எங்களைப் பற்றி

வணக்கம்,

நாங்கள் வாசிப்பில் ஆர்வமுள்ள சென்னை வாழ் நண்பர்கள் ஒன்றிணைந்து ‘வாசகசாலை’ என்ற பெயரில் இலக்கிய அமைப்பு ஒன்றை, முழுக்க முழுக்க தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமேயான ஓர் அமைப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக நடத்தி வருகிறோம்.

எங்கள் அமைப்பு சார்பாக மாதாந்திர இலக்கிய நிகழ்வுகள், முழுநாள் இலக்கிய அரங்குகள், திரைப்பட கலந்தாய்வு அரங்குகள் மற்றும் பல்வேறு வகையான கூட்டங்களை டிசம்பர் – 2014-ல் இருந்து சென்னையில் தொடர்ச்சியாக நடத்தி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் சென்னையில் கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் அசோக்நகர் வட்டார நூலகம் ஆகியவற்றில் வாராந்திர மற்றும் மாதாந்திர கூட்டங்களை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி மதுரை,கோயம்புத்தூர், திருச்சி, வேலூர்,திருப்பூர், விழுப்புரம், ஈரோடு, சேலம், தர்மபுரி,தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், திருநெல்வேலி, திருவண்ணாமலை, திண்டுக்கல், இராஜபாளையம்,  இராமநாதபுரம், கும்பகோணம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, காரைக்குடி, விருதுநகர், கரூர் & பெங்களூரு (கர்நாடகா)  ஆகிய இடங்களில் தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புக்கள் மட்டுமில்லாது.. வெளியுலகிற்கு அறிமுகற்ற அனைத்து எழுத்தாளர்களின் படைப்புகளையும் அச்சு மற்றும் இணைய இதழ்களிலிருந்து தேர்ந்தெடுத்து அவை குறித்தான கலந்துரையாடல் நிகழ்வுகளை முன்னெடுப்பதன் மூலம்  பரவலான வாசகர்களின்  பார்வைக்கு கொண்டுச் சேர்ப்பதை கடமையாக கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

இலக்கிய நிகழ்வுகளை போல திரைத்துறை சார்ந்த படைப்புக்கள் குறித்தும் கலந்துரையாட ‘திரைக்களம் ‘ எனும் பெயரில் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாது.. திறமைக்கு மதிப்புக்கொடுத்து மாற்று மொழி திரைப்படங்களையும்..அதன் கலையம்சம்.. படைப்பாற்றல் குறித்தும்  கலந்துரையாடல் நிகழ்வுகளை  சென்னையிலும் .அதனைத் தொடர்ந்து மதுரையிலும் நடத்தி வருகிறோம்,

இலக்கிய ஆளுமைகளின் படைப்பாற்றல் குறித்து முழுநாள் நிகழ்வுகளை மட்டுமல்லாமல் சித்தாந்தங்களால்.. புரட்சிகளால்.. போராட்டங்களால்  தங்கள் வாழ்வை சமூக மறுமலர்ச்சிக்கு அர்பணித்த அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகிய  மாபெரும் தலைவர்களை  குறித்தும் அவர்களின் பிறந்தநாட்களை முன்னிட்டு முழுநாள் நிகழ்வுகளாக 2017 ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறோம்.

இளம் தலைமுறையினர் உள்ளிட்ட பொதுமக்களிடம்  வாசிப்புப் பழக்கத்தை நிலைபெறச் செய்வது எங்களின் அடிப்படைக் கொள்கைகளில் ஒனறு. அந்த வகையில் திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலுள்ள கல்லூரிகளிலும் , சென்னை பெரம்பூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் “தமிழ்ச் சிறுகதைக் கொண்டாட்டம் “ எனும் தலைப்பில் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வும்.    குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலம் அவர்களிடம் வாசிப்பு பழக்கத்தை பிஞ்சு வயதிலயே நிலைப்பெறச்செய்ய இயலும் எனும் அடிப்படையில் சென்னை ஆழ்வார்பேட்டை வட்டார நூலகத்தில் வாராந்திர நிகழ்வாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளில்   “ குழந்தைகளுக்கான கொண்டாட்டம் “ எனும் தலைப்பில்  கடந்த அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து வெற்றிகரமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளுக்கும் , எழுத்தாளர்களுக்கும் வாசகசாலை முப்பெரும் விழாவில் விருது வழங்கி சிறப்பிக்கிறோம். அதோடு வாசகசாலை பதிப்பகமாக செயல்படுகிறது.  பிரபலமான எழுத்தாளர்களின்  படைப்புகளோடு புதிய படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்,

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எங்கள் இலக்கை மேலும்  செழுமைப்படுத்திக் கொண்டு வாராந்திர, மாதாந்திர நிகழ்வுகளாக  பல்வேறு வடிவங்களில் நிகழ்வுகளை  முன்னெடுத்துக்கொண்டே இருக்கிறோம்.

இந்த பயணத்தில் இதுவரை எங்களுடன் பயணித்ததற்கு மிக்க நன்றி. நாங்கள் மேலும் வளர வாழ்த்துங்கள், ஆதரவளியுங்கள், அரிய படைப்பாளிகளை, படைப்புகளை எங்களுக்கு நீங்களும் அறிமுகப்படுத்துங்கள். வாருங்கள் கூடித் தமிழிலக்கியத் தேரிழுப்போம்.

நன்றி..!

Back to top button