இணைய இதழ்இணைய இதழ் 93சிறுகதைகள்

கணங்கள் – ஹேமா ஜெய்

சிறுகதை | வாசகசாலை

ன்று அதிகாலை வெகு சீக்கிரமே விழிப்பு வந்துவிட்டது கண்மணிக்கு. நன்கு உறங்கவேண்டுமென்றுதான் கணவனுக்கும் மகளுக்கும் நேற்றிரவே உணவு சமைத்து கட்டியும் வைத்திருந்தாள். எனினும் இப்போது சுணக்கம் சற்றுமில்லாத, மஞ்சள் வெளிச்சம் படிந்த வானம் போல உறக்கம் சுத்தமாகத் துலங்கியிருந்தது. இது வழக்கம்தான். என்று நிறைய நேரம் உறங்க வேண்டுமென்று விரும்புகிறாளோ அன்று வெகுவிரைவிலேயே விழிப்பு வந்துவிடும். பக்கத்தில் சரண் ஆழ்ந்து உறங்குவது சன்ன மூச்சொலியில் தெரிந்தது. இரவிருந்த பிணக்கம் நீங்கி எட்டி அவன் மேல் கை போட்ட கண்மணி, இருவருக்கும் இடையே உறங்கிக் கொண்டிருந்த பூஜாவையும் அணைத்துக்கொண்டாள். 

இன்று அலுவலகம் செல்ல வேண்டாம் என்பதே ஆகப்பெரிய சந்தோசமாக இருந்தது. மூடிய விழிகளுக்குள் இன்று நாள் முழுக்க என்ன செய்யலாம் என்ற கற்பனை ஓடியது. பூஜாவுக்குப் பிடித்ததாக ஏதாவது செய்து தர வேண்டும், எப்போதும் செய்யும் வகையறாக்களாக இல்லாமல் புது ரெசிபி பார்த்து.. அப்புறம், சரண் சீக்கிரம் வந்தால் மாலை எங்காவது வெளியே சென்று வரலாம். முடிந்தால் இன்றோ நாளையோ அஷ்டலக்ஷ்மி கோவில் சென்று கடலில் கால் நனைத்து வர வேண்டும்.

ஆஹா! இந்த வாரம் முழுக்கத் தனக்கே தனக்கு. எண்ணி ஆறு நாட்களுக்குக் காலை வேகுவேகென்று கிளம்ப வேண்டாம். தன் அவசரம் தெரியாமல் படுத்தும் பூஜாவை விரட்டி, அதனால் உண்டாகும் உளைச்சலுடன் நாள் முழுவதும் வளைய வர வேண்டாம். மின்சார ரயிலில் கசங்கி அலுவலகம் செல்லும் எரிச்சலில்லை. நினைக்கும்போதே எத்தனை நிம்மதி! இரவு நடந்த சண்டைக்கு ஈடு கட்டுகிறமாதிரி சரணுடனும் நேரம் செலவழிக்க வேண்டும். முறுவலுடன் புரண்டு படுத்தாள் கண்மணி.

நேற்று மாலை வரைக்கும் அவளுக்கு விடுமுறை எடுக்கும் எண்ணம் சுத்தமாக இல்லை. வழக்கமாக ஞாயிறு மாலை தோன்றும் திங்கள் சோகத்தில் (Monday Blues) இருந்த கண்மணிக்குத் திடீரென எல்லாமே வெறுப்பாக இருந்தது. இவ்விரு நாட்கள் ஏன் இத்தனை விரைவாகக் கழிந்தது என்ற கவலையில் உம்மென்று இருந்தாள். வழக்கமாகத் தோன்றும் ஏக்கம்தான் என்றாலும் அன்று தாங்க முடியாத நமைச்சலாக இருக்க, பேசாமல் விடுமுறை எடுத்தால் என்ன என்று தோன்றியது. ஒரு நாள் எல்லாம் போதாது. எடுத்தால் சேர்ந்தாற்போல எடுக்க வேண்டும்.

