நெல்லை மாநகரம் ட்டூ நியூயார்க்; 7 – ‘சோற்றில் கல்!’ – சுமாசினி முத்துசாமி
தொடர் | வாசகசாலை

இந்த சமையல் வேலைகளிலேயே ரொம்ப சலிப்புத் தட்டும் வேலை எனக்கு கீரை சுத்தம் பார்ப்பது. அதுவும் முருங்கை இலை ஆய்வது என்பது இன்னும் கடினம். இரண்டும் நேரம் எடுக்கும். ஒரு இடத்தில் உட்கார்ந்து செய்தாலும் அதிகமான சோர்வு தரும் வேலை எனக்கு இவை. வேறு வழியே இல்லை என்றால் பாட்டுக் கேட்டுக்கொண்டோ, போட்காஸ்ட் (Podcast) ஏதாவது கேட்டுக்கொண்டோ செய்வேன். அமெரிக்கா வந்த பின் இந்தப் பிரச்சினை கொஞ்சம் குறைவு. அதிகம் உபயோகிப்பது ‘ஸ்பினாச்’ (Spinach) எனப்படும் கீரை வகையைத்தான். மூன்று முறை கழுவிச் சுத்தப்படுத்திய பின் பாக்கெட் செய்யப்படுவதாக விற்கப்படுகின்றன. அந்த மூன்று முறை கழுவலில் நம்பிக்கை இல்லாததினால், நாமும் எடுத்து இரண்டு முறை அலசி இரண்டாக அரிந்தால் வேலை முடிந்தது.
ஆனால் இதே கீரைகள் ஆய்வது, சிறு வயதில் மிகப் பிடித்த வேலைகளில் ஒன்றாக இருந்தது. கோடை விடுமுறை நாட்களில், காலை ஒரு பதினோரு மணிக்குப் புத்தம் புதிதாக அப்படியே நிலத்திலும், மரத்திலிருந்தும் பறித்து வட்டமாக அமர்ந்து ஆச்சிகளோ, அத்தைகளோ நீட்டி முழக்கிச் சொல்லும் கதைகளுக்கு நடுவில் ஒவ்வொரு இலையாக ஆய்ந்தது, இன்றும் அந்த இலைகளின் பச்சை வாசனையோடு நினைவில் அணுக்கமாக உள்ளது. பிரித்துப் போட்ட இலைகளின் எண்ணிக்கையை விட மனதின் அடுக்குகளில் நிறைய நினைவுகள் உள்ளன.
இன்று தற்சார்பு என்று பெரிதாக விவாதிக்கப்படும் விஷயம் அன்று மிக எளிமையான வாழ்க்கை முறையாக இருந்தது. தற்சார்போடு சமூக ஒருமைப்பாடும் இயல்பாக இருந்த சூழலில்தான் நான் வளர்ந்தேன். நம் வீட்டில் தக்காளியும் புடலையும் என்றால் பக்கத்து வீட்டில் கத்தரியும், வெண்டையும் இருந்தது. எப்படியும் வீட்டுக் கீரைகள் ஒரு நாள் விட்டு ஒரு நாளில் விதம் விதமாக தட்டில் இருந்தன. அந்தக் கீரையை சுத்தம் பார்த்துக் கொடுக்க, பாகற்காயின் விதை எடுத்துக் கொடுக்க, மொத்த சமையலுக்கும் சின்ன வெங்காயம் உரித்துக் கொடுக்க வீட்டில் ஆச்சிக்களோ, அப்பத்தாக்களோ இருந்தார்கள். இன்று எவர் வீட்டு விஷயத்தையோ முகநூலில் வம்பு வளர்க்கும் நாம், கீரைகளோடு பக்கத்துக்கு வீட்டு விஷயங்களை ஆராய்ந்த நம் பாட்டன் பாட்டிகளின் மரபணு தாங்கிய பேரன் பேத்திகள்தான். என்ன ஒன்று, அன்று அந்த எளிமையான வாழ்வில் அவர்களுக்கு அரிசியில் கல் பார்க்கக் கண்ணாடி தேவைப்படவில்லை. இன்று ரோட்டில் கல் இருப்பதைப் பார்ப்பதற்கே நமக்குக் கண்ணாடி தேவைப்படுகிறது. இதற்கு உடனே நாம் அனைவரும் குறை சொல்வது நம் உணவு முறையைத்தான்.
