
முதலில் சொட்டுச் சொட்டாய் வந்தது போலிருந்தது. அப்புறம் நான்கைந்து துளைகளிலும் பீய்ச்சியடிக்க ஆரம்பித்தது. நைட்டி முழுவதும் பாலால் நனைந்திருந்தது. ஒரே பால்வீச்சம். உள்ளைங்கையால் வலது மார்பைப் பொத்திக்கொண்டாள். கையில் பிசுபிசுப்பு. தொடைகளிலும் அதேபோல் தோன்ற, பொருந்தாமல் கண்களைத் திறந்த பிறகுதான் கனவென்றே தெரிந்தது. குனிந்து பார்த்தபோது கனவில் வந்த அதே ப்ளூ கலர் கட்டம் போட்ட நைட்டியைத்தான் அணிந்திருந்தாள். பின்பே தொடை பிசுபிசுப்பு ஞாபகம் வர வேகமாய் பாத்ரூமுக்குள் ஓடினாள்.
அம்மா குளித்துவிட்டு வந்ததைப் பார்த்துவிட்டு என்னவெனக் கேட்க, ”பீரியட்ஸ்” என்றாள். அம்மா காலெண்டரைப் பார்த்தாள்.
“இருபது நாள்தானடி ஆச்சு?”
“தெர்ல மா”
அடிவயிற்றில் கொக்கிகள் போல இழுக்க ஆரம்பித்தது. பேசாமல் வந்து மறுபடி படுக்கையில் சுருண்டுகொண்டாள். எதற்கு இந்தக் கனவு வந்து தொலைத்தது? ஏழு வருடங்கள் ஆகிவிட்டன குழந்தைக்குப் பால் கொடுத்து. நிரஞ்சனாவுக்குப் பெண்குழந்தை ஒன்று பிறந்து இரண்டாம் மாதமே இறந்துவிட்டது. ஏதோ ஜெனிட்டல் கோளாறு என்றார்கள். பால் நிற்கவேயில்லை. நிரஞ்சனாவுக்குப் பெரிய தனங்கள் இல்லை. அதிலேயே பால் பொங்கி வருவது அவள் அம்மாவிற்கே ஆச்சரியமாக இருக்கும்.
குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதே சீக்கிரமே தூங்கிவிடும். ஒரு பக்கம் கொடுக்கும்போது இன்னொரு பக்கத்திலிருந்து பீச்சியடிக்கும். வலது பக்க மார்பை அழுத்திப் பிடித்துக்கொண்டே இடதுபக்கத்தில் குழந்தைக்கு கொடுப்பாள். முதலில் வாட்டம் வரவில்லை. பால் வரும் வேகத்தில் குழந்தைக்குப் புரையேறும். பால் நெஞ்சில் ஏறி நிமோனியா வந்தது. அந்த டாக்டர் ஒழுங்காக பால் கொடுக்க கற்றுக்கொடுத்தார். அப்போதும் குழந்தை அதிகமாக குடிக்காது. நிரஞ்சனா குழந்தை எழக் காத்திருப்பாள். அந்தக் குழந்தை பிறந்ததிலிருந்தே மந்தமாக இருந்தது. தூங்கிக்கொண்டே இருந்தது. நிறம் மாறிக்கொண்டே இருந்தது. அம்மா என்னென்னமோ செய்தாள். அண்ணன் அலைந்தான். ஆனால் இரண்டு மாதம்தான் தாங்கியது.
அண்ணனுக்குத் திருமணமானவுடனே அவர்களை அம்மா தனியாய் போக சொல்லிவிட்டாள். நிரஞ்சனாவுக்கு வருத்தமாயிருக்குமென நினைத்திருக்கலாம். இல்லையென்றால் அவளது பைத்தியம் யாருக்கும் தெரிய வேண்டாமென்பதற்காகக் கூட இருக்கலாம். தனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்த பைத்தியம் நிரஞ்சனாவாக மட்டும்தான் இருக்க முடியும். கணேஷ்தான் முதலில் நிரஞ்சனாவை பைத்தியம் என்றான். கல்யாணமான மூன்று மாதம் நன்றாகத்தான் இருந்தான். எல்லோரிடமும் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கொள்வதாகப் பெருமையாகச் சொல்லுவான். ஒருநாள் அவனுக்கு வேர்க்கடலையை உரித்துக் கொடுத்தாள். ஆரஞ்சு சுளைகளையும் அதேபோல உரித்துக் கொடுத்தபோது வித்யாசமாகப் பார்த்தான்.
