பூங்காவின் கூழாங்கல் பாதையில் நடப்பதைத் தவிர வேறு எதனுடனும் சென்னையில் நான் இன்னும் ஒன்றவில்லை. அந்தக் கூழாங்கல் பாதையில் இரண்டு பெண்கள் நின்று பேசிக்கொண்டிருந்தனர். இன்னும் ஐந்து நிமிடங்களில் கூழாங்கல் பாதைக்கு வந்துவிடுவேன். அப்போதும் அதில் நின்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தால்?
இரண்டு ஆள்கள் இடிபடாமல் தாராளமாக நடக்கக்கூடிய அகலத்தில் பதினைந்து மீட்டர் நீளத்துக்கும் மேல் போடப்பட்ட கூழாங்கல் பாதை. வயதானவர்கள் நடப்பதற்கும், புதிதாக நடக்கையில் கூழாங்கற்களின் அழுத்தத்தைப் பாதங்களில் தாங்க இயலாதவர்களுக்கும் இரண்டு பக்கங்களிலும் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் கைப்பிடி தரையிலிருந்து முளைத்துப் படர்ந்ததைப் போலப் பக்கவாட்டில் துணையாகச் செல்லும்.
பூங்காவின் சுற்றுச் சுவருக்கு அருகில் வரிசையாக நிற்கும் சூரிய வாழை, தேக்கு, ஈச்சம், பூவரசம் இன்ன பிற மரங்களுக்கு இடம்விட்டு நடப்பதற்காக போடப்பட்டிருக்கும் சிகப்பு நிற சிமெண்ட் சதுரங்கள் பதித்த பாதைகள் நீளத்திலும் அகலத்திலும் சுற்றுச் சுவருக்கு இணையாகவும் செங்குத்தாகவும் பரந்திருந்தன. அவற்றின் இடையில் கூழாங்கல் பாதை தனியாகச் சாம்பல் நிறத்தில் இழுத்த பட்டைக் கோடாகத் தெரியும்.
நாற்பது நிமிடங்கள் சிமெண்ட் சதுரப் பாதைகளில் குறுக்கும் நெடுக்கும் சுற்றியும் நடந்து முடித்த பின்னர் காலணியைக் கழட்டிவிட்டு வெறும்பாதத்துடன் ஐந்து நிமிடங்கள் கூழாங்கல் பாதையில் நடப்பேன்.
சென்னையில் எனக்கு எரிச்சல் தராதவற்றில் முதன்மையானது இந்தக் கூழாங்கல் நடைபாதை.
முப்பது ஆண்டுகள் சவூதி அரேபியாவின் பல நகரங்களில் வேலைபார்த்துவிட்டு, ஊரார் பார்வைக்கு அரேபிய எண்ணெய்க் கிணறுகளின் முதலாளியாகவும், உண்மையில் சென்னை மாநகரின் ஏராள நடுத்தர வர்க்க மக்களின் இன்னொரு பிரதிநிதியாகவும், வயதான காலத்தில் இந்தியாவுக்குத் திரும்பிய பின், சென்னைச் சூழலுக்கு என்னை மாற்றிக்கொள்வதில் நான் இன்னும் வெற்றியடையவில்லை.
சென்னையில் என்னால் கார் ஓட்ட முடியவில்லை. சாலையில் இடம் வலம் குழப்பம் வந்து அடிக்கடி வண்டியைச் சாலையின் வலப்பக்கம் வளைத்து, எதிரில் வரும் வண்டிகளின் ‘வூட்ல சொல்ட்டு வண்ட்டியா சாவுகிராக்கி’க்கும் ‘காலைலயே டாஸ்மாக்கா’க்கும் ஒன்றிரண்டு அம்மா வகைத் திட்டுகளுக்கும் ஆளானதில், என் மகன் வண்டி எடுக்கத் தடை போட்டான்.
‘முதலில் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிப் பழகுங்கள்’ எனக் கண்டிப்புடன் சொன்னான்.
சென்னையில் ஸ்கூட்டர் ஓட்டினால் எதிரில் வரும் வண்டிகள் அனைத்தும் திட்டமிட்டு என் மீது மோதுவதற்கென்றே வருவதாகத் தோற்றமளிக்கின்றன. இந்த இடமாறு தோற்றப் பிழை அச்சத்தை வெளியில் சொன்னால் ஸ்கூட்டர் ஓட்டவும் தடை வரும் என்பதால் கணக்கற்ற திடுக்கிடும் திருப்பங்களுக்கு இதயத்தைப் பழக்கப்படுத்தி ஸ்கூட்டர் ஓட்டுகிறேன். எரிச்சலாகத்தான் இருக்கிறது, என்ன செய்ய?