இந்த வாரம் முழுக்க ஒரேயடியாக மட்டம் அடித்தால் என்ன? அந்த நினைப்பே தாளாத மகிழ்ச்சியைத் தந்தது கண்மணிக்கு. அலுவலகத்தில் என்ன காரணம் சொல்ல..? யோசித்தவள், மாமியாருக்கு உடல்நலமில்லை அதனால் ஊருக்குச் செல்வதாகச் சொல்ல முடிவெடுத்தாள். எங்கே அதிகம் யோசித்தால் மனது மாறிவிடுமோவென்று உடனே குழுத்தலைவிக்குச் செய்தியும் அனுப்பி வைத்தவளுக்கு ஏதோ சாதித்த மாதிரி அவ்வளவு சந்தோசமாக இருந்தது. அதன்பிறகே சரணிடம் சொன்னாள். அவள் திடுதிப்பென்று விடுப்பெடுப்பது அவனுக்கு உவப்பாக இல்லை. வருடக்கடைசியில் குடும்பமாக எங்காவது வெளியே செல்ல உபயோகிக்காமல் இப்போதெடுத்து வீணாக்குகிறாள் என்று கோபித்தவன், திடீரென இப்படிச் சேர்ந்தமாதிரி விடுப்பெடுப்பது சரியில்லை என்று வகுப்பெடுக்க ஆரம்பிக்க, கண்மணி முறைத்தாள். 

இப்படித்தான் ஒவ்வொரு முறையும் விடுமுறை வீணாகிறது, கடைசியில் எங்கும் செல்வதில்லை என்று அவளும் தன் எரிச்சலைக் காட்ட, தன் அம்மாவைத்தான் காரணமாக்கியிருக்கிறாள் என்று சரணுக்குத் தெரிந்ததில் வீட்டுக்குள் போர்மேகங்கள் சூழ்ந்தன. இருவரையும் சற்று நேரம் வேடிக்கை பார்த்த பூஜா ஐ-பேடை எடுத்து அறைக்குள் சென்றுவிட்டது. இவர்களுக்கிடையே சண்டை என்றால் விளையாட்டை நிறுத்தத் சொல்லி உத்தரவுகள் பறக்காது என நன்கு தெரிந்து வைத்திருந்தாள் அவள். சாப்பிடாமல் சரண் படுத்துவிட, வீம்புக்கென்றே வயிறு புடைக்க உண்ட கண்மணி, வெகுநேரம் எதையெதையோ குடைந்து கொண்டு, டிவி பார்த்துவிட்டு நள்ளிரவில்தான் வந்து படுத்திருந்தாள். இப்போது யோசித்தால் தான் குழந்தைத்தனமாக நடந்து கொண்டது போலிருந்தது. என்ன செய்வது, அந்தநேரம் வரும் கோபத்தை அடக்க முடிவதில்லை.

வழக்கமான நேரத்துக்கு அலாரம் அடிக்க, சுறுசுறுப்பாக எழுந்த கண்மணி குளியலறை சென்று வந்தாள். பேசின் கிளாஸட் தூசு படிந்திருந்தது. அலமாரியில் துணிகள் கலைந்து கிடந்தன. வீட்டையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்புடன் மகளை எழுப்ப ஆரம்பித்தாள். அவளுடனே சரணும் எழுந்து விட்டான். நேற்றிருந்த சுணக்கம் மறந்து அவனும் இயல்பாக இருந்தது கண்மணியின் முறுவலை விரிய வைத்தது. மகளைக் கிளப்பியபடியே, “சீக்கிரம் வர்றியா சரண்? வெளில போகலாம்” என்றாள். “ட்ரை பண்றேன்” என்றவன் சற்று நேரத்தில் மகளையும் அழைத்துக்கொண்டு கிளம்பினான். 

