நூல் விமர்சனம்
Trending

கண்மாய்களின் கதை – எழுத்தாளர் சோ.தர்மனின் ‘சூல்’ நாவல் குறித்த வாசகர் பார்வை

தேவராஜ் விட்டலன்

2019 ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருது பெற்ற இந்த நாவலை வாசிக்க வேண்டும் என்கிற என் ஆர்வத்தை எழுத்தாளர் ஜே.ஷாஜஹான் அவர்களிடம் கூறிய பொழுது, ”என்னிடம் சூல் நாவல் உள்ளது ஐம்பது பக்கங்கள் படித்து விட்டேன் படிக்க நன்றாக உள்ளது, நீங்க வேணுமுன்னா படிச்சிட்டு குடுங்களேன்” என்றார்.

எழுத்தாளர் ஜே. ஷாஜஹான் அவர்களிடம் வாங்கிய சூல் நாவலை அன்றைய இரவிலேயே படிக்க ஆரம்பித்தேன். சில பக்கங்களிலேயே நம் வரலாற்றின் அற்புதமான மனிதர்கள் கண் முன்னே உழல்வது போன்ற உணர்வு எழத் துவங்கியது.

”பிரஷ்னேவ்” எழுதிய தரிசு நில மேம்பாடு என்னும் புத்தகத்தைப் படித்த பொழுது, அந்த புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு சம்பவம்தான் தன்னை சிந்திக்க வைத்ததாகவும், அவர்கள் இயற்கையோடு கொண்டிருந்த வாழ்வின் அறம், ஆன்மீகத்தின் ஆணி வேர் இவை எல்லாம் சேர்ந்து நாவலை நோக்கிய தேடலை அதிகப்படுத்தியதாகவும் கூறுகிறார் எழுத்தாளர் சோ. தர்மன்.

ஊரே கூடியிருக்கும் அய்யானார் கோவில் புளிய மர நிழலிருந்து நாவல் துவங்குகிறது. நாவலின் துவக்கத்திலேயே நாவல் காட்டும் காலம் பல நூறாண்டுகளுக்கு முந்தியது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ”நீர்ப்பாய்ச்சி” மணல் அள்ள கண்மாய் கரைகளை திறந்து விடுகிறான். கண்மாயினால் பயன் அடைந்து வரும் ஊர் மக்கள் அனைவரும் கண்மாயின் மராமத்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்ப்பாய்ச்சி கண்மாயில் மணல் அள்ள வரும் மாட்டுவண்டிகளை ஒழுங்குபடுத்திவிடும் பணியில் உள்ளான்.

மழைக்காலத்திற்கு முன்பே நீர் ஆதரமான கண்மாய் பராமரிக்கப்பட்டு, மணல் அள்ளப்பட்டு ஆழப்படுத்தப்பட்டு, மழை நீரால் சூல் கொள்ளத் தயாராக இருக்க கண்மாயை கிராம வாசிகள் அக்காலத்தில் தயார் படுத்தியிருக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் நீர் மேலாண்மையை எவ்வளவு நன்றாக கடைபிடித்து வந்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

நாவலைப் படிக்கும்பொழுது பெரும்பான்மையான இடங்களில் பகிரப்பட்டுள்ள சொலவடைகளைப் படிக்கும் பொழுது அடிவயிற்றில் உண்டாகும் சிரிப்பு, தலைக்கு வந்து, மூளை வரை சென்று கண்கள் சந்தோசத்தில் குளமாகி விடுவதை பல நேரங்களில் உணர முடிகிறது.

குறிப்பாக முத்துவீரன், கொமராண்டி, சேவுகன், செம்பட்டையன் ஆகியோர் செய்யும் சம்பாசனைகள் இரசிக்கபடி இருக்கின்றன. அந்தக் காலத்தில் இத்தகைய கேலி கிண்டலோடு தான் மனிதர்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாவலைப் படிக்கும்பொழுது உணர முடிகிறது.

தொத்தல் பகடை போன்ற மனிதர்கள் ‘கள்’ வாசனையை வைத்தே எந்த ஊர் கள் எனக் கூறும் அளவிற்கு தேர்ந்தவர்களாக இருந்துள்ளார். தொத்தல் பகடை வழியாக நாம் அறிந்து கொள்வது அந்தக் கால மனிதர்கள் எவ்வளவு நுண் உணர்வுடன் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அறிய முடிகிறது.

நீர்ப்பாய்ச்சி, மடைக்குடும்பன் என்ற பெயர்களின் மூலம், கிராமங்களில் கண்மாய்களைப் பராமரிக்க மனிதர்களை நியமிக்கும் வழக்கம் இருந்துள்ளது, அவர்கள் தான் பரம்பரை பரம்பரையாக கண்மாயைப் பாதுகாக்கும் பணிகளை ஆத்மார்த்தமாக செய்து வாழ்ந்துள்ளனர் என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் நீர்ப்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன்தான் அய்யனார் சாமியின் அருகில் உள்ள கருப்பன் சாமி என்ற விவரத்தைக் கூறுகிறார் ஆசிரியர்.

கண்மாயின் மேல்மடை, கீழ்மடை வழியாக வயல்களுக்குப் பாயும் தண்ணீர் நடுமடை வழியாக வெளியேறவில்லை, இதனால் நடுமடை வழியாக பயன் அடைந்துவரும் வயல்கள் வாடுகின்றன. வாடிய வயல்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் நீர்பாய்ச்சி பரம்பரையில் வந்த கருப்பன் மனம் வருந்துகிறான். ஊர்க்காரர்களின் பேச்சை கேட்க வேண்டியது வருமே என அய்யனார் சாமியிடம் மனம் வருந்தி வேண்டுகிறான்.