வளைகுடா நாட்டின் சாலைகளில் மாட்டுச் சாணமும், நாய்க் கழிவுகளும் தென்படாது. இங்கு ஏதாவது வழியில் எப்படி ஒதுங்கி ஒதுங்கி ஸ்கூட்டரை ஓட்டினாலும் ஈரச் சாணத்தையோ காய்ந்த சாணத்தையோ ஒட்டித்தான் சக்கரம் சுழல்கிறது. அது பிடிக்காவிட்டாலும், காலச்சக்கரம் என்னைப் பழக்கப்படுத்தும் என்னும் நம்பிக்கையில் அல்லது என்னால் ஏதும் செய்ய இயலாது என்னும் உண்மையின் தாக்கத்தில் வண்டி எரிச்சலுடன் ஓடுகிறது.
மின்சார வாரியத்தில் என்னுடைய பெயர் தவறாகப் பதியப்பட்டிருந்தது. அதை மாற்ற நானே முயற்சி செய்வதாகக் கூறிக் களத்தில் குதித்தேன்.
வளைகுடாவிலிருந்து விடுமுறையில் வந்த நாள்களில் அரசு அலுவலகங்கள் சென்றதெனில் ஆதார் அட்டைக்காகவும் சென்னைக்கு அருகே திண்டுக்கல்லில் வாங்கிப்போட்ட ஒன்றிரண்டு நிலங்களின் பத்திரப்பதிவுகளுக்கும் சென்றதுதான். அப்போதெல்லாம், யாரேனும் துணைக்கு வருவார்கள், எனக்கு அரசு அலுவலர்களுடன் எந்தப் பேச்சு வார்த்தையும் இருக்காது. துணைக்கு வருபவர் தொடர்பாடலில் ஈடுபடுவார், நான் பொம்மையைப் போல் அவர் சொல்வதைக் கேட்பேன். காட்டிய இடத்தில் அரசு ஆவணங்களில் கையெழுத்திடுவதுடன் என் பொறுப்பு முடிந்துவிடும்.
இப்போது அப்படி அல்ல, நானே அரசு அலுவலர்களிடம் பேசவேண்டும். தைரியமாகத்தான் பேசினேன்; ஆனால், அவர்கள் என்னை ஏற இறங்கப் பார்த்த பார்வையில் மதிப்பு இல்லையென்பது தெளிவானது.
“இந்த ஆபீஸ்ல இதெல்லாம் முடியாது, சிவன் கோயில் ஸ்ட்ரீட்லதான் இதெல்லாம் செய்வாங்க”
சத்தியமாக எனக்கு சிவன் கோயில் தெரு எங்கிருக்கிறதெனத் தெரியாது. அவரிடம் எதுவும் கேட்காமல் வெளியே வந்து கூகுளில் தேடினால், நான் நிற்கும் இடத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டரில் ஆற்காடு சாலையிலிருந்து ஒரு திருப்பத்தில் காட்டியது. மீண்டும் ஸ்கூட்டரை உதைத்துப் புறப்பட்டேன்.
முதலில் பணம் கட்டும் இடத்தில் விசாரித்ததற்கு முதல் மாடியில் என்றார்கள், முதல் மாடியில் விசாரித்ததற்குக் கீழே கணினிப் பிரிவில் என்றார்கள், கணினிப் பிரிவில் கேட்டதற்கு, உள்ளேயிருந்து மாற்றினால் தானாகக் கணினியில் மாறிவிடும் எனச் சொல்லி உள்ளே கேட்கச் சொன்னார்கள்.
அந்த உள்ளே எங்கெனத் தேடினால் யாரோ ஒருவர் வந்து என்ன பிரச்சனையென்றார். அவரிடம் விவரம் சொன்ன பின், ‘செய்துடலாம் வாங்க’ எனக் கட்டடத்தின் பின் பக்கம் அழைத்துச் சென்றார்.
மனுவையும் மற்ற ஆதாரங்களையும் என் பெயர் என் பெயராக இருக்கும் ஆவணங்களையும் கேட்டார். அப்படித் தனியாக யாரிடமோ எல்லா ஆவணங்களையும் கொடுப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. ‘தலை வலிக்குது சார், ஒரு காபி குடிச்சுட்டு வரேன்’ என ஆவணங்கள் எதையும் தராமல் புறப்பட்டேன்.
