நேர்காணல்கள்

“பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகிவிட்டது”- சித்துராஜ் பொன்ராஜ் உடனான நேர்காணல்

நேர்கண்டவர்: க.விக்னேஷ்வரன்

 

சித்துராஜ் பொன்ராஜ் சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இள வயது முதல் தமிழிலும், ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி வருபவர். இதுவரை மூன்று நாவல்கள், இரண்டு சிறுகதை தொகுப்புகள், இரண்டு கவிதை தொகுப்புக்கள் வெளியிட்டு தமிழ் இலக்கியச் சூழலில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க இளம் எழுத்தாளர். சிங்கப்பூர் அரசாங்கத்தில் இணைய பாதுகாப்பில் இயக்குநராக பணியாற்றுகிறார். வாசகசாலை இணையதளத்திற்காக நண்பர் க.விக்னேஷ்வரன் கண்ட நேர்காணல் இது.

சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியச் சூழல் பற்றி இங்கு தமிழகத்தில் பெரிய அறிதல் இல்லை! சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியச் சூழல் எங்கு தொடங்கியது? எப்படி பயணம் செய்தது? உண்மையில் இப்போது எப்படி இருக்கிறது?

  • சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிய பரவலான அறிதல் இல்லாதது என்னைப் பொருத்தவரையில் துரதிர்ஷ்டமான  நிலைமைதான். இந்த அறியாமையினால் வெளிநாட்டிலுள்ள வாசகர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ர்களின் வாழ்வியலைப் பற்றிய பல முக்கியமான பார்வைகளை இழக்கிறார்கள். சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஒரே தன்மையுடையது அல்ல. சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தில் மூன்று முக்கிய பகுப்புக்கள் உள்ளன. முதலாவதாக சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எழுதுவது. இரண்டாவதாக இங்கு நிரந்தரமாக வெளிநாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் எழுதுவது. மூன்றாவது இந்த ஊருக்குக் குறுகிய கால அடிப்படையில் தொழில் செய்ய வந்து செல்பவர்கள் எழுதுவது. இம்மூன்றும் மூன்று வகையான பார்வைகளைக் கொண்டவை. அவை பேசும் பிரச்சனைகளிலும் அவற்றின் மொழியிலும் நுணுக்கமான பல வேறுபாடுகள் உண்டு. இவை மூன்றையும் ஒரே இலக்கியமாகக் கருத முடியுமா என்ற சந்தேகம் எனக்கு நிறையவே உண்டு. ஆனால் அது முக்கியமல்ல. சிங்கப்பூரிலிருந்து பிறக்கும் இந்த மூன்று வகையான இலக்கியங்களும் நான் முன்னால் சொன்னது போல் வித்தியாசமான பார்வைகளை வழங்கக் கூடியவை. ஒரு சில எழுத்தாளர்களைப் படித்துவிட்டுச் சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்தைப் பற்றிப் பேசுவது முழுமையான ஆய்வாகாது. கதை எழுதுபவர்களில் எம்.கே. குமார், ரமா சுரேஷ், பிரேமா மகாலிங்கம், மணிமாலா மதியழகன், சித்ரா ரமேஷ், ஷா நவாஸ் என்று பலர் சிறப்பாக செயல்படுகிறார்கள். கவிதையில் சுபா செந்தில்குமார், மதிகுமார் தாயுமானவன் ஆகியோரைச் சொல்லலாம். கனகலதா இரண்டிலும் சிறப்பாகச் செயல்படுகிறார். இன்னும் பல பேர் உள்ளனர். தேடிக் கண்டு கொள்ள வேண்டும். இதற்காக சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் உன்னத நிலையில் இருக்கிறது என்றும் சொல்லி விட முடியாது. தீவிரம் போதவில்லை என்பதுதான் என் எண்ணம்.

தீவிர வாசிப்புக்குள் நீங்கள் வந்ததைப் பற்றியும் அதிலிருந்து தீவிர இலக்கியத்தில் எழுத வந்தது பற்றியும் இந்த இரண்டு கட்டங்களிலும் உங்களுக்கு ஆதரவாக இருந்த மனிதர்கள் மற்றும் இலக்கிய ஆசான்கள் பற்றியும் சொல்ல முடியுமா?

