கவிதை- நரன்
~ பிறழ்வு ~
—————–
1)
~ யாருடைய வயதை எண்ணும் போது
33 க்கு பிறகு 7 ஆகவும்
பிறகு 54 வயதாகவும்
அதன்பிறகு 13 ஆகவும் மாறுகிறதோ ~
~யாரின் திசையை நீங்கள் கிழக்கின் இடத்தில் தெற்கை;
வடக்கின் இடத்தில் மேற்கை இடம் மாற்றி வைத்தீர்களோ ~
அவன்
~மாத்திரைகள் தங்களை தாங்களே விழுங்கிக் கொள்கின்றன.
(மனச்சிக்கல் மாத்திரைகள் எப்பவும் இப்படித் தான்)
~தம்பளர்கள் தங்களை தாங்களே குடித்துக் கொள்கின்றன.
(மனச்சிக்கல்காரனின் பாத்திரங்கள் எப்பவும் இப்படித் தான்)
~இரவுகள் தன் கண்ணை தான் மூடி- படுத்துறங்காதிருக்கின்றன.
(மனச்சிக்கல்காரனின் இரவுகள் எப்பவும் இப்படித் தான் )
அவன் மூளையில் நுந்நூறு நட்சத்திரங்கள் மினுக் மினுக்கென…
இரண்டு காதுகளின் குறுக்கும், நெடுக்குமாய் நுந்நூறு ஓசைகள் தடக் தடக்கென…
பூனை கவ்விய கிளியின் குரல் போலொன்று
பூனை உண்ணும் சவக் …சவக் ஓசை போலொன்று:
நாய் கவ்விய பூனையின் குரல் போலொன்று
ஆண் கவ்விய பெண்ணின் உதறல் உடல் போலொன்று
நீரிலிருந்து வெளியெடுத்து போட்ட மீனின் துள்ளலோசை போலொன்று
உழு கருவி விறகாய் சட ..சடத்து எரியும் சப்தம் போலொன்று
மலையை பிளக்கும் ட்ரில்லர் சப்தம் போலொன்று
மரத்தை அறுக்கும் மின்சார ரம்ப ஓசை போலொன்று
ரயில் பாய்ந்தவனின் உடல் நசுங்கும் சப்தம் போலொன்று
கூட்டு வல்லுறவின் ஒரு கதறலும் , ஏழு சிரிப்பொலியும் போலொன்று
வேலியில் சிக்கிய பன்றியின் உறுமல் போலொன்று
வயலெலிக்கு வைத்த விஷ தானியத்தை உண்ட மயில்களின் வறட்டு அகவல் போலொன்று
குண்டடி வாங்கி ஒடி சரியும் யானையின் பிளிறல் போலொன்று
கடலில் பாலிதீன் விழுங்கிய டால்பின்களின் செரிக்காத பிள்ளைக்குரல் போலொன்று ;
பிரதமர்களின் பிலாக்கண உரை போலொன்று
பேய் மழையோசை போலொன்று ;
காவல்துறை பூட்சுகளின் பத்திருபது ஓசை போலொன்று :
கிரீச்சிட்டு அவர்களின் வாகனங்கள் நிற்கும் ஓசை போலொன்று ;
முப்பது கரங்கள் கொண்டு அவன் கதவு தட்டப்படும் ஓசை போலொன்று ;
இறந்த மனிதனின் குறட்டை ஒலி போலொன்று …
………..என்ற நூறு சப்தங்களும் குறுக்கும் , நெடுக்குமாய்
…..நடந்து நடந்து நடந்து நடந்து
நடந்து நடந்து நடந்து நடந்து
நடந்து நடந்து நடந்து நடந்து…..
நெடுக்கும் குறுக்குமாய்
மீண்டுமொருமுறை மாத்திரைகள்
33 – பிறகு 7 – பிறகு 54 – பிறகு 13 யென தங்களை தாங்களே விழுங்கிக் கொள்கின்றன.
