இணைய இதழ்இணைய இதழ் 94சிறுகதைகள்

மீள்வு – கா. சிவா

சிறுகதை | வாசகசாலை

ணி பதினொன்று ஆனபோதும் ஈஸ்வரிக்கு தூக்கம் வரவில்லை. கட்டிலில் வினோத் தூங்கிக்கொண்டிருக்க அவன் மார்பின் மேல் தலைவைத்து ரக்சன் தூங்கிக் கொண்டிருந்தான். இவர்கள் இப்படி ஆழ்ந்து தூங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது.

ஈஸ்வரி கதவைத் திறந்து வெளியே பார்த்தாள். பக்கத்து வீட்டிற்கு முன் இவளும் அடுத்தடுத்த வீடுகளில் இருக்கும் பெண்களும் எடுத்து வைத்த துணிகளும் தட்டுமுட்டு சாமான்களும் அப்படியே கிடந்தன. இவளுக்கு ஆசுவாசமாக இருந்தபோதும் லேசான பதட்டமும் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் அந்தம்மா மெர்சி வந்துவிடக் கூடும். இதுவரை அமைதியாகக் கழியும் இரவை தன் வசையால் கிழித்து தொங்கவிடலாம். 

அடுப்படிக்குச் சென்று தண்ணீர் குடித்தாள். இன்றென்னவோ என்றைக்குமில்லாமல் தாகமாகவே இருக்கிறது. சமையல் மேடையில் மூடப்படாமல் இருந்த எஞ்சிய இரவு உணவை வைத்திருந்த கிண்ணத்தை சின்ன தட்டை எடுத்து மூடினாள். எப்போதுமே மிஞ்சியதில்லை. இன்று எப்படியோ அதிகமாகிவிட்டது. 

மூன்று நாள் பெருமழையில் சென்னையே மூழ்கிக் கொண்டிருந்தபோது ஈஸ்வரி வேலூரில் அம்மா வீட்டில் தொலைக்காட்சியையே பார்த்துக் கொண்டிருந்தாள். வினோத் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ரக்சனுக்கு எதுவும் புரியாத வயது. இவர்கள் சென்னையில் வசிக்கும் அரசுக் குடியிருப்புப் பகுதிக்குள்ளும் தண்ணீர் தேங்குகிறது என்ற செய்தி பெரும் பதைப்பை ஏற்படுத்தியது. 

வீட்டில் விலைமதிப்பு மிக்க பொருட்கள் என தொலைக்காட்சியைத் தவிர வேறொன்றும் இல்லை. பதைப்பு வீட்டின் நிலை குறித்து. அந்தக் குடியிருப்பு கட்டப்பட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பக்கத்து வீடு சிறு மழைக்கே ஒழுகியதால் அங்கிருந்தவர்கள் வேறிடத்திற்குச் சென்றுவிட்டார்கள். இவர்கள் இருக்கும் வீட்டிற்குச் சேதம் ஏற்பட்டால் புதிதாக எங்கு வீடு பார்ப்பது, கூடுதல் வாடகை கொடுக்க என்ன செய்வது என்பது போன்ற விடையில்லா வினாக்கள் எழுந்து மனதை உராசி உடலை விதிர்க்க வைத்தன. 

மழைவிட்டு வெள்ளம் வடியத் தொடங்கிய செய்தி வந்ததும் இருவரையும் இழுத்துக் கொண்டு வந்து சேர்ந்தாள். வீடிருக்கும் பகுதியில் கால் வைத்தபின்தான் சற்று பதட்டம் தணிந்தாள். முழங்காலளவு தண்ணீர் மட்டும் தேங்கியபின் வடிந்துவிட்டிருக்கிறது என்பதை அந்தச் சுற்றுச் சுவரின் தடத்தைக் கொண்டு அறிந்தாள். சிறு தங்க ஜிமிக்கிகள் போன்ற மஞ்சள் பூக்களை உதிர்த்துக் கொண்டு சுவரையொட்டி நின்ற மரத்தின் இரண்டு கிளைகள் முறிந்து தொங்கின. மரத்தில் ஒரு பூ கூட கண்ணில் படவில்லை. அதைக் காணச் சகியாமல் சட்டென பார்வையை மாற்றினாள். பறவைகளின் ஒலிகள் இதுவரை கேட்காத வகையில் விசித்திரமாக ஒலித்தது. தரையில் பரவியிருந்த சகதி காலில் ஒட்டாதவாறு காய்ந்த இடமாக பார்த்து காலையூன்றி ஈஸ்வரி நடக்க வினோத் தொடர்ந்தான்.  வீட்டிற்குள் ஒழுகாமல் இருக்க வேண்டுமே என்று வேண்டியபடி கதவைத் திறந்தாள். சுவர்களெல்லாம் நீர் ஊறி லேசாக வியர்த்திருந்ததைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டதும் இறுக்கம் தளர்ந்து அமர்ந்தாள். இவர்களைப் போலவே ஊருக்குச் சென்றிருந்த அடுத்தடுத்த வீட்டுக்காரர்களும் வந்த அரவம் கேட்டது 

