இணைய இதழ்இணைய இதழ் 92தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள் – மு இராமனாதன் – பகுதி 1

தொடர் | வாசகசாலை

ஹாங்காங்கில் வீடு வாங்குவது

ஹாங்காங்கைப் பற்றிய சித்திரங்களுள் முதன்மையானவை அதன் அதிஉயர அடுக்ககங்கள். உயரங்களை வியந்து பாராதார் யார்? பல பழைய தமிழ்ப் படங்களில் நாயகனின் பட்டினப் பிரவேசத்தை அறிவிக்க எல்.ஐ.சி கட்டிடம்தான் பயன்பட்டது. அந்த 14 மாடிக் கட்டிடம் நகரத்தின், அதன் நாகரீகத்தின் குறியீடாக விளங்கியது. ஹாங்காங்கிலும் அப்படித்தான்.

ஹாங்காங் சென்னைப் பெருநகரோடு ஒப்பிடத்தக்கது. எனில், ஹாங்காங் மலைப்பாங்கானது. அதன் பரப்பில் பாதிக்கு மேல் காடுகளாகவும் மலைகளாகவும் பேணப்படுகிறது. மீதமுள்ள பரப்பில் சாலைகள், பூங்காக்கள், உள்கட்டுமானங்கள் முதலான பொதுப் பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. எஞ்சிய பரப்பில்தான் 70 இலட்சம் மக்கள் வசிக்கவும் பணியாற்றவும் வேண்டும். ஆதலால் வீடுகளும் அலுவலகங்களும் தொழிற் கூடங்களும் வணிக வளாகங்களும் செங்குத்தாக வளர்ந்தன. வானுயர்ந்தன.

வானுயுர்ந்த கட்டிடங்கள் (skyscrapers) என்பதோர் உயர்வு நவிற்சி. எந்த மொழியிலும் இதற்கு வரையறை இராது. எனினும் கட்டிடக் கலைஞர் சிலர் 100மீட்டருக்கு (சுமார் 33 மாடிகள்) மேல் உயரமானவை வானுயுர்ந்த கட்டிடங்கள் என்று ஒரு கணக்கு வைத்துக்கொண்டார்கள்.  ஹாங்காங்கில் இப்போது சுமார் 9000 அடுக்ககங்கள் இருக்கின்றன. இதில் சரிபாதி இந்த வரையறையைத் தாண்டும்.

இந்த நகரில் உண்மையான வனங்கள் ஏராளமாக இருக்கின்றன. எனினும் கான்கிரீட் வனம் என்றே ஹாங்காங் அறியப்படுகிறது. இந்த வனத்திற்கு நான் 1995இல் புலம் பெயர்ந்தேன். கட்டுமானத் துறையில் பணியாற்றுவோர் ஒரு முறையேனும் ஹாங்காங்கைச் சுற்றிப் பார்க்க வேண்டும். துறை சார்ந்த வல்லுநர் சிலர் இப்படிச் சொல்வதுண்டு. எனக்கு அங்கேயே பணியாற்ற வாய்த்தது. அடுக்ககங்களை வடிவமைக்கிற பொறியியல் நிறுவனமொன்றில் வேலை கிடைத்தது. எல்லாம் நன்றாகத்தான் தொடங்கியது. ஆனால் இந்த வேலையால் குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று எனக்கு அப்போது தெரியாது.

நான் போனபோது ஹாங்காங்கில் வீடுகளின் விலை கூடிக்கொண்டே இருந்தது. 2003இல் இந்நகரம் சார்ஸ் எனும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டது. கோவிட்-19இன் அதே கொரோனா வைரஸ் குடும்ப உறுப்பினர்தான் சார்ஸ். ஹாங்காங் சார்ஸிலிருந்து மீண்டது. ஆனால் பொருளாதாரம் பெரிதாக பாதிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் மதிப்பு சரிந்தது. வீட்டு விலைகள் வீழ்ந்தன. இந்தச் சந்தையிலிருந்து நான் போதிய சமூக இடைவெளியைப் பேணி வந்தேன். ஆதலால் இந்தச் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் இருந்தேன். அவ்வப்போது மனைவி, “நமக்கும் வேண்டாமா சொந்த வீடு?” என்று கேட்பார். நான் தத்துவார்த்தமாக பதிலளிப்பேன். ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒரு வாரக் கடைசியின் மாலை நேரம். என் மனைவியின் ஒரு நண்பர் அவர்கள் வீட்டிற்கு எங்களை விருந்திற்கு அழைத்திருந்தார். இன்னும் சில நண்பர்களும் குடும்பத்தோடு வந்திருந்தனர். சார்ஸில் தலைகுப்புற விழுந்திருந்த வீட்டுச் சந்தை மீண்டும் வேகம் பிடித்திருந்தது. எல்லோரும் அதைப் பற்றியே பேசினார்கள். முதலீடு, கடன், வட்டி, தவணை என்று அவர்களுக்கு நிறையத் தெரிந்திருந்தது. நான் தேமே என்றுதான் இருந்தேன். நாகரீகம் கருதியோ என்னவோ சபையில் ஒருவர் என் கருத்தைக் கேட்டார். இம்மாதிரியான சூழல்களில் ஈறு தெரியாமல் அகலமாகச் சிரிக்க வேண்டும். அது எனக்குத் தெரியும். ஆனால் அன்றைய தினம் நான் அதைச் செய்யவில்லை. விதி வலியது. நான் பதில் சொன்னேன். அது பாட்டாக இருந்தது. “மாங்காய்ப் பாலுண்டு வாடகை வீட்டில் வசிப்போருக்கு சொந்த வீடு ஏதுக்கடி குதம்பாய், தேங்காய்ப் பால் ஏதுக்கடி?”. விருந்திற்கு ஒரு தெலுங்கரும் வந்திருந்தார். பாட்டின் பொருளை அவருக்கு விளக்கவும் செய்தேன். சபையில் எவரும் எனது சித்தன் போக்கை ரசிக்கவில்லை, முக்கியமாக எனது மனைவி.