எட்டு மணிக்கு மேல் வீடு முழுவதும் அவளுக்கே என்றானது. ஸ்ட்ராங்காக காபி போட்டெடுத்துக் கொண்டு பால்கனிக்கு வந்து நின்றாள். பிரதான வீதியைப் பார்த்த அமைப்பு என்பதால் கண்கவர் காட்சிகள் இல்லை. காலைநேர நெருக்கடிதான் கண்களை அறைந்தது, ஹாரன் சத்தங்களும் சந்தடி ஓசைகளும் வாகனப் புகையுமாக. இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்கமுடியாமல் உள்ளே வந்துவிட்டாள். இந்த மாதிரி நேரங்களில்தான் ஏன் சாலையைப் பார்த்த வீடு வாங்கினோமென்று கடுப்பாக இருக்கும். இவர்கள் இந்த வீட்டை புக் செய்ய வரும்போது எதிரிலுள்ள அபார்ட்மெண்டும் காலியாகத்தான் இருந்தது. பின்னாலுள்ள பூங்கா பார்த்த அமைப்பு அது. இவள்தான் அளவு பெரியது என்று பிடிவாதமாக இந்த வீட்டைத் தேர்வு செய்தாள். கடைசியில் கதவைத் திறந்து வைக்க முடியாதபடிக்கு சத்த மாசு காது கிழிய வைக்கிறது. 

எப்போதோ எடுத்த முடிவுக்கு இப்போது நொந்து கொண்டவள், அலைபேசியை எடுத்து சோபாவில் அமர்ந்தாள். வாட்ஸ்-அப் திறந்து, வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்த்து, பதிலளிக்க வேண்டிய சிலதுக்குப் பதில் தந்தாள். ஓரிருவர் ஆன்லைனில் இருக்க, சில உரையாடல்கள், நட்புகளின் ஸ்டேட்டஸ் எனக் கண்கள் ஓட்டியவளுக்குக் கை துறுதுறுவென்றானது. அழகிய பெண்ணொருத்தி பள்ளத்தாக்கின் விளிம்பில் கைகளை விரித்து நிற்பது போலப் புகைப்படம் தேடி ‘Breathing calmly. Me time – Relaxing’ என்று ஸ்டேட்டஸ் வைத்தாள். டிபி மாற்றிக்கூட நாளாகிவிட்டதே. கேலரிக்குள் நுழைந்து போன வாரம் எடுத்த புகைப்படத்தை டிபியாக வைத்தவள், தன் ஸ்டேட்டஸ்-ஐ எத்தனை பேர் பார்த்தார்கள் என்று திரும்பவும் உள்ளே சென்று பார்த்தாள். ஒருவரும் பார்க்கவில்லை. ப்ச்… என்னதான் செய்கிறார்கள் இந்த மக்கள்?

அதற்குள் ஆறி அவலாகி இருந்தது பானம். மீண்டும் சூடு செய்து எடுத்து வந்தவள் கையில் இப்போது ரிமோட். சற்று நேரம் சேனல்கள் குதித்துக் குதித்து இடம் மாறின. யூ-டியூபைத் தேர்ந்தெடுத்துத் திரையில் தென்பட்ட தம்ப்நெயில்களை இலக்கற்றுச் சொடுக்குவதும் பிறகு வெளியேறுவதுமாக இருந்தவளது கண்கள் டிவி திரையில் இருந்தாலும், கவனம் அலைபேசியில் ஏதாவது அழைப்புகள், செய்திகள் வந்திருக்கிறதா என்று பார்த்தபடியே இருந்தது.

நடுநடுவே வரும் யூ-ட்யூப் விளம்பரங்களை, துல்லியமாய்க் குறிபார்த்து அம்பெறியும் வில்வீரன் போல சரியான நொடியில் ‘Skip Ad’ஐ சொடுக்கிக் கொண்டிருந்தாள். அது என்னவோ இந்த இடையூறுகள் பெரும் அயர்ச்சி ஊட்டுபவையாக உள்ளன. முன்பெல்லாம் ஐந்து பத்து நிமிட விளம்பர இடைவெளிகளை எப்படித் தாக்கு பிடித்தோம் என்று அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒன்றிலும் நிலைகொள்ளாமல் நெட்பிளிக்ஸ்-ஐ திறந்து புதிதாக வந்தவற்றை ஆராய்ந்தாள். நான்கைந்து படங்களுக்கு மேல் வைப்பதும் வேண்டாமென்பதுமாகச் சிறிதுநேரம். கடைசியில் தமிழில் ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்து பார்க்க ஆரம்பித்தாள். 