  • தீவிர வாசிப்புக்குள் தத்துவவியல் சார்ந்த படிப்பினால் வந்தேன். முதுகலைப் பட்டங்களில் பல பாடங்கள் படித்திருந்தாலும் என் அடிப்படைக் கல்வி தத்துவமும் அரசியலும் சார்ந்தது. குறிப்பாக இருத்தலியல். ஆழந்த தத்துவ சித்தாந்த அடிப்படைகளைக் கொண்ட நாவல்களை எழுதிய டால்ஸ்டாய், தஸ்தவ்யஸ்கி, துர்காபேவ், சார்த்தர், காமூ, போலானியோ, ஜெயமோகன் போன்றவர்கள் என்னைத் தீவிர வாசிப்புக்கு அழைத்து வந்தார்கள். இவர்களில் சிற்சிலரோடு பின்னாளில் ஊடல் கொண்டேன் என்பது வேறு விஷயம்.

ஜெயமோகனுக்கு நீங்கள் எழுதிய கடிதம் ஒன்று படிக்க நேர்ந்தது (உங்களுக்கு தமிழ் தெரியாது என்று அவர் எழுதியதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்து எழுதிய கடிதம் என்று நினைக்கிறேன்) அதில் உங்கள் தந்தையார் கன்னடம் என்றும், தாயார் மலையாளம் என்றும் இந்த சூழ்நிலையில் தமிழ் எப்படி உங்கள் தந்தையால் உங்களுக்கு கற்றுத் தரப்பட்டது என்றும் எழுதி இருந்தீர்கள். இன்று உலகம் முழுவதும் பயணம் போகிறீர்கள். கிட்டத்தட்ட மலாய், ஸ்பானிஷ் இப்படி நிறைய மொழிகள் உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். இதையெல்லாம் தாண்டி தமிழில் எழுத வந்தது ஏன்? 

  • என் குடும்பச் சூழலுக்கு உகந்தபடி நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்க தமிழையும் வேதம் கற்க வடமொழியும் கற்க வேண்டும் என்று அப்பா சொன்னார். மற்ற மொழிகள் பல்கலைக் கழகப் படிப்புகளுக்காகவும் தொழிலுக்காகவும் கற்றுக் கொண்டது. இந்த மொழிகளை ஒப்பிட்டுப் பார்க்கத் தமிழில்தான் என் எண்னங்களைச் சரியாகச் சொல்ல முடியும் என்றும் தமிழ்தான் எனக்கு ஓரளவுக்குக் கைவருகிறது என்றும் தோன்றியது. அதனால் தமிழைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டேன். அது என் முன்வினைப் பயன் என்று சொல்லலாமா என்று சார்த்தர்தான் சொல்ல வேண்டும்! ஆனால் ஒன்று சொல்வேன். மொழி என்ற வகையில் தமிழ் கிரேக்கம் போல் அழகானது. தத்துவ  விசாரத்துக்கு இடம் தருவது. அதே சமயம் பல மொழிகள் கற்றது பல வகையான மக்களைச் சந்திக்கவும் அவர்களோடு உரையாடவும் அவர்கள் கதைகளை அறிந்து கொள்ளவும் உதவியது. இவர்களது கதைகள் என் எழுத்தில் வந்திருக்கின்றன. இனியும் வரும். பலதரப்பட்ட மக்களோடு நடத்திய உரையாடல்கள் என் எழுத்தையும் கற்பனையையும் வளப்படுத்தியுள்ளன.

தீவிர இலக்கிய வாசகராக  சிறுகதை வடிவத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? ஒரு நவீன எழுத்தாளராக சிறுகதை வடிவத்தை எப்படி பார்க்கிறீர்கள்? (இரண்டுக்கும் இடையே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதாக நினைக்கிறேன்.உங்களது சில சிறுகதைகள் இப்படி எழுதப்பட்டு இருக்கிறன.)

  • பாரம்பரிய சிறுகதை வடிவம் காலாவதியாகி பல நாளாகி விட்டது. சிறுகதை மன்னன் என்று நாமெல்லோரும் கொண்டாடும் செக்காவின் சிறுகதை வடிவம் வேறு. இன்று பரவலாகக் காணப்படும் வடிவம் வேறு. இன்று பல சிறுகதைகள் நெடுங்கவிதைக்கும் பாவ அறிக்கைக்கும் குறுநாவலுக்கும் இடைப்பட்டவையாக இருக்கின்றனவோ என்று கருதவும் இடமுண்டு. இலக்கிய வடிவங்களை அச்சில் வரும் உருவத்தைக் கொண்டு அளவிடுவதைத் தவிர்த்து அவை ஏற்படும் விளைவால் அளவிட வேண்டியது அவசியம். அப்படி இல்லை என்றால் மேற்கூறிய குழப்பங்கள் தோன்றும். நாவல் என்பது பன்முகத்தன்மையோடு ஒரு சமூகத்தின் மொத்த வாழ்வை மதிப்பீடுகளை அள்ளித் தர வேண்டும். சிறுகதைக்கு கதைச்சம்ப ஒருமை அவசியம்.