அன்றிரவு வீட்டிற்குத் திரும்பும்போது மனைவி என்னிடம் பேசவில்லை. இது பொறுப்பதில்லை என்று அவர் முகத்தில் எழுதியிருந்தது. அடுத்த வாரமே நாங்கள் கணக்கு வைத்திருந்த வங்கி அலுவலரிடம் நேரம் வாங்கினார். என்னையும் அழைத்துப் போனார். அலுவலர் எனது நடை, உடை, எடை, உயரம், ஊதியம், ஆரோக்கியம் எல்லாவற்றையும் நிதானமாகப் பரிசீலித்தார். முடிவாக வங்கி எவ்வளவு கடன் தரும் என்று கூறினார்.  என்னால் நம்ப முடியவில்லை.

ஹாங்காங் தொகுப்பு வீடுகளால் நிறைந்தது. ஒவ்வொரு தொகுப்பிலும் நிறைய அடுக்ககங்கள் இருக்கும். ஒவ்வொரு அடுக்ககத்திலும் பல தளங்கள். ஒவ்வொரு தளத்திலும் இரண்டோ, நான்கோ, ஆறோ, எட்டோ வீடுகள் இருக்கும். அப்போதையப் பொருளாதார நிலை, குறிப்பிட்ட அடுக்ககத்தின் ஆயுள், வீட்டின் பரப்பு, அண்மைக் காலத்தில் அந்தப் பகுதியில் நடந்த விற்று வரவு முதலான கூறுகளின் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டின் சந்தை விலையையும் மதிப்பிட்டு, வங்கிகள் தமது இணைய தளத்தில் ஏற்றி வைக்கும். குறிப்பிட்ட தொகுப்பில், குறிப்பிட்ட அடுக்ககத்தில், குறிப்பிட்ட தளத்தில், குறிப்பிட்ட வீட்டின் உத்தேச விலை என்ன என்று பார்க்கலாம். அலுவலரைச் சந்திப்பதற்கு முன்னால் நாங்கள் வசித்த வாடகை வீட்டின் சந்தை மதிப்பை மனைவி பார்த்து வைத்திருந்தார். அதை என்னிடத்திலும் சொல்லியிருந்தார். வங்கி எமக்குத் தரக்கூடும் என்று அலுவலர் சொன்ன கடன் தொகை நாங்கள் அப்போது வசித்து வந்த வீட்டின் சந்தை மதிப்பைக் கிட்டத்தட்ட ஒட்டியிருந்தது. அதுதான் என் வியப்புக்குக் காரணம்.

அலுவலர் தொடர்ந்து அவரது தொப்பியிலிருந்து  முயல்களை எடுத்துக்கொண்டே இருந்தார். கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த நாங்கள் 20 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளலாம். இளைஞர்களாக இருந்தால் இன்னும் அவகாசம் கிடைக்கும் என்றும் சேர்த்துக்கொண்டார். வட்டி விகிதம் வெறும் 2%. வட்டியும் அசலுமாக ஒவ்வொரு மாதமும் கட்ட வேண்டிய தொகையையும் சொன்னார். அது நாங்கள் செலுத்தி வந்த வாடகைப் பணத்தைவிட  குறைவாக இருந்தது.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு வீடு வாங்க வேண்டாம் என்று சொல்வதற்கு எனக்கு எந்த முகாந்திரமும் இல்லாமல் போனது. ஆகவே அதைக் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டேன். ஆனால் வீடு தரமாக இருக்க வேண்டும். இதற்கு மனைவி ஒப்புக்கொண்டார். ஹாங்காங்கில் வீடுகளை வாங்குவதும் விற்பதும் முகவர்கள் வாயிலாகத்தான் நடக்கும். இவர்கள் இதற்கான பயிற்சி பெற்றவர்கள், அரசின் தேர்வு எழுதிப் பட்டயம் பெற்றவர்கள். வாடகைக்கு வீடுகளை அமர்த்திக் கொடுப்பதும் இவர்கள்தான். ஆகவே மனைவிக்குத் தெரிந்த முகவர்கள் இருந்தார்கள். அவர்கள் விற்பனைக்குத் தயாராக இருந்த வீடுகளைக் காட்டத் தொடங்கினார்கள்.