பழையவற்றையே நான் பேசிக்கொண்டிருக்கிறேன். புதிய உணவுகளுக்கு வருவோம். அமெரிக்காவின் அதீத அறிவியல் முன்னேற்றத்தின் வெற்றியாக சில புதிய காய் வகைகள், பழங்களை சில கடைகளில் பார்க்கலாம். பிளம்காட் (Plumcot) மற்றும் ப்ளுஎர்ரி (Pluerry) போன்ற புதிய பழ வகைகள் இங்கே கிடைக்கும். பிளம்ஸ் மற்றும் ஆப்ரிகாட் பழங்களின் கலப்பினம்தான் பிளம்காட் (Plums + Apricot) என்னும் பழம். பிளம்ஸ் மற்றும் செர்ரிப் பழங்களின் கலப்பினம்தான் ப்ளூஎர்ரி (Plums+ Cherry) பழம்.
இரத்தச் சிவப்பில் எலுமிச்சை பார்த்து இருக்கீர்களா? அம்மன் கோவில் வாசல்களில் குங்குமம் தோய்த்து வைத்த எலுமிச்சை அல்ல- மரத்திலேயே இரத்தச் சிவப்பில் காய்க்கும் எலுமிச்சை.
நல்ல அழுத்தமான ஊதா நிறத்தில் மிளகாய் பார்த்து இருக்கீர்களா? எத்தனை கலர்களில் கேரட்கள் நீங்கள் பார்த்து இருக்கிறீர்கள்? ஐந்து கலர் வரை தேடாமல் என் கண்களில் இதுவரை பட்டுள்ளது. வெள்ளை கலர் கேரட்டை பார்த்த பொழுது முள்ளங்கி ஏன் இப்படி தினுசாக இருக்கிறது என்றுதான் முதலில் தோன்றியது. ஊதா கலரில் கேரட்டோ, மிளகாயையோ பார்த்தால் வித்தியாசமாக இருக்கும். இவற்றைச் சமைத்துச் சாப்பிட வேண்டும் என்று நினைத்தபொழுது மனம் ஒப்பவில்லை. நெல்லையப்பர் கோயில் தேரை காவல் காக்கும் தேரடி கருப்பன் சாட்சியாக இங்கு நான் கண்ணால் காணும் வரை மிளகாய் ஊதா கலரில் இருக்குமென்று நான் நினைத்ததேயில்லை.
உணவில் அதிகம் ரிஸ்க் எடுக்க விரும்பாத நம் மனங்களை அறிந்த இங்கிருக்கும் இந்திய மளிகை சாமான் கடைகளில் இவற்றைப் போன்ற ‘வித்தியாச’ காய்கறிகள், பழங்கள் பொதுவாக விற்பனைக்கு இருப்பதில்லை. கொஞ்சம் புதுமை புகுத்த நினைக்கும் அமெரிக்கப் பிரமாண்ட கடைகளிலும், கோடைக் காலங்களில் பெரும்பாலும் வாரக் கடைசியில் நடக்கும் உழவர் சந்தைகளிலும் இது போன்ற புது விதமான காய் அல்லது பழங்களை நிறைய பார்க்கலாம்.
போன வாரம் ‘வெக்மேன்ஸ்'(Wegmans) என்ற கடையில் தூரமாகப் பார்த்தபொழுது ‘ஐ, நம்ம செவ்வாழைப் பழம்’ என்று ஆசை பொங்க அருகில் போய் பார்த்தால், ‘ராஸ்ப்பெர்ரியின்’ டி என் ஏ வையும் மஞ்சள் வாழைப்பழத்தையும் நாங்கள் குழப்பி அடித்ததால், இப்பொழுது உங்களுக்கு ‘சிவப்பு’ வாழைப்பழம் என்று பக்கத்தில் போர்டு! ‘Banana with a ‘twist’ of Raspberry’ என்ற டேக் லைன் வேறு அதற்கு. ’போங்கடா, நீங்களும் உங்க ட்விஸ்டும்’ என்று நொந்துக்கொண்டேன். குற்றாலக் குறவஞ்சியில் இருந்து வழி தவறிய ஒரு குரங்கு, பழங்களின் போஸ்ட்டரைப் பார்த்து வாயில் எச்சில் ஊற நின்றது போலத்தான், கண்டம் விட்டு கண்டம் தாண்டிய நான், திருநெல்வேலியில் வீட்டுக் கொல்லையில் காய்த்துத் தொங்கிய செவ்வாழைகளை நினைத்து நின்று கொண்டிருந்தேன்.
