இணைய இதழ்இணைய இதழ் 92சிறுகதைகள்

வழி – தருணாதித்தன்

சிறுகதை | வாசகசாலை

“யோகா என்றால் உண்மையில் என்ன தெரியுமா ராம்?”

சுவாமியின் குரல் சன்னமாக ஆனால் தெளிவாக ஒலித்தது. 

“சொல்லுங்கள் சுவாமி” என்று தரையில் பாயின் மேல் காலை மாற்றி மடக்கி இடது கையை ஊன்றி அமர்ந்தேன். மலைத்தொடரில் காட்டுக்கு நடுவே ஒரு குடிலில் இருந்தோம். வெளியே பார்த்த இடமெல்லாம் வண்ணம் தீட்டியது போல பசுமை. அருகே ஒரு சிற்றாறு அமைதியாக நழுவிக் கொண்டிருந்தது. ஒரு பாறையில் உட்கார்ந்து கொண்டு ஓடையின் நீரில் கால்களை நனைத்தபடி ஒரு சிறுவன் இருந்தான். இரண்டு பக்கமும் பன்னீர்ப் பூ மரங்கள். இலை உதிர்ந்து மௌனமாக நின்றன. அவை பூக்கும் காலத்தில் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன். அவற்றுக்குப் பின்னால் சண்பக மரங்கள், நாகலிங்க மரங்கள், இன்னும் ஏதேதோ பூக்கள். எல்லாம் சேர்ந்து ஒரு அபூர்வமான மணம். 

அறையில் வெளிச்சம் ஏதுவாக கசிந்து வந்தது. சுவாமி கால்களை மடக்கி ஏதோ ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தார். தூய காவி உடை. அப்போதுதான் அருவியில் குளித்து விட்டு வந்த புத்துணர்ச்சி அவர் உடலிலும் குரலிலும் இருந்தது. உள்ளே என்னைத்தவிர யாரும் இல்லை. எங்கள் இருவருக்கும் இடையில் நடுவே நிறைய அமைதி. 

“ராம், ஐந்து நிமிடம் கூட உங்களால் தரையில் நேராக உட்கார முடியவில்லை, எப்படி மனதைக் கட்டுப்படுத்துவீர்கள்?” 

 சுவாமி அப்படித்தான், நான் அவரைச் சந்தித்த கடந்த ஒரு மணி நேரத்தில் பதில்களை விட கேள்விகளை அதிகம் கேட்டுக் கொண்டிருந்தார். ஒரு பறவை மட்டும் அவ்வப்போது ‘கொட்றீ கொட்றீ’ என்று ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது. சில சமயம் ஒரு கேள்வி அல்லது பதிலுக்குப் பிறகு ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடம் மௌனம். அந்த ஏகாந்தம், பேச்சில் இடைவெளி, ஆழ்ந்த உரையாடலுக்கு மிக உதவியாக இருந்தது.

“சுவாமி, யோகா என்றால் உடலை நம் இஷ்டத்துக்கு வளையும்படி வைத்துக் கொள்வதுதானே? யோகா பயின்றால் உங்களை மாதிரி மணிக்கணக்காக உட்கார முடியும் அல்லவா? மூச்சை கூட அடக்கி வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்று படித்திருக்கிறேன்” 

“இந்தக் காலத்து தப்பான புரிதல். யோகா என்றால் பாய் விரித்து, கை கால்களை, உடலை ரப்பர் மாதிரி வளைத்து வித விதமாக நிலை கொள்வது அல்ல. இதெல்லாம் முதல் படிகள், உடலைத் தயார் செய்வதற்கு, அவ்வளவுதான். யோகாவின் நோக்கம் வாழ்நாளை நீட்டிப்பது அல்ல. அதெல்லாம் பக்க விளைவுகள்”

“உடலைத் தயார் செய்த பிறகு?” 

“மனத்தை வளைக்க வேண்டும். நிறுத்தி லயிக்க வேண்டும், யோகா ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் முதல் படிகளிலேயே தங்கி விடுகிறார்கள்” 

“அப்படியா” என்றேன் பொதுவாக. 

“உங்களுக்கு எதற்காக யோகா பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?” – சுவாமி ஆழ்ந்து என்னைப் பார்த்தார்.

“உங்களை மாதிரி யோகிகளைப் பார்த்து அவர்களை பேட்டி எடுத்து, அவர்கள் யோகத்தில் இருக்கும்போது நவீன கருவிகளைக் கொண்டு அளந்து, அவர்களுடைய அனுபவங்களை அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்த வேண்டும். அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு ஆராய்ச்சிகள் பல செய்ய வேண்டும்” என்றேன். 

நாங்கள் வந்திருப்பது ‘ப்ராஜெக்ட் யோகா’வுக்காக. அமெரிக்காவிலிருந்து ஒரு தனியார் ட்ரஸ்ட் எங்கள் ஆராய்ச்சிக்கு நிறைய பணம் கொடுத்து ஆதரவளிக்கிறார்கள். 

“என்ன ஆராய்ச்சி?”

“மூச்சைக் கட்டுப்படுத்தி உடல் வெப்பத்தை மாற்ற முடியுமாம், கடும் குளிரிலும் தகிக்கும் வெப்பத்திலும் இயல்பாக இருக்க முடியுமாம். பசி, தாகம், தூக்கம் இல்லாமல் மாதக் கணக்கில் வாழ முடியுமாம், இளமையைத் திரும்பப் பெற முடியுமாம், சாவை நினத்தபடி தள்ளி வாழ் நாளை நீட்டிக்க முடியுமாம். இப்படி நிறையப் படித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து, முதலில் உண்மையா, உண்மை என்றால் எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்” 

இவை எல்லாம் இப்போதுதான் யோகாவைப் பற்றிப் படித்தது. நான் ப்ரொபசர் ராமசந்திரா. நாஸாவில் விண்வெளி விஞ்ஞானியாக பல வருடங்கள் இருந்து, ஓய்வு பெற்று இந்தியா வந்து சில காலம் வானிலை ஆராய்ச்சி டிபார்ட்மெண்டில் தலைமையில் இருந்து, உள் அரசியலில் சிக்கி, பதவியைத் துறந்து என்னுடைய சொந்த ஊர் தஞ்சாவூர் கிராமத்துக்கு வந்து விட்டேன். சோதிடம் பற்றி ஏதோ பழைய புத்தகங்கள் அட்டத்தில் கிடைக்க, அவை எல்லாம் படித்து இந்திய மரபுக்குள் புகுந்தேன். இப்போதும் அமெரிக்காவிலிருந்து நிறைய தொடர்புகள் உண்டு. அதன் வழியாகத்தான் இந்தப் ப்ராஜெக்டுக்கு என்னைக் கேட்டார்கள்.

