இணைய இதழ்இணைய இதழ் 93சிறார் இலக்கியம்

சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 4

சிறார் தொடர் | வாசகசாலை

நள்ளிரவு நாடகம்

“மன்னா… எனக்கு ஒரு சந்தேகம்… கேட்கலாமா?”

நள்ளிரவு நாழிகையில் மாறுவேடத்தில் புரவியில் பயணித்தவாறு கேட்டார் மந்திரி நிலாமதி சந்திரன்.

“கேளுங்க மந்திரியாரே” என்றார் சிங்கமுகன்.

“சூர்யனை எதற்காக இன்று மாலையே வீட்டுக்கு அனுப்பிவிட்டீர்கள்? அவனும் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்குமே…”

“அவன் இருப்பது எனக்குப் பக்கபலம்தான். ஆனால், ஒரு வகையில் அதுவே என் புகழுக்கு இழுக்காகவும் உள்ளது” என்றார் சிங்கமுகன்.

“புரியவில்லை மன்னா.”

“அவன் மாவீரன் என்றும் என்னைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாக்கிறான் என்றும், அதனால்தான் நான் பயமில்லாமல் வாழ்வதாகவும் நாட்டு மக்களிடையே ஒரு பேச்சுஇருப்பது எனக்கும் தெரியும். இப்போது இந்தச் சுரங்கக் கொள்ளையர் விஷயத்தில் அவனும் உடன் இருந்தால்,  அவர்களைப் பிடித்ததும் நாளை மக்கள் என்ன பேசிக்கொள்வார்கள்?” என்று கேட்டார் சிங்கமுகன்.

“சூர்யன்தான் திருடர்களுடன் சண்டையிட்டுப் பிடித்தான். மன்னர் சும்மாதான் அவனுடன் இருந்தார். அவன் இல்லாவிட்டால் பிடித்திருக்கவே முடியாது…” என்று மந்திரி பாதியில் நிறுத்த…

“சரியாகச் சொன்னீர்… நிச்சயமாக இப்படித்தான் பேசிக்கொள்வார்கள். அதனால்தான் இந்த விஷயத்தில் அவனை விலக்கிவிட்டேன்” என்றார் சிங்கமுகன்.

“அருமையான காரியம் அரசே… உங்களின் வீரத்துக்கு முன்பு அந்தப் பொடியன் ஒன்றுமேயில்லை” என்று புகழ்ந்தவர், “அப்புறம் அரசே… இன்னொரு விஷயம்…” என்று இழுத்தார்.

“சொல்லுங்கள்” என்றார் சிங்கமுகன்.

“இந்த மாதிரி பிரச்சனையைத் தீர்க்க என்னிடம் நிரந்தரமாகவும் ஒரு திட்டம் இருக்கிறது. இது நிச்சயமாக சுயநலம் இல்லை. நாட்டின் நன்மைக்காக. ஆனால், அதற்கு உங்களின் அனுமதி வேண்டும்” என்று இன்னும் இழுத்தார் நிலாமதி சந்திரன்.

“நேரடியாக விஷயத்தைச் சொல்லும் மந்திரி” என்றார் சிங்கமுகன்.

“என்னுடைய மகன் சந்திர நிலாமதியன் அறிவிலும் என்னைப் போல சிறந்தவன், வீரத்திலும் சூர்யன் போல ஆற்றல் மிக்கவன். நான் ஓய்வுபெற்றுக் கொண்டு பேரக்குழந்தைகளோடு இருக்க விரும்புகிறேன். நீங்கள் என் மகனுக்கு மந்திரி பதவியைக் கொடுத்தால்… மந்திரிக்கு மந்திரியாகவும் இருப்பான். மெய்க்காப்பாளனாகவும் இருப்பான்” என்றார்.

“இது பற்றி நீங்கள் முன்பே சொல்லியிருக்கிறீர்கள் அல்லவா?”

“ஆமாம் அரசே…”

“மந்திரியாரே… நாட்டுக்குள் மக்கள் பேசிக்கொள்ளும் இன்னொரு விஷயமும் என் காதுகளுக்கு வந்துள்ளது. அது என்ன தெரியுமா?” என்று கேட்டார் சிங்கமுகன்.

“எ… என்ன அரசே…?”