ஓடி உழைப்பது எல்லாம் எதற்காக? ஒரு சாண் வயிற்றுக்குத்தானே என்பது இருக்கும் இடத்தில் கிடைக்கும் உணவில் வயிறு வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதையும் சேர்த்துதானா என்று எனக்குத் தெரியவில்லை. அப்படி இருந்தால், கொய்யாப்பழம் மூலைக்கு மூலை நம்மூரில் கிடைக்கும்பொழுது நம் நிலத்தில் விளையாத கிவி பழமும், ஸ்ட்ராபெர்ரியும் நமக்குத் தேவைப்படாது. அமெரிக்காவில், அத்தனை அதிக விலை கொடுத்து கொய்யாப்பழம் வாங்கத் தேவையில்லை. இப்படி நாக்கின் சுவைக்குப் புதுமை தேடும் நம் மனங்களுக்காக, அறிவியலின் துணையோடு ஒரு மிகப்பெரிய சந்தையும் உருவாகி இருக்காது.
இதைப்போன்ற வித விதமான காய்கறிகளும் பழங்களும் அறிவியலின் ஆற்றலை விளக்குகின்றன. ஆனால் அதன் பின்னே இருக்கும் சந்தை மனப்பான்மை தன் ஆக்டோபஸ் கரங்களினால் நம் ஆரோக்கியத்தின் கழுத்தை நெருக்கி நம் பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும், சில சமயம் நம் மொத்த நிம்மதியையும் பிடுங்கும் முழுத் திறன் வாய்த்தது. அறிவியலின் துணையோடு சர்வ வல்லமையோடு இருக்கும் இந்த சந்தை மிகுந்த அச்சத்தை மனதில் கொடுக்கின்றது. வளர்ந்த நாடுகள் என்று அறியப்படும் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் புற்றுநோய் லிஸ்டிலும் முன்னிலையில் இருக்கின்றன.
அதுவும் இந்த நோய்த் தொற்று காலத்தில், இந்த கலப்பினங்களையம், மரபணு மாற்றப்பட்ட உணவுகளையும் பார்த்தாலே மிகப்பெரிய ஒவ்வாமையும் அதை உருவாக்கும் நிறுவனங்களை நினைத்தால் எரிச்சலும் வருகின்றது. சில சமயம் இந்த உணவு முறை, அதன் மூலம் வரும் நோய்கள், அந்த நோய்களுக்காய் எடுக்கும் மருந்துகள், அவற்றினால் வரும் பக்க விளைவுகள் பின்னர் அவற்றைச் சரிப்படுத்த பரிந்துரைக்கப்படும் உணவு முறைக் கட்டுப்பாடுகள் என்ற சங்கிலித் தொடரை நினைத்தால் ‘உணவே மருந்து’ என்ற வாக்கியம் எத்தனை உண்மையானது என்று தோன்றும். இதை நான் ‘பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்’ என்று விளையாட்டாகக் கூறுவேன். ஆனால், அப்படிக் கூறுவது ‘என் உணவுத் தட்டில் இருப்பதைக் கூட என் உடல், மன நலத்திற்கு ஏற்றது போல் தேடி அமைத்துக்கொள்ள முடியவில்லையே’ என்ற கையாலாகத தனத்தின் வெறுமையான வெளிப்பாடுதான்.
ஒரு கடைக்கு நாம் ஏதாவது வாங்கச் செல்கிறோம் என்றால் அந்த நேரத்தில் நம் மனதையும் மூளையையும் வழிநடத்துவது நம்பிக்கை. விளம்பரத்தில் நகைக்கடைக்காக மட்டும் அதைச் சொல்லவில்லை. நம்பிக்கைதான் நிஜமாகவே எல்லாமே! இது நமக்கு நல்லது, நமக்குத் தேவையானது என்று மூளையோ மனதோ நம்புவதினால்தான் ஒரு பொருளை நாம் வாங்குகிறோம். இங்கு, என்னைப்போல் பல தாய்மார்களுக்கு உள்ள ஒரு பெருந்தொல்லை இங்குள்ள உணவுக் கலாச்சாரத்தையும் நுகர்வையும் நம்புவதா வேண்டாமா என்ற பெரும் குழப்பம்தான். இதில் சில நல்ல பழக்கங்களும் உள்ளது, இருந்தும் நல்லது என்ற போர்வையில் விற்கப்படும் குப்பைகள்தான் அதிகம் உள்ளன.