சுவாமி என்னை இயல்பாக ” ராம்” என்று அழைத்தார். ப்ரொபசர் என்று எப்போதும் அழைக்கப்பட்ட எனக்கு, இது ஆசுவாசமாக இருந்தது. 

“ராம், உண்மை என்றே வைத்துக் கொள்ளலாம், தெரிந்து கொண்டு பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?”

“ஆராய்ச்சி முடிவுகளை உலகளாவிய அறிவியல் பத்திரிகைகளில் பதிப்பிப்போம், டாகுமென்டரி எடுத்து உலகம் முழுவதும் வெளியிடுவோம்”

“வெளியிட்டால்?”

“யோகா இப்போது பிரபலமாக இருந்தாலும், இன்னும் அறிவியல் வழிகளின் படி அதன் முழுப் பலன்கள் நிரூபிக்கப் படவில்லை. ஏதோ ஒன்றிரண்டு சிறு அளவிலான ஆராய்ச்சிகள் பதிவாகி இருக்கின்றன. 1981இல் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் பென்சன் இமாலயத்துக்கு வந்து திபெத்திய துறவிகளை வைத்து ஆராய்ச்சி செய்தார். மூச்சு விடும் முறையினால் உடல் வெப்ப நிலையை சுமார் 9 டிகிரி வரை தானாக அதிகமாக்கிக் கொள்ளலாம் என்று கருவிகளை வைத்து அளந்து, உலக அளவில் பெயர் பெற்ற ‘நேச்சர்’ பத்திரிகையில் பதிப்பித்தார். ஆனால், அது முழுமையான ஆராய்ச்சி இல்லை, அவர் கொடுத்திருக்கும் தரவுகள் சரி இல்லை என்று பலர் எழுதினார்கள்.” 

“அப்படியா?”

“பிறகு இந்த நுற்றாண்டின் ஆரம்பத்தில் விம் ஹோஃப் என்ற ஐரோப்பியர் யோக முறைகளினால் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவற்றைச் செய்து காட்டினார். அவர் பனிக்கட்டி மேல் ஒரு மணி நேரம் எந்தவித பாதிப்பும் இல்லாமல் இருந்தார். நமீபிய பாலைவனத்தில் 104 டிகிரி தகிக்கும் வெய்யிலில் நடுவே ஒரு வாய் தண்ணீரும் குடிக்காமல் முழு மாரத்தான் ஓடினார். அவரை வைத்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. அவர் கடுமையான யோக முறைகளை எளிமைப்படுத்தி மக்களுக்கு கொண்டு சென்றார், ஆனாலும் பரவலாக அவை பிரபலம் அடையவில்லை.”

“இதெல்லாம் யோக சித்தி அடைந்தவர்களுக்கு சாதாரணம்” 

“1971இல் சுவாமி ராமாவின் யோக நித்திரையில் மூளையின் மின் அலைகள் அளக்கப்பட்டன ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது உண்டாகும் அலைகள் அவை என்று நிரூபிக்கப்பட்டன. உலகம் அவற்றை எல்லாம் ஏறக்குறைய மறந்து விட்டது. இப்போது அறிவியல் எவ்வளவோ முன்னேறி விட்டது. அப்போதெல்லாம் இருந்த கருவிகளைவிட இப்போது இன்னும் துல்லியமாக அளக்கும் கருவிகள் வந்து விட்டன. இந்தத் தலைமுறையினர் பெரிய அளவில், நவீன அறிவியல் முறைப்படி ஆராய்ச்சி செய்து, தற்காலக் கருவிகளால் அளந்து தகவல்களுடன் நிரூபிக்கப்படாத ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.” 

“ஏற்றுக் கொண்டால்?”

“உலகம் முழுவதும் மக்களுக்குப் பயன்படும், பல மில்லியன் மக்களைப் போய்ச்சேரும், மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும்”

“ராம், நோக்கம் உன்னதமாக இருக்கிறது; ஆனால், புரிதல்தான் தவறு” 

நான் எதுவும் சொல்லவில்லை.

“முதலில், இந்த உடல் சார்ந்த அனுபவங்கள் எல்லாமே கீழ்ப் படிகளைச் சேர்ந்தவை. மேலே செல்லச் செல்ல, ஆத்மா தொடர்பானவை. குண்டலினி மூலாதாரத்திலிருந்து எழுந்து ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம் என்று ஒவ்வொரு சக்கரமாக தாண்டி எழும்பும்போது உடல் சார்ந்தவை தவிர மிக நுட்பமான ஆத்ம அனுபவங்கள் உண்டாகும். அந்த யோக அனுபவங்களை அப்படி எளிதாக கருவிகளால் அளக்க முடியாது” 

உடல் அனுபவங்களைத் தவிர ஆத்மாவா? எனக்கு உற்சாகமாக இருந்தது. இதை எல்லாம் யாரும் இது வரை ஆவணப்படுத்தவில்லை? உடல், வெப்பம், இதயத் துடிப்பு போன்ற பௌதீகமானவற்றைத்தான் அளந்திருக்கிறார்கள். 

