ஒஸாகி ஹொசாய் கவிதைகள் (ஹைக்கூ) – தமிழில்; நந்தாகுமாரன்
மொழிபெயர்ப்பு கவிதைகள் | வாசகசாலை

மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன
மாலை மறைந்த வயலில், என் காலடிச் சுவடுகள்.
*****
கடற்கரையைத் திரும்பிப் பார்க்கிறேன், ஒரு காலடிச் சுவடு கூட இல்லை.
*****
இருமும்போது கூட நான் தனிமையில்தான் இருக்கிறேன்.
*****
தகிக்கும் வானின் கீழ்
தரையில் வீழ்ந்து கிடக்கும் கொல்லப்பட்ட பாம்பு,
நான் அதைக் கடந்து
என் வழியில் தொடர்ந்து செல்கிறேன்.
*****
இருண்ட கிணற்றுள்,
என் முகத்தின் பிரதிபலிப்பினைத்
தேடிக் கண்டடைகிறேன்.
*****
நாளின் முடிவு நெருங்கும்போது
துள்ளித் துடிக்கும் மழையால்
ஒரு மூலையில் ஒதுங்கி
என் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன்,
வேறு மார்க்கம் இல்லை இங்கே இந்தக் கோவில் மண்டபத்தில்.
*****
என் சிகரெட் எரிந்துவிட்டது,
நான் அந்த வெறுமையைத் தூக்கி எறிகிறேன்.
*****
பகல் நேரக் கொசு ஒன்றினை
இந்தப் பழைய செய்தித்தாள் கொண்டு
அடித்துவிட்டுப் பின்னர் அதை
வாசிக்கத் தொடங்குகிறேன்
*****
மூங்கில் இலைகள் சலசலத்துக் கொண்டேயிருக்கின்றன,
நான் மனிதத் துணைக்கு
ஏங்கிக் கொண்டேயிருக்கிறேன்.
*****
ஒருநாள் மாலை
திடீரென்று ஒரு ஒற்றைக் கால் குருவி தோன்றியது.
*****
மூங்கில் முளைகளை உரித்து முடித்தாயிற்று,
இப்போது தனிமையாக உணர்கிறேன்.
*****
நிறைய இளம் பிளம்ஸ் பழங்கள் விழுகின்றன
பச்சை இருளின் உள்ளே.
*****
காசு கிடைத்ததும், வெளியே ஓடினேன்.
*****
செர்ரி மரத்தின் பழம் அவ்வளவு கசப்பாக உள்ளது!
டோக்கியோ அவ்வளவு தொலைவில் உள்ளது.
*****
அலை உயர்ந்துள்ளது,
மாலை நேரத்துச், சிக்காடா பாடுகிறது.
*****
நாற்பது வயதில்
என் காதல் உணர்வுகள்
பேம்பஸ் புற்கள்.
*****
எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்
ஒரு சேற்று நத்தை நடந்து சென்று கொண்டிருக்கிறது.
*****
அந்தி வானம்
முழுவதும் தனிமையாகிறது.
*****
மதிய நேரத் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன்,
சோர்வான விஷயங்களின் நிழல்கள் மட்டுமே தெரிகின்றன.
*****
மூடுபனிக்கு அப்பாலிருந்து
நீரின் ஓசை
நான் அங்கே செல்கிறேன்.
*****
மார்கழி இரவு
உறைந்து போன படுக்கை
மட்டுமே என்னிடம் உள்ளது.
*****
ஒரு குதிரை
அதிர்ந்து குதித்து ஓடுகிறது
வெள்ளை உறைபனிக் கம்பளத்தின் மீது.
*****
ஒரு ஆமை
மேற்பரப்பிற்கு மிதந்து வருகிறது
அமைதியான குளத்திலிருந்து.
*****
ஒரு குருவியின் வெதுவெதுப்பை
என் கைகளில் பற்றிக் கொள்கிறேன்
பின்னர் அதை விடுவிக்கிறேன்.
*****
கதவு மூடுகிறது உரத்த கூக்குரலுடன்
கோவில் தூங்குகிறது.
*****
குறிப்புகள்:
மூங்கில் முளைகளை – உணவுப் பொருள்
சிக்காடா – Cicada – தொடர் ஒலி எழுப்பும் ஒரு வகைப் பூச்சி
பேம்பஸ் புற்கள் – Pampas grass – ஒரு பெரிய வற்றாத புல் வகைத் தாவரம். கோடையின் பிற்பகுதியில், வெள்ளி-வெள்ளைப் பூக்கள் கொண்டு இது உயரமாக வளர்ந்து நிற்கும்.
*******
ஆசிரியர் குறிப்பு:
ஒஸாகி ஹொசாய் (Ozaki Hōsai) – (20 ஜனவரி 1885 – 7 ஏப்ரல் 1926) – இயற்பெயர்: ஒஸாகி ஹிடியோ (Ozaki Hideo):
ஒஸாகி ஹொசாய் ஒரு ஜப்பானிய சுதந்திர வடிவ ஹைக்கூ கவிஞர். சுதந்திர வடிவ வசன பாணி ஹைக்கூவின் முன்னோடியான ஒகிவாரா செய்சென்சுயின் (Ogiwara Seisensui) மாணவர். இவர் தன் ஹைக்கூக்களை பெரும்பாலும் ஒரு வரியில்தான் எழுதினார். பல ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களும் விரிவுரையாளர்களும் ஹைக்கூவிற்கு, ‘ஒரு வரி’ வடிவம்தான் உகந்தது எனக் கருதுகிறார்கள். தனிமைதான் இவரது முக்கியப் பாடுபொருள்.
