இணைய இதழ்இணைய இதழ் 92சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 3

சிறார் தொடர் | வாசகசாலை

மாறுவேடப் பயணம்

’’இந்த நேரத்தில் என்ன அலங்காரம் வேண்டியிருக்கிறது?’’

முகம் பார்க்கும் ஆறடி கண்ணாடி எதிரே நின்றிருந்த சிங்கமுகனின் பின்னால் கிளியோமித்ரா குரல் கேட்டது.

திரும்பிய சிங்கமுகன், ‘’இது அலங்காரம் இல்லை கிளியோ… மாறுவேடம்’’ என்றார்.

‘’அடடே… இந்தப் பிச்சைக்காரர் வேடம் உங்களுக்குப் பிரமாதமாக இருக்கிறது’’ என்றார் கிளியோமித்ரா.

‘’என்னது பிச்சைக்காரனா?’’ என்று உறுமிய சிங்கமுகன், ‘’சரியாகப் பார்… இது திருடன் வேடம்’’ என்றார்.

‘’திருடன் வேடமா…? திருடர்களுக்கு என்று தனியாக வேடம் இருக்கிறதா என்ன?’’ என்று கேலியாகக் கேட்டார் மித்ரா.

‘’ஆமாம்… இதோ பார் கன்னத்தில் வெட்டுக்காயம் ஒப்பனை… அப்புறம் முரட்டு ஒட்டு மீசை… முகமெல்லாம் கறுப்பு மசி பூசியிருக்கிறேன்’’

‘’ஓஹோ… இவையெல்லாம் திருடர்களுக்கான அடையாளங்களா? நமது வீரர்களுக்குக் கூடத்தான் போரினால் முகம் மற்றும் உடலில் காயங்களும் தழும்புகளும் உள்ளன. எனது தாத்தா கூடத்தான் முரட்டு மீசை வைத்திருப்பார். அவ்வளவு ஏன் உங்கள் தந்தையான மறைந்த என் மாமனார் வீரசிங்கமே கறுப்பு நிறம்தான். நீங்கள்தான் உங்கள் தாயைப் போல சிவப்பாக உள்ளீர்கள். எனில், அவர்கள் எல்லாம் திருடர்களா?’’ என்று கேட்டார் கிளியோ.

‘’அ… அது… வந்து… இதோ பார் முகமூடி… வெளியே சென்றதும் இதை அணிந்துகொள்வேன்’’ என்று சமாளித்தார் சிங்கமுகன்.

‘’அப்படியானால் முகத்தை மறைத்து ஒரு துணியைச் சுற்றிக்கொண்டாலே போதுமே…’’

‘’குழப்பாதே கிளியோ… ஒரு முக்கியமான விஷயத்துக்காக மாறுவேடம் அணிந்து செல்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

‘’என்ன விஷயமாக?’’ என்று கேட்டார் கிளியோமித்ரா.

‘’காலையில் வந்த உரைகல் படித்தாயல்லவா? சுரங்கத்தில் கொள்ளை போன விஷயம். அந்தக் கொள்ளையர்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைக்குமா என்று நோட்டமிடச் செல்கிறேன்’’ என்றார் சிங்கமுகன்.

‘’தனியாகவா செல்கிறீர்கள்? தளபதி கம்பீரனை அழைத்துச் செல்லலாமே…’’

‘’உரைகல்லில் போட்டிருந்த செய்தியை முழுமையாகப் படித்தாயா இல்லையா? கம்பீரனுமே இந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கலாமென்று எழுதியிருக்கிறது’’

‘’அதை நம்பி கம்பீரனைச் சந்தேகப்படுகிறீர்களா?’’ என்ற கிளியோமித்ரா குரலில் கோபம் எட்டிப் பார்த்தது.

‘’கம்பீரனைப் பற்றி சொன்னால் மட்டும் உனக்கு கோபம் வந்துவிடுமே… தன்னைத் தானே சந்தேகப்படு என்பதுதான் ராஜாங்கத்தின் முதல் விதி’’ என்றார் சிங்கமுகன்.