“சுவாமி, நாங்கள் அதிநவீனக் கருவிகளை கொண்டு வந்திருக்கிறோம். இவை மனித மூளையின் செயல்பாடுகளை, உடற்கூறுகளில் எற்படும் மிகச் சிறிய மாற்றங்களையும் துல்லியமாக அளக்கக் கூடியவை.” 

“யோக அனுபவங்கள் உடல், மனம் எல்லாம் கடந்தவை. நான் சொன்னேனே ஆத்மார்த்தமானவை“. அவர் சொன்னது உரையாடலை முடித்து விடுவாரோ என்பது போல தோன்றியது. ஆனால், அவரிடம் மேலும் விவாதம் செய்ய எனக்கு எதுவும் முழுமையாகத் தெரியாது.

சற்று மவுனத்துக்குப் பிறகு “ராம், தண்ணீர் வேண்டுமா?” என்றார். பேசிப் பேசித் தொண்டை சற்று வரண்டிருந்தது.

நான் பதில் அளிப்பதற்குள் உரத்த குரலில் ”கந்தசாமி”என்று அழைத்தார்.

“இதோ வாரேஞ்சாமி” என்ற குரலைத் தொடர்ந்து அந்தச் சிறுவன், சிற்றாற்றின் கரையில் உட்கார்ந்திருந்தவன்தான், அவன் வந்தான். ஒரு பதினாறு வயது இருக்கலாம். 

“கந்தசாமி, சாருக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வா” என்றார் சுவாமி.

கந்தசாமி உள்ளே சென்றான். நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தேன். சில கருமேகங்கள் விரைவாக வந்து கொண்டிருந்தன. சூரியன் மேகத்துக்குப் பின் மறைந்தது வெளி வந்தது. தரையில் ஒளிக் கோலங்கள். லேசான சாரல் ஆரம்பித்தது. அந்தத் தூறலில் மரங்கள் இன்னும் பசுமையாக அழகாகத் தெரிந்தன. 

“இப்போது எந்தக் காலத்தில் மழை வரும் என்று சொல்ல முடியாது” என்றார் சுவாமி.

நாங்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தோம். ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும், தண்ணீர் வரவில்லை.

“இவன் இப்படித்தான், மழை வந்தால் வெளியே சென்று வேடிக்கை பார்ப்பான்” என்று சுவாமி எழுந்து உள்ளே சென்றார். கந்தசாமியிடம் அவர் ஏதோ சொல்லும் குரல் கேட்டது. 

திரும்ப வந்து ”நான் சொன்னேன் இல்லயா, அவன் மழையில் ஆழ்ந்து விட்டான்” என்றார்.

தண்ணீர் வந்தது. கொடுத்து விட்டு, கந்தசாமியும் ஒரு ஓரமாக அமர்ந்தான். நல்ல குளிர்ச்சியாக இருந்தது. ரசித்துக் குடித்தேன்

மறுபடியும் கேள்விகளைத் தொடர்ந்தேன். 

“அப்படிக் குண்டலினி எழும்போது என்ன ஆகும்?”

“குண்டலினி சக்தி ஒவ்வொரு சக்கரமாகத் தாண்டி மேலெழும்பி கடைசியில் தலை உச்சியில் ஸஹஸ்ரார சக்கரத்தில் ஆயிரம் இதழ் தாமரை மலர்ந்து, பரமாத்வாவுடன் இணையும்.”

“இணையும் போது?”

“நிர்விகல்ப சமாதி சித்தியாகும். அமிர்தம் சுரக்கும். மரணமில்லாப் பெருவாழ்வு வசப்படும்” சுவாமியின் குரல் தழைந்திருந்தது. ரகசியம் பேசுவது போல. மேலே பார்த்துக் கொண்டு ஏதோ வருங்காலக் கனவு போல விவரித்துக் கொண்டிருந்தார். 

என்னைப் பார்த்து ”ராம், அந்த மாற்றங்கள் எல்லாம் பௌதீகமாக உடல் கூறுகளில் அளக்க முடியாது. மிக சூக்ஷ்மமாக உணரக்கூடியவை”. ஆனால், அவர் குரலில் ஆரம்பத்தில் இருந்த கடுமை இல்லை.

எனக்கு இன்னும் ஆர்வம் அதிகம் ஆயிற்று. நிச்சயமாக யோகாவின் இந்தத் துறையை யாரும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து பதிப்பிக்கவில்லை. எல்லாம் உடற்கூறு தொடர்பாகத்தான் எழுதி இருக்கிறார்கள், தரவுகள் எடுத்து பதிப்பித்திருக்கிறார்கள். நான் செய்யப்போகும் ஆராய்ச்சி உலக அளவில் மகத்தான ஒன்றாக இருக்கும். அதுவும் இவர் சொல்லும் அமிருதம் பற்றி ஆராய வேண்டும். ஆதி நாளிலிருந்தே மனிதன் அதைத்தானே தேடிக் கொண்டிருக்கிறான். இப்போது ஹார்மோன்களைப் பற்றிய புரிதல்களை வைத்து, இதை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். அம்ருதம் என்பது டோபமைனா இல்லை என்டார்பினா- அவை அதிகமாகச் சுரந்தால், ஆனந்த நிலை கிடைக்குமா? ஆனால், சுவாமி ஒத்துழைக்க வேண்டும். அவரிடம் எந்த விதமாக கேட்கலாம் என்று தடுமாறினேன்.

“அப்படி குண்டலினி மேலே எழும்புவது என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்றேன்.

“சாதாரணமாக கேட்க முடியாத ஒலிகள் கேட்கும் பரா, வாக், பஷ்யந்தி என்றெல்லம் சொல்லப்படும் திவ்வியமான ஒலிகள். புற வயமான காதுகளால் கேட்க முடியாது உடல் அதிரும், சரளமாக உத்தியான, ஜலந்தர மூல பந்தங்கள் அமையும், கேவல கும்பகம் முயற்சி இல்லாமல் கைவரும். சுகந்த பரிமளங்கள் எழும், கோடி சூரியப் பிரகாசம் தெரியும், இன்னும் பல” என்றார்.

