சமச்சீர் பயணம்
சட்டை போன்ற ஒன்றை
சட்டையென அணிந்திருக்கிறார்
துண்டு போன்ற ஒன்றை
துண்டெனப் போட்டிருக்கிறார்
முழுக்கால் சட்டை ஒன்றையும்
அப்படியே உடுத்தியிருக்கிறார்
அவரது அழுக்குகள் குறித்து
உங்கள் குரல்வளையில்
நெளியும் வார்த்தைகளை
அங்கேயே அடக்கம் செய்துவிடவும்
பட்டுவிடாமல்
ஒதுங்கிக்கொள்ளும் நீங்கள்
நெரிசல்மிகு நகரப் பேருந்தின் குலுங்கலில்
தகிக்கும் வெக்கையில்
சிலையென உறைந்து நிற்பதற்கு
முயற்சி செய்யலாம்
வேறு ஒன்றும் முடியாது
அவரிடமும் இருக்கிறது
பேருந்துக் கட்டணமான
இருபது ரூபாய்
உங்களிடம் இருப்பதைவிடவும்
அதிக சலவைத்தன்மையுடன்.
*****
பறவைகளுக்கும் அறிவிப்போம்
நீங்கள் நடத்தவிருக்கும் விழாவிற்கு
வீடு வீடாய் அழைப்பிதழ் வைத்து
அழைக்கிறீர்கள்
ஒலி ஔி அமைப்பு
பனிப்பொழிவுக்கு பயந்து மேற்கூரை
பத்தடிக்கு ஒரு பதாகையென
எல்லாவற்றையும்
பார்த்து பார்த்து செய்திருக்கிறீர்கள்
வந்தவர்களை உபசரிப்பதில்
ஒரு குறையும் இருக்கக்கூடாதென
உப குழுக்களுக்கு உத்தரவு இட்டிருக்கிறீர்கள்
விழா பற்றிய தகவல் தெரியாத நபர்களே
நகரத்தில் இருக்கக்கூடாதென
வாகன விளம்பரம் வேறு
எல்லாம் சரிதான்
உங்கள் நிகழ்விடத்துக்கு
மிக அருகில்
ஒரு பெரிய மரமும்
அதில் நிறைய பறவைகளும் இருக்கிறதென்பதை அறிவீர்களா?
கூடு திரும்பும் அவை
திடுமென
ஒலிபெருக்கிகள்
அதிர முழங்கும்
மங்கள இசையில் மருண்டு
மாற்று மரம் தேடி அலைக்கழிவதைப் பற்றிக்
கவலையேதுமின்றி
நீங்கள் களித்திருக்கிறீர்கள்
’உயிர்களிடத்தில் அன்பு வேணும்’
தலைப்பிலான
சொற்பொழிவில் லயித்தவாறு
அடுத்த முறை முடிந்தால்
அந்தப் பறவைகளுக்கும் மரங்களுக்கும்
அழைப்பு விடுங்கள்
அல்லது
அறிவிப்பாவது செய்யுங்கள்.
*****
பூவின் நிழலில் காயும் மலர்கள்
நாளைக்கான மலரைப்
பூக்க வேண்டுமே என்கிற
எந்தப் பதற்றமும்
அந்தச் செடியிடம் தெரியவில்லை
வாசனை போய்விடுமென்ற
மகரந்தத் துகளளவு
கவலையுமின்றி
முடிந்த மட்டும்
இதழ்களை விரித்திருக்கின்றன பூக்கள்
செடி போல் சிரித்திருக்க
நாள்தோறும்
பூக்கவும் உதிர்க்கவும்
தெரிந்திருக்க வேண்டும் போல
நேற்றைய பூவுக்கும்
இன்றைய பூவுக்கும்
ஒரே அளவிலான நிழல்தானிருக்கிறது
இன்றைய மலர்தல் கூட
நேற்று உதிர்ந்தவைகளை
நிழலில் காய வைப்பதற்குத்தான் நிகழ்கிறது போல
மலர்களின் நிழலில் காய்வது
பூக்களுக்குத்தான் கொடுப்பனையாகிறது.
********