மாறிலிகள் மற்றும் ரெமோன் என்னும் தேவதை என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளை எழுதியுள்ளீர்கள். இரண்டில் சிறுகதை வடிவங்களின் எல்லா முயற்சிகளையும் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறீர்கள் !! ஜெயமோகன் உங்களின் மாறிலிகள் சிறுகதைத் தொகுப்பை இலக்கியத்தின் வெற்றி எனப் பாராட்டி எழுதியுள்ளார். நான் வாசித்துவரை இரண்டு தொகுப்புகளிலும் நவீன மனம் ஒன்று இருக்கிறது. அது வாழ்வியல் சிக்கல்கள், பாலியல் நெருக்கடிகள் முக்கியமாக மாற்று பாலின நெருக்கடிகள், இயந்திரமாகி விட்ட தனி மனித வாழ்வுகள், மனித மனதின் ஆழத்தில் இருக்கும் உணர்ச்சிப் பிழம்புகள் வெளிப்படும் தருணங்கள் இப்படி எல்லாமே வெளிப்படும் தொகுப்புகளாக அவை இருக்கிறது. இவற்றை மீறி தள்ளி நின்று ஒரு இலக்கிய  விமர்சகராக இப்போது அந்தத் தொகுப்புகளை எப்படி அணுகுவீர்கள்?

  • மாறிலிகளைப் பாராட்டிய ஜெயமோகனின் பெருந்தன்மைக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவன். அவர் வார்த்தைகளால் இன்னும் சில புத்தகங்கள் விற்றன. முகநூலில் இன்னும் சில நண்பர்கள் சேர்ந்தார்கள். ரெமோன் பற்றியும் அவர் ஏதேனும் சொன்னால் நன்றாகத்தான் இருக்கும். இந்த இரண்டு தொகுப்புகளிலும் உள்ள கதைகளின் உள்ளடக்கத்தைப் பற்றி நீங்கள் சொன்னது எல்லாம் சரிதான். ஆனால் நாவல் கலை பற்றி எழுதிய ‘மிலான் குண்டேரா’ இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழலில் தனிமனித வாழ்க்கையின் சின்ன மகிழ்ச்சிகளும் அவலங்களும் மறக்கப்படாமல் பதிவு செய்வதே நல்ல நாவலின் வேலை என்கிறார். அதுதான் என் தொகுப்புகளின் வேலை என்று கருதுகிறேன். தனி மனித வாழ்க்கைகளின் தனி மனித முடிவுகளின் தொகுப்புத்தான் நமது சமூக மற்றும் அரசியல், கலாச்சார, மதம் சார்ந்த நகர்வுகளாக மாறுகின்றது. ஆகையால் இந்த நகர்வுகளைப் புரிந்து கொள்ள மனித செயல்பாடுகளின் உன்னதங்களையும் அபத்தங்களையும் நுணுக்கமாக ஆராய்வது அவசியம்.

சிறுகதைகள் பொருந்தவரை உங்களின் ஆசான் யார், தமிழ் இலக்கியச்சூழலில் சேர்த்து?

  • அமி, அம்பை, ஜெமோ. ஆங்கிலத்தில் லோரி மூர்,.ட்ரூமென் கபோட், ஜேம்ஸ்.ஜாய்ஸ்.

உங்களது மூன்று நாவல்கள் கெளண்டில்யன் சதுரம், பெர்னுய்லியின் பேய்கள், விளம்பர நீளத்தில் ஒரு மரணம் ஆகிய மூன்றும் பொதுவாக முன் வைப்பது மர்மம், புதிர்கள்,  அமானுஷ்யம், துப்பறிதல், அப்புறம் கொஞ்சமாக அறிவியல்……ஒருபுறம் சிறுகதைகளை ரொம்ப சீரியஸாக எழுதிக் கொண்டு மறுபுறம் வித்தியாசமான நாவல் முயற்சிகளை முன் எடுப்பது ஏன்? விமர்சன ரீதியாகவும் இந்த நாவல்கள் எந்த வகை இலக்கியத்தில் சேரும் என்பதில் பெரும் குழப்பம் இருக்கும் சூழ்நிலையில் ஏன் இத்தகைய முயற்சிகள்?

