
பத்து எபிசோட்களை கொண்ட விறுவிறுப்பான திரில்லர் வெப்சீரிஸ் / வலைத்தொடர். பதறி திடுக்கிட வைக்கும் காட்டுவாசிகளின் வழிபாட்டு முறையாக, அவர்கள் கூட்டமாய் கொடுமையான முறையில் தற்கொலை செய்து கொள்ளும் காட்சியில் ஆரம்பிக்கும் கதை வனவாசிகளின் பிரச்சனையை பேசப்போகிறது என்பதை அங்கேயே உணர்த்தி விடுகிறது. அப்பொழுதே மனதில் தோன்றியது, அதில் ஒருவருக்கு கூடவா வாழ விருப்பமில்லையென. எப்படி எல்லோரும் நிர்தாட்சண்யமாய் இப்படி நெருப்பில் குதிக்கிறார்கள் என்று. பிள்ளைகளைக்கூட வாழவிட நினைக்கவில்லையே என்றும் தோன்றியது. இப்போதைய காலக்கட்டத்திலும் நரபலி மீது நம்பிக்கை கொண்டு சொந்தப் பிள்ளைகளை பலி கொடுக்கும் கொடுமையும் நடக்கத்தானே செய்கிறது. காட்டிற்காக தங்கள் இருப்பித்திற்காக தன்னுயிர் தரும் காட்டுவாசிகளுக்கு, காட்டை அழிக்க நினைப்பவர்களைக் கொல்வது கடினம் இல்லை.
நிகழ் கால முதல் எபிசோட் காட்சியில் காயப்பட்ட யானைக்கு வன அலுவலர் மருத்துவ உதவி செய்வது காட்டப்படுகிறது. சத்யாவை பார்க்கையில் வன அதிகாரிகளின் மீது நன்மதிப்பும், மரியாதையும் தோன்றும். வனம், வன விலங்குகள் அவற்றைப் பாதுகாப்பதுதான் சீரிஸின் ஒன்லைன். காட்டிற்கு கேடு செய்யும் நபர்கள் அரசாங்கத்திற்கு உட்பட்டோ இல்லாமாமலோ அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். போஸ்டரில் இருப்பது போல வனரட்சியைச் சுற்றித்தான் கதை. கண்களுக்குப் புரிபடாத, பிடிபடாத விஷயங்கள் அமானுஷ்யமாய் நம்மை பயங்காட்டும். திரில்லர் படங்களில் ரொம்ப முக்கியம் இசை. பேய் படங்களை மியூட் செய்து பார்த்தால் அவ்வளவு பயம் தோன்றாது. இதிலும் பிண்ணனி இசையில் கலக்கி இருக்கிறார்கள். திகிலை அள்ளி வீசுகிறது.
மிக அருமையான ஒரு மலைக்கிராமம், காடு, மலை, செடிகள், சில காட்டு விலங்குகள், பறவைகள் என கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது. காடுகளின் நிஜமான சிலந்திகள், பூச்சிகளையும் கூட பதிவு செய்திருக்கலாம். அதில் காட்டப்படும் சிலந்தி நிஜமா எனத் தெரியவில்லை. ஆனால், நம் அறிவுக்கு எட்டாத வினோத விடயங்களின் இருப்பிடம்தானே காடு, கடல் எல்லாம். ‘டேம்செல்’ என்னும் படத்தில் மலைகுகைக்குள் இப்படி வினோதமான பூச்சிகள் இருக்கும். மின்மினி பூச்சி போல வெளிச்சமாய் ஒளிர்ந்துக்கொண்டே இருக்கும் சிறிய அளவு அட்டைப்பூச்சி போல, அது ஒரு மருத்துவர் பூச்சி. ஆம்; காயங்களை தாங்கள் சுரக்கும் பிசின்களால் அது ஆற்றிவிடும். அதைப் போல இந்த சிலந்தி ஒரு கற்பனையாக இருக்கலாம். கடலில் ஒரு வகை மீன் தன் இணையைக் கவர அழகான மண்டேலா போன்ற சித்திரங்களை உருவாக்கும், சில பறவைகள் இணையைக் கவர தங்கள் இறக்கைகளை விரித்தும் ஒடுக்கியும் நளினமாக நடனமாடும். இதையெல்லாம் யாராவது கூறினால் நம்ப கஷ்டமாக இருக்கும். புகைப்படம், வீடியோ எனப் பார்க்கையில் நம்புகிறோம், இயற்கையை நினைத்து ஆச்சரியப்படுகிறோம். சிலந்தியின் உண்மைத்தன்மையை விடுவோம். இது டாக்குமெண்டரி அல்லவே ஆகையால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கதைக்குத் தேவையானதைத்தானே காண்பிப்பார்கள். ஆனால், சிலந்தி பின்னும் வலை போலத்தான் ஒவ்வொருவராய் காட்டில் போய் சிக்குகிறார்கள், வனரட்சியிடம். வனரட்சியானவள் வீட்டுக்கும் வந்து மிரட்டுகிறாள். எந்த இடமும் ரட்சியிடம் இருந்து பாதுகாக்க கூடியதன்று!