பகலெல்லாம் மின்சாரம் இல்லை. எந்த இழப்பும் இல்லாதபோதும் தொடர்ந்து பதட்டத்தில் இருந்ததால் மனதில் சோர்வு எஞ்சியிருந்தது. எனவே, வினோத் கடையிலேயே மதிய உணவும் இரவு உணவும் வாங்கி வந்தான். இரவு எட்டு மணிக்கு மின்சாரம் வந்தது. செயற்கை வெளிச்சமும் காற்றும் ஆசுவாசமளித்தது. தொலைக்காட்சியில் சேனல்களுக்கான இணைப்பு வரவில்லை என்பதால் சீக்கிரமாகவே படுத்து தூங்க ஆரம்பித்தார்கள். அன்றைக்கென்னவோ படுத்ததும் ஈஸ்வரியை உறக்கம் வந்து தழுவிக்கொண்டது. 

கனவில் ஒரு பெரிய மாளிகையில் தனியாக சிக்கியிருக்கிறாள். எதற்காக அங்கு வந்தாள் என்பது தெரியவில்லை. இதுவரை அம்மாதிரி மாளிகையை திரைப்படத்தில் கூட இவள் பார்த்ததில்லை. அப்போது சுவருக்கு அந்தப் பக்கத்திலிருந்து எதையோ உரசும் ஒலி கேட்டது. துணியைக் கொண்டு பலமாகத் தேய்ப்பதுபோல. பிறகு ஒரு கட்டையை வைத்து அடிப்பதுபோல. யாரையோ கோபமாகத் திட்டும் பெண் குரலும் கேட்டது. யாரோவொரு பெண்ணும் தன்னைப்போலவே சிக்கியிருக்கிறாள் எனத் தோன்றியது. இன்னொரு பெண் இருக்கிறாள் என்றதும் சிறு நிம்மதி ஏற்பட்டது. அவளை அழைக்க முயன்றாள். இவள் குரல் எழவேயில்லை. இவள் குரலைவிட பேரோசையுடன் அவளின் குரல் எழுந்தது. ஒரு கணம் திகைத்துக் குழம்பி கண் விழித்தாள். முகம் வேர்த்திருந்தது. கையருகில் இருந்த சொம்பை எடுத்து நீரருந்தினாள். அய்யோ என்ன மாதிரியான கனவு. மனதில் படபடப்பு லேசாக குறைந்தபோது அந்தப் பெண்ணின் குரல் காதில் கேட்டது. ஒரு கணம் திடுக்கிட்டாள். இன்னும் கனவில்தான் இருக்கிறோமா என்ற சந்தேகம் எழுந்தது. கட்டிலில் வினோத்தும் ரக்சனும் இருப்பது தெரிந்தது. கனவுக்குள் அவர்களும் உள்ளார்களா. சத்தம் கேட்டு வினோத்தும் கண் விழித்தான். “என்னாச்சு ஈஸ்வரி… என்ன சத்தம்..?” 

“பக்கத்து வீட்ல ஏதோ பொம்பள பேசற சத்தம் கேக்குதுங்க..” 

அவனுக்கும் புரிந்தது. எழுந்து விளக்கைப் போட்டுவிட்டு வெளியே சென்று பார்த்தான். கூடவே ஈஸ்வரியும் சென்றாள். வெறுமனே சாத்தி வைக்கப்பட்டிருந்த பக்கத்து வீட்டுக் கதவு திறந்திருந்தது. இருவரும் உள்ளே எட்டிப் பார்த்தனர். வீட்டிற்குமுன் நிற்கும் மின்கம்பத்தில் அமைந்த விளக்கிலிருந்து வீட்டினுள் ஒளி பரவியிருந்தது. அவ்வொளியில் வயதான ஒரு பெண்மணி அழுக்கான புடவையுடன் ஒழுங்குபடுத்தாத பாதி நரைமுடியுடன் நின்று இவர்களை உற்றுப் பார்த்தார். விழிகள் உள்ளொடுங்கியிருந்தன. சிக்குப் பிடித்த வாரப்படாத முடி சிறிய பஞ்சுப் பொதிபோல் இருந்தது. பற்களை கடித்து உதடுகளை இறுக்கியிருந்தார். கன்னங்கள் சற்று குழிந்திருந்தன.

“யாரும்மா நீங்க. இங்க என்ன பண்றீங்க..” என வினோத் கேட்டான். பதிலேதும் கூறாமல் வெற்றுப் பார்வையுடன் நின்றார். 

“சத்தம் போடாம இருங்கம்மா. நாளைக்கு நாங்க வேலைக்கு போகனுமில்ல…” என்று கூறியபோதும் அப்படியே நின்றார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ஈஸ்வரியையும் கூட்டிக்கொண்டு உள்ளே வந்தான். அடுத்த வீட்டு ரமாவும் அவள் கணவனும் கதவைத் திறந்து பார்த்தார்கள். அவர்கள் முகங்களில் ஆர்வம் மிளிர்ந்தது. இவர்கள் வீட்டிற்குள் நுழைவதைக் கண்டதும் எதுவும் கேட்காமல் கதவை மூடிக் கொண்டார்கள். அவர்கள் வீட்டிற்குள் சத்தம் பெரிதாக கேட்டிருக்காது. அன்றைக்கு அதற்குமேல் எந்தச் சத்தமும் எழவில்லை. ஏதோ நெருடல் இருந்தபோதும் ஈஸ்வரி தூங்கிவிட்டாள். 