அவர் சொன்னதில் எதுவும் புரியவில்லை.

அப்போது வெளியே ஒரு பறவை நீளமாக இசைத்தது. சுவாமி யோக ரகசியங்களை, புற வயமாக கேட்க முடியாத ஒலிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்தக் கணத்தின் கனத்தை உணராமல் கந்தசாமி பறவையின் ஒலிக்கு புன்னகைத்துக் கோண்டிருந்தான். 

“சுவாமி, நீங்கள் மிகவும் பரந்த மனப்பான்மையுடன் எங்களுடன் பேச ஒப்புக் கொண்டீர்கள். நாங்கள் இந்தியா முழுவதும் பல துறவிகளையும், யோக ஆசிரியர்களையும், குருக்களையும் சந்தித்துப் பேசினோம். அவர்களுடன் இப்படி ஒரு உரையாடல் கூட நடத்த முடியவில்லை. ஏதாவது கேள்வி கேட்டால் மதம், நம்பிக்கைகளின் பின் ஒளிந்து கொள்கிறார்கள். நீங்கள் ஒப்புதல் கொடுத்தால், உங்களையே வைத்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கலாம்” 

சுவாமி புன்னகைத்தார்.

“நான் இன்னும் அந்த நிலைக்கு வரவில்லை, நீங்கள் ஆராய்ச்சி செய்யத் துவங்குவதற்கு நான் ஒரு நல்ல உதாரணம் அல்ல.” என்றார் சுவாமி. 

அவர் பாசாங்கு இல்லாமல் அப்படிப் பேசினது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் கடந்த ஆறு மாதங்களில் பார்த்தவரை நான் கேட்காமலேயே சில சாமியார்கள் மந்திரவாதி போல பொருட்களை வரவழைப்பது, மாயமாக்குவது, நோய்களை குணப்படுத்துவது போன்ற சித்திகளை அடைந்தவர்கள் என்று தானாக சொல்லிக் கொண்டிருந்தார்கள். வடக்கே ரிஷிகேஷில் ஒரு சாமியார் நான் சர்வதேச ப்ராஜெக்ட் செய்வதை அறிந்து கொண்டவுடன் ‘வஜ்ரோலி முத்திரை’ செய்து காண்பிப்பதாக ஆரம்பித்தார். அவர் பால், எண்ணெய், தேன் என்று ஆரம்பித்து இப்போது பாதரசத்தையும் உள்ளிழுப்பாராம். அதன் மூலமாக அவர் ப்ரம்மச்சரியத்தை காக்கிறாராம். முழுவதாக வீடியோ எடுக்க அனுமதிப்பதாகவும் எவ்வளவு டாலர் கொடுக்க முடியும் என்ற அடுத்த கேள்வியையும் கேட்டார். 

நான் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு, “சுவாமி, நான் இங்கே வந்து உங்களைச் சந்தித்ததே தெய்வ அனுக்கிரகம். நாடெல்லாம் அலைந்து எங்கே போகலாம் யாரைக் கேட்கலாம் என்று திரிந்து, அப்படி உண்மையான யோகி எவரையும் காணாமல் வருத்தப்பட்டு, கடைசியாக திருவண்ணாமலை ரமண ஆசிரமத்தில் கொல்லி மலைக்கு போகச் சொல்லி அருள்வாக்கு கிடைத்தது” என்று என்னுடைய தேடலின் முழுக் கதையையும் சொல்ல முடிவு செய்தேன்.

நான் ஒரு உண்மையான யோகியைக் காண முடியாது என்ற முடிவுக்கு ஏறக்குறைய வந்திருந்த போது,கடைசியாக திருவண்ணாமலைக்குச் சென்றேன். பால் ப்ரன்டன் 1930இல் அப்படித்தான் இந்தியா முழுவதும் குருவைத்தேடி அலைந்து கடைசியாக ரமண மகரிஷியைக் கண்டடைந்தாராம். ஒரு வேளை வாவென்றழைக்கும் ஞானமலையில் யாரையாவது நானும் கண்டடையலாம் என்று அண்ணாமலையார் கோவிலுக்குச் சென்றேன். கிரி வலம் வந்தேன். விசாரித்துப் பார்த்தேன். பார்த்தவுடன் மரியாதையும் பக்தியும் ஏற்படுத்தும் எவரையும் பார்க்கவில்லை. ஒருவேளை என் கண்களுக்குத் தென்படாமலும் போயிருக்கலாம். ரமணாசிரமத்தில் என்னுடன் பக்கத்தில் உணவருந்திய ஒரு முதிய பக்தரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரேயடியாக, “இங்கே திருவண்ணாமலையில் அப்படிப்பட்ட யோகியரும் ஞானியரும் இல்லை. ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார், பிறகு யாரும் இல்லை” என்று கையை விரித்தார்.

கடைசியாக ரமணாசிரமத்தில் தியான அறைக்குச் சென்று கண்களை மூடிக்கொண்டு அமர்ந்தேன். சர்வதேச ப்ராஜெக்ட், பல மில்லியன்கள் பணம், இருந்தும் நம் பாரம்பரியத்தை அறிவியல் பூர்வமாக ஆவணப்படுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து வெளியே வந்தேன். 

வந்து படிகளில் இறங்கிக் கொண்டிருந்தேன், அப்போது ஒரு முதியவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். “டேய், கொல்லி மலைக்குப் போ. அறப்பளீசுவரரை தரிசனம் செய், கீழே இறங்கி ஆகாச கங்கை அருவிக்குப் போ, எல்லாம் கிடைக்கும்” என்றார்.

ஒரு கணம் திகைத்து நின்றேன். அந்தச் சொற்கள் எனக்குத்தான் என்று தோன்றியது.

