தொடர்கள்

GoT – ஓர்‌ அறிமுகம்: SEASON 2- பால கணேசன்

 

ஏகப்பட்ட கேள்விகளோடும், ஒரு முக்கியமான மரணத்தோடும் முதல் சீசன் முடிஞ்சது. இதோ அதே வேகத்தோட, இன்னும் பல குழப்பங்களோட நாம ரெண்டாவது சீசனுக்குள்ள போகலாம்.

முதல் எபிஸோடோட ஆரம்பத்துலயே மவுண்டைன் யாரையோ போட்டு அடிச்சிட்டிருக்கான் கிங் ஜெப்ரி முன்னால வச்சி. அதை ஜெப்ரி பயங்கரமா சிரிச்சி ரசிச்சிட்டு இருக்கான். அந்த நேரத்துல நம்ம குள்ளன் கிங்ஸ் லேண்டிங்குக்கு வர்றான். அவன் ஹேண்டா பதவியேற்க வர்றது நமக்கு மட்டுந்தான் தெரியும். ஏற்கனவே நம்ம ஜெப்ரிக்கு குள்ளனை பார்த்தா பிடிக்காது. அதுபோக லேன்னிஸ்டர் குடும்ப மருமகள் செர்சிக்கு குள்ளன் மேல பழைய காண்டு இருக்கு. அதனால ஹேண்டை தேர்ந்தெடுக்குற மீட்டிங்ல ஆளாளுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் குறை சொல்றதாவே போகுது. இந்த நேரத்துல அமைச்சர் லிட்டில் பிங்கர் செர்சிக்கிட்ட வம்பிழுக்க, அப்போ ஒரு முக்கியமான வசனம் ஒன்னு வரும்.

லிட்டில் பிங்கர் செர்சியை பார்த்து “Knowledge is Power”ன்னு சொல்ல, உடனே செர்சி நிதானமா தன் பக்கத்துல இருக்குற காவலாளிகளை கூப்பிட்டு,”அவனை பிடிச்சி கட்டுங்க..அவன் கழுத்தை அறுத்து போடுங்க..”ன்னு சொல்லிட்டு, உடனே சிரிச்சிட்டே,”வேணாம் நான் என் மனசை மாத்திகிட்டேன். அவனை விட்ருங்க”ன்னு சொல்லிட்டு, ஒரு கேலியான புன்னகையோட,”Power is Power” அப்படின்னு சொல்ற அந்த காட்சி ஒன்னு போதும்.. ஏன் அந்த த்ரோனுக்காக இவ்ளோ கேம்ஸ் நடக்குதுன்னு புரிஞ்சிக்க. எஸ். பவர் இஸ் பவர்.

அங்க வின்டர்பால்ல கோமால இருந்து வெளிவந்து, இனி நடக்கவே முடியாதுங்கிற நிலைமைக்கு ஆளாகி, ஆனா இப்போ காக்கைகளை பத்தி கனவு காணுறதையே முழுநேர வேலையா வச்சிருக்கிற இப்போதைக்கு விண்டர்பாலோட தலைவனா இருக்க ப்ரான் மேல சின்ன சின்ன அதிருப்தி தெரிவிக்கிறாங்க. ஆனா அவன் புத்திசாலி. அதையெல்லாம் ஈஸியா சமாளிக்கிறான். அதேநேரத்துல அவனுக்கு கனவுகள் வர்றது நிக்கல. அப்படி வந்த ஒரு கனவை பத்தி அவன் அவளோட புது வேலையாள் கிட்ட டிஸ்கஸ் பண்றப்போ அவ எதார்த்தமா “இதெல்லாம் டிராகன் மறுபடியும் வரப்போகுதுங்கிறதுக்கான அறிகுறி மாதிரி தெரியுது”ன்னு எதார்த்தமா சொல்றா. அது ஆல்ரெடி உண்மையானதை நாம முதல் சீஸன்லயே பார்த்தாச்சு.

இது முடிஞ்சதும் நேரா புது டிராகன் அரசி இருக்குற இடத்துக்கு கதை போகுது. என்னதான் டிராகன் முட்டை பொரிச்சாலும் கூட ஏற்கனவே படை காலியாயி எங்கெங்கேயோ போயிட்டாங்க. மிச்சம் இருக்கிறது கொஞ்ச பேர்தான். நடந்தே போறாங்க ரொம்ப தூரம். பசியால் குதிரைகள் எல்லாம் ஒவ்வொண்ணா சாகுது. அதுபோக ட்ராகன்களை கொள்ளையடிக்கவும் ஆட்கள் முயற்சி செய்வாங்கங்கிற பயம் வேற. அதனால தன் படையில மிச்சமிருக்குறவங்களை அனுப்பி ஏதாவது நம்பிக்கையான இடம் இருக்கான்னு தேட சொல்றா.  இந்த சீசன்ல கலீசிக்கு அவ்ளோ வேலையில்லன்னுதான் சொல்லணும்.

 

அங்க சுவர் இருக்குற பக்கம் கேஸ்டர் அபப்டினு ஒருத்தன் இருக்கான். அவன் ஒரு வைல்ட் லிங்க்-தான். ஆனாலும் இப்போ நல்லா வீடெல்லாம் கட்டி அதுபோக தன்னோட சொந்த மகள்களையே கல்யாணமும் கட்டி குழந்தையும் பெத்துக்கிற ஆசாமி. அவன்கிட்ட இந்த வைல்ட் லினக்ஸ் எல்லாம் திடீர்னு எங்க காணாமற் போயிட்டாங்கன்னு  கேட்க,அவங்கெல்லாம் வடக்கு பக்கம் இருக்குற King-Beyond the wall மான்ஸ் ரைடரை சந்திக்க போயிருக்கிறதா தகவல் சொல்றான். இந்த மான்ஸ் ஒரு மிகப்பெரிய படையை திரட்டுற தகவலும் வந்து சேருது.

இன்னொரு பக்கம் பெரிய படையை திரட்டப்போறதா சொல்லிட்டிருந்த ராபர்ட் என்ன பண்றான்னா சிவப்பு கலர் முடி வச்சிருக்கிற மெலிசான்றே அப்படிங்கிற பொம்பளை பின்னாடி திரிஞ்சிட்டிருக்கான். அவ சொல்றதை மட்டும்தான் கேட்குறான்.இந்த மெலிசான்றே ஒளியின் பிள்ளைன்னு தன்னை சொல்லிக்கிறா. இவளோட சக்திகள் மூலமா ராபர்ட்ட ராஜாவை ஆக்கிருவான்னு நம்புறாங்க. இது பிடிக்காத கூட இருக்குற சிலரை மெலிசான்றாவாய் விஷம் வச்சி கொல்ல ட்ரை பண்றாங்க. ஆனா அவ அதை தன்னோட பவர் மூலமா தெரிஞ்சிக்கிட்டு விஷம் வச்சவங்களையே கொன்னுர்றா.

இதுபோக ராபர்ட் ராப் ஸ்டார்க்குக்கு லெட்டர் அனுப்பி, என்னதான் இருந்தாலும் இப்போ அரசனா இருக்குற ஜெப்ரி அண்ணன்-தங்கச்சிக்கு பிறந்த இல்லீகல் குழந்தை..அதனால தான்தான் உண்மையான தகுதியுடைய ஆளுன்னு சொல்றான். இதுல ஒவ்வொருத்தருக்கும் ஒரு கருத்து இருக்கு. கருத்து வேறுபாடும் வருது. இன்னொருபக்கம் அங்க கிங்ஸ் லேண்டிங்க்ல நம்ம செத்துப்போன பழைய ராசாவோட வப்பாட்டிகளுக்கு பொறந்த குழந்தைகளை எல்லாம் வரிசையா கொல்றாங்க. பிறந்த கைக்குழந்தையை கூட விட்டு வைக்கல. அங்க ஆர்யா கூட போற ஜென்ரிக்கு நைட் வாட்ச் போக வாய்ப்பு கிடைக்குது.