பின் இட்லியைத் துண்டங்களாக்கி வைத்தாள். அவன் எடுக்க இலகுவாக கப்பை திருப்பி வைத்தாள். துண்டு, பனியன், சட்டை, லுங்கி என அனைத்தையும் அயர்ன் செய்து வைத்தாள். படுக்கையில் ஒருநாள் எல்லாத் துணிகளையும் கழட்டி வைத்துவிட்டு அவனுக்காகக் காத்திருந்தபோதுதான் பைத்தியம் என முதலில் சொன்னான். அந்த நாளை நிரஞ்சனாவுக்கு நன்றாக நினைவிருந்தது. அப்போதிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தான். நிரஞ்சனா பயந்து இன்னும் நெருக்கினாள். கால்களைப் பிடித்து விடச் சென்றால் மறுத்தான். அலுவலகத்துக்கு ஃபோன் செய்தால் திட்டினான். ஒருநாள் ஒரு பெண்ணோடு வெகுநேரம் ஒரு ஹோட்டலில் பேசிக் கொண்டிருந்தான். யதேச்சையாக நிரஞ்சனா பார்த்துவிட்டாள். சிரித்தபடி போய் பேசினாள். இரண்டு பேரும் திகைத்துப் போனார்கள். அந்தப் பெண் கட்டியிருந்த மெரூன் மார்பிள் புடவை நன்றாக இருந்தது. இவளிடம் அதற்கு எதிர்ப்பதமாக கண்ணாடி வேலை செய்த ஒரு பச்சைநிற பிளவுஸ் துணி இருந்தது.
அடுத்த நாள் காலையில் கணேஷிடம் கொடுத்து அவளிடம் கொடுக்க சொன்னாள். இரண்டாவது முறை பைத்தியம் என்ற சொல் இன்னும் ஒரு அடி வளர்ந்தது. அப்புறம் அதன் உயரங்கள் வேறெங்கோ சென்றன. சீமந்தத்திற்கு முன்பாகவே அம்மா வீட்டில் கொண்டு போய் விட்டான். அம்மா துருவித் துருவிக் கேட்டாள். ”ஒன்றுமில்லை” என்று நிரஞ்சனா சொன்னதை யாருமே நம்பவில்லை. நிரஞ்சனா கடைசியாக விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போடும்போது கூட கணேஷிடம் எதுவும் கேட்கவில்லை. அம்மாவை அழாமல் பார்த்துக்கொள்ளத்தான் சிரமப்பட்டாள்.
குழந்தை இறந்த மூன்றாம் நாள் பால் கட்டிப் போயிருந்தது. அம்மா முட்டைக்கோஸ், குண்டுமல்லி என எதை எதையோ கொண்டு வந்து மார்பில் கட்டினாள். நிரஞ்சனா வலி ஏற்படும்போதெல்லாம் வாஷ்பேசினில் போய் கையை வைத்து அழுத்திப் பீய்ச்சினாள். பிறகு அக்குளில் நெறி கட்டியது. கணேஷை ஃபோனில் அழைத்து விஷயத்தை சொன்னாள். உடனே வந்தான். வந்தவனிடம் நிரஞ்சனா தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டாள். கணேஷ் மிரண்டான். தலையிலடித்துக் கொண்டு அம்மாவிடம் கண்டபடி திட்டிவிட்டு வீட்டை விட்டுப் போனான்.
அப்புறம் ஒரு மெஷின் போல வைத்து மருத்துவமனையில் கட்டிய பாலை எடுத்தார்கள். கடைசியாய் நிரஞ்சனா அழுதது அன்றுதான். அதன் பிறகு அவளுக்கு வலியே வரவில்லை. நிரஞ்சனாவுக்கு எல்லாருடைய பிரச்சனையும் என்னவெனத் தெரிந்துவிடுகிறது. ஆனால் அவர்களால் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் மறுப்பார்கள். அதன் தீர்வைச் சொன்னால் அவர்கள் நிரஞ்சனாவை ஏற இறங்கப் பார்ப்பார்கள். அம்மா வந்து அவளை வாயை மூடியிருக்கும்படி சொல்ல ஆரம்பித்தாள். அவ்வப்போது வரும் அண்ணன் தன் குழந்தையையும் அண்ணியையும் கூட்டி வந்து பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.
நிரஞ்சனாவுக்கு அந்தக் குழந்தையை மிகவும் பிடித்தது. அண்ணியிடம் கெஞ்சிக் கேட்டு கிளம்பும் வரை தன்னுடனேயே வைத்திருப்பாள். அம்மாவும் அண்ணணும் பயத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதை அறிவாள். எப்போது லேசாகத் தடுமாற ஆரம்பிக்கிறாளோ அப்போது கொடுத்துவிடுவாள். அன்ணிக்கு மட்டும் நிரஞ்சனா மீது நம்பிக்கை இருந்தது. குழந்தைக்கு அதிகமாகப் பசித்தது. பருப்பும் நெய்யும் கலந்து ஊட்டிவிடுவாள். நிரஞ்சனா ஊட்டி விட்டால் அதிகமாக சாப்பிடுவதாக அண்ணி பாராட்டுவாள். அண்ணன் மட்டும் நம்பிக்கையில்லாது பார்த்துக் கொண்டிருப்பான்.
