இணைய இதழ்இணைய இதழ் 92சிறுகதைகள்

ஹான்ஸ் பழனிச்சாமி – வா.மு.கோமு

சிறுகதை | வாசகசாலை

ழனிச்சாமி கிராமத்தான். அவனது கிராமத்திலிருந்து ஆறேழு கிலோ மீட்டர் நான்கு திசைகளிலும் எங்கு சென்றாலும் குறுநகரை அடையலாம். பேருந்து வசதி குறிப்பிட்ட நேரத்திற்கு இருக்கிறது. மூன்று அரசாங்க பேருந்துகள் நான்கு குறுநகர்ப்பகுதிகளுக்கும் செல்கின்றன. காலையும் மாலையும் பள்ளிக்குழந்தைகளால் பேருந்து நிரம்பியிருக்கும். சில நேரங்களில் பெண்கள் பேருந்தில் நிரம்பியிருப்பர். 

ஆண்கள் முகம் பேருந்தினுள் தட்டுப்பட்டால் அவர்கள் அரசாங்க டாஸ்மார்க் கடைக்குப் பிரயாணம் செய்பவர்களாக இருப்பார்கள். காட்டுப்புறத்திலிருந்து பேருந்து நிறுத்தத்திற்கு பெண்கள் வந்து சேர தாமதமாகும் நேரங்களில் ஓட்டுநர் காட்டிலிருந்து குண்டாங்குண்டானென கையை ஆட்டியபடி ஓடிவரும் பெண்களுக்காக பேருந்தை நிப்பாட்டுவதில்லை. 

அரசாங்கம் பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்கியிருப்பதால் பேருந்தை நிறுத்தி, ’அக்கா வாங்க! அம்மா வாங்க!’ என்று வெத்தலை பாக்கு வைத்து எந்தப் பேருந்து ஓட்டுநரும் அழைத்துப்போவதில்லை. இதற்காக பெண்கள் திரும்பி வரும் பேருந்தை கூட்டமாய் வழிமறித்து நாயம் கேட்டால்.. ஓட்டுநரும் நடத்துநரும் சரியாய் பதில் பேச மறுப்பார்கள். பேருந்தை மொத்தமாய் நிறுத்திவிட்டு ‘போகச்சொன்னா போறோம், ஓட்டச்சொன்னா ஓட்டுறோம்!’ என்பது மாதிரியே நடந்துகொள்வார்கள். 

பழனிச்சாமிக்கு வயது நாற்பது ஆகிவிட்டது. அவனது பையன் ஐந்தாவது வகுப்பிற்குச் சென்றுகொண்டிருந்தான். அவனது மனைவி ஈஸ்வரி அவ்வப்போது ரோட்டு வேலைக்கும், உள்ளூரில் இருக்கும் சிறிய பனியன் கம்பெனிக்கும் சென்றுகொண்டிருந்தாள். ’கையும் காலும் நல்லாயிருப்பதாலும், சொந்தமாக வீடு இருப்பதாலும், கேஸ் அடுப்பு, டிவி, இதர ஜாமான்கள் இருப்பதாலும் பொண்ணைக் கட்டிக்குடுத்தனுங்க மாப்ளெ!’ என்று கிர் போதையில் இவனது மாமனார் சொல்வார். அப்போதெல்லாம் பழனிச்சாமிக்கு சுர்ரென கோபம் வரும். 

ஈஸ்வரியிடம் ‘உங்கொப்பன் என்னமோ வீட்டுல ஓன் யூசுக்கு ஓட்டீட்டு இருந்த கப்பலை எனக்கு வச்சுக்கக் குடுத்தமாதிரி பேசிட்டு இருக்காப்ல? சொல்லி வெய்யி.. ஒரு மார்க்கமான ஆளு இந்த பழனிச்சாமின்னு உங்கொப்பன்கிட்ட!’ என்பான்.