யதார்த்தமாகப் பார்த்தால் துப்பாக்கி கூட இல்லாமல் இரண்டு பெண் அதிகாரிகள் விலங்குகள் திரியும் அடர் காட்டுக்குள் எப்படி ரோந்து பணிக்குப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதுவும் நெட்வொர்க் கூட இல்லாத காட்டுக்குள். ஆனால், ரேடியோ வேலை செய்கிறது. பெண்களின் மாதவிடாய் கால கஷ்டத்தை போகிற போக்கில் பதிவு செய்தது அருமை.
காட்டுக்கு தீங்கு செய்பவர்களை ரட்சி கொல்கிறாள். கண்ணால் பார்த்த சாட்சியங்கள் இருந்தாலும், இதையே இன்ஸ்பெக்டர் ரிஷி வந்துதான் கண்டுபிடித்து சொல்கிறார். ஆரம்பத்தில் கொஞ்சம் இழுத்தடிப்பது போலத் தோன்றினாலும் சுவாரசியமான காட்சி அமைப்புகளும், கதை செல்லும் விதமும் அதனை ஈடுசெய்துவிடுகிறது. ரிஷியின் காதல் காட்சிகளை இன்னும் அதிகமாக்கி கொஞ்சம் சுவாரசியமாக்கி இருக்கலாம். மலைக்கிராமத்தை இன்னும் கொஞ்சம் அதிகமாகவும், அதன் முழு அழகையும் காண்பித்திருக்கலாம். உள்ளூர்வாசிகளின் பங்கு மிகக் குறைவுதான்.
அய்யனாரும், சித்ராவும் இயல்பான தோழர்களாவும், ஒன்றாக பணி செய்பவர்களாகவும் நன்றாக தங்கள் பங்கை அளித்துள்ளார்கள். அய்யனாரின் நம்பிக்கைகள் அவரின் முதல் காட்சியிலேயே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவரே தோழியை புரிந்து கொள்ளத் தடுமாறி ‘நான் ஆர்த்தெடக்ஸ் பேமிலி இதெல்லாம் சட்டென ஏத்துக்க முடியலை’ என்று தன்நிலை விளக்கம் கொடுப்பது இயல்பாய் இருக்கிறது. கடைசி வரை வனரட்சி குறித்த அவர் பார்வைதான் கதையின் இன்னொரு கோணம்.
சித்ராவாக வரும் பெண்ணை டாம்பாய் போல காண்பிக்க எண்ணி கனத்த ரோபோட்டிக் குரலாய் கொடுத்து இயல்பில் இருந்து திருப்பி கொஞ்சம் சொதப்பி வைத்துள்ளார்கள். அவரின் தயக்கமும், நடவடிக்கையும் அத்தனை இயல்பாக இல்லை. படித்திருந்தாலும், தைரியமான போலீஸ் அதிகாரியாக இருந்தாலும் தன் வாழ்க்கை விஷயத்தில் சித்ரா பலவீனமாகிப்போகிறார், நாம் வாழுமிட பழக்கவழக்கங்களை காரணமாக் கொண்டாலும், கொஞ்சம் தன் காதலில் ஜெயிக்க முயற்சிப்பதாக காண்பித்திருக்கலாம். அவரின் நடிப்பை அவர்கள் முழுவதுமாய் பயன்படுத்தி இருக்கலாம்.
