நூல் விமர்சனம்
Trending

’மகாத்மா என்னும் மனிதர்’; எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் ‘அன்புள்ள புல்புல்’ நூல் விமர்சனம் – கமலதேவி

நூல் விமர்சனம் | வாசகசாலை

 

‘காந்தி இன்று’ என்ற இணையதளத்தில் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘அன்புள்ள புல்புல்’.

முதல் பத்துகட்டுரைகள் காந்தி என்ற குறியீடு பற்றியவை. அடுத்த எட்டுக் கட்டுரைகள் காந்தி என்ற ஆளுமை பற்றியவை. இரண்டையும் இணைத்துப் பார்ப்பது காந்தியை அணுகுவதற்கான சரியான முறை என்று ஆசிரியர் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

பதினெட்டு கட்டுரைகளுக்கான சிறிய அறிமுகம்:

இந்தக் கட்டுரைகள் காந்தியைப் பற்றிய நூல்கள் அல்லது காந்தி பற்றிய கட்டுரைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளன.நூல்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

1.காந்தியின் கல்வி

காந்தி சுயராஜ்ஜியத்தை ஒரு ஆலமரமாக உருவகிக்கிறார். அதன் விழுதுகளாக இருப்பவை கல்வி, காதி இயக்கம், மக்கள் சேவை, ஒத்துழையாமை போன்றவை. எந்த விழுதுக்கு நீர் வார்த்தாலும் அது மரத்துக்கே சேரும் என்ற காந்தியின் கல்வி பற்றிய கருத்தைச் சொல்லும் சிறு கட்டுரை.

2.நயி தாலிம்:காந்தியும் கல்வியும்

கல்வி என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா உட்பட அனைத்து தளங்களிலும் உறைந்துள்ள ஆகச்சிறந்த பண்புகளை வெளிக் கொணர வேண்டும். வீட்டிலும் பள்ளியிலும் கிடைக்கும் மனப்பதிவுகளில் ஒத்திசைவு வேண்டும்”: காந்தி.

காந்தியின் கல்விக் கொள்கைகள்:

1.கிராமியப் பொருளாதாரத்தை சீராக்கி அதற்குரிய கல்வியை ஏற்படுத்துதல்.கிராமப்புற தொழில்கள் சார்ந்து மாணவர்கள் கல்வி கற்க வேண்டும்.

2.தொழிலைக் கற்றுத் தேர்வதன் மூலம் யாருக்கும் அடிமையாக இல்லாமல் ஒவ்வொரு குடிமகனும் சுயமாக எழுந்து நிற்க முடியும்.

3.சமூகஅமைதியை நிலைநாட்டும் கல்வி.

4.காந்தியின் ஆதாரக் கல்வி முறை என்பது தொழில்அறிவு, அடிப்படை சுகாதாரம், பொதுஅறிவு, கணிதம், உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கியது.

கல்வி என்பது,

1.ஒட்டுமொத்த ஆளுமை வளர்ச்சி

2.கைத்தொழில்

3.உயர்ந்த பண்பு நலன்

4.தற்சார்பு

5.அகிம்சை

6.தாய்மொழி வழிக்கல்வி

7.ஆரம்பக் கல்வியான ஏழுஆண்டு இலவசக் கல்வி

8.கல்விக்கான வரையறைகள் கிராமப்புர மக்களை மனதில் வத்து தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற வரையறைகளை காந்தி வைக்கிறார்.

3.மத அடிப்படைவாத காலத்தில் காந்தி;

காந்தியுடன் நெருக்கமாக இருந்த தீவிர நாத்திகரான  கோரா சொல்கிறார்:

“என்னைப் பொருத்தவரை கடவுள் கோட்பாடு காந்திக்கு முக்கியமில்லை. மாறாக கடவுள் நம்பிக்கை பொதுநலனில் பங்காற்றுகிறது என்பதே அவருக்கு முக்கியம்.”

“கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும் விட உயர்வானதாக என் மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவாரு மறைவிளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன்.” என்கிறார் காந்தி.

அப்பையா என்ற அமெரிக்க மெய்யியலாளர், “அடையாளங்களைத் துறக்காமலும் வலிந்து சுயஇழிவை சூடிக் கொள்ளாமலும் தன்னிலிருந்து பிரித்து பிறர் என்ற ஒரு தரப்பை உருவகிக் கொள்ளாமலும் வாழ முடியுமா எனும் சவாலுக்கு நம் முன் காந்தியே நிகரற்ற விடை” என்கிறார்.