ஒருநாள் குழந்தை அம்மா மேஜை மீது வைத்திருந்த காசை முழுங்கிவிட்டான். தொண்டையில் நின்று குழந்தை சத்தமே வராமல் பெரிதாய் வாயைத் திறந்து மூச்சுக்குப் போராட அம்மா மயங்கி பொத்தென விழுந்தாள். நிரஞ்சனா குழந்தையைத் தலைகீழாகப் போட்டு தொண்டையில் தட்ட காசு வெளியே வந்து விழுந்தது. அண்ணன் அதைப் பார்த்துவிட்டான் அன்று வந்து பிடுங்கிக் கொண்டு போனவன்தான். அதற்கப்புறம் இருவரும் வீட்டுக்கு வருவதில்லை. அண்ணிக்கு ஃபோன் செய்தாலும் பேச மறுத்தாள். அம்மா மட்டும் போய்விட்டு வருகிறாள். நிரஞ்சனாவுக்கு தன் பிரச்சனை என்னவெனத் தெரியும். அதனால் யாருடனும் பழகாமல் ஒடுங்கிக்கொண்டுவிட்டாள். இப்போது இந்த ஃபோன்தான் எல்லாம். ஃபோனில் எல்லாவற்றையும் பார்க்கிறாள். அவர்களுடன் மானசீகமாய் பேசிக்கொள்கிறாள். மனிதர்களே ஃபோனில் தெரிபவர்கள் மட்டும்தான்.
மறுபடி ஃபோனைப் பார்த்தாள். வருண் பாடிக் கொண்டிருந்தான். சமீபகாலமாய் அவனுடைய பாடல்கள்தான் அவளுக்குப் பிடித்திருக்கிறது. அவனையும். அவன் குரலில் ஏதோ ஒன்று இருந்தது. ஆனால் ஆழமில்லை. ஒரு விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரிந்தது. அவனுக்குள் ஏதோ ஒரு ஊனமிருந்தது. கை கால்கள் எல்லாவற்றையும் ஜூம் செய்து பார்த்துவிட்டாள். எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் ஊனமுற்றவன். வருணை வாரி மடியிலேந்திக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. வருணைக் கண்ட பின்தான் இப்படி பால் கொடுக்கும் கனவுகள் வருகின்றன. வருணுக்கு மெசேஜ் செய்தாள்.
பிடிகொடுக்காமலேயே பேசிக் கொண்டிருந்தான். நிரஞ்சனாவுக்கு அவன் ஊனம் முற்றிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. கடைசியாய், ”ஒருமுறை உங்களை பார்த்தா போதும். அப்புறம் எதுவும் கேக்க மாட்டேன்” என்று அனுப்பினாள்.
நிரஞ்சனாவிடமிருந்து மெசேஜ் வந்தவுடன் வருணுக்குச் சிரிப்புதான் வந்தது. இந்தப் பெண் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறது? சரி, வா காபி குடிப்போம் எனக் கூறி மேலே கைவைத்தால் என்ன செய்வாள்? புரியாமல் பேசுகிறாளே என்று இருந்தது. அசட்டுப் பெண்கள். வீட்டிலிருந்து கொண்டு நேரத்தை என்ன செய்வதெனத் தெரியாமல் இப்படி வீணாய்ப் போனவர்கள். அதற்காக வருணையும் நல்லவனெனச் சொல்லிவிட முடியாது. வீணாய்ப் போனவர்களுடன் சேர்ந்து அவனும் வீணாய்ப் போனவன்தான். மற்றபடி தெரியாத பெண்களிடம் கைவைப்பதில்லை.
வருண் ஒரு ஷேர் மார்க்கெட் கன்சல்டன்சியை நடத்திக் கொண்டிருந்தான். நிழலாய் சில காரியங்கள். கேட்பதற்கு யாருமில்லை. வருணின் வீட்டிலேயே விக்கி தங்கிக் கொண்டிருந்தான். அவனைச் சுற்றி ஒரு குழு இருந்தது. எப்படியோ வருண் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டார்கள். தீயாய் தொழில் பார்த்தார்கள். நாலு காசு சம்பாதிக்கும் வித்தையைக் கற்றுக் கொடுத்தான். அவ்வளவுதான். குருபக்தி அள்ளிக் கொண்டுவிட்டது. ’வருண்ணா சொன்னா அவ்ளோதான்’. அப்பீல் இல்லாமல் எடுத்துக்கொள்வார்கள். பாடுவது வருணுக்கு ஒரு ஹாபிதான். வார இறுதிகளில் ஏதேனும் லைட் ம்யூசிக் ஷோ. அவ்வளவுதான். விக்கி அப்படியே அதை வீடியோ எடுத்து சோசியல் தளங்களில் ஏற்ற, இப்போதெல்லாம் யாராவது அவனை, ”நீங்க சிங்கர் வருண் தானே?” என்று கேட்டு விடுகிறார்கள். நிறைய ப்ரப்போசல்கள் வரும். எக்கச்சக்கமாக புகழ்ந்து கமெண்ட்டுகள் வரும்.