  • எம்.ஜி.ஆர் சொன்னதுபோல் ‘கலகத்தில் பிறப்பதுதான் நீதி’. ஆனால் 2019 இறுதியில் வெளிவரும் என் அடுத்த நாவல் நீங்கள் விரும்புவது போல் படு சிரியஸாக இருக்கும் சாத்தியங்கள் தென்படுகிறது.

இரண்டு விதமான எழுத்து முறை இங்கிருக்கிறது. தீவிரமாக எழுதுவது, முக்கியமாக கோட்பாடுகளை சார்ந்து… இரண்டாவது சற்று பொது வாசகர்களுக்காக ஜனரஞ்சகமாக தனது எழுத்தை மாற்றிக் கொள்வது இதில் எதை நோக்கி உங்கள் எதிர்காலப் பயணம் அமையும்?

  • தீவிர இலக்கியம் பொது வாசகர்களுக்கான “ஜனரஞ்சகமான” இலக்கியம் என்ற இருமையின் அடிப்படையில் அமைந்த பாகுபாடே சந்தேகத்துக்குரியது என்பது என் எண்ணம்.  ஜனரஞ்சக இலக்கியத்துக்கு எதிரான சிலரின் மேட்டிமைத்தனமான எதிர்ப்பை வெளிப்படுத்தவே இத்தகைய பாகுபாடு எழுந்துள்ளதா என்று எண்ணுவதற்குக் கூட இடமிருக்கலாம். தெரியவில்லை. ஆனால் ஒன்று சொல்லவேண்டும். இன்று தீவிர இலக்கியங்கள் என்று கருதப்படும் தஸ்தவ்யஸ்கியின் குற்றமும் தண்டனையும், துர்கனேவ்வின் தந்தையும் தனயரும் உட்பட பல நாவல்கள் நீங்கள் சொல்லும் ஜனரஞ்சகமான இதழ்களில் முதலில் வெளிவந்து நீங்கள் சொல்லும் பொது வாசகர்களிடையே பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியவைதான். இந்தத் தீவிர நாவல்களை ஆராய்ந்தால் பொது வாசகர்களை ஈர்க்கக் கூடிய ஜனரஞ்சகமான கதையம்சக் கூறுகள், வாசகர்களைக் கவரக்கூடிய கதைத் திருப்பங்கள், எழுத்து நடை இவற்றோடு அன்றைக்கிருந்த சமூக அரசியல் பிரச்சனைகளைப் பற்றிய ஆழ்ந்த தத்துவார்த்த அடிப்படையிலான அலசலும் இருப்பதைக் காணலாம். இந்தக் காரணங்களால்தான் இந்த நாவல்கள் இன்றும் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகின்றன. காலம் தாண்டி நிலைக்கக்கூடிய நாவல்கள் ஜனரஞ்சகக் கூறுகளோடு ஆழமான தத்துவார்த்த அடிப்படைகளும் அலசல்களாகவும் இருந்து வந்திருக்கின்றன என்பதைக் காணாலாம். பின்னாளில் மேற்கிலும் தமிழிலும் வெற்றிப்பட்ட நாவல்கள் இந்த இருவகையான கூறுகளைக் கொண்டுள்ளவையாகவே அமைந்துள்ளன. ஆக, இந்த அடிப்படையில் பார்த்தால் வாசகர்களை ஈர்க்கும் கதையம்சமும் அவர்களுடைய சமூகப் பிரக்ஞையை வளர்க்கும் வகையிலான வெற்றிகரமான நாவல்களை எழுதுவதுதான் குறிக்கோளே தவிர தீவிர இலக்கியம் என்பதோ ஜன ரஞ்சகமான இலக்கியம் என்பதோ பயனுள்ள பாகுபாடுகளாகுமா என்ற கேள்வி எனக்குண்டு. அத்தகைய நாவல்களை எழுதுவதுதான் என்னைப் போன்ற எழுத்தாளர்களின் குறிக்கோளாக இருக்கும். இத்தகைய நாவல்களை தற்காலத்தில் தமிழில் எழுதுகிறவர் ஜெயமோகன் என்பது என் கணிப்பு.

