சிரிப்பு ராஜா சிங்கமுகன் – யுவா – அத்தியாயம் 2
சிறார் தொடர் | வாசகசாலை
உத்தமன் சிரிப்பு
அரிமாபுரி நாட்டுக்குப் பல சிறப்புகள் உண்டு. அவற்றில் ஒன்று அந்நாட்டின் மலையடிவாரத்தில் இருக்கும் தங்கச் சுரங்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கே எடுக்கப்படும் தங்கங்கள் அயல்நாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்யப்பட்டன. அதனால் அரிமாபுரி நாட்டுக்கு எல்லா நாட்களிலும் வெளிநாட்டு வியாபாரிகள் வந்தவண்ணம் இருந்தார்கள்.
சிங்கமுகனின் தந்தையான வீரசிங்கம் ஆண்ட காலத்தில்தான் அந்தப் பகுதியில் பூமிக்குள் தங்கம் இருப்பது கண்டறியப்பட்டது. உலக அளவில் அதற்கு எவ்வளவு மதிப்பு இருக்கிறது என்பதும் புரிந்தது. அதேநேரம் அந்தத் தங்கச் சுரங்கத்தைக் கைப்பற்ற சுற்றிலும் இருந்த நட்பு நாடுகளே முயன்றன. போரினாலும் சதிகளாலும் பல்வேறு முயற்சிகளைச் செய்தன.
ஆனால் வீரத்திலும் மதிநுட்பத்திலும் சிறந்து விளங்கிய வீரசிங்கம் எல்லாச் சதிகளையும் முறியடித்து சுரங்கத்தைப் பாதுகாக்கும் வழிகளை உருவாக்கினார். ஆண்டுகள் செல்லச் செல்லத் தங்கம் கிடைப்பது குறைந்ததாகச் சொல்லி பல சுரங்கங்கள் மூடப்பட்டன. இப்போது மிகக் குறைந்த அளவே எடுக்கப்படுகிறது. அதிலும் பாதிக்குப் பாதி கணக்குக்கு வராமல் போகிறது. அத்துடன் சுரங்கக் கொள்ளையர் கூட்டம் ஒன்றும் அவ்வப்போது களவாடி வருகிறது.
இந்த விஷயங்கள் எல்லாம், ‘உரைகல்’ ஓலைப் பத்திரிகையில் அவ்வப்போது வெளியாகி பரபரப்பாகி வருகிறது. அதுதான் இன்று விடியலிலும் சிங்கமுகன் முகத்தில் விழித்தது.
அரச சபை…
‘’வணங்குகிறேன் அரசே’’ என்றபடி வந்து நின்றார் நிலாமதி சந்திரன்.
50 வயதுடைய நிலாமதி சந்திரன் சிங்கமுகனின் முதன்மை மந்திரி. இவரது தந்தையும் வீரசிங்கம் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர்தான். மதிநுட்பத்தில் மிகச் சிறந்தவராக இருந்தவர். வீரசிங்கம் அவரை இன்னொரு தந்தையாகவே கருதினார். அவரது மறைவுக்குப் பின் அவர் அளவுக்குத் திறமை இல்லாவிட்டாலும் அவரது மகனான நிலாமதி சந்திரனுக்குப் பதவி அளித்தார். வீரசிங்கம் தனது வாழ்வில் செய்த ஒரே முட்டாள்தனம் அதுதான்.
‘’என்ன மந்திரியாரே… இருபது நிமிடங்களில் என்னைச் சந்திக்க வேண்டும் என்று சொன்னேன். இதுதான் சபைக்கு வரும் நேரமா?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’மன்னிக்கவும் அரசே… ஊரிலிருந்து என் மகளும் பேரனும் வந்திருந்தார்கள். பேரன் ஆனை மீது ஏற வேண்டும் என்று ஒரே பிடிவாதம் செய்தான். அவனை ஆனையில் ஏற்றி ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். உங்கள் ஆணை தாமதமாகத்தான் வந்து சேர்ந்தது. வருவதற்கு நேரம் ஆகிவிட்டது’’ என்றார் நிலாமதி சந்திரன்
‘’ஓஹோ… அந்த ஆனையால் என் ஆணை தாமதமாகிவிட்டது அல்லவா? அது சரி, உங்களுக்கு ஆனை ஏது?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
அதற்கு மந்திரி சுற்றிலும் இருப்பவர்களை ஒரு ரகசியப் பார்வை பார்த்துவிட்டுத் தயங்கினார்.