ஆனால் எதையும் மண்டையில் ஏற்றிக்கொள்ள வருணுக்குப் பிடித்தமாயில்லை. நிறைய உறவுகள் கடந்து போனதை சிறுவயதிலிருந்தே பார்த்தாயிற்று. உயிர்த்தே கிடந்தது அசைவற்று மாறியதைப் பார்த்துப் பார்த்து மரத்துவிட்டது. இப்போது இந்தப் பெண் வேறு ஒருமுறை பார்த்தால் போதுமென உயிரை வாங்குகிறாள். ஏதோ பொழுதுபோக்குக்காக பாடுவதைக் கேட்டுவிட்டு இந்தப் பெண் கெஞ்சுகிறது.
ஃபோனில் சொல்லிவிடலாம் எனத் தோன்ற, அழைக்குமாறு மெசேஜ் செய்தான். உடனே லைனுக்கு வந்தாள். சில பேச்சுகளுக்குப் பின் அவனே நேரடியாகக் கேட்டான்.
“எதுக்கு என்னைப் பார்க்கணும்? குரல்தானே பிடிச்சுருக்கு? அப்புறம் எதுக்கு?”
“ல்ல. குரல்ல இருக்கவங்க எப்படி இருப்பிங்கன்னு“
“அதான் ஃபோட்டோ இருக்கே”
“இல்ல ரத்தமும் சதையுமாப் பார்க்கணும்”
“அதான் ஷோ வில பார்க்கறியே”
“ம். பத்தல. பக்கத்துல பார்க்கணும்”
ஒரு நிமிடம் யோசித்து வரச் சொன்னான். இவர்களுக்கெல்லாம் நேராய் சொன்னால் புரியாது. மறுநாள் சொன்ன நேரத்தில் வீட்டுக்கு வந்தாள். உட்கார வைத்தான். சில பாடல்களை சிலாகித்தாள். அழகாக இருந்தாள். ஒவ்வொரு முறை உதட்டைக் கடித்து பேசும்போதும் மோகம் பொங்கியது. அடக்கிப் பார்த்தான். முடியவில்லை. எழுந்து சரக்கை டம்ளரில் ஊற்றி அவளுக்கு ஒன்றை நீட்டினான். மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். லேசாய் வியப்பு தட்டியது. பேசிக்கொண்டே இருந்தாள். சளசளவென பேச்சு. என்ன சொல்லிக்கொண்டிருந்தாளோ. ஒன்றும் காதில் ஏறவில்லை. நிரஞ்சனாவின் உதடுகள் கண்கள், வடிவம் என எல்லாமே அழகாயிருந்தது. அசைந்து அசைந்து பேசுகையில் போரடிக்காமல் போய்க்கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்துக்குப் பின் பெட்ரூமை நோக்கிக் கைநீட்டினான்.
”இஃப் யூ டோண்ட் மைண்ட், போலாமா?”
ஒரு சிப்பை அருந்திக் கொண்டிருந்தவள் லேசாய் சிரித்து, “ம். சரி” என்றபடி கூடவே வந்தாள். மெல்லத் தொடங்கி ஆக்ரமிக்கத் தொடங்கினான். முழுதாய் ஒத்துழைத்தாள். எந்த ஆடையையும் அகற்றாமல் மேலே படர்ந்தவனை ஆவேச கதியின் பாதியில் நிறுத்தி…
”உங்களை எப்படி கூப்பிடட்டும்?”
”ஷ் _____________”
முடிந்தவுடன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு தேங்க்ஸ் என்றபடி நகர்ந்தான். நிரஞ்சனா எட்டி அவன் முகத்தைப் பார்த்தாள். முழுமையானது போல் இருந்தது. அம்மா தேடுவாள். கிளம்ப வேண்டும்.
“அப்போ நான் கிளம்பட்டுமா?”
வருண் வித்யாசமாகப் பார்த்து தலையாட்டினான். படுக்கையில் அவளின் மணம் முழுக்க பரவியிருந்தது. தோளைக் குலுக்கிக் கொண்டான். தானாக வருவதை ஏன் வேண்டாமெனச் சொல்ல வேண்டும்?
