதும் என்னைக் காயப்படுத்தாது. இப்போதெல்லாம் வெறும் கண்களால் தேடுவது ஒரு ஆறுதல்தான்.

“இன்னும் மூணு பவுர்ணமிதான வந்துடுடா…” என்ற கன்ராஜ்க்கு பதில் சொல்ல வார்த்தைகள் கூட இல்லை. அழைப்புகளுக்கும் செய்திகளுக்கும் பதில் எதுவும் தரவில்லை. என்ன தருவது? வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீர்ந்து கொண்டிருக்கின்றன.

சக்தி அழும்போதெல்லாம் விடும் சாபம் இதுதான், “நாக்கு இருக்கு, பேசத் தெரியுங்குறதால எத்தனை ஆழமா காயப்படுத்தற, என்னிக்காவது நீ சொன்ன வார்த்தைங்களே உன்னெ திங்க ஆரம்பிக்கும்டா.”

திங்கத்தான் ஆரம்பித்து விட்டது. ஆம், அந்த வார்த்தைகளுக்குப் பற்கள் இருந்தன.

“எல்லாவற்றையும் கடந்து விடு. எஞ்சியிருப்பது எது என்று கவனி. அவற்றை சரி செய். உனக்கு மந்திரமெல்லாம் வேலை செய்யாது.”

கன்ராஜ் சொல்லி ரொம்ப நாளாகக் காத்துக் கொண்டிருந்த அகோரியின் அனுமதி போன பௌர்ணமிக்கு கிடைத்தது. காசியிலிருந்து ஐந்து ஆண்டுகளாய் அவர் இங்கிருக்கும் கோயில்களுக்கு வந்து சென்று கொண்டிருப்பதாகச் சொன்னான். அவர் பூர்வீக நினைவு வந்ததாகவும், அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் என்பதால் சில வேலைகளை முடிக்க இங்கே சுற்றுவதாகவும் சொல்லியிருந்தான். அவர் பார்வை பட்டாலே இத்தனை நாள் இழுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கிட்டும் என்று நம்பியிருந்தான் கன்ராஜ். நான் எல்லா வழிகளையும் தேடுவதற்கு முயன்று கொண்டிருந்தேன்.

அவரைச் சந்திப்பதற்காக ஒன்பது பௌர்ணமிக்கு என்னுடன் சேர்ந்து அவனும் வேண்டிக் கொண்டான். கண்ணா, நான், பாபு, கன்ராஜ் என ஒருகாலத்தில் பைக்கில் சென்று வந்த ஊர்தான். இப்போது நிலைமை மாறிவிட்டது, வயதாகிவிட்டதாக எங்களை நாங்களே குறுக்கிக் கொண்டோம். முதலிரண்டு முறை நண்பனுடைய காரில் பெட்ரோல் போட்டு ஒரு ட்ரைவரை வாடகைக்கு எடுத்துப் போய் வந்தோம். அதற்குப் பின்னர் பேருந்துதான். ஆறாவது மாதம், சென்று கொண்டிருந்த பேருந்திலே உடன் பயணித்தவரைத்தான் பார்க்கப் போகிறேன் என்று தெரியாமல் கன்ராஜோடு பேசிக் கொண்டிருந்தேன்.

திண்டிவனம் பேருந்து நிலையத்தில் ஏறினார் அவர். திருவண்ணாமலைக்கு அதுவும் பவுர்ணமியில் காவியுடை அணிந்து வருபவர்கள் கணிசமாக இருப்பதால், என்னருகில் வந்து நின்று கொண்டிருப்பவரை கவனிக்கவில்லை. யாரோ ஒரு பரதேசி சிவனடியார் என்கிற ரீதியில்தான் அவரை கவனிக்காமல் கன்ராஜோடு பேசிக் கொண்டிருந்தேன். கன்ராஜுக்கும் அவரை யாரென்று தெரியவில்லை. நகரத்தார் சங்கத்தில் இருக்கின்ற நண்பன் வாயிலாகத்தான் அந்த அகோரிச் சித்தரை சந்திக்க ஏற்பாடு செய்திருந்தான். 