“உங்கள் தந்தையான மதிநிலவு சந்திரன் அளவுக்கு நீங்கள் மதிநுட்பத்தில் சிறந்தவர் இல்லை என்றும், உங்களுக்கு என் தந்தை மந்திரி பதவி கொடுத்ததே பெரும் பிழை என்றும், அடுத்து உங்கள் மகனுக்கும் கொடுத்தால் இந்த நாடு இன்னும் நாசமாகப் போகும் என்றும்…”

அவசரமாகக் குறுக்கிட்ட மந்திரி, “அரசே… அரசே… நாட்டு மக்கள் பொறாமை பிடித்தவர்கள். ஒருவன் உயரத்தில் இருந்தால் இப்படிப் பேசுவது மனிதர்கள் குணம்தானே?” என்றார்.

“ஏற்கனவே நம் நாட்டின் பல உயர் பதவிகளில் வாரிசுகளின் ஆக்கிரமிப்பே இருக்கிறது. ஜனநாயகப்படி தகுதியானவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த உரைகல்லில் உத்தமன் எழுதி வருகிறான். இந்த நேரத்தில் உங்கள் மகனுக்கு மந்திரி பதவி கொடுத்தால்…”

“அவன் கிடக்கிறான் வெத்துவேட்டுப் பயல். அவனைக் கைது செய்து அந்த உரைகல்லை உடைத்துப் போட்டால்தான் அரசே நம் நாடு உருப்படும்” என்று கோபத்துடன் சொன்னார் நிலாமதி சந்திரன்.

“மந்திரியாரே… அந்த உத்தமன் நம் அரசாங்கத்தை தொடர்ந்து விமர்சிப்பவன்தான். ஆயினும் நேர்மையானவன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாதவன். எனக்குமே அவனது தைரியம் பிடிக்கும். இப்படி ஒருவன் நாட்டில் இருப்பதால்தான் நமக்குப் பல தவறுகள் கவனத்துக்கு வருகின்றன அல்லவா?”

“அ… அது…”

“உதாரணமாக இந்தச் சுரங்கக் கொள்ளை விஷயமே என் கவனத்துக்கு வராமல் மறைக்கப்பட்டது. உரைகல்தானே அதனை உரைத்தது” என்று சிங்கமுகன் சொல்ல, நிலாமதி சந்திரன் தலை கவிழ்ந்தார்.

“என்ன மந்திரி அமைதியாகிவிட்டீர்?”

“ம… மன்னா… திரும்பவும் சொல்கிறேன். இந்த விஷயத்தை உடனடியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர இருந்தேன். கம்பீரன்தான் தடுத்து அதை தானே பார்த்து சரிசெய்வதாகச் சொன்னார்” என்றார்.

“அங்கேதான் எனக்கு சந்தேகம் எழுகிறது. கம்பீரன் என் மனைவியால் சிபாரிசு செய்யப்பட்டு தளபதி ஆனவர். அவர் பதவியில் இருப்பது நாட்டு மக்கள் பலருக்கும் விருப்பம் இல்லை என்பது எனக்கு தெரியும். ஒருவேளை இந்தக் கொள்ளை விஷயத்தில் அவரது பங்களிப்பு இருக்கிறது என்று நிரூபனம் ஆகிவிட்டால் அவரை சிறையில் தள்ளிவிடலாம்” என்றார் சிங்கமுகன்.

“நல்லது அரசே… அப்படி நடந்தால் அந்தப் பதவியை என் மகனுக்கு…”

“திரும்பத் திரும்ப உமது காரியத்திலேயே கண்ணாக இருக்கிறீர். இது விஷயமாகப் பிறகு பேசுவோம். இப்போது வந்த வேலையைக் கவனிப்போம். ஊர் எல்லைக்கு வந்துவிட்டோம். நான் சொன்ன திட்டப்படி ஏற்பாடு செய்தீர்களா?” என்று கேட்டார் சிங்கமுகன்.

“செய்துவிட்டேன் மன்னா…  ஆற்றங்கரையின் அந்தக் கோடியில் ஆள் தயாராக இருக்கிறது. திட்டமிட்டபடி  நடக்கும்” என்றார் நிலாமதி சந்திரன்.

அவர்களுக்குப் பின்னால் சிறிது தொலைவில் மறைமுகமாகப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்த சூர்யன், “சூறாவளி…  இவர்களின் திட்டம் என்னவாக இருக்கும்? ஊரைத் தாண்டி ஆற்றங்கரைக்கு எதற்கு வந்துள்ளார்கள்? இவர்கள் வருகைக்காக அந்தக் கொள்ளையர்கள் காத்திருப்பார்களா என்ன?” என்று மெதுவாகப் பேசினான்.