நிரஞ்சனா அதற்கப்புறம் அவனைத் தொடர்ந்து கவனித்தாள். பாடும் எல்லா ஷோக்களிலும் இரண்டாம் வரிசையில் உட்கார்ந்து ரசித்தாள். கூட்டத்தில் ஒருமுறை அவள் நெருங்கி வருவதைக் கண்ட வருண் எதிர்த்திசையில் விக்கியை அப்போதுதான் பார்த்தது போல வேகமாக விலகிச் சென்றான். அதைப் பார்த்து அவள் துணுக்குறுவதை உறுதிப்படுத்திக் கொண்டான். நிரஞ்சனாவுக்கு பொதுவெளியில் வருண் தன்னைத் தவிர்ப்பது புரிந்தது. எப்போதெல்லாம் அவன் முகத்தில் பொலிவு குறைகிறதோ அப்போதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி மெசேஜ் செய்தாள். வருண் அதேபோல் வரச்சொல்லி காரியத்தில் மட்டும் கண்ணாய் முடித்துக் கொண்டான். ஒருமுறை கூட நிரஞ்சனாவின் மார்பை அவன் பார்த்ததில்லை. முடிந்தவுடன் வருண் முகத்தை ஆழ்ந்து பார்த்துவிட்டு கிளம்பிவிடுவாள். சிலசமயம் அவள் கிளம்பியது கூடத் தெரியாமல் வருண் போதையில் சுருண்டிருப்பான். தனக்குள் லேசாக எழுந்த குற்றவுணர்வைத் தாண்ட முயன்றபோது அவளும் அதேபோல நடந்து கொண்டது வசதியாக இருந்தது. கொஞ்சம் இலகுவாக வருணின் வாழ்க்கை மாறியிருந்தது.
ஒரு ஆடிஷனுக்கு வருணைக் கூப்பிட்டிருந்தார்கள். பாடி முடித்தவுடன் முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் எழுந்து கைகொடுத்தார். மறுநாளே ரெக்கார்டிங்கிற்கு வரச் சொன்னார். பெரிய பேனர். பேசிவிட்டு வெளியே வந்தபோது இதெல்லாம் எப்படி நடக்கிறது என ஆச்சரியமாக இருந்தது. வெளியே காருக்கு வந்தால் விக்கி ஃபோனைப் பார்த்து சிரித்து கொண்டிருந்தான். பக்கத்தில் இருவரும் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“என்னடா. கெக்க பிக்கன்னு”
மிரட்டிக் கேட்டவுடன் சிரிப்பை அடக்கிக்கொண்டு பம்மினார்கள். மகேஷ் மட்டும் சிரித்துக்கொண்டே இருந்தான். “என்னடா.. என்னன்னு கேக்கறேன் ல?” மூன்று பேரும் அமைதியானார்கள் இவன் கிட்டே வர மொபைலை மறைத்தார்கள். இவன் தீவிரமாக பார்க்க, விக்கி தடுத்தான்.
“அண்ணா. வேணாம்னா.. பார்த்தா திட்டுவீங்க”
”என்னன்னு சொல்லித் தொலைங்கடா”
மகேஷ் வேறுவழியின்றி காட்டினான். நிரஞ்சனா இவனுடைய ஷோவில் புடவை நழுவியது தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். மார்புகள் பட்டவர்த்தனமாய் தெரிந்தன. எவனோ வீடியோ எடுத்து ஏற்றியிருக்கிறான். படபடப்பாய் இருந்தது. ஓங்கி தலையில் தட்டினான்.
“என்னடா கருமம். எதுக்கு இப்படி பார்த்துட்டு இருக்கீங்க”
”அண்ணா.. அந்த பொண்ணு எப்பவும் நம்ம ஷோவுக்கு வரும். நின்னு பார்க்கும். அப்புறம் நம்ம கடைக்கு வெளிய ஒரு காபி ஷாப்ல உக்காந்து உங்களையே பார்த்துட்டு இருக்கும். ஒரு மாதிரி பொண்ணுன்னு பேசிக்கறாங்க. ஆனா. உங்க பாட்டுன்னாதான் பைத்தியம் போலருக்கு.. அதான் வீடியோ பிடிச்சு போடுருக்கானுங்க”
கடுப்பாய் வந்தது. ஃபோனை வாங்கி அதை டிலீட் செய்தான். எத்தனையோ பேர் பார்த்திருப்பார்கள். படபடப்பினூடே சிகரெட் பத்தவைக்க, இன்னும் கடுப்பாக இருந்தது. இப்போது என்ன பிரச்சனை. அவள் எங்கு எப்படி இருந்தால் இவனுக்கு என்ன? கூப்பிட்டவுடனே உள்ளே வந்தவள்தானே? எல்லாத்துக்கும் தயாராய் இருப்பவள். பதற்றம் தணியாமல் இருந்தது. வெறும் படுக்கையோடு முடிகிற சமாச்சாரம் இதற்கு எதற்கு இத்தனை முக்கியத்துவம். ச்சே…“
மறக்க சிரமப் பட்டான். அவள் மெசேஜ்களை, அழைப்புகளை நிராகரித்தான். எதன் மீதும் ஒட்டிக்கொள்ள முடியாது உடல் முழுதும் முள்ளாய் ஆனவன் போல் தடம் மாறினான். ஏற்கனவே இருந்த மெஷின் தன்மை மறுபடி தன் செயலை குரூரமாக்கிக்கொண்டே போனதை ஏதுமில்லை ஏதுமில்லை என சொல்லிக்கொண்டாலும் அவளால் நெகிழ்ந்தது புரிந்திருந்தது. எப்படியோ போகட்டும். யாரும் வேண்டாம்.