திடீரென்று கையில் வைத்திருந்த சிறு தடியால் என் தலையில் அடிக்க, விருட்டென்று எழுந்து அவரை அடிக்கச் சென்றேன். அது அப்பேருந்தின் சீரற்ற பயணத்தைக் கலைத்து ஓரங்கட்ட வைத்தது. ‘என் வாயிலிருந்தா அத்தனை கெட்ட வார்த்தை…’ என்று பேருந்திலிருந்த அனைவரும் முகம் சுழித்தார்கள். என் மிரட்டலுக்கு அடி பணிந்து நடத்துனர் அப்பரதேசியை கீழே இறக்கி விட்டார். ஒருவேளை இவர்தான் அகோரியோ என்கிற ஐயம் வந்தபோதும் அத்தனை பேர் முன்னால் என்னை அடித்தது என் கட்டுப்பாட்டைக் காணாமல் செய்தது.

ஆனால், இதே கோபத்தோடு நான் நடக்க வேண்டியவர்களிடம் நடந்திருக்கிறேனா?

கிரிவலம் ஆரம்பித்தாலே என் மனம் முழுக்க மீனுவைச் சுற்றியே இருக்கும். குபேரலிங்கத்தைத் தவிர எல்லா லிங்கத்தையும் தரிசித்து விடுவோம். ஒவ்வொரு ஸ்தலத்திலும் ஒரு ஓரமாய் உட்கார்ந்து கண் மூடுவேன். மனம்  “மீனு மீனு” என்று கேவிக்கேவி அழும். அரோகராவும் நமச்சிவாயமும் உரத்துக் கேட்கும் இடங்களில் ‘மீனு’ என்று சத்தம் போட்டே நானும் அழுது பார்ப்பேன். எப்படியாவது மீனுவை அல்லது அந்த பாரத்தை, திரும்பச் சுமக்க இயலாத என் மீனுவை, பாரம் கூடிக் கொண்டிருக்கும் அவள் நினைவுகளை எங்கேயாவது இறக்கி வைத்து விட முடியாதா என்று தோன்றும்.

ரமணர், விசிறி சாமியார், சேஷாத்திரி ஸ்வாமிகள் என்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கியும் பார்த்தேன். அந்த நாட்களில் சக்தியின் அழைப்பைக் கூட ஏற்பதில்லை. சக்திக்கு நான் திருவண்ணாமலை வருவதே பிடிக்காது. அவள் அழுது தீர்த்துவிட்டாளோ என்னவோ இப்போதெல்லாம் மீனு அவளுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை. திடீரென்று மவுனமாக ஒன்றிரண்டு மணி நேரம் இருப்பாள். முன்னர் போல் நாள் கிழமை வழிபாடுகளையும் தவிர்த்தவள் தனது பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விட்டாள். இப்போதும் ஒரு பள்ளிப் பேருந்தை பார்த்தால் மனம் பதைபதைக்கிறது.

நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை தரிசனத்திற்காகக் கட்டி வைத்திருந்த விடுதி அது. விடுதி மேலாளர் எப்படியோ என்னை அடையாளம் கண்டு கொண்டார். அவர்தான் இந்த அகோரி பற்றிய செய்தியை கன்ராஜுக்குத் தெரிவித்தது.

“சார் நீங்க முடிச்சூர்தான, என்னைய ஞாபகம் இருக்கா. நானும் வரதராஜபுரம்லதான் இருந்தேன்.”