‘என் மூலமாத்தான் இந்த பேப்பர்ங்க பாஸ் ஆவும்’ என அவர் சொன்னதைக் காதில் வாங்காதவன் போலக் கடந்தேன்.
என் மனைவியை அழைத்து விவரங்கள் சொன்னேன். அங்கேயே நிற்கச் சொன்னார். அரைமணி நேரத்தில் வெள்ளைச்சட்டை, சட்டைப்பையில் தலைவர் படம், ஜீன்ஸ் கால்சட்டை, தங்கக் கைக்கடிகாரம், மோதிரம் என மிரட்டும் தோரணையில் ஒருவர் வெள்ளை நிற பல்சர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கினார். சுற்றிலும் நின்ற ஆள்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு நேராக என்னிடம் வந்தார்.
“கோல்டன் நகர், ப்ளாட் ஃபிப்டி, மேடம் ஹஸ்பெண்ட் நீங்கதான?”
“ஆமா”
“மேடம்தான் அனுப்புனாங்க, எதோ நேம் கரெக்ஷன்னாங்க. என்னோட வாங்க”
அவரும் என்னை அதே ‘உள்ளே’விற்குள் அழைத்துச் சென்றார். யாரிடமோ மனுவைக் கொடுத்து கோப்பு எண் போடச்சொன்னார், கோப்பு எண் போடப்பட்ட மனுவைக் கையில் எடுத்துக்கொண்டு இன்னொரு பிரிவுக்குச் சென்றார், அங்கு யாரோ கையெழுத்திட்டதும், மனுவுடன் எல்லா ஆவணங்களையும் அங்கேயே மேசையில் இருந்த ஒரு ஸ்டாப்ளரை எடுத்து அடித்து ஒன்றாக்கினார். இன்னொரு பிரிவுக்குச் சென்றார்.
அந்தப் பிரிவில் என்னைக் கட்டடத்துக்கு வெளியே அழைத்துச் சென்ற நபருக்கு வணக்கம் சொன்னார், அவரும் வணக்கம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்தபடி, “சார் உன் ஃப்ரெண்டா பல்ராமா? மொதுலே சொல்லத் தேவல?” என்றார். அப்போதுதான் எனக்கு வந்தவர் பெயர் பலராமன் என்பது தெரிந்தது. அந்த அலுவலர் அல்லது அதிகாரி பலராமனைப் பார்த்து, “பதினஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. டீ சாப்ட்டு வாயேன்” என்றார்.
பலராமனும் நானும் வெளியே வந்தோம். பலராமன் என்னிடம் எதும் பேசாமல் கைப்பேசியை எடுத்துப் பார்த்தார், யாருக்கோ வாய்வழித் தகவல் பதிவுசெய்து அனுப்பினார், யாரையோ அழைத்துத் திட்டினார், யாரிடமோ குழைவாக, “ஹாஃபனவர்ல அங்க இருப்பேண்ணா” என்றார். நான் அருகில் இருக்கும் நினைவே இல்லாமல் அவர்பாட்டுக்கு அவர் வேலையைச் செய்துகொண்டிருந்தார்.
நானும் கைப்பேசியை எடுத்து மனைவியை அழைத்தேன். “யாரோ பலராமன்…” எனத் தொடங்குமுன் மனைவியே பேசினார்,
“இதுக்குதான் உங்களப் போகவேணாம்னேன். சென்னைல எல்லாம் பழகணும்னு சொன்னீங்க. இப்பப் பாருங்க. யாரோ வந்து டாக்குமெண்ட்ஸ் கேட்டதும் என்ன செய்யன்னு யோசிக்றீங்க. ஒண்ணும் பிரச்சனையில்லை, பலராம் எல்லாத்தையும் பார்த்துக்குவாரு. உத்தண்டில வாங்கிப்போட்ட ரெண்டு கிரவுண்டு விக்கலாமானு கேட்டிங்கல்ல, பலராமன்தான் அதுக்கு மீடியேட்டர், நமக்கு ரெகுலரா ப்ராப்பர்டி வாங்கித்தர்ரது அவர்தான். அந்த ஏரியாவுல பலராமனை எல்லாருக்கும் தெரியும்.”