அடுத்த நாள் போய் பாடிவிட்டு வந்தான். பெரிய நடிகரின் படம் பாடல் ஹிட்டாகும் என்று எல்லாரும் பேசிக் கொண்டிருந்தார்கள். சுற்றியிருப்பவை அனைத்தும் நல்லபடியாக உருக்கொண்டதைப் போல இருந்தது. எல்லாவற்றையும் தள்ளி மேலெழும்பிய நிரஞ்சனாவின் முகத்தைக் கஷ்டப்பட்டு துரத்தினான். ஒரு வாரம்தான் அப்படி முடிந்தது. அடுத்த வார ஷோவுக்கு நிரஞ்சனா வரவில்லை. வழக்கமான இருக்கையில் அவளில்லை. உறவு முடிந்து விட்டது போல என நினைத்துக் கொண்டான். ஃபோனை எடுத்து டயல் செய்து வேண்டாமென நிறுத்திவிட்டான். அடுத்த வார இறுதிவரை அவனாய் அவனில்லாமல் சட்சட்டென தடுமாறினான்.
மேடையில் பாடுவதற்கு நின்றவுடன் அவளைத்தான் விழிகள் தேடின. சினிமாவில் பாடும் செய்தி வெளியாகி விட்டதால் கூட்டம் கணிசமாகச் சேர்ந்திருந்தது. நிரஞ்சனா இரண்டாம் வரிசையில் அமர்ந்தபடி அவனைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் துளியும் உயிரில்லை. அப்படி நிரஞ்சனாவை பார்த்ததேயில்லை. துள்ள துவள துடிக்கும் மீனைப் போன்றுதான் அவளைக் கண்டிருந்தான். ஒரு நிமிடத்துக்கு ஒருமுறை முகம் மாறும். அதுவும் இவனைக் கண்டுவிட்டால் சிரித்துக் கொண்டே இருப்பாள். உச்சமடையும்போது இன்னும் வெடித்து சிரிப்பாள். வருணுக்கு இப்போதே அவள் உச்சமடைந்து சிரிக்கும் அழகைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. சுற்றி எல்லாரும் இருந்தனர். விக்கி கோஷ்டி அவளை கேலியும் கிண்டலுமாய் பேசிக்கொண்டிருந்தது மேடையிலிருந்தே தெரிந்தது. காதில் பாடல் தொடங்குவதற்கான சமிக்ஞைகள் ஆரம்பிக்க பாடத் தொடங்கினான். விக்கி தன் பரிவாரங்களுடன் நிரஞ்சனாவை தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தான். நிரஞ்சனா விலகி நடக்கத் தொடங்கினாள்.
சட்டென பாட்டை நிறுத்தி விட்டான். அத்தனை கூட்டமும் ஆர்ப்பரித்தது. நிரஞ்சனா திரும்பி பார்த்தாள். பாடத் தொடங்கினான். நிரஞ்சனா நடக்கத் தொடங்கியதும் நிறுத்தினான். மறுபடி ஆரவாரம். பாடு பாடு என்ற கூச்சல். நிரஞ்சனா திரும்பினாள். பாடத் தொடங்கினான். நம்ப முடியாமல் நிரஞ்சனா பார்த்துக்கொண்டே இருக்க கண்ணில் இருந்து நீர் வழிய வழிய பாடினான். கூட்டம் சிலை போல் நின்று உருகி கரைந்தது. முடித்துவிட்டு இறங்கிய பின் சூழ்ந்து கொண்டவர்களை ஒருவாறு சமாளித்துவிட்டு நிரஞ்சனா இருந்த திசை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
நிரஞ்சனா அவன் பக்கமே திரும்பாமல் சாலையில் போகின்ற ஆட்டோக்களை நிறுத்த போராடிக்கொண்டிருந்தாள். அவளை நெருங்குகிற நேரம் விக்கி காரை எடுத்து வந்து நிறுத்தினான்.
“ஏறுண்ணா. ஏன்னா.. நான் அங்கதானே நிறுத்தினேன். இங்க வண்ட்ட?”