கொல்லிமலையைப் பற்றித் தெரிந்து கொண்டு கடைசி முயற்சியாக குழுவினருடன் வந்தேன். படித்ததெல்லாம் நம்பும்படியாக இல்லை. அந்த மலை சித்தர்கள் வாழும் மலை, இன்றைக்கும் ஜோதி ரூபமாக கோவிலில் பூஜை செய்ய வருவார்கள். சிலருக்கு மட்டும் அவர்களைப் பார்க்க முடியும். மனிதர்களை மாயமாக்கும் புல் மூலிகை, விஷ வண்டுகள் போக முடியாமல் தடுக்கும் கொல்லிப்பாவை கோவில் என்று நிறைய தகவல்கள் கிடைத்தன. சித்தர்களைப் பற்றி இணையத்தில் எழுதப்பட்டிருந்தது எல்லாம் பரபரப்புப் பத்திரிகைகளில் வரும் கட்டுரைகள் போல இருந்தது. சில காணொளிகள் கிடைத்தன. அதிலும் உருப்படியாக எதுவும் இல்லை. அவநம்பிக்கையுடன்தான் வந்து சேர்ந்தேன். ஒரு ரிஸார்ட்டில் இரவு தங்கி, காலையில் குளித்து விட்டு அறப்பளீசுவரர் கோயிலுக்குச் சென்றோம். அங்கிருந்து ஆகாச கங்கை அருவியை பார்ப்பதற்கு இறங்க ஆரம்பித்தோம். 

கீழே இறங்க நிறைய படிகள். ஆயிரத்துக்கும் மேலே என்று சொன்னார்கள். கடைசி இறக்கத்திலேயே அருவியின் ஓசை வந்தது. தூரத்திலிருந்தே அருமையான காட்சியாக இருந்தது. உயரத்திலிருந்து விசையுடன் அருவி கொட்டிக்கொண்டிருந்தது. முன்னூறு அடி உயரமாம். சூரிய ஒளியில் தண்ணீர் மின்னியது. அதிகம் கூட்டம் இல்லை. சிலர் குளித்துக் கொண்டிருந்தார்கள். அருகே சென்றோம்.

அருகே செல்லச் செல்ல அருவியின் பிரம்மாண்டம் உறைத்தது. நாங்கள் மிகச் சிறியவர்களாக உணர்ந்தோம். எங்களது வீடியோ குழுவினர் காட்சிகளை எடுத்துத் தள்ளிக் கோண்டிருந்தார்கள். எங்கள் குழுவில் சிலர் தாங்களும் அருவியில் இறங்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள்.

நான் அருவியின் அழகில் ஆழ்ந்திருந்தேன். சற்று நேரம் கழித்துத்தான் அவரைக் கவனித்தேன். அருவி விழும் இடத்தில் நடுவில் ஒரு பாறை மேல் அமர்ந்திருந்தார். அருவித் தண்ணீர் மொத்த விசையுடன் அவர் மேல் விழுவதாகத் தோன்றியது. நான் தண்ணீரில் இறங்காமல் பக்கவாட்டில் அருகில் சென்று பார்த்தேன். அவர் இடுப்பில் ஒரு காவித்துணி. தலையை முடிந்து ஜடை மாதிரி கட்டி இருந்தார். கழுத்தில் ருத்திராட்ச மாலை, கைகளில் யோக முத்திரை. ஆரவாரத்துக்கும் நடுவில் அசையாமல் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அத்தனை தண்ணீருக்கு நடுவில் எப்படி மூச்சுத் திணறாமல் இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அருகே அவரை மாதிரியே பாறைகளில் நான்கு பேர் இருந்தார்கள். அவர்களும் கண்களை மூடி தியானத்தில் இருந்த மாதிரிதான் இருந்தது, ஆனால், அவர்கள் அவ்வப்போது உடலை சிலிர்த்துக் கொள்வதும், மூச்சு வாங்குவதுமாக இருந்தார்கள். 


நான் ஒரு பத்து நிமிடம் அவரையே கவனித்திருப்பேன். அவர் அசையவில்லை. முகம் சாந்தமாக இருந்தது. ஒரு வேளை இவர் ஒரு யோகியாக இருக்கக்கூடுமோ என்று தோன்றியது. வெகு நேரத்துக்குப் பிறகு அவர் கண்களைத் திறந்தார். அருவியிலிருந்து வெளியே எழுந்து வந்தார். அவருடன் இருந்த சீடர்களும் எழுந்து வந்தனர். அவர் எதுவும் பேசவில்லை. மற்றவர்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். அவர் முகத்தில் ஒரு ஒளியும் அமைதியும் அலாதியாகத் தெரிந்தது. என்னுடைய உள்ளுணர்வில் இவர்தான் என்று தோன்றியது. நான் எனது குழுவினரை அங்கேயே இருக்க சைகை காட்டி விட்டு, அவர்களைச் சற்று இடைவெளி விட்டு பின் தொடர்ந்தேன். பாதை அருவியின் ஒரு பக்கத்தில் ஒற்றையடிப்பாதை மலையின் மேல் சென்றது. பாறைகளும் கற்களும், மர வேர்களும் குறுக்கே வந்து வேகமாகச் செல்ல முடியாதபடி இருந்தது. ஆனால், அவர்கள் வேகமாக ஏறிக் கொண்டிருந்தார்கள். பழகிய வழியாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏதோ மந்திரத்தை மனதுக்குள்ளேயே முணுமுணுப்பது மாதிரி இருந்தது. அடர்ந்த காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தோம். காலை நேரமாக இருந்தாலும், உயர்ந்த மரங்கள் வெளிச்சத்தை முழுதாக கீழே விடவில்லை. அங்கங்கே சிற்றருவிகள் குறுக்கிட்டன. அவை எல்லாவற்றையும் தாண்டிப் போக வேண்டி இருந்தது. மேலே போகப் போக அபூர்வமான மலர்கள் ஏதோ மூலிகை போல மணம் வந்தது. சுமார் ஒரு மணி நேரம் நடந்திருப்போம், காட்டுக்குள் ஒரு இடைவெளி தெரிந்தது. அதற்குள் நடந்தோம். சற்று தூரத்தில் சில ஓலை வேய்ந்த குடில்கள் தெரிந்தன. 