4.காந்தியின் மதம்:

நான் கடவுளை சத்தியத்தின் வடிவமாக வணங்குகிறேன்”:காந்தி.

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் வகுப்புவாதத்தை, மதவெறியை, வெறுப்புணர்வை,பகையை வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக அறிவிப்பேன்” என காந்தி சொல்கிறார். அவரின் கனவு மதசார்பற்ற ஜனநாயகம்.

பிபன் சந்திரா,நேஷனல் புக் ட்ரஸ்டின் தலைவர் கூறுவது:

பிபன் சந்திராவைப் பொருத்தவரை காந்தி பொதுவாழ்வில் சந்தித்த மிகப் பெரிய தோல்வி மதவாதக் களத்தில்தான் என்கிறார். மதவெறி முன்வைத்த பிளவுகளை எதைக் கொண்டு நிரப்புவது என்று புரியாமல் தவித்தார்.

காந்தி மதவாதத்திற்கு எதிராக தோற்றதிற்கு காரணம் அது தத்துவசிக்கல் என்று உணராததே காரணம் என்று பிபன் கூறுகிறார்.

காந்தி சத்தியத்தை தேடிக்கொண்டே இருந்தார். அதன் அடிப்படையில் தன் நிலைப்பாடுகளை கேள்விகளை மாற்றிக்கொண்டிருந்தார்.

5.சர்வாதிகாரமும் மக்களாட்சியும்

போரின் அறிவியல் ஒருவனைத் தெளிவாக நேரடியாக முற்றதிகாரத்திற்கு இட்டுச் செல்லும்’: காந்தி

ஜீன் ஷார்ப் வன்முறையற்ற போராட்டங்கள் குறித்து தன் வாழ்நாள் முழுக்க ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வாளர்.காந்தியை புதிய கோணத்தில் அணுகியவர்.

“போரும் அரசியல் வன்முறைகளும் கட்டவிழ்த்து விடப்படும் வழமையான சூழல்களை ஆராய்ந்து அதன் பின்புலத்தைக் கண்டறிந்து மாற்றாக நடைமுறை சார்ந்த அகிம்சை முறை போராட்ட வழிமுறைகளை வளர்த்தெடுப்பது காந்தியின் முக்கியப் பங்களிப்பு. இத்திசையில் அவரின் பணி முழுமையானது இல்லை என்றாலும் அவர் ஓர் முன்னோடி” என்கிறார்.

காந்தியின் மீது கவிந்த ஔிவட்டத்தைக் கழித்து ‘வன்முறையற்ற போர்’ என்ற போராட்ட முறையை அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுத்தவர் என்கிறார்.

அது சர்வாதிகாரத்தில் இருந்து மக்களாட்சியை நோக்கிய பாதை.

6.அகிம்சையின் வெற்றி

நான் வன்முறையை எதிர்க்கிறேன். காரணம், அது நன்மை விளைவிப்பதாகத் தோன்றினாலும் அந்த நன்மை தற்காலிகமாது. விளையும் தீங்கு நிரந்தரமானது”: காந்தி

எரிக்கா செனோவெத் மற்றும் மரியா ஜெ ஸ்டீபன் இருவரும் இணைந்து 1990 முதல்  2006 வரை நடந்த 323 சமூகப்போராட்டங்களை ஆய்வு செய்து முக்கிய முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர். எரிக்கா அரசியல் துறை பேராசிரியர்.

இருவரும் வன்முறைப் போராட்டங்களை விட அகிம்சைப் போராட்டங்கள் இரு மடங்கு பலனளிக்கக் கூடியவை என்கிறார்கள்.

எரிக்காவின் ஆய்வுப் பின்புலத்தில் காந்தியை, அவர் போராட்டங்களைப் புரிந்து கொண்டால் அவரின் மகத்துவம் விளங்கும் என்கிறது.

7.இந்திய வரலாற்றில் ஒத்துழையாமைப் போராட்டங்கள்

இந்த உலகிற்குப் போதிக்க என்னிடம் புதிதாக ஏதுமில்லை.சத்தியமும் அகிம்சையும் இந்த மலைகள் அளவுக்கே பழமையானவை”: காந்தி

இந்திய மரபில் ஒத்துழையாமை போராட்டங்கள்

இந்த நூலிற்கு ஜெய்பிரகாஷ் நாராயண் முன்னுரை எழுதியுள்ளார். அதில் தன்னறிவு என்பதே மிக உயர்ந்த அறிவு என்பதை பண்டைய காலங்களிலிருந்தே இந்தியா பேணி வருதலை சுட்டிக் காட்டுகிறார்.