அங்க அந்த மகளையே கல்யாணம் பண்ற கேஸ்டர் திடீர்னு நைட்டோட நைட்டா எந்திரிச்சி தன்னோட பொறந்த குழந்தையை தூக்கிட்டு வீட்டுல இருந்து ரொம்ப தூரம் போயி அந்த குழந்தையை அங்கேயே விட்டுட்டு வர்றான். அந்த குழந்தையை யாரோ தூக்கிட்டு போறாங்க.இதை நம்ம ஜான் ஸ்னோ பார்த்துர்றான். ஜான் ஸ்னோ பார்த்ததை கேஸ்டர் பார்த்துட்டு ஸ்நோவை அடிக்கிறான். மர்மவுண்ட் கிட்ட ஜான் ஸ்னோ நடந்ததை சொல்றான். ஆனா மர்மவுண்ட் அதையெலலாம் கண்டுக்காம நாம திரும்பி போகலாம்னு சொல்றாரு. இன்னொருபக்கம் கேஸ்டரோட ஒரு பெண்ணை நம்ம சாம் லவ் பண்றான். அவளை கூடவே கூட்டிட்டு போயிறலாம்னு பிளான் பண்றான்.

இன்னொருபக்கம் அங்க கிங்ஸ் லேண்டிங்க்ல டிரியன் வப்பாட்டி குழந்தைகளை எல்லாம் கொன்ன அந்த ஆளை நைட் வாட்ச்சுக்கு அனுப்ப முடிவெடுக்கிறான். ஆனா அது செர்சிக்கு பிடிக்கல. ஏன்னா அவதான் வாரிசு பிரச்சினை வந்துரக்கூடாதுன்னு எல்லா குழந்தையையும் கொல்ல சொன்னா. அதுக்கு உதவியா இருந்த ஆளை டிரியன் நைட் வாட்ச்சுக்கு அனுப்புறதால டென்ஷன் ஆகி,”நீ பொறந்த உடனே அம்மாவை கொன்ன பயதானடா..”அப்படினு சொல்லி கோவப்படுறா.

 

தியான் க்ரெஜாய் தன்னோட சொந்த ஊருக்கு போயி கப்பல் படைகளை ராப்  ஸ்டார்க்குக்கு ஆதரவா திரட்டி வர போறான்.ஆனா அங்க போனா அவனுக்கு யாரும் மரியாதை தர்ற மாதிரி தெரியல. அவனோட சகோதரி முதக்கொண்டு அவனை கிண்டல் பண்றாங்க. அதுபோக இவன் உதவி கேட்க போன அவங்க அப்பாவே இப்ப இருக்குற குழப்பங்களை பயன்படுத்தி வடக்கு பக்கத்துக்கு ராஜாவா ஆயிரலாம்னு கனவு கண்டுட்டு இருக்காரு.விளங்குமா? இதுல கூத்து என்னன்னா க்ரெஜாய் அவங்க ஊருக்கு வர்றப்போ ஒரு பொண்ணு அவனை குதிரையில கூட்டிட்டு போகும் அவன் அப்பாகிட்ட. அது தன்னோட சகோதரிஅப்படின்னே தெரியாம இவன் இஷ்டத்துக்கு தடவிட்டு இருப்பான். அப்புறம் அவங்கப்பா சொன்னதுக்கு அப்புறந்தான் அது அவன் சிஸ்டர்ன்னு தெரியவரும். ஷேம் ஷேம் பப்பி ஷேம்.

இன்னொரு பக்கம் ராபர்டுக்கு ஆதரவா சர் டாவோஸ் அபப்டிங்கிற முந்நாளைய கொள்ளைக்காரன் ஒருத்தன் இந்நாளைய கொள்ளைக்காரர்களை திரட்டி அவங்க ஆதரவை கேட்குறான். மெலிசான்றே வேற நிறைய ஐடியா வைச்சிருக்கா.அதுல ஒன்னு ராபர்ட் கூட படுத்து புள்ள பெத்துக்குறது. அதனால செக்ஸ் வச்சிக்கிறாங்க ரெண்டு பேரும். அதாவது பார்த்தீங்கன்னா சார் இந்த சீரீஸ்ல ஒத்து வந்தா செக்ஸு.. இல்லைன்னா மர்டர்.அவ்ளோதான்.

காலொடிஞ்சி நடக்காம இருக்குற நம்ம பய ப்ரான்க்கு கனவு வர்றது இன்னும் நிக்கல. கூட இருக்குற ஒருத்தர் இவன் கனவுல வர்ற மாதிரி அந்த காலத்துல டிராகன் எல்லாம் இருந்த கதையை சொல்றாரு. இன்னும் கனவு தீவிரமா வர ஆரம்பிக்குது ப்ரானுக்கு. இந்த இடத்துலதான் ப்ரைன் ஆஃப் டார்த் அப்படிங்கிற ஒரு கேரக்டர் அறிமுகமாகுது. அரசனாக ஏங்குற ரென்லி தான் போர்ல ஜெயிச்சதும் ஜெப்ரியோட தலையை கேட்டலினோட கால்ல கொண்டு வந்து போடுறதா வாக்கு தர்றாரு. ரென்லி கல்யாணம் பண்ணியிருக்கிறது அவன் ஹோமோசெக்ஸ் வச்சிக்குறவனோட தங்கச்சியை. என்னதான் தங்கச்சி குயின் மார்க்கரிக்கு இந்த ஹோமோ மேட்டர் தெரியும்னாலும் கூட அவளுக்கு அதை பத்தி கவலையில்லை. ஆனா கூடிய சீக்கிரம் ரென்லி ஒரு குழந்தை பெத்துக்கலைனா அது பிரச்சினையாகும்னு அவளே ரென்லிக்கிட்ட சொல்றா.

தியோன் க்ரெஜாய்க்கு பயங்கர குழப்பம். ஒருபக்கம் அவங்கப்பாவே வடக்கு ராஜாவா ஆக நினைக்கிறாரு. இன்னொருபக்கம் இவன் அவங்கப்பாவை பார்க்க வந்ததே வடக்கு பக்கம் இப்போ ராஜாவை இருக்குற தன்னோட உயிர் நண்பனுக்கு ஆதரவா படை திரட்ட. இவனோட அப்பா தொடர்ந்து இவனை நீதாண்டா குடும்பத்துலயே வீக்கான ஆளுன்னு சொல்லிகிட்டே இருக்க இவனுக்கு கடுப்பாகுது. அப்பாவோட பிளான் என்னன்னா ராப் ஸ்டார்க் அப்பா செத்ததுக்கு பழிவாங்க வடக்கு பகுதியை விட்டு போறப்போ அங்க காவலுக்கு யாரும் இருக்கமாட்டாங்க. அந்த சந்தர்ப்பத்தை யூஸ் பண்ணி நாம போயி ஆட்சி அமைச்சிறலாம்னு சொல்றாரு. முதல்ல இது பிடிக்காம ராப் ஸ்டார்க்கை எச்சரிச்சி ஒரு கடிதம் எழுதுறேன் க்ரெஜாய். ஆனா கடைசி நேரத்துல அந்த முடிவை மாத்திக்கிறான்.