காலையில் எழுந்து வழக்கம் போலவே மனமும் உடலும் இயைந்து விரைவாக வீட்டுவேலைகளை செய்து கொண்டிருந்தபோது சட்டென அம்முதியவளின் நினைவு வந்தது. அடுப்பின் தழலை குறைத்துவிட்டு சென்று பார்த்தாள். வெற்றுப் பார்வையுடன் அமைதியாகப் படுத்திருந்தார். தன் அம்மாவின் வயதிருக்கும் என்ற எண்ணம் தோன்றி மனதில் இரக்கம் சுரந்தது. வீட்டிற்குள் சென்று சமையலை முடித்து இவர்கள் இருவருக்கும் மதியத்திற்கு எடுத்து வைப்பதில் சற்றுக் குறைத்து வைத்துவிட்டு எஞ்சியதை ஒரு பிளாஸ்டிக் தட்டில் போட்டு முதியவளின் அருகில் வைத்தாள். அப்போதும் அவர் பார்வையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இத்தனை அமைதியுடன் இருப்பவர் ஏன் இரவில் மட்டும் சத்தமிடுகிறார். எத்தனை மனிதர்கள் உள்ளார்களோ அத்தனைவிதமான பிரச்சனைகளும் இருக்கும்போலும் என்று எணணம் எழுந்து மெல்லிய வறட்டுப் புன்னகையை ஏற்படுத்தியது. 

முன்னிரவில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து பார்த்தபோது இவள் வைத்த உணவில் பாதி உலர்ந்து சுருங்கிக் கிடந்தது. முதியவள் எதிர் சுவரைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தாள். ஆனால், இவர்கள் உண்ண அமர்ந்தபோது சிறு அரவம் கேட்டது. பின் மெதுமெதுவாக உயர்ந்து கொண்டே சென்றது. யாரையோ வசை பாடினார். அத்தனை அருவருக்கத் தக்கதான சொற்களை ஈஸ்வரி அதுவரை கேட்டதில்லை. காது கூசும் வார்த்தைகள் என கேள்வியுற்றிருக்கிறாள். அதை முதன்முதலில் கேட்டதற்கு மகிழ்வேற்படவில்லை, குமட்டலெடுத்தது. காதில் கேட்கும் வார்தைகள் குமட்டலை ஏற்படுத்தும் என்பதை இப்போதுதான் அறிந்தாள். அந்த முதியவள் அவரிருந்த வீட்டின் முன் ஒரு சாணைவிட சற்று நீளமான ஈர்க்கந்துடைப்பத்தைக் கொண்டு வரட்வரட்டென கூட்டினார். அப்போது உதிர்த்த வார்த்தைகள்தான் கேட்கும் செவிகளையெல்லாம் அசுத்தமாக்கியது. யாரையும் குறிப்பிட்டு என இல்லாமல் யாரோ ஒரு பெண்ணையும் ஆணையும் தனித்தனியாகவும் சேர்த்தும் அத்தனை அந்தரங்கமாகத் திட்டிக் கொண்டிருந்தார். அதில் ஒரு ஓர்மையும் லயிப்பும் இருந்தது. 

ஈஸ்வரிக்கோ அடுத்தடுத்த வீடுகளில் வசித்தவர்களுக்கோ என்ன செய்வதென்று புரியவில்லை. அவர்கள் முதியவளின் அருகில் செல்லாமல், “ஏம்மா இப்படிக் கத்தறீங்க. எல்லாருக்கும் தொந்தரவா இருக்கே..” என்று சொல்லும்போது சற்று நேரத்திற்கு அமைதியாக இருக்கும். சிறிது நேரத்திற்குப்பின் மீண்டும் ஆரம்பிக்கும்.

காலை விடிந்ததும் ஈஸ்வரி மூவருக்குமானவற்றை தயாரித்தாள். வினோத்தின் கண்கள் லேசாகச் சிவந்திருந்தன. இவளுக்கு கண் உறுத்தியபோதுதான் கண்ணாடியில் பார்த்தாள். இவளது கண்களும் சிவந்து கலங்கி காணப்பட்டன. வினோத் எப்போதும் உதிர்க்கும் அழகான புன்னகையின்றி தலையை மட்டும் அசைத்து விடைபெற்றான். பங்கு ஆட்டோ பிடித்து, மின்சார ரயில் ஏறி, பின் பேருந்தும் ஏறிச் செல்லவேண்டிய அலுவலகத்திற்கு வினோத் கிளம்பிய பிறகு ரக்சனைக் கிளப்பி இரண்டு தெரு தள்ளியிருக்கும் குழந்தை காப்பகத்தில் விட்டுவிட்டு பங்கு ஆட்டோ பிடித்து, பேருந்து ஏறி அலுவலகத்திற்கு சென்றாள். அதிகாரத்தின் கீழடுக்கில் உள்ள பணிதான். இவளை நோக்கி ஏவல் மட்டுமே இருக்கும். இதோ செய்கிறேன் என்ற வார்த்தைகளைத் தவிர வேறு பதில்களை யாரும் விரும்புவதில்லை. அந்த ஓட்டத்திற்கு நடுவே அமர்ந்து உண்ணக் கிடைத்த அரைமணி நேரத்தில் அந்த முதியவளின் நினைவு வந்து மனதை வாட்டியது. மாலை அதை நோக்கியல்லவா செல்லவேண்டும். கண்களில் உறுத்தல் குறையவில்லை.