திரைப்படம் மெதுவாக நகர கொட்டாவி வந்தது. ஏனோ முதல் காட்சியிலேயே பரபரப்பும் வேகமும் இல்லையென்றால் தொடர முடிவதில்லை. நிதானம் நஞ்சாகக் கசக்கிறது. இந்தப் படத்தின் நாயகனைப் பிடிக்கும் என்பதால் மாற்றாமல் வைத்திருந்தாள். ஐந்து நிமிடம்தான் பார்த்திருப்பாள். அலைபேசி ரீங்கரிக்க Pause செய்துவிட்டு எடுத்துப் பார்த்தாள். ஏதோ பார்வர்ட் மெசேஜ். காரணமே இல்லாமல் மனது ஏமாற்றமாக உணர்ந்தது. திரையின் அம்புக்குறி அழுத்தி கால்களை மேலே தூக்கி வைத்து முட்டியை கட்டிக்கொண்டு அமர்ந்தாள். ‘போபோ சிக்கன்’ என்று ஒரு வசனத்தில் வர, அது என்னவென்று தெரியாமல் மேலே தொடர முடியவில்லை. மீண்டும் Pause. நெட்டில் தேடல். ஆங்கிலோ இந்திய உணவில் அது கோழிக்கறியாம். 

கல்லூரி நாட்களில் அர்த்தம் புரியாமல், வசனம் புரியாமல், ஏன் மொழியே தெரியாமல் கூட படங்கள் பார்த்திருக்கிறாள். நண்பர்களுடன் படம் பார்க்கும் உற்சாகத்தில் எதுவுமே பெரிதாகத் தோன்றாது. அந்த இன்னசன்ஸ் எப்போது எங்கே தொலைந்ததென்று தெரியவில்லை. இப்போது வானத்தின் கீழுள்ள அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும், இல்லையெனில் சொந்த மனமே தன்னை முட்டாளாக உணர்கிறது. மீண்டும் படத்தை ஓட விட்டவளுக்கு, அலுவலகத்தில் என்ன நடந்திருக்கும், தான் விடுமுறை எடுத்தது பற்றி மேலாளர் கோபப்பட்டாரோ என்ற சிந்தனை ஓடியது. அலைபேசியெடுத்து அலுவலக டீம்ஸ்-ஐ திறந்தாள். இவளுக்கெனத் தனிச்செய்திகள் எதுவுமில்லை. குழு உரையாடலில் வந்த செய்திகளைப் பிரித்துப் பார்த்தாள். தான் வராதது பற்றி யாருமே பேசவில்லையா, என்ன? கடனேயென்று எல்இடியை வெறித்தவளுக்குக் காலையிலிருந்த உற்சாகம் பாதரசமணியாக கொஞ்சம் கொஞ்சமாகக் கீழிறங்கியிருந்தது. 

மாலை மகள் பள்ளியிலிருந்து வந்தபோது கண்மணி செய்ய நினைத்த எதையும் செய்திருக்கவில்லை. மதியம் குட்டி உறக்கம் போட்டு எழவேண்டும் என்று நினைத்ததும் நடக்கவில்லை. ஓயாமல் திரை பார்த்ததில் கண்கள்தான் களைத்துச் சிவந்திருந்தன. சோர்ந்த முகம் கண்டு, “தலைவலியாம்மா?” என்றாள் பூஜா. “இல்லடா” என்றபடி அவளை அணைத்துக் கொண்டாள் கண்மணி. மகள் அக்கறையாக கேட்டது நெகிழ்ச்சியாக இருந்தது. இருந்தும் மனதின் ஒரு மூலை அயர்வாக, திட்டமிட்ட எதையும் செய்யாத குற்றவுணர்வை உணர்ந்து கொண்டிருந்தது. இரவு சரணும் தாமதமாக வர, முகத்தைத் தூக்கி வைத்தபடி தோசை ஊற்றி கொடுத்தாள். “நல்லா ரெஸ்ட் எடுத்தியா?” என்றவனுக்குத் தலையசைத்தவள், நாளை இதற்கும் சேர்த்து உபயோகமாகக் கழிக்கவேண்டும் என்றெண்ணிக் கொண்டாள். 