என்னை நினைவில் வைத்திருந்தது ஆச்சரியம்தான். அன்று தமிழ்நாடு முழுக்கப் பேசினார்கள். சில ஆங்கில ஊடகங்களிலும் ஒரு திரைப்படத்திலும் கூட மீனுவைப் பற்றிப் பேசினார்கள். நிறைய விவாதங்களில் மீனுவைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னமும் பேசிக் கொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால், அது எல்லாம் மீனுவைப் பற்றி மட்டுமல்ல, அவர்களுக்கு நிறைய பெயர்கள் செய்திகளின் வழியே அறிமுகமாகி இருந்தன. அவர்களும் மீனுவாக இருந்தார்கள். என் மீனு மறக்கடிக்கப்பட்டாள். சமீபத்தில் நண்பர்களின் ஏற்பாட்டில் ஒரு வாய்ப்பு எடுத்துக்கொண்டு எனக்கு வரும் மிரட்டல்களைச் சொல்லியும் எந்தப் பலனுமில்லை. அடுத்த முறை கேட்கும்போது, டி.ஆர்.பி இல்லை என்பதால் முடியாது என்று சொல்லி விட்டார்கள்.

விடுதி மேலாளர் எப்படியோ நடந்தவற்றை மறக்காமல் இருந்தார். முதல் வாரம் மட்டும் போய் வரலாம் என்று நினைத்திருந்த எங்களை ஒன்பது பவுர்ணமிகள் தொடர்ந்து வரச் சொல்லியிருந்தார். அதற்குள் அகோரியிடம் அனுமதி வாங்கி விடலாம் என்றும் நம்பிக்கை தந்தார். அடுத்து மாசி, பங்குனி, சித்ரா பவுர்ணமியோடு முடிந்து விடும் என ஒரு நம்பிக்கை. அதற்குள் அகோரியின் பார்வை பட்டால் தீர்வு கிடைக்கும் என்றார்கள். 

40க்கு மேல என்ன தீர்வு, இன்னொரு கொழந்தையவா சுமக்க முடியும்? அதையாவது இப்படிக் காவு கொடுக்காம வாழ வைக்க முடியுமா?

“நம சிவாய”

அந்த தை மாத முழுநிலவில் அகோரிக்காக காத்திருந்த இடத்தில் அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல ஆண்டுகளாகக் காரைக்குடியிலிருந்து வரும் அக்குடும்பமும் அவர்கள் சொந்தமும் அன்னதானம் செய்து வருகிறதாம். வலம் வந்து கொண்டிருந்த மக்களின் கூட்டம் குறையவே இல்லை. ஒவ்வொரு பவுர்ணமிக்கும் கூடத்தான் செய்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஐயப்பா சேவா சங்கம், சாய்பாபா மன்றங்கள், ஆதிபராசக்தி வழிபாட்டுக் கூடங்கள் போலே, சதுரகிரி பக்தர்கள், திருவண்ணாமலை, பர்வதமலை என்று பக்த சங்கங்கள் பெருகி வருகின்றன. ட்ராவல்ஸ் வைத்து நடத்திக் கொண்டிருந்த நான், மீனுவுக்குப் பிறகு எல்லா வண்டிகளையும் விற்று விட்டேன்.

“எல்லாம் எங்க சந்ததிகளுக்குத்தான் ஸார், புண்ணியம் சேர்க்க காசில்லாததால உடலுழைப்பு தரேன்.” என்றபடி விடுதி மேலாளர் மும்முரமாக அன்னதானப் பணிகளை மேற்கொண்டிருந்தார். 

அவரவர்கள் தங்களது சந்ததிகளுக்காகப் பாவங்களைக் கழிக்கிறார்கள். புண்ணியங்களைச் சேர்க்கிறார்கள். என்னவெல்லாமோ செய்கிறார்கள். மீனுவுக்காக நான் இனி ஒன்றே ஒன்றைத்தான் செய்ய முடியும். 

நீதி என்பதோ நமசிவாய என்பதோ நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல்தான். அது கிடைக்கவில்லை என்றாலும் தேடல் இருந்தால் விடுவதில்லை. தீர்ப்பில் வந்த பத்து லட்சத்தையும் பெற்றுக் கொள்ளாமல் மேல் முறையீடு செய்வது வீண் என்றாள் சக்தி. அவளை அடித்திருந்தால் கூட இத்தனை குற்றமாக மாறியிருக்குமா தெரியாது.