பதினைந்து நிமிடங்கள் கழித்து பலராமன் உள்ளே சென்றார், வெளியே வந்தார், என்னையும் அழைத்துக்கொண்டு கணினிப் பகுதிக்குச் சென்றார். அங்கு என் பெயரைச் சொல்லிப் பெயர் மாற்றத்தின் நிலவரத்தைக் கேட்டார். பெயர் மாறிவிட்டதென்றும் இப்போது இணையத்தில் பார்த்தால் சரியாக இருக்குமென்றும் தகவல் கிடைத்தது.
அன்று முதல் சிவன் கோயில் தெருவுக்குச் செல்லும்போதெல்லாம் ஒரு பெயர் மாற்றத்துக்குக்கூட சிபாரிசுக்கு ஆள் தேவைப்பட்டதை நினைத்து எரிச்சல் வருவது வழக்கமாகிப்போனது. சவூதி அரேபியாவில் அரசு அலுவலகங்களில் யாருடைய உதவியும் இல்லாமல் குடும்பத்தினருக்கு விசா வாங்கியது, எனக்கு ஓட்டுநர் உரிமம் வாங்கியது, வாடகை ஒப்பந்தத்தைப் பதிவு செய்தது, சவூதி அரேபிய மின்சார வாரியத்தில் இணைத்தது, எல்லாமும்கூட நினைவுக்கு வந்து எரிச்சலை அதிகப்படுத்தும்.
ஒரு அரசு அலுவலகத்தில் வேண்டியதைச் செய்ய என்னால் முடியவில்லை.
வீட்டில் சும்மா இருப்பதற்கு ஏதாவது இயங்கிக்கொண்டிருப்போமே என மீன் அங்காடிக்குச் சென்று மீன் வாங்கிவந்தேன். மீன் கடைக்காரர் பழைய மீன்களை என் தலையில் கட்டிவிட்டு அதிக விலையும் எடுத்திருக்கிறார். இறைச்சிக் கடையிலும் அப்படியே நடந்தது, நான் வாங்கிவந்த இறைச்சியில் சவ்வும் எலும்பும் கூடுதலாக இருந்தன. காய்கறிக் கடைகளில் கேட்கவே வேண்டாம், பழைய கொத்தமல்லி புதினாக் கட்டுகள் நான் வாங்குவதற்காகவே பிறப்பெடுத்தனபோலப் படுத்திருக்கும், நானும் அது புதியதா பழையதா எனத் தெரியாமல் பழைய கட்டுகளை எடுத்துக் கூடையில் வைத்திருப்பேன்.
இப்படியாக எந்தப் பக்கம் திரும்பினாலும் எரிச்சலூட்டும் நிகழ்வுகளின் இடையில் எனக்குப் பிடித்தமானது அந்தக் கூழாங்கல் பாதையில் நடக்கும் ஐந்து நிமிடங்கள்.
நான் சிறிய வயது முதலே யாராவது பாதங்களைப் பிடித்துவிட்டால் கிறங்கிப்போவேன். குழந்தையாக இருக்கையில் அம்மாவோ பாட்டியோ யாரோ எனக்குப் பாதங்களைப் பிடித்துவிட்டுத் தூங்க வைத்திருக்க வேண்டும். பின்னர் அது பழக்கமாகியிருக்கலாம். பள்ளி நாள்களில் யோகா பழகியபோது பத்மாசனத்துக்குக் கால்களை மடியில் வைத்துப் பழகியது நல்லதாயிற்று. மாலைவேளைகளில் ஒரு காலைமட்டும் அப்படி மடக்கி மடியில் வைத்து எனக்கு நானே பாதத்தை அழுத்திப் பணிவிடை செய்துகொள்வேன். பாதத்தில் பெருவிரலுக்குக் கீழே அழுத்துவதும், இன்னும் கீழிறங்கி நடுப்பாதத்தின் உட்பக்கம் மீடியல் பிளாண்டர் நரம்போ ஏதோ ஒரு பெயரை எலும்பியல் நரம்பியல் அறிந்தோர் சொல்வார்களே அந்த நரம்பில் அழுத்தம் உண்டாவது போல் பாதங்களை அழுத்துவதும் எனக்கு சொர்க்கத்தைக் கண்களில் காட்டும்.