‘’சொல்லுங்கள் மந்திரியாரே… உமக்கு ஆனை ஏது?’’
‘’நம் அரண்மனை ஆனை…’’ என்று இழுத்தார்.
‘’ஆக… அரண்மனை ஆனையை உம் சொந்த விஷயத்துக்கு எல்லாம் பயன்படுத்துகிறீர்கள் என்று சொல்லும்’’
‘’அரசே… பேரன் மிகவும் அழுதான் என்றுதான்…’’ என்று இழுத்தார் நிலாமதி சந்திரன்.
‘’பிள்ளையின் பெயரைச் சொல்லித் தப்பிக்கிறீர்கள். அது போகட்டும்… நாட்டில் என்ன விசேஷம்?’’ என்று கேட்டார் சிங்கமுகன்.
‘’விசேஷம் ஒன்றுமில்லை அரசே… கார்த்திகை தீபம் கூட அடுத்த வாரம்தான் வருகிறது’’ என்றார் வேக வேகமாக.
‘’நான் அந்த மாதிரி விசேஷத்தைக் கேட்கவில்லை. இந்த மாதிரி விசேஷத்தை…’’ என்று சொல்லி, உரைகல்லைத் தூக்கிப் போட்டார் சிங்கமுகன்.
தடுமாறி அதனைப் பிடித்த மந்திரி தயக்கத்துடன் அரசரை ஏறிட்டார் நிலாமதி சந்திரன்.
‘’அதில் என்ன எழுதி இருக்கிறது என்று இந்த அவைக்கு நீங்களே சுருக்கமாகச் சொல்லும்’’ என்றார் சிங்கமுகன்.
‘’நம் தங்கச் சுரங்கத்தில் தோண்டி எடுத்த தங்கக் கட்டிகளில் நான்கு மூட்டைகள் மாயமானதாக…’’ என்றார் தயக்கமாக.
‘’அடடே… அப்படியானால் பத்திரிகையை ஏற்கெனவே வாசித்துவிட்டீர்கள் என்று சொல்லும். இப்படி ஒரு பெரிய பிரச்சனை நடந்து இருப்பது தெரிந்தும் பேரனுடன் ஆனை விளையாட்டுக்குச் சென்றிருக்கிறீர்கள் அல்லவா?’’
நிலாமதி சந்திரன் பதில் பேசாமல் அமைதியாக இருந்தார்.
‘’இப்படி வாயை மூடி இருந்தால் என்ன அர்த்தம்? தங்க மூட்டைகள் காணாமல் போய் எத்தனை காலம் ஆகிறது?’’ என்று கோபத்துடன் கேட்டார் சிங்கமுகன்.
‘’ஒ…. ஒரு மாதம்…’’
‘’ஏன் எனது கவனத்துக்குக் கொண்டு வரவில்லை? ஒரு பத்திரிகையைப் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது’’
‘’இந்தச் சின்ன விஷயத்தை உங்களிடம் எதற்கு சொல்லிக்கொண்டு… நாங்களே பிடித்துவிடலாம் என்று தளபதியும் நானும் முடிவுசெய்து…’’
‘’பிடித்துவிட்டீர்களா?’’
‘’இ… இன்னும் இல்லை அரசே!’’
‘’ஏன்?’’
‘’அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எந்த நேரத்தில் வருகிறார்கள் என்றே தெரியவில்லை அரசே!’’
‘’கொள்ளை அடிப்பவர்கள் உமக்கு ஓலை அனுப்பிவிட்டா வருவார்கள்? நடுஜாமத்தில்தான் வருவார்கள். அந்த நேரத்துக்கு நம் சுரங்கக் காவலர்கள் என்ன செய்கிறார்களாம்?’’ என்றார் சிங்கமுகன்.
நிலாமதி சந்திரன் அமைதியாகத் தலையைக் குனிந்தார்.
‘’இதற்கு விடை எனக்கே தெரியும்… குளிர்காலம் தொடங்கிவிட்டது அல்லவா…? நம் காவல் வீரர்கள் போர்த்திக்கொண்டு உறங்குகிறார்கள். திருடர்கள் திருடிக்கொண்டு போகிறார்கள்… அதானே?’’ என்றபடி பார்வையைச் சுழலவிட்டார் சிங்கமுகன்.