பழனிச்சாமி ஈஸ்வரியை கட்டிய சமயம் குறுநகரில் பேன்ஸி கடை வைத்திருந்தான். சாலை அகலப்படுத்தும் திட்டத்தில் கடை ஓனரின் நான்கு கடைகளும் ஒருநாள் காணாமல் போனது. அப்போது இருந்த சாமான்களையெல்லாம் வேறொரு நபருக்கு சல்லிசாய் கொடுத்துவிட்டு வீட்டில் காலாட்டிக்கொண்டு டிவி பார்த்தபடி படுத்திருந்தான் நான்கு மாதம். அவ்வப்போது ஈஸ்வரி இடித்து இடித்துச் சொல்லிய காரணத்தால் அதே குறுநகரில் வேலை தேடும் படலத்தில் இறங்கினான் பழனிச்சாமி. 

பேன்ஸிகடை ஓனராய் இருந்துவிட்டு மற்றொரு பேன்ஸி கடையில் சேல்ஸ்மேனாய் நிற்பதில் அவனுக்கு உடன்பாடில்லை. ஆகவே, வேறு தொழிலுக்குத் தாவும் முயற்சியில் செல்போன் கடை ஒன்றில் விற்பனையாளனாக இறங்கினான். ஆயிற்று இப்போது மூன்று வருடங்கள். கடை ஓனர் இவன் வராத நாட்களில் கையும் காலும் ஒடிந்த மனநிலையில் கடையில் அமர்ந்திருப்பார். இவன் கடையில் இருக்கும் சமயங்களில் கடைப்பக்கமே அவர் எட்டிப்பார்க்க மாட்டார். மாதச்சம்பளம் இவனுக்கு பதினெட்டாயிரம் கொடுத்தார். இவன் சைடில் நான்கைந்தாயிரம் ஓனர் அறியாமல் சம்பாதித்தான்.

பழனிச்சாமிக்கு ஞாயிறு அன்று சீச்சி சாப்பிட்டால்தான் சோறு இறங்கும். அன்று மாலையில் ஆறுமணி என்றானதுமே ஓனர் கடைக்கு வந்துவிட வேண்டும். மற்ற நாட்களில் இரவு ஒன்பதுமணி வரை கடையில் இருந்து பின்பாக ஷட்டரை இறக்கி பூட்டிக்கொண்டுபோய் சாவியை ஓனரிடம் கொடுத்துவிட்டுத்தான் வீடு வந்து சேர்வான். ஞாயிறு மாலை ஆறரை என்றால் ஹனிபீ ஒரு கோட்டரை காலி செய்துவிட்டுத்தான் வீடு கிளம்புவான். இந்தப்பழக்கம் செல்போன் கடையில் இவன் பணிக்காக வந்த சமயத்திலிருந்தே இருக்கிறது. 

கடந்த ஐந்து வருடங்களாக பழனிச்சாமிக்கி ஹான்ஸ் போடும் பழக்கம் இருந்தது. யார் கற்றுக்கொடுத்தார்கள் என்றே அவனுக்கு நினைவில் இல்லை. குறுநகரில் நான்கு கடைகளில் இவனுக்குத் தெரிந்து ஹான்ஸ் கிடைத்துவந்தது. ஒருகடையில் இல்லையென கை விரித்துவிட்டார்கள் என்றாலும் மறுகடையில் சென்று வாங்கிக்கொள்வான். 

இவன் கிராமம் செல்லும் சாலையில் தன் பைக்கை நிறுத்தி அந்த பொட்டணத்தை நேம்பாக ஓரத்தில் கிழித்து இடது உள்ளங்கையில் துகள்களைக் கொட்டி நசுக்கி கடைவாயில் திணித்து வைத்துக் கொண்டால்தான் நிம்மதியாய் இருக்கும். தினமும் ஒரு பாக்கெட் ஹான்ஸ் காலியாகிறது. ஹான்ஸ் ஒன்றின் விலை ஐம்பது ரூபாய். இது கொரனா காலத்தில் ஏறிய விலை அப்படியே நின்றுவிட்டது. முன்பாக முப்பது ரூபாய்க்கு கிடைத்து வந்தது. 