அடுத்தநாளும் அலாரம் அடிக்கும்முன்பே எழுந்தவளுக்குக் கண்விழிக்கும்போதே மனசு படபடவென இருந்தது. அலுவலகத்தில் தான் போன வாரம் செய்த வேலையில் ஏதாவது பிரச்சனை வந்திருந்தால்… படுத்தபடியே அலைபேசியைத் துழாவியெடுத்து, டீம்ஸ் சேட்-ஐயும், அலுவலக மின்னஞ்சலையும் திறந்து பார்த்தாள். பெரிதாக எதுவும் வெடிக்கவில்லை. எனினும், இவளனுப்பிய செய்திக்குக் குழுத்தலைவி இதுவரை எந்தப் பதிலும் தந்திருக்கவில்லை. ஆனால், படித்திருந்தாள் என்று ரீட் ரெசிப்ட் காட்டியது. ஒருவேளை சொல்லாமல் விடுப்பெடுத்தது குறித்துக் கோபித்துக் கொண்டாளோ, மனதுக்குள் வைத்து பழி வாங்கி விடுவாளோ, ரேட்டிங்கில் கைவைத்துவிட்டால்… அடுத்த வேலையிறக்க பட்டியல் தயாராகும்போது தன் பெயரையும் இணைத்து விட்டால்… போன வருடம் மேகலாவுக்கு இப்படித்தானே நடந்தது. அதற்குமேல் அவளால் படுத்திருக்க முடியவில்லை. ஏதோ தவறு செய்துவிட்டது போல மனது கிடந்து தவித்தது, துக்கித்தது. காலை வேளையில் நெற்றி சுருங்க வளையவந்தவளை சரண் வினோதமாகப் பார்த்தான். ஏற்கனவே விடுப்பு எடுத்ததில் சண்டை போட்டான் என்பதால் அவனிடம் பகிர்ந்து கொள்ளவும் அவளுக்குக் கௌரவம் தடுத்தது.

அவர்களிருவரும் கிளம்பியபின் அதே டிவி, யூடியூப், ரீல்ஸ். வீட்டுக்குள் இருப்பதே பெரிய அழுத்தமாகத் தோன்ற, மதியத்திற்கு மேல் வெளியே சென்று வரலாம் என்று கிளம்பினாள். கடைத்தெரு வரை போய் வரலாமென உடை மாற்றி, கதவைப்பூட்டி, படியில் கால் வைக்கும்போதுதான் நினைவு வந்தது, அவள் குழுவிலுள்ள இருவர் இதே பகுதிதான் என்பது. யாராவது தன்னை இங்கு பார்த்து, ஊருக்குப் போவதாகத் தான் சொன்னது பொய்யென்று தெரிந்து போனால்…

சே. வேறு காரணம் சொல்லியிருக்க வேண்டுமோ… நேற்று ஸ்டேட்டஸ் வேறு… பளிச்சென்று உள்ளே சொடுக்க, வேகமாக வாட்ஸப் திறந்தாள். தான் வைத்த ஸ்டேட்டஸ் மறைந்திருந்தது. ஆனாலும், அதற்குள் எத்தனை அலுவலக முகங்கள் பார்த்தனவோ… ‘அறிவே இல்ல கண்மணி உனக்கு… ? முட்டாள் முட்டாள்…’ காலணிகளைத் திசைக்கொன்றாக விசிறியெறிந்து உள்ளே வந்தவள் தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள். தனக்கான விடுமுறை உரிமையை, தன் நலனுக்கென அலுவலகம் கொடுக்கும் வசதியை உபயோகிக்க ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறோம் என்று அவளுக்கே தெரியவில்லை. அது என்னவோ, விடுமுறை எடுத்தாலே ஒருமாதிரி குற்றவுணர்வு வந்துவிடுகிறது.இப்படி யோசித்தே கடந்த மூன்று வருடங்களாக அவளது விடுமுறைகள் எடுக்கப்படாமலே வீணாகியிருந்தன. இந்தமுறையும் அப்படி நடந்து விடக்கூடாது என்றுதான் தோன்றியவுடனே எடுத்திருந்தாள். இருந்தும் என்ன பயன், நிம்மதியாக இருக்க முடியவில்லையே!