“காலனியாதிக்கம் விட்டுச் சென்ற நிர்வாக இயந்திரத்தை இந்தியா கைக்கொண்டது ஒரு வரலாற்றுத் தவறு என்று குறிப்பிடுகிறார். இதனால் இந்தியாவின் பண்பாட்டுக் கூறுகள் அழித்தொழிக்கப்படுகின்றன” என்கிறார்.

தரம்பால் 1800 களில் பாட்னா, பனாரஸ், சரூண், போல்பூர், முர்ஷிதாபாத் போன்ற இடங்களில் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தை விவரிக்கிறார். 1874 ம் ஆண்டு நடைபெற்ற தக்காண கலகம் பற்றிக் குறிப்பிடும்போது,

“இந்தியா ஒரு தேசமாக பெரும்பாலான தருணங்களில்அகிம்சை வழியிலான ஒத்துழையாமையை அனைத்து தளங்களிலும் பயன்படுத்தியிருக்கிறது” என்னும் காந்தியின் மேற்கோளினை அக்கறையுடன் அணுகுகிறார்.

காந்திய போராட்ட முறையின் ஊற்றுகண்ணாக இரு சாத்தியக்கூறுகள்:

ஒன்று தால்ஸ்தாய், ரஸ்கின், தோரா போன்ற மேலை அறிஞர்களின் சிந்தனைகளின் உந்துதல்.

இரண்டாவதாக ஆன்மீக உச்சநிலையில் சுயமாகக் கண்டெடுத்த வழிமுறைகள்.

இந்திய மரபில் நெடுங்காலமாகவே தர்ணா, ஹர்தால், நாடு துறத்தல் போன்றவை கடைபிடிக்கப்பட்டுள்ளன.

ஆளும் வர்க்கத்திற்கும் ஆளப்படும் வர்க்கத்திற்கும் இடையே சில பொது அறங்கள் ஆங்கிலேய ஆட்சிக்கு முன் இந்தியாவில் புழக்கத்தில் இருந்தன.

8.காந்தியின் சமூகம்

“அணுகுண்டால் அழிக்கப்பட முடியாதது அகிம்சை மட்டுமே”: காந்தி

ஏ.கே சரண் எழுதிய காந்தியைப் பற்றிய கட்டுரையின் தொடர் சிந்தனையாக இந்தக் கட்டுரையை எழுதியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

காந்தி போராட்டத்தின் இயல்பையே ஆன்மீகமாக மாற்றினார். அறமே இம்மண்ணில் மனிதன் உயிர்த்திருக்கக் காரணம் என்று நம்பினார். விளைவுக்கும் வழிமுறைக்கும் இடையே ஒத்திசைவு வேண்டும் என்றார்.

ஆகவே சத்தியம், அகிம்சை, பிரம்மச்சரியம், புலன் கட்டுப்பாடு, அபரிக்ரகம், உடைமை தவிர்த்தல், அஸ்தேயம், களவாமை போன்ற மரபான விழுமியங்களைக் கொண்டு சமூகத்தைக் கட்டமைக்க முனைந்தார்.

இந்தத் தளங்களில் காந்தியின் பங்களிப்பை ஆய்வதன் மூலம் இன்றைய முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும்.காந்தி சுதந்திரப் போராட்டம் என்பதைத் தாண்டி உலக அளவில் மேம்பட்ட சமூகத்தை உருவாக்க விழைந்தார்.

9.நிகழ்கண காந்தி

“நீ குழப்பத்தில் இருக்கும்போதும் உன்னைப் பற்றிய எண்ணங்கள் உன் உள்ளத்தை நிறைக்கும்போதும் நீ பின்வரும் சோதனையை மேற்கொள்ள வேண்டும்”: காந்தி

“நீ அறிய வந்தவர்களின் மிக ஏழ்மையின் மிக எளியவனை நினைத்துப் பார்.

நீ செய்ய வேண்டும் என்று நினைப்பது அவனுக்குப் பயன்படுமா என்று உன்னைக் கேட்டுக் கொள். தனது வாழ்வை விதியைத் தீர்மானிக்கும் உரிமையை அவனுக்குத் திரும்பப் பெற்றுத் தருமா…?” இந்தக் கேள்வியில் உன் குழப்பங்களும் தன்னுணர்வும் கரைந்தே போகும் என்று காந்தி சொல்வதன் மூலம் அவரவர் செயல்களை நிறுத்துப் பார்க்கச் சொல்கிறார்.