இப்போது மூன்றுநாட்களாய் குறுநகரில் ஹான்ஸ் தட்டுப்பாடு வந்துவிட்டது. ஒருவருடம் முன்பாக ஒரு மளிகைக்கடையை ஹான்ஸ் விற்றதாய்ச் சொல்லி சாத்தி சீல் வைத்துவிட்டார்கள். அப்படி குறுநகரில் இரண்டு மூன்று கடைக்காரர்கள் கோர்ட் படியேறி பணம் கட்டி வந்தார்கள். பின்பாக அவர்கள் ஹான்ஸ் என்கிற பொருள் இருப்பதைப்பற்றி பேச்சே எடுப்பதில்லை. பெட்டிக்கடை ஒன்றிரண்டில் இவனுக்கு ஹான்ஸ் கிடைத்து வந்தது. 

எவன் கடை நாசமானல் இவனுக்கென்ன? இவனுக்கு குறுநகரின் ஏதோ ஒரு மூலையில் பாக்கெட் கிடைத்தது. ஹான்ஸ் போடுவதால் வாயில் புற்றுநோய் வருவதாக டிவிக்களில் விளம்பரங்கள் பார்த்தான். கொஞ்சம் கருக்கடையாகவும் இருந்தது. எங்காவது வந்து தொலைத்துவிட்டால் எங்குபோய் சீரழிவது? சொந்தபந்தமெல்லாம் என்ன சொல்லும்? 

இதனால் பழனிச்சாமி ஹான்ஸ்க்கு பதிலாக கிராம்பு வைத்துப் பார்த்தான். அது கடைவாய் தோலையெல்லாம் உறித்து வீசியது. பின்பாக நண்பர் ஒருவரின் சொல்படி குறுமிளகு வைத்துப் பார்த்தான். கொட்டைப்பாக்கு வைத்துப்பார்த்தான். ஒன்றிலும் கவர்ச்சியில்லாமல் மீண்டும் கூல் லிப் என்கிற பாக்கெட்டுக்கு மாறினான். அது இவனுக்கு ஒமட்டலைக்கொண்டு வந்து வாந்தியை வெளித்தள்ளியது. ஈஸ்வரியிடம் பாலியல் தேவைக்காகச் செல்கையில் கோல்கேட் போட்டு ப்ரஸ் செய்த பிறகு சென்றான் .

மூன்று நாட்களாய் குறுநகரில் ஹான்ஸ் தட்டுப்பாடு வந்துவிட்டது. பழனிச்சாமிக்கு கடையில் நிற்பதற்கே கோபமாய் இருந்தது. மண்டையை அடிக்கடி பிய்த்துக்கொள்ளலாம் போலவும் இருந்தது. மனசு முழுக்க ஹான்ஸ் ஹான்ஸ்! என்றே நிரம்பி நச்சரித்தது. ‘கொஞ்சம் ஹான்ஸ் இப்போது வாயினுள் திணித்து அதக்கலைன்னா சாவு நெருங்கிரும்போல’ தவித்தான். 

இரண்டு நாட்கள் முன்பாக கடைசியாக வாங்கியிருந்த பாக்கெட் காலையில் காலியாகிவிட்டது வீட்டிலேயே! குறுநகர் வந்ததும் நான்கு கடைகளிலும் சென்று விசாரித்துவிட்டான். ’போலீசு வந்து சொல்லிட்டே போயிடுச்சுங்க பழனிச்சாமி.. இனி வித்தா பொட்டிக்கடையே இருக்காது இவத்திக்கின்னு!’ என்று பெட்டிக்கடையினுள் அமர்ந்திருந்த குண்டம்மா சொல்லிற்று. அந்தம்மா எப்போதும் ஹான்ஸ் போடுவதை இவன் பார்த்திருக்கிறான். ‘அப்ப நீங்க என்ன பண்ணறீங்க?’ என்றான். கீழே கையை விட்டு துண்டுப்பொயிலை பாக்கெட்டை எடுத்து இவனுக்கு காட்டியது. 

சரி அதில் ஒன்றையாவது வாங்கி போட்டுப்பார்ப்போம்! என நினைத்தவன் ‘அதுல ஒன்னு குடுங்க!’ என்றான். ‘பாக்கெட் முப்பது ரூவாங்க பழனிச்சாமி! உள்ளார பன்னண்டு துண்டுக இருக்கும்!’ என்றது. அக்காவிடம் கெஞ்சி ஒரு துண்டை மட்டும் வாங்கி பாண்ட் ஜோப்பில் வைத்துக்கொண்டு வந்தான். கடைக்கு வந்தவன் அதில் கொஞ்சம் பிய்த்து வாயின் ஓரத்தில் அதக்கினான். நாற்றம் குடலைப் பிடுங்கியது. ஓடிப்போய் துப்பிவிட்டு தண்ணீர் குடித்தான். இன்னமும் வாய் நாறிற்று.