மனம் ரெஸ்ட்லெசாக உணர, யாரிடமாவது பேசினால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அம்மாவை அழைக்கப்போனவள் மணியைப் பார்த்துவிட்டு உதடு பிதுக்கிக் கொண்டாள். இந்நேரம் அம்மா பள்ளியில் இருப்பார். ஆசிரியை. அப்பாவும் ஆசிரியர்தான். ஓய்வு பெற்றுவிட்டார். இப்போது முழுநேரமும் வாட்ஸப் யுனிவர்சிட்டியில் செய்தி ஒலி/ஒளிபரப்பு வேலையில் பிசியாக உள்ளார். எந்நேரமும் ஆன்லைனில்தான் இருப்பார். அம்மாவும் கூட பள்ளி முடிந்து வீடு வந்ததும் அலைபேசியுடன் அமர்ந்து விடுவார். இருவருக்கும் அவரவர் நட்புக் குழுக்கள், பார்வேர்ட் மெசேஜ்கள். அப்பாவிடம் ஏதாவது கேட்டால் அம்மா சொல்லவில்லையே என்பார். அம்மாவும் அப்படியே. இருவரும் ஒரே வீட்டில்தான் இருக்கிறார்களா என்றே சந்தேகமாக இருக்கும். தானும் சரணும் மட்டுமென்ன என்று நினைத்துக் கொள்வாள். போன மாதத்தில் சரண் அலுவலக டூர் செல்ல, இவளும் பூஜாவும் அங்கு சென்றிருந்தார்கள். சென்ற கொஞ்ச நேரம்தான் பேச்சு, சிரிப்பு என்று போனது. மதியத்திற்கு மேல் மூவரும் அவரவர் அலைபேசியுடன் ஐக்கியமாக, பூஜாவுக்கு அவளது ஐ-பேட். அப்பா டிவி போட, எல்லோரும் பேசியை ஸ்கராலிக் கொண்டே டிவியையும் பார்த்தார்கள். உண்மையில் அதில் என்ன ஓடியதென்று அங்கிருந்த யாருக்கும் தெரியாது. டிவி சத்தம் இல்லாமல், கையில் ஆறாம் விரலாக அலைபேசி இல்லாமல் பழைய மாதிரி ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டே சாப்பிடுவதெல்லாம் இனி எத்தனை முயன்றாலும் கைவராது என்றுதான் தோன்றியது, இளையவர்கள், குழந்தைகள், மூத்தவர்கள் என்றில்லாமல் எல்லோரையும் ஒரு சிலந்தி வலை போல இறுகச் சுற்றியுள்ளது இணையச் சிறை. ஒவ்வொருவர் உலகத்திற்கும் வெளியே இறுகிய சுற்றுச்சுவர். அதைமீறி யாரும் யாரையும் அனுமதிக்க விரும்புவதில்லை. அது பெற்றோராக, மகனாக, மகளாக, ஏன் கணவன் மனைவியாக இருந்தாலும் கூட.

வேறு யாரிடமாவது பேசலாமா? கைக்குள் எண்ணற்ற எண்கள் இருந்தாலும் நெருக்கமாக உணர்வது நான்கைந்து நபர்களைத்தான். அவர்களுக்கும் நேரடியாக அழைப்பு விடுக்கத் தயக்கம் தடுத்தது. ஒருவரது வீட்டுக்குச் செல்கையில் அவர்கள் அனுமதி பெற்றுச் செல்வதுதான் சமீபகாலங்களில் வழக்கமாகி உள்ளது என்றால் இப்போது போனில் பேசுவதும் கூட அந்த இடத்தைத்தான் வந்தடைந்து கொண்டிருந்தது. முதலில் குறுஞ்செய்தியொன்று அனுப்பி, ‘இப்போது பேசலாமா?’ என்று கேட்டபின்பே பேச வேண்டியுள்ளது. இந்தப் பழக்கங்களையெல்லாம் யார், எப்போது ஆரம்பித்து வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எப்படியோ எல்லோரிடமும் பரவி ஒரு சமூக மாற்றமாக நிலைபெற்று விடுகிறது.