“ஙி.. ஙி…” என்று மெதுவாகக் குரல் கொடுத்தது சூறாவளி.  அதன் பொருள், ‘எனக்கு என்னப்பா தெரியும்?’

அந்தச் சாலையின் மறுமுனையில் ஒரு மாட்டுவண்டி இவர்களை நோக்கி வர ஆரம்பித்தது. நிலவின் மெல்லிய வெளிச்சத்தில் அந்த வண்டியைக் கவனித்தான் சூர்யன்.

“வெளியூரில் இருந்து வியாபார விஷயமாக வரும் வணிகப் பயணியர் வண்டி போலத் தெரிகிறது. சில சமயம் இப்படி நள்ளிரவு நாழிகையில் வருவதுண்டு. ஆனால், இந்த வண்டி இயல்பாக வருவது போலத் தெரியவில்லையே…” என்றான் சூர்யன்.

“ங… ங்… ஙி” (எனக்கும் சந்தேகமே)

இப்போது அந்த வண்டியை நோக்கி அரசரும் மந்திரியும் வாளை உருவியபடி தங்கள் புரவியில் பாய்ந்து சென்றார்கள். அந்த வண்டியைச் சுற்றி வளைத்தார்கள்.

“ம்… இறங்குங்கள்… இறங்குங்கள்… வண்டியில் உள்ள பொன், பொருள் எல்லாவற்றையும் எடுங்கள்” என்று திருடன் வேடத்தில் இருந்த சிங்கமுகன் உறுமினார்.

வண்டியில் இருந்து இறங்கிய இருவர் கைகளை உயர்த்தியவாறு, “எங்களை விட்டுவிடுங்கள்… எங்களை விட்டு விடுங்கள்” என்றார்கள்.

இங்கே ஒரு மரத்தடியில் சட்டெனப் பதுங்கிய சூர்யன் முகம் மெல்ல புன்னகைக்குச் சென்றது.

“சூறா… அவர்கள் உண்மையான வணிகர்கள் அல்ல. பயத்தில் கத்துவது போல நடிக்கிறார்கள்.”

“ங் ங ஙி ஙூ ஙெ ஙே ஙை” (எதுக்கு இந்த நாடகம்? யாருமே இல்லாத இந்த நள்ளிரவில் யாருக்கு இந்த நாடகப் பானத்தை ஆற்றுகிறார்கள்?)

“இது அரசரின் திட்டமாக இருக்கும். என்ன திட்டம் என்பதும் எனக்கு ஓரளவுக்குப் புரிந்துவிட்டது. அதாவது இவர்கள் திருடர்கள் போல நடித்து அவர்களிடம் கொள்ளையடிக்கப் போகிறார்கள். இதன்மூலம் நாட்டுக்குள் இன்னொரு திருட்டு கும்பல் இருக்கிறது என்கிற செய்தி அந்தக் கொள்ளையர்கள் கவனத்துக்குச் செல்லும். அவர்கள் இந்த இருவரை நாளையோ மறுநாளோ இதேபோல இரவில் தேடி வருவார்கள். அப்போது மடக்கிவிடலாம் என்பது அரசரின் திட்டம்” என்றான் சூர்யன்.

“ஙு ங் ஙி ஙொ ங் ஙி” (உள்ளங்கையில் வெண்ணெய் வைத்துக்கொண்டு கரையட்டும்னு பார்க்கிறார். இப்படியான அபத்த யோசனை நம் அரசருக்கு மட்டுமே வரும்)

சூர்யன் சட்டென சூறாவளியின் தலையில் தட்டினான். “அடேய்… அரசரை அப்படி எல்லாம் மதிப்புக் குறைவாகப் பேசாதே. என்ன இருந்தாலும் நமக்கு சோறு போடுபவர்.”

“ஙி ஙி ஙு ஙூ” (நான் கொள்ளு தின்பவன்)

“அதையும் அவர்தானடா அளிக்கிறார். கிண்டலை விட்டு என்ன நடக்கிறது என்று கவனி” என்று அதட்டினான் சூர்யன்.

அங்கே வண்டியில் இருந்து அவர்கள் மூட்டைகளை எடுத்துக் கொடுக்க, அரசரும் மந்திரியும் வாங்கிக்கொண்டார்கள்.