இதுக்கு நடுவுல தான் பிளான் பண்ற ரகசியத்தை எல்லாம் யாரோ செர்சிக்கிட்ட போட்டு கொடுக்குறாங்கன்னு கண்டுபிடிச்ச குள்ளன், அதை கண்டுபிடிக்கிறதுக்காக ஒரு பிளான் போடுறான். தான் இளவரசி மார்செல்லாவை கல்யாணம் பண்ணிக்க பிளான் பண்ணியிருக்கிறதா மேஸ்டர் பைசல், வேரிஸ் அப்புறம் லிட்டில் பிங்கர்ன்னு மூணு பேர்கிட்டயும் தனித்தனியா வேற வேற மாதிரி சொல்றான். இதன் மூலமா யார் போட்டுக்கொடுக்குறாங்கங்கிற ரகசியத்தை தெரிஞ்சிக்கலாம்ல? அது ஒர்க் அவுட்டும் ஆகுது. மேஸ்டர் பைசல்தான் அந்த கருப்பு ஆடு. மே மே  மே…… வஷீ …மே மே மே.. கண்டுபிடிச்சதும் காண்டாகுற டிரியன் நேரா போயி மேஸ்டரோட தாடியை அறுத்துட்டு ஜெயில்ல தூக்கி போட்ருவான். ஆக்சுவலா இது ஒரு செம மாஸ் ஸீன். குள்ளன் டிரியனோட மூளைக்கு உதாரணம் இது. ஏன்னா தான்தான் பெரிய அறிவாளின்னு செர்சி, வேரிஸ், லிட்டில் பிங்கர் மூனுபேருக்கும் ஒரு பெரிய மண்டகனம் இருக்கும். அதை எல்லாம் போறபோக்குல குள்ளன் அடிச்சி நொறுக்கிருவான்.

அங்க நார்த்தை நோக்கி பயணம் பண்ணிக்கிட்டு இருக்குற  ஆர்யா ஸ்டார்க்குக்கு யோரன் அறிவுரை சொல்றாரு. இந்தமாதிரி பழிவாங்குற உணர்வெல்லாம் வச்சிருந்தா அது சரியா வராதும்மான்னு சொல்றாரு.இது நடந்துட்டு இருக்கும்போதே எதிரிகள் வந்துடுறாங்க படையோட. அவங்களோட ரொம்ப வீரத்தோட யோரன் சண்டை போட்டாலும் கூட கடைசியில செத்துர்றாரு. இந்த குழப்பத்துல ஆர்யாவோட நீடில்-ங்கிற அந்த வாளை ஒருத்தன் தூக்கிர்றான். அங்க மாட்டுற நிலைமையில இருந்தாலும் ஆர்யா சமயோஜிதமா தப்பிக்கிறா.

இன்னொரு பக்கம் ஸ்டார்க் படைகள் லேன்னிஸ்டர்களை கிடைக்கிற வாய்ப்புல எல்லாம் தோற்கடிக்குது. ஆனா இதை கேள்விப்பட்ட அரசன் ஜெப்ரி, தோல்வியை தாங்கிக்க முடியாம அவன்கிட்ட கைதியா இருக்குற சான்சாவை கொடுமை படுத்துறான். அவன் தர்பார்ல வச்சே அவளை அடிச்சி, ட்ரெஸ் அவுக்க வச்சி, கடைசியில கொல்லப்போறப்போ குள்ளன் என்ட்ரி ஆகுறான். இதேமாதிரி லூசுத்தனமா ஆட்சி பண்ணி நாசமா போன மேட் கிங் பத்தி சொல்றான்.இதை கேட்ட ஜெப்ரி பாதுகாவலனுக்கு கடுப்பாகுது. ராஜாவையே எதிர்த்து பேசுறியான்னு அவன் குள்ளனை கொல்ல கத்தியை எடுக்குறப்போ, குல்லனோட புது பிரென்ட் பிரான் என்ட்ரி ஆகுறான். பிரச்சினை ஒருமாதிரி சுமூகமான யாரும் சாகாம முடியுது. சரி இந்த ஜெப்ரி ஏன் இப்படி லூசுத்தனமா பண்றான்.. பேசாம ஏதாவது பொண்ணு அரேஞ் பண்ணி அவன் ரூமுக்கு அனுப்புனா, செக்ஸ் வச்சுக்கிட்டா கொஞ்சம் லூசுத்தனம் குறைய வாய்ப்பிருக்குனு ரெண்டு பொண்ணுங்களை ஜெப்ரி ரூமுக்கு குள்ளன் அனுப்பி வைக்கிறான். ஆனா அந்த நாதாரி என்ன பண்றான்னா ஒரு பொண்ணை ட்ரெஸ் இல்லாம படுக்கவைச்சி இன்னொரு பொண்ணை வச்சி அவளை சாட்டையால அடிக்க வச்சி ரசிக்கிறான். திருந்துவானா இவன்? அக்மார்க் சைக்கோ.

செர்சியோட கசின் லான்சல் அந்த கிழவன் பைசலை ஜெயில்ல போட்டதுக்காக காண்டாகி குள்ளனை மிரட்ட வரான். ஆனா குள்ளந்தான் அவங்க அப்பனையே பார்த்தவனாச்சே..”என்னடா லான்சா..நீயும் உங்கக்கா செர்சியை போட்டியா? அவளுக்கு ஆதரவா எல்லாம் பேசுற?”ன்னு நக்கலா கேட்க, அவன் அப்பீட்டு. அய்யா இந்த விஷயத்தை வெளிய சொல்லிறாதீங்கன்னு கெஞ்சவே ஆரம்பிச்சிருவான். குள்ளனா கொக்கா!!

அங்க லிட்டில் பிங்கர் கேட்டலின் ஸ்டார்க்கை மீட் பண்றான். கேட்டலின் ஏற்கனவே அவன் மேல செம காண்டுல இருக்கா. காரணம் தன் புருஷன் சாவுக்கு இவனும் ஒருவகையில் காரணம்னு அவளுக்கு நல்லா தெரியும். அவ கோவப்படுறதை பார்த்த லிட்டில் பிங்கர் இன்னொரு பிளான் பண்றான். சான்சாவும், ஆர்யாவும் செர்சியோட பிடியிலதான் இருக்குறதாகவும், கேட்டலின் பிடிச்சி வைச்சிருக்குற ஜெமி லேன்னிஸ்டரை விடுவிச்சா அவங்க ரெண்டுபேரையும் அதுக்கு பதிலா உன்கிட்ட ஒப்படைக்க வைக்கிறேன்னு சொல்றான்.

ஆர்யாவும் அவ கூட சேர்ந்து மாட்டுன ஜென்ரி மற்றும் மத்த பசங்களையும் ஹேரான்ஹால் அப்படிங்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறாங்க.அது ஒரு சபிக்கப்பட்ட இடம். அந்த இடத்தோட தலைவன் மவுண்டைன். தினமும் ஒருத்தனை பிடிச்சிட்டு வந்து டார்ச்சர் பண்ணி கொல்றது அவனோட வேலை. அப்படி ஒருநாள் ஜென்றியை கொல்லப்போற அன்னைக்கி கரெக்ட்டா டைவின் லேன்னிஸ்டர் (அதாவது அப்பா லேன்னிஸ்டர்) அங்க வந்துர்றாரு. டார்ச்சர் பண்ணி கொல்றதை நிப்பாட்ட சொல்றாரு. ஆர்யா ஆம்பளை இல்ல பொண்ணுன்னு அவர் ஈஸியா கண்டுபிடிச்சிர்றாரு.