காந்தியின் முக்கியத்துவம்

தனிமனித அளவில் மற்றும் அரசியல் சமூகப் பொருளாதார தளங்களில் காந்தியின் முக்கியத்துவம்.

காந்தி பெருவணிக இயந்திரமயமான, நகர்மயமான, நுகர்வு வேட்கை கொண்ட நவீன சமூகத்திற்கு மாற்றாக தற்சார்பு கொண்ட கிராம சமூகத்தைக் கனவு கண்டார்.

10.காம்ரேட் காந்தி

நாம் அனைவரும் ஒருவகையில் திருடர்கள்தான். என்உடனடித் தேவைக்கு அல்லாது ஏதோ ஒன்றை நான் எடுத்து வைத்துக் கொண்டேன் என்றால் மற்றொருவனுடையதை நான் திருடியதாகவே பொருள்”:காந்தி

ஒரு அகிம்சாவாதி அதிகாரத்தைக் கைப்பற்றுவது இல்லை. அடைய முயற்சிப்பதும் இல்லை. அரசிற்கு வெளியே இருந்து கொண்டே அதிகாரத்தை வழிநடத்த முடியும் என்பது காந்தியின் கொள்கை. ஏனெனில் உண்மையான அதிகாரம் மக்களிடம் இருக்கிறது என்கிறார்.

சரியான முறையில் செலுத்தப்படும் அதிகாரம் என்பது ஒரு பூ போன்றது, அதன் பாரம் நமக்கு உறைக்கக்கூடாது என்பது காந்தியின் எண்ணம்.

11.மில்லியின் காந்தி

ஆற்றல் என்பது வெல்வதால் வருவதல்ல.கடினமானவற்றைக் கடக்கும்போது சரணடைய மாட்டேன் என முடிவெடுத்தால் அதுவே ஆற்றல்”: காந்தி

மில்லி என்பவர் காந்தி பற்றி நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார். பாரதிக்கு யதுகிரி அம்மாள் போல காந்திக்கு மில்லி.

சன்யாசம் போன்றவை ஏன் பெண்களுக்கு இல்லை? அவர்களுக்கான ஆன்மீக வாழ்வு என்று ஏதுமில்லையா என்று காந்தியிடம் கேட்பவராக இருக்கிறார்.

வாய்ப்பு அமைந்திருந்தால் காந்தி சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த ஹீலர்களில் ஒருவராக பெயர் பெற்றிருப்பார் என்கிறார்.

காந்தி தன்னுடைய ஒவ்வொரு எண்ணத்தையும் மூர்க்க பிடிவாதத்துடன் முன்வைத்தார். ஆனால் விவாதத்திற்கான வாயிலை எப்போதும் திறந்து வைத்துக் காத்திருந்தார். அவரை அசைத்துப் பார்க்கும் தர்க்கங்களை ஏற்று பிழை என உணர்ந்தவற்றைக் கைவிட்டு முன் சென்றார் என்பதை மில்லி பதிவு செய்கிறார்.

12.ஜெயராம்தாஸ்

ஜெ.எஸ்.பி.ஜெயவர்தனே என்ற ஜெயராம்தாஸ் காந்தியால் அவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன் ஊதாரித்தன செல்வந்த வாழ்வை உதறி காந்திய வாழ்விற்குள் நுழைந்த காந்தியர். ஆடம்பரங்களை உதறி மேலெழுதல் பற்றிய கட்டுரை.

13.காந்தியும் பகத்சிங்கும்

பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியவர்களின் மரணதண்டனை மற்றும் இதில் காந்தி மீதான விமர்சனங்கள்.அவற்றின் அடியில் இருக்கும் உண்மை வரலாறு போன்றவை இந்தக் கட்டுரையில் சொல்லப்படுகிறது. ஆங்கில அரசுக்கு காந்தி எழுதிய கடிதம் இந்தக் கட்டுரையில் உள்ளது. “இருமைகளை கட்டமைக்க வேண்டிய நிர்பந்தம் ஆதாயம் கிடைப்பவர்களுக்கு வேண்டுமானால் தேவைப்படலாம். உண்மையை அறிய முயலும் ஒருவருக்கு அது ஒருபோதும் உதவாது. அறியாமையைக் காட்டிலும் பிழையான புரிதல்கள் ஆபத்தானவை” என நூலின் ஆசிரியர் கூறுகிறார்.