யார் அவர். வாழ்க்கையே பெரும்பாடாக உள்ளபோது கூடுதல் இம்சையாக. பெருமழையில் ஒதுங்குவதற்காக வந்தவர் யாரும் புழங்காத வீட்டைக் கண்டதும் அமர்ந்துவிட்டார் போலும். பூட்ட முடியாத வீடு என்பது வசதியாகப் போய்விட்டது. அதுவும் இருபக்க கதவுகளும் தாழ்ப்பாள் கூட இடமுடியாமல் இற்று விழுந்துவிட்டது. அவரை எப்படி அகற்றுவது. எதுவுமே புரியாமலேயே குழப்பத்துடனேயே இருமுறை திட்டு வாங்கியபடி அன்றைய வேலை முடிந்தது. 

இரவு ஏழு மணிக்கு வீட்டிற்கு சென்றபோது வினோத் ரக்சனை காப்பகத்திலிருந்து அழைத்துவந்து பால் கொடுத்து தூங்க வைத்திருந்தான். தொலைக்காட்சியில் தொடர் ஏதோ ஓடிக்கொண்டிருந்தது. மொழியாக்கம் செய்யப்படும் தொடர்கள் இவளை ஈர்க்கவில்லை. இவளுக்கு அதில் ஆழ்வதற்கு அவகாசமும் இல்லை. கிடக்கும் பாத்திரங்களைத் தேய்த்து இரவிற்கும் மறுநாளைக்குமான உணவிற்கான ஆயத்தங்களை செய்து துவைக்க வேண்டிய துணிகளை தனியே ஒதுக்கி அன்றாடத்தின் சுழலுக்குள் இயங்கினாள். சட்டென ஒரு தீப்பொறி மேனியில் பட்டதான விதிர்ப்புடன் அந்த முதியவளின் நினைப்பு வந்தது. வரும்போது கவனிக்காமல் வேகமாக வந்துவிட்டாள். வெளியில் சென்று பார்க்கத் துடித்த மனதுடன் வினோத்திடம் கேட்டாள். 

“ஏங்க அந்தம்மா எங்கேயோ போயிடுச்சு போலேயே..” 

“ஆமா ஈசு, வர்றப்ப பாத்தேன் காணோம்” 

மனதின் துடிப்பு நிதானமடைந்தது. 

வேலைகளையெல்லாம் முடித்து சோர்வுடன் அமர்ந்து உண்பதற்கு வினோத்தையும் அழைத்தாள். அந்த நேரம் அந்த வசைமொழி தொடங்கியது. கதவு சாத்தியிருந்தபோதும் அந்தக் குரலின் கார்வை உள்ளே துல்லியமாகக் கேட்டது. ஒவ்வொரு சொல்லாக உருத்திரண்டு பின் அர்த்தம் கொண்டு சுவர்களெங்கும் காட்சிகளாக விரிந்து பரந்தது. கண்களை மூடினாலும் காட்சிகள் மறையவில்லை. ஒரு ஆண்கூட உச்சரிக்கத் தயங்கும் சொற்கள் சங்கிலித் தொடர்போல இயைந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருந்தது. இருவரின் முகமும் சற்று வெளிறியது. என்ன செய்வதென்று புரியாத கையறு நிலையில் எதுவும் பேசாமல் உண்டார்கள். காதில் ரத்தம் வருவதாகக் காட்டும் திரைக்காட்சி இவர்களுக்கு எப்போதுமே சிரிப்பை வரவைக்கும். ஆனால், இப்போது உண்மையிலேயே ரத்தம் வந்துவிடுமோ என இருவருக்கும் பயம் வந்தது. 

ஏதேனும் சொல்லிப் பார்க்கலாமா என வினோத் கேட்டான். இன்று மூர்க்கமாக. இருப்பதாகக் கூறி ஈஸ்வரிதான் தடுத்துவிட்டாள். கையை மட்டும் கழுவிவிட்டு பாத்திரங்களை அப்படியே வைத்துவிட்டு படுத்துவிட்டார்கள். கொடுங்கனவை முழுநினைவுடன் காணும் உணர்வுடன் படுத்திருந்தவர்கள் நெடுநேரத்திற்குப்பின் உறங்கினார்கள். 

அலாரம் அடித்து ஓய்ந்து நெடுநேரத்திற்குப் பின் விழித்தபோது நன்றாக விடிந்துவிட்டது. அய்யோ என இதயத்துடிப்பு உச்சத்தை அடைந்தது. அதே வேகத்தில் பக்கத்து வீட்டில் எட்டிப் பார்த்தபோது பழைய துணிகள் மட்டுமே குவியலாகக் கிடந்தன. 