கலீசி ஒருவழியா சிட்டி ஆப் கார்த் அப்படிங்கிற இடத்துக்கு வந்து சேர்றாங்க. ஆனா அந்த சிட்டிக்குள்ள நுழைய நிறைய தடைகள் இருக்கு. ஆனா அங்க இருக்குற ஒரு மந்திரி மாதிரியான ஆளு அவகிட்ட டிராகன் இருக்குறத கேள்விப்பட்டு இம்ப்ரஸ் ஆகி ஊருக்குள்ள வர அனுமதிக்கிறாரு. இன்னொரு பக்கம் ஸ்டேனிஸ் தன்னோட சகோதரன் ரென்லியோட விருந்து சாப்புடுறான். ஸ்டேனிஸ் வயது அடிப்படையில ராஜாவுக்கு தகுதியான ஆளு. ஆனா ரென்லி கிட்டதான் பெரிய படை இருக்கு. ஆனா கூட இருக்குற கேட்டலினுக்கு இவங்க சும்மா மொக்க போட்டுட்டு இருக்குறதுல உடன்பாடு இல்ல. பொதுவான எதிரி லேன்னிஸ்டர்ஸ். அவங்களை தோற்கடிக்கணும். அவ்ளோதான். நமக்குள்ள எவன் பெரியவன்னு சண்டை போட்டா வேலைக்காவதுன்னு சொல்றாங்க.

அன்னைக்கி நைட்டு மெலிசான்ட்ராவை கூப்பிட்டுக்கிட்டு ரென்லி படைகள் இருக்குற இடத்துக்கு பக்கத்துல ரகசியமா போறாரு சர் லாவோஸ். அங்கவச்சி தன்னோட மேஜிக் திறமை மூலமா ஒரு ஒரு கருப்பு நிழலை பெத்தெடுக்குறா மெலிசான்றே. அதேநேரத்துல கேட்டலினோட பேசிட்டிருக்குற ரென்லி, ஸ்டெனிஸோட கூட்டணி சேர்ந்துக்குறேன்னு ஒத்துக்குறாரு.ஆனா இது நடந்த கொஞ்ச நேரத்துலயே அந்த கருப்பு நிழல் ஸ்டெனிஸ் மாதிரி வடிவம் எடுத்து, ரென்லியோட பெட் ரூமுக்குள்ள போயி அவனை கொன்னுருது. ஆஹா இது பெரிய பஞ்சாயத்து ஆயிரும்டான்னு புரிஞ்சிகிட்டு கேட்டலின் உடனே அங்க இருந்து எஸ்கேப் ஆகுறா. கூடவே அந்த உயரமான சொல்லப்போனா ரொம்பவே உயரமான ப்ரைன்னே அப்படிங்கிற அந்த லேடியும் தப்பிக்குறா. போறவழியிலேயே அவ கேட்டலினை பததி நல்லா புரிஞ்சிகிட்டு அவளுக்கு கீழ வேலை செய்ய தன்னோட விருப்பத்தை தெரிவிக்கிறா. ஆனா அதுக்கு பதில் உதவியா ஸ்டேனிசை கொல்ற வாய்ப்பை தனக்கு தரணும்னு அவ கேட்டலின்கிட்ட கேட்குறா.

ரென்லி இறந்ததும் அங்க வர்ற லிட்டில் பிங்கர் ரென்லி பொண்டாட்டிகிட்ட ஸ்டேனிஸ் படைகள் வர்றதுக்கு முன்னாடி கிளம்ப சொல்றான். அதேமாதிரி சர் டாவோஸ் தான் முதல்நாள் இரவு மெலிசான்றே பண்ண மேஜிக்கை பார்த்து பயந்ததை பத்தி ஸ்டேனிஸ் கிட்ட சொல்றாரு. ஆனா அதை காது கொடுத்து கேட்குற மாதிரியே ஸ்டேனிஸ் காட்டிக்கவே இல்ல. அங்க கிங்ஸ் லெண்டிங்-ல ரென்லி செத்ததை நினைச்சி சந்தோசமா குடிச்சிட்டிருக்கா செர்சி. அதேநேரத்துல ஒருவேளை கிங்ஸ் லேண்டிங்குக்கு போர் வந்தா அதை தடுக்க Wild Fire அப்படிங்கிற விஷயத்தை செர்சி யூஸ் பண்ணப்போறா அப்டிங்கிறத குள்ளன் கண்டுபிடிக்கிறான். அது ஒருவகையான வேதியல் பொருள். லிக்விட் பாம் மாதிரி. உடனே அதை கண்டுபிடிச்ச அந்த ஆராய்ச்சியாளர்களை போயி குள்ளன் பார்க்கிறான். அங்க போனா அண்டர்கிரவுண்ட்-ல மலை மாதிரி அந்த லிக்விட் பாம் ஸ்டாக் பண்ணி வச்சிருக்காங்க. 

விண்டர்பாலை அட்டாக் பண்ணி அதை நாம பிடிச்சிரலாம்னு பிளான் போடுறான் தியோன் க்ரெஜாய். ஏன்னா அதை செஞ்சாலாவது தன் அப்பா தன்னை கோழைனு சொல்றதை நிப்பாட்டுவாருன்னு எதிர்பார்க்கிறான். ஆக ஒரு பிளான் பண்ணி கொஞ்சம் பேரை விட்டு சிட்டிக்கு வெளிய சின்னதா ஒரு அட்டாக் பண்றான். அத தடுக்க 200 பேர் கொண்ட படையை கால் உடைஞ்ச ப்ரான் அனுப்பி வைக்கிறான். ஏற்கனவே விண்டர்பால்ல இருந்த படைகள் எல்லாம் போருக்காக ராப் கூட போயாச்சு. இருக்குற கொஞ்ச பேரும் இப்போ சிட்டிக்கு வெளிய. ஊரை பாதுகாக்க இப்போ யாருமே இல்ல. அதேநேரத்துல ப்ரானுக்கு ஒரு கனவு. கடல் வந்து ஊரை அடிச்சி காலி பண்ணிட்டு போறமாதிரி. வரபோறது முன்னாடியே அவனுக்கு கனவா வந்துருதுன்னு இதன் மூலமா அழுத்தமா தெரிஞ்சிக்கலாம்.

 

ஆர்யா ஒரு வித்தியாசமான ஒருத்தனை சந்திக்கிறா. ஆர்யா கொல்ல துடிக்கிற மூணு பேரை தான் கொல்றதா அவன் வாக்கு தர்றான். அவன் லேன்னிஸ்டர் ராணுவத்தோட உடை போட்ருக்கான். உடனே அவ டிஃளர் அப்டிங்கிறவனை கொல்ல சொல்றா. அவனும் கரெக்ட்டா கொன்னுர்றான். யார்றா அவன்னு குழப்பமா இருக்கா? அப்புறமா அதுக்கு பதில் கிடைக்கும். அங்க சுவருக்கு அந்தப்பக்கம் ஒரு சின்ன ஆர்மி ரெடியாகுது. அதாவது வைல்ட் லிங்க்ஸோட அரசனை கொல்றதுக்கு. ஜான் ஸ்னோ தானா போயி அதுல சேர்ந்துக்குறான். இன்னொரு பக்கம் அங்க கலீஸியை நல்லவிதமா வரவேற்று விருந்தெல்லாம் தர்றாங்க அந்த புது நாட்டுல. அதுல ஒருத்தன் வந்து தன்னோட House of Undying வீட்டுக்கு ஒருவாட்டி வந்து சிறப்பிக்க சொல்றான் கலீசிக்கிட்ட. அந்த பார்ட்டியில ஏகப்பட்ட விசித்திரமான ஆட்களை பார்க்கமுடியுது. கலீசியோட பாதுகாவலன் ஜோரா கிட்ட வந்து கலீசிய பத்திரமா பார்த்துக்க சொல்லி முகமூடி அணிஞ்ச ஒரு பொண்ணு சொல்றா. ஏன்னா அவளோட ட்ராகன்களை கைப்பற்ற பெரிய போட்டியே நடக்குதுன்னு சொல்றா.