நிலம் சார்ந்த எழுத்து என்ற வகையில் சிங்கப்பூர் என்ற நிலம் பற்றி உங்கள் நிறைய படைப்புகளில் வருகிறது. உண்மையில் இன்றைய நவீன சிங்கப்பூர் வாழ்க்கை எப்படி இருக்கிறது. பல்வேறு மொழிகளையும், பல்வேறு இன மக்களைப் பார்த்து பேசிப் பழகுவது எப்படி உங்கள் படைப்புகளுக்கு உதவியாக இருக்கிறது? தன் கனவு நிலத்தைப் பற்றி எப்போதும் ஒரு எழுத்தாளனுக்கு நிறைய ஏக்கங்கள் இருக்கும். அதைத் தனது படைப்புகளில் கொண்டு வரும் ஆசை இருக்கும். உங்களுக்கு அப்படி எதாவது ஒரு கனவு நிலம் இருக்கிறதா?

  • நீங்கள் சொல்வதுபோல் சிங்கப்பூர் பல இனங்கள், மொழிகள், கலாச்சரங்கள், மத நம்பிக்கைகள் சந்தித்து நல்லிணக்கத்தோடு வாழ முயலும் நிலம். இந்த முயற்சி இதுவரை சிறப்பாகவே நடந்து வருகிறது. ஆனால் இத்தகைய கட்டமைப்பு மொழிகள், இனங்கள், கலாசாரங்கள் முதலானவை தனித்தனியாய் இருக்கும் வரை உள்ள சவால்கள் இவை அனைத்தும் ஒன்றோடொன்று உரையாடி புதிய வடிவங்களை ஏற்கும்போது வேறு சவால்களாக மாறிவிடுகின்றன. உதாரணத்துக்கு ஒரு தமிழ்ப் பெண் சீன ஆடவனை மணக்கிறாள். அவள் குழந்தைகள் தமிழர்களா? சீனர்களா? அவர்களது பெயர்கள் எப்படி இருக்கும்? அவர்கள் எந்தக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவார்கள்? என்ன மதம்? சிங்கப்பூரில் என்ன நடக்கிறது என்றால் இப்படிக் கல்யாணம் செய்து கொள்பவர்கள் குழந்தைகளுக்கு சீனப்பெயர்களையும் தமிழ்ப் பெயர்களையும் சேர்த்து வைக்கிறார்கள். இரண்டு சாராரின் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் முழுமையாக அல்ல. தமிழ்க் கலாச்சாரத்திலிருந்து எந்த வழக்கங்கள் நகர வாழ்க்கைக்குச் சுலபமாக இருக்கின்றனவோ அவற்றை. சீனக் கலாச்சாரத்திலிருந்து சிலவற்றை. இப்போது பரவாயில்லை. ஆனால் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு இத்தகைய தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் வளர்ந்து தமிழ் நாவல்கள் எழுத ஆரம்பித்தால் அத்தகைய தமிழ் நாவல் பேசும் சமூகப் பிரச்சனைகள் எப்படி இருக்கும், அது காட்டும் சமூக வாழ்வு எப்படி இருக்கும், இதையெல்லாம் விடுங்கள். அந்த எழுத்தாளர் பயன்படுத்தும் தமிழ் எப்படி இருக்கும்? உலகமயமாதலால் ஏற்படக்கூடிய இந்த அடையாள மயக்கத்தை நான் முக்கியமானதாகக் கருதுகிறேன். 2018ல் வெளிவந்த என் ‘விளம்பர நீளத்தில் ஒரு மரணம்’ நாவலில் சீன ஆடவனை மணக்கும் தமிழ்ப் பெண் சந்திக்கும் பிரச்சனைகளைச் சொல்லி இருக்கிறேன். இந்த எனது அலசல் சிங்கப்பூரில் தமிழ் பேசாத சீன, மலாய் வாசகர்களிடமும் வரவேற்புப்.பெற்றுள்ளது. அவர்களுக்கும் இந்த கேள்விகளும் குழப்பங்களும் உண்டு.மற்றபடி கனவு நிலம் என்பதைவிட தற்கால நகரங்களில் ஏற்படும் மாற்றங்கள், நகரங்களால் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை அலசுவதில் எனக்குத் தீராத ஆர்வம் உண்டு. நகரம் என்பதேகூட ஒரு உயிருள்ள கதாபாத்திரம் என்பது என் எண்ணம்.  கனவுகளை விட யதார்த்தமே எப்போதும் சுவாரஸ்யமானது.