குமரவேல் ரொம்பவே அசால்டாக அசத்தலாக தன் பங்கைச் செய்துள்ளார். அவர் மனைவி கதாபாத்திரமும், பின் சத்யாவும் தனக்குரிய பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். பெண் உயர் அதிகாரி சுத்தமாக ஒட்டவில்லை. அவரை உபயோகிக்கவேண்டும் என கட்டாயத்திற்கு பிடித்து உள்ளே போட்டது போல இருக்கிறது. ஆரம்பத்தில் வன அதிகாரியாக வரும் திருநங்கை வைஷூ நடுவில் காணாமலே போய் விடுகிறார். திடீரென ஞாபகம் வந்து கடைசியில் மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
சுனைனா நன்றாக நடித்திருந்தாலும் அந்த பாத்திரத்தில் ஒட்டாதது போலவே தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதுவும் இறுதி எபிசோடில் அவர் அந்த பாத்திரத்திற்கு பொருத்தம் இல்லை என்றே தோன்றியது. தன் அப்பாவித்தனத்தை காண்பிக்க மெனக்கிடுவதாகவே அவரது முகமாற்றங்கள்/நடிப்பு இருக்கிறது. புடவையில் அழகாய் இருக்கிறார். காட்டு இலாகா அதிகாரியாக இன்னும் கொஞ்சம் மிடுக்காய் நடித்திருக்கலாம். அவருக்கும் மதருக்கும் ஆன காட்சிகளும் அத்தனை இயல்பாய் இல்லை. ரிஷியிடம் மதரை நினைத்து அவர் அழும் காட்சியும் ஒட்டவில்லை. அவர் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பிக்கலாம்; ஆனால், அவர் மரித்து விட்து போல வருந்திப் பேசவது சரியாகப் பொருந்தவில்லை. கடைசியில் அந்த ஸ்பிரே அடிக்கும் போதாதவது ஒரு சொட்டுக் கண்ணீரோ, ஒரு ஸாரியோ சொல்லி அந்த கதாபாத்திரத்துக்கு ஒரு அழுத்தம் கொடுத்திருக்கலாம். மாறாக அவர்களை ஈவிரக்கம் அற்ற தீவிரவாதிகள் போல காண்பிக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஒருவேளை அந்த காதல் நடிப்பு மட்டுமே என்பதைப் பதிவு செய்ய நினைத்திருக்கலாம். வனரட்சிக்கு இருக்கும் இரக்கம் கூட இயற்கை ஆர்வலர்களான அவர்களுக்கு ஏன் இல்லை? புலியை, யானையை காக்க நினைக்கும் சத்யாவின் கதாபாத்திரம் இறுதியில் நடந்து கொள்வது முரண்பாடாக இல்லையா? அதுவும் ரிஷி, சுரங்கப் பணியாளர்கள் போன்ற அப்பாவிகளை கொல்லத் துணிகையில். முற்றிலும் முரண். ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கும் போது அவர்களுக்கான தன்மைகளை ஞாபகத்தில் வைத்து அவர்களது பகுதியை எழுதலாம்.
இன்ஸ்பெக்டர் ரிஷியாக வரும் நவீன் சந்திரா சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த சீரிஸின் மூலமாக அவரின் நடிப்பு திறமை நன்றாக வெளி வந்துள்ளது என நம்புகிறேன். அந்த கதாபாத்திரத்துக்கு கச்சிதமாய் பொருந்திப் போகிறார். திகிலைக்கூட்டவோ அவரை வித்தியாசமாக காட்டவோ ஒற்றைக் கண்ணோடு வரும் அவர், கண்ணை வெளியே எடுத்து மழைத்தண்ணீரில் கழுவி பின் பொறுத்திக்கொள்ளும் காட்சி நமக்குதான் திக்கென்று இருக்கிறது. அவரின் காதல் கதை ரொம்பவே இயல்பு, நடைமுறை யதார்த்தம். பேயாய் அந்த பெண் பின்தொடர்வதை நம்பும் ரிஷி, வனரட்சியை நம்ப மறுக்கிறார். காரணங்களை போலீஸ் மூளையோடு ஆராய்கிறார். நன்றாக நடித்துள்ளார். யோசனையிலும், தன் பார்வையிலும் தன் நடிப்பை அழகாக காட்சிப்படுத்துகிறார்.