கலீஸியை சிட்டிக்குள்ள வர அனுமதிச்ச அந்த மந்திரி தன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய செல்வமும், படையும் தர்றதா சொல்றான். ஆனா அதுக்கு பதிலா ட்ராகனை தனக்கு தர சொல்றான். ஆனா கலீசி இதுக்கு ஒத்துக்கல. அதுக்கு பதிலா அந்த ஊர்ல இருக்குற மத்தன் பெரிய மனுஷங்ககிட்ட தனக்கு கப்பல் படை வேணும்னு பேசுறா. ஆனா அவங்க யாரும் அதுக்கு ஒத்துக்கல. இதுக்கு நடுவுல வின்டர்பெல்ல தியோன் க்ரெஜாய் நாம நினைச்ச மாதிரியே யாரும் எதிர்பார்க்காத நேரத்துல படையோடு புகுந்து ஊரை தன் வசமாக்குறான். நேரா இப்போதைய விண்டர்பால் அரசன் பிரானை ஊர் முன்னாடி வச்சி தியோன் கிட்ட தோத்துட்டதா சொல்ல சொல்றான். அதை பிரான் செய்றப்போ கூடி இருக்குற மக்கள் தியோன் ஒரு கோழைன்னு சொல்றாங்க தான் அப்படி இல்லன்னு நிரூபிக்க, அங்க இருந்த பெரிய மனுஷர்ல ஒருவரான சர் ரோட்ரிக்கை கொல்றான். 

அங்க சுவருக்கு அந்த பக்கமா ஜான் ஸ்னோ மற்றும் அந்த சின்ன அஞ்சி பேர் கொண்ட படை வைல்ட் லிங்கை சேர்ந்த சிலரை கொல்ல பிளான் பண்றாங்க. அந்த சண்டையில ஜான் ஸ்னோ கிட்ட ஒரு பொண்ணு மாட்டுறா. அவளை கொல்லப்போகும்போதும் கூட அவ கண்ணுல பயம் இல்ல. ஜான் ஸ்நோவை அவளை கொல்ல சொல்லிட்டு மத்தவங்க கிளம்புறாங்க. அவளை கொல்லப்போற நேரத்துல தன் மனசை மாத்திக்கிறான் ஜான். அவ தப்பிச்சு ஓடுறா. திரும்ப அவளை துரத்திட்டு ஓடுற ஜான் ஸ்னோ அவளை கைதியா பிடிக்கிறான். நைட்டு குளிர் தாங்காம ரெண்டு பேரும் படுத்திருக்கும்போது ஜானுக்கு அவளை பார்த்து மூடு ஏறுது. ஆனா மேட்டர் எதுவும் நடக்கல. அவ நமட்டு சிரிப்பு சிரிச்சிக்கிறா.

இளவரசி மார்செல்லாவை கூட்டணி வச்சதுக்காக தெற்குப்பக்கம் இருக்குற டிரானுக்கு அவளை அனுப்பி வைக்கிறாங்க. இதுக்கு பதில் பழி நான் வாங்கியே தீருவேன்னு செர்சி சபதம் போடுறா. இது நடந்து முடிஞ்சதும் சைக்கோ ஜெப்ரி ஊர் வழியா நடந்து போறப்போ மக்கள் எல்லாம் அவனை திட்டுறாங்க. ஒருகட்டத்துல அவன் மேல கல் எறிய ஆரம்பிக்க, கடுப்பாகுற ஜெப்ரி எல்லாரையும் கொல்ல சொல்லி ஆர்டர் போடுறான். ஆனா கடைசியில அவன் உயிர் பிழைச்சி வர்றதே பெரும்பாடா ஆயிருது. இதை கவனிக்கிற குள்ளன் ஜெப்ரியை பளார்னு ஒரு அறை விட்டு “த்தா..உனக்கு அறிவு மயிரே கிடையாதா?”ன்னு கேட்குறான்.

இதுக்கு நடுவுல சான்சாவை ஒருத்தன் கெடுக்க ட்ரை பண்ண, கடைசி நேரத்துல ஹவுண்ட் வந்து காப்பாத்துறாரு. அங்க ஹாரன்ஹால்ல ஆர்யா  சர் அமோரி லார்ச்சை மீட் பண்றா. அந்தாளுக்கு ஆர்யா யாருன்னு நல்லாவே தெரியும். அதனால பயந்து போன ஆர்யா உடனே தன்னோட அந்த புது நண்பன்கிட்ட போயி உடனே லார்ச்சை கொல்ல சொல்றா.ஏன்னா அவன் போயி அப்பா லேன்னிஸ்டர்கிட்ட இவதான் ஆர்யான்னு சொல்லிட்டா  ஸீன் முடிஞ்சிரும். அதேமாதிரி அவனும் கொன்னுர்றான். 

இந்த கேப்-ல அப்பா லேன்னிஸ்டரை பார்க்க லிட்டில் பிங்கர் வர்றான். வந்து இருக்குற பிரச்சினைகளை எல்லா தீர்க்க ஒரு ஐடியா சொல்றேன்னு சொல்லி, இப்போ சமீபத்துல செத்துபோன ரென்லியோட பொண்டாட்டி இப்போ விதவையாதான் இருக்கா. பேசலாமா நம்ம ஜெப்ரிக்கு அவளை கல்யாணம் பண்ணி கொடுத்திட்டா எதிரிகளோட பலம் குறையும்ன்னு சொல்றான். அங்க ராப் ஸ்டார்க் தான் சமீபத்துல போர்க்களத்துல சந்திச்ச ஒரு பொண்ணை லவ் பண்ண ஆரம்பிக்க, அங்க வர்ற அவங்கம்மா கேட்டலின் “டேய் மவனே.. ஏற்கனவே நாம ஃப்ரே பேமிலிக்கு வாக்கு கொடுத்திருக்கோம்.. வேணாம்டா”ன்னு சொல்றாங்க. அந்நேரத்துல விண்டர்பால்ல இருந்து வர்ற ஒருத்தன் இந்த மாதிரி தியோன் திடீர்னு புகுந்து ஊரை தன்வசமாக்கிட்டான்னு சொல்ல, அதுக்கு கோவப்பட்டாலும் கூட உடனே திரும்பி போகமுடியாத ஒரு நிலையில இருக்கோம்னு அவனுக்கு புரியுது. அதனால ராம்சே அப்படிங்கிற சொந்தக்காரன் ஒருத்தனை அனுப்பி (அவன்கிட்டயும் படை உண்டு) தியோனுக்கு நல்ல பாடம் புகட்டலாம்னு பிளான் பண்றாங்க.

 அங்க தியோன் பிரானை பார்த்துக்கிட்டு இருந்த வேலைக்காரி ஓஷாவை ஒரு தடவை அனுபவிச்சிட்டு அவளை சுதந்திரமா விட்ரலாம்னு பிளான் பண்றான்.ஆனா இதை யூஸ் பண்ணிக்கிற ஓஷா இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரான், ரிக்கான் மற்றும் ஹொடோரை தப்பிக்க வைக்கிறா. அங்க கலீசிக்கு அவ எதிர்பார்த்த மாதிரி எதுவுமே நடக்கல. அதுவேற இல்லாம அவ ட்ராகனை பாதுகாப்பை வச்சிருந்த இடத்துல இருந்த அவளோட படைவீரர்களை கொன்னுட்டு ட்ராகனை திருடிட்டு போயிர்றாங்க யாரோ.இன்னொருபக்கம் பசங்க தப்பிச்சி போனதுல தியோனுக்கு செம காண்டு. தப்பிச்சு போற பசங்கள பிடிச்சிட்டு வந்து கொன்னுட்டது மாறி காமிக்க, அந்த ஊர்ல இருக்குற ரெண்டு பசங்களை பிடிச்சி, உயிரோட எரிச்சி ஊருக்கு மத்தியில தொங்கவிட்டு, இதுதான் ஸ்டார்க் பாய்ஸ்ன்னு சொல்லி ஏமாத்துறான். 