இரண்டு கவிதைத் தொகுப்புகள்… இரண்டிலுமே  புதிய கவிதை வடிவங்களை உருவாக்கி இருக்கிறீர்கள்? கிட்டத்தட்ட ஆங்கிலக் கவிதை வடிவங்களின் மாதிரியாகவே அவை இருக்கின்றன? சங்க இலக்கியங்களில் தீவிர ஈடுபாடு கொண்ட நீங்கள் தமிழ்க் கவிதை வடிவங்களை பின்பற்றாமல் இதிலும் புதிய முயற்சிகளைக் கையாள்வது ஏன்?

  • அலங்காரமில்லாத சொற்செட்டு, கூர்மையான படிமங்கள், சமூக அரசியல் விழிப்புணர்வு, ஆடம்பரமான கூச்சலின்றி அதிர வைக்கும் சொல்லாடல் எல்லாம் சங்கக் கவிதைகள் மூலம் தமிழன் உலகத்துக்குச் சொல்லித் தந்ததுதானே. இவற்றை ஆங்கிலக் கவிதை சாயல் கொண்டது என்று சொல்வது சங்கக் கவிதைகளை நாம் எவ்வளவு அந்நியமாகி வருகிறோம் என்பதையே காட்டுகிறது. சங்கக் கவிதைகள் எல்லோரும் கட்டாயமாக வாசிக்க வேண்டும். வாசிக்காததால்தான் இப்போது நிறைய கவிதைகள் சலிப்பைத் தருபவையாகவும் மீமிகையானவையாகவும் வெளி வருகின்றன.

பெர்னுய்லியின் பேய்கள்’ நாவல் நல்ல சுவாரசியமான பேய்கள் கதை… பேய்கள் பற்றி இவ்வளவு நுட்பமான தகவல்களை எப்படி சேகரித்து எழுதினீர்கள்? முக்கியமாக சீனப் பேய்கள் பற்றியும் அதைச் சார்ந்து அவர்களின் நம்பிக்கை பற்றியும்? இதில் பெர்னுய்லியின் தத்துவத்தை பேய்களுடன் இணைக்கும் சிந்தனை உருவானது எப்படி?

  • சின்ன வயது முதலே கோட்டயம் புஷ்பநாத் போன்றவர்களின் பிரதான வாசகன் நான். ஒன்று கவனித்தீர்கள் என்றால் பேய்க்கதைகள் மற்ற எல்லா வகையான கதைகளைவிட ஜனநாயகத் தன்மை கொண்டவை. எல்லா வயதினருக்கும், அவர்கள் பணக்காரர்களோ ஏழைகளோ படித்தவர்களோ படிக்காதவர்களோ பேய்க் கதைகள் பிடிக்கும். பிற நாட்டுப் பேய்க்கதைகள் என்று யாரும் விலக்குவதில்லை. சுடுகாட்டைத் தவிர்த்துச் சமரசம் உலாவும் இடங்கள் என்றால் அவை பேய்க்கதைகள்தான்! சிங்கப்பூரில் பிறந்த ஒருவர் சீனம், மலாய், தமிழ், மேற்கத்திய பேய்கள் என்று எல்லாவற்றுக்கும் சொந்தமாகிவிடுகிறார். பல்லின நாட்டில் வாழும் மக்கள் தத்தமது பேய்க்கதைகளை ஒருவருக்கொருவர் உரையாடும்போது சொல்லிக் கொள்கிறார்கள். இது எல்லோருக்கும் பொதுவான நியதியாகிவிடுகிறது. சிங்கப்பரில் வாழ்ந்து அன்றாடம் சீனர் மலாய்க்காரர்கள் என்று பலதரப்பட்ட மக்களுடன் பேசிப் பழகுவதால் சீனப் பேய்களைப் பற்றி எழுதுவது சிரமமாக இல்லை. அதிலும் நாவலில் நான் பேய்களைப் பற்றிச் சொன்னது கொஞ்சம்தான். பேய்களைப் பற்றி நிறைய சொல்ல இருக்கிறது. அதையும் தாண்டி பேயோ தேவதையோ  நியதிகள் தெளிவாகாதவரை நம்மைப் பயமுறுத்தும் என்பது என் நம்பிக்கை. பேய்களும் தேவதைகளும் நியதிகளுக்கு உட்பட்டவை என்ற என் நியாயத்தைக் காட்ட பேய்கள் பெர்னுய்லியின் தத்துவத்துக்குக் கட்டுப்படுவதைக் காட்டும் வகையில் இந்த நாவலை எழுதினேன். பேய்களும்.தேவதைகளும் வித்தை தெரிந்தவர்கள். தங்கள் விருப்பத்துக்கு ஆட்டிவைக்கும் தொழில்நுட்பங்கள். எப்படி ஆட்டிவைப்பது என்று காட்டத்தான் நமது ஊரில் மலையாள மாந்திரீகம் மந்திர சாஸ்திரம் எல்லாம்.இருக்கிறது.