ஹொசாய் தன் மனச்சோர்வினை நுட்பமான தரிசனங்களாக உருமாற்றி அதை ஒரு தனிப்பட்ட குரலாகத் தன் கவிதைகளில் ஒலிக்கவிட்டார். இவரது ஹைக்கூக்கள் இவரது சொந்த வாழ்க்கையின் அன்றாட நிகழ்வுகளைப் பற்றிப் பேசுவன. இவரது கவிதைகள் அன்றாடச் சூழல் மற்றும் பொருட்கள் தரும் சுய விழிப்புணர்வின் நீட்சியாக உள்ளன. இவர் நவீன ஹைக்கூவில் ஒரு முக்கிய குரல். இவரது ஹைக்கூக்கள் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த ஒன்றாகக் கருதப்படுகின்றன. இவர் படைப்புகள் பரந்துபட்ட விஷயங்களைப் பேசுவதாக உள்ளன. மேலும் அவை மனச்சோர்வினை நகைச்சுவையாகக் கண்டு, தீவிர ஆன்மீக நோக்கத்தை நிராகரிப்பதாக அமைந்திருக்கின்றன.
உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு, ஜப்பானில் உள்ள டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்ற போது அங்கு யோஷி சவா என்ற நெருங்கிய தோழியைத் திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் யோஷியின் சகோதரர் அந்தத் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிராகரிப்பால் அவர் காயமடைந்து மதுவை நாடினார்; அதன் விளைவாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
டைவானில் சில காலம் ஒரு காப்பீடு நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு ஜப்பானுக்குத் திரும்பிய பிறகு, இவர் தனது உடைமைகள் அனைத்தையும் தனது மனைவியிடம் விட்டுவிட்டுத் துறவற வாழ்க்கைக்குச் சென்று கோவில் கோவிலாக அலைந்து திரிந்தார். தன் உடல்நிலைக் குறைவால், ஒரு புத்தத் துறவியின் வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது என்பதுது இவருக்கு மிகுந்த சிரமமாக இருந்தது. இவர் இறுதியாக செட்டோவில் உள்ள ஒரு தீவில் குடியேறினார், அங்கு காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். ஹொசாயின் படைப்புகளுக்கான உந்துதல்கள், இலக்கியக் கோட்பாட்டிற்குப் பதிலாக அவரது சுதந்திரமான உற்சாகமான வாழ்க்கை முறையிலிருந்து இயல்பாக வெளிப்படுவதாக இருக்கின்றன.
ஒஸாகி ஹொசாயின் ஒரே கவிதைப் புத்தகம், ‘பெரிய வானம்’, அவரது மரணத்திற்குப் பின் 1926இல் வெளியிடப்பட்டது; அதன் விரிவாக்கப்பட்ட பதிப்பு 1956இல் வெளியிடப்பட்டது; பின்னர் மீண்டும் அத்தொகுதி 1973இல் வெளியிடப்பட்டது. அவரது எழுத்துக்களின் முழுத் தொகுப்பு இனோவ் மிகியோ (Inoue Mikio) என்பவரால் 1972இல் வெளியிடப்பட்டது; இதில், ‘பெரிய வானம்’ தொகுப்பில் இடம்பெற்றது போக அவரது ஆரம்பக் கால 17 அசைகள் கொண்ட ஹைக்கூக்களும், கட்டுரைகளும், 550 கடிதங்களும் இடம்பெற்றன.
ஒஸாகி ஹொசாயின் முழுத்தொகுப்பிலிருந்து தேர்தெடுக்கப்பட்ட ஹைக்கூகளும், ஆறு கட்டுரைகளும் கொண்ட ஹைக்கூ மற்றும் உரைநடைப் புத்தகம், ‘பெரிய வானத்தின் கீழ் நான் தொப்பி அணியவில்லை’ எனும் பெயரில் 1993இல் ஹிரோகி சேட்டோ (Hiroaki Sato) என்ற மொழிபெயர்ப்பாளரால் ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு ஆக்கம் செய்யப்பட்டு வெளியானது.
******
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு
நந்தாகுமாரன்
கோவையில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது பெங்களூரில் கணினித் துறையில் தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராகப் பணிபுரிகிறார். இலக்கியத்திலும், ஓவியத்திலும், ஒளிப்படத்திலும் ஆர்வமுள்ள இவர், பிரதானமாகக் கவிதைகளும் அவ்வப்போது சிறுகதைகளும், கட்டுரைகளும், மொழிபெயர்ப்புகளும், பயணப் புனைவுகளும் எழுதுகிறார். இவரின் முதல் கவிதைத் தொகுதி, ‘மைனஸ் ஒன்’, உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2012இல் வெளியானது. இவரின் இரண்டாம் கவிதைத் தொகுதி, ‘பாழ் வட்டம்’, காலச்சுவடு பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2021இல் வெளியானது. இவரின் ஆதிச் சிறுகதைத் தொகுதி, ‘நான் அல்லது நான்’, அமேசான் கிண்டில் மின்னூலாக ஃபெப்ருவரி 2019இல் வெளியானது. ‘கலக லகரி: பெருந்தேவியின் எதிர்-கவிதைகளை முன்வைத்துச் சில எதிர்வினைகள்’ எனும் ரசனை நூல் அமேசான் கிண்டில் மின்னூலாக ஏப்ரல் 2020இல் வெளியானது. இவரின் மூன்றாம் கவிதைத் தொகுதி, ‘வெறுமை ததும்பும் கோப்பை – தாந்த்ரீகக் கவிதைகள்: பாகம் – ஒன்று’, தமிழ்வெளி பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2023இல் வெளியானது.
*******