சுவருக்கு அந்தப்பக்கம் கைதியா பிடிச்ச லேடியோட படுத்திருக்குற ஜான் எந்திரிச்சதும், அந்த பொண்ணு இவனை கிண்டல் பண்றா. யாருக்கும் அடிமையில்லாம சுதந்திரமா வாழுறதுதான் வைல்ட் லிங்கோட லட்சியம். ஆனா அது ஜானுக்கு ஒத்துவராத விஷயம். அந்த பொண்ணு பேர் யுக்ரெட் அப்படின்னு ஜானுக்கு தெரிய வருது. ரெண்டு பேரும் மாறி மாறி பேசி பேசியே சண்டை போட்டுக்குறாங்க. யுக்ரெட் ஜான்கிட்ட பேசாம எங்க கூட சேர்ந்தா நீயும் சுதந்திரமா இருக்கலாம்னு கன்வின்ஸ் பண்றா. ஜான் அதைப்பத்தி யோசிச்சிக்கிட்டே இருக்குறப்போதான் தெரியுது தான் வழி தவறி வைல்ட் லிங்ஸ் இருக்குற இடத்துக்கு வந்துட்டோம்னு. இப்போ நிலைமை தலைகீழ். ஜான் இப்போ கைதியா மாறிடுறான். 

அங்க சான்ஸா தனக்கு ஹெல்ப் பண்ண ஹவுண்டுக்கு நன்றி சொல்றா. அந்த நேரத்துல சான்ஸா வயசுக்கு வந்துட்டேங்கிற மேட்டரை ஹவுண்ட் தெரிஞ்சிக்கிறான். இது சான்சாவுக்கு ஆப்புதான். ஏன்னா அவ வயசுக்கு வந்ததும் ஜெப்ரியை கல்யாணம் பண்ண வேண்டிய நிலைமை வந்துரும். அவன் ஒரு சைக்கோ வேற. இந்த நேரத்துல அங்க கைதியா இருக்குற ஜேமி லேன்னிஸ்டர் தனக்கு காவலா இருக்குற ஒருத்தனை கொன்னுட்டு தப்பிக்க பார்க்கிறான். ஆனா கொஞ்சநேரத்துலயே பிடிபடுறான். செத்துப்போன காவலாளியோட அப்பா பழிக்கு பழியா ஜேமியை கொன்னே தீருவேன்னு வந்து நிக்க, அவனை கொன்னுட்டா நமக்கு இருக்குற ஒரே லிவரேஜ் போயிரும்னு பயபப்டுற கேட்டலின் ஜேமியை ப்ரயேன் (உயரமான பொண்ணு) கூட தனியா பாதுகாப்பா அனுப்பி வைக்கிறா.போகும்போதே இவனை பத்திரமா கிங்ஸ் லேண்டிங் கொண்டுபோய் சேர்த்து இவனுக்கு பதிலா ஆர்யாவையும், சான்ஸாவையும் கூட்டிட்டு வான்னு சொல்லி அனுப்புறாங்க.

அங்க கலீசி தன்னோட ட்ராகனை தேடி தஹ்ரா சொல்லி அந்த ஊர் பெரிய மனுஷங்க கிட்ட முறையிடுறா. ஆனா அந்த ஊர்ல அவர்களுக்குள்ளேயே 1008 பஞ்சாயத்து இருக்குன்னும், அதுல ராஜாவாக நினைச்ச ஒருத்தன்தான் இதையெல்லாம் பண்றான்னும் புரிய வருது. அங்க விண்டர்பாலுக்கு தியோனோட அக்கா வர்றா. பசங்களை கொன்னது பெரிய முட்டாள்தனம்னு சொல்றா. எல்லாத்தையும் விட்டுட்டு அயர்ன் லேண்டுக்கு திரும்ப அவனை போக சொல்றா. ஆனா அதை தியோன் காது கொடுத்தே கேட்கல.

சுவருக்கு அந்த பக்கம் ஜான் ஸ்னோவை கைதியா பிடிச்சிட்டு போறாங்க. அங்க போனா ஏற்கனவே அவன் கூட வந்த மிச்ச நாலு பேரை பிடிச்சி வச்சிருக்காங்க. அங்க இருந்து வைல்ட் லிங்ஸ் ராஜாவை பார்க்க இவங்களை கைதியா கூட்டிட்டு போறப்போ, ஜான் ஸ்நோவை ரகசியமா ஒரு அண்டர் கிரவுண்ட் ஆபரேஷனுக்கு ரெடி பண்ணி அனுப்புறாரு சுவரை பாதுகாக்குறவங்களோட தலைவர். அந்நேரத்துல  ஜான் ஸ்னோ பிரென்ட் சாம் டிராகன் கண்ணாடியால செய்யப்பட்ட கத்திகள் நிறைஞ்ச ஒரு பெட்டி புதைச்சு வைச்சிருக்கிறதை கண்டுபிடிக்கிறான். 

அங்க ஹாரன்ஹால்ல இருந்து அப்பா லேன்னிஸ்டர் கிளம்புறப்போதான் ஆர்யாவுக்கு விளங்குது நாம ஏன் இத்தனை நாள் இந்த எல்லா பிரச்சினைக்கும் தலைவனா இருக்குற அப்பா லேன்னிஸ்டரை ஏன் கொல்ல சொல்லாம போனோம்னு. இப்போ கொன்றலாம்னு நினைக்கிறப்போ அந்தாளு கிளம்பி போயிட்டாரு. லூசு ஆர்யா. ஆனாலும் அந்த புது நண்பன் மூலமா ஆர்யா மற்றும் அவளோட மத்த நண்பர்கள் எல்லாம் பாதுகாப்பா அந்த இடத்தை விட்டு தப்பிச்சு போயிர்றாங்க. 

அங்க கிங்ஸ் லேண்டிங்க்ல போர் வர்றதுக்கான எல்லா அறிகுறியும் இருக்குறதால குள்ளன் என்னவெல்லாம் பண்ணமுடியும்னு பிளான் பண்றான். ஆனா போர்ல ஒருவேளை தன்னோட பையன் ஜெப்ரி கொல்லப்பட்டா தான் குள்ளனோட லவரை கொன்னுருவேன்னு மிரட்டுறா செர்சி. ஆனா செர்சி பிடிச்சிட்டு வந்தது தப்பான பொண்ணு. ஆனாலும் அதை கண்டுக்காத குள்ளன் “ஒருநாள் உன்னோட எல்லா ஆசையும் சாம்பலா போயிரும்”ன்னு செர்சிக்கு சாபம் தர்றான். அப்போதான் தான் தன்கூடவே வந்த அந்த விபச்சாரி பொண்ணை உண்மையாவே லவ் பண்றதை குள்ளன் உணர்றான். இன்னொருபக்கம் ராப், போர்ல கிடைச்ச பொக்கிஷமான தலிஷாவை லவ் பண்றான். லவ் பண்ணதும் பத்தாம செக்ஸும் வச்சிக்கிறான். 

அங்க போருக்கான எல்லா விஷயமும் தயாரா வச்சிருக்கிற ராபர்ட் ப்ராதரன் இரவோடு இரவா தன்னோட கப்பல் படைகளோட கிங்ஸ் லேண்டிங் கிளம்புறாரு. இங்க குள்ளனும் போருக்கு தயாராகுறான். அந்த கெமிக்கல் இருந்தது இல்லையா? அதை எப்படி யூஸ் பண்ணலாம்னு அவன் பிளான் போடுறான். போருக்கு கிளம்புற ஜெப்ரி நக்கலா தன்னோட வாளை கிஸ் பண்ண சொல்றான் சான்சாவை. போர் வரப்போகுது. 