பூரணம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
2)
திரும்பி பார்க்காமல் பின்னோக்கி நடந்தால் உன் வயதும் பின்னோக்கி நடக்குமென்று யாரோ சொல்லியிருக்கிறார்கள் .
நெடுங்காலம் நடந்து அவன் படித்த ஆரம்பப்பள்ளியெல்லாம் கடந்து மிக அருகில் வந்துவிட்டான் .
அவன் முதிய வயது தாய்
சுருக்கமான யோனியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரித்து காத்திருக்கிறாள்
முன்பாக அவள் கருவறையை நேற்றே நன்கு நீரூற்றி அலசி விட்டிருக்கிறாள் .
அவன் நடையை துரிதப்படுத்திகிறான் .
பாலர்பள்ளி கடந்து பிரசவ ஆஸ்பத்திரி நெருங்கிவிட்டான் .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
3)
~பிறழ்வின் உச்சம்.
திறந்து கிடக்கும் கதவின் வழியே வெளியேறாமல்
அவன் இந்த சுவரை திறக்க முயற்சித்துக் கொண்டேயிருப்பது தான் ~
——————————————————————————————————————————————————
~இறந்தகால குழந்தை~
————————————————
1)
இறந்து பிறந்த குழந்தையின் வாழ்க்கை குறிப்புகள் ஒருபக்கத்திலோ , அல்லது ஒரு வரிக்கு மேலோ செல்வதில்லை .
ஒரு தீக்குச்சியின் தலையிலிருந்து நெருப்பு பிறப்பது போல் : உன் நாசியிலிருந்து சிச்சிறு காற்று பிறக்காதா சிச்சிறு குழந்தையே ..,
அதன் தாய் தன் பருத்தி சேலையிலிருந்து சிறு நூலை உருவி இறந்த நாசியின் முன் வைக்கிறாள் .
மருத்துவமனையின் மின்விசிறி நூலை அசைக்கிறது.
கத்துகிறாள் – இன்னும் மூச்சிருக்கிறது.
தாதி விசிறியை அணைக்கிறாள்.
நூல் இன்னும் அசைகிறது .- மரம் அசைக்கிறது.
(கொடி அசைந்ததும் காற்று வந்ததா; காற்று வந்ததும் கொடி அசைந்ததா)
தாதி தேநீர் கடைக்கு பாடலை நிறுத்த சொல்லி சைகை செய்கிறாள்
தாய் கத்துகிறாள் : சிறுகுழந்தையின் மூச்சு காற்றில் தான் மரம் அசைகிறது .
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
2)
இறந்து பிறந்த குழந்தையின் கல்லறைகள் வெகு ஆழமில்லை.
(எரியூட்ட வேண்டுமென்றாலும் சிறிய சுள்ளிகள் போதும்)
மண்ணிட்டு மூடும் முன் அவன் பள்ளத்துக்குள்ளிருந்து எல்லோரையும் விழித்து பார்க்கிறான்.
(தன்னை பார்ப்பது போலவே எல்லோருக்கும் பிரமை தரும் ஒரு விழிப்பு )
சூரியனை அவனால் மட்டுமே நேருக்கு நேர் இமைக்காது பார்க்க முடியும்.
மூத்தவன் பலமுறை சூரியனோடு யுத்தம் செய்துவிட்டான்.
மூத்தவன் பள்ளிசெல்லும் போதெல்லாம் அதன் தாய் இல்லாத குழந்தையை நினைப்பாள்.
தலைவாரலின் இறுதியில் பரிவோடு சீப்பு அழுந்தாமல்
காற்றில் ஒருமுறை அவள் கை நீந்துகின்றன.
வகுப்பறையில் அண்ணன்
யாருக்கோ இடம் விட்டு அமருகிறான்.
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் சொல்லச்சொல்ல பின் சொல்லும் மாணவர்களிடையே….
மிகவும் பின் தங்கி ஒரு குரல்
ஆசிரியரின் வருகை பதிவேட்டில்
பெயரில்லாத ஒரு மாணவனின் பெயர்.