குடியிருப்பிலும் அவளுக்குப் பெரிதாக யாரிடமும் பழக்கமில்லை. முன்பு எதிர்வீட்டில் ஒரு அம்மா இருந்தார். வயது முதிர்ந்தவர். பண்டிகை தினங்களில் ஏதாவது கொண்டு வந்து கொடுப்பார். பூஜாவைப் பார்த்தால் ஊரிலிருக்கும் பேத்தி நினைப்பு வருவதாகச் சொல்வார். வாரயிறுதிகளில் இவர்கள் ஓய்வாக இருக்கும்நேரம்தான் பெரும்பாலும் வருவார் என்பதால் சற்று தொல்லையாகவும் இருக்கும். இப்போது அவரில்லை. மகனுடனே சென்று விடுவதாக வீட்டைக் காலி செய்துவிட்டார். எந்த ஊர் சொன்னார் என்பது கூட நினைவிலில்லை. அதற்குப்பின் வந்தவர்கள்தான் இப்போதுள்ளவர்கள். எப்போதேனும் கதவு திறக்கையில் எதிர்பட்டால் ஒரு பிளாஸ்டிக் புன்னகையுடன் கடந்து விடுமளவுக்கே பரிட்சயம். இப்படிப் பட்டுக்கொள்ளாமல் வசிப்பது ஒருவிதத்தில் விடுதலையாகவும் இருந்தது. இன்னொரு விதத்தில் தண்டனையாகவும் தோன்றியது.

வலதுகை பெருவிரல் அனிச்சை போல ஷார்ட்ஸ்-ஐ நகர்த்திக் கொண்டிருக்க, எதிலும் லயிக்க முடியாமல் அமர்ந்திருந்தவளது மனம் காரணமில்லாமல் அலைபாய்ந்து கொண்டே இருந்தது. நிலைகொள்ளாத அச்சவுணர்வு. பதட்டம். அலுவலகம் பற்றிய கவலையா என்றால் அப்படியும் சொல்ல முடியவில்லை. எதிர்காலம் பற்றிய பயமா என்று யோசித்தால் ம்ஹும், அறுதியிட்டு இனம்பிரிக்கத் திணறினாள். கணங்கள் ஒவ்வொன்றும் படபடப்பாய், அர்த்தமில்லா அலைக்கழிப்புடன் கழிவது ஏன்? 

என்ன கவலை தனக்கு? சரண் சற்று விட்டேத்தியானவனே தவிர நல்லவன்தான். இருவீட்டுப் பெற்றோரும் இவர்களை எதற்கும் எதிர்பார்ப்பதில்லை. உறவென்ற வகையிலும் சிற்சிறு உரசல்கள் உண்டென்றாலும் பெரிதாகச் சொல்லிக் கொள்கிற பிக்கல் பிடுங்கல் இல்லை. கணவன், பிள்ளை, வேலை, பொருளாதாரம் என அனைத்தும் திருப்தியாகத்தானே உள்ளது. பிறகேன் இந்த ஓயாத பதட்டம்? ஆழ்ந்து யோசித்தால் தனக்குத் தன்னுடன் இருக்கத்தான் அச்சமாக உள்ளதோ, அதனாலேயே கேட்ஜட்களில் தொலைந்து போகத் துணிகிறோமோ என்று கூடத் தோன்றியது.