கடல்ல இருந்து பார்க்குறப்போதான் புரியுது ஒரே ஒரு கப்பல் மட்டுந்தான் லேன்னிஸ்டர் சார்பா போரிட கடல்ல நிக்குது. அப்புறந்தான் ஸ்டெனிஸ்-க்கு புரியுது அந்த கப்பல் முழுக்க அந்த கெமிக்கல் நிறைஞ்ச பாம் இருக்குற விஷயம்.இதை சர் டாவோஸ்தான் முதல்ல உணர்றாரு. அடுத்த நொடியே அந்த ஒற்றை கப்பல் வெடிக்குது. எதிர்த்து போரிட வந்த எல்லா கப்பலும் எறிஞ்சி சாம்பலாகுது. இதை பார்க்குற ஸ்டெனிஸ் அப்போ உடனே தரைவழியா படையை அனுப்பலாம்னு முடிவெடுக்குறாரு. இதெல்லாம் நடக்கும்போது அரண்மனைக்கு உள்ள செர்சி ஒருவேளை நாம போர்ல தோத்துட்டா என்னை எப்படியெல்லாம் ரேப் பண்ணுவாங்கன்னு சான்ஸா கிட்ட சொல்லிட்டு இருக்கா. அதுவும் முழு போதையில. 

மாறி மாறி அம்பு மழை பொழியுது. போர் உக்கிரமா நடக்குறதை கேள்விப்பட்ட செர்சி உடனே தன்னோட மகனை போர்க்களத்துல இருந்து பாதுகாப்பை கூட்டிட்டு வர சொல்றா. அதேநேரத்துல நல்லா சண்டை போட்டுட்டு இருக்குற ஹவுண்டுக்கு சுற்றிலும் தீ ஏறியிறத பார்த்து மூட் அவுட் ஆயிருது. ஏன்னா அவனுக்கு நெருப்புன்னாலே அலர்ஜி. அவன் முகம் பாதி வெந்ததுக்கு காரணம் அதுதானே!! அதனால அவன் திடீர்னு சண்டை போடுறதை நிப்பாட்ட, அதை பார்த்த ஜெப்ரி டென்ஷனாகி கத்த,”ராஜாவாவது மயிராவது”ன்னு சொல்லிட்டு ஹவுண்ட் போர்க்களத்துல இருந்து போயிர்ரான். அவனே போனதும் மத்த போர்வீரர்கள் எல்லாம் சண்டை போடுறதை நிப்பாட்டிர்றாங்க. உடனே களத்துக்கு வர்ற குள்ளன் “சண்ட போடாதவன் எல்லாரோட அம்மாவும் சிலுக்குடா..”ன்னு சொல்லிட்டே அவனே நேரடியா சண்டை போட ஆரம்பிக்கிறான். குள்ளானே சண்டை போடுறான்னு எல்லாரும் மறுபடி போருக்கு திரும்புறாங்க.

அந்நேரத்துல குள்ளனோட காதலி சான்சாவை பாதுகாப்பா ஒரு ரூமுக்கு அனுப்பி வைக்கிறா. அங்க போற வழியில ஹவுண்ட் உக்காந்திருக்கான். அவன் தன்மையா “நான் வேணும்னா உன்னை கொண்டு போயி உங்க ஊர்ல அதாவது விண்டர்பால்ல பத்திரமா விட்டுர்றேன்”ங்கிறான். ஆனா லூசு சான்ஸா வந்த நல்ல சான்சை மிஸ் பண்ணிட்டு தேமேன்னு நிக்குறா பதில் சொல்லாம. இந்த பொண்ணு வேலைக்காகாதுன்னு உணர்ந்த ஹவுண்ட் அங்க இருந்து போயிர்ராப்ல. 

போர் ரொம்ப உக்கிரமாகுது. ஒரு கட்டத்துல குள்ளனை ஒருத்தன் கொல்லப்போற கடைசி செகண்ட்ல ஒருத்தன் வந்து காப்பாத்துறான். ஆனா அபப்டியும் கூட குள்ளன் முகத்துல ஒரு பெரிய மார்க் விழுந்துருது. மயக்கமாகி விழுற குள்ளனை பத்திரமா தூக்கிட்டு போயிர்ராங்க. அப்போ திடீர்னு இன்னொரு பெரிய படை உள்ள வந்து ஸ்டேனிஸ் ஆட்களை கொல்ல ஆரம்பிக்குது. அப்புறந்தான் தெரியுது அது அப்பா லேன்னிஸ்டரோட படைகள்ன்னு. அதனால வேற வழியில்லாம ஸ்டேனிஸ் தன்னோட படைகளை வாபஸ் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகுறான். லேன்னிஸ்டர்ஸ் போர்ல ஜெயிக்கிறாங்க.

போர் முடிஞ்சது. குள்ளன் மறுநாள் காலையில முழிக்கிறப்போ அவன் ஜெயில்ல போட்ட அந்த பைசல் கிழவன் “உங்க அப்பா வந்துட்டாரு. இனிமே நீ கிங்ஸ் லேண்டிங்கோட ஹேண்ட் கிடையாதுன்னு” சிரிச்சிகிட்டே சொல்றாப்ல. மறுநாள் ஜெயிச்ச சந்தோஷத்துல இருக்குற ஜெப்ரி தன்னோட தாத்தாவுக்கு நன்றி சொல்லிட்டு, அவரை ஹேண்டா நியமிக்கிறான். அதேமாதிரி இந்த வெற்றிக்கு ஹெல்ப் பண்ண லிட்டில் பிங்கருக்கு ஹாரன்ஹால் ஊரை எழுதி தர்றான். மேலும் ஏற்கனவே அவன் பிளான் பண்ண மாதிரி செத்துப்போன ரென்லியோட கன்னி கழியாத விதவை பொண்டாட்டியை ஜெப்ரி கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்றான். இதை கேட்டு ஏற்கனவே நிச்சயமாகி இருந்த சான்ஸா டென்ஷன் ஆவான்னு நினைச்சிருப்பான் போல. ஆனா செய்தி கேள்விப்பட்ட சான்ஸா மனசார சிரிப்பா. ஏதோ பெரிய விடுதலை அடைஞ்ச உணர்வு அளவுக்கு. ஆனா இதை கவனிச்ச லிட்டில் பிங்கர் “என்னதான் அவன் உன்னை கல்யாணம் பண்ணாம போனாலும் கூட உன்னை பலவகையில் டார்ச்சர் பண்றதை நிப்பாட்ட மாட்டான்”னு சொல்லிட்டு மறுபடி அவளை சோகத்துக்குள்ள தள்ளிர்ரான்.

போர் நடக்கும்போது செர்சி சொல்லிதான் தன்னை ஒருத்தன் கொல்ல வந்தான்னு குள்ளன் தெரிஞ்சிக்கிறான். அதேமாதிரி குள்ளனோட நண்பன் ப்ரோனை அவன் இருந்த பதவியில் இருந்து டிஸ்மிஸ் பண்ணிட்டாங்கன்னும் கேள்விப்படுறான். இந்நேரத்துல கிங்ஸ் லெண்டிங்க்கு ஜேமியோட வர்ற ப்ரைனா வர்ற வழியில நிறைய பேரை கொல்ல வேண்டியதா இருக்கு. இதை பார்க்குற ஜேமிக்கு அவ மேல ஒரு நல்ல அபிப்ராயம் வருது.  இதுக்கு நடுவுல ராப் ஸ்டார்க், தான் லவ் பண்ண பொண்ணு தனிஷாவை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிறான். போர்ல தோத்து போன ஸ்டெனிஸ் நாம கண்டிப்பா ஜெயிப்போம்னு ஜோசியம் சொன்ன மெலிசான்றா மேல கோவப்படுறாரு. ஆனா அவ அதைப்பத்தி அலட்டிக்காம நாம கண்டிப்பா மறுப்படியும் ஜெயிப்போம்னு சொல்றா. அவ மேல மயக்கத்துல இருக்குற ஸ்டெனிஸ் அதை ஏத்துக்கிறாரு. 