நான் அவர்களைத் தொடர்ந்து போகலாமா என்று தயங்கி நின்றேன். ஈரத்துணிகளை ஒருவர் வந்து உணர்த்தினார். பிறகு உள்ளே சென்று விட்டார். வேறு ஒரு மனித நடமாட்டமும் ஓசையும் இல்லை. சில பறவைகளின் ஒலி மட்டும். பிறகு நானே உள்ளே சென்று வணங்கிவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்தேன்.

இப்படி நான் அங்கே வந்த கதையைச் சொல்லி முடித்த போது, சுவாமி இன்னும் கனிந்த மாதிரி இருந்தது.

“அப்படியா, ஆகா, தெய்வ சங்கல்பம்தான் உங்களை இங்கே வரச் செய்திருக்கிறது” என்றார். கூடவே அவர் வேறு ஏதோ சிந்தனை செய்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. 

“சுவாமி, தங்களுடைய குண்டலினி யோக அனுபவங்களை கருவிகளைக் கொண்டு அளக்க அனுமதிப்பீர்களா? நீங்கள் சொன்னபடி ஸஹஸ்ராரத்தில் அமிர்தம் சுரந்து மரணத்தை வெல்லும் தருணங்களில், உடலில், மூளையில் கட்டாயம் பௌதீக ரசாயன மாற்றங்கள் இருக்கும்” 

“இருக்கலாம், ஆனால், நான் ஸஹஸ்ராரத்துக்குச் சென்று சேர்க்கும் அளவுக்கு வரவில்லையே, வந்திருந்தால் இப்படி உங்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.” 

ஏனக்கு பதற்றம் சற்று அதிகம் ஆனது. இவரும் ஏதாவது சாக்கு சொல்லி ஆராய்ச்சிக்கு அனுமதிக்கப் போவதில்லை. 

“சுவாமி, உங்கள் நற்குணம், தன்னடக்கம் இவற்றால் நீங்கள் உங்களைப் பற்றி குறைத்துச் சொல்லிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக யோகத்தில் நீங்கள் பல படிகள் தாண்டி இருப்பீர்கள். அவற்றை ஆவணப்படுத்த அனுமதித்தால், ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும்” 

“செய்யலாம், நான் எங்கே இருக்கிறேன் என்பது எனக்கே முழுமையாகத் தெரியாது. நானாக பழைய கிரந்தங்களைப் படித்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்துக்கு ஒரு குரு அவசியம் என்று சொல்லப்படுகிறது. உங்களை மாதிரியே நான் நாடு முழுவதும் அலைந்தேன். இமாலயம் முதல் குமரி வரை மூன்று வருஷம் தேடினேன். என்னுடைய துரதிர்ஷ்டம், அப்படி ஒரு குரு எனக்கு அமையவில்லை. கொல்லி மலையில் பல சித்தர்கள்,யோகிகள் சூட்சும ரூபத்தில் இருக்கிறார்கள், அவர்கள் மனம் இறங்கினால் வழி காட்டுவார்கள் இங்கே வந்து என்னுடைய பயணத்தை ஆரம்பித்தேன். சித்தர்களுடைய கருணை, அருள் பார்வை, ஏதோ முன்னேறிக் கொண்டிருக்கிறேன்“

“அப்படியா, மேலே சொல்லுங்கள்”

“அங்கே செல்ல பல வழிகள் உண்டு” இரண்டு கையையும் விரித்து மேலே காண்பித்தார்.” ஓவ்வொரு படியிலும் ஏதாவது தடுக்கும் இல்லை வழியை மறைக்கும். மேலே என்ன என்று புகைப்படலமாகத் தெரியும் ஆனால், போக முடியாது. அப்போது எல்லாம் நான் இறைஞ்சுவேன், தானாக புதிய வழி திறக்கும்”

“ஆச்சரியமாக இருக்கிறதே, நானும் படித்திருக்கிறேன் குரு இல்லாமல் இந்த வழியில் போக முடியாது என்று”

அவரே தொடர்ந்தார்

“உண்மையில் அந்த நிலையை அடைந்தவர்கள் என்னை மாதிரி பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். தமிழில் ஒரு சொல் உண்டு ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்று. நான் இன்னும் முழுவதும் காணவில்லை”

“அப்படியா?” என்றேன்.

“எல்லாமே இறுதியாக அந்த பரமாத்வாவும் நானும் ஒன்று என்ற நிலையை அடைவதற்கு.”

“நானும் இந்த ப்ராஜெக்டுக்காக நிறையப் படித்தேன். ஆங்காங்கே புரிவது போல இருந்தாலும், நிறைய குழப்பங்கள்.” 

“கேளுங்கள், குழப்பத்திலிருந்துதான் தெளிவு பிறக்கும்”

“நீங்கள் சொல்லும் நிலையை அடைய நிறைய வழிகள் இருப்பது போல தெரிகிறது. ஒரு பக்கம் யோகா என்கிறார்கள். அதிலேயே நிறைய பிரிவுகள்- அஷ்டாங்க யோகம், குண்டலினி யோகம், நடுவில் கிரியா யோகம் என்று ஒன்று படித்தேன். நிர்விகல்ப சமாதி என்கிறார்கள். பிறகு இப்போது கூட சுவாமியார்கள், குருக்கள் புதிய யோக வழிகளை போதிக்கிறார்கள். யோகா தவிர இன்னொரு பக்கம் வேதாந்தம், அத்வைதம், மாயா என்று தலையைப் பிய்த்துக் கொள்ளும் வாதங்கள், உதாரணங்கள். பிறகு அதை குவான்டம் இயற்பியலுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள், இன்னொரு பக்கம் பக்தி, ஒருவர் கலியுகத்தில் நாமஜபம்தான் ஒரே வழி, கோடி நாமஜபம் செய்தால் சித்திக்கும் என்கிறார். இன்னொருவர் நாள் முழுவதும் பஜனை செய்யச் சொல்கிறார். பல வழிகள் போல தெரிகிறது. இவற்றில் எங்கு ஆரம்பிப்பது என்று தெரியவில்லை.” 