“ஓ உனக்கு பணம் போதும்னா…..” என்று தொடங்கிய அவற்றைக் கேட்டிருக்கக் கூடாது. அன்றுதான் என்னைச் சபித்தாள். 

“உன் வார்த்தைகளே உன்னைத் திங்க ஆரம்பித்துவிடும்டா..”

என்னளவில் மனிதர்களுக்கான இடம் சீழ் பிடித்திருந்தது. அதில் சக்தியும் கன்ராஜும் கூட அடக்கம். மனதளவில் அவர்களோடு எந்த ஒட்டுதலும் இல்லை. அவர்கள் என்னோடு பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஆதலால் நானும்.

எட்டு வருடங்களிருக்கும், அந்த சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே முடிச்சூரிலிருந்து ஊரப்பாக்கத்திற்கு இடம் பெயர்ந்தோம். சக்தி வேலையை மாற்றிக் கொண்டாள். வழக்குப் போடுவதற்காக அலையும்போதே பெரிய பெரிய பிரச்சனைகள் வந்தன. முதலில் எம்.சி.ஓ.பி ஏஜெண்ட்டுகளை சமாளிப்பதற்குள்ளேயே வழக்குப் போடுவது குறித்த அவசியம் இருக்கிறதா என சந்தேகம் வந்துவிட்டது. பின்னர் கம்யூனிஸ்ட் அலுவலகத்திலிருந்தே தோழர் ஒருவர் வந்திருந்தார். அவரது ஆலோசனைப்படி மூத்த வக்கீலைச் சந்தித்தோம்.

வழக்கு ஆரம்பிக்கும்போதே, “இரண்டு மூன்று வருடம் ஆகும்…” என்று சொன்னார்கள். ஆகிவிட்டது. ஏழரை வருடங்கள் ஆகிவிட்டது. இதற்கிடையில் எத்தனை சமாதானத் தூதுகள், மிரட்டல் தூதுகள், தீர்ப்பாயம் கொடுத்த அபராதம் எனும் கண் துடைப்பு.

அன்றும் அப்படித்தான். மேல்முறையீட்டிற்காக வக்கீல் தோழரோடு போனில் பேசி முடித்தபோது,

“மாமா!! இன்னும் எத்தனை வருசம்தான் போராட முடியும்… இப்பலாம் யார் யாரோ போன் பண்ணி மிரட்டுறாங்க.”

“சீ… நீயெல்லாம் ஒரு மனுஷியா… உன் கர்ப்பத்துலதான சுமந்த அவளை? உனக்காகத்தான்டி நான் சட்டத்தோட போராடிக்கிட்டு இருக்கேன். இல்லன்னா எம் மீனு போன எடத்துக்கே எல்லாத்தையும் அனுப்பி வச்சுருப்பேன். அவனுக்கும் புள்ளைக்குட்டி இருக்கும்ல.”

“எனக்காகன்னு மட்டும் சொல்லாத மாமா…”

அவள் அவ்வளவுதான் சொன்னாள். எனக்கு எங்கள் காதலைக் கொல்லும் வார்த்தைகள் தெரிந்திருந்ததை அன்றைக்குத்தான் தெரிந்து கொண்டேன். அன்று முதல் ஒருவரையொருவர் முகம் பார்த்துக் கூடப் பேசியதில்லை. சமையல் உட்பட எல்லாமே சைகையிலும், தேவைப்பட்டால் ஒரு சில சொற்களும்தான். ஆனாலும் அவள் என் மேல் அதுவரை கொள்ளாத வைராக்கியத்தை ஏதாவது ஒருவகையில் அவ்வப்போது ஏசி விட்டுக் கொண்டுதான் இருந்தேன்.