கடைக்குள் ரீச்சார்ஜ் செய்து போக வரும் இந்திக்காரப் பயல்களிடம் ‘கஹானி.. கஹானி!’ என்று ஜாடை காட்டினான். அவர்கள் சிரித்து மழுப்பிவிட்டு சென்றார்கள். இந்த இந்திக்காரப் பயல்கள் வந்து குட்டானாய் குவிந்ததால்தான் ஹான்சுக்கு இத்தனை பிரச்சனை வந்ததாய் நினைத்தான். ஒவ்வொரு பயலையும் நடுரோட்டில் நிற்கவைத்து ’ஓடுங்கடா உங்கூருக்கு.. ஓடுங்கடா உங்கூருக்கு!’ என்று உதைக்கனும் போல இருந்தது. 

மதியத்திற்கும் மேல் அவனால் கடையினுள் நிற்கமுடியவில்லை. ஓனரை போன் போட்டு கடைக்கு வரச்சொல்லிவிடலாமென நினைத்தான். இப்போதைக்கி புதன்கிழமை என்றாலும் ஓடிப்போய் ஹனிபீ ஒரு கோட்டரேனும் குடித்தால்தான் மனசு நிம்மதியாகும் என்று நினைத்தான். அங்கே சென்றால் எவரேனும் ஹான்ஸ் விற்கும் புதிய கடையை கைகாட்டுவார்கள் என்கிற நம்பிக்கை பிறந்ததுவிட்டது. ஒனருக்கு போன் அடித்தான். அவர் வெளியூரில் இருப்பதாகவும், மாலை ஐந்துமணிக்கு வந்துவிடுவதாகவும் சொன்னார். ’இன்னிக்குனு பார்த்துத்தான் இவனுக்கு வெளியூர்ல வேல போட்டு அவுக்குது!’ என்று முனகினான்.

கடைக்கு வரும் வாடிக்கையாளரிடம், ‘ஹான்ஸ் இருந்தா கடைக்குள்ளார வாங்க.. இல்லீன்னா அப்பிடியே ஓடிப்போயிருங்க!’ என்றே சொல்லிவிடுவான் போல இருந்தது பழனிச்சாமி. அதேசமயம் மூன்று இந்திக்காரிகள் கடையினுள் நுழைந்தார்கள். ஏர்டெல் ரீச்சார்ஜ் செய்தார்கள். மதிய நேரத்தில் மேக்கப் கலையாமல் இந்த வெய்யலில் தகத்தகன்னு ஜொலிக்கிறாள்களே.. எப்பிடி? செவப்பு துணிக்கி செவப்பு லிப்ஸ்டிக் பூசியிருக்காபாரு ஒருத்தி.. இவனையறியாமலேயே ‘கஹானி!’ என்று சொல்லிவிட்டான்.

ஒருத்தி தன் ஹேண்ட் பேக்கிலிருந்து சின்னபாக்குப் பொட்டணமும், துக்கிளியூண்டு பொயிலை, சுண்ணாம்பு பொட்டணமும் எடுத்து இவனிடம் நீட்டினாள். இந்தக்கருமத்தை எப்போதும் இவன் போட்டதில்லையே.. ஆனால், கண்ணானது சின்னதான பொயிலை பாக்கெட்டை மட்டும் பார்த்தது. இருந்தும் பொட்டணங்களை வாங்கிக்கொண்டான். அவர்கள் கடையிலிருந்து நழுவினார்கள். இவன் பொட்டணங்களைப் பிய்த்து ஒன்றாய்க் கொட்டி சுண்ணம்பைப் பிதுக்கி கலந்து வாயில் போட்டான். பாக்கு வாசம் கமகமத்தது கடை முழுக்க. சித்தங்கூரியம் நன்றாக இருப்பதாய் மனது மகிழ்ந்தது.