இவள் வாசலில் நின்றே அடுத்தடுத்த வீடுகளில் நிகழ்வதை கவனித்தாள். யார் எது சொன்னாலும் கேட்கும் நிலையில்லாதவாறு காலை நேரத்தின் கடமைகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. சட்டென தான் செய்யவேண்டிய வேலைகள் நினைவுக்கு வந்ததும் வீட்டினுள் வேகமாக நுழைந்தாள். வினோத் ரக்சனை தூக்கிக் கொண்டு குளியலறைக்குச் சென்றான். அவன் முகத்தில் புதிதாக கடுமை படர்ந்திருந்ததைக் கண்டபோது தன் முகமும் அப்படித்தான் இருக்கும் என்பதை உணர்ந்தாள். கண்ணாடி முன் நின்று இதழ்களை நீட்டியும் விரித்தும் முகத்தின் இறுக்கத்தை தளர்த்த முயன்றாள். 

அம்முதியவள் உதிர்த்த வார்த்தைகள் காதுகளுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தன. அலுவலகத்தில் கோபமாகப் பேசியவரிடம் பதில் கூற முயன்றபோது ஒரு வசைச் சொல்லின் முதலெழுத்து நாவில் தோன்றிவிட்டது. ஒரு மில்லிகணத்தில் அதை உணர்ந்து அப்படியே நிறுத்தியபோதும் படபடப்பு அடங்க அரைமணி நேரமானது. அவ்வார்த்தை வெளிப்பட்டிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய விளைவை எண்ணவே அச்சமாக இருந்தது. 

ஒரு வாரத்திற்கு முன்பு. அலுவலகத்தில் மாலை நான்கு மணி ஆனவுடனேயே எப்போது கிளம்புவோம் என மனதில் உவகையான பரபரப்பு தொற்றிக் கொள்ளும். ரக்சனையும் வினோத்தையும் அணைத்துக் கொண்டு கொஞ்சுவது மனதில் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால், இப்போது வீட்டிற்கு திரும்பவேண்டும் என்ற எண்ணமே ஒரு பதைபதைப்பை உருவாக்கியது. ரக்சனை உள்ளம்தோய கொஞ்சியே பல நாட்களாகிவிட்டன. வினோத்திடம் உண்டாகும் மாற்றங்கள் அச்சத்தைக் கூட்டியது. 

அன்று இரவு இவள் வீட்டிற்குச் சென்றபோது ரக்சன் தூங்கிக் கொண்டிருந்தான். ஆசை பொங்க முத்தமிடத் தூக்கியபோது தூக்கத்திலேயே தேம்பிக் கொண்டிருந்தான். இவள் கைகள் நடுங்கின. தன் தோளில் போட்டுக்கொண்டு அவன் முதுகில் தட்டிக் கொடுத்தாள். ஏதோ வித்தியாசமாகத் தெரியவும் சட்டையை உயர்த்திப் பார்த்தபோது லேசாக வீங்கிய விரல் தடம் கண்ணில் பட்டது. சட்டென கண்ணீர் துளிர்த்து உதிர்ந்தது. திரும்பி வினோத்தைப் பார்த்தாள். இவள் பார்ப்பதை உணர்ந்தும் திரும்பாமல் தொலைக்காட்சியை நோக்கிக் கொண்டிருந்தான். 

அப்படியே சென்று அவனெதிரில் நின்றாள். நிமிர்ந்து இவளைப் பார்த்தவன், “சொல்லாதடான்னு சொல்லிக்கிட்டே இருக்கேன். அதே வார்த்தைய திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே இருந்தான். என்னவோ ஒரு வேகத்துல கைய ஓங்கிட்டேன்…” என்றபோது அவன் முகமும் இழுபட்டதுபோல மாறி குரல் கமறியது. விழிகள் கலங்கிவிட்டன. தன் வாயில் தோன்றிய சொல்லை எண்ணிக் கொண்டாள். குழந்தைதானே. புதிய வார்த்தை நாவிற்கு பழகியதும் சொல்லிப் பார்த்து குதூகலித்திருக்கும். அதற்கெப்படி தெரியும் அவ்வார்த்தை தாங்கிக் கொண்டிருக்கும் அர்த்தம். 

என்னதான் செய்வதெனப் புரியவில்லை. இருவரும் வேறெதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் நிமிர்ந்து பார்க்கவும் இயலாமல் ஆகியது. தங்கள் வாழ்விற்குத் தொடர்பே இல்லாத ஒருவரால் இப்படியொரு மன நெருக்கடி உண்டாகக் கூடுமென எதிர்பார்க்கவேயில்லை. 

எப்படியாவது தீரும் என்ற நம்பிக்கையுடன் சனிக்கிழமைவரை சென்றது. அதற்குள் வினோத் இவளை விரோதியைப் போல நோக்க ஆரம்பித்திருந்தான். இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது நெருங்கிவிடுபவன் இப்போது சிலிர்ப்பூட்டும் பார்வையைக் கூட வீசவில்லை. இங்கு நடப்பவற்றால் அவன் அலுவலகத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. அலுவலகத்தில் நடப்பதை அவன் இந்த வாரம் பகிர்ந்து கொள்ளவேயில்லை என்பது உறைத்தபோது ஏதேனும் செய்தேயாக வேண்டும் என்ற நிலை தோன்றியது.