அடியாழம் விளங்க முடியாத உணர்வலைகள். செய்ய வேண்டிய நூறு விஷயங்களுக்கான நினைவூட்டல்கள், திட்டங்கள், கவலைகள் என ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எண்ணங்கள் நிற்காமல் கரை சேர்ந்தபடியே இருக்க, ஆழ்ந்த மூச்சிழுத்த கண்மணி தன்னை அமைதிப்படுத்திக்கொள்ள முயன்றாள். முடியவில்லை. மனதைத் திசை திருப்ப மீண்டும் அவள் சரணடைந்தது சமூக வலைதளப் பக்கங்களில்தான். இதோ இது மட்டும், இதுமட்டும் என்று பார்த்துக்கொண்டே இருந்தவள், மீண்டும் கண்களைச் சிமிட்டியபோது ஒன்றரை மணிநேரம் கடந்திருந்தது. புலி வாய்க்குள் கைவிட்டது போல இணைய பொழுதுபோக்கே இறுகிய வலைப்பின்னலாகக் கழுத்தை நெரிக்கும் உணர்வு. தெரிந்தும் விடுபடவியலா கையறுநிலை.

மூன்றாம் நாள் அலைபேசியைத் தொடவே கூடாது என்ற முடிவுடன்தான் கண் விழித்தாள் கண்மணி. சரணையும் பூஜாவையும் அனுப்பிவிட்டு, நிதானமாக எண்ணெய் தேய்த்துக் குளித்தாள். பேசியல் செய்து கொண்டாள். செய்ய நினைத்த சில வேலைகளைச் செய்து முடித்தாள். மதியம் வரை தாக்கு பிடித்தவளுக்கு அதற்குமேல் முடியவில்லை. ‘Am I missing out something?’ என்ற கேள்வி தந்த அழுத்தம் தாங்க முடியாததாக இருந்தது. பேசியை எடுத்துத் திறந்தவளுக்கு குபீரென்றிருந்தது. அன்று கசின் ஒருத்தியின் பிறந்தநாள். குடும்பக்குழுவில் எல்லோரும் வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். இவள் வாழ்த்து சொல்லாததில் அம்மா அக்காவிடமிருந்து அழைப்பும், ‘உங்களிருவருக்கும் சண்டையா?’ என்று சில உறவுகளிடமிருந்து தனிச்செய்தியும் வந்திருக்க, நொந்து போனாள் கண்மணி. இந்நாட்களில் உடனேயுடனே வாழ்த்துச் சொல்லாவிடில் அது கொலைக்குற்றத்துக்குச் சமானமாயிற்றே!

சே, இதைப் பார்க்காமலும் இருந்து தொலைக்க முடியவில்லை. மற்ற குறுஞ்செய்திகளையும் பார்த்தவள், சரி, எடுத்தது எடுத்தாகிவிட்டது, அலுவலகத்தில் என்ன நடந்ததோ, அங்கும் பார்த்து விடலாமென்று எட்டிப் பார்த்தாள். அவளில்லாதது பொருட்டே இல்லாததது போல உரையாடல்கள் நிகழ்ந்திருக்க, சற்று நேரம் விட்டிருந்த பயம் மீண்டும் பற்றிக் கொண்டது. இது சரியில்லையே. தன்னிருப்பின் முக்கியத்துவம் குறைவது வேலைக்கான ஆபத்து. மனம் ஏதேதோ புள்ளிகளைத் தொட்டு, திரும்ப முடியாமல் அல்லாடியது.

“கோவிலுக்கு போகணும்னியே? கிளம்புறியா?” மாலை சரண் வந்ததும் கேட்டான்.

“வேணாம். வர நேரமாகிடும். நாளைக்கு நான் ஆபிஸ் போகணும்”

“இந்த வாரம் முழுக்க லீவ்ன?”

“அர்ஜென்டா வேலையொன்னு வந்திருக்காம். சாந்தி போன் பண்ணி வரச் சொன்னாங்க”

அவன் முகம் பார்க்காமல் சொன்னவள், சரண் அடுத்த கேள்வி கேட்பதற்குள் அறைக்குள் சென்று படுக்கையில் முடங்கிக் கொண்டாள். இப்போதும் இதயம் வேகமாகத் துடித்ததுதான். அதன் காரணம் நாளை அலுவலகம் செல்ல வேண்டும் என்பதுதான் என்று நினைத்தபடியே கண்களை இறுக மூடிக் கொண்டாள் கண்மணி.

********

hemajaywrites@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button