
தோழியொருத்தியின் குட்டி மகள்
பூப்பெய்து விட்டாளென்ற
நற்செய்தியைத் தாங்கி வந்திருக்கிறது
இன்றைய நாளின் முதலழைப்பு
நேற்றைக்குத்தான்
மகள் பிறந்திருக்கிறாளென
புன்னகை வழிய சேதி சொல்லியதாக
நினைவுப்படுத்துகிறது
கணக்குகள் தெரியாத மூளை
தளிருக்கும் பூவுக்குமான
இடைவெளியில்
அவள் எடை கூடித் தளர்ந்திருக்கிறாள்
நான் நரை கூடி வளர்ந்திருக்கிறேன்
வாழ்வு அதே இடத்தில்
சுழன்று கொண்டிருக்கிறது.
****
சத்தியமாகச் சொல்கிறேன்
இந்தக் கணம் வரை
மிக இயல்பாகத்தானிருந்தேன்
உன் குறுஞ்செய்திகள்
வராததைப் பற்றியோ
என் அழைப்புகளை
நீ ஏற்காததைப் பற்றியோ
என்னைப் பார்த்தும்
பார்க்காதது போல்
நீ சென்றதைப் பற்றியோ
எந்தக் கவலையையும்
காட்டக் கூடாதென்று
கங்கணம் கட்டியிருந்தேன்
தூரத்திலிருந்து தெரியும்
தாய்ப்பறவையைக் கண்டு
சிலிர்த்துப் போகும்
குஞ்சுப் பறவையாய்
நான் எப்படி மாறினேன்?
*****
சந்திப்பு
இந்த முறை யதேச்சையாக
சந்தித்தபோது
நம் கடைசி சந்திப்பு
சட்டென நினைவில் வந்து
தொலைகின்றது
கடற்கரைக் காற்றை
உதாசீனம் செய்தபடி
நானுனக்குப் பிரியாவிடை அளித்தேன்
சூழ்நிலைக் கைதியாகி
நீயும் கண்ணீருடனே
கலைந்து போனாய்
இருவருக்கும் மிகப் பிடித்த பாடல்
இரண்டு மனங்களிலும்
ஒரு சேர ஒலித்தது
இப்போது எந்தப் பாடலும் கேட்கவில்லை
பதற்றத்தின் அறிகுறிகள் ஒருபுறம்
பேருந்துக் கட்டணத்திற்கு
தேவையான சில்லறையைத்
தேடுவது மறுபுறமென
எதார்த்தங்களின் பிடியில்
’ஒரு வடபழனி’ என்று
உன்னிடம் காசைத் தருகிறேன்
ஏதும் பேசாமல் நடத்துநரிடமிருந்து
பயணச்சீட்டைப் பெற்று தருகிறாய்
அவ்வளவுதான்.
*****