நவீன வாழ்வு சிக்கல்கள் நிறைந்தாகவே இருக்கிறது. முழு நேர எழுத்தாளர் என்பது வேறு… பணியில் இருந்து கொண்டு எழுதுவது என்பது வேறு இந்த சிக்கலை எப்படி சரி செய்கிறீர்கள்?

  • எழுத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் முழு நேர எழுத்தாளர்தான் பெரிய வெற்றிகளைப்.பெற முடியும் என்பது என் எண்ணம். பகுதி நேரமாக எழுதுபவர்கள் மாபெரும் வெற்றிகளை ஈட்ட முடியாது. இது நிதர்சனம். பல எழுத்தாளர்களின் வாழ்க்கை இதை நிரூபித்துள்ளது. என்னைப் பொருத்தவரை உத்தியோகத்துக்குப் போனாலும் எப்படி முழுநேரக் கணவனாகவும் அப்பாவாகவும் தொடர முயல்கிறதோ அதுபோலவே முழுநேர எழுத்தாளானாய் மனதளிவிலாவது தொடர முயல்கிறேன். ஆனால் இது தீர்வல்ல. ஒரு நாள் இடதா வலதா என்று முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால் என் எழுத்தின் தரம் இவ்வளவுதான் என்று சமரசம் செய்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து உலக இலக்கியங்கள் பற்றிப் பேசுகிறீர்கள், எழுதுகிறீர்கள் அதில் யாரைவது தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய ஆசைப்பட்டால் யாரை செய்வீர்கள்? ஏன் செய்வீர்கள்?

  • இவான் துர்கனேவ். அவர் நாவலைக் கட்டமைக்கும் விதமும் பாத்திரச் சித்தரிப்பும் வருணனைகளும் அப்படிப்பட்டது. அடுத்தது சீசர் அயிரா என்ற அர்ஜெண்டீனிய எழுத்தாளர். இப்போதும் எழுதிக் கொண்டிருக்கிறார். போர்ஹெஸ், போலானியோவால் புகழப்பட்டவர். எழுத்தாளர் புத்தாக்கப் பார்வையோடு எவ்வளவு தீவிரமாகச் சிந்திக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று இவரிடம் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையில் எதற்கு எழுதுகிறீர்கள்? யாருக்காக எழுதுகிறீர்கள்? இலக்கியம் தனிபட்ட வாழ்வை மாற்றியமைக்கும் என்று நம்புகிறீர்களா?

  • தனி மனிதர்களின் அன்றாட வாழ்க்கையில் அறம் என்று கொண்டாடப்படும் சின்னச் சின்ன அபத்தங்களையும் அபத்தம் என்ற பெயரில் மாபெரிய அன்பையும் வீரத்தையும் பதிவு செய்ய. மாற்றியமைப்பது என் வேலை இல்லை. பதிவு செய்வது மட்டும்தான்.

ஒரு குறிப்பிட்ட மொழியை உருவாக்கிக் கொள்வது ஒவ்வொரு படைப்பாளியின் கனவு. உங்களுக்கான மொழியை உருவாக்கி விட்டீர்களா இல்லை அதற்கான தேடல்கள் இன்னும் இருக்கிறதா.? இதைக் கேட்பதற்கு காரணம் நீங்கள் நிறைய மொழிகளை அறிந்தவர். அது இங்கு உங்களுக்கு எவ்வளவு உதவுகிறது என்பதை அறிய!