அதே நொடியில் ஆற்றங்கரைப் பள்ளத்தில் இருந்து ஆறேழு புரவிகள் மேட்டுச்சாலைக்கு வந்தன. அதில் அமர்ந்திருந்தவர்கள் கையில் வாளுடன் பாய்ந்துசென்றார்கள்.

மரத்தின் பின்னால் பதுங்கியபடி பார்த்துக் கொண்டிருந்த சூர்யன் திகைத்தான். “சூறா… இதென்ன கூத்து? இவர்கள் நிஜக் கொள்ளையர்கள் போலத் தெரிகிறதே…”

“ஙெ ஙே ஙி ஙீ” (அதுக்குள்ளே அவங்க கவனத்துக்குப் போய்டுச்சா?)

“ம்ஹூம்… ஏதோ விபரீதம் நடக்கப் போகிறது. நாம் தயாராக இருக்க வேண்டும் சூறா” என்று பரபரப்பானான் சூர்யன்.

சுகந்தன் தலைமையிலான அந்தக் கொள்ளையர்கள் அரசரை நோக்கிப் பாய்ந்து சென்றார்கள். இதைக் கண்ட மந்திரி அதிர்ந்தார். “அ… அரசே… கொ… கொள்ளையர்கள்” என்று நடுங்கினார்.

நிமிர்ந்து பார்த்த சிங்கமுகன், “பழம் நழுவிப் பாலில் விழுகிறது. நம் திட்டம் இவ்வளவு சுலபமாக முடியும் என்று எதிர்பார்க்கவில்லை. வரட்டும் பார்த்துவிடுவோம்” என்றபடி வாளை உயர்த்தினார்.

“அ… அரசே… அவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்” என்ற மந்திரி குரல் மேலும் நடுங்கியது.

“வரட்டுமய்யா ஒரு கை பார்க்கிறேன்” என்றார் சிங்கமுகன். 

இந்தப் பக்கம் சூர்யன், ”கண்ணா சூறாவளி… இனி தாமதிக்கக் கூடாது. அவர்கள் அரசரைத் தொடும் முன்பு நாம் அங்கே இருக்க வேண்டும்” என்று அதன் முதுகில் கால்களால் எத்தினான்.

“ஙீ… ஙீ… ஙீ…” (அதான் போறேனில்லே… காலாலே உதைக்காதப்பா) என்றபடி புயலாகப் பாய்ந்துசென்றது சூறாவளி.

அரசரையும் மந்திரியையும் சுற்றிவளைத்த சுகந்தன் குழு, மின்னல் வேகத்தில் அவர்களை நோக்கி வருகிற அந்தப் புரவியைப் பார்த்து ஒரு சில நொடிகள் திகைத்தார்கள்.

“அ… அது தளபதி போலத் தெரியவில்லையே…” என்று ஒருவன் சுகந்தன் காதருகே முணுமுணுத்தான்.

“ஆமாமடா மடையா… அடையாளம் தெரியவில்லையா? அதில் வருவது அரசரின் மெய்க்காப்பாளன் சூர்யன். இவர்களை ரகசியமாகப் பின்தொடர்ந்துள்ளான். வரட்டும் அவனையும் இன்று கை காலை வெட்டி வீசுவோம்” என்று மெல்ல சொன்னான் சுகந்தன். 

சண்டைக்குத் தயாராக இருந்த சிங்கமுகன் அவர்களையும் பாயந்து வரும் குதிரையையும் மாறி மாறிப் பார்த்து திகைத்தார்.

‘இதென்ன நம் திட்டத்தில் வேறு ஏதேதோ குறுக்கீடுகள்? வருவது யார்? வியாபாரி போன்ற உடை. ஆனால் வருகிற அந்த வேகத்தைப் பார்த்தால் வீரன் போல இருக்கிறது. அந்தத் தோற்றம் பார்த்தால் சூர்யன் போலவே உள்ளதே. அடடா… அவனுக்கு எப்படி நம் விஷயம் தெரிந்தது?’ என்று நினைத்தார்.

ஆற்றங்கரைப் பள்ளத்தில் மறைந்து இருந்த தளபதி கம்பீரனும் அந்த நொடியில் திகைப்புக்கு ஆளானான்.

‘அடடா… அவன் சூர்யன் போலல்லவா இருக்கிறது? நாம் மன்னரைக் காப்பாற்றும் நாடகம் போட்டால் இவன் நம்மை முந்திசென்று காப்பாற்றிவிடுவான் போலிருக்கிறதே. அந்த சுகந்தன் கும்பலையும் மடக்கிவிட்டால் நமக்கல்லவா பிரச்னை. விடக்கூடாது’ என்று முடிவுசெய்தான் கம்பீரன்.