உங்களுடன் ஒரு ரகசியத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமெனில் என்னை வீழ்த்த இந்தப் பாதவழுத்த ஏவுகணையை எப்போதாவது என் மனைவி வீசுவதும் உண்டு. எங்கள் குடியிருப்பில் நீங்கள் அவரைக் காண நேர்ந்தால் இதை மட்டும் கேட்டு என் மானத்தை வாங்கிவிடாதீர்.
ஒருமுறை சிங்கப்பூர் பயணத்தில் ஏராள தாராள விமான நிலைய நடைகளுக்கு இடையே முதன் முதலாக ஒரு பாதமழுத்தியைப் பார்த்தேன். நீண்டு விரிந்து பரந்த விமான நிலையத்தில் இருந்த நகரும் பாதைகளுள் ஒன்றின் பக்கத்தில் சுவரோரமாக ஒரு இருக்கையைப் போட்டு அதையும் வைத்திருந்தார்கள். காலணியைக் கழட்டிவிட்டுக் கால்களை உள்ளே நுழைத்துப் பொத்தானைத் தட்டியதும் இரண்டு நிமிடங்களுக்குப் பாதத்தை அழுத்தி, உருட்டி, குத்தி, இடித்து, நடந்த களைப்பை நீக்கியது. முகம் கழுவாமலும் தேநீர் குடிக்காமலும்கூடப் புத்துணர்வைப் பெற ‘ஃபுட் மசாஜ்’ போதும் என்பதை அன்று உணர்ந்துகொண்டேன்.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் நான் பார்த்த அந்தப் பாதமழுத்தி சில நாள்களில் சென்னையிலும் ஜித்தாவிலும் சந்தையில் கிடைத்தது. சென்னையில் நடந்த வீட்டு அறைக்கலன்கள் பொருட்காட்சியில் ஏதோ ஐரோப்பிய நாட்டுத் தயாரிப்பை அன்றைக்கு இருபதாயிரம் ரூபாய் விலை சொன்னார்கள். ஜித்தாவில் விலை விசாரித்தேன், ஜப்பானியத் தயாரிப்பு இந்திய ரூபாய் முப்பதாயிரத்துக்குக் கிடைத்தது. ஆனால், நான் வாங்கவில்லை. அப்போது சந்தையில் கிடைத்த அக்குபிரஷர் காலணிகள் என் தேவைக்குப் போதுமானதாக இருந்தன. ஜித்தாவில் ஒரு ஜோடிக் காலணியும் சென்னையில் ஒரு ஜோடிக் காலணியும் வைத்திருந்தேன். வீட்டுக்குள் பத்து நிமிடங்கள் அவற்றை மாட்டிக்கொண்டு நடப்பது அப்போதைய வழக்கம்.
சில நேரங்களில் ஜித்தா – ரியாத் – கொழும்பு – சென்னை என விமானம் மாறி மாறி வந்தால் குறைந்த விலையில் பயணச்சீட்டு கிடைக்கும். அப்படி வருகையில் கொழும்பு விமான நிலையத்தில் கண்டிப்பாக ‘ஃபுட் மசாஜ்’ எடுத்துக்கொள்வேன். வெந்நீர் ஒத்தடமும் அழுத்தமும் ஜித்தா – ரியாத் – கொழும்பு பயணத்தில் உண்டான கால்வீக்கத்தைக் குறைத்துப் புத்துணர்வைக் கொடுக்கும்.
சிங்கப்பூர் விமான நிலையப் பாதமழுத்தி, கொழும்பு விமான நிலைய ‘ஃபுட் மசாஜ்’, அக்குபிரஷர் காலணிகள், அவையவை அதனதன் இடத்தில் சிறப்பானவை, எனக்கு நெருக்கமானவை. போலவே, இந்தப் பூங்காவின் கூழாங்கல் பாதையும் எனக்கு நெருக்கமானது. வேறு எங்கும் இதற்கு முன் கூழாங்கல் பாதையை நான் பார்த்ததுகூடக் கிடையாது. முதன்முதலில் இங்குதான் பார்த்தேன். பார்த்தவுடன் காலணியைக் கழட்டிவிட்டு கூழாங்கல்லில் கால்வைத்ததும் சுருக்கென அது பாதத்தின் எலும்புகளில் தசையின் வழியாக உறைத்தது. ‘ஸ்ஸ்ஆஆ’ எனத் தடுமாறினேன்.