சித்தங்கூரியத்தில் விக்கல் எடுக்கத்துவங்கியது பழனிச்சாமிக்கி. எடுக்கட்டும்! இப்ப என்ன கெட்டுப்போச்சு? சீக்கிரம் மூஞ்சு போச்சுன்னா என்ன பண்ணுறது? வாயின் ஓரத்தில் ஹான்ஸை ஒதுக்கி வைப்பது போலவே ஒதுக்கி வைத்துவிட்டு வெளியே வேடிக்கை பார்த்தான் சாலையை. விக்கல் வந்துகொண்டேயிருந்தது. வரட்டும். அடக்கொடுமையே! அந்த பிள்ளைங்ககிட்டயே எந்தக்கடையில வாங்கனீங்கன்னு கேட்டுத்தொலைச்சிருக்கலாமே! போச்சு! 

பழனிச்சாமி மாலையில் ஆறுமணிக்கு ஓனர் கடைக்கு வரும்வரை கன்னம் புடைக்க ஓரத்தில் ஒதுக்கி வைத்திருந்தான். ஓனர் வந்ததும் அவரிடம் சொல்லிக்கொண்டு நேரே டாஸ்மார்க் கடைக்கி வண்டியை விட்டான். இவன் நேரமோ என்னமோ இவனது ஹனிபி இன்று இல்லை. எம்.சி ஒரு கோட்டர் வாங்கிக்கொண்டு எப்போதும் இவன் நின்றபடியே குடிக்கும் பெட்டிக்கடைக்கு வந்து நின்றான்.

‘ஞாயித்துக்கிழமை மட்டும்தான் வருவீங்க.. இன்னிக்கி புதன்கிழமையே வந்துட்டீங்க?’ என்றபடி டம்ளர், தண்ணீர்கேன் எடுத்து வைத்தார் கடைக்காரர். ‘சாப்புடறதுக்கு கொய்யா வெட்டட்டுமுங்களா?.. இல்ல காரப்பொரி போடட்டுங்களா?’ என்றவருக்கு, ‘காரப்பொரி’ என்று சொல்லிவிட்டு முதல் கட்டிங்கை வீசினான். கடையின் பின்புறமாக இருவர் குடித்து முடித்துவிட்டு முன்புறமாக வந்து நின்று கடைக்காரரிடம் பேச்சுக்கொடுத்தனர். முதல் கட்டிங் வீசியதுமே வாய் ஹான்ஸ்சுக்கு பறப்பெடுத்து தவித்தது. பெட்டிக்கடையின் முகப்பில் பாஸ்பாஸ் பாக்குப்பொட்டணம் சரமாய் தொங்கியது. உற்றுப்பார்த்தான். ஹான்ஸ் பொட்டணச்சரம் தொங்குவது போலவே இவன் கண்களுக்குத்தெரிந்தது.

அப்படி இது ஹான்ஸ் பாக்கெட்டாக இருந்தால் அமுட்டையும் வாங்கிப்போய் வீட்டில் பதுக்கி வைத்துக்கொண்டு மகிழ்ச்சியாய் வாழவேண்டுமென ஆசை துளிர்த்தது மனதில். கடைக்காரரிடம் பேசிக்கொண்டு இருந்தவர் வேட்டியைத்தூக்கி டவுசரில் கையை விட்டு ஹான்ஸ் பொட்டணத்தை எடுத்து கையில் கொட்டினார். உடனே இவனும் கையை நீட்டி ‘எனக்குத்துளி கொட்டுங்க!’ என்று கேட்டுவிடலாம் போலிருந்தது. 

இவன் நேரமோ என்னமோ அவர் கையில் கொட்டியதும் பாக்கெட் காலி போலிருக்கிறது. அதை தூரமாய் வீச அவர் முயற்சித்த சமயம் பெட்டிக்கடைக்காரர்.. ‘அதை இங்ககீது வீசீறாதீங்க புதூர்க்காரரே! என்னைய போனமாசம் போலீஸ்காரரு வந்து ஹான்ஸ் இருக்கான்னு கேட்டாரு! அதை எதுக்குங்க சார் விற்கிறேன்.. அந்தப் பொழப்பெல்லாம் எனக்காகாதுன்னு சொன்னேன். இந்தக்காகிதம் இங்க கிடந்து.. அவரு வர்ற சமயத்துல காத்துக்கு பறந்துச்சுன்னு வச்சிக்கங்க.. சும்மாவே ஒரு கேசு கொண்டாந்து குடுன்னு என்னையப் புடிச்சுக்குவாரு!’ என்றார். 