முதல் வீடு புதியது. அந்தத் தொகுப்பு வீடுகளை வடிவமைத்த கட்டிடக் கலைஞர் அடுக்ககத்தின் புறத்தோற்றத்தை வித்தியாசமாகக் காட்டும் முயற்சியில் சம்பிரதாயமான இரண்டு  செவ்வகத்  திருப்பத்திற்குப் பதிலாக ஒரு முக்கோணத் திருப்பத்தை அமைத்திருந்தார். இதனால் வீட்டின் அடுப்படி முக்கோணமாக இருந்தது. இது எவ்விதம் பயன்பாட்டுப் பரப்பைக் குறைக்கும் என்றும் இது பொறியியல் வடிவமைப்பிற்குச் சிரமமானது என்றும் விளக்கினேன். முகவர் கருத்தொன்றும் சொல்லவில்லை. அடுத்த வீட்டைப் பார்பதற்கு நாள் குறித்தார்.

அடுத்து வீட்டில் அறைகளுக்கு இடையிலான தடுப்புச் சுவர்களில் பல பாரந்தாங்கும் சுவர்களாக இருந்தன. இதில் பின்னாளில் திருத்த வேலைகள் செய்வது சிரமம் என்றேன். அதற்கு அடுத்த வீடு  சற்றுப் பழைய வீடாக இருந்தது. அதிலொன்றும் பிழையில்லை. ஆனால் குடிநீர்க் குழாய் வரவேற்பறை வழியாக போடப்பட்டிருக்கலாம் என்பது எனது ஐயமாக இருந்தது. முகவர் பொறுமையோடு மேலும் வீடுகளைக் காட்டத் தயாராக இருந்தார். ஆனால் மனைவி பொறுமை இழந்து வருவது தெரிந்தது.

அப்போதுதான் எனக்குப் பணி மாறுதல் வந்தது. நான் பணியாற்றிய ஹாங்காங் நிறுவனம், உள்கட்டமைப்புத் திட்டம் ஒன்றிற்காக இந்தியாவிற்கு ஒரு குழுவை அனுப்பி வைத்தது. அதில் நானும் இருந்தேன். மனைவி என்னை மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைத்துவிட்டு வீடு தேடும் படலத்தைத் தொடர்ந்தார். விரைவில் நகரில் வீடு வாங்க வேண்டிய புறநகரையும் தொகுப்பையும் தேர்வு செய்தார். வீட்டின் பரப்பளவை முன்னரே முடிவு செய்திருந்தார். அடுத்த சில தினங்களில் வீட்டையும் தேர்வு செய்துவிட்டார். நான் ஹாங்காங் வரும்போது வீட்டின் தரத்தைப் மதிப்பிடுகிறேன் என்றேன். ‘அவசரம் ஒன்றுமில்லை, இப்போதுதான் முன்பணம் கொடுத்துவிட்டு வருகிறேன்’, என்பது மனைவியின் பதிலாக இருந்தது. அடுத்தடுத்து நடந்தவை ஹாங்காங் போன்ற சட்டத்தின் மாட்சிமை (rule of law) நிலவும் இடங்களில் மட்டுமே சாத்தியமானவை.