கிளியோமித்ராவின் நாட்டைச் சேர்ந்தவன்தான் கம்பீரன். ஒருமுறை அரிமாபுரியில் இருந்து தனது நாட்டுக்குப் பயணம் சென்றபோது காட்டுப் பாதையில் சில விரோதிகள் வழிமறித்து கிளியோமித்ராவைக் கொல்ல முயன்றார்கள். பாதுகாப்புக்கு வந்த அரிமாபுரி வீரர்களை எல்லாம் விரோதிகள் ஒளிந்திருந்து அம்பு எய்திக் கொன்றுவிட்டார்கள். 

தன் கதையும் முடிந்தது என்று கிளியோமித்ரா நினைத்த நொடியில் எங்கிருந்தோ அம்பு போல வந்த கம்பீரன் விரோதிகளை அடித்து விரட்டி அரசியைக் காப்பாற்றினான். அன்று முதல் அரசியின் மெய்க்காப்பாளன் ஆனான். சில மாதங்களுக்குப் பின்னர் நடந்த போரில் தளபதி பலியாக… சிங்கமுகனிடம் சொல்லி கம்பீரனையே தளபதி ஆக்கினார் கிளியோமித்ரா.

‘’சரி, கம்பீரன் பற்றிய உங்கள் சந்தேகம் பொய் என்று சீக்கிரம் தெரியட்டும். உங்கள் மெய்க்காப்பாளன் சூர்யனை அழைத்துச் செல்லலாமே. அவன் எங்கே?’’ என்று கேட்டார் கிளியோமித்ரா.

‘’இரவில் சூரியன் வராது பெண்ணே’’ என்றார் சிங்கமுகன்.

‘’இந்த சந்திரன் போதும் மகாராணி’’ என்றபடி உள்ளே நுழைந்தார் நிலாமதி சந்திரன்.

அவர் முகத்திலும் வெட்டுகாயம், முரட்டு மீசை வேடம்.

‘‘மியாவ்… மியாவ்…’’ என்றபடி அவரது கால்களுக்கிடையே நுழைந்து வந்தது அந்தப் பூனை. அதன் பெயர் வெற்றி.

உடனே மந்திரி அலறி தடுமாறி பிறகு சமாளித்து நின்றார்.

‘‘மியாவ்’’ (க்கும்.. இந்த வீரரைதான் ராஜா துணைக்குக் கூட்டிட்டுப் போறாரா? – வெற்றி)

‘’ச்சீ… இதை யார் உள்ளே விட்டது? முக்கியமான காரியத்துக்குப் போகும்போது பூனை குறுக்கே வந்தால் உருப்படுமா? சகுனமே சரியில்லையே’’ என்று வெறுப்புடன் சொன்னார் மந்திரி.

‘’மன்னிக்கவும் மந்திரியாரே… வாயில்லாத நமது கணுக்கால் உயரமே இருக்கும் ஒரு ஜீவன் குறுக்கிட்டா செயல் பாதிக்கும்? அப்படியென்றால் பிறவிகளில் உயர்ந்த பிறவி எனச் சொல்லிக்கொள்ளும் மனிதன் அவ்வளவு பலவீனமானவனா?’’ என்று கேட்டவாறு உள்ளே நுழைந்தாள் செவ்வந்தி. கிளியோமித்ராவின் முதன்மை பணிப்பெண்.

‘’மகாராஜா… ஒரு சின்னப் பெண்… அதுவும் பணிப்பெண் இவ்வளவு அதிகப்பிரசங்கியாக இருப்பது சரியில்லை. எல்லாம் மகாராணியார் கொடுக்கும் இடம்’’ என்று முணுமுணுத்தார் மந்திரி.

‘’அட கோபப்படாதீர் மந்திரியாரே… வயதில் சிறியவளாக இருந்தாலும் அவள் சொல்லும் விஷயம் சிந்திக்க வைக்கிறதல்லவா…? தவிர, செவ்வந்தியை நாங்கள் என்றுமே பணிப்பெண்ணாக நினைப்பதில்லை. நம் நாட்டுக்காக எதிரிகளுடன் போரிட்டு இறந்த ஒரு வீரரின் மகள்’’ என்றார் சிங்கமுகன்.