நிரஞ்சனா திரும்பி பார்த்தாள். அவனையும் விக்கியையும் பார்த்துவிட்டு பேசாமல் திரும்பி நின்று கொண்டாள். விக்கி அதற்குள் அவளைப் பார்த்துவிட்டுப் பின்னால் திரும்பி.
“மகேஷ்.. இன்னிக்கு மறுபடி ஷோ களைக் கட்ட போகுதுடா. கெட் ரெடி”
மகேஷ் ஏதோ சொல்ல காருக்குள் சிரிப்பலை பொங்கியது. வருண் விக்கியை பார்த்தான்.
“இறங்கி போய் பின்னால உக்காரு. நான் ஓட்றேன்”
“இல்லண்ணா.. நானே..”
‘டேய்”
இறங்கி பின்னால் போய் உட்கார்ந்தவன் மறுபடி நிரஞ்சனாவைப் பற்றி ஏதோ பேச ஆரம்பித்தான். வருண் நிரஞ்சனாவிடம்
“ஏய்.. வண்டில ஏறு”
அவள் தடுமாறினாள். நம்ப முடியாது விழிவிரித்தாள்
“ல்ல. வந்து.”
“ஏறு. சொல்றேன்ல”
பேசாமல் ஏறப்போனவளை விக்கி தடுத்தான்.
“நான் முன்னால உக்காந்துக்கறேன். நீ பின்னாடி வா. அண்ணனுக்குப் பிடிக்காது”
வேகமாய் விக்கி இறங்க, நிரஞ்சனா வருணைப் பார்த்தாள்.
”ல்ல. வா. முன்னால ஏறு”
நிரஞ்சனா வருண் பக்கத்தில் ஏறி அமர்ந்தாள். விக்கி திகைத்திருந்ததை உணர முடிந்தது. பின்னாலிருந்து சத்தமே இல்லை.
நிரஞ்சனா பேசாமல் இருக்க, வருண் செருமிக்கொண்டான்.
“விக்கி நிரஞ்சனாகிட்ட மரியாதையா பேசு. அவ உன்ன விட பெரியவ அண்ட் ஷீ ஈஸ் மை கேர்ள்.”
விக்கி மகேஷை பார்த்துவிட்டு இவனிடம் தலையாட்டியது ரியர்வியூவில் தெரிந்தது. நிரஞ்சனா பேசாமல் வெளியே பார்த்துக்கொண்டு வந்தாள். என்றைக்குமில்லாமல் அவள் மேல் அன்பு பொங்கியது. நிரஞ்சனாவை மணந்துகொள்ளச் சொல்லிக் கேட்கலாமா? அவளுக்கு யாருமில்லை. அம்மா மட்டும்தான் எனத் தெரியும். சம்மதிப்பாள். எப்போது பேசுவேன் என்பதாகத்தான் காத்துக் கொண்டிருக்கிறாள். போதும், இந்த தடிமாடுகளுடனான வாழ்க்கை. இனிமேலாவது பூத்துக் குலுங்கட்டும். இந்த பசங்களை அண்ணி எனக் கூப்பிடச் சொல்ல வேண்டும். எல்லா உறவுகளுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. வருண் மனதில் கோட்டை கட்டிக்கொண்டே சென்றான்.
காரை கடையில் நிறுத்திய வருண்,
“மகேஷ், நீயும் இவனும் இப்படியே கடைக்கு போய் ஸ்டே பண்னிட்டு காலைல பெங்களூர் கிளம்பிருங்க. நாங்க போய்க்கறோம்” என்றபடி பர்சிலிருந்து பணத்தை எடுத்து நீட்டினான். மகேஷும் விக்கியும் நம்ப முடியாமல் பார்த்தபடி இறங்கினார்கள். நிரஞ்சனாவைப் பார்த்தால் அவள் சாதாரணமாகவே இருந்தாள்.
வருணுக்கு என்னென்னமோ தோன்றியது. இதையெல்லாம் இவள் எப்படி சாதித்தாள்?. அன்றிரவு வருண் நிறைய பேசினான். எதிர்காலம் குறித்து, கடந்தகாலம் குறித்து. வேதனைகள், வலிகள். ஏமாற்றங்கள், துரோகங்கள் முதல்நாள் நிரஞ்சனா பேசிக்கொண்டிருந்ததைப் போலவே சள சள. அவனுக்கு அன்று எந்த லாகிரியும் தேவைப்படவில்லை. நிரஞ்சனா அதையெல்லாம் சரியாக கவனித்தாளா என்று கூடத் தெரியவில்லை. எல்லாவற்றையும் ஒப்புவித்துவிட்டு அவளை நெருங்கியபோது மணி இரண்டைத் தாண்டியிருந்தது. அவனால் அவள்மேல் செயல்படக் கூட முடியவில்லை. தடுமாறினான். உணர்ச்சியின் உச்சத்தில் இருந்ததால் அவனால் ஒன்றும் முடியாமல் மல்லாந்தான்.