உடனடியாக தனது புரவியைத் தட்டிவிட்டான். அது பள்ளத்தில் இருந்து மேட்டுச்சாலையை நோக்கி பாய்ந்துசென்றது.

அதேநேரம்… அந்த வியாபார நடிப்பு வண்டியும் அரசர் மந்திரியும் அவர்களைச் சுற்றிவளைத்து இருந்த சுகந்தன் குழுவும் இருந்த மரத்தின் மேலிருந்து பந்து வடிவில் கோணிப்பையில் சுற்றப்பட்ட சில உருண்டைகள் கீழே விழுந்தன.

அப்படி விழுந்த நொடியில் அவை, ‘டம்… டம்…” என்று வெடித்து புகையையும் புழுதியையும் கிளப்பின.

அங்கிருந்த எல்லோரும் திகைத்து திணறி கண்களை மூடி இரும ஆரம்பித்தார்கள்.

சில அடிகள் முன்பு வந்துவிட்ட சூர்யன் சட்டென சுதாரித்து சூறாவளியின் பிடரியைப் பிடித்து நிறுத்தினான்.

“ஙீ ஙி ஙூ” என்று சூறாவளியும் முன்னங்கால்களை மேலே உயர்த்தி பின்னங்கால்களால் நின்றது. (இது என்னடா திருப்பம்?)

“ஓடுங்கள்… ஓடுங்கள்… மயக்கப் புகை… எல்லோரும் நாசியை மூடிக்கொண்டு புரவியை விரட்டுங்கள்” என்று கத்தலாக உத்தரவிட்டான் சுகந்தன்.

அவனது குழு நாலா திசையிலும் பாய்ந்து சிதறியது. அரசரும் மந்திரியும் மூச்சுத்திணற தங்கள் புரவியில் இருந்து கீழே விழுந்தார்கள். வியாபாரி நடிப்பில் இருந்தவர்கள் ஏற்கெனவே புகையால் மூர்ச்சையாகி தரையில் கிடந்தார்கள்.

சற்றுத் தள்ளி நின்றுவிட்ட சூர்யன் உடனடியாகத் தன் தோளில் இருந்த துண்டை எடுத்து முகத்தில் சுற்றிக்கொண்டான். சூறாவளியின் முதுகில் இருந்து தாவி குதித்தான்.

“சூறா… அரசரும் மந்திரியும் மயக்கம் அடையும் முன்பு அவர்களை இப்படி இழுத்து வரவேண்டும். சீக்கிரம் வா…” என்றபடி கண்களைச் சுருக்கி புகை புழுதிக்குள் ஊடுருவிச் சென்றான் சூர்யன்.

பின்னால் சற்றுத் தொலைவில் மேட்டுக்கு வந்துவிட்ட தளபதி கம்பீரன் சில நொடிகள் திகைத்துப் போனான். அவனுக்கு நடக்கும் விபரீதம் புரிந்தது.

‘சே… திட்டம் எல்லாம் பாழ்… மயக்க குண்டு போட்ட மரத்தில் இருப்பவன் யார்?’ என்று நிமிர்ந்து பார்த்தான்.

புகை, புழுதி, இரவு… மரத்தில் இருக்கும் உருவத்தின் அடையாளம் தெரியவில்லை. ‘இப்போது நின்று கவனிக்கவும் நேரமில்லை’ என்று நினைத்த கம்பீரன், சட்டெனத் தனது புரவியைத் திருப்பிக்கொண்டு ஊர் நோக்கி மின்னலாக மறைந்தான்.

புகைக்குள் நுழைந்து மயக்கத்துடன் தரையில் விழப்போன சிங்கமுகனைத் தாங்கிப் பிடித்தான் சூர்யன். ஒரு நிமிடம் நிமிர்ந்து மரத்தைப் பார்த்தான்.

அதில் இருந்து மறுபக்கம் குதித்த கறுப்பு ஆடையும் முகமூடியும் அணிந்த ஓர் உருவம் வேகமாக அந்த இடத்தைவிட்டு ஓடுவது தெரிந்தது.

‘இவன் யார்? அரசருக்கு நல்லது செய்ய வந்தவனா? கொல்ல வந்தவனா?’ என்ற கேள்வி சூர்யன் மனதில் எழுந்தது.

(தொடரும்…)

iamraj77@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button