“கொள்ளைல போவா.. உன்னையப் போயி நாய் மாதிரி தொரத்தி வந்தேனே… ச்சீ..”

ஒருநாள் செய்தியிலேயே, “வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லி மிரட்டுறாங்க…” என்று எதிர்கட்சி சேனலில் பேட்டி கொடுத்தேன். சென்ற மாத கிரிவலத்தின் போது எதிர்பாராத அளவு வீட்டுக்குள்ளேயே புகுந்து சக்தியை மிரட்டியிருக்கிறார்கள்.

சக்தியின் பயத்தைப் போக்குவதற்காக, சில வருடங்களுக்குப் பிறகு அவளோடு கட்டிலில் ஒன்றாக உறங்க ஆரம்பித்தது கடந்த பவுர்ணமியிலிருந்துதான்.

***

அன்று அகோரிக்காகக் காத்திருந்து மணி 11:30 ஆகிவிட்டது. அநேகமாக அவர் வரமாட்டார் என்று சிலர் கிளம்ப ஆரம்பித்து விட்டனர். நான் சந்தேகித்தது போலவே அகோரி அவர்தான்.

அவரது தோற்றம் இன்னும் வேறாகியிருந்தது. என்னைப் பார்க்கும்போதே ஒரு ஏளனச்சிரிப்பு இருந்தது. ஒவ்வொரு பவுர்ணமியிலும் அதிகபட்சம் 10 பேருக்குத்தான் ஆசி வழங்குவார்.

இரண்டு கற்கள் மீது தண்ணீர் தெளிக்க அவ்விரண்டும் இரண்டடி வரை எழுந்து ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டு கீழே விழுந்தன. எனக்கு இதைப் பார்ப்பதில் எதுவும் ஆச்சரியப்படுத்தவோ பயமுறுத்தவோ செய்யவில்லை. அவை பெரும்பாலும் செய்வினை வைப்பதும் எடுப்பதுமான சடங்குகள்தான். உடனிருந்த இருவர்களில் ஒருவன் அவ்வப்போது சங்கை எடுத்து சப்தத்தோடு ஊதினான். பத்தடி தாண்டி சாலைகளில் செல்பவர்கள் வலம் வந்தபடியே, “அரோகரா அரோகரா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அகோரி இந்தி, தமிழ், தெலுங்கு, நல்ல மேற்குலகத் தரத்துடன் கூடிய ஆங்கிலம் என மாறி மாறிப் பேசிக் கொண்டு இருந்தார். கற்களைத்தானே மேலெழும்பச் செய்ய முடியும். மீனுவைக் கொண்டு வர முடியுமா?

என் முறை வந்தது. 

“Tell me u dog”

அவருக்கு என் மீது கோபமிருந்தது போல் தெரியவில்லை. நான் ஏன் அழ ஆரம்பித்தேன் என்று இப்போது வரை தெரியவில்லை.

“அவனுங்க சாகனும். என் மீனுவைக் கொன்னவங்க, அதற்கு உடந்தையா இருந்தவங்க, அதிகாரிங்க, இதை கண்டுகொள்ளாம விட்ட எல்லாரும் நாசமாப் போகனும். அந்த முதலமைச்சரும், மறந்து போன எல்லோரும்தான்..”

மீண்டும் தலையில் தன் தடியால் ஒரு அடி, இந்த முறை வலிக்காமல் ஒரு தட்டுதான்.

“உட்டோ”

கன்ராஜ் அவரிடம் வந்து, “சாமி இப்ப வரைக்கும் கோர்ட் கேசுன்னு அலையுறான். வீட்ல இவனை நம்பியும் ஒருத்தி இருக்கா. அவளையும் மிரட்ட ஆரம்பிச்சிட்டாங்க. புள்ள சாகுறதுக்கு 14 நாள் முன்னாடிதான் பஸ்ஸுக்கு எஃப் சி பார்த்துருக்காங்க படுபாவிங்க. அதான் செஞ்சுட்ருந்த தொழிலையும் விட்டுட்டு பைத்தியமா அலையுறான்.”