இத்தனை வருடங்களாக வனரட்சி குறித்த எந்த அசைவுகளும் இல்லாமல் திடீரென ஆரம்பிப்பது கொஞ்சம் நெருடல். கர்ப்பிணிப் பெண்ணிடம் அந்த பாட்டி சொல்லும் கதைபோல சில முன் கதைகளைச் சேர்த்திருக்கலாம். கதைக்கு வலு சேர்த்திருக்கும். வசதியான அந்தப் பெண் ஏன் அப்படி தனியே நடந்து போக வேண்டும் எனத் தெரியவில்லை. அந்த வீடுகளற்ற பாதையும், இருளும் திகிலை கூட்ட வலியத் திணிக்கப்பட்ட காட்சிகளாய் தோன்றுகிறது. ஒரு கிராமம் போன்ற தோற்றம் வரவில்லை. சரி, இவர்களின் கொலைத்திட்டங்கள் அப்பொழுது தொடங்கியதுதான் என்றாலும் அதற்கு முன்னர் ஒன்றிரண்டு சம்பவங்கள் கூட இல்லாமல் திடீரென தொடர்கொலைகள் நம்பும்படியாக இல்லை. ஆறு வருடங்கள் முன்பு ஒரு கொலை.. ஆனால், அதே கடத்தல் தொழில் செய்யும் கோபி கூட்டம் ஒரு தொந்திரவும் இல்லாமல் இருக்கிறது. ஒரு கொலையின் விசாரனை அடங்கும் முன் அவசரமாக ஏன் அடுத்த அடுத்த கொலைகள் நடக்கிறது? பீதியை அதிகரிக்கவா? வனரட்சி போல வந்து பயம் காட்டினாலே சுரங்க வேலையைத் தடுக்க முடியும்.. ஏன் அவர்களை விஷவாயு பாய்ச்சிக் கொல்ல வேண்டும்? காட்டை நன்கு அறிந்தவர்களால் சத்யாவிற்கு உதவ முடியாமல் போனது ஏன்? இர்ஃபானை கொன்றது அடுத்த அறையில் இருக்கும் சத்யாவிற்கு ஏன் தெரியவில்லை? சத்தம், போராட்டம், பேச்சுக்குரல் இப்படி எதுவும் கேட்கவில்லையா? பறவைகள் நாயைப் போல மோப்பசக்தி கொண்டதா எனத் தெரியவில்லை. ஆனால், அது தேடி வருவது ஒரு கவிதையான காட்சி. ரிஷி, சத்யாவின் கற்பனை என்று கூறுகையில் தனக்கு இந்தக் கதை எதுவும் தெரியாது. அப்படி இருக்கும் போது தான் எப்படி உருவங்களை கற்பனையில் காண முடியும் எனக் கேட்கும் இடம்தான் வனரட்சிக்கான அடையாள விதை.
அடைக்கலம் தேடி வரும் குழந்தைகளில் ஒருவரை அப்பொழுதே தன்னோடு வைத்துக்கொள்ளாமல் ஆசிரமத்தில் போய் தத்தெடுக்கிறார் ஊர்த்தலைவர். அதே ஊரில் அந்தப் பெண் தனியே வாழ்வது, அவர்கள் அழைக்கும் போதும் அங்கே போகாமல் இருப்பது அவளின் நிழல் காரியங்களுக்கான அவசியமாகிப் போகிறது என்றே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. அவருக்கும் காட்சிகள் மிகக் குறைவே. அவர் செய்யும் வனரட்சி பொம்மைகள் டெரர். இனி மரப்பாச்சியைப் பார்த்தாலும் வனரட்சி ஞாபகத்திற்கு வரக்கூடும். நல்ல ஒரு உருவ அமைப்பு வனரட்சி, மான் கொம்புகளும், நாலு கால் விலங்கு நடையும், பெண் உடலும், சிகப்பு சேலையுமாக. குகையின் அமைப்பும், மேஸ் போன்ற பாதைகளும், சிறு துளைகளும் அதில் வாழ்ந்துகொண்டிருக்கும் வவ்வால்கள் , சிலந்திகள், அங்கிருந்து கிளை பாதை, மர வாசல், ஒலியாண்டர் பூக்கள் என அழகான, திகிலான சித்தரிப்பு, இல்லை இட அமைப்பு.