ஒரு சில நிமிடங்கள் கழித்து நிரஞ்சனா எழுந்தாள். குழந்தையை எடுத்து பால்புகட்டுவது போல் தொடங்கியவளின் முகத்தைக் கூர்ந்து கவனித்தான். ஏதோ கடமையில் தீவிரமாக இருந்தவள் போலவே அவன் மேல் இயங்கினாள். கண்களை அயர்வும் மகிழ்வும் அழுத்த அசந்து தூங்கினான். கனவேயில்லாத உறக்கம். இதற்கு முன்னால் அப்படி தூங்கிய ஞாபகமே இல்லை. அலைக்கழிப்பற்ற உறக்கம். காலையில் எழுந்த போது நிரஞ்சனா இன்னும் உறங்கிக் கொண்டிருந்தாள். ஒருவேளை அவளுக்கும் அப்படியே இருந்திருக்கலாம்.
காபி போட்டுக்கொண்டு வந்தவன் சிகரெட்டைப் பற்ற வைக்க, அந்த ஒலி கேட்டு எழுந்தாள். வருண் கோப்பையை நீட்டினான். காலண்டரில் நாள் பார்த்தான். என்ன செய்ய வேண்டும்? எப்படி செய்யலாம்? இவள் வீட்டில் யாராவது வருவார்களா? வரிசையாய் கேள்விகளை அடுக்கினான். குறும்புடன் பார்த்துச் சிரித்துக்கொண்டே இருந்தாள்.
“சிரிக்காதே. ஏன் சிரிக்கறன்னு தெரியுது. என்ன? என்னை கமுத்திட்டன்னு தெனாவட்டா? வெச்சுக்க. இப்ப என்ன? கேட்டதுக்கெல்லாம் பதில் சொல்லு. உங்கம்மா கிட்ட வந்து பேசட்டுமா?”
தலையை இடமும் வலமுமாக ஆட்டினாள்.
“இல்ல, முடியாது. அம்மா செத்துப் போச்சு”
“எப்போ?”
“ரெண்டு வாரமாச்சு”
“ஐம் சாரி”
“இல்ல. அது அவளுக்கு விடுதலைதான். பாவம். உயிரோட இருந்தாதான் கஷ்டம்“
”அப்போ… நீ என்ன பண்ற? வந்துரு. நான் உன்னை கல்யாணம் செஞ்சுக்கறேன். என் கூடவே இருந்துரு”
நிரஞ்சனாவுக்கு சிரிப்பு வந்தது. அவன் முகத்தை ஆழமாய்ப் பார்த்தாள். இப்போது எந்த ஊனமுமில்லை. அவன் குரலில் ஆழம் கூடியிருந்தது. தடுமாற்றமற்று இருந்தான். முகத்தில் நல்ல பொலிவு. நிறம் கூடுதலாய் லேசாய் மின்னினான். தன் மார்பில் தளும்பியது நிறைவுற்றதைப் போல் உணர்ந்தவள் அவன் முடியைக் கலைத்து முத்தமிட்டாள்.
”ல்ல. அது நடக்காது. உங்களுக்கு எப்ப வேணுமோ சொல்லுங்க. வரேன். என்னை யாராலயும் தாங்க முடியாது.”
”ஏய். இல்ல நிர.. நிரு..நிரஞ்சனா”
“ம். நிரஞ்சனா. அந்த பேரைக் கூட உங்களுக்கு ஒழுங்காத் தெரியாது. இப்போ போய் எதுக்கு இந்த ஸ்டுப்பிட்டான முடிவு?”
மறுபடி சிரிக்க ஆரம்பித்தவள், வாட்ச்சைப் பார்த்து,
“ஓ. நான் கிளம்பறேன். அம்மாவுக்கு பூ வாங்கணும்” பையை விசிறிக்கொண்டு கிளம்பும் வரை அவனால் பேச முடியவில்லை. மறுத்துவிட்டுப் போயிருக்கிறாள் என்பதையே அவனால் நம்ப முடியவில்லை. வேகமாக ஃபோனை எடுத்து அவள் நம்பருக்கு டயல் செய்தான். டேபிளிலேயே விட்டுவிட்டுப் போயிருந்தாள். ஒலிக்கும் ஃபோனை நெருங்கினான்.
“ச்சு… ஃபோனை விட்டுட்டுப் போயிட்டேன்”
நிரஞ்சனா வேகமாக வந்து ஃபோனை எடுத்தாள். கண நேர இடைவெளியில் தன் பெயரை எதிர்பார்த்து ஃபோனைப் பார்க்க திரையில், ‘____________ calling’ என மினுங்கியது.
*********