அங்க தியோன் க்ரெஜாய் அவங்க அக்கா கூப்பிட்டப்பவே போகாம பிடிவாதமா இங்கயே இருந்ததுனால இப்போ மாட்டிகிட்டு முழிக்கிறான். ஏன்னா ராப் ஏற்பாடு பண்ண ராம்சே மற்றும் அவனோட படை விண்டர்பால் முழுக்க சூழ்ந்துரிச்சி. இப்போ தப்பிக்க முடியாத நிலைமை. அதனால தைரியமா போரிட்டு நாம ஜெயிச்சிரலாம்னு முடிவு பண்ணி , மிச்சமிருக்கிற தன்னோட படைவீரர்களை பார்த்து ஆக்ரோஷமா வீரவசனம் பேசுறான். அந்தோ பரிதாபம்!! அவனோட படை வீரன்ல ஒருத்தனே அவன் முதுகுல ஒரு போடு போட்டு அவனை விட்டுட்டு போயிர்ராங்க. 

ஆர்யா தன்னோட புது நண்பனோட போயிட்டு இருக்கும்போது, அவன் கொல்றமாதிரியே தனக்கும் மத்தவங்களை கொல்ல சொல்லித்தர சொல்றா. அதுக்கு அவன் (பேர் ஜாக்கின்) எங்கூட ப்ராவோஸ் அபப்டிங்கிற இடத்துக்கு வான்னு சொல்றான் அங்கே Faceless Men அப்படிங்கிற மிக சக்தி வாய்ந்த அசாசினேஷன்ஸ் உருவாக்கப்படுறாங்கன்னு சொல்றான். ஆனா ஆர்யா இப்போ என்னால வரமுடியாதுன்னும், தன்  குடும்பத்தை கொன்னவங்களை கண்டுபிடிக்க வேண்டியிருக்குன்னும் சொல்றா. அதனால ஜாக்கின் ஒரு நாணயத்தையும், சில பழங்கால வார்த்தைகளையும் சொல்லித்தந்துட்டு, அதுவரைக்கும் இருந்த முகத்தை மாத்திட்டு டக்குன்னு வேற ஒரு முகமா அவதாரம் எடுத்துட்டு போயிர்றான்.

தப்பிச்சு போன ப்ரான், ஹாடோர் எல்லாரும் திரும்பி விண்டர்பால் வந்து பார்க்குறாங்க. அங்க ஊரே எரிஞ்சி  போயி இருக்கு. குத்துயிரும் கொலையுயிருமா இருக்குற அந்த ஊர் பெரிய மனுஷர் ஒருத்தர் அவங்களை உடனே சுவருக்கு போக சொல்றாரு. அங்க இருக்குற நைட் வாட்ச் பாதுகாப்பு தருவாங்கன்னு சொல்றாரு. அதுபோக அங்க ஜான் ஸ்னோ இருக்குறதால அவன் பார்த்துப்பான்னு சொல்றாரு. அவங்களும் கிளம்புறாங்க. ஆகமொத்தம் இப்போ விண்டர்பால்ல ஸ்டார்க் குடும்பத்தை சேர்ந்த யாருமே கிடையாது. 

அங்க கலீசி தன்னோட ட்ராகன்களை தேடி அந்த அமானுஷ்ய வீட்டுக்கு போறா. அங்க உள்ள போனதும் அவளுக்கு என்னென்னவோ விஷன் தோணுது. அவ அயர்ன் த்ரோனை பார்க்குற மாதிரியும், ஆனா அதை தொடப்போகும்போது அது மறையிற மாதிரியும் காட்சிகள் வருது. ஒருவழியா கட்டிப்போட்டு வைச்சிருக்குற தன்னோட குட்டி ட்ராகன்களை கண்டுபிடிக்கிறா. அந்நேரத்துல அங்க வர்ற அந்த மந்திரவாதி கலீசியையும் ஒரு சங்கிலியில கட்டி போட்டுர்றான். டிராகன், டிராகனோட அம்மா ரெண்டு பேரையும் இப்படியே ஆயுசு முழுக்க கட்டிப்போட்டு அவங்களோட பவரை மட்டும் யூஸ் பண்றது அவங்களோட பிளான். ஆனா இது நடக்கும்போது அம்மாவை கட்டி போடுறதை பார்க்குற குட்டி டிராகன் தன்னோட வாயில இருந்து நெருப்பை கக்கி அந்த மந்திரவாதியை கொன்னுருது. அங்க இருந்து வெளிய வர்ற கலீஸி அந்த செத்துப்போனவன் சொத்தையெல்லாம் வச்சி தனக்கு தேவையான படையை வாங்கிக்கிறா. 

அங்க சுவருக்கு அந்தப்பக்கம் நடந்து போற வைல்ட் லிங்க் மற்றும் ஜான் ஸ்னோ டீம் என்ன ஆகுதுன்னா போறவழியில ஜான் ஸ்னோ நைட் வாட்ச்சுக்கு எதிரான ஆளுன்னு காமிக்க, அந்த அஞ்சி பேர் கொண்ட குழுவோட தலைவர் வேணும்னு சண்டை இழுத்து ஜான் ஸ்னோ கையாள செத்து போறாரு. அதனால வைல்ட் லிங்ஸ் ஜான் ஸ்நோவை தங்கள்ல ஒருத்தன ஏத்துக்குறாங்க. இது நடக்குறப்பவே ஒரு அபாய மணி சத்தம் மாதிரி ஒன்னு கேட்குது. அதுக்கு அர்த்தம் வைட் வாக்கர்ஸ் வர்ராங்க அப்படிங்கிறது. இறந்து போன மனிதர்களோட அந்த படை அந்த குளிர் படர்ந்த இடத்துல, வெண்புகை சூழ தன் தலைவன் ஆணைப்படி நடந்து வந்துட்டு இருக்கு. 

ஆக இப்போ ஆர்யாவுக்கு அடுத்து என்ன பண்றதுன்னு தெரியல.எங்க போறதுன்னும் தெரியல. குள்ளன் தன்னோட ஹேண்ட் பதவியை இழந்துட்டான். அவன் நிலைமை அடுத்து என்ன வேணும்னாலும் ஆகலாம்.சான்ஸா இன்னும் லூசுமாதிரி கிங்ஸ் லேண்டிங்க்லயேதான் இருக்கா. ஸ்டேனிஸ் தோத்து போயிட்டு இப்போ அடுத்த வாய்ப்பு எப்போ வரும்னு இருக்காரு. ப்ரான் ஸ்டார்க் தன்னோட பாதுகாவலர்களோட சுவரை நோக்கி போறான். ஜான் ஸ்னோ வைல்ட் லிங்க்ஸ் கூட இருந்து ஒற்றன் வேலை பார்க்கணும். ராப் ஸ்டார்க் கல்யாணம் பண்ண ஜோர்ல இருக்கான். எல்லாத்துக்கும் மேல வைட் வாக்கர்ஸ் வந்துகிட்டு இருக்காங்க.

எல்லா கேள்விக்கும் பதில் மூன்றாம் சீசன்ல கிடைக்குமா? காத்திருப்போம்.

 

தொடரும்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button