அந்த முதியவள் பகலில் வந்து தங்குவாரோ இல்லையோ யாரும் கண்டதில்லை. காண்பதற்கு யாரும் இருப்பதில்லை என்பதே நிலை. இரவு நேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களின் தூக்கத்தைக் கெடுத்து அன்றாடத்தை சீர்குலைப்பது, காலையில் எங்கோ சென்றுவிடுவது என்பதே அந்த முதியவளின் தொடர் செயலாக இருந்தது. 

ஆனால், இன்று காலை முதியவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அடுத்தடுத்த வீடுகளில் உள்ளவர்களிடம் சென்று இருவரும் பேசினார்கள். அடுத்த வீட்டிலிருந்த ரமா, “என்னாலேயே தாங்க முடியலையே, இவங்க எப்படித்தான் பொறுத்துக்கிறாங்களோ..” என்று கண்களை விரித்தாள். 

“கடந்து வரும்போதே காது கூசுதே. நீங்க எப்டித்தான் தாங்குனீங்க..” கடைசி வீட்டில் வசிக்கும் காரைக்குடிக்காரர் கூறினார். 

“ஒங்களுக்கு மட்டுமில்ல. எல்லோருக்குமேதான் கஷ்டமா இருக்கு. வீட்ல இருக்குற வயசுப் பொண்ணோட மொகத்த நிமிந்து பாக்க முடியலையே…” ஒல்லியான வேலூர்க்காரம்மா கூறினார். 

“சரி, இப்ப என்னதான் பண்றது. அதுக்கு யோசன சொல்லுங்க..” வினோத் குரலில் சலிப்பு வெளிப்பட்டது. 

அவரை அடித்து விரட்டும் யோசனை முதலிலேயே மறுக்கப்பட்டது. ஆளாளுக்கு ஒன்றொன்று சொல்லி நிராகரித்து கடைசியில் காவல் நிலையத்தில் சொல்லலாம் எனத் தீர்மானம் செய்தார்கள். அந்த முடிவு எட்டப்பட்டதும், கண்டிப்பாக அலுவலகம் சென்றாக வேண்டும் என ரக்சனைக் கொண்டு காப்பகத்தில் விட்டுவிட்டு வினோத் கிளம்பிவிட்டான். 

மூன்று ஆண்களும் ஈஸ்வரியோடு ரமாவும் என ஐந்துபேர் ஒரு ஆட்டோ பிடித்து காவல் நிலையத்திற்குச் சென்றார்கள். 

அரசு அலுவலர்களின் குடியிருப்பிலிருந்து வருகிறார்கள் என்றதும் இரண்டு கான்ஸ்டபிள்களை உடனே அனுப்பினார்கள். ஒரு டிவிஎஸ் வண்டியில் அவர்கள் இருவரும் வர, இவர்களும் ஆட்டோவில் திரும்பினார்கள். ஆட்டோவிற்கான கட்டணத்தை அடுத்த வீட்டுக்காரர்தான் கொடுத்தார். அதில் தன் பங்கு கொடுக்கவேண்டுமே என்றும், அலுவலகத்தில் தாமதமாகுமென சொல்லாததற்கு திட்டு வாங்கவேண்டுமே என்றும் ஈஸ்வரியின் மனதில் கவலைகள் அதிகரித்தன. 

கான்ஸ்டபிள்கள் தங்களது நீண்டு உருண்ட கழிகளினால் தரையில் தட்டி அந்த முதியவளை எழுப்பினார்கள். “யாருமா நீ” “எங்கேயிருந்து வந்தே” போன்ற கேள்விகளை முதியவள் உள்வாங்கியதாகவே தோன்றவில்லை. சிறிது நேரம் வெறித்தும் சிறிது நேரம் ஒன்றும் புரியாததுபோலவும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால், வாய் திறக்கவில்லை. 

“என்னவோ அசிங்கமா பேசறாங்கன்னு சொன்னீங்க. இவங்க அமைதியாத்தானே இருக்காங்க. அவங்க பாட்டுக்க இருக்கட்டுமே” என கான்ஸ்டபிள்களில் வயதானவர் கூறினார். 

இவ்வளவு தூரம் வந்துவிட்டு அப்படியே போய்விடுவார்களோ என ஈஸ்வரிக்கு பதட்டமானது. 

“சார், நைட்டெல்லாம் தூங்கவே முடியல சார். எப்படியாவது இவங்கள வெளியேத்திடுங்க” என்று கூறிவிட்டு அடுத்த வீட்டுக்காரர்களையும் சொல்லச் சொன்னாள். அவர்களும் இவள் சொன்னதையே வற்புறுத்தினார்கள். 