இப்போது அங்கே விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருந்த வீரர்கள் எல்லாம் தலையைக் கவிழ்த்தார்கள்.
‘’தலையைக் கவிழ்த்தால் கொள்ளையர்கள் தரையில் இருப்பார்களா? உங்களால் இப்போது எனக்கல்லவா அவப்பெயர். ஒரு பெரிய திருட்டை சிங்கமுகன் அரசு மக்களுக்குத் தெரியாமல் மூடி மறைத்துவிட்டது என்று உரைகல்லில் எழுதி இருக்கிறான் அந்த உத்தமன். இல்லை… எழுதி அல்ல… துப்பி இருக்கிறான். காரி உமிழ்ந்து இருக்கிறான்’’ என்றார் சிங்கமுகன்.
நிலாமதி சந்திரன் அப்படியும் இப்படியுமாகப் பார்த்தார்.
சிங்கமுகன் கடுப்பானார்…‘’நான் இங்கே கழுதையாகக் கத்திக் கொண்டிருக்கிறேன். என்னத்தை தேடுகிறீர்கள்? மணி பத்து ஆகிறதே… பான இடைவேளை… பணிப்பெண் இன்னும் சத்துபானம் கொண்டு வரவில்லையே என்று பார்க்கிறீர்களா?’’
மந்திரி பதறிவிட்டார். ‘’ஐயையோ இல்லை அரசே… நம் தளபதி…’’ என்று இழுத்தார்.
‘’அவர் அப்போதே வந்து என்னிடம் வாங்க வேண்டியதை எல்லாம் வாங்கிவிட்டு சுரங்கத்தை ஆய்வு செய்கிறேன் என்று போய்விட்டார். எல்லாம் கொள்ளை போன பிறகு அங்கே போய் என்ன ஆய்வு செய்யப் போகிறாரோ? நீரும் பின்னாடியே போகிறீர்களா?’’ என்று சீறினார் சிங்கமுகன்.
‘’அரசே… காவல் பொறுப்புகள் எல்லாம் அவர் கட்டுப்பாட்டில்தானே இருக்கிறது…’’
‘’ஓஹோ… அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? என்னை ஏன் விசாரிக்கிறீர்கள் என்று கேட்க வருகிறீர்?’’
‘’அ… அப்படி இல்லை அரசே…’’
‘’பிறகு நாட்டின் முதன்மை மந்திரி என்கிற பதவியும் பட்டமும் உமக்கு எதற்கு? எல்லாவற்றுக்கும்தான் பொறுப்பேற்க வேண்டும். பதில் சொல்ல வேண்டும்.’’
‘’மன்னியுங்கள் அரசே… கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அந்தக் கொள்ளையர்களைக் கண்டுபிடித்து உங்கள் காலடியில் சமர்ப்பிக்கிறோம்’’ என்றார் நிலாமதி சந்திரன்.
‘’இந்த வசனங்களுக்கு ஒன்றும் குறைச்சலில்லை. அடுத்த உரைகல் வருவதற்குள் கொள்ளையர்கள் பிடிபட்டிருக்க வேண்டும். அந்த உரைகல்லின் தலைப்புச் செய்தியே அதுவாகத்தான் இருக்க வேண்டும். அதன் ஆசிரியருக்கு நாம் கொடுக்கும் பதிலடியும் அதுவாகத்தான் இருக்க வேண்டும். புரிகிறதா?’’ என்று சீறினார் சிங்கமுகன்.
‘’புரிகிறது அரசே…’’ என்று பணிவுடன் சொன்னார் நிலாமதி சந்திரன்.
*******
‘’ஹா… ஹா… அப்படியா? பார்க்கிறேன். அப்படி ஒன்று நடந்தால் எல்லோரையும் விட அதிகம் மகிழ்பவன் நானாகத்தான் இருப்பேன். அந்த உரைகல்லை எடுத்துக்கொண்டு நானே அரண்மனைக்கு நேரில் வந்து உங்கள் அரசருக்கு அளித்து வணங்குவேன்’’ என்றான் உத்தமன்.