“த்தூ.. உனக்கு மந்திரமெல்லாம் கெடையாது.”

அவர் மேல் ஆத்திரம் வந்தது.

அவர் கண்களையே பார்த்தான். அது நான் பேசிய வார்த்தைகளை, அதன் ஆழத்தை, அதன் பற்களின் கூர் எத்தனை என்று பார்த்தது.

“எல்லாவற்றையும் கடந்து விடு. எஞ்சியிருப்பது எது என்று கவனி. அவற்றைச் சரி செய். உனக்கு மந்திரமெல்லாம் வேலை செய்யாது.”

”சாமி நீங்களே இப்படி சொல்றிங்களே…”

“அரே ஜாவ்” என்றபடி கன்ராஜைத் தடியால் அடிக்க இருவரும் வெளியேறினோம். அதன் பின் நாலரை மணிக்குள் வலம் வந்து முடித்தோம். எதுவும் பேசிக் கொள்ளவில்லை. 

கன்ராஜ் சமாதானப்படுத்தினான்.

“நாம எதுக்கு இங்கே அலையறோம்னு தெரியலடா. அவர் சொன்னதுல விடை இருக்கான்னு தெரியல. இன்னும் மூணு பவுர்ணமிக்கு வந்து பார்ப்போம்.. நல்ல தீர்ப்பு வாராமலா போகும்? அடுத்த வருசம் தேர்தல் வேற வருதுல்ல.. ஏதாச்சும் நடக்கும். இன்னமும் தூங்காமக் கொள்ளாம இப்படியேதான் இருக்கப் போறியா? சக்தி மட்டும் தூங்கறான்னு நெனைக்கறியா?”

“ஏன் அவ சகஜமாத்தான இருக்கா?”

“நீதான் சகஜமா இருக்க. உனக்கு நடந்தது யாருக்கு நடந்தாலும் இப்படித்தான் இருப்பாங்க. பழிவாங்கனும், ஞாயம் கெடைக்கனும்னு. ஆனா சக்திதான்…”

‘ஏன் அவளுக்கு என்ன?”

“எனக்குத் தெரிஞ்ச மெடிக்கல்ஸ்ல அவுங்க தொடர்ந்து தூக்க மாத்திர வாங்கிட்டு இருக்காங்க.”

‘அதுவரை ஏன் சொல்லாமல் இருந்தான்?’ எனக் கேட்டிருக்கலாம்தான். ஆனால் அதற்குப் பின் மவுனமாக ஊர் திரும்பினோம்.

***

அவன் வேண்டுதலும் ஒன்பது பவுர்ணமிகள்தான். அவனுக்கு சந்ததி இருக்கிறது. அவனுக்கு வேண்டுதல்கள் பூர்த்தியாகட்டும். நான் இந்த முறை செல்லவில்லை. தொடர்ந்து அவனது அழைப்புகளையும் எடுக்கவில்லை. 

“உடனடியாக ஒரு கார் பிடித்து வா. அகோரி உன்னை சந்திக்கனும் என்று சொன்னார்.” எனத் தகவல் அனுப்பியிருந்தான். அப்போதும் கிளம்பவில்லை. கட்டிலில் படுத்துக் கிடந்தேன். தூக்கம் எப்போதும் போல வந்து கலைந்து விளையாடியது.

மனதிற்குள்ளேயே சிவபுராணத்தைச் சொல்லி வந்தேன்.

“புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாயக் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.”

எதுவோ ஒன்று என்னை இங்கேயே நிறுத்தப் பணித்தது. மீண்டும் மீனுவைத் தேட ஆரம்பித்தேன். நீலம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துக் கொண்டிருந்தது.  

சக்தி கண் விழித்தால் வழக்கம் போல் ஜன்னல் வழி நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருப்பதாய் தலையில் அடித்துக் கொள்வாள். 

“மாமா தூங்கலையா?”