வீட்டைத் தேர்வு செய்ததும் 3% முன்பணம் வழங்க வேண்டும். இதை விற்பவர் பெயருக்கு வாங்குபவர் காசோலையாக வழங்க வேண்டும். இது மட்டுமே விற்பவருக்கும் வாங்குபவருக்கும் நடக்கும் நேரடிப் பரிமாற்றம். அடுத்து இரு சாராரும் வழக்குரைஞர்களை (solicitor) நியமித்துக்கொள்ள வேண்டும். அடுத்த 10 தினங்களில் வீட்டின் விலையில் 10%ஐ வழக்குரைஞர் பெயரில் கொடுக்க வேண்டும். இதில் 7% விற்பவருக்கும், 3% அரசுக்கும் (stamp duty) போகும். இதற்குப் பிறகு இரண்டு மாத அவகாசம் இருக்கும். இப்போது வீட்டை வாங்குபவரின் வழக்குரைஞர் சொத்து வரி, அடுக்ககப் பராமரிப்புத் தவணை, சேவைக் கட்டணங்கள் முதலானவை முறையாகச் செலுத்தப்பட்டு வருகின்றனவா என்று பரிசீலிப்பார். அதன் பின் இரண்டு வழக்குரைஞர்களும் எல்லா ஆவணங்களையும் ஒப்பு நோக்குவார்கள். நகல்களைத் தங்கள் சான்றொப்போடு வங்கிக்கு அனுப்புவார்கள். ஒப்பந்த தினத்திற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்னதாக வங்கி கடன் தொகையை வழங்கும். இது வழக்குரைஞர் பெயரில் இருக்கும். முன் பணமும் வங்கிக் கடனும் போக மீதமுள்ள தொகையை வாங்குபவர் கொடுக்க வேண்டும். இதுவும் வழக்குரைஞர் பெயரில்தான். வழக்குரைஞர் அலுவலகத்தில்தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும். உடன் வீட்டின் திறவுகோல் வாங்குபவரிடம் அளிக்கப்படும்.

ஒப்பமிட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அரசாங்க முத்திரையுடன் அசல் பத்திரம் வங்கிக்குப் போகும். நகல் வாங்குபவரை வந்து சேரும். 10% முன்பணமாகச் செலுத்தப்பட்ட நிலையில், மீதமுள்ள தொகை விற்பவரின் வங்கிக் கணக்கிற்குப் போகும். விற்கப்பட்ட தொகை, வாங்கியவர் பெயர் முதலான விபரங்களை பத்திரப் பதிவுத் துறை  பதிந்து வைக்கும்.

இப்படியாக 2009 டிசம்பர் மாதம், நானும் மனைவியும் ஹாங்காங் அடுக்ககமொன்றின் உயரமான தளத்திலிருந்த எட்டு வீடுகளில் ஒன்றின் உரிமையாளர் ஆனோம். ஹாங்காங்கில் இவ்விதமாகத்தான் வீட்டு விற்பனைச் சந்தை இயங்கி  வருகிறது. வீட்டு விலையில் பேரங்கள் இருக்கும். ஆனால் விலை முடிவானதும் எல்லாப் பரிமாற்றமும் வங்கிகளின் வாயிலாக மட்டுமே நடக்கும். பகுதித் தொகையை வங்கிக் கணக்கிலும் பகுதித் தொகையை ரொக்கமாகவும் கைமாற்றும் குயுக்திகள் இராது. பத்திரப் பதிவிற்கு விற்பவரும் வாங்குபவரும் எந்த அரசு அலுவலகத்திற்கும் போக வேண்டியதில்லை. ஒரேயொரு பத்திரம்தான். தனியாக பட்டா எதுவுமில்லை. ஆகவே அதில் தனியாகப் பெயர் மாற்ற வேண்டிய அவசியமில்லை. பத்திரம் பதிவானதும் சொத்து வரி, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் உள்ளிட்ட எல்லாச் சேவைகளிலும் உரிமையாளர் பெயர் மாறிவிடும். பெயர் மாற்றத்திற்குத் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டாம். வழக்குரைஞரின் ஊதியமும் முகவரின் தரகுப் பணமும் அரசு நிர்ணயித்தபடி இருக்கும். இவ்விருவரும் எந்த முறைகேட்டிற்கும் கூட்டுச்சேர மாட்டார்கள். போலி ஆவணம், ஆள் மாறாட்டம், ஏமாற்று முதலானவற்றை ஹாங்காங்கில் நான் கேள்விப்பட்டதேயில்லை.

கடைசியாக, ஹாங்காங் நண்பர்கள் கவனத்திற்கு இதைச் சொல்லி முடிக்கிறேன். இப்போது ஹாங்காங் வீட்டுச் சந்தை பற்றி நான் சில அறிவேன். 2019 கொரோனா காலத்தில் வீட்டு விலைகள் குறைந்தன. அவை மீண்டு வருகின்றன. எனினும் கொரோனாவுக்கு முந்தைய விலையை அவை எட்டாது என்கிற கருத்து நிலவுகிறது. வட்டி விகிதம் இப்போது கூடிவிட்டது, என்றாலும் அதிகமில்லை, 4.3%. இதில் நிலையான வட்டி, மாறும் வட்டி என்பனவும் உண்டு. நீங்கள் யாராவது என்னை விருந்துக்கு அழைத்தால் இதைப் பற்றியெல்லாம் பேச விரும்புகிறேன். சித்தர் பாடல் எதுவும் பாடேன் என்று உறுதியளிக்கவும் தயாராக இருக்கிறேன்.

(தொடரும்…)

– Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button