பழனிச்சாமிக்கு ஹான்சை கையில் கொட்டி வைத்திருந்தவரிடம் சென்று காதோடு ஒரு அப்பு அப்பி ‘குட்றா அதை!’ அப்படின்னு மிரட்டி வாங்கி வாயில் திணித்துக்கொள்ளலாம் என்றிருந்தது. ஆனால், அவர் வாயில் ஓரமாய் திணித்துவிட்டு இரு கைகளையும் ’தட்தட்’டென தட்டி நிம்மதியானார். காலி பாக்கெட்டை டவுசர் பாக்கெட்டிலேயே திணித்துக்கொண்டார். பின்பாக அவரே ஆரம்பித்தார்..

‘போனவாரம் நடந்த கூத்தை கேளுங்க நீங்க! காத்தால கலியாணம் ஒன்னுக்கு போயிட்டு ஸ்கூட்டர்ல திரும்பி வந்துட்டு இருந்தேன். டோல்கேட்டுக்கிட்ட நாலஞ்சு போலீஸ்காரங்க நின்னுட்டு என்னோட வண்டியை கையைக்காட்டி ஓரமா நிப்பாட்டுன்னாங்க! நானும் ஹெல்மெட்டெல்லாம் போட்டுட்டுத்தான் இருந்தேன். ஓரமா நிப்பாட்டி ஹெல்மெட்டை கழற்றி வண்டியில மாட்டினேன். லைசென்ஸ் கேட்டாங்க.. குடுத்தேன். வண்டி ஆர்சி புக் கேட்டாங்க.. அதையும் வண்டில இருந்து எடுத்துக் குடுத்தேன். சார் கிளம்பட்டுங்களா? அப்படின்னேன். இருங்க போகலாம் அப்படின்னுட்டு அடுத்த வண்டிகளை நிப்பாட்டி செக் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க!”

‘போயிட்டு வர்றேன் சார்னு சொல்லிட்டு நீங்க வண்டியை எடுத்துட்டு கிளம்பியிருக்க வேண்டீது தானே!’

‘நான் எங்கண்ணனுக்கு போன்ல கூப்பிட்டு இப்பிடின்னு சொன்னேன். அவரு.. இதென்னடா கூத்தா இருக்குது.. போனை அங்க இருக்கிற ஒருத்தருகிட்ட குடுடான்னாரு.. நானும் கொண்டி என்னோட லைசென்சை செக் பண்ணவர்ட்ட குடுத்தேன்.. யாரு போன்ல? அப்படின்னாரு. எங்கண்ணன் சார்னேன். யாரு உங்கண்ணன்? அப்படின்னாரு. பிரசிடெண்டு சார். எங்கண்ணன்தான்! அப்படிங்கவும் வாங்கிட்டு பேசினாரு! அவரு பேசுறாரு.. இவரு பதில் சொல்றாரு.. இல்லங்க சார்.. உங்க தம்பி வண்டியை நிப்பாட்டுறப்ப வாயில இருந்து ஹான்ஸ்சை விரலைவிட்டு வெளிய தள்ளுனாரு.. அதை எந்தக்கடையில வாங்கினாருன்னு மட்டும் எங்ககிட்ட சொல்லிடச்சொல்லுங்க.. இப்ப அனுப்பிடறோம் அவரை! அப்படின்னாரு. அதுக்கு எங்கண்ணன் சொன்னாரு.. அவன் ஏழெட்டு வருசமா ஹான்ஸ் போடுவான்.. இங்க லோக்கல்ல எங்கியும் அவன் போயி அதை வாங்க மாட்டான்.. எங்க லாரி லைன்ல ஓடுதுல்ல.. கர்நாடகா, ஆந்தராவுல இருந்து டிரைவர்க வாங்கிட்டு வந்து அவனுக்கு குடுத்துருவானுக.. அப்படின்னுட்டாரு! அப்புறம்தான் என்னை அனுப்புனாங்க!’ என்றார் அவர். பொட்டிக்கடைக்காரர் அற்புதமாய் ஒரு சிரிப்பு சிரித்தார்.