மனதிலிருந்து உண்மையான உணர்வோடு வரும் வார்த்தைகள் தமக்கான லயத்தைத் தாமே அமைத்துக் கொள்கின்றன. இது ராமாயண காலத்து உண்மை. வேடன் காதலில் திளைத்திருக்கும் இரண்டு பறவைகளில் ஒன்றை அம்பு விட்டுக் கொல்கிறான். அதைப் பார்த்த வால்மீகி கோபத்தால் சாபம் கொடுக்கிறார். பின்னர் யோசிக்கும்போது அவர் சோகமே சுலோகமாக இருந்ததைக் கண்டு அந்தச் சுலோகத்தின் யாப்பிலேயே ராமாயணச் செய்யுள்களை எழுதுகிறார். நான் உண்மையாக இருக்கிறேன்.மொழி தன்னைத்தானே சரிபடுத்திக் கொள்ளூம்.

தற்போதைய தமிழ் இலக்கியச் சூழல் பற்றி எதாவது சொல்ல முடியுமா? 

  • மிக அற்புதமான எழுத்தாளர்கள் எழுதி வருகிறார்கள். சிறந்த முயற்சிகள் நடக்கின்றன. சினிமா தாக்கத்தைக் குறைத்துக் கொண்டால்  ஒருவேளை தத்துவார்த்த தேடல் இன்னும் வீரியமுடையதாக ஆகலாம் 

கடைசிக் கேள்வி. தற்போது இருக்கும் இளம் வாசகர்களுக்கு கட்டாயம் நீங்கள் வாசிக்க வேண்டிய பட்டியல் ஒன்றை நீங்கள் தயார் செய்தால் அதில்  எத்தனை பெயர்களை எழுதித் தருவீர்கள்.? (சங்க இலக்கியத்திலிருந்து உலக இலக்கியம் வரை)

  • பட்டியல் தயாரித்துத் தருவதெல்லாம் சர்வாதிகாரப் போக்கு. அந்த விளையாட்டெல்லாம் வேண்டாமே! கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான். இதுதான் என் சார்பில் ஒரே அறிவுரை. ஆனால் உங்கள் ஆசையைக் கெடுப்பானேன். இதோ என் பட்டியல் (எனக்குப் பிடித்த படைப்புகள், படைப்பாளர்கள் மட்டும்)
  • தமிழ் இலக்கியத்தில்: அகநானூறு, புறநானூறு, கலித்தொகை குறுந்தொகை, சிலப்பதிகாரம், மணிமேகலை, மூவர் தேவாரம், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார் இவர்களின் அருளிச்செயல்கள், திருவாசகம், கம்பனின் இராம காதை, நளவெண்பா, கலிங்கத்துப் பரணி, குற்றாலக் குறவஞ்சி, திருப்புகழ், சிறாப்புராணம், கந்தர் கலிவெண்பா, கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம், பாரதி, பாரதிதாசன் – கவிதைகள் தவிர்த்து அழகின் சிரிப்பு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, குடும்ப விளக்கு, புலவர் குழந்தையின் இராவண காவியம்.
  • தமிழ்ப் புனைவில்: அசோகமித்திரன், தி.ஜா, க.நா.சு, நகுலன், கரிச்சான் குஞ்சு, ஜி நாகராஜன், கி.ரா, சுநதர ராமசாமி, தஞ்சை பிரகாஷ், ஜெயகாந்தன், சுஜாதா, மாலன், பாலகுமாரன் (ஆரம்ப கதைகள் நாவல்கள்), ஜோ டி குரூஸ், எம், ஜி. சுரேஷ், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், சாரு, அம்பை, நாஞ்சில் நாடன், வண்ணதாசன், இமையம், பெருமாள் முருகன்.
  • நாவல் வடிவத்தை அறிந்து கொள்ள: துர்கனேவ், டால்ஸ்டாய், தஸ்தவ்யஸ்கி, தாமஸ் ஹார்டி, ப்ராண்டே சகோதரிகள், மிலான் குண்டேரா, உம்பர்ட்டோ எஃகோ, இத்தாலோ கால்வினோ.
  • எந்தெந்த புத்தகங்கள் என்றால் – மொத்தமும். ஆனால் இப்போதே மூச்சு முட்டுகிறது. தற்காலத்தில் எழுதிக்கொண்டிருக்கிறவர்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. அதற்கு நீங்கள் அடுத்த நேர்காணல் நடத்த வேண்டும்.
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button