”சக்தி நீயும்…?” என்று கேட்டபடியே ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“மீனுவ நட்சத்திரமா பாக்குறியா மாமா?”

”அவளைத் தேடிக்கிட்டே இருக்கிறேன் சக்தி. என்னைக்கு அவுங்களுக்கு தண்டனை கிடைக்குதோ அன்னைக்கு என் கண்ணுக்குத் தெரிவா.”

ஜன்னலைப் பார்த்துக்கொண்டே அவளைக் கேட்டேன்.

”ஏம்மா கேட்குறேன்னு கோச்சுக்காத. மீனுவை நீ தேடலையா?”

“நான் தேடலை மாமா. அவ இன்னும் எனக்குள்ளதான் இருக்கா. எங்க இருந்து வந்தாளோ அங்கதான் இருக்கா… உனக்கு நட்சத்திரமா பார்க்கனுமா மாமா? நானும் அவளை அப்படித்தான் பார்த்துக்கிட்டு இருக்கேன். நமக்குள்ளயும் எல்லாமே இருக்குதான…?”

“எஞ்சியிருப்பவள்”

யாரோ என் காதில் வந்து சொன்னது போல் இருந்தது. நல்ல தெளிவான வெங்கலக் குரல். நிச்சயமாக என் புறச்செவிகள் உணர்ந்த வார்த்தைதான். ஒருவேளை அவற்றை நான்தான் சொன்னேனா? இல்லை, அது அகோரிதானா?

“எஞ்சியிருக்கும் ஒன்றே ஒன்று.”

மறுபடியும் அது தொடர்ந்தது…

“உனக்கு மந்திரமெல்லாம் பலிக்காது. எஞ்சியிருக்கிறத காப்பாத்திக் கொள். அதை பாதுகாத்துக்க, பத்திரப்படுத்திக்க. ஆனா, எடுத்த காரியத்தை நிறுத்தாத.” 

அவள் எழுந்து அமர்ந்தபடி என்னைத் தலை சாய்த்துப் பார்த்தாள். உதடுகள் வலப்புறமாய் குவிந்திட, அவள் கண்களில் முத்தமிட்டேன். வலது, இடது. மீண்டும் ஒருமுறை.

மீனுவைப் போல் என் மீது தன்னைக் கிடத்தியபடி தலை சாய்த்துக் கொண்டாள். பேச்சற்று இருந்த என் மீது தூங்கியே போனாள். அது மீனுவின் வாசமாக இருந்தது. மீனுவுக்குத்தான் சக்தியின் வாசம். மீனுவைப் போலே அவள் பின்னங்கழுத்தில் என் இரண்டு விரல்களை வைத்துக் குவித்தும் நீவி விட்டும் அவளை உறங்க வைத்தேன்.

எஞ்சியிருப்பது சக்தி மட்டுமே. 

அவளுக்காகத்தான் இனி எல்லாமும். மீனுவைப் போன்று ஒவ்வொரு வருடமும் ஓட்டை விழுந்த பேருந்துகள் பற்றிய செய்திகள் வெளி வருகின்றன. ஆழ்துளைக் கிணறுகள் போலே இன்னும் எத்தனையோ இடர்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால் சக்திக்காக இத்தனை நாட்களில் நான் என்னதான் செய்திருக்கிறேன்?

கன்ராஜிடமிருந்து மறுபடியும் ஒரு குறுந்தகவல் செய்தி. நான் பார்க்கவில்லை. இருப்பினும், அவன் என்ன அனுப்பியிருப்பான் என எனக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது.

“நமசிவாய…”

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

  1. எல்லாவற்றையும் கடந்து விடு. எஞ்சியிருப்பது எது என்று கவனி. அவற்றை சரி செய். உனக்கு மந்திரமெல்லாம் வேலை செய்யாது.”

    புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாயக் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்.

    ஆம், அந்த வார்த்தைகளுக்குப் பற்கள் இருந்தன.

    ??????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button