‘’க்கும்… போரில் நூற்றுக்கணக்கான வீரர்களும்தான் உயிரை விட்டார்கள்’’ என்று முணுமுணுத்துக்கொண்டார் மந்திரி.

‘’அவர்களுக்கு எல்லாம் ஆண் வாரிசும் இருந்தன. என் அப்பாவுக்கு அப்படியல்ல. அவருக்குப் பின் குடும்பத்தைக் காக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. அதனால் எனக்கு இந்தப் பணி கொடுக்கப்பட்டது. அரசே… கிளம்பும் முன்பு இந்த பானத்தைக் குடியுங்கள்’’ என்றாள் செவ்வந்தி.

அவள் கையில் ஏந்தியிருந்த தட்டில் இருந்த கோப்பையை எடுத்துக் குடித்த சிங்கமுகன், ‘’சரி… சரி… கிளம்புவோம்’’ என்றபடி முன்னால் செல்ல, பின்தொடர்ந்தார் நிலாமதி சந்திரன்.

அவர்கள் சென்றதும்…

‘’செவ்வந்தி, அரசர் தனியாகச் செல்வது… அதுவும் இந்த பயங்கொள்ளி மந்திரியுடன் செல்வது பாதுகாப்பானது இல்லையே’’ என்றார் கிளியோமித்ரா.

‘’மகாராணி… நீங்கள் பதற வேண்டாம். இன்று மாலை அரசர் சூர்யனை அழைத்து, ‘உனக்கு இன்று ஓய்வு. வீட்டுக்குச் செல்’ என்று சொல்லும்போதே எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. அதனால், சூர்யனை வெளியேயே மடக்கி இரவு வரும்படி சொல்லியிருந்தேன். இவர்கள் மட்டும்தான் மாறுவேடம் போடுவார்களா என்ன? சூர்யன் ஏற்கனவே வெளியூர் வியாபாரி போல மாறுவேடம் அணிந்து, அரண்மனைக்குப் பக்கத்தில் இருக்கும் சத்திரத்தில் காத்திருக்கிறார். நாம் ஒரு சமிக்ஞை கொடுத்தால் போதும். இவர்களைப் பின்தொடர்வார்’’ என்றாள் செவ்வந்தி.

‘’சபாஷ் செவ்வந்தி… இதற்குத்தான் நீ எப்போதும் என்னுடன் இருக்க வேண்டும் என்பது’’ என்றார் ராணி.

புன்னகையுடன் பூனையிடம் குனிந்த செவ்வந்தி, அதன் கழுத்தில் இருந்த மணிக்குள் ஓர் ஓலையை மடக்கிச் சொருகினாள். ‘’வெற்றி… அக்கம்பக்கம் வேடிக்கைப் பார்க்காமல் எந்த வீட்டிலாவது மீன்குழம்பு வாசனை வந்து திசை மாறாமல் நேராக சூர்யனிடம் போ’’ என்றாள்.

‘’மியாவ்… மியாவ்’’ (வாயில்லாத ஜீவன்கிட்ட கால நேரம் இல்லாம வேலை வாங்கறதே உனக்கு வேலையாப் போச்சு) என்றபடி புலியாகப் பாய்ந்து சென்றது வெற்றி.

*****

அரண்மனைக்கு அருகே இருந்த சத்திரத்தில் வியாபாரி போல மாறுவேடத்தில் இருந்தான் சூர்யன். அவனது சிந்தனை எல்லாம் மாலையில் உத்தமனுடன் உரையாடியது, சிறுவன் குழலன் வந்ததும் தன்னைக் கழற்றிவிட்டுச் சென்றது போன்ற விஷயத்திலே இருந்தது.

‘உத்தமன் அற்புதமான நண்பன். நாட்டின் மீதும் மக்கள் மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன். தனக்கு எதற்கு ஊர் வம்பு என்று ஒதுங்கி இல்லாமல் உரைகல் பத்திரிகை மூலம் பல தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவன் அநாவசியமாக யார் மீதும் வெறுப்போ, வீண் பழியோ சுமத்த மாட்டான். அப்படிப்பட்டவன் தளபதி கம்பீரன் பற்றி எழுதுகிறான் என்றால் அதில் கொஞ்சமேனும் உண்மை இருக்கும். எனில், தங்கச் சுரங்கத்தில் அவ்வப்போது நடக்கும் கொள்ளையில் தளபதிக்குத் தொடர்பு இருக்கிறதா?’