“நியாயமான குழப்பம்தான். நானும் என்னுடைய பயணத்தை தொடங்கியபோது எந்த வழி என்று தெரியாமல் திண்டாடினேன், நிறைய வழிகள் உண்டு, நீங்க்கள் சொன்னவை தவிர, இன்னும் பல வழிகள் இருக்கலாம்.”

நான் புன்னகைத்தேன், அணுக்கமாக உணர்ந்தேன்.

சுவாமி கண்களை மூடிக் கொண்டார். நான் அமைதியாகக் காத்திருந்தேன். சுமார் ஒரு நிமிடத்துப் பிறகு, “உண்மையில் இது தெய்வ சங்கல்பம்தான், நாளை நாங்கள் ஒரு முக்கியமான யோக சாதனை முயற்சி செய்யப் போகிறோம்” 

எனக்கு உடல் முழுவதும் பரபரத்தது.

“அப்படியா, அது என்ன?”

“நாளை காலை மகரசங்கிரமண புண்ய காலம், தக்ஷிணாயனம் முடிந்து உத்தராயணம் ஆரம்பிக்கிறது.” 

“பொங்கல் திருநாள்தானே?”

“ஆமாம், பொது மக்களுக்கு அது பொங்கல் திருநாள், யோகிகளுக்கு அது ஒரு முக்கியமான முகூர்த்தம், சூரியன் வடக்கே நகரும் காலம். மகர சங்கிரமண வேளையில், மாதம் பிறக்கும்போது அபூர்வமாக சூரியோதயமும் சேரும். நாளை அப்படிப்பட்ட நாள்.”

“ஓ, அப்படியா?”

“ஆமாம், அப்போது நாங்கள் திருமூலர் சொன்ன படி குண்டலினியை எழுப்ப முயற்சிக்கப் போகிறோம். அழகான தமிழிலேயே யோக ரகசியங்கள் திருமந்திரத்தில் இருக்கின்றன. 

“மூலத்து மேலது முச்சது ரத்தது” – என்று முக்கோணத்தில் மூலாதாரத்தைத்தான் சொல்கிறார்.

அப்படி எழுப்பிய சக்தியை மேலே கொண்டு சென்றால்

“மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்க
பாலனும் ஆவான் பார்நந்தி ஆணையே”

– முன்பே சொன்னேனே அமிர்தம் சுரக்கும் என்கிறார்.

“மேலைப் பிறையினில் நெற்றி நேர் நின்ற

கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே” – என்ன கோலம் சொல்கிறார் என்று அனுபவிக்க வேண்டும். நான் இப்போது அவற்றைப் ஓரளவு புரிந்து கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது”

“ஆச்சரியமாக இருக்கிறது, நாளை செய்யப் போகிறீர்களா?

“ஆமாம், இது இன்னொரு வழி, முயற்சி செய்யலாம் என்று இருக்கிறோம்” 

நான் அந்தச் சந்தர்ப்பத்தை விடாமல், “சுவாமி, தாங்கள் அனுமதி அளித்தால், எல்லாவற்றையும் ஆவணப் படுத்துவோம்” 

“ஆகட்டும் பார்க்கலாம்” என்றார். அவர் இல்லை என்று சொல்லாததே எனக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது. எத்தனை மணிக்கு எங்கே என்று கேட்டு குறித்துக் கொண்டேன். 

இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. எவ்வளவு மகத்தான வாய்ப்பு! இதுவரை யாரும் செய்யாத அறிவியல் சாதனையையைச் செய்யப்போகிறோம்.

காலை நான்கு மணிக்கே எழுந்து ரிசார்ட்டில் குளித்து தயராகி சுவாமியின் குடிலுக்குச் சென்றோம். எங்களிடம் மூவி காமரா தவிர, இதயம், மூளை ஆகியவற்றில் மின் அலைகளை அளக்கும் கருவிகள், தோலில் ஏற்படும் மின் கடத்தும் மாற்றங்களை அளக்கும் கால்வனிக் மீட்டர், கை விரலில் பொருத்தினால், ரத்தம் ஒரு சொட்டுகூட எடுக்காமலேயே அதில் கரைந்திருக்கும் வாயு அளவுகள், எல்லாவற்றையும் விட ஹார்மோன்களை அளக்கும் அதி நவீன கருவிகள் என்று நிறைய இருந்தன. 

முதலில் சுவாமியும் அவருடைய சிஷ்யர்களும் அருவிக்குச் சென்று குளித்தார்கள். அந்தக் குளிரில் எப்படி தண்ணீரில் நின்றார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. நாங்கள் வென்னீரில் குளித்துவிட்டு, மேலே ஸ்வெட்டர் எல்லாம் அணிந்து வந்திருந்தோம். கந்தசாமி மட்டும் குளிக்கவில்லை. ஒரு வேளை அவனுக்கு வென்னீர் தேவையோ என்னவோ. அவன் பாட்டுக்கு அருவிக்கு சற்றுத் தள்ளி ஒரு பாறையில் அமர்ந்து அருவியைப் பார்த்துக் கொண்டிருந்தான். 

எல்லோரும் அருவியிலிருந்து வேறு ஒரு பாதையில் மேலே ஏறினார்கள். இந்தப் பாதை இன்னும் செங்குத்தாக இருந்தது. வழியும் பழக்கப்பட்டதாக இல்லை நாங்கள் கருவிகளைத் தூக்கிக் கொண்டு நடக்கச் சிரமப்பட்டோம். வெகு நேரத்துக்குப் பிறகு, மலை உச்சிக்கு அருகில் ஒரு குகையை அடைந்தோம். அந்தக் குகை கிழக்கு திசையில் வாயிலுடன் இருந்தது.