“ஹாண்ட் ரெயில்ஸ்ஸப் புடிச்சுக்கங்க சார், ஈசியா இருக்கும், ரெண்டு நாள் நடந்தா பழகிடும்” எனச் சொன்னவர், “பழைய ஊராட்சித் தலைவர் சன்தான நீங்க. ரொம்ப நாள் துபாய்ல இருந்தீங்கல்ல? அப்பா எப்படி இருக்காங்க? வீட்டுக்குள்ள நடமார்ரதுல பிரச்சனை இல்லீல்ல” எனத் தொடர்ந்தார். அவருக்கு என்னையும் என் குடும்பத்தையும் தெரிந்திருக்கிறது; ஆனால், அவரை எனக்குத் தெரியாது.
இதுவும் எங்கள் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் எனக்குப் பிரச்சனை. என்னைப் பலருக்கும் தெரியும், அவர்கள் யாரையும் எனக்குத் தெரியாது.
அப்பாவின் நலனை அவருக்குத் தெரிவித்துவிட்டு, நான் வேலை பார்த்தது துபாயில் அல்ல; சவூதி அரேபியாவில் என்பதையும் சொன்னேன். சவூதி அரேபியா – துபாய் பெயர் வேறுபாட்டில் அவர் அத்தனை கவனம் செலுத்தவில்லை, அப்பாவின் நலன் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார்.
நான் மெதுவாக, ‘அல்லித் தண்டுக் காலெடுத்து அடிமேல் அடியெடுத்து’ பாடலை மனதுக்குள் ஓடவிட்டு அடுத்தடுத்தக் காலடிகளை நடைபழகும் குழந்தையைப் போல ஒவ்வொன்றாக வைத்தேன். முதல் நடையில் முடியுமாவெனத் தோன்றியது, இரண்டாம் நடையில் கடினமாகத் தோன்றியது, மூன்றாம் நடையில் பக்குவப்பட்டது, நான்காம் நடையில் ‘அல்லித்தண்டுக் காலெடுத்து’ பாடல் மறைந்து, ‘பள்ளிக்கட்டு சபரிமலைக்கு.. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை’ என பக்திப் பாடல் மனதுக்குள் ஒலித்தது.
அன்று முதல் இந்தப் பாதை என்னுடைய சென்னை வாழ்க்கையின் ஒரு அங்கமானது. மழை கொட்டோகொட்டெனக் கொட்டும் நாள்களில் மட்டும் என்னால் அதில் நடக்கமுடியாது. வெளியூருக்குச் செல்லும் நாள்களில் நடக்கமுடியாது. மற்ற அனைத்து நாள்களிலும் நாற்பது நிமிட நடைப்பயிற்சியும் கூழாங்கல் பாதையில் ஐந்து நிமிட நடைப்பயிற்சியும் வழமையாயின.
வழுவழுப்பான கூழாங்கல் பாதை. கூழாங்கற்களை சாணைக்கல்லில் தேய்த்து வழுவழுப்பாக்கி, அவற்றை சிமெண்ட்டின் மீது பதித்துப் போடப்பட்ட பாதை.
நதிக்கல்
இதற்கு மேல் உருள முடியாது
கல் நதியை விட்டுக் கரையேறிற்று.
இதற்கு மேல் வழவழப்பாக்க முடியாது
கல்லை ஒதுக்கி விட்டு
நதி ஏகிற்று.
– கல்யாண்ஜி
கல்யாண்ஜியின் கவிதையில் வரும் கல்லைப்போல, இந்தக் கற்களும் தன்னை வழவழப்பாக்கிய சாணைக்கல்லுடன் உரையாடியிருக்கலாம், சாணைக்கல்லும் இந்த வழவழப்பு இவற்றுக்குப் போதும் என நினைத்திருக்கலாம். இப்போது அந்தக் கற்கள் பதிக்கப்பட்ட பாதை என் வாழ்க்கையின் ஓர் அங்கம்.
இதோ இன்னும் ஐந்து நிமிடங்களில் என்னுடைய நாற்பது நிமிட நடை முடிவடையும், காலணிகளைக் கழட்டிவிட்டு கூழாங்கல் பாதையில் ஏறினால் ஐந்து நிமிடங்கள் எனக்கு பிடித்த காலழுத்தம் நடந்து உலகை மறப்பேன். ஆனால், அதற்குத் தடையாக அங்கே இரண்டு பெண்கள் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
முதல் பெண் பாதிப் பாதையில் நின்றபடியும், அடுத்தவர் கைப்பிடியில் சற்றே சாய்ந்த நிலையிலும் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்படி நின்றது பாதிப் பாதையை ஆக்கிரமித்தது. மீதிப் பாதையில் யாரேனும் ‘எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் வழிவிடுங்க’ சொல்லாமல் நடக்க முயற்சி செய்தால், பாதிப் பாதையில் நிற்கும் பெண்மணியின் மீது உரசக்கூடிய வாய்ப்பு உண்டு.