14.தண்டி யாத்திரை

நான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அழிக்க விரும்புகிறேன். அதனுடன் தொடர்புடையவர்கள் மாறுவதன் வழியாக அதை நிகழ்த்த விழைகிறேன்: காந்தி

சுதந்திரப் போரட்டத்தை அடுத்து எந்த திசையில் கொண்டு செல்வது என்று தவித்த நாட்களில்தான் தன் அந்தராத்மாவின் குரலுக்கு செவிசாய்த்து அனைவரையும் பாதித்த உப்புவரி பிரச்சனையைக் கையிலெடுத்து தண்டி யாத்திரை தொடங்கினார். அந்தப் போராட்டம் பற்றி சுபாஷ் சந்திரபாஷ் எழுதிய நூல் பற்றி கட்டுரையில் உள்ளது. மேலும் ராய்மக்ஸிமின் ’உப்புவலி’ என்ற நூல் பற்றியும் உள்ளது.

15.காந்தியும் 55 கோடியும்

“ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு பக்கமாக நின்று, இந்து இஸ்லாமிய ஒற்றுமை சாத்தியமில்லை என்று சொன்னாலும், நான் அது முழு சாத்தியம் என்றே சொல்வேன்”: காந்தி

காந்தியைப் பற்றி இன்றைய தலைமுறை…காந்தியை மிகுந்த சக்தி வாய்ந்தவராக, அவரை மீறி ஒன்றுமே நடைபெற்றிருக்க முடியாது எனவும், இந்தியாவைத் துண்டாடாமல் அவர் தடுத்திருக்க முடியும், பகத்சிங்கை காத்திருக்க முடியும் என்று நம்புகிறது. நிதர்சனம் அது அல்ல. அவரின் போராட்டங்களுக்கு சில நேரங்களில் வெற்றியும் சில நேரங்களில் தோல்வியும் கிடைத்தது என்பதே உண்மை. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை சிக்கலின் பின்னணியை இந்த அத்தியாயத்தில் கூறியுள்ளார்.

காந்தி, “என் உண்ணாவிரதம் எல்லோரின் மனசாட்சியை நோக்கிப் பேசுகிறது” என்கிறார்.

16.அன்புள்ள புல்புல்

“உண்மையான சிரிப்புதான் மெய்யான வெளிப்பாடு, பேச்சைக் காட்டிலும் ஆற்றல் வாய்ந்தது”:காந்தி

தம் விருப்பு வெறுப்பு கோபதாபங்களைத் தாண்டி புன்சிரிப்புடன் அனைத்து நெருக்கடிகளையும் சுய எள்ளலோடு புன்சிரிப்போடு கடந்து சென்றவர் காந்தி. அவரின் சிரிப்பு யாரையும் இழிவுபடுத்தாது. தன்னைத்தானே தாழ்த்திக்கொள்ளும் சுயஎள்ளல் நிரம்பியது.

அனைவரும் அறிந்த ஒரு காந்தி கூற்று உண்டு.

எனக்கு நகைச்சுவை உணர்வு இல்லாமலிருந்தால் எப்பொழுதோ தற்காலை செய்து கொண்டிருப்பேன்”.

அவருக்கு ஏற்பட்ட அசாதாரண அழுத்தங்களை அவர் அப்படிதான் கடந்தார்.

நகைச்சுவை உணர்வுடனும், சுற்றி உள்ளவர்களிடம் நல்ல முறையில் உறவைப் பேணியும் வந்திருக்கிறார். வாழ்க்கையை மகத்தான விளையாட்டாகக் கருதிய ஞானியின் பார்வை அது.

17.மகாத்மா காந்தி:ஒரு உன்னத வாழ்க்கயின் சிறு வரலாறு:வின்சென்ட் ஷீன்:

“மென்மையான முறையில் நீங்கள் இந்த உலகை உலுக்க முடியும்”: காந்தி

ஷீன் காந்தியின் கடைசி காலத்தில் உடனிருந்த பத்திரிக்கையாளர். அவரின் மரணத் தருணத்தின் நேரடி சாட்சியானவர். ஒட்டுமொத்த வாழ்க்கை பற்றிய பதிவாக அல்லாமல் ஷீன் முன்வைக்கும் தனிப்பட்ட தகவல் பார்வைகளைக் கெண்டு காந்தியைப் புரிந்து கொள்ள முயலும் கட்டுரை.