ஒன்று, நிறைய உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போட்டு பெரிது பெரிதாக விளைவிக்கப்படும் காய்கறிகள் பழங்கள், இறைச்சி வகைகள். மற்றொரு திசையில், ஹைபிரிட் எனப்படும் கலப்பின ரகங்கள். இந்தக் கலப்பின வகைகளில், எவை இயற்கையான ஒட்டு முறையில் கலப்பினம் செய்து விளைவிக்கப்பட்டன என்றோ, செயற்கை முறையில் ஆய்வுக்கூடங்களில் கலப்பு செய்து விளைவிக்கப்பட்டன என்றோ தெரிந்துகொள்வது ஒரு ஆராய்ச்சி. பின்னர் அவை மரபணு மாற்றம் செய்யப்பட்டு விளைவிக்கப்பட்டதா என்றும் கவனம் கொள்ள வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேல், இவற்றில் எது நல்லது, எது கெட்டது, எது நம் குடும்பத்திற்கு ஏற்றது என்று அலசி ஆராய்ந்து மண்டையை உடைத்து ஒரு குத்துமதிப்பான முடிவுக்கு வர வேண்டும். அதன் பின்னர், அமெரிக்காவில் பெரும்பாலோனோர் வாங்கி உண்பதாக நாம் நினைத்துக் கொள்வதுபோல், பதப்படுத்திய டப்பாக்களிலும், புட்டிகளிலும் அடைக்கப்பட்ட உணவை வாங்கலாமா என்ற யோசனை வேறு. இந்த துரித உணவுகள் நேர மிச்சத்திற்கு மிகப்பெரிய துணை. ஆனால் நம் உடல் மற்றும் மன நலத்திற்கு உற்றதா என்று தெரியாது.
சரி, பிரச்சனையே வேண்டாம், உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லப்படும் உணவை மட்டும் வாங்குவோம் என்றால் அதிலும் ‘எது நல்லது’ என்ற குழப்பம். ஆர்கானிக் வகைகளிடம் சரண் அடைந்து விடுவோம் என்றால், சில நேரம் பெரிய கடைகளில் ‘ஆர்கானிக்’, ‘இயற்கை’, ‘நல்லது (good)’ என்ற பெயரோடு, (கவனிக்கவும், பெயர் மட்டும்தான்- மற்றபடி மார்க்கெட்டிங் பித்தலாட்டம்) செயற்கையாக ஆய்வுக் கூடங்களில் கலப்பினம் செய்யப்பட்ட காய்கள், கனிகள் அவற்றில் செய்யப்பட்ட உணவு பதார்த்தங்களைப் பார்க்கலாம். சாப்பிடுவதைச் சாப்பிடுவோம், அதற்கு மேல் உடல் நலத்திற்கு இருக்கவே இருக்கின்றன ‘சத்து’ மாத்திரைகள் என்று அவைகளின் வகைமைகள் பெரிய லிஸ்ட். இதற்கு நடுவில், எவ்வளவு பணம் இவை எல்லாவற்றிற்கும் செலவு செய்வது என்ற வரவு செலவுக் கணக்கு வேறு.