என்னுடைய காலடியில் தோராயமாக இருநூறு காலடிகளில் பூங்காவின் ஒரு சுற்று முடியும். அதிவேகமில்லாத என்னுடைய நடைக்கு பூங்காவினுள் பாதைச்சுற்று இரண்டு நிமிடங்களில் முடியும். இன்னும் இரண்டரை சுற்றுகளில், அதாவது இன்னும் ஐந்து நிமிடங்களில் என்னுடைய வழக்கப்படி நான் கூழாங்கல் பாதையில் காலை வைக்கவேண்டும்; ஆனால், அது நடக்காதெனத் தோன்றுகிறது. பாதிப் பாதையைத்தான் அந்தப் பெண்கள் ஆக்கிரமித்து நிற்கிறார்களே!
‘ஒரு எக்ஸ்கியூஸ் மீ சொல்லிவிட்டு நான்பாட்டுக்கு நடக்க வேண்டியதுதானே’ என நீங்கள் கேட்கலாம். சவூதி அரேபியாவில் நான் வாழ்ந்த காலத்தில் நீங்களும் வாழ்ந்திருந்தால் என் தயக்கம் புரியும். அறிமுகமில்லாத பெண்களிடம் சட்டென உரையாடும் பக்குவம் என்னிடமிருந்து விடைபெற்றுச் சென்று ஆண்டுகளாகின்றன. ஆண்கள் தனி – பெண்கள் தனி என்றே சவூதி அரேபியாவில் அனைத்தும் இருந்த காலகட்டத்தில், பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லாத காலகட்டத்தில்தான் நான் அங்கு வாழ்ந்தேன்.
இப்போது சவூதி அரேபியாவில் நிலைமை அப்படி அல்ல. நான் அங்கிருந்து பணி ஓய்வு பெற்று சென்னைக்குத் திரும்பிய காலகட்டத்தில் அங்கே பெண்களுக்கு ஒட்டுநர் உரிமம் கொடுத்தார்கள். பல இடங்களிலும் பெண்கள் சாதாரணமாக உலவுவதைக் காண முடிந்தது. இருப்பினும் பல ஆண்டுகளாகப் பழமைக்கு பழக்கப்பட்ட என்னால் சட்டெனப் பெண்களிடம் பேச முடியாது.
இன்னும் ஐந்து நிமிடங்களில் அந்தப் பெண்கள் கூழாங்கல் பாதையிலிருந்து விலகினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் நான் நடந்துகொண்டிருந்தேன். அடுத்த சுற்றை முடிக்கும்போது பார்த்தேன், அந்த இருவருடன் மூன்றாவதாக ஒரு பெண்ணும் நின்றுகொண்டிருந்தார். அவருடன் எனக்கு அறிமுகமில்லாவிட்டாலும் அவர் முகம் எனக்குத் தெரியும். என்றோ ஸ்கூட்டரில் நானும் என் மனைவியும் செல்லும்போது ஸ்கூட்டர் அவரைக் கடந்த அந்த நொடியில், ‘டாட்டர்-இன்-லா ரிடர்ன் ஆகிடுச்சா?’ என என் மனைவி அவரைப் பார்த்துக் கேட்க, அவரும், ‘யெஸ், யெஸ்டர்டே ஈவினிங்’ எனப் பதிலளித்தார்.
“அவங்க சன் அபுதாபில இருக்கான். டாட்டர்-இன்-லா இங்க டீசீயெஸ்ல. ஒரு மாசம் அவ அபுதாபிக்குப் போய்ட்டு வரப்போறதாச் சொன்னாங்க. அதான் விசாரிச்சேன்.” – என் மனைவி.
அந்த அபுதாபி மகனின் அம்மாவும் ஒன்று சேர்ந்து மூன்று பெண்கள் முழுப்பாதையையும் அடைத்துவிட்டார்கள்.