‘’மியாவ்…’’ என்று குரல் வர, சட்டென சிந்தனை களைந்து திரும்பிப் பார்த்தான்.

சாளரம் வழியே உள்ளே நுழைந்தது வெற்றி. வேகமாக அதனை நெருங்கிய சூர்யன், ‘’என்ன வெற்றி… செவ்வந்தி செய்தி கொடுத்திருக்கிறாளா?’’ என்று கேட்டதும் கழுத்தை உயர்த்தியது.

சூர்யன் அதன் கழுத்து மணிக்குள் கையை விட்டு அந்த ஓலையை வெளியே எடுத்தான். பிரித்துப் பார்த்தான்.

‘மாறுவேடத்தில் அரசரும் மந்திரியும்… தொடரவும் – செ’ என்று எழுதியிருந்தது.

‘’அவ்வளவுதானா? வேறு ஓலை’’ என்று கேட்ட சூர்யன் குரலில் கொஞ்சம் ஏமாற்றம்.

வெற்றியைக் கையில் தூக்கி மீண்டும் மணிக்குள் விரலை விட்டு அப்படியும் இப்படியுமாகத் துழாவினான்.

‘’மியாவ்… மியாவ்…’’ என்று தலையை உதறியது வெற்றி. (அவ்வளவுதான் விட்டுத் தொலை. காதல் ஓலை எதிர்பார்த்தாயாக்கும்? முதலில் கடைமையைச் செய்யப்பா மெய்க்காப்பாளா – வெற்றி)

‘’சரி… சரி…’’ என்று வெற்றியைக் கீழே இறக்கிவிட்டான் சூர்யன். அவனுக்கு செவ்வந்தி மீது தனிப் பிரியம். செவ்வந்திக்கும் அவன் மீது காதல். ஆனால், இருவரும் அதை வெளிப்படுத்திக்கொண்டதே இல்லை.

வெற்றி மீண்டும் சாளரம் வழியே வெளியேறியது. சூர்யன் வாசல் வழியே வெளியே வந்தான். மூலையில் இருந்த தனது குதிரையை நெருங்கினான்.

‘’சூறாவளி… நமக்கு வேலை வந்துவிட்டது. இன்னும் சற்று நேரத்தில் அரசரும் மந்திரியாரும் இந்த வழியே மாறுவேடத்தில் செல்வார்கள். அவர்களை ரகசியமாகப் பின்தொடர வேண்டும்’’ என்றான்.

‘’ஙி… ஙீ… ஙீ…’’ என்றது சூறாவளி. (ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தால் விளங்குமா?)

‘’அதனால்தான் நாம் பின்தொடரப் போகிறோம். அரசர் ஏடாகூடமாக ஏதாவது செய்து ஆபத்தில் சிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’’ என்றான் சூர்யன்.

‘’ஙி… ஙீ… ங்… ங… ஙி’’

‘’அடேய் சூறாவளி… நீ என்ன கேட்கிறாய் என்பது புரிகிறது. அரசர் வழக்கமாக வரும், ‘தென்றல்’ புரவியில்தானே வருவார் என்றுதானே கேட்கிறாய்?’’

‘’ங் ங ஙி’’

‘’உனக்கு தென்றல் மீது ஒரு கண் என்று தெரியும். ஆனால், அது பற்றி யோசிக்கும் நேரமா இது? இப்போது கடமை முக்கியமடா’’ என்றான் சூர்யன்.

‘’ங் ங் ஙி’’ என்று தலையை ஒரு வெட்டு வெட்டி அவனைப் பார்த்தது சூறாவளி.

‘’க்கும்… சரி… சரி… நானும் செவ்வந்தியிடம் இருந்து இந்நேரத்துக்கு காதல் ஓலை எதிர்பார்த்தது தவறுதான் மன்னித்துவிடு. இப்போது கடமையைச் செய்வோமா?’’