அந்த கான்ஸ்டபிள் முகத்தில் அதிருப்தி தோன்றியபோதும் வேறுவழியில்லை என்பதை உணர்ந்து அந்தம்மாவின் அருகில் சென்றார். கழியை ஓங்கி அவரை அடிப்பதான பாவனையுடன் சுவரில் பெரும் ஒலியெழ மூன்றுமுறை அடித்தார். முதியவள் உடல் விதிர்க்க வெளியே வந்தார். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சாலையை நோக்கி மெதுவாக நடக்க ஆரம்பித்தார். 

அன்றாடத்தின் அலுப்பில் நனைந்திருந்த பலரும் காவல்துறை உடையைக் கண்டு புதிதாய் எதையோ எதிர்பார்த்து அங்கு கூடியிருந்தார்கள். எல்லா வயது ஆண்களும் பெண்களுமாய் ஐம்பது பேர்கள் இருக்கும். நடந்து சென்ற அந்த முதியவளைக் கண்ட அவரளவு வயது கொண்ட ஒரு பெண்மணி, “மெர்சியம்மாவுலோ இது…” என்று மற்ற யாருக்கும் தெரியாதவொன்று தனக்குத் தெரிந்துவிட்ட பெருமிதத்துடன் பலருக்கும் கேட்கும் வண்ணம் கூறினாள். 

வேறு யாரும் மேற்கொண்டு அவரிடம் எதுவும் கேட்காத நிலையில் ஈஸ்வரி அவரை நெருங்கி, “இந்தம்மாவ ஒங்களுக்குத் தெரியுமா. எந்த ஏரியாம்மா…?” எனக் கேட்டாள். 

சுற்றி நின்ற சிலர் திரும்பிப் பார்த்தனர். அதற்கெனவே காத்திருந்தாற்போல் அந்தம்மா தொடங்கினார். 

“இந்தம்மா ஏசுவ கும்பிடற வீட்டு பொண்ணு. அவங்க அப்பா ஊரு கன்யாகுமரி பக்கமாம். கிஷ்ணா நகர்ல இருக்குற செல்லியம்மன் கோயில் பூசாரியோட மகன்தான் இந்தம்மாவோட புருசன். அவரு ஏதோ வேலையா இவங்க ஊருக்குப் போனப்ப எப்படியோ ரெண்டு பேருக்கும் பழக்கமாகி கட்டிக்கிட்டாங்களாம். கிஷ்ணா நகர் மூணாவது தெருவுல வீடு இருந்துச்சு…”

“இவங்க ஏன் இப்படி ஆயிட்டாங்க…” சொல்லிக் கொண்டிருந்தபோதே ஆவல் உந்த ஈஸ்வரி கேட்டாள். 

தன் பேச்சு ஆர்வமாக கேட்கப்படுவதில் முகத்தில் மலர்ச்சி மேலும் கூட, “இவங்க மாமனாரும் வீட்டுக்காரரும் ஒரே வாரத்துக்குள்ள அடுத்தடுத்து செத்துட்டாங்க. அந்த அதிர்ச்சில கொஞ்சநாள் எதுவுமே பேசாம சாமி படத்தையே பாத்துகினு இருந்தாங்க. அப்புறந்தான் இப்படி பேச ஆரம்பிச்சுட்டாங்க”

“இவங்களுக்கு புள்ளைங்க இல்லையா..?” 

“ஒரு பொண்ணு மட்டுந்தான். அதுக்கும் கல்யாணமாகி அம்பத்தூர் பக்கம் இருந்தாங்க. ரெண்டு சாவு உழுந்ததும் அம்மா கூடவே வந்து இருந்தாங்க. ஆனா, இவங்க பண்றத பொண்ணு பொறுத்துக்கும். மாப்பிள்ளையால முடியுமா. அவனும் நல்ல பையந்தான், இருந்தாலும் வீட்ல ஒக்காந்து இப்டி கத்திக்கினு இருந்தா அவந்தான் இன்னா பண்ணுவான்..” 

“அவங்க இப்ப எங்கே இருக்காங்க…?” 

“யாருக்குத் தெரியும். வீட்டை வித்துட்டு எங்கேயோ போயிட்டாங்க. இவங்கதான் எங்க போறதுன்னு தெரியாமத் திரியிறாங்க…” 

ஈஸ்வரி அந்தம்மா கூறுவனவற்றை கேட்டுக் கொண்டிருந்தபோதும் ஓரவிழியால் அவளைச் சுற்றி நிகழ்வனவற்றை கவனித்தாள். முதியவள் நிதானமாக நடந்து தெருவைக் கடந்து சென்றார். கான்ஸ்டபிள்கள் காவல் நிலையத்திற்கு வந்த ஆண்களை தனியாக அழைத்துச் சென்று பேசினார்கள். இவர்கள் தயக்கத்துடன் ஏதோ கூற, அவர்கள் சற்று கண்டிப்பான தோரனையில் பேசியவுடன் பக்கத்து வீட்டுக்காரர் சலிப்புடன் சட்டைப் பையிலிருந்து பணம் எடுத்துக் கொடுத்தார். அவர்கள் நிறைவில்லாமலேயே அதைப் பெற்றுக்கொண்டு கிளம்பினார்கள். இந்தப் பணத்திற்கும் இவள் பங்கை அளிக்கவேண்டும். 

