இணைய இதழ்இணைய இதழ் 91கவிதைகள்

ப்ரியா ஜெய்குமார் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

எளிதினும் எளிது

போராட்டக்காரர்களை ஒடுக்க
நீங்கள் அவர்களின் செவிப்பறைகளைத் தாக்கக் கூடாது
அதனால் பயனேதுமில்லை
அவர்களின் வயிற்றில் அடித்தால் போதாது
வாயிலும் அடிக்கலாம்
அப்போதுதான் குரல் எழும்பாது
அவர்கள் மூளையை மழுங்கச் செய்யும்
நச்சு புகைக்குண்டுகளை வீசலாம்
அப்போதுதான்
புரட்சிகரமான சிந்தனைகள் எழாது
கைகளை முடமாக்கினால்
முஷ்டி புஜங்கள் வான் நோக்கி உயராது
உங்கள் ராஜபாட்டையில்
குறுக்கிடும் இடையூறுகளைச்
சகித்துக்கொள்ள
இன்னும் எளிதான வழி
ஒன்று உள்ளது
உங்கள் கண்களையும்
காதுகளையும் மூடிவிடுங்கள்
உங்கள் இதயத்தைப் போல.

*****

ஈகை மகாத்மியம்

கொடுப்பது மனத்துக்குச்
சந்தோஷமான காரியம்
ஒரு சிறு உதவியைச் செய்தாலும்
அவ்வளவு நிறைவாக இருக்கிறது
இன்னும் இன்னும்
உதவிகள் செய்ய மனம்
விரும்பவும் செய்கிறது
ஏனெனில் ஈகை அறம்
கொடுப்பவர்கள்தான் எப்போதும்
உயர்வானவர்கள்
வள்ளல்களுக்கும் கொடுப்பதில்
உள்ள இன்பம் தெரியும்
அதனால் அவர்கள் பெறுவதை
ஒருபோதும் விரும்புவதில்லை
நினைத்துப் பாருங்கள்
மன்னன் குளிரில் நடுங்கும்போது
ஒரு மயில் அவனுக்குச்
சால்வையைப் போர்த்தியிருந்தால்
என்ன நடந்திருக்கும்?
மன்னன் சால்வையை
அதன் முகத்தில் விசிறியெறிந்திருப்பான்
மன்னர்மன்னன்களுக்குத் தெரியும்
கொடுப்பவனே உயர்வானவன்
ஏனெனில் ஈகை அறம்
ஏற்பது இகழ்ச்சி.

*****

விரிசல்

அறிமுகமற்றவரின் புன்னகையை
எதிர்கொள்ளும்போது
அது யாருக்காகவோ
என்ற குழப்பங்கள்
எனக்கு ஏற்படுவதில்லை
ஓர் அந்நியரின் கையசைப்பு
என் பின்னால் இருப்பவர்களுக்கானது
என்ற ஐயங்கள்
எனக்கு எழுவதில்லை
மற்றவர்கள் என்ன நினைக்கக் கூடும்
என்ற வெட்கமின்றி
அந்த சின்னச் சின்ன அன்பினையும்
எனக்கானதாக ஏந்திக்கொள்கிறேன்
நன்றியோடு ஒரு மலர்ச்சியை
அவர்களுக்காகப் பரிசளித்துவிடுகிறேன்
நன்கு பரிச்சயமான
நீண்ட நாள் பழகிய
அன்பு ஒன்று
பாராதது போல
நடந்துகொள்ளும்போதுதான்
துண்டிக்கப்பட்ட
பல்லியின் வாலாகச்
செய்வதறியாது
பரிதவிக்கிறது மனம்.

*****

கலப்படம்

சமீபகாலமாகக் கண்ணீரைப்
பற்றிய சந்தேகம்
வலுக்கத்தொடங்கிவிட்டது
கண்ணீரைப் பரிசோதிக்கும் நிபுணர்கள்
அதன் உண்மைத்தன்மை
குறித்துக் கவலை தெரிவிக்கிறார்கள்
சிலவற்றில் துக்கத்தின் அடர்த்தி
குறைவாக இருப்பதாகவும்
சிலவற்றில் போலி அன்பு கலந்திருப்பதாகவும்
இன்னும் சிலவற்றில்
அரசியல் நெடி இருப்பதாகவும்
பல்வேறு தரவுகளைத் தருகிறார்கள்
கண்ணீரின் அளவு குறித்தும்
சர்ச்சை இருக்கிறது
சில கண்ணீர் மிகையாக
இருப்பதாக அலசப்படுகிறது
சில கண்ணீருக்குச் சட்டத்தில்
இடமில்லாமல் போகும்போது
விரசமாகிவிடுகிறது
பொதுவில் கண்ணீர்விட வராதவர்கள்
குற்றவாளிகளுக்குச் சமமானவர்கள்
பொதுவில் கண்ணீர் கசிபவர்கள்
மீம் க்ரியேட்டர்கள்
கண்ணீர் கலப்படமானதில்
ஆச்சரியம் என்ன இருக்கிறது?
குடிக்கும் நீரில்
மலம் கலந்திருப்பதை உறுதி செய்யவில்லையா?

*******

jaikumarpriyaa@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button