அவன் வேண்டுதலைக் கேட்டுப் பேசும் அய்யனார் சாமி, ” நீ நாளை மடையில் மூழ்கி அடைப்பை நீக்க முயற்சி செய் கண்டிப்பா அடைப்பு நீங்கி நீர் வயல்களுக்குப் பாயும்” என்கிறார். நீயும் என்னருகிலேயே வந்து தெய்வமாவாய் நாம் இருவரும் சேர்ந்து கண்மாயை காவல் காக்கலாம் என்கிறார்.

அதேபோலவே மறுநாள் நீர்ப்பாய்ச்சி கருப்பன், ஊர்க்காரர்கள் அனைவரையும் எல்லா தெருக்கள் வழியாகவும் சென்று, “ இன்னைக்கு நடுமடை திறக்கும் எனக் கூறுகிறான்.

ஊர்மக்களில் சிலர் இத்தனை நாள் முயற்சித்தும் திறக்காத மடை இப்போது திறக்கப் போகிறதா எனப் பேசிக் கொண்டும், என்னதான் நடக்கும் என்று பார்ப்போம் என எண்ணிக் கொண்டும் கண்மாய் கரையில் கூடுகின்றனர்.

நீர்ப்பாய்ச்சி கருப்பன் மடையில் மூழ்குகிறான். சிறிது நேரத்திலேயே நடுமடையிலிருந்து தண்ணீர் வெளி வருகிறது. ஊர்மக்கள் மகிழ்ச்சியில் தத்தளிக்கின்றனர். ஆனால், நீண்ட நேரமாக நீர்ப்பாச்சி கருப்பன் மேலே வரவில்லை அவன் உடல் மட்டும் சிறிது வேளைக்குப்பின் கண்மாயில் மிதக்கிறது. இதுபோல மனதை நாவலில் ஒன்றிப்போகச் செய்யும் எத்தனையோ கதாப்பாத்திரங்கள் நாவலில் நிறைந்துள்ளனர்.

கொப்புளாயி, இருக்கன் குடி மாரியம்மன் கோவிலுக்குச் செல்பவர்களுக்கு தயிர்ப்பானை வைக்கிறாள். மரங்களை நடுகிறாள். வனத்தை உருவாக்குகிறாள். மக்களின் மேல் கருணையோடு வாழ்கிறாள். அநாதையான காட்டுப்பூச்சி என்ற சிறுவனை வளர்க்கிறாள். அவன் அடிக்கடி ஓடிப் போகின்றவனாக இருந்தாலும் அவன் மேல் கருணை கொண்டு இருக்கிறாள். கொப்புளாயி இறந்தபின் காட்டுப்பூச்சி மரங்களை நட்டு வளர்க்கிறான்.

மாடுகளைக் கொன்றதினால் கூனிப் போய் மாடைப் போன்று நடந்து திரியும் நங்கிரியானின் கதையும் நமக்கு அக்காலத்தில் பாவம் செய்தவர்களுக்குப் பாடமாகி நின்ற கதையை கூறுகிறது.

நாவலில் இன்னும் பல கதாப்பாத்திரங்கள் மனதில் நிறைந்துள்ளனர். எட்டையபுர அரசர் ஆட்சி, கட்டபொம்மன் வெள்ளைக்காரர்களிடமிருந்து தப்பித்து காடுகளில் மறைந்த கதை, ஊமைத்துரை வெள்ளையர்களிடமிருந்து தப்பித்து மீண்டும் கோட்டை அமைத்து வெள்ளையர்களை தாக்கி மடிவது என வரலாறையும் ஒற்றியே நாவல் நகர்வது சிறப்பான ஒன்று.

எலியன், பிச்சை ஆசாரிக்கு கிடைக்கும் நகைகளை அவர்கள் பயன்படுத்த முடியாமல் பூமிக்குள் மறைத்து வைத்து விளக்கேற்றி வழிபடுவதும், கோணக்கண்ணன் அவர்களைச் சந்தேகித்து பின் தொடர்வதும், நாவலில் சிரித்து மகிழ வேண்டிய இடங்கள்..

நாவலில் ஒவ்வொரு காலமும் அழகாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் இருந்து எப்படி கண்மாய் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் பொலிவை, சிறப்பை இழந்து வந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிச் செல்கிறார் ஆசிரியர். உருளைக்குடி கிராமம் எப்படி தன் வரலாற்றுச் சிறப்பை இழந்து நிற்கிறது என்பதை நாவலின் இறுதியில் படிக்கும் பொழுது மனம் கனத்து விடுவதைத் தவிர்க்க இயலவில்லை.

நாவலைப் படித்துவிட்டு பால்யத்தில் கிராமத்தில் விளையாடி முங்கி நீச்சலடித்த கண்மாயை சென்று பார்த்தேன். கண்மாய் கரைகளிலிருந்த பெரிய பெரிய ஆலமரங்கள் காணாமல் போய்விட்டிருந்தன, கண்மாய் ஆழமில்லாமல் மேடேறிப் போயிருந்தது. கண்மாயைப் பார்க்கவே மனம் வருந்தியது. கால காலமாய் நீர்மேலாண்மையை மேம்படுத்தி வாழ்ந்த நம் முன்னோர்கள் உருவாக்கிய கண்மாய் பொழிவிழந்து நிற்கிறது.

இன்றிருக்கும் மோசமான சூழலில் நீர்மேலாண்மையின் தேவையை நமக்கு உணர்த்துகிறது இந்த சூல் நாவல். கண்மாயையும், கண்மாய் மனிதர்களையும் சுமந்திருக்கும் இந்த சூல் நாவல் அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான புத்தகம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button