சிறார் இலக்கியம்
Trending

சிறார் பாடல்கள்- முனைவர் ஜெயந்தி நாகராஜன்

முனைவர் ஜெயந்தி நாகராஜன்

1. அன்பு வழி
எங்கும் இருக்கும் பரம்பொருளே
என்னைக் காப்பாய் அனுதினமே
உந்தன் அருளும் இல்லாது
எந்த செயலும் நடவாது
அன்பு வழியில் நாளும் சென்று
அடைவேன் உந்தன் அருளைத்தான்
அன்பு இருக்கும் நெஞ்சகமே
ஆண்டவன் உறையும் கோவிலாம்

2. கைத் தொழில்
கையில் தொழிலும் இருந்திட்டால்
கவலை இன்றி வாழ்ந்திடலாம்
பள்ளிப் படிப்பு மட்டுமன்றி
கைத் தொழிலும் கற்றிடலாம்
சொந்தக் காலில் நின்றிடலாம்
சொகுசு வாழ்க்கை வாழ்ந்திடலாம்
மலையின் மாண்பை அடைந்திடலாம்
தலை நிமிர்ந்து நடந்திடலாம்

3. பொம்மைகள்
எங்கள் வீட்டு அறையினிலே
ஏராளமாய் பொம்மைகள்
தாவிக் குதிக்கும் பொம்மைகள்
தாளம் போடும் பொம்மைகள்
தலையை ஆட்டும் பொம்மைகள்
நடனமாடும் பொம்மைகள்
ஏசுநாதர் பொம்மையுடன்
ஏழுமலைப் பெருமாளும்
பக்கம் பக்கம் இருக்குது
பார்க்க அழகாய் இருக்குது
வேற்றுமைதான் மறையுது
ஒற்றுமைதான் ஓங்குது

4. கண்ணாடி
பளபளக்கும் கண்ணாடி
பெல்ஜியம் நாட்டு கண்ணாடி
உருவம் காட்டும் கண்ணடி
உண்மை பேசும் கண்ணாடி
சிரித்தால் அழகு கூடுமே
சிறப்பாய் நம்மைக் காட்டுமே
கண்ணாடி சொல்லும் பாடத்தை
கருத்தாய் கற்று நடந்திடு

5. அழையா நண்பன்
மெத்தப் பெரிய வீட்டையே
மணலைக் கொண்டு கட்டுகிறாய்
மாடிப்படியும் வைக்கிறாய்
தோட்டம் அமைத்து மகிழ்கிறாய்
பாட்டுப் பாடி சிரிக்கிறாய்
மழையும் வந்தால் என் செய்வாய்?
அழையா நண்பன் என்பாயோ?
ஆடிப் பாடி குதிப்பாயோ?

6. சாலைவிதி
சாலையைக் கடக்கும் சின்னத் தம்பி
சொல்வதைக் கொஞ்சம் கேளு தம்பி
பச்சை விளக்கு எரியும் பொழுது
பயத்தை விலக்கி நடந்திடணும்
சிவப்பு விளக்கு ஒளிரும் பொழுது
சற்றே நின்று சென்றிடணும்
சாலைவிதியை மதித்திடு
சங்கடம் இன்றி வாழ்ந்திடு

7. பேருந்துப் பயணம்
பேருந்து நிறுத்தத்திலே
பேருந்து நிற்குது
வரிசையிலே நின்றபடி
வண்டியிலே ஏறுவோம்
படியினிலே நின்றபடி
பயணிக்கும் பயணம்
நொடியினிலே தந்திடுமே
விபத்தென்ற மரணம்
பேருந்து உட்புறத்தில்
பாதுகாப்பாய் அமர்ந்திடு
இன்பமாகப் பயணித்து
வீடும் நீயும் திரும்பிடு

8. அம்மா
என்னை விரும்பும் அம்மாவே
எந்தன் தெய்வம் நீதானே
என்னைக் காப்பாய் இமை போலே
பொன் போல் வளர்ப்பாய் புவி மேலே
அன்பின் உருவம் அம்மாதான்
அழகின் வடிவம் அம்மாதான்
கனியைப் பெறவே தாயைத்தான்
கணபதி சுற்றி வந்ததைப் போல்
அன்னையே உன்னை சுற்றிவந்தே
கனிவைப் பெற்று மகிழ்வேனே

9. சேவல்
கொக்கரக்கோ சேவலே
கொண்டை கொண்ட சேவலே
காலைப் பொழுதில் கூவுகின்றாய்
வேலை செய்ய எழுப்புகின்றாய்
சோம்பல் குணத்தை நீக்குகின்றாய்
சேவை செய்து வாழுகின்றாய்
காலம் தன்னை காட்டுகின்றாய்
கடிகாரமாகவே ஆகின்றாய்

10. வள்ளுவனும் வாமனனும்
ஒன்றே முக்கால் அடியாலே
உலகை அளந்தார் வள்ளுவரும்
மூன்றடி வைத்தே உலகினையே
ஓங்கி அளந்தார் வாமனனும்
நீதி புகட்டும் கருத்தினையே
நலமாய் இருவரும் கூறினரே
நாளும் குறள் வழி நடந்தாலே
நாரணன் அன்பைப் பெற்றிடலாம்
இருவர் வகுத்த பாதையிலே
இனிதாய்ப் பயணம் செய்திடுவோம்
நேசம் கொண்டு பேதம் நீக்கி
நன்மை புரிந்து வாழ்ந்திடுவோம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button