தெய்வம் இருக்கிறதா இல்லையா, யாராவது பார்த்திருக்கிறார்களா? அதேக் கேள்வி பேய், பிசாசு, யட்சி, ரட்சி, மோகினிக்கும் நீளும். பேயைப் பார்த்ததாகவும், தெய்வத்தை உணர்ந்ததாகவும் நிறைய கதைகள் சொல்லக் கேட்டிருப்போம். அது அதீத கற்பனையாகவும் இருக்கலாம், ஹலுசினேசனாகவும் இருக்கலாம் இல்லை எதுவும் இல்லாமல் கட்டுக் கதையாகவும் இருக்கலாம். ஆசாமிகள் சாமியாடி பார்க்கிறோம். பேயோட்டி பார்த்திருக்கிறோம். சமயங்களில் கோவிலில் நாலைந்து பேர் சாமியாடுகையில் ஒரே நேரத்தில் எப்படி சாமி இத்தனை பேர் உடம்பில் வரும் என்ற கேள்வியை தலையில் குட்டி உள்ளேயே அடக்கி வைத்து விடுவேன். இங்கேயும் ரட்சி ஒருத்திதான். ஆனால், அவளின் பிரதிகள் நிறைய. சாமியோ, பூதமோ இருக்கிறது என்று ஆணித்தரமாக யாராலும் சொல்லமுடியவில்லை. அதை ஒரு மாயையாக, நம் நம்பிக்கை சார்ந்த, மதம் சார்ந்த விஷயமாக வைத்துக்கொள்ள விரும்புகிறோம். இருக்கு என்றால் இருக்கு, இல்லை என்றால் இல்லை. அப்படித்தான் இந்த கதையும். பார்வையாளர்கள் விருப்பத்துக்கு பங்கமில்லாமல் இப்படியும்தான், அப்படியும்தான் , எல்லாம் உண்மைதான் என்று முடிக்கிறார்கள். முடித்து விட்டார்கள் என்றுதான் நம்புகிறேன் அடுத்த பார்ட் ஏதும் இருக்கிறதா தெரியவில்லை.
சத்தம் சீரிஸ் முழுவதும் ஒரே சீரில் இருந்ததா என்று குழப்பமாய் இருக்கிறது. சில இடங்களில் என்ன பேசுகிறார்கள் என்று விளங்கிக்கொள்ள சத்தத்தை அதிகப்படுத்த வேண்டி இருந்தது. டப்பிங் பிரச்சனையாக இருக்கலாம். காட்டுவாசிகளின் வாழ்வை கொஞ்சம் காண்பித்திருந்தால் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கும். சிறு சிறு லாஜிக் மிஸ்டேக்ஸ் இருந்தாலும், ஒட்டுமொத்தமாக பார்ப்பதற்கு ஒரு நல்ல சீரிஸாகத்தான் இருந்தது இன்ஸ்பெக்டர் ரிஷி. தேவதைகள், துர்தேவதைகள் என பிறவாட்டு நம்பிக்கைகளையும் பேசியிருப்பது வலு சேர்க்கிறது. ஆனால், நம்ம ஊரில் மோகினிகள்தான் பிரபலம். தீரா ஆசையில் செத்துப்போகும் ஆண் பேய்க்கு நாம் எந்த பெயரும் இட்டு வைக்கவில்லை. இன்ஸ்பெக்டர் ரிஷி இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டு, இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு ஆகச்சிறந்த சீரிஸாக வந்திருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.
********