‘இங்கயும் தான் என்கிட்ட லாரிக்காரங்க நிறுத்தீட்டு வந்து ஹான்ஸ் இருக்குதான்னு கேக்குறாங்க. தினமும் எப்படியும் நாலு வண்டிக்காரங்களாச்சிம் கேக்குறாங்க. அதைய விக்குறதெல்லாம் ஒரு பொழப்புங்களா? பாக்கெட் இருவது ரூவாய்க்கி கிடைக்குதுங்கறாங்க. விக்கிறது அம்பது ரூவாய்க்கி. ஒரு பாக்கெட்டுக்கு முப்பது ரூவா லாபம். ஒரு நாளைக்கி பொட்டிக்கடையில உக்கோந்து இருபது பாக்கெட் வித்தா ஆறுநூறுரூவா ஆச்சுங்கள்ல! திடீருன்னு புடிச்சாங்கன்னா பத்துரூவாய்க்கிமேல கழண்டுபோயிருதுங்கள்ல!’ என்றார் பொட்டிக்கடைக்காரர். இவன் அடுத்த ரவுண்டு ஊற்றிவிட்டு பாட்டிலைக் கொண்டுபோய் ஓரமாய் வீசிவிட்டு கடைக்கணக்கை கொடுத்தான். ஹான்ஸ் போட்டவர் பின்பாக நண்பருடன் கிளம்பிப்போய்விட்டார். 

‘எனக்கும் ரெண்டு நாளா ஹான்ஸ் கிடைக்கலைங்க.. ரெகுலரா வாங்குற கடையிலயும் இல்லைன்னுட்டாங்க! வேற கடைலதான் வாங்கணும்.. எங்க கிடைக்கும்னு தெரியலைங்க!’ போதையில் இவன் பெட்டிக்கடைக்காரரிடம் நிதானமாய் பேசினான்.

‘அது எல்லாப்பக்கமும் கிடைக்குதுங்ளே.. அந்தப்பக்கமா கொசு நிப்பான் பாருங்க.. அவனுக்குத் தெரியும் எங்க விற்பாங்கன்னு.. அவனைப்புடிச்சீங்கன்னா வாங்கிக்குடுத்திருவான்.’ என்றார். அவர் சொன்ன கொசுவைத்தேடி மீண்டும் டாஸ்மார்க் பக்கம் வந்தான். கொசு அரைபோதையில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான். இவனைப்பார்த்ததும்.. ‘மாமா! எனக்கு மாமன் வந்தாச்சு.. சப்ளை பண்ணீருவாரு மாமன்!’ என்றபடி பேசிக்கொண்டிருந்தவரிடம் விடைபெற்று வந்தான். 

இவன் அவனிடம் விசயத்தைச் சொன்னான். ‘மாமா.. இதெல்லாம் ஒரு பிரச்சனையா? உங்களுக்கு எத்தனை பாக்கெட் வேணும்? நான் வாங்கித்தர்றேன்!’ என்றான். இவனுக்குள் மழையானது இடி மின்னலுடன் கொட்ட ஆரம்பித்துவிட்டது. ’வாங்க மாமா என் பின்னாடியே!’ என்று கொசு தன் பைக்கை எடுத்துக்கொண்டான். பழனிச்சாமியும் தன் பைக்கை எடுத்துக்கொண்டு அவன் பின்னால் வால் பிடித்தபடி சென்றான். குறுநகரின் ஒதுக்குப்புறமான ஏரியாவில் பல புதிய வீடுகள் நிறைந்திருக்க சந்து சந்தாய் வண்டியை ஓட்டியவன் பின்னால் இவனும் சென்றான். 

எல்லாவீதியிலும் விளக்குக்கம்பங்கள் பளீரிட்டு மின்னின. ‘என்னடா இவன் சுத்திச்சுத்தி போயிட்டே இருக்கானே!’ என்று நினைத்தபோது சாலையில் ஓரிடத்தில் வண்டியை கொசு நிப்பாட்டினான். கீழே குழிக்குள் கையைக் காட்டினான். ஓட்டுவீடு மாதிரி இருந்தது. குழிக்குள் பார்த்து இறங்கி அவன் பின்னால் நடந்து சென்றான் பழனிச்சாமி. கடையில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். ‘ஐயா! சவுக்கியமா இருக்கீங்களா?’ என்றான் கொசு.

