
பெயராகும் ரிங்டோன்
பெயராகும் ரிங்டோன்
ஒளிந்துகொண்டிருக்கும் அலைபேசி
எங்கிருந்தோ ரீங்கரிக்கிறது.
வீட்டிலிருந்தா.…? உதவிகேட்கும் குரலா…?
ஒன்றாகப் படித்தவனா…?
அல்லது சேமிக்காமல் விட்ட தூரத்து உறவினரா…?
ஒரேயொரு பெயர் சொல்லி ஒருவன் மூன்றுபேரை
அழைத்துக்கொண்டிருந்தான் வாரச் சந்தையில்.
வயதுகளை மாறி அடுக்கும் இலக்கங்கள்
வெவ்வேறு ஒளியாண்டுகளில் தனித்திருக்கின்றன.
நானும் அவ்வப்போது எல்லா எண்களையும்
ஒரே பெயரில் சேமித்து வைக்கிறேன்
இருவர் மட்டுமே எஞ்சியிருக்கப் போகும் நாளுக்காக.
இரண்டாம் முறையாக விளிக்கிறது அலைபேசி
காசோலையைக் கடனாக வரையும் மேலாளரோ…?
அவர்தான் என்றால் ஐந்து ரிங்குகளிலும்
அவர் மனைவியென்றால்
இரண்டு ரிங்குகளிலும் எடுத்தாக வேண்டும்.
பதைபதைப்பின் இருட்டைக் கண்டு
நகைக்கிறது செவ்வக நிலா.
நினைக்கும் உருவத்தைக் காட்டும் கண்ணாடியாயின
காணொளி அழைப்புகள்
எல்லைகளைத் திரைவிலக்கி உட்புக முயலும் தூர உடல்கள்
இதோ இதோ என அண்மித்து
ஓடத்தை ஏமாற்றுகிறது எதிர்கரை
ஒருவேளை சம்பளம் வாங்க நினைவூட்ட
சேவை மையத்திருந்து அழைக்கின்றனரா,
புதிய எண்ணிலிருந்து கைதவறி அழைக்கும்
பழைய காதலியா
அல்லது
என்னைப்போலவே அழைப்பொலி வைத்திருக்கும்
வேறொரு நபரின் உலகமோ என்னமோ….
அழைப்பது யாராயினும் கனவைக் கலைப்பது
விவால்டியின் வயலின்கள்தான்
தந்திகளில் நடந்துசெல்லும் பருவங்களின் சாகசங்களை
பதிவுக்குரலால் அலைக்கழிக்கும் திசைக்கொன்றாக.
அழைப்பவரின் பெயரையே
தன் தலையெழுத்தாய் காட்டும் ஒளிர்திரை
முன்பே ஆருடமாய் சொல்லிவிடுகிறது
தோராயமாக சில நிமித்தங்களையும்,
நபருக்கேற்ற குறிப்புச் சொற்களையும்.
செவிக்குப் புரிந்தும் பார்வைக்குப் புரியாமல்
அலைபேசி இன்னும் விடாமல் ஒலிக்கிறது
அனைவராலும் இடப்பட்ட புதிய பெயராக
உண்கையில், உறங்குகையில், கடைத்தெருவில்
எனக்குள் எனக்குள்
ஒலித்தபடி இருக்கிறது
விரைந்து நானும் கண்டறிந்தாக வேண்டும்
எவ்வாறேனும் தேடி அடைந்தாக வேண்டும்
என்னோடு சேர்த்து இத்தனை பேரையும்
எவ்விடத்தில் கைவிட்டுச் சென்றேன் என்பதை.
***********