கீழ்வானம் சிவக்கத் தொடங்கி இருந்தது. அவர்கள் ஐந்து பேரும் கிழக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டார்கள். கந்தசாமி சற்றுத்தள்ளி ஒரு பாறையில் குந்தி அமர்ந்திருந்தான். அருகில் ஒரு தாமரைக்குளம் இருந்தது. தாமரை மலர்கள் எல்லாம் கூம்பி இருந்தன. நாங்கள் சைகையிலேயே பேசிக் கொண்டு, முடிந்த அளவு சுவாமி, சீடர்களின் யோகத்தைக் கலைக்காமல், கருவிகளைப் பொருத்தினோம். 

என்ன அளக்கப் போகிறோம் என்றே தெரியாததால், நான் பரிசோதனையை கவனமாக அமைத்திருந்தேன். நாம் அளக்கும் பொருள் தவிர, ஆதாரமாக மாறாத ஒன்றையும் அளக்கலாம், அதனால் கருவிகள் சரியாக இருக்கின்றனவா என்று சந்தேகம் இல்லாமல் தெரிய வரும். எங்களில் ஒருவருக்கு அதே கருவிகளைப் பொருத்தி அளக்கலாம் என்று முடிவு செய்தேன். ஆனால், எங்கள் குழுவில் எல்லோருக்கும் வேலை இருந்தது. கருவிகளைப் பொருத்திக் கொண்டு உட்கார முடியாது. என் உதவியாளன் ஒரு யோசனை சொன்னான். அங்கே வெளியில் ஒரு பாறையில் அமர்ந்திருந்த கந்தசாமியை ஆதாரமாக வைத்துக் கொள்ளலாம் என்றான். எனக்கும் அது சரியாகத் தோன்றியது. கந்தசாமியின் உடலிலும் கருவிகளைப் பொருத்தினோம்.

எல்லா கருவிகளும் சரியாக வேளை செய்து கொண்டிருந்தன. சுவாமியும் சீடர்களும் ஏதோ பிராணயாமம் செய்தார்கள். மூக்கின் ஒரு பக்கத்தை மூடி இன்னொரு பக்கத்தில் உள் இழுத்து, சற்று நிறுத்தி வெளியேற்றினார்கள். எல்லோரும் ஒத்திசைவாக செய்தது பார்க்கவே ஒரு காட்சியாக இருந்தது. கந்தசாமி ஏதோ வானவெளியைப் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்தான். 

கருவிகளில் அளவுகள் வர ஆரம்பித்தன. நாங்கள் எல்லாக் கருவிகளையும் ஒரு கம்ப்யூட்டரில் இணைத்து, ஒரே திரையில் எல்லா தரவுகளையும் க்ராபிகலாக பார்க்கும்படி அமைத்துக் கொண்டோம்.

சுவாமியின் உடலில் பொருத்திய கருவியில் ஆழ்ந்த நித்திரையில் மூளையில் உண்டாகும் தீட்டா அலைகள் வர ஆரம்பித்தன. கந்தசாமியின் கருவியில் மட்டும் ஒன்றும் அதிகம் மாற்றமில்லை.

கீழ்வானம் வெளுத்து வந்தது.

மானிட்டரில் அளவுகள் எழும்ப ஆரம்பித்தன. மெதுவாக. ஹார்மோன் அளவுகளும் சீராக அதிகமாகிக் கொண்டிருந்தன. 

நாங்களாக கணக்கிட்டு ஒரு அளவைத் தாண்டினால் சிவப்பில் எச்சரிக்கை அமைத்திருந்தோம், ஒலி இல்லாமல். அந்த அளவுகளைத் தாண்டினால், சாதாரண மனித அனுபவத்தையும் தாண்டியது என்று முடிவு செய்திருந்தோம். எல்லாக் கருவிகளிலும் அந்த அளவுக்கு கால்வாசி கூட எழவில்லை. நான் ஒரு வேளை கேலிப்ரேஷன் சரி இல்லையோ என்று சந்தேகப் பட்டேன். ஆனால், ஒவ்வொருவருக்கும் அளவில் வேறுபாடுகள் இருந்தன. அதனால் கருவிகள் வேலை செய்கின்றன என்ற முடிவில் இருந்தோம். சுவாமியின் அளவுகள் எல்லோருக்கும் மேலே காண்பித்தன. சீராக ஏறிக் கொண்டிருந்தன. ஆனாலும் சிவப்பு எல்லைக்கு வெகு கீழே இருந்தன. ஆதாரமாக வைத்த கந்தசாமியின் கருவி காட்டிய அளவுகளில் எந்த மாற்றமும் இல்லை.

நாங்கள் எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். கீழ்வானம் சிவந்தது. வானத்தில் வண்ண நாடகம் ஆரம்பித்தது. சிவப்பும், ஆரஞ்சும், மஞ்சளும் நிமிடத்துக்கு நிமிடம் மாறும் தோற்றமும் மிக மிக ரம்மியமாக இருந்தது. அற்புதமான காட்சி அது. எங்கும் வண்ணக் களஞ்சியம். 

திடீரென்று ஒரு கருவியில் மட்டும் எல்லா அளவுகளும் எகிறி அடித்தன. எச்சரிக்கை சிவப்பில் சத்தமில்லாமல் அலறியது. சுவாமி உடலில் பொருத்திய கருவியாகத்தான் இருக்க வேண்டும் என்று அதைச் சரி பார்த்தேன்.

இல்லை! கந்த சாமியின் உடலில் பொருத்தி இருந்த கருவி. 

கதிரவன் மேலே எழுந்து கொண்டிருந்தான். கந்தசாமி உதிக்கும் சூரியனைப் பார்த்தபடி பரவச நிலையில் இருந்தான். குளத்தில் ஒளி பட ஆரம்பித்த இடத்தில் ஒரே ஒரு தாமரை மட்டும் மலர்ந்திருந்தது.

சூரியன் மேலே எழுந்து பிரகாசித்தது. 

*******

tharunadithan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button