நான் இன்னொரு சுற்றை முடித்த பின்னரும் அவர்கள் விலகுவதற்கான அறிகுறி உண்டாகவில்லை. எனக்கு எரிச்சல் கூடியது. எனக்கு முன் வேறு யாராவது கூழாங்கல் பாதையில் ஏறி அவர்களை வழிவிடச் சொன்னால் நன்றாக இருக்கும் என நினைத்துக்கொண்டே அடுத்த சுற்றைத் தொடர்ந்தேன்.
மற்றவர்களுக்காகக் காத்திருந்தால் என் பாதத்தின் ஒத்தடமும் எனக்கு பிடித்த ஐந்து நிமிட சொர்க்கவாசமும் இன்றைக்குக் கிடைக்காது என்னும் நினைப்பு மேலிட, இந்தச் சுற்றை முடித்துவிட்டுக் கூழாங்கல்லில் கால் பதித்து ஏறி, ‘எக்ஸ்கியூஸ் மீ’ சொல்லி ஒதுங்கச் சொல்லிவிட்டு நடந்துவிடவேண்டியதுதான் என முடிவு செய்தேன்.
1. எக்ஸ்கியூஸ் மீ
2. எக்ஸ்கியூஸ் மீ பிளீஸ்
3. மேடம், பிளீஸ் கொஞ்சம் வழிவிட முடியுமா?
4. மேடம், நீங்க நடந்து முடிக்ற வரை நான் வெய்ட் பண்ணட்டுமா?
நான்கு உரையாடல் தொடக்கங்களை மனதுக்குள் அசைபோட்டேன். இந்நான்கில் நான்காவதைத் தேர்ந்தெடுத்தேன். அதுதான் எனக்குச் சரியாகப் பொருந்துகிறது. முகத்தில் கண்டிப்பைப் போர்த்திக்கொண்டு, ‘எக்ஸ்கியூஸ்மீ’ சொல்லும் சென்னைப் பழக்கத்துக்கு நான் இன்னும் ஆட்படவில்லை.
மனதுக்குள் இரண்டு முறைகள் சொல்லிப் பார்த்தேன். தடையின்றி வந்தது. மெதுவாக முணுமுணுத்தேன், ‘மேடம், நீங்க நடந்து முடிக்ற வரை நான் வெய்ட் பண்ணட்டுமா?’ எட்டே எட்டு சொற்கள் கோவையாக ஒன்றன் பின் ஒன்றாக வந்து வாக்கியத்தை நிறைவு செய்தன. அத்தனை வினயமாகக் கேட்டால் யாரும் வழிவிடுவார்கள் என்னும் நம்பிக்கை எனக்குள் உருவானது.
பாதிச் சுற்றை முடிக்கையில் கூழாங்கல் பாதையைப் பார்த்தேன், மூவரில் யாரும் நகர்வதாகத் தெரியவில்லை. மீதிச் சுற்றை முடித்ததும் கேட்டுவிடவேண்டியதுதான்.
முக்கால் சுற்றில் மீண்டும் பார்த்தேன், எந்த மாற்றமும் நிகழவில்லை. அப்போது என் மனைவி பேத்தியை அழைத்துக்கொண்டு பூங்காவிற்குள் நுழைவதைக் கண்டேன்.
இன்னும் கால் சுற்றில் மனைவியையும் பேத்தியையும் நெருங்கிவிடுவேன். பேத்தி ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்வாள். ஆனால், அது நடக்கவில்லை. பூங்காவுக்குள் நுழைந்த என் மனைவி பேத்தியைக் குழந்தைகள் விளையாட்டுத் திடலுக்கு அனுப்பினார். அவளும் ஓடிப்போய் காலியாக இருந்த ஊஞ்சலில் அமர்ந்து தரையை உந்தித் தள்ளி ஆடத் தொடங்கினாள். அதன் பின் என் மனைவி கூழாங்கல் பாதைக்கு வந்து அங்கு முன்பே நின்றிருந்த மூன்று பெண்களுடன் சேர்ந்துகொண்டார்.
நான் இறுதிச்சுற்றை முடிக்கையில் கூழாங்கல் பாதையில் நான்கு பெண்கள் நின்று கதை பேசிக்கொண்டிருந்தனர். வழக்கமாகக் காலணியைக் கழட்டிவிடும் இடத்தை நெருங்கினேன். என் மனைவி தலையைத் திருப்பி என்னைப் பார்த்தார். நான் அவரிடம் வீட்டுக்குச் செல்வதாக சைகையில் காண்பித்துவிட்டுப் பூங்காவை விட்டு வெளியேறினேன்.
********