இவ்வளவு அரசியலும், அறிவியலும் இயற்கையின் முக்கிய கொடையான உணவில் வேண்டுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஊரில் ஒரு சொலவடை உண்டு – ‘திங்கற சோத்தில கல்லப் போட்டுறாத’ என்று சொல்வார்கள். இப்போதெல்லாம் அது கெமிக்கல் கற்களாக உள்ளது. அது ஒன்று இரண்டு சிறு கற்களாக இல்லாமல், மிகப்பெரிய கல் மலைகளைப் போல் உள்ளது. அவற்றை நம் தலையில் நம் கைகளாலேயே போட வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் உணவு சாமான்களில் தரம் அதிகம் என்ற எண்ணம் பெரும்பான்மையான எண்ணமாக உள்ளது. ஆனால், ஒரு சராசரிக்கும் கீழ் சம்பாதிக்கும் அமெரிக்கக் குடும்பத்தின் உணவு முறையை ஆராய்ந்தால், அதில் உள்ள வெள்ளை சர்க்கரையின் நுகர்வு அளவு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், காய் கனிகளில் உள்ள உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் அளவு, பின்னர் இயற்கையாக விளையாமல் செயற்கைத் தன்மையோடு விதைகள் இல்லாமல் வளர்க்கப்படும் ரகங்கள் எனப் பல ஆரோக்கியமற்ற தன்மைக ளை சொல்லிக்கொண்டே போகலாம்.
மிகக் கவனமாக உண்ண வேண்டும் என்று ஆர்கானிக்/ இயற்கை உணவுகளின் பக்கம் முழுவதும் மாறினால், கிட்டத்தட்ட இரண்டு மடங்குக்கு மேல் பட்ஜெட் எகிறிவிடுகிறது. இந்தியாவிலிருந்து வரும் அம்மாக்கள் எல்லாம், பெரிய கத்தரிக்காய் , பெரிய வழுவழுப்பான தக்காளி என்று சொல்வார்கள். இத்தனை பெரிதாய், உரமும் வளர்ச்சி ஊக்கிகளும் இல்லாமல் ஒரே மண் எத்தனை முறை மகசூல் கொடுக்கமுடியும்? அப்படி என்றால் அந்தப் பெரிய தக்காளியில் பாதி பல்வேறுபட்ட கெமிக்கல்கள்தானா என்ற எண்ணம்தான் எனக்கு. இதற்கு மேல் உணவில் உள்ள கலர்கள், மணமூக்கிகள், பதனப்படுத்தும் கெமிக்கல்கள், உலர்வாக வைக்கப் பயன்படும் இரசாயனங்கள் மற்றும் இன்னும் எத்தனையோ கலப்படங்கள் வேறு… பிறகு எப்படி இந்த உணவுப் பொருட்களின் மேல் ஒரு நம்பிக்கை வரும்? நம்பிக்கையே இல்லாமல் வாங்கும் பொருட்களை எப்படி மகிழ்ந்து, இரசித்து குழந்தைகளுக்கு சமைப்பது?
கோடையிலாவது புதினா, கொத்தமல்லி, சில கீரைகள், தக்காளி போன்ற சிறு சிறு காய் வகைகளை வீட்டில் வளர்க்கலாம் என்றால், அதற்கும் மண் கூட இங்கே கடைகளில் வாங்கவே பலர் கைகாட்டினார்கள். அந்த பிளாஸ்டிக் சாக்குப் பைகளில் அடைத்து விற்கப்படும் மண்ணின் பெயர் கூட, ‘மிராகில் சாயில்’ (Miracle soil) – அதிசய மண்! உரம், பூச்சிக் கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள் என்று பெரிய அட்டவணை அதன் மூலப்பொருட்களாக உள்ளன.
ஆதி மனிதன் உழைக்க ஆரம்பித்தது உணவிற்காகத்தான். இன்றும் அந்த உணவின் தேவைதான் உழைப்பின் அடிப்படை. ஆனால் ஒரு வாய் உணவை உண்ண நேரமில்லாமல் பாதி நாட்கள் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அதன் பின் உண்ணும் அந்த உணவில் பாதி நம் உடம்பைப் பாழ்ப்படுத்தும் வகை என்று தெரிந்தும் நாம் உண்கிறோம் என்றால், எதற்கு இந்த ஓட்டம்? எதற்கு இந்த அயல் மண்?
தொடரும்…
அமெரிக்க உணவு பழக்கம் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல என்பதையும்…கலர் கலரா காய்கறி இருக்கே..இப்படி சமைத்து சாப்பாடு எப்படி இருக்கும் என்ற எண்ணத்தையும் மாற்றியதற்கு நன்றி சுமி..
மொத்தத்தில் அமெரிக்க தமிழ் மக்களின் இயல்பான உணவுப் பிரச்சனை என்ன எவ்வளவு என்று தெளிவாகப் புரிந்தது…