
முப்பரிமாணத்தினுள் ஒரு பயணம்
தரைத்தளத்தில் சாய்த்து வைக்கப்பட்ட
ஆளுயர நிலைக்கண்ணாடி
எவ்வீட்டின் ஒளியையோ
இன்னும்
தாங்கிக் கொண்டிருக்கிறது.
நிராகரிப்பின் சுவடுகள்
கீறிடாத ரசம் மின்னும்
வெயில் பொழுது
அந்திக்குள் நகர்த்தப்படும் இருப்பில்
முகம் திரும்பாது ரசிக்கிறது
தன்முன்னே
நகரும் மனிதர்களை;
வீழும் ஒலிகளை;
காற்றின் ஸ்பரிசங்களை;
பசிக்கிறதா?
சில ஆண்டுகளாக
உருவங்களால் நிறைந்த வயிறு
ஏனோ ஒட்டியிருக்கிறது
காலத்தின் முப்பரிமாணத்துக்கு அனுப்பும்
காவலர்கள் எந்நேரமும் வரக்கூடும்
சற்று நேரத்தில்
நொறுங்கும் ஒலி
உடைந்த சில்லுகளில்
காலம் முகம் புதைத்து
மிதக்கிறது
பல்லாயிரம் சூரியப்புள்ளிகளாக.
****
வலசை
நம் சொற்களின் சிலவற்றை
பறவையாக்கினேன்
நள்ளிரவுகளிலும் உறங்காத் தனிமைகளிலும்
சுற்றிச் சுற்றி வட்டமடிக்கும் அவற்றை
நெடுந்தொலைவு அனுப்பி வைத்தேன்
கடல்கள் கடந்து
கண்டங்கள் தாண்டி
காற்றின் விளிம்பைப் பற்றி
நம் சொற்களின் பறவைகள்
பறக்கின்றன
பறக்கின்றன
பறக்கின்றன
ஓர் இனிய காலைப்பொழுதில்
நீ தங்கியிருக்கும் வீட்டை அடைந்து
புழக்கடை மல்பெரி மரங்களின்
கொத்துக் கொத்தாகச்
சிவந்த பழங்களைச்
சுவைக்கின்றன
நினைவுகளில் சிவந்த எதுவோ
பல்லாயிரம் மைல்கள் கடந்து
இன்னும் பறந்து கொண்டிருக்கின்றது.
*****
முத்துகளின் குரல்
முத்துக் கம்மல் வாங்கச் சென்றேன்
ஒவ்வொரு முத்தும்
உன்போல் வெளுப்பில்லை
கடல் முத்தா
நன்னீர் முத்தா
விற்பன்னருக்கும் தெரியவில்லை
கடலின் தீவிரம்
அலையின் பிடிவாதம்
உனது ஆழம்
அன்பின் குணம்
யாவையும்
கடல் முத்தல்லவா நினைவூட்டும்?
பொன்னிறக் கடல் முத்தை
உன்னை நினைத்தே முத்தமிட்டேன்
அதுவோ மிகக் குளிர்ந்த முத்தத்தை
எனக்குப் பரிசளித்தது
அவ்விரவு முழுக்க
முத்தத்தின் கடலோசை
என்னுள்
கேட்டுக்கொண்டே இருந்தது.
******