உத்தமனுக்கு வயது 26. அடிப்படையில் விவசாயி. இதோ இப்போது கூட தனது வயலில் உழுது கொண்டிருக்கிறான். பத்திரிகைப் பணி அவனது விருப்பமான பகுதி நேரம். தன் சொந்த செலவில், ‘உரைகல்’ என்கிற ஓலை வாரப் பத்திரிகையை நடத்தி வருகிறான். நாட்டில் நடக்கும் தவறுகளைத் தைரியமாக எழுதுபவன். அதனால் எத்தனையோ ஆபத்துகளைச் சந்தித்து வருபவன்.
‘’நீ கேலியாகச் சிரிப்பதைப் பார்த்தால் கொள்ளையர்களை நாங்கள் பிடிக்கவே மாட்டோம் என்று சொல்வது போலிருக்கிறது’’ என்றான் சூர்யன்.
வரப்பு மீது நின்றிருந்த சூர்யனுக்கு உத்தமனின் வயதுதான். இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். சூர்யனின் தந்தைதான் முன்னாள் தளபதி. வீரசிங்கம் படையில் சாதாரண வீரனாக இருந்தவர். அவரது திறமையைப் பார்த்து தளபதியாக உயர்த்தினார் வீரசிங்கம்.
வீரசிங்கத்துக்குப் பிறகு சிங்கமுகன் காலத்திலும் சிறிது காலம் தளபதியாக இருந்தார். ஒரு போரில் சிங்கமுகனைக் காப்பாற்றப் போய் வாள்வீச்சுக்குப் பலியானவர். அப்போது சூர்யனுக்கு வயது 12. தந்தையின் உயிர்த் தியாகத்துக்கு ஈடாக சிங்கமுகனின் மெய்க்காப்பாளனாக இப்போது இருக்கிறான்.
உழுவதை நிறுத்திவிட்டு மேலே வந்த உத்தமன், ‘’அதில் என்ன சந்தேகம் சூர்யா… கொள்ளையர்களை எப்படி பிடிக்க முடியும்? பூனையிடமே பாலுக்குக் காவல் இருக்கச் சொல்கிறாயே’’ என்றபடி வரப்பில் நடக்க ஆரம்பித்தான்.
‘’யாரை பூனை என்கிறாய்?’’ என்று பின்தொடர்ந்தான் சூர்யன்.
‘’வேறு யார்… பலமுறை சொல்லிவிட்டேனே… உங்கள் தளபதி கம்பீரன்… அவன் எப்போது தளபதியாக வந்தானோ அப்போது முதலே நாட்டுக்குக் கேடு பிடித்துவிட்டது’’ என்ற உத்தமன் கிணற்றடியை நெருங்கினான்.
‘’நீயும் பலகாலமாக ஆதாரம் இல்லாமல் இப்படிச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறாய்’’ என்றான் சூர்யன்.
வாளியில் இருந்த தண்ணீரால் கை கால்களைக் கழுவிக்கொள்ள ஆரம்பித்த உத்தமன், ‘’அதிகாரங்களில் இருக்கும் நீங்கள்தான் அவனை விசாரித்தோ கண்காணித்தோ ஆதாரத்துடன் பிடிக்க வேண்டும். அதையுமா நானே கொடுக்க முடியும்?’’ என்று கேலியுடன் சொன்னான்.
‘’கம்பீரன் ராணியாரின் அன்புக்குப் பாத்திரமானவர்’’
‘’அது பித்தளைப் பாத்திரம் என்று புரியாமல் தங்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் உமது ராணியார். சூர்யா… உன் தந்தை போன்ற வீரரும் உண்மையான விசுவாசியும் இருந்திருந்தால் இந்த நாடு இன்னும் எவ்வளவோ நன்றாக இருக்கும். நியாயப்படி பார்த்தால் உனக்குத்தான் தளபதி பதவி கொடுத்திருக்க வேண்டும். அந்த இடத்தில் எங்கிருந்தோ வந்த ஓர் அயோக்கியன் இருக்கிறான். நீ அரசருக்கு மெய்க்காப்பாளன் என்கிற பெயரில் சிறிய வட்டத்தில் இருக்கிறாய்’’ என்ற உத்தமன் குரலில் வருத்தம்.