‘யாரு கொசுவா? எங்கடா கொஞ்சம் நாளா ஆளே கண்ணுக்குத் தட்டுப்படலியா? ஊரை உட்டு போயிட்டியா?’

‘நான் என் தம்பியோட அவனோட ஊட்டுல இருக்கனுங்க ஐயா! இவரு ஹான்ஸ் வேணும்னாரு.. எங்க மாமன்தான். நாலு பாக்கெட் வேணுமாமா.. நாளையிம் பின்னயும் இவரு வந்தா குடுத்துருங்க ஐயா!’

‘பாக்கெட் கொண்டுட்டு வர்றவனை ரெண்டு நாளா காணம்டா பையா.. ஒரு பாக்கெட்டோ என்னமோதான் இருக்குது!’ என்று வீட்டினுள் போய் அதையொரு பேப்பரினுள் வைத்து மடித்துக்கொண்டு வந்து கொடுத்தார். பழனிச்சாமி அவரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டினான். அவர் வாங்கிக்கொண்டு பத்துரூபாயை திருப்பிக்கொடுத்தார். பழனிச்சாமிக்கி அது புதுசாய் இருந்தது. 

திரும்பவும் சந்து சந்தாய் வந்து மெயின் சாலையைத் தொட்டதும் கொசு தனக்கு ஐம்பது ரூபாய் வேண்டுமென வாங்கிக்கொண்டு டாஸ்மார்க் நோக்கிச் சென்றான். இவன் நிம்மதியாய் வீடு வந்து சேர்ந்தான். அடுத்த நாள் மதியமாக ஹான்ஸ் வாங்குவதற்காக சந்து சந்தாய் சுற்றி அலைந்தும் அந்த ஓட்டுவீட்டு கடை இருந்த இடத்தை இவனால் காணவே முடியாமல் கடைக்கே வந்து சேர்ந்தான். யாரிடமேனும் கேட்கலாம் என்றாலும்.. ஏன்? எதுக்கு? யார் நீயி? புது ஆளா இருக்கியே! அப்படின்னு விசாரிப்பார்களோவென பயந்து திரும்பினான்.

திடீரென மனதில் பீதி வந்து அப்பிக்கொண்டது. ஹான்ஸ் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் நச்சு நச்சென போட்டுப்போட்டு இன்னமும் ஒருமுறைதான் போடமுடியும். பாக்கெட் காலியாகிவிடும். கொசு லாரி டிரைவர் வேறு. எப்போதேனும்தான் டாஸ்மார்க் கடைப்பக்கம் தட்டுப்படுவான். லைனுக்கு போய்விட்டான் என்றால் திரும்ப வருவதற்கு பத்துநாட்கள் ஆகிவிடும்! ஐயகோ! மீண்டும் மண்டையினுள் ‘சொய்ங் சொய்ங்’கென கத்திகள் மின்னத்துவங்கிவிட்டது பழனிச்சாமிக்கு.

மாலையில் நான்குமணிக்கு டீக்குடித்துவிட்டு கடைசி ஹான்ஸ் துகளை வாயில் அடக்கினான் பழனிச்சாமி. கடையைச் சாத்தி பூட்டும்வரை அவனுக்கு பதறிக்கையாய் இருந்தது. ஹான்ஸ்! ஹான்ஸ்! ஐய்யோ! இப்ப வேணுமே! சாவியைக் கொண்டுபோய் ஓனரிடம் கொடுத்துவிட்டு பெட்டிக்கடைப்பக்கம் வந்தான். ஒருவேளை அக்கா ‘இந்தாங்க பழனிச்சாமி!’ என்று கொடுத்துவிட்டால்?!

இவன் பெட்டிக்கடை முன்பாக வண்டியை நிறுத்திவிட்டு ‘அக்கா’ என்று சென்றபோது அப்படியேதான் ஆயிற்று!

******

vaamukomu@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

மேலும் படிக்க
Close
Back to top button