ஒரு ஊர்ல இருந்து ரொம்ப தூரத்துல ஒரு கடல் இருந்துச்சாம். அந்தக் கடலுக்கு நடுவுல ‘வானவில்‘னு ஒரு தீவு இருந்துச்சாம். பேர் மட்டும்தான் வானவில். மத்தபடி அந்த ஊர்ல எல்லாமே கருப்பு, வெள்ளை நிறத்துலதான் இருக்கும்.
அதனால, அங்க இருக்கிற செடி கொடிகள் எல்லாமே வெள்ளை நிறம்தான். சுத்தியிருக்க கடல் கருப்பு. இப்படி அந்த தீவ சுத்தி எங்க பாத்தாலும் பழைய படம் பார்க்கிற மாதிரி எல்லாமே கருப்பு வெள்ளைலதான் இருக்குமாம்.
தூரத்துல இருந்து பார்த்தா வெறும் கருப்பு நிறம் மட்டும் தெரியறதால, நிலத்துல வாழ்ற மனிதர்கள் யாரும் அந்த இடத்துக்கு வந்ததே இல்ல. அங்க காக்கா, புறா மாதிரி, கருப்பு வெள்ளை நிறத்துல இருக்க பறவைகள தவிர்த்து வேற கலர் பறவைகள் கூட வராதாம்!
இப்படிப்பட்ட இந்த ஊருக்கு ஏன் வானவில்னு பேர் வந்துச்சு தெரியுமா? ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி அங்க அடிக்கடி வானவில் வருமாம். முன்னாடின்னா? இந்தக் கதை நடக்கறதுக்கு ஒரு 100 வருஷங்களுக்கு முன்னாடி.
அடிக்கடி மழை வந்தாதானே அடிக்கடி வானவில்லும் வரும். ஆனா அந்த ஊர் மக்கள் வேற ஒரு காரணத்துக்காக வருத்தப்பட்டாங்க. “அடிக்கடி மழை வந்தா தீவே வீணாப் போயிடுது, எல்லாத்தையும் நாங்க திரும்பத் திரும்ப கட்ட வேண்டி இருக்குது“னு மழை தேவதை கிட்ட சண்ட போட்டாங்க. உடனே அது கோச்சுகிட்டு, இனிமே உங்க ஊருக்கு நான் வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போய்டுச்சாம். கூடவே அதோட தோழியான வானவில் தேவதையும் போய்டுச்சு. அதுல இருந்து அந்த ஊர்ல எல்லாமே கருப்பு, வெள்ளையா மாறிடுச்சு.
அது மட்டுமில்லாம அந்த ஊர் மக்கள் எல்லாருமே சித்திரக் குள்ளர்கள். அதாவது குட்டி குட்டியா இருப்பாங்க. அவங்க ஊர்ல உயரமானவங்களே 3 அடிதான்.
அந்த ஊர்ல ராம், பாலா, மகேஷ்னு 3 சின்னப் பசங்க இருந்தாங்க. மூணு பேரும் நல்ல ஃப்ரண்ட்ஸ். எப்பவும் ஒன்னாதான் இருப்பாங்க. சேர்ந்து விதவிதமா விளையாடுவாங்க. இவங்க மூனு பேரோட அப்பாக்களும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரண்ட்ஸ். எவ்வளவு சேட்டை பண்றாங்களோ அந்த அளவுக்கு பொறுப்பா இருப்பாங்க. அதே மாதிரிதான் அவங்க பசங்களும். நல்லா விளையாடி, நல்லாப் படிச்சு, நல்லா பசங்கனு ஊருக்குள்ள பேர் இவங்களுக்கு.
அவங்களோட முக்கியமான பொழுதுபோக்கே மரத்துல இருக்க பழங்கள எல்லாம் பறிச்சு சாப்பிடறதுதான். சில சமயம் மரத்து மேல ஏறி உட்கார்ந்துட்டு ஜாலியா கடல வேடிக்கை பார்த்துட்டு இருப்பாங்க.
அப்படி ஒரு நாள் அவங்க மூணு பேரும் சேர்ந்து ஒரு விஷயத்தப் பத்தி பேசுனாங்க. அது என்ன விஷயம்னா, தூரத்துல இருக்க கடல் மட்டும் வேற ஒரு கலர்ல தெரியுதே? அது என்ன நிறம்ங்கறதுதான் அது.
ராம்: நம்ம ஊருக்கும் அதே மாதிரி இன்னும் நிறைய நிறங்கள் வேணும். அத நாமளே உருவாக்குனா எவ்வளவு நல்லாருக்கும்?
மகேஷ்: ஆமாடா! நம்மால புது நிறங்கள உருவாக்க முடிஞ்சா எவ்வளவு நல்லாருக்கும்…?
ராம்: ம்ம், ஆனா அதுக்கு நாம என்ன பண்றது?
பாலா: நம்ம ஊர்ல யார் கூடவும் சேராம தனியா ஒரு தாத்தா இருக்காரே. அவர் கிட்ட கேட்டுப் பார்க்கலாம்.
அந்த தாத்தாதான் அவங்க ஊர்லயே வயசானவர். சின்ன வயசுல தீவத் தாண்டிப் போக முயற்சி பண்ணுனதா ஊர்ல சொல்லுவாங்க. எப்போ பாத்தாலும் ஏதாவது வித்தியாசமா செஞ்சுகிட்டே இருப்பாராம். அதனாலேயே யாரும் அவர் கூட பேசுறதில்ல. அவரும் தனியாவே சுத்திட்டு இருப்பாராம்.
மகேஷ்: சூப்பர் ஐடியா. வாங்க இப்பவே நாம அவர்கிட்ட போவோம்.
மூணு பேரும் சேர்ந்து தீவோட ஓரத்துல சுத்திக்கிட்டு இருந்த தாத்தாகிட்ட விஷயத்த சொல்லி உதவி கேட்டாங்க.
“சூப்பர் ஐடியா பசங்களா. நானும் சின்ன வயசுல இந்த மாதிரி நிறைய ஆசப்பட்டேன். ஆனா தீவத் தாண்டிப் போக முடியல. இப்ப நம்மகிட்ட படகு இருந்தாலும், மக்கள் தீவு எல்லையத் தாண்டிப் போக பயப்படறாங்க.
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? நம்ம தீவு முடியற இடத்துல கடல் வேற ஒரு நிறத்துல இருக்கும். அந்த நிறத்துக்குப் பேரு நீலம்.”
“வாவ். சூப்பர் தாத்தா. அந்த மாதிரி இன்னும் மத்த வண்ணங்கள் எல்லாம் எங்க இருக்கும்?” என மகேஷ் கேட்டான்.
“தீவுகளைத் தாண்டி ரொம்ப தூரம் போனா நிலப்பகுதி வரும். அங்க நிறைய வண்ணங்கள் இருக்கும். ஆனா அங்க போறது ரொம்ப கஷ்டம். நம்ம கிட்ட இருக்க படகுகள வச்சு அவ்வளவு தூரம் போக முடியாது பசங்களா!”
உடனே மூனு பேரும் சேந்து சொன்னாங்க,
“எங்களால முடியும் தாத்தா.”
*****
தொடரும்….
wonderful issues altogether, you just received a
new reader. What might you recommend in regards to
your put up that you simply made a few days in the past? Any certain?