சூர்யன் புன்னகைத்தான். ‘’எனக்கு தளபதியாக இருக்க முடியவில்லையே என்கிற வருத்தம் எதுவும் இல்லை. அரசரின் பாதுகாப்புக்காக மிக அருகில் இருக்கிறேன். என் தந்தை போலவே அரசருக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன்’’ என்றான்.
உத்தமன் சிரித்து, ‘’வீரமும் விசுவாசமும் மட்டுமே போதாது சூர்யா… விவேகமும் வேண்டும். உன் அரசரைப் பாதுகாத்தால் மட்டும் போதாது… நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாக்க வேண்டும். சரி விடு… உன்னிடம் பேசிப் பிரயோஜனமில்லை’’ என்றான்.
அப்போது பாடசாலை முடிந்து மாணவர்கள் அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் குழலனும் இருந்தான். இவர்களைப் பார்த்துக் கையசைத்தவாறு கூட்டத்தை விட்டு விலகி வந்தான்.
‘’அண்ணாக்களே… மாலை வணக்கம்’’
‘’வா குழலா… காலையில் அரசர் உன்னை அவரது அரண்மனைக்குள் அழைத்துச் சென்றாராமே… விருந்து பலமோ?’’ என்று சிரிப்புடன் கேட்டான் உத்தமன்.
‘’ஆமாம்… கொஞ்சம் விட்டிருந்தால் என்னைக் கைது செய்திருப்பார்’’ என்று சிரித்தான் குழலன்.
‘’அப்படி நடந்திருந்தால் சும்மா விடுவேனா? மக்களைத் திரட்டி அரண்மனை முன்பு வந்து நின்றிருப்பேன்’’ என்றான் உத்தமன்.
‘’அதை விடுங்கள். இந்தாருங்கள் அண்ணா… இன்று விற்ற உரைகல்லின் காசுகள்’’ என்று வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொடுத்தான் குழலன்.
‘’ம்… உனக்கான பங்கை எடுத்துக்கொண்டாயா?’’ என்று கேட்டவாறு அவற்றை வாங்கி எண்ணிப் பார்க்காமலே தனது இடுப்பு பையில் போட்டுக்கொண்டான் உத்தமன்.
‘’எடுத்துக்கொண்டேன் அண்ணா. அப்புறம் ஒரு முக்கியமான செய்தி…’’ என்ற குழலன் குரல் ரகசியமாக மாறியது.
‘’என்ன?’’ என்று கேட்டான்.
குழலன் தனக்கு அருகே இருந்த சூர்யனைப் பார்த்தவாறு, ‘’அரண்மனை ஊழியர் அருகில் இருக்கிறாரே பரவாயில்லையா?’’ என்று குறும்புடன் கேட்டான்.
‘’அடேய்ய்ய்ய்’’ என்று அவன் தலையில் தட்டினான் சூர்யன்.
‘’அரசு ஊழியர்கள் என்றும் ஆபத்தானவர்கள்தான். வா… நாம் அந்தப் பக்கமாகச் சென்று உரையாடுவோம்’’ என்ற உத்தமன் நடந்தான். குழலன் அவனைப் பின்தொடர்ந்தான்.
‘’ஓஹோ… இந்தப் பொடியன்தான் உனது உரைகல்லுக்குப் பல தகவல்களைக் கொடுக்கும் செய்தியாளனோ? இருக்கட்டும், இருக்கட்டும்… ஒருநாளைக்கு அரசரிடம் இருக்கிறது உங்களுக்கு’’ என்று சத்தமாகச் சொன்னான் சூர்யன்.
‘’உங்கள் சிரிப்பு ராஜாவிடம் நாங்கள் சிக்கிட்டாலும் அப்படியே தலையைச் சீவிவிடுவார் பாருங்கள்… போங்கள் அண்ணா’’ என்று கேலியாகச் சொல்லிவிட்டுச் சென்றான் குழலன்.
‘’அண்ணனுக்கு ஏற்ற தம்பி’’ என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்த சூர்யன் மனம் யோசித்தது.
‘பொடியன் என்ன விஷயமாகப் பேசப் போகிறான்? ஆள்தான் அரையடி. ஆனால் இப்போதே அபார மூளைக்காரன். ஒருவேளை அந்தச் சுரங்கக் கொள்ளையர்கள் பற்றி ஏதாவது துப்பு கிடைத்திருக்குமோ?’
(தொடரும்…)