‘’ங்ஙீ.. ஙீ’’ (சரி… ஏறிக்க)

சூறாவளி மீது சூர்யன் ஏறிக்கொள்ள… தொலைவில் இரண்டு புரவிகளில் இருவர் வருவது தெரிந்தது.

‘’சூறா… அதோ வந்துவிட்டார்கள்’’ என்று ரகசியமாகச் சொன்னான் சூர்யன்.

சூறாவளி சட்டென சத்திரத்தின் இருட்டில் பதுங்கியது. அந்த இரண்டு புரவிகளும் அந்த இடத்தைக் கடந்து சென்றதும் நகர்ந்து வந்தது.

‘’ம்… இப்படியே பின்தொடர்வோம்’’ என்றான் சூர்யன்.

******

‘’சொன்னது நினைவு இருக்கிறதா?’’ என்று மெதுவான குரலில் கேட்டான் கம்பீரன்.

ஆற்றங்கரையை ஒட்டிய மரங்கள் அடர்ந்த பகுதியில் தனது புரவியில் அமர்ந்திருந்தான் கம்பீரன்.

அவனுக்கு எதிரே நான்கைந்து பேர் தங்கள் புரவியில் இருந்தார்கள். அவர்களில் காலையில் கம்பீரன் மாளிகையில் பார்த்த சுகந்தனும் ஒருவன்.

‘’மாறுவேடத்தில் வருகிற அரசரையும் மந்திரியையும் தாக்க வேண்டும். அந்த நேரத்தில் நீங்கள் பாய்ந்து வந்து அவர்களைக் காப்பாற்றுவீர்கள். நாங்கள் ஓடிவிட வேண்டும் அவ்வளவுதானே?’’ என்றான் சுகந்தன்.

‘’ஆமாம்…’’

‘’பல ஆண்டுகளுக்கு முன்பு அந்த ராணி கிளியோமித்ரா நம்பிக்கையைப் பெற பயன்படுத்திய அதே உத்தி. வேறு யோசித்து இருக்கலாம்’’ என்று மெல்லச் சிரித்தான் சுகந்தன்.

‘’அதிகப்பிரசங்கி… எனக்கு நீ யோசனையைச் சொல்லாதே. நான் சொல்வதை மட்டும் செய்’’ என்ற கம்பீரன் குரலில் சீற்றம்.

‘’ம… மன்னிக்கவும்’’ என்றான் சுகந்தன்.

‘’மகாராணியை மடக்கியது போல இது அவ்வளவு சுலபம் இல்லை. கோமாளியாக இருந்தாலும் சிங்கமுகனும் வாள் பயிற்சி பெற்றவர் என்பதை நினைவில் வைத்துக்கொள்’’ என்றான் கம்பீரன்.

‘’அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். போனமுறை சுரங்கக் கொள்ளையர்களைப் பிடிக்கும் முயற்சி என்கிற நாடகத்தில் எங்களில் ஒருவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். கேட்டதற்கு வாள் வீச்சு தவறாகப் பாய்ந்துவிட்டது என்றீர்கள். இப்போது அப்படி ஆகக் கூடாது’’ என்ற சுகந்தன் குரலில் ஒரு மிரட்டல் வெளிப்பட்டது.

‘’மடையா… எப்போதோ நடந்தது. திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டு இருக்காதே. வேலையைப் பார்’’ என்ற கம்பீரன், தனது புரவியைத் தட்டினான். அது அங்கிருந்து நகர்ந்தது.

சுகந்தனும் அவனது ஆட்களும் ஆற்றங்கரைப் பள்ளத்தில் இருந்து மேலே இருக்கும் சாலையை நோக்கி தங்கள் புரவிகளைச் செலுத்த ஆரம்பித்தார்கள்.

அதே நேரம்… அந்த மேட்டுச்சாலையின் கோடியில் சிங்கமுகனும் நிலாமதி சந்திரனும் தங்கள் புரவிகளில் வந்து கொண்டிருந்தார்கள்.

(தொடரும்…)

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button