18.தரம்பாலின்காந்தியை அறிதல்

“தவறிழைப்பதற்கான சுதந்திரத்தை உள்ளடக்காத சுதந்திரத்தால் எந்தப் பயனும் இல்லை”:காந்தி

காந்தியை அறிதல் என்ற தரம்பாலின் நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. காந்தியின் சுயராஜ்ஜியக் கனவு எப்படிப்பட்டது, தொழில்நுட்பம்  குறித்த அவரின் நம்பிக்கைகள், காந்திய லட்சியம் எப்படிப்பட்டது, காந்திய வாழ்வு உணர்த்தும் படிப்பினைகள், எதிர்காலத்தில் காந்தியம்  என்ற அடிப்படைக் கேள்விகளை விவாதிக்கிறார்.

“காந்தி அமைப்புக்குள்ளிருந்த தனி மனிதர். அதனால்தான் காங்கிரஸிலிருந்து வெளியறினார். காந்தி சவாசங்கம் தொடங்கினார். பின்பு அதையும் முடக்கினார்.” என்று ஆசிரியர் கூறுகிறார்.

இந்த நூல் ஒரு புனைவிற்குரிய அழகியலைக் கொண்ட கட்டுரை நூல். என் வாசிப்பில் இதை பேரன்பின் புத்தகம் என்று சொல்வேன். ஒரு மனிதர் தான் பிறன் மேல் கொண்ட பேரன்பால் மக்கள் தலைவராகிறார். சக மனிதர், உயிர்கள் மேல் பேரன்பு கொண்ட ஒருவராலேயே இவ்வாறு சிந்திக்க, தன் தேடலை நிகழ்த்த முடியும் என்று தோன்றுகிறது. ’தாத்தா’ பிடிவாதத்திற்கு பெயர் போனவர். அதன் அடிப்படையும் அன்பாக இருக்கவே வாய்ப்பதிகம். காந்தி ஒரு யுக நிகழ்வு. அவர் எந்த யுகத்திற்கும் தேவைப்படுவார். அன்பால் எழுந்த அறத்தை சிந்தித்தவர் என்பதால், அவர் மானுடத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்ட மானுடர் என்பதால் அவர் உலகிற்குப் பொதுவானவர்.

“இது அவநம்பிக்கையின் யுகம். உண்மை பொருளற்றுப் போன காலகட்டம். எனவே காந்தி தேவைப்படுகிறார். காந்தி மனிதர்களை நம்பச் சொல்கிறார். அவர்களின் நல்லியல்புகளை நோக்கி உரையாடச் சொல்கிறார். அன்பின் ஆற்றலை கைக்கொள்ளச் சொல்கிறார். அவதூறுகளுக்கு அப்பால் அவரை அறிய வேண்டியது நம் பணி” என்று நூலின் ஆசிரியர் சுனில் கிருஷ்ணன் சொல்கிறார்.

ஆம். மேலும் இந்த நூல் பதின்பருவத்தினர் வாசிக்க வேண்டிய நூல் என்பது வாசகியாக என் எண்ணம். இந்த வாழ்வை அறத்தின், அன்பின், அகிம்சையின் அடிப்படையில் அமைக்க வேண்டிய தேவையை அவர்களிடம்தான் நாம் சொல்ல முடியும். அங்கிருந்து தொடங்குவதே பலனளிக்கும். அவர்கள் தங்களுக்கான வழிகளைத் தேடும் பருவத்தினர் என்பதால் காந்திக்காக அதைத் திறப்பதா,மூடிக்கொள்வதா என்பதை அவர்கள் வாசித்தறியட்டும்.

காந்தி நம்மைப் போன்ற மனிதர். தன் தேடலால் மாமனிதரானவர். சாதாரணருக்குரிய அனைத்து சிக்கல்களும் அவருக்கும் இருந்தன. அவர் அறியப்பட வேண்டிய ஆளுமை என்பதை குமரப்பருவத்தினரிடம் சொல்லும் நூல் ‘அன்புள்ள புல் புல்’.

காந்தி என்ற புல் புல் பறவை சத்தியத்தையும், அகிம்சையையும் சிறகுகளாகக் கொண்டு தனக்கு சாத்தியமான உயரம் வரை, நமக்கு மேலே உயர்ந்து பறந்ததை நம் பிள்ளைகள் அறிய வேண்டியது இந்த காலகட்டத்தின் அவசியமான தேவை. அதைத் தெளிவாகச் சொல்கிறது இந்த புல் புல்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button