சில நிமிடங்களிலேயே, மேகம் விலகுவதுபோல எப்படிக் கலைந்ததென்றே தெரியாத வண்ணம் கூட்டம் காணாமலானது. குடியிருப்புவாசிகள் மட்டுமே நின்றார்கள். அந்தப் பெண்களிடம் சென்று அடுத்து செய்யவேண்டியதைக் கேட்டாள். ஆண்களும் அருகில் வந்தார்கள். உள்ளேயிருக்கும் பொருட்களை வெளியே வைத்துவிட்டு கதவைத் திறக்காதவாறு பலகை ஏதேனும் வைத்து அடிப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்பதை பேசிக் கண்டடைந்தார்கள். 

தச்சு வேலை செய்யும் ஒருவரை அழைத்து வந்து அந்த வேலையை முடித்தார்கள். அவருக்கும் கூலி கொடுக்கப்பட்டது. அதற்கு முன்னதாகவே பெண்களெல்லாம் சேர்ந்து உள்ளே கிடந்த அந்த முதியவளின் உடைமைகள் என கருதியவற்றை வெளியே கொண்டுவந்து போட்டார்கள். அவற்றில் பழைய சேலைகள், இரண்டு புகைப்படங்கள், நாலைந்து உருகிச் சிறுத்த வண்ண மெழுகுவர்த்திகள், ஒரு தடிமனான நீண்ட கழி, நெளிந்த நிலைவெள்ளித் தட்டு, பெரிய பிளாஸ்டிக் பையில் அமுக்கப்பட்ட காகிதங்கள் போன்று பலவும் இருந்தன. கடைசியாக ஈஸ்வரி வேறு ஏதேனும் இருக்கிறதா எனத் தேடிப்பார்த்தாள். பின் வாசல்படியின் அருகில் வெயில்படும் இடத்தில் இருந்த மண்தொட்டியில் ஒரு பூச்செடி இருந்தது. அதில் இரு மலர்கள் பூத்திருந்தன. அவை மிளிரும் கருநீல வண்ணத்தில் இவள் அறியாத புதுமலராக இருந்தது. தொட்டியைத் தூக்கியபோது தரையில் ஈரம் இருந்தது. அதையும் கொண்டுவந்து மற்ற பொருள்களுடன் வைத்தாள். 

இரவு வினோத் வந்தவுடன் தன் பங்கு பணத்தை தருவதாகக் கூறிவிட்டு உச்சிவெயில் தலையைத் துளைக்க அலுவலகத்திற்குச் சென்றாள். 

எந்த வீட்டிலும் ஆட்கள் முழித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. ஆனால், ஈஸ்வரிக்கு இன்னும் தூக்கம் வரவில்லை. காலையில் அந்த முதியவள் கிளம்பியபோது மனம் மகிழ்ந்ததை எண்ணியபோது இப்போது தன்மேலேயே ஒரு அருவெறுப்பு வந்தது. இப்படி ஏன் தோன்றுகிறது என ஒருகணம் திடுக்கிட்டாள். அவரால் எத்தனை தொல்லை. கேட்கமுடியாத வசைகள் காதை நிரப்பியதே. இரவெல்லாம் தூங்கவிடாமல் இம்சை செய்தாரே. அவரை அனுப்புவதற்குள் எத்தனை பாடு. இப்போது வருத்தம் ஏன் ஏற்படுகிறது என அவளுக்குச் சரிவரப் புரியவில்லை. 

சற்றுமுன் வந்துவிடுவாரா எனப் பயந்தது உண்மையில்லை. வந்துவிட வேண்டுமென்ற வேண்டுதல் என்பதை ஆச்சர்யத்துடன் உணர்ந்தாள். எப்போதும் இரவில் உணவை அளவாகச் சமைத்து இருவரும் உண்டபின் பாத்திரங்களை கழுவி கவிழ்ப்பதே வழக்கம். ஆனால், இன்று எப்படி மிஞ்சியது என்ற யோசனையும ஓடியது. ஈஸ்வரி தன் மனதின் எதிர் எதிர் தர்க்கங்களின் மோதலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். உண்மையில் தான் எந்தப்பக்கத்திலும் சாயாமல் நடுவிலிருப்பதை வியப்புடன் அறிந்தாள். 

எண்ணங்களின் மோதலில் ஆழ்ந்து நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டாள். ஒருபக்கமாக தலையைச் சாய்த்திருந்ததால் தோன்றிய வலியால் விழித்தாள். ஐந்து மணி ஆகிவிட்டிருந்தது. வேகமாக எழுந்து வெளியே சென்றாள். போடப்பட்டிருந்த பொருட்கள் அங்கே இல்லை. பெரும் ஏமாற்றமும் வேதனையும் மனதில் அறைய அருகே சென்றாள். சுவரோரமாக அந்தப் பூந்தொட்டி மட்டும் இருந்நது. அதில் புதிதாக மலர்ந்திருந்த ஒரு கருநீலப் பூ இவளை நோக்கி புன்னகை